“காப்புரிமை”

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

உஷாதீபன்


அப்படி ஒரே பேச்சில் தங்கத்தை நிறுத்தி விடுவாள் என்று எதிர்பார்க்கவேயில்லை. பட்டென்று சொல்லி முடித்துக் கொண்டாள். அதற்கு அவள் தேர்ந்தெடுத்துக்கொண்ட இடம் குளியலறை. உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டு, ஏதொவொரு பாதுகாப்பில். முகத்துக்கு முகம் பார்க்க வேண்டாம். என்ன உணர்ச்சி ஓடுகிறதென்று தேட வேண்டாம். பிறகு அதனால் மனக் கஷ்டமுற வேண்டாம். தன் முகத்தில் என்ன பாவம் தெறிக்கிறது என்பதும் எதிராளிக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் பகையுணர்வு என்று ஒன்று உருவாக இடமில்லை. தப்பித்தல். ஒரு வகையில் அதுதான். அது நாள் வரையிலான பழக்கத்திலிருந்து அதன் நெருக்கத்திலிருந்து, அந்த அந்நியோன்யத்திலிருந்து பரஸ்பர நேயத்திலிருந்து, இப்படி எல்லாவற்றிலிருந்தும்தான். ஆனாலும் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு. இத்தோடு, இன்றோடு நறுக்கிவிட வேண்டும் என்ற வெறி. அதில் ஏதொ வெற்றி தொற்றிக் கொண்டிருக்கிறது. ‘என்னை மீறியா ஆடற? வாலை ஒட்ட நறுக்கிடுவேன். ஜாக்கிரத…” ‘என் வீட்ல நுழைஞ்சு என்னையே மிஞ்சப் பார்க்கிறியா?” ‘என்னை என்ன கேனச் சிறுக்கின்னு நினைச்சியா? “ கடைசியில் நினைத்ததை முடித்தேவிட்டாள் அருணா. அதுநாள்வரையிலான மனப் போராட்டங்கள் ஓய்ந்தது. ஓய்ந்ததா அல்லது இனிமேல்தான் ஆரம்பமாகப் போகிறதா? இத்தனை வருடங்கள் அந்த வீட்டில் ஒன்றோடு ஒன்றாய் இருந்த ஒருவரை அப்படிச் சுலபமாகத் தூக்கி எறிந்தது மனதை விட்டு அத்தனை சுலபமாய் போய் விடுமா என்ன? சாத்தியமில்லையே? வெளியில் வேண்டுமானால் ஒண்ணுமில்லையே? என்பதுபோல் இருக்கலாம். காட்டிக் கொள்ளலாம். உள் மனதுக்குள்? “சொல்லிட்டியா? எப்டி? எங்க வச்சு?” – இன்னமும் வியப்பு நீங்கவில்லை இவனுக்கு. “அதெல்லாம் எதுக்கு? சொல்லியாச்சு…அவ்வளவுதான்…” “அடேயப்பா…!! எப்டித்தான் உனக்கு வாய் வந்ததோ? எத்தனை வருஷமா இருக்காங்க அந்தம்மா…? இப்படி ஒரே வார்த்தைல சொல்லிட்டேங்கிறியே? “ “அந்த நிலமைக்குத் தள்ளுனவங்க அவுங்கதானே? அவங்கவுங்க செயல்தான் அவங்களோட எதிர்காலத்தைத் தீர்மானிக்குது. அது என் மூலமா நடந்திருக்கு. அவ்வளவுதான்…” “பாவம் அருணா அந்தம்மா…ரொம்பப் பாவம்…” ‘அம்ம்ம்ம்மாhhhhhh…..பெரிய அம்ம்மா…..அம்மாவாவா இருந்தா அவ….” ‘ஏய், என்ன பேசற நீ…?” …………….2……………… – 2 – ‘அவ நடந்துக்கிற முறையே சரியில்லை…அதச் சொன்னேன்…” ‘நாலு குழந்தைகளுக்குத் தாயார்டி அவ…வீட்ல அம்மா, அப்பா, மாமனார், மாமியார், புருஷன், குழந்தைகள்னு இருக்கிறவ…பெரிய சம்சாரி…..” ‘சம்சாரியோ, கிம்சாரியோ…எப்படியிருந்தா எனக்கென்ன…எனக்குப் பிடிக்கல, அவ்வளவுதான்…” இதற்கு உங்களைக் கேட்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்கிறாள். நிறுத்துவதற்கு என்னைக் கேட்க வேண்டாம். ஆனால் பதிலுக்கு நாளைக்கே வேறு ஆள் தேடியாக வேண்டுமே? அதற்கு என்னைத்தானே கேட்டாக வேண்டும்? என்னிடம் தானே சொல்லியாக வேண்டும். அதற்கு ஒங்க அப்பனா வந்து சேருவான்…? – மனதுக்குள் கேட்டுக் கொண்டேன். “அதென்ன பார்வை? கேட் திறக்கிற சத்தம் கேட்டவுடனே போய் எட்டிப் பார்க்கிறது? அவுங்கதான் இந்த டயத்துக்கு வருவாங்கன்னு தெரியாது? அப்படிப் பார்க்காதீங்க…அசிங்கமாயிருக்கு…” அந்தக் கடைசி வார்த்தைதான் எனக்குப் பிடிக்கவில்லை. அதென்னவோ ஒரு ஈர்ப்புதான். தங்கம் முகத்தைக் காலையில் பார்ப்பது. லட்சணமான, மங்களகரமான முகம் அது. சொல்லித்தான் ஆக வேண்டும். ஏன், ஒரு ஏழையின் முகம் அழகாக இருக்கக் கூடாதா? அல்லது அது ரசிக்கத்தான் படக்கூடாதா? தங்கம், அடித் தங்கம்….ஒரு பழைய படத்தில் வரும் பத்மினிக்குச் சொல்லும் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது. ஒன்றைத்தொட்டால் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அதற்கு நானென்ன பண்ணுவது? மனிதர்கள் தவறுகள் கலந்தவர்கள்தான். அதில்லை என்றால் மனுஷன் இல்லை. யார் தவறு செய்யவில்லை.? இவன் இந்தத் தவறு செய்தான் என்று அடுத்தவனைச் சுட்டிக் காண்பிக்கும் அதே வேளையில் மற்ற விரல்கள் நம்மையல்லவா காட்டிக் கொண்டிருக்கின்றன? அதை எந்த மனிதன் உணருகிறான்? தன்னைத் தவறே செய்யாதவன் போலவும், அல்லது செய்த தவறு எப்போதோ நடந்தது, இப்போது இல்லை என்பது போலவும், இனி நான் வாழ்க்கையில் தவறே செய்யமாட்டேன் என்று பிரதிக்ஞை கொண்டவன் போலவும் அல்லது அது அப்போ பார்த்துக்கலாம் என்ற மனநிலையிலும்;தானே ஒருவன் எதிராளியைக் கை காட்டுகிறான்? சலனித்து ஓடும் ஆறு களங்கமற்றுத் தெளிவாகவா ஓடிக் கொண்டிருக்கிறது? சுற்றிலும் மிதக்கும் செத்தை, குப்பைகளை ஒதுக்கி விட்டுத்தானே குளிக்கப் பழகியிருக்கிறோம்? வேண்டாம் என்று நிராகரித்தால் ஆறுக்கென்ன நஷ்டம்? இது ஏன் உணரப்படுவதில்லை? மனிதர்களை அவர்களின் இருப்பின்படியே ஏற்றுக் கொள்ள ஏன் மனம் மறுக்கிறது? பெரிய மகான்களும்கூட விமர்சிக்கப் படுகிறார்கள். அதற்காக அவர்களை ஒதுக்கி விடுகிறோமா? தூக்கி எறிந்து விடுகிறோமா? குறைகள் இல்லாத மனிதன் எவன்? அப்படி ஒதுக்குவது என்றால் உற்றார், உறவினர், சுற்றத்தார் என்று எதுவுமே மிஞ்சாதே? பிறகு நாம் மட்டும்தானே தனியே நிற்க வேண்டும்? அது சரியா? முறையாகுமா? இந்தச் சாதாரணமானவற்றை உணருவதற்குக் கூட ஒரு வயசு தேவைதானோ? இவைகளுக்கும் ஒரு அனுபவம் வேண்டுமோ? இந்த முதிர்ச்சியை எய்துவதற்குக்கூட ஒரு பக்குவ நிலை கைவரப் பெற வேண்டுமோ? அந்த மாதிரி ஒரு பக்குவம் எனக்கு வந்திருக்கா இல்லையாங்கிறது இப்போ முக்கியமில்லை. இப்போ இந்த நிமிஷத்தில் இதுதான் முக்கியம்…! அருணா சொல்வது போலவே இருந்தது இவனுக்கு. ஆனால் ஒன்று. எதைச் சொன்னாலும் அவளிடம் ஒரு தீர்மானமிருக்கிறது. அதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அந்தத் தீர்மானத்தின்-பாலான முடிவு சட்டென்று எடுத்ததாகவும் தெரியவில்லை. அதைப் பிரயோகிக்கும் விதம்தான் சரியில்லை. அதுதான் மின்னலாய்த் தோன்றி மறைகிறது. ஆனாலும் அதிலும் ஏதோ ஒரு புத்திசாலித்தனம் இருக்கத்தான் செய்கிறது. ……….3…………. – 3 – சரி, அதற்காகப் பொறுத்துப் போகிறவன் மடையன் என்றா பொருள்? அப்படியும் கொள்வதற்கில்லை. இந்த சக வாழ்வில் ஒரு சாதாரணன் பெரிதாக என்ன சாதிக்க இருக்கிறது? குறைந்த பட்சம் இந்த மனித நேய உணர்வுகளையாவது முடிந்தவரை நடைமுறைப்படுத்தலாமே? “ஆமா…பெரிய மனித நேயம்? எல்லாம் உங்களுக்கு மட்டும்தான் இருக்கு…ஒட்டு மொத்தக் குத்தகை, Nஉறால் சேல் ஏஜென்ட். உலகத்துல மத்தவங்களுக்கெல்லாம் கிடையாது. இந்த மனித நேயத்தை நீங்களே வச்சிட்டு அழுங்க…” “என்ன அருணா இப்படிப் பேசற?” “பின்ன என்ன? வேலைகள்ல, வேலை வாங்குறதுல, கண்டிப்பா இருக்கிறவங்களெல்லாம் மனித நேயம் இல்லாதவங்கன்னு அர்த்தமா? உங்களுக்கு மட்டும்தான் அதை எழுதி வச்சிருக்கா? யார், யார் தங்களோட ட்ய+ட்டில சரியா இருக்காங்களோ அவுங்களுக்கும் இரக்கம், கருணை, அன்பு இதெல்லாம் உண்டுதான். நல்ல குணங்கள் எல்லாமும் உங்களுக்கு மட்டும்தான் வரிச்சிருக்கா? இதெல்லாத்தையும் உள்ளடக்கியதுதான் நீங்க பெருமையடிச்சிக்கிற மனித நேயம். எங்களுக்கும் தெரியும். அதுக்காக மனித நேயம், மனித நேயம்னுட்டு இரக்கப்பட்டுட்டே மட்டும் இருந்தாப் போதுமா? வேலை நடக்குமா? அது வேறே, இது வேறே. நிர்வாகம்ங்கிறது என்ன? எவனொருத்தன் தன் வேலைகளை, கடமைகளை, ஒழுங்கா, ஒழுக்கமா, தவறாமச் செய்து முடிக்கிறானோ, அவனுக்கு எல்லா உரிமைகளும் தானே கிடைக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. அதைத் தெரிஞ்சிக்குங்க…” இவள் என்ன சொல்கிறாள்? அப்படியானால் தங்கம் தன் வேலைகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்கிறாளா? கடமை தவறி விட்டாள் என்கிறாளா? வெறும் மாதம் முன்னூறு ரூபாய்க்கு எவ்வளவு கடமையைச் செய்வது? ஏற்றுக் கொண்டால் மாங்கு மாங்கு என்று செய்துதான் ஆக வேண்டும் என்பதுதான் சித்தாந்தமோ? வெறுமே வேலைகளைச் செய்பவள் ஆக மட்டுமா அவள் இருந்திருக்கிறாள்? சிறு வயதிலிருந்து இவள் குழந்தைக்கு ஒரு செவிலித்தாய் போலவும் இருந்தல்லவா கழித்திருக்கிறாள்? நம்பி சாவியைக் கொடுத்து விட்டுப் போன காலங்கள் எத்தனை? ரெண்டு பேரும் அலுவலகம் போய்விட்ட வேளைகளில், தூசி அகற்றி, பெருக்கி, மெழுகி, பள்ளி சென்று பையனைக் கூட்டி வந்து, அவனுக்கு உணவு கொடுத்து, பாடம் எழுத வைத்து, படிக்க வைத்து, அவனை உறங்க வைத்து, மாலை ஆபீஸ் விட்டு வருவதற்குள் மீண்டும் தயார் படுத்தி ட்ய+ஷன் அழைத்துச் சென்று, மீண்டும் கொண்டுவந்து விட்டுவிட்டு, பிறகுதானே அந்தம்மாள் தன் வீடு செல்லும்? இவையெல்லாம் எத்தனை பெரிய பொறுப்புணர்ச்சிக்கான அடையாளங்கள்? ஈடுபாடு, சகிப்புத்தன்மை, அன்பு, பாசம் ஆகியவைகளுக்கு உட்பட்ட விஷயமில்லையா? இவையெல்லாமும் நிமிஷத்தில் ஒதுக்கப்பட வேண்டியவையா? தான் நினைக்கும் இந்த ஒழுக்கம், கட்டுப்பாடு இவைகளெல்லாம் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இவள் நினைக்கிறாளோ? பொதுவாகவே இம்மாதிரிப் பேசுபவர்களெல்லாம் அப்படித்தானே தங்களை நினைத்துக் கொண்டு நடந்து கொள்கிறார்கள்? தன்னின் பலவீனங்களை அறியாதவர்களாகத்தானே இருக்கிறார்கள்? மற்றவர்களைச் சொல்லும் இவள், தன்னையறியாமல், இந்த மாய வலைக்குள் விழுந்து விட்டாளோ? என்னதான் யோசித்தாலும், பேசினாலும், வாதம் செய்தாலும், தங்கத்தை வேலையை விட்டு நீக்கியது சரி என்றே தோன்றவில்லை இவனுக்கு. வீட்டில் பருப்பு, எண்ணெய் என்று வைத்திருந்த பொருட்களின் அளவு குறைகிறது என்றாள்? அந்த முகமா எடுத்திருக்கும்? அருகில் தங்கத்தின் முக லட்சணத்தைத் தரிசித்தபோது, அந்த அக லட்சணம் சந்தேகம் கொள்ளத்தக்கதாகத் தோன்றவில்லையே? ‘எங்கிட்டக் கேட்டா கொடுக்க மாட்டேனா? இப்படியா சொல்லாம எடுப்பாங்க?’ அருணா புலம்பிய போதும் இவன் நம்பவில்லை. பளிச்சென்று நேரில் கேட்டு விட வேண்டியதுதானே? அதற்காக அவள் மீதான தவறுகள் நிறையச் சேர்ந்து விட்டன போல் இப்படியா சட்டென்று நிறுத்துவது? தவறுகள் குற்றங்கள் அல்லவே? ……………4……….. – 4 – தன் வேலையுண்டு, தான் உண்டு என்று போய் வந்து கொண்டிருந்தவளுக்கு இந்நிலை ஏன் வந்தது? ஒரு வீட்டின் வருவாய் குறைந்தாலும், அவள் பாடு திண்டாட்டம்தானே? எப்படிச் சமாளிக்கப் போகிறாள்? இதெல்லாம் அருணாவுக்குத் தோன்றவில்லையா? அவங்களோட சொந்தப் பாடெல்லாம் நினைச்சு நாம வருத்தப் பட முடியுமா? நமக்கே ஆயிரம் பாடு பாடாப் படுத்திட்டிருக்கு… சட்டென்று தும்மல் வந்தது இவனுக்கு. நச்சு நச்சென்ற தும்மல் போட்டுக் கொண்டிருந்த ஒரு நாளில்தான் தங்கம் சொன்னாள்: “இம்புட்டு தூசியோட இந்த ரூம்ல இருந்தீங்கன்னா ஏன் தும்மாது? சித்த இப்டி வாங்க…சுத்தம் பண்ணிடுறேன்…” – அன்று எவ்வளவு கஷ்டப்பட்டு தன் அறையைச் சுத்தம் பண்ணிக் கொடுத்தாள். ஒரு வேளை அந்த மாதிரிச் செய்கையெல்லாம் இவளுக்குப் பிடிக்காமல் போய்விட்டதோ? அதில் ஏதேனும் வித்தியாசமாய் உணர்ந்து கொண்டாளோ? கேட்காமலே பலவற்றைத் தூக்கிக் கொடுக்கும் பழக்கம் உள்ள அருணா எப்படி அவளைச் சட்டென்று வேலையை விட்டு நீக்கினாள்? இவன் மனது இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி எதிர்பாராமல் தூக்கிக் கொடுப்பதையும், வந்தவரைக்கும் லாபம் என்று நினைத்து வாங்க மறுப்பவள்தானே தங்கமும்? என்ன ஒரு கௌரவம் மிக்க பெண்மணி அவள்? பையனின் பிறந்த நாளை ஞாபகம் வைத்துக்கொண்டு, அவனுக்கு மிகவும் பொருத்தமான வண்ணத்தில் விலையுயர்ந்த ஒரு சொக்காயை வாங்கி வந்து நின்றாளே? அது யார் சொல்லிச் செய்தது? அந்த மனசுதானே அதைச் செய்யச் சொன்னது? அவளின் சொந்த மனது எவ்வளவு பெரியது? பின் ஏன் இவையெல்லாம் நடந்தது? இந்த வலைப் பின்னல் ஏன் சிடுக்காகியது? முதலில் அவள் ஒரு மனுஷி. பிறகுதானே மற்றதெல்லாம்? அப்படி நினைத்துத்தானே இதுவரையிலான காரியங்கள் அந்த வீட்டில் நடந்தேறியிருக்கின்றன? பின் ஏன் இந்தப் பின்னடைவு? மனச்சுமையோடு தன் அறையிலிருந்து வெளி வந்த இவன் உள்ளே எட்டிப் பார்த்தான். சுற்றிலும் அம்பாரமாய்ப் பற்றுப் பாத்திரங்களைப் பரப்பிக் கொண்டு, வழக்கத்திற்கு மாறாய் முட்டங்கால்வரை புடவையை வழித்துவிட்டுக்கொண்டு சதும்ப உட்கார்ந்து, சன்னதம் வந்தவள் போல் பாத்திரங்களைத் துலக்குவதில் வெகு தீவிரமாய் ஈடுபட்டிருந்தாள் அருணா. மனதில் உள்ள ஆத்திரமும், கோபமும், விரல்களில் அழுந்தி, கரகரத்துக் கொண்டிருந்தன. “அடேங்கப்பா…! எவ்வளவு பாத்திரம் அருணா? மலையாயிருக்கே…? இவன் பிரமித்தான். கழுவி வைத்து பாத்திரங்களை எடுத்து உள்ளே அடுக்க ஆரம்பித்தான். “யாரும் எனக்கு உதவி செய்யத் தேவையில்லை…எனக்கே பண்ணிக்கத் தெரியும்…” ஒரு சிறு குழந்தையின் கோப நோக்கில் அவளைப் பரிதாபத்தோடு பார்த்தான் இவன். “இதெல்லாம் தேய்ச்சுக் கழுவிச் சுத்தமாக்கிடலாம்…வெளுத்தும் போயிடும். வெள்ளையாயிடும்….ஆனா மனுஷா மனசு? அதை யார் வெளுக்கிறது? யார் சுத்தமாக்குறது? அதில படிஞ்சிருக்கிற கறையை எப்படிப் போக்குறது?” சத்தமாய், அழுத்தமாய், வீரியமாய் வந்த வார்த்தைகளை ஆக்ரோஷமாய் உமிழ்ந்துவிட்டு, ஓவென்று குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் அருணா. என்னவோ போகிற போக்கில் உணரப்பட்டது, விபரீதம் போல் புரிய ஆரம்பித்த அந்தக் கணத்தில், அதன் வீச்சும், உஷ்ணமும் தாள முடியாமல், அப்படியே விதிர்த்துப் போய் உறைந்து நின்று கொண்டிருந்தான் இவன்!!


ushaadeepan@gmail.com

Series Navigation

author

உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts