விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்பது

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

இரா.முருகன்


5 அக்டோபர் 1900 – சார்வரி வருஷம் புரட்டாசி 20, வெள்ளிக்கிழமை

காலிகோ பைண்டு பண்ணி ஒரு மலையாளப் புஸ்தகம் கொண்டு வந்திருக்கியே வேதையா, காவ்ய ரத்னாகரம்னு. அதைக் காலம்பற பொரட்டிண்டிருந்தேன்.

மருதையன் சொன்னான்.

ஏது, மலையாளமும் படிச்சிருக்கியா மருதையா?

வேதையன் விசாரிக்க, மருதையன் அடக்கமாகச் சிரித்தான்.

மதுரைக் கலாசாலையிலே கூட வேலை பார்க்கிற வேலு நாயர் சம்ஸ்கிருதம் க்ளாஸ் எடுக்கறதோட மலையாளத்திலேயும் பாண்டித்யம் உள்ள மனுஷர். அவர் மூலம் தான் நாலு அட்சரம் அந்த அற்புதமான பாஷை பரிச்சயம் ஆச்சு.

மருதையன் சாப்பிட்டபடியே தகவல் தெரிவித்தான்.

அரண்மனை முற்றத்தில் விருந்து நடந்து கொண்டிருக்கிறது. ராஜா நாற்காலியில் உட்கார்ந்தபடிக்கு முன்னால் ஒரு மர குரிச்சியைத் திருப்பிப் போட்டு அதில் வெள்ளித் தாலம் வைத்து ராப்போஜனம் பண்ணிக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் தண்ணீர் கொட்டி குளிர்வித்துத் துடைத்த தரையில் இலை போட்டு வேதையனும் மருதையனும் சாமாவும் உட்கார்ந்திருக்கிறார்கள். சாமா வீட்டுக்காரி பாத்திரத்தில் இருந்து இந்துஸ்தானி பட்சணமாக சப்பாத்தி பண்ணி எடுத்து வந்ததை பரிமாறிக் கொண்டிருக்கிறாள்.

கோவிலில் தொழுது விட்டு பெண்டுகள் சயன கிரஹ பக்கம் உள்ளறைக்கு ராணியோடு போனார்கள். அப்போது மூணு பிள்ளைப் பிராய சிநேகிதர்களும் படிப்பு விஷயமாக சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்ததை ராஜா கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

படிக்க லோகத்தில் இத்தனை விஷயம் இருக்கா? ஒரு ஜீவிதம் முழுதும் சாப்பிட்டு, வெளிக்கு வராமல் முக்கி வென்னீர் குடித்து, புஸ்தி மீசைக் கிழவனோடு மாரடித்து, ராணியோடு படுத்து எழுந்து, சேடிப் பெண்ணுக்குக் கால் பிடித்து விட்டுக் கழித்தாகி விட்டது. வெட்டி வேலை பல பொழுதும். நாலு எழுத்து படிக்க வந்திருந்தால் புஸ்தகங்களின் லோகத்தில் தானும் ராத்திரியும் பகலும் முழுகி முத்தும் ரத்னமும் எடுத்திருக்கலாமே.

எதுக்கு? அதுனாலே ஏதும் பிரயோஜனம் உண்டோ உனக்கு?

தோட்டத்து மூலையில் புஸ்தி மீசைக் கிழவன் வேப்ப மரத்தில் தலை கீழாகத் தொங்கியபடிக்குக் கேட்டான் அப்போது. நிஜமாகவே அவனுக்கு பிசாசுக் களை வந்திருந்தது ராஜாவுக்கு திருப்தியாக இருந்தது.

மலையாள பூமிக்கு போகப் போறியாக்கும்?

அவன் நக்கலாக விசாரிக்க, போ சவத்து எளவே என்று விலக்கினார் ராஜா. சமயத்தில் அவனும் மற்ற முன்னோர்களும் விளங்காமல் பேசுகிறது வழக்கமாகிப் போனது. ராஜாவுக்குக் காது மந்தம் என்பதாலும் இப்படிப் பாதி புரியாமல் சம்பாஷணை நடக்கிறது உண்டுதான்.

உள்ளே ராணி பகவதியம்மாளின் மருமகளுக்கு ஒரு பட்டுத் துணியும், மஞ்சள் கிழங்கு, குங்குமம் இதோடு ஒரு கொப்பரைத் தேங்காய், கால் சவரனில் ஒரு காசு இத்தனையும் தாம்பாளத்தில் வைத்து எடுத்துக் கொள்ளச் சொன்னாள்.

நமஸ்காரம் பண்ணிக்கறேன் மாமி.

சாமா பெண்டாட்டி அடக்கமாகத் தெரிவித்தாள்.

எதுக்கு? வந்தபோதே கும்புட்டுட்டியேடி பொண்ணே?

ராணி பொக்கை வாயோடு அழகாகச் சிரித்தாள்

அது வந்ததுக்கு. இது திரிச்சுப் போறபோது ஆசிர்வாதம் வாங்கறதுக்கு. மகாராஜாவும் சேந்து நின்னா பாந்தமா இருக்கும் ராணியம்மா.

பகவதி மரியாதையோடு சொன்னாள்.

கொஞ்சம் வந்துட்டுப் போங்களேன். கொளந்தை ஆசிர்வாதம் வாங்கணுமாம்.

ராணி வாசலைப் பார்த்து கூப்பிட்டாள்.

தொட்டதுக்கு எல்லாம் இந்தப் பார்ப்பாரப் பொண்டுகள் பொசுக்கு பொசுக்கு என்று காலில் விழுந்து கும்பிடுகிற ஆசாரம் ராஜாவுக்கு அலுப்பாக இருந்தது. ஒரு நாளைக்கு எத்தனை தடவை இப்படி யாரையெல்லாம் கும்பிட்டு விழுவது என்று கணக்கே இல்லியா?

சதுர் ஆடத் தயாரானது போல புடவையைத் தார் பாய்ச்சி கட்டிக் கொள்வது இப்படி விழுந்து கும்பிட வசதியாக இருக்கத்தான் போல.

ராஜா உள்ளே போய் அவசரமாக ஆசிர்வதிப்பதற்குள் பகவதி நிறுத்தினாள்.

சாமா, சித்தெ வந்து இவளோடு சேர்ந்து நின்னு நமஸ்காரம் பண்ணு பெரியவாளை.

சாமா வந்து, ரெண்டு கையையும் ரெண்டு செவியில் வைத்துப் பொத்திக் கொண்டு பெண்டாட்டியோடு காலில் விழுந்தான்.

ஆசிர்வாதம் பண்ணினாலும் இவன் காதில் விழப் போவதில்லை. ராஜா முணுமுணுப்பாக உபசார வார்த்தை சொல்ல, ராணியம்மா குளிரக் குளிர நல்ல சொல் நாலு சொல்லி பழுக்காத் தட்டை நீட்டினாள்.

எதுக்கு மாமி இதெல்லாம்?

அசடே. நல்ல நாள் பெரிய நாள்னு வரச்சே பெரியவா கொடுத்தா வாங்கிக்கறதுதான் மரியாதை.

பகவதி அவள் காதில் சொன்னாள்.

வெளியே புறப்படும் போது பகவதியம்மாள் யாரையோ தேடினாள்.

யாரைத் தேடறே அம்மா?

சாமா கேட்டான்.

பழனியப்பன் எங்கே காணோம்? இவாளுக்கு ராத்திரி ஆகாரம் கொடுத்து விடணுமே.

அவன் கடைத் தெரு பக்கம் நாட்டு மருந்து வாங்கப் போனவன் தான். திரும்பவே இல்லே.

வாசலில் இருந்தே ராஜா குரல் கொடுத்தார். அவருக்குப் பசிக்க ஆரம்பித்திருந்தது. நாசமாகப் போனவன் எங்கே தொலைந்தான்? படி அளக்கிற தேவதை ஒரு குறைச்சலும் இன்றி வாரி வழங்கினாலும் கொண்டு வருகிற பூசாரி குறுக்குப் பாதையில் நின்று இடக்குப் பண்ணினால்?

அப்போ எல்லாரும் இங்கேயே சாப்பிட்டுடலாமே.

சாமா யோசனை சொன்னதை மருதையனும் ஆமோதித்தான்.

வா, ஆளுக்கு ஒரு பாத்திரமா எடுத்துண்டு வந்திடலாம்.

அடுத்த பத்து நிமிஷத்தில் புகையிலைக்கடை அய்யர் வீட்டில் இருந்து சப்பாத்தியும், பருப்பு வேக வைத்து, பச்சை மிளகாயும் கொத்துமல்லி விதையும் அரைத்து விட்ட காய்கறிக் கூட்டும் தேங்காய் போட்ட காரக் குழம்பும் அரிசி அப்பளம், மிதுக்கத்தான் வற்றல், சுண்டைக்காய் வற்றல் வகையறாக்களும் புதுசாக உறை குத்தின கட்டித் தயிரும், எலுமிச்சங்காய் எண்ணெயில் பொறித்த ஊறுகாயுமாக ஏகத்துக்கு வந்து சேர்ந்தன.

நீங்க சாப்பிடுங்கப்பா. நான் பொறகு தின்னுக்கறேன்.

ராஜா நழுவப் பார்த்தார். சின்ன வயசுப் பிள்ளைகள் கூட சாப்பிடும் போது பேச விஷயம் கிடைக்காமல் சும்மா வாய் பார்த்துக் கொண்டு பசுமாடு மாதிரி அசை போட அவருக்கு மனசு கேட்கவில்லை.

நீங்களும் உட்காருங்கோ மாமா. மாமியும் சேர்ந்தே உட்காரட்டும்.

சாமா பெண்டாட்டி பரிமாறத் தயாராக இலையைக் கையில் எடுத்தபடி சொன்னாள்.

ஐயோ, நான் மாட்டேன். ஆம்பிளைங்க சாப்பிட்டு எந்திரிக்கட்டும்.

ராணி பிடிவாதமாக மறுத்து விட்டாள். பகவதியும், சாமா வீட்டுக்காரியும் அவளோடு கூட இருந்து சாப்பிட முடிவானது. இவர்கள் சாப்பிட்டு முடித்ததும் உள்ளறையில் நடக்கும் அது. ராணிக்காகக் குழைய வடித்த பச்சரிசிச் சோறும் பாகம் செய்து கொண்டு வந்திருந்தாள் பகவதியம்மாள் நாட்டுப்பெண்.

வேதண்ணா, இன்னும் ஒரு சப்பாத்தி போட்டுக்குங்கோ.

சாமா பெண்டாட்டி ஜபர்தஸ்தாக வேதையன் இலையில் ஒரு பெரிய சப்பாத்தியை இட்டாள். தனக்கும் இந்த உபசாரம் நடக்கும் என்பதை அறிந்த ராஜா கிட்டத்தட்ட முன்னால் எழும்பி இலையை பாதி மறைக்கிற மாதிரி கவிழ்ந்து கொண்டு போதும் போதும் என்றார்.

ஒரு சிராங்கா தயிர் குத்திக்குங்கோ மாமா. வெக்கை காலத்துலே உடம்புக்கு நல்லது.

சாமா பெண்டாட்டி என்ன சொல்லியும் அவர் மசியவில்லை. நாக்கு கேட்கிறது என்று வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல் சாப்பிட்டு வைத்தால் நட்ட நடுராத்திரிக்கு அது ஓர வஞ்சனை செய்ய ஆரம்பித்து விடும். கொல்லைக்கு இருட்டில் போய் திரும்பி வருவதற்குள் பிராணன் போய்விடும். தூக்கமும் அப்புறம் போனது போனது தான்.

மலையாளப் புஸ்தகம் படிச்சதா சொன்னியே. யார் எழுதின கவிதை?

சாமா மருதையனை விசாரித்தான்.

வெண்மணி அச்சன்னு போட்டிருந்தது.

ஆமா, பத்து வருஷம் முந்தி அந்தரிச்ச மகாகவியாக்கும்.

வேதையன் சொன்னான். சொன்னபடிக்கே புஸ்தகத்தை படிக்கிறதுபோல் மனசில் இருந்து கடகடவென்று செய்யுளும் கம்பீரமாக ஒப்பித்தான் அவன்.

பாஷை வேறே ஆனதால் ராஜாவுக்குப் புரியாவிட்டாலும் அவர் அவன் சொல்கிற தோரணையில் மனசைப் பறி கொடுத்தார்.

ரண்டு கையிலும் உருண்ட வெண்ணெயும்
இருண்டு நீண்ட கசபாரமும்
கண்ட தேசமதில் வண்டணிஞ்ச மலர்கொண்டு
தீர்த்த வனமாலையும்
பூண்டு பாயசமும் உண்டு கொண்டு

கிட்டத்தட்ட பாடுகிற ரீதியில் அவன் வெகு ரசமாகச் சொல்லிக் கொண்டு வந்தபோது சாமா இடை மறித்தான்.

அது என்ன பூண்டுப் பாயசம்டா? வெல்லப் பாயசம், தேங்காய்ப் பாயசம், பால்ப் பாயசம் கேட்டிருக்கேன். இது என்ன புது தினுசான்னா இருக்கு?

மற்ற ரெண்டு பேரும் சிரித்தார்கள். ஒண்ணும் புரியாவிட்டாலும் ராஜாவும் நரை மீசையை இடது கையால் நீவிக்கொண்டு சிரித்தார்.

சாமா, வெண்மணி அச்சன் நம்பூத்ரி பகவான் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து பாடறது இது. ஆண்டவனுக்கு பூண்டு பாயசம் எல்லாம் படைப்பாளா என்ன? தெய்வம்னாலுமே, ஓக்களிச்சு உவ்வேன்னு குமட்டல் எடுக்காது? பூண்டுப் பாயசம் இல்லே. நல்லா கவனிச்சு இன்னொரு தடவை கேளு.

வேதையன் அந்த செய்யுளை இன்னொரு தடவை நிதானமாகச் சொல்லி நிறுத்தினான்.

மலர் கொண்டு தீர்த்த வனமாலையும் பூண்டு அதோட ஒரு பகுதி முடியறது. அடுத்தாப்பல பாயசமும் உண்டு கொண்டு. குழந்தை கிருஷ்ணன் மலர்மாலை போட்டுண்டு வரான். வர்றவன் பாயசமும் ஒரு கும்பாவிலே எடுத்து மாந்திண்டு வரான். புரியறதோன்னோ?

சந்தம் ரொம்ப அழகா இருக்கு. பாட்டும் தான்.

மருதையன் சொன்னான்.

அம்பலப்புழையிலே கூட பால் பாயசம் உண்டாக்கும்.

பகவதி வேதையனிடம் கூறினாள்.

அவள் கிருஷ்ணனை நினைத்துக் கொண்டாள். அம்பலப்புழை அம்பலத்தில் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமியாக காலம் முழுக்க விஸ்வரூபம் காட்டி கடாட்சம் பொழிகிறவன். ஸ்ரீகிருஷ்ண சரிதமும், ருக்மிணி சுயம்வரமும், கல்யாண சௌகந்திகமுமான ஆட்டக் கதைகளோடு ஓட்டந் துள்ளிய குஞ்சன் நம்பியாரும் சம்பகச்சேரி மகாராஜாவும் தொழுது வணங்கி நின்ற மகா பிரபு.

பால் பாயசம் நைவேத்தியம் ஆகிற அம்பலப்புழை. உடன்பிறப்புகளோடும், அவர்கள் குடும்பங்களோடும் ஆடித் திரிந்து ஓடிக் களித்த வீடு.

விசாலாட்சி மன்னி. அம்மா மாதிரி, பகவதிக்கு ஓர்மையில் வராத அம்மாவை விடப் பிரியம் காட்டின தேவதை.

அப்புறம் காமாட்சி மன்னி. சிநேகாம்பா மன்னி. அண்ணாக்கள். அத்தைகள்.

ஒரு குடும்பமே சிதறியல்லவா போய்ச் சேர்ந்தது இந்த நாற்பது சொச்சம் வருஷத்தில்.

பகவதி அம்பலப்புழை போய் எத்தனை வருஷம் ஆகிறது.

போக என்ன இருக்கு? யார் இருக்கா? சங்கரன் போன பின்னே, இங்கேயும் தான் யார் இருக்கா அவளுக்கு?

நான் போன மாசம் அம்பலப்புழை போயிருந்தேன் அத்தை. நம்ம குடும்ப வீட்டுக்கும் போனேன்.

வேதையன் கைகழுவ எழுந்தபோது சொன்னான்.

பகவதிக்கு குளிரக் குளிர அம்பலத்தில் பால் பாயசம் பானம் பண்ணின மாதிரி மனசு நிறைந்து போனது.

மதம் ஏதாக இருந்தால் என்ன? அவளுடைய அண்ணா கிட்டாவய்யன் பிள்ளை. சாமா மாதிரி அவளுக்கு அவனும் குழந்தைதான்.

க்ஷேமமாக இருக்கட்டும் எல்லோரும்.

பகவதி செயலோடு இருக்கும்போதே இந்தக் குழந்தைகளில் யாராவது அந்த வீட்டை வாங்கி. கிடைக்காவிட்டால் வேண்டாம். அம்பலப்புழையில் துண்டு நிலம் வாங்கி ஒரு ஓலைக் குடிசை வேய்ந்து கொடுத்தால் கூட அதில் மிச்ச ஆயுசு முழுக்க தங்கி இருந்து அம்பலம் போய் ரெண்டு வேளையும் தொழுது கொண்டு கிருஷ்ணன் காலடியிலேயே காலத்தைக் கழித்து விடுவாள் அவள்.

முடிந்தால் திரும்ப சிற்றாடை உடுத்திய, நாணிக்குட்டியோடு சிரித்துக் களித்து சந்தியாகாலம் தொழப் போகிற பகவதிக் குட்டி ஆகிவிடலாம். நாணி எங்கே?

வீட்டிலே இப்போ யார் இருக்கா?

கையலம்பிட்டு வந்து எல்லா விவரமும் சொல்றேன் அத்தை.

வேதையன் உள்ளே போனான். பகவதி அவன் போகிறதையே பார்த்தபடி நின்றாள். கிட்டா அண்ணா இப்படித்தான் சற்றே முன்னே குனிந்து நடப்பான். அவன் கூப்பிடுகிறது இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

குட்டிம்மா… பகவதீஇஇஇ

வந்துட்டேண்ணா. சித்த பொறுங்கோ. இன்னும் கொஞ்ச நாள்தான்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts