விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தெட்டு

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

இரா.முருகன்


5 அக்டோபர் 1900 – சார்வரி வருஷம் புரட்டாசி 20, வெள்ளிக்கிழமை

எவண்டா அங்கே ஒண்ணுக்கடிக்கறது?

ராஜா இரைந்து கொண்டிருந்தது எட்டூருக்குக் கேட்டிருக்கும்.

வருடம் முழுக்க அரண்மனைக் கதவை இழுத்துச் சார்த்தித்தான் வைத்திருக்கிற வழக்கம். வந்தான் போனான் தோலான் துருத்தி எல்லாம் உள்ளே வரப் போக இருந்தால் நாசம் பண்ணி விடுவான்கள் என்று ராணி தெரிவித்தது தான் காரணம்.

நவராத்திரியும் ஆயுத பூஜையும் வருதே என்று அரண்மனைக் கோவிலுக்குள் விளக்கு வைத்து ஆயுத சாலையிலl பழைய கேடயத்துக்கும் ஈட்டிக்கும் ஜவந்திப் பூ நறுக்கைச் சார்த்தி குங்குமப் பொட்டு வைத்ததும் ராணி சொல்லித்தான்.

ஊர் மகா ஜனங்களும் வந்து கும்பிட்டுப் போகட்டுமே.

அவள் கேட்டுக் கொண்டபோது ரொம்ப யோசனையோடு தினசரி ராத்திரி ஒரு மணி நேரம் மட்டும் கதவைத் திறந்து வைக்க சமையல்காரனுக்கு உத்தரவு கொடுத்தார் ராஜா. வருகிறவன் ஒரு கும்புடு போட்டு விட்டு வெளியே திரும்பி நடக்க இதுக்கு மேலே மேலே எம்புட்டு நேரமாகப் போகிறது?

பேதியில் போகிறவன் கும்புடுகிறேன் என்று உள்ளே நுழைந்து ராஜா சயனக்கிரஹத்தைப் பார்த்து நின்றபடிக்கே மூத்திரம் போனால் கோபம் வராமல் என்ன செய்யும்?

ஏண்டா நாதாரி, உனக்கு ஒண்ணுக்கு அடிக்க இடமா இல்லே ஊர்லே?

ராஜா சத்தம் கிளப்பிக்கொண்டே வெளியே வந்தார்.

ஏன் உள்ளாற வந்து தொறந்து விடட்டுமா?

அவன் நிறுத்தாமல் பொழிந்தபடி சொன்னான்.

அந்த வத்தக்காய்ச்சி மனுஷனின் சங்கை நெறிக்கணும் போல ராஜாவுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. வேணாம். முன்னால் போய் நின்றால் பீச்சாங்குழாயை அவர் மேலே திருப்பி விடுவான் கழுதைக்குப் பொறந்தவன்.

இவன்களுக்குப் போய் பிரசாதமாக அவலும் பொரிகடலையும் வெல்ல அச்சும் கொடுக்கலாம் என்றாளே ராணி. கூடுதல் காசு செலவுக்கு எல்லாம் துரைத்தனத்து பணம் வராது என்பதால் அந்த யோசனையை நடப்பாக்க முடியவில்லை. மருதையனிடம் சொன்னால் வாங்கி வந்து விடுவான் தான். வேணாம். அதைக் கூடையில் நிறைத்து பிடிப்பிடியாக விநியோகம் செய்ய ஆளை ஏற்பாடு செய்யணும். வெறும் பொரிகடலைதானா, பானகம் கிடையாதா என்று எவனாவது கேட்பான். அதையும் தரலாம். குடித்து விட்டு சுவரில் கையைத் துடைத்துக் கொண்டு அங்கே ஓரமாக வரிசையாக நின்று அரண்மனையில் நீர்ப்பாசனம் நடத்துவான். என்னத்துக்கு விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்கணும்?

நாளை முதல் கொண்டு அரை மணி நேரம் மட்டும், அதுவும் ஸ்திரிகள் வந்து கோவிலில் தொழுது போக அனுமதி கொடுத்தால் போதுமானது. ஆம்பிளைகள் வந்தால் அந்தப் பெண்களோடு வருகிறவர்களாக இருக்க வேணும்.

ராஜா புது உத்திரவை தீர்மானித்து ராணியின் ஒப்புதல் வாங்க காரை பெயர்ந்த அரண்மனை முற்றம் வழியாக திரும்ப நடந்தார். இருட்டு மட்டும் துணைக்கு கூடவே சூழ்ந்து கொண்டு வந்தது.

விளக்கு நீள நிறைய ஜகஜ்ஜோதியாக எரிய வைக்க கையில் ஐவேசு குறைச்சல் என்பதால் அங்கங்கே முணுக்கு முணுக்கு என்று இலுப்பெண்ணெய் தீபம் தான் ஏற்றி வைக்கிற வாடிக்கை.

சயன கிரகத்தில் வைக்க ஒரு அரிக்கேன் விளக்கை மருதையன் மதுரையில் இருந்து வாங்கி வந்தபோது வேணாம் என்று சொல்லி விட்டார் ராஜா. ராத்திரி வாயைப் பிளந்து கொண்டு தூங்கும்போது அது பாட்டுக்குக் கவிழ்ந்தோ இல்லை கண்ணாடி சிதறி வெடித்தோ இடுப்பு வேட்டியில் அக்னி படர வைத்து விடும். அதுவாக இல்லாவிட்டாலும் முன்னோர்கள் திரிசமன் செய்யக் கூடும். முக்கியமாக அந்த வக்காளி மாமனார் புஸ்தி மீசைக் கிழவன். இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக உள்ளதை விட, இங்கே இருந்து பரலோகம் போனவர்களிடம் அதிக முன் ஜாக்கிரதை தேவை என்று ராஜாவுக்கு நிச்சயமாகத் தெரியும்.

வாசல் பக்கம் இருந்து பேச்சு சத்தம் கேட்கவே சற்று நின்றார் ராஜா. ஒண்ணுக்குப் போக ஊரோடு திரண்டு வருகிறான்களா?

பெண் குரல்கள். கூடவே ஆண் குரல்கள்.

வேதையா, மலையாள பூமி கலாசாலையிலும் ஷேக்ஸ்பியர் முழு நாடகமும் பரீக்ஷை கடுதாசுக்கு அருகதையா வச்சிருக்கா என்ன?

மருதையன் குரல் தனியாக கார்வையோடு ஒலித்தது.

பின்னே இல்லாம? அது மட்டும் இல்லே, தமிழ் விபாகமும் கூட திருவிதாங்கூர்லே உண்டாக்கும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதின குசேலோபாக்கியானம் என் சிநேகிதன் அப்புகுட்டன் தான் நடத்தறான்.

குசேலோபாக்கியானம் நல்லூர் தேவராஜப் பிள்ளை எழுதினது இல்லியோ?

மூணாவதாக வந்த குரல் சாமாவுடையது.

யாரோ எதையோ எழுதி விட்டுப் போகட்டுமே. கோவிலுக்குப் போறபோது கூட பேச உங்களுக்கு வேறே விஷயம் இல்லியா?

பகவதி அம்மாள் குரலையும் ராஜா இனம் கண்டு கொண்டார்.

பரபரப்பாக சயன கிரஹத்தில் நுழைந்த அவர் முக்காலே மூணுவீசம் தூக்கத்தில் இருந்த ராணியை எழுப்பினார்.

தே, அய்யர் வீட்டம்மாவும் மருமகளும் அரண்மனைக் கோவிலுக்கு வந்துட்டு இருக்காங்க. பழமும் நாலு வெத்தலையும் வச்சுக் கொடு.

என்னழா?

அவள் அரைகுறையாக எழுந்து உட்கார்ந்தபடிக்கே தூங்க முற்பட்டாள்.

எளுந்திருலா. விருந்தாடி வந்துட்டு இருக்காகங்கறேன்.

ராணி ஒரு நிமிசத்தில் எழுந்து முகம் கழுவி நறுவிசாக வாசலுக்கு வந்து விட்டாள்.

வாங்க, வாங்க, இப்பத்தான் வழி தெரிஞ்சுதா?

அவள் விசாரித்தபோது மருதையன் சிரித்தான்.

ஆத்தா, என்னயச் சொல்லலியே?

உன்னையும் தாண்டா. நீ காலேசு அடைச்சுப் பூட்டி ரஜாவிலே வந்தேன்னு பேரு. வீட்டுக்குள்ளே அஞ்சு நிமிசம் சேர்ந்தாப்பலே இருந்திருக்கியாடா பயலே?

ராஜா மருதையனைக் கேட்டபடிக்கு பகவதி அம்மாளுக்கும் அவள் மருமகளுக்கும் கையைக் கூப்பி அமெரிக்கையாக வந்தனம் சொன்னார். அய்யர் வீட்டு மருமகள் குனிந்து அவருடைய மற்றும் ராணியின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள்.

தீர்க்க சுமங்கலியா இரும்மா.

ராணி மனசார வாழ்த்தி அவளை எழுப்பி அணைத்துக் கொண்டாள். பகவதி சங்கரனைக் கல்யாணம் கழித்து கட்டுக் கழுத்தியாக வந்தபோதும் பெரிய மனுஷியாக இருந்து வாழ்த்திய வாவரசி அவள்.

இவன் பண்றது அநியாயம் தான் மாமா. கேட்டா படிக்க அரண்மனையிலே எதுவும் இல்லேங்கறான். எங்க வீட்டுலே இருக்கற புஸ்தக பீரோவிலே ரெண்டு மூணு இங்கே கொண்டு வந்து வச்சுடறேன். அப்புறம் லீவுக்கு வர்றச்சே எல்லாம் மருதையன் வீட்டோட தான் கிடப்பான், பாத்துக்கிட்டே இருங்க.

சாமா மருதையன் தோளில் தட்டிச் சொன்னான்.

அது சரிதான். மருதையனுக்கு நூதனமாக அச்சுப் போட்ட ஏதாவது புஸ்தகத்தை பொழுது முழுக்க வாசித்துக் கொண்டிருந்தால் போதும். புதுசோ, பழசோ, தமிழோ, துரைத்தனத்து பாஷையோ, புஸ்தகம் கிடைத்தால் அவனுக்கு ஆயுசுக்கு வேண்டிய தேவையில் முக்காலே மூணு வீசம் பூர்த்தியாகி விடும். அப்புறம் அப்பப்ப கொஞ்சம் காப்பி பானம், ரெண்டு இட்டலி இல்லை தோசை. வேறே எதுவும் வேணாம்.

புஸ்தகமும் மற்றதும் அரண்மனையில் இருக்கப்பட்ட சமாசாரம் இல்லை. ராஜாவுக்கு அதில் எல்லாம் விசேஷ பிரேமை என்றைக்குமே இருந்ததில்லை. வேணுமானால், நூதன வாகனத்தில் வந்து போகும் அந்த ரெண்டு களவாணிகளையும் கேட்டுப் பார்க்கலாம்.

அந்தக் குட்டையனும் நெட்டையனும் இப்போ எல்லாம் எத்தனை தடவை அழைத்தாலும் வருவது இல்லை என்பது ராஜாவுக்கு நினைவு வந்தது.

மண்டையைப் போட்டுட்டாங்களோ? எப்படி சாத்தியம்? ராஜாவுக்குப் பிற்பட்ட காலம் ஆச்சே அவன்கள் ரெண்டு பேரும். ஆனால் என்ன? சாவு சகலருக்கும் பொதுவானது தானே.

இப்படி வாங்க. படி இருக்கு. பாத்து. பாத்து.

ராணி மாறாத சிரிப்போடு பகவதியம்மாளையும் அவள் மருமகளையும் ஆயுத சாலை கோவிலுக்குள் இட்டுப் போனாள்.

வேதையனோடு கூட சாமாவும் மருதையனும் வாசலிலேயே ரெண்டு பக்கத்திலும் அலங்காரமாக உயர்த்திக் கட்டியிருந்த திண்ணையில் உட்கார்ந்தார்கள்.

சாமா உள்ளே போய் ஒரு நாற்காலியை எடுத்து வந்து போட்டு, உக்காருங்கோ மாமா என்று ராஜா கையைப் பிடித்து அதில் அமர்த்தினான்.

நல்லா இரு புள்ளே.

குளிரக் குளிர நிலவு, பௌர்ணமி இல்லாவிட்டாலும் பிரகாசமாக அந்தப் பழைய அரண்மனையை அற்புதமான அழகோடு காட்டிக் கொண்டிருந்தது. தெற்கில் இருந்து சீராக வந்த காற்று வெக்கையை அடித்துத் துரத்தி மனசுக்கு இதமான சந்தோஷத்தைக் கொடுத்தது.

சுற்றுப்புறம் எல்லாம் நிசப்தமான ராத்திரி. இப்படித்தான் ராக்காலம் இருக்கும் என்று ஆதி மனுஷனுக்கு தெய்வம் சொன்னபடி அது இருந்ததாக ராஜாவுக்குத் தோன்றியது. அவர் குரிச்சியில் உட்கார்ந்தபடிக்கு முன்னால் இருந்த குமருகளை வாஞ்சையோடு நோக்கினார்.

நீங்களும் போய் ஒரு கும்பிடு போட்டுட்டு வந்து ஊர் வர்த்தமானம் சாவகாசமாச் சொல்லிட்டு இருக்கலாமேன்னேன். என்ன நாஞ்சொல்றது?

ராஜா கேட்டார்.

இவன் இந்தக் கோவிலுக்குள்ளே வரப்பட்டவன் இல்லியே அப்பாரு.

மருதையன் வேதையனைக் காட்டிச் சொன்னான்.

அப்படி ஒண்ணும் இல்லே. ஆனா கிறிஸ்தியானி வந்தா ஆசாரம் கெட்டுடும்னு மலையாள பூமியிலே ஒரு க்ஷேத்ரம் விடாம தடசம். நானும் போறதில்லேன்னு நடப்பாக்கிண்டுட்டேன்.

வேதையன் சொன்னான்.

இவன் கிறிஸ்துவன் என்பதே நினைவில் வரமாட்டேன் என்கிறது ராஜாவுக்கு. பார்ப்பாரப் பிள்ளை. பூணூலையும் மூக்கையும் மாறிமாறிப் பிடித்துக் கொண்டு சூரியனைப் பார்த்துக் கொண்டு காலையிலும் சாயந்திரமும் மந்திரம் சொல்லாமல் எப்படி இவன் சிலுவை சார்த்தின கோவிலுக்குப் போக முடியும்? சாப்பிடுகிறது கூட கத்தரிக்காயும் பருப்பும் என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிகிறது. பேச்சு ரீதியும் சாமா மாதிரித்தான். கொஞ்சம் மலையாள வாடை இருந்தாலும் இது பார்ப்பாரக் கொச்சை ஆச்சுதே.

இங்கே சர்ச் எங்கே இருக்கு சாமா?

வேதையன் கேட்டான்.

மதுரை போற சாலையிலே அரச மரத்து முக்கு ஒண்ணு வரும். அதுக்கு எதிர்த்தாப்பலே திரும்பினா ஆர்.சி சர்ச் தான். போன வருஷம் தான் கட்டினது. ஆரோக்கியமாதா ஆலயம்னு வாசல்லே கல்லுலே கொத்தி வச்சிருக்கும்.

நீ புரோட்டஸ்டண்டா? ரோமன் கத்தோலிக்கா? சிரியன் கிறிஸ்துவமா?

மருதையன் விசாரித்தான்.

ராஜாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சைவன் வைஷ்ணவன் என்கிற மாதிரி கிறிஸ்து நாதரைத் தொழ வருகிற கூட்டத்திலும் ஏகப்பட்ட உட்பிரிவு இருக்கா? அவர் என்னத்தைக் கண்டார்.

பார்ப்பாரக் கிறிஸ்துவர்கள் எல்லாம் தனியான கோஷ்டியாக இருக்குமோ. அவர்கள் மற்றவர்களை விட உசத்தியான இடத்தில் உச்சாணிக் கொப்பில் இருக்கப்பட்டவர்களோ?

வேதையனிடம் எப்படியாவது இதை விசாரிக்க வேணும்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts