சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



Fig. 1
Socrates & his Wife Xanthippe in
The Market Place

“ஞானம் நமக்கு உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும், நமது அறிவு எத்தனை சிறியது என்று நாம் அறியும் போது.”

“நமது வாழ்க்கையின் குறிக்கோள் கடவுளைப் போல் இருப்பதற்கே முற்பட வேண்டும். கடவுளைப் பின்பற்றும் நமது ஆத்மாவும் அவரைப் போல் இருப்பதற்கே முனைய வேண்டும்.”

“உலகத்தை நகர்த்த முனையும் ஒருவன் முதலில் தன்னை நகர்த்த வேண்டும்.”

சாக்ரடிஸ்

முன்னுரை:

உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது ! அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர். அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது ! அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது. சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார். அவர் வேதாந்தச் சிந்தனையாளர். உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர். மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர். சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர். சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர். போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார். மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe).

சாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை. அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார். உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார். இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது ! இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார். அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை ! சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.

சாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர். தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி. சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன. சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.

Fig. 2
Socrates Friend : Alcibiades

சாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது. முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை. இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது. மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை. நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence). இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது ! ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள். 1. பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato) 2. “ஸெனோ·பன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon). எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு ! குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார். மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்

பிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் ! பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

Fig. 3
Socrates & Xanthippe in Argument

சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம் :

இந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை. அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல. அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம். நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் : ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர். தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார். அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார். அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் ! அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை. ஆனால் ஆக்டபஸ் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது !

******************************

Fig. 4
Socrates Eating Carrot in the
Market Place

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -1 பாகம் -5

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார். கணவன் மனைவி இருவருக்குள் குடும்பச் சண்டை நிகழ்கிறது. இடையில் மெக்கில்லஸ் வருகிறான்.

***********************

(அப்போது பேரவைக் கூட்டத்தில் ஆரவாரம் கேட்கிறது)

விவசாயி: என்னமோ நேர்ந்து விட்டது ! மக்கள் கூக்குரல் காதைப் பிளக்கிறது !

மெக்கில்லஸ்: தேவரின் தீர்ப்பை வாசித்து விட்டது போல் தெரிகிறது ! உலகில் பெரிய ஞானி யாரென்று தெரிவித்து விட்டார் ! அதன் விளைவைத்தான் நாமினி எதிர்பார்க்க வேண்டும் !

விவசாயின் மனைவி: நான் சற்று உள்ளே போய் என்ன முடிவென்பதைத் தெரிந்து கொள்ளப் போகிறேன் ! வா ஷாந்திப்பி ! என்ன நடந்துள்ளது என்று நாமிருவரும் கண்டு வருவோம்.

ஷாந்திப்பி: நான் இங்கே நின்று கொள்கிறேன். நான் படப்போகும் அவமானத்தை இங்கிருந்தே பார்த்துக் கொள்கிறேன் ! (விவசாயியை நோக்கி) உன் மனைவி உன்னைப் புரிந்து கொள்வதில்லை என்று என் செவியில் பட்டுத் தெறிக்கச் நீ சொல்லப் போகிறாயா ?

(ஷாந்திப்பி விவசாயி மனைவியுடன் வெளியேறுகிறாள். சாக்ரடிஸ் தோழரோடு உரையாடப் போகிறார்.)

விவசாயி: ஆமாம் ! என் கெட்ட காலம் ! என் மனைவி என்னைப் புரிந்து கொள்ளவ தில்லை ! அது மட்டுமா ? என் மனைவி மண்டைக்கு எதுவும் எட்டுவதில்லை ! புகுத்தினாலும் அது வெளியே தவ்வி விடும் !

கோவாதெர்டுவின் மனைவி: ஆண்பிள்ளை நீங்கள் யாரும் எங்கே போவீர், நாங்கள் மாதர் இல்லா விட்டால் ?

கோவாதெர்டு: மனிதருள் மாணிக்கமான ஆடவர் எல்லாரும் தாயின் கருவில்தான் உண்டாகிறார். மாதர் இன்றேல் மனிதன் பைத்தியமாகி விடுவான் !

மெக்கில்லஸ்: (ஒரு குவளை மதுபானத்தை சாக்ரடிசுக்கு வழங்கி) இதைக் குடிப்பீர் நண்பரே !

சாக்ரடிஸ்: வேண்டாம் மது எனக்கு ! தொப்பை நிரம்பி விட்டது ! குடித்தால் மனைவி சண்டை போடுவாள் ! வேண்டாம் ! எனக்கு மதுபானம் அளித்து எனது மனைவின் சாபத்தை வாங்கிக் கொள்ளாதே !

மெக்கில்லஸ்: குடித்தவன் அல்லவா மனைவிடம் சண்டை போடுவான் ! அது சரி ! குடிக்கா விட்டாலும் சதா உன்னோடு சண்டை போடுபவள் உன் மனைவி அல்லவா ? தினமும் உம்மை வாய்ச் சண்டைக்கு இழுத்து நிம்மதியைக் கலைப்பவள் ஆயிற்றே !

சாக்ரடிஸ்: என் வாய்க்குடி நாற்றம் என்னைக் காட்டிக் கொடுத்து விடும். சண்டையில் சரம்மாறி பெய்வாள் ! (குவளை மதுவை வாங்கிக் குடிக்கிறார்).

மெக்கில்லஸ்: யார் வீட்டில்தான் சண்டை இல்லை ! எந்தக் குடும்பத்தில்தான் சண்டை போடாத பெண்டாட்டி இருக்கிறாள் ? பெண் அமைதியாவள் என்றால் ஆண்மகன் சண்டைச் சேவலாய் இருக்கிறான் ! குடும்ப வாழ்வே அப்படித்தான் ! ஒரே வெந்நீர் கொப்பரையில் வேகும் இரண்டு உடைந்த முட்டைகள் ! இப்போது நானே குடும்ப சாகரத்தில் குதிக்கப் போகிறேன் ! எனக்குப் புதிய வேலை கிடைத்திருக்கிறது ! சிறைச்சாலையில் ஒரு சிறைக் காப்பாளியாக வேலை !

சாக்ரடிஸ்: என்ன ? சிறைக் காப்பாளியா நீ ? அது ஓர் அற்ப வேலை அல்லவா ? சொற்ப ஊதிய மானாலும் துச்சமான வேலை ! கைதிகளைச் சித்திரவதை புரிந்து உண்மையைக் கக்க வைக்கும் அக்கிரம வேலை ! மக்கு மடையர் புரியம் திக்குமுக்கான வேலை !

(அப்போது வெடிச் சத்தமுடன் பேரவையில் ஆரவாரமும் எழுகிறது)

விவசாயி: என்ன கூச்சல் அங்கே ? தேவரின் தீர்ப்பு வெளியாகி விட்டதா ?

சாக்ரடிஸ்: அதை விட்டுத் தள்ளு ! என்ன தீர்ப்பு வந்தாலும் சரி ! நான் கவலைப்பட மாட்டேன் ! எப்போது நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் ? அதைச் சொல் முதலில் எனக்கு.

மெக்கில்லஸ்: எப்போதென்று எனக்குத் தெரியாது ! இப்போது நான் அவளுக்குக் காதல் கவிதை எழுதி வருகிறேன் ! அவளும் இரண்டு நாளுக்கு முன்பு என்னைக் கனவில் கண்டிருக்கிறாள் !

சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) அவள் ஏன் உன்னைக் கனவில் காண வேண்டும் ? நேராகவே உன்னைக் கண்டு பேசலாமே ? யாரை நீ இடைத் தரகனாக வைத்திருக்கிறாய் ?

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! உங்களைத்தான் நம்பியிருக்கிறேன் நான் ! நீங்களே சொல்லுங்கள் ! (பையிலிருந்து கவிதையை எடுத்துக் கொடுக்கிறான்)

சாக்ரடிஸ்: இந்தக் கவிதையை உன் அன்புக் காதலி விரும்பினாளா ? நான் படித்து என்ன சொல்ல முடியும் ?

மெக்கில்லஸ்: (சிரிப்புடன்) நானொரு தவறு செய்தேன் ! இந்தக் கவிதையை அவள் வீட்டுப் பலகணியில் எறிந்தேன் ! ஆனால் அது அவள் தாயின் அறை !

சாக்ரடிஸ்: அட கடவுளே ! அப்புறம் என்ன ஆயிற்று ? அவள் தாய் உன் கன்னத்தில் அறைந்தாளா ?

மெக்கில்லஸ்: கதையே மாறிப் போச்சே ! அந்தக் கவிதை அவள் தாயிக்குப் பிடித்துப் போனது !

சாக்ரடிஸ்: அப்புறம் என்ன ஆயிற்று ?

மெக்கில்லஸ்: அவள் தாயிக்கு என்மேல் மோகம் ! எனக்கோ அவள் புதல்வி மீது மோகம் ! என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடுகிறேன் ! நீங்கள்தான் ஒரு வழிகாட்ட வேண்டும் !

சாக்ரடிஸ்: வேறொரு கவிதை எழுதி மகள் இருக்கும் அறைப் பலகணியில் எறிந்து விடு ! தாய் மகள் இருவரில் யாருக்கு உன்மீது ஆசை அதிகமோ அவர் பிடித்துக் கொள்வார் உன்னை !

(மெக்கில்லஸ் கவிதையைப் படிக்கிறார்)

ஒவ்வோர் அழகுப் பிறவியும்
ஓர் அழகுத் துணைப் பிறவி தேடிப்
பேரிச்சையால்
உனை நோக்கித் திரும்பும் !
ஹெரா என்பவன் ஓர் அழகிய மயில் !
உன்னைப் போலொரு
பெண் மயிலை
ஒருபோதும்
கண்ட தில்லை அவன் !
பூமி எழில் ஊட்டும்
உனக்கு !
சொர்க்க புரி காதலிக்கும்
உன்னை !
நரகமும் தன் கரங்களால்
உன் மேனியைத் தொட
விரும்பும் !
ஒவ்வோர் அழகு ஆடவனும்
உன்னைத் திருமணம் புரிய
இச்சை யுறுவான் !
பேரழகுக் கண்மணி !
ஆரணங்கே !
திருமணம் செய்ய மாட்டாயா
என்னை ?
நம்பிடு ! நம்பிடு என்னை !
உறுதி மொழி
தருவேன் நானுனக்கு !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

12. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((June 3, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts