விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திமூணு

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

இரா.முருகன்


வண்டிக்குள் வேதையனோடும் துர்க்கா பட்டனோடும் கூட வயசனான ஒரு வெடி வழிபாடுக்காரனும் இருந்தான். அவனுடைய நனைந்த ஓலைக்குடை வண்டிக்கு வெளியிலும் உள்ளுமாக வண்டிக் கடைகாலோடு கூட அசைந்து கொண்டு வந்தது.

குடை தவிர ஒரு பெரிய பொதி வெடி மருந்தையும் வெடிக்காரன் தன்னோடு கொண்டு வந்திருந்தான். மழை ஈரம் அது மேலே படாமல் ஏதேதோ பழந்துணியை மேலே சுற்றி பத்திரமாக எடுத்து வந்திருந்தான் அவன். அந்தப் பொதி அடைத்துக் கொண்டது போக மிச்ச இடத்தில் உட்கார்ந்து வர வேதையனுக்கு கொஞ்சம் அசௌகரியமாகப் பட்டது. ஆனாலும் இந்த மழையில் வேறே வண்டி எதுவும் அம்பலப்புழைக்கு பூட்டி வரச் சித்தமாக இல்லாது போனதால், சுகவீனத்தையும் சகித்துக் கொண்டு வெடிமருந்து நெடிக்கு இடையே இப்படி ஒரு பிரயாணம்.

வேனல் மழை நேரம். வயசான காலம் வேறே. வீட்டோட சுகமா தெய்வமேன்னு கிடக்காம என்னதுக்காக இப்படி அலைஞ்சு அல்லல் படறீர் அப்பூப்பன்?

வேதையன் வெடி வழிபாட்டுக்காரனை விசாரித்தான். நாலு மணி நேரம் கூடவே பிரயாணம் செய்ததில் அவனுக்கு வழிபாட்டுக்காரன் வெகு சிநேகமாகிப் போனான்.

அலையணும்னு தலைச் சோறிலே அந்த தெய்வம் வெண்டக்காய் அட்சரத்துலே எழுதி வச்சா பின்னே வேறே எப்படி ஜீவிக்க முடியும் மோனே?

இடுப்பு முண்டு இன்னொரு தடவை காலுக்குத் தழைத்து விட்டுக் கொண்டு பொக்கை வாயோடு சிரித்தான் வெடிக்காரன். அவன் வலது காலில் பெருவிரல் இல்லாததை வேதையன் கவனித்தான்.

தன்னிச்சையாக வேதையன் கையும் தன் மேல் துண்டுக்கு அடியே புகுந்து விட்டிருந்தது.

ஆறாம் விரலை அவன் மறைக்க பிரயாசைப் படுகிறதுக்குக் கொஞ்சமும் குறையாத விதத்தில் வெடிக்காரன் விரல் போன காலை மறைத்து வைக்கிறான்.

வேதையனுக்கு சட்டென்று மனசிலானது.

மோன் சர்க்கார் கச்சேரியிலே வக்கீல் பணிக்காரன் அல்லே?

வெடிக்காரன் தான் சொல்வது சரியாக இருக்கும் என்ற தீர்மானத்தோடு விசாரித்தான்.

ஐயோ, நானா வக்கீலா?

வேதையன் கையைத் தட்டி அதை ரசித்தான்.

பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிற ஒரு பாவம் மாஷ் நானாக்கும்.

வெடிக்காரனுக்கு ஏமாற்றம் துல்லியமாக முகத்தில் தெரிந்தது. நொடியில் அதையும் கடந்துவிட்ட சகஜத்தோடு வேதையனைப் பார்த்தான் அவன்.

வக்கீலன்மார் மோனுக்கு யாரும் தெரிஞ்சா சொல்லணும். ஒரு வியாஜ்யம் உண்டு.

வெடிக்காரன் குரல் மழைக்கு நடுவே பிசுறு தட்டி ஒலித்தது.

இதுக்கு மேலே போறது கஷ்டம் என்று வண்டிக்காரன் மழை இரைச்சலோடு சொன்னான். ஆனாலும் காளைகளுக்கு அது தெரிய வராததால் வண்டி என்னமோ நகர்ந்தபடி தான் இருந்தது.

என்ன வியாஜ்யம்?

துர்க்கா பட்டன் வெடிக்காரன் வாயைப் பிடுங்கினான். இந்த மழையில் இவன் பேச்சும் இல்லாமல் போனால் நேரம் போகிறது பெரும் பாடாகி விடும்.

அம்பலம் உத்யோகஸ்தர்கள் பேரில் ஒரு பிராது கொடுக்கணும்.

ஏன், நீர் வெடி வச்சு ஜீவிக்க இடஞ்சல் செய்யற மனுஷரா இவரெல்லாம்?

வேதையன் பலமாகச் சிரித்தான்.

அதில்லே குஞ்ஞே.

வெடிக்காரன் ஒரு கட்டை புகையிலையை வாயில் அடக்கிக் கொண்டான். துர்க்கா பட்டன் கொஞ்சம் விலகி உட்கார்ந்தான். பாழாய்ப் போன பரசு ஞாபகம் வந்து தொலைத்தது அவனுக்கு.

இடஞ்சல் இவர் யாரும் செய்யலே. ஆனாலும் அம்பது வருஷமா என் காலுக்கு நஷ்ட பரிகாரம் தர ஒருத்தரும் முன்கை எடுக்கலியே? நியாயந்தானா சொல்லு.

வயசன் பழைய நினைவில் ஆழ்ந்து போனான். இப்போது அவன் கை இடுப்புத் துணியை காலுக்கு மேலே மறைக்காமல் உயர்த்திப் பிடித்தபடி விரல் இற்றுப் போன பரப்பைச் சுட்டியது.

வெயிலும் புழுக்கமுமான ஒரு சாயந்திர நேரத்தில் சந்தியாகால பூஜைக்கு ஒரு மணிக்கூர் நேரம் இருக்க, மூத்ர வாடையோடு நக்னமான ஒருத்தன் அம்பலத்து த்வஜஸ்தம்பம் பக்கம் பறந்ததைப் பற்றி வேதையனிடம் சொன்னான் வெடிக்காரன்.

துர்க்கா பட்டன் நமட்டுச் சிரிப்போடு வேதையனைப் பார்த்தான். வேதையனுக்கும் தான் நம்ப முடியவில்லை. ஆனால் அவன் ஆறாவது விரல் என்னமோ துடித்தது. மனசு படபடக்கும்போதும், ஆச்சரியமும் அதிசயமுமாக ஏதாவது நடக்கப் போகிறது என்று தோன்றும்போதும் அது அப்படித்தான் அழிச்சாட்டியம் பண்ணும்.

வெடி வழிபாடு நடத்திக் கொண்டிருந்த தன்மேல் அந்த வயசன் விழுந்து வெடியும் கூடவே வெடித்து வைக்க, கால் பெருவிரல் இற்றுப் போனதும் அடுத்து வந்தது. மேலே நடந்தது இந்தப்படிக்கு இருந்ததாம் –

பிஷாரடி வைத்தியர் சொன்னபடிக்கு அந்த விரலை வெடிக்காரன் வெளிச்செண்ணெய் புரட்டி மூலிகைத் தண்ணீரில் முழுக வைத்துச் சம்புடத்தில் எடுத்துப் பத்திரப்படுத்தி இருந்தான். கோவில் துவஜஸ்தம்பத்திற்குப் பத்து அடி தள்ளி கிழக்கு நோக்கி அதை வைத்து வெடி வழிபாடு நடத்தினால் அதில் சதை இன்னும் கொஞ்சம் வளரலாம் என்றும் அப்புறம் அதை சஸ்த்ர சிகிச்சை செய்து அவன் காலில் திரும்பவும் பொருத்தி விடலாம் என்றும் அம்பலத்தில் பூஜை வைக்கிற எம்ப்ராந்திரி யோசனை சொன்னபோது பிஷாரடி வைத்தியர் அரைமனதோடு சம்மதித்தாலும் வெடிக்காரன் முழுக்க சம்மதம் என்றானாம்.

ராத்திரியில் திரி அணைத்து, அம்பலம் அடைத்துப் பூட்டி மேல்சாந்தி நடக்கிறபோது துவஜஸ்தம்பத்திற்கு வெகுதூரம் அப்பால் மண் மேட்டில் பிரதிஷ்டை செய்ததுபோல் நட்டு வைத்திருந்த அந்தச் சம்புடம் கண்ணில் படும். அதின் மேல் சூட்டிய கொன்றைப் பூ மாலையும். நிர்மால்யப் பிரசாதத்தில் ஒரு பருக்கை எடுத்து அந்தப் பக்கம் எறிந்தபடி போவாராம் அவர்.

தினசரி பிரசாதம் கொடுத்தது அதிக போஷாக்காகி ஒரு விரல் இருந்த இடத்தி ஐந்து விரல் முளைத்து விட அதிலே எல்லாம் வாச்சி வாச்சியாகப் பேய் பிசாசுக்கு வாய்த்தது போல் நகமும் வேறேயாம்.

குறூப்பே நீ யாதொண்ணுக்கும் கவலைப்படாதே. பிஷாரடி வைத்தியன் சஸ்த்ரக்கிரியையிலே ஒரு விரலை மட்டும் கால்லே எடுத்து வச்சுடுவான்.

மத்ததை என்ன செய்ய?

வெடிக்காரன் எம்பிராந்திரியை விடாமல் கேட்டானாம்.

அர்த்தஜாம பூஜை முடிந்து வந்து யோசிக்கலாம் அதை.

எம்பிராந்திரி சொல்லியபடிக்குக் கிளம்பிப் போனதுக்கு அப்புறம் அம்பலத்தில் எத்தனை எத்தனை அஸ்தமன பூஜை, சீவேலி, பூரம், வெடிவழிபாடு, பாயச நைவேத்தியம், பூவன்பழக் குலை நேர்ச்சை. ஓட்டந் துள்ளல். பாண்டி மேளக் கொட்டு. ஆனாலும், கோவில் உத்யோகஸ்தர் யாரும் இந்த நாற்பது சில்லறை வருஷத்தில் குறூப்பே, சுகமாணோ என்று ஒரு மரியாதைக்குக் கூட பக்கத்தில் வந்து கேட்கலை தெரியுமோ?

வெடிக்காரன் வேதையனிடம் துக்கத்தை எல்லாம் இறக்கி வைத்தான்.

அதுக்காக இப்போ ப்ராது கொடுக்கணுமா நீர்? இதெல்லாம் இந்தப் படிக்கு நடந்திருந்தாலும் அதுவும் இப்போ ஐம்பது வருஷப் பழஞ்சன் விஷயமாச்சே,

வேதையன் சிரிப்பு மாறாமல் கேட்க வெடிக்காரன் கூப்பாடாகச் சொன்னான்.

மோனே, இது ஒண்ணு விடாமல் நடந்ததாக்கும். எதுவும் கெட்டுக்கதை இல்லே. அஞ்சிலே ஒரு விரலை வைத்தியன் எனக்கு எடுத்து வச்சிருந்தாலும் என் கால் மூளி ஆகியிருக்காது தெரியுமா?

அந்த அஞ்சுமே தான் நான் என்று தனியாகத் துடித்தது வேதையனின் விரல். அவன் அதை இன்னும் இறுக மூடிக் கொண்டான். என்னமோ சூழ்நிலை இறுக்கம் மேலே வந்து பலமாகக் கவிந்த மாதிரி இருந்தது அவனுக்கு.

நாலு பக்கத்திலும் தண்ணீர் தேங்கியிருக்க, தொடர்ந்து விழுகிற மழை வெள்ளப் போக்கை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. இதெல்லாம் காயல் பக்கமாக ஒழுகி சமுத்திரத்தில் கலக்கிறது தாமதமானால் வெள்ளப் பொக்கத்தில் இந்தப் பிரதேசமே முழுகி விடும் அபாயம் இருக்கிறது என்றான் வெடிக்காரன்.

முன்னாலே இப்படி ஆச்சுதா எப்பவாவது?

துர்க்கா பட்டன் விசாரிக்க, நினைவு மார்க்கமாகத் திரும்பவும் முப்பது கொல்லம் முன்னால் போனான் அவன். ஆனால் நல்ல வேளையாக பாச்சை மாதிரி, கோழி மாதிரி வெகு தாழ எவ்விப் பறக்கிறவர்களும், பூத பிரேதங்களும் இல்லாத காலமாக அது அமைந்ததில் வேதையனுக்கு நிம்மதி.

இதெல்லாம் நெல் பாட்டம். ஞாற்றுவேல நேரம் மழைக் கெடுதி. இந்தக் கொல்லம் நாசம் தான். வேறென்ன?

வெடிக்காரன் தண்ணீர்ப் பரப்புக்கு நடுவே சுட்டிக் காட்டி விசனப்பட்டான்.

இந்த வெள்ளத்துக்கு நடுவிலே பாட்டமும், பட்டணமும் எல்லாம் ஒண்ணும் தெரியலை அப்பூப்பன்.

வேதையன் கழுத்தை எக்கிப் பார்த்ததில் கொஞ்சம் ஆர்வம் தெரிந்தாலும், அவனால் வெளியே வெள்ளப் பெருக்கில் எதையும் அவதானிக்க முடியவில்லை என்பதை குரலில் ஏமாற்றம் வெளிப்படுத்தியது.

இதிலே நம்ம நிலமும் உண்டாக்கும்.

அவன் தணிந்த ஸ்வரத்தில் துர்க்கா பட்டனிடம் சொல்ல, பட்டன் ஆச்சரியத்தோடு வேதையனைப் பார்த்தான். வேதையன் தன் சஞ்சியைத் தொட்டுக் காட்டிய சைகை சர்க்கார் உறையைக் குறித்து என்று அவன் உடனே புரிந்து கொண்டான்.

ஆக, அதுதானா விஷயம்? இந்த மழையோடு அலைந்து வேதையன் அண்ணா நிலபுலம் விஷயமாகவா மெனக்கெடுகிறான்? நல்லதுதான்.

தனக்கும் குடும்பத்துக்கும் பிற்காலத்தில் நிலையாக வருமானம் வர வழி ஏற்படுத்திக் கொடுக்கிற பிரயத்னத்தில் அவன் இருப்பதை கிட்டாவய்யன் பார்த்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பான் என்று பட்டனுக்குத் தோன்றியது.

அது போகட்டெ. அம்பலப்புழையிலே ஆரா?

வெடிக்காரன் வேதையனையும் துர்க்கா பட்டனையும் மாறி மாறிப் பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்தான்.

ஆருமில்லே என்றான் வேதையன்.

வண்டி சட்டென்று நின்றது.

கடைகாலில் ஏதோ குழப்பம் ஏமானே. வண்டி இனி போகாது.

வண்டிக்காரன் இறங்கி முகத்தில் விசிறிய மழையை ஒதுக்கியபடி அறிவித்தான்.

சாமு, சாமுவே, இப்படி நட்ட நடு வெள்ளச் சுழிப்பிலே நிறுத்தினால் எப்படி? எனக்கு கால் வழங்காது. இவரானா ஊருக்கு புது மனுஷ்யர். எங்கே போறது சொல்லு.

வெடிக்காரன் மழையில் பழந்துணியாக நனைந்து, வண்டி ஓட்டி வந்தவனின் கையைப் பற்றியபடி சொன்னான். நிலம் காலில் படாது தடுமாறி நின்றான் அவன்.

வேதையன் சட்டென்று வண்டிக்காரன் கையில் ஒரு துரைத்தனத்துக் காசை வைத்து அழுத்த, அவனும் அதை மடியில் முடிந்து கொண்டு ஏதும் பேசாமல் வண்டியைக் கிளப்பினான்.

இப்போதோ, மாடுகள் நகர மாட்டேன் என்று அடம் பிடித்தன. அதுகளுக்குத் துரைத்தனத்து துட்டெல்லாம் புல்லு போல அத்யாவசியமான விஷயம் இல்லை என்றான் துர்க்கா பட்டன் வேதையனிடம். வேதையன் வெறுமனே சிரித்தான்.

மழைத் திரையைக் கீறிப் பிளந்து கொண்டு இன்னும் கொஞ்ச தூரம் போனதும் ஊருக்குள் நுழைகிறதாக துர்க்கா பட்டனுக்குப் பட்டது. அதை வேதையனுக்கும் சொன்னான்.

அதே, ஊருக்குள்ளே வந்தாச்சு. இந்த முடுக்கு திரும்பினா அம்பலத்துக்குப் போற தெரு. எல்லாம் இப்போ வெள்ளத்திலே தான்.

வெடிக்காரன் தன் மேல் துண்டை எடுத்து வெடிமருந்து பொதியை அழுத்த மூடினான்.

வண்டி திரும்ப நின்றது.

கொஞ்சம் கடைகாலை கவனிச்சுட்டு வரேன். நீர் இறங்கி உள்ளே போய் இளைப்பாறும்.

அவன் காட்டிய இடத்தில் ஒரு பழைய காரைக் கட்டடம் கதவு மட்ட மல்லாக்க விரிந்து கிடக்கத் திறந்து கிடந்தது.

மலியக்கல் தோம மோன் செறியன் தோம எடுத்துக் கட்டற வீடாச்சே. நம்ம ஆள்கார்தான் அவரெல்லாம்.

வெடிக்காரன் உற்சாகமாகச் சொன்னான். ஒரே சாட்டத்தில் வெடி மருந்துப் பொதியை வீட்டுக்குள் ஓடிப் போய் முன் வாசலில் வைத்து விட்டு வந்தான் அவன். இந்த வயசில் ஒருத்தன் இப்படிச் சாடி வேதையன் பார்த்தது இதுதான் முதல் தடவை.

உள்ளே போய் இருக்கலாம் வாங்க.

அவன் வீட்டுக்குள் வேதையனை நடத்திக் கொண்டு போகத் தயாராகத் தன் ஓலைக் குடையைப் பிடித்தான்.

தோமையனுக்கு மோன் வீடு புதுக்கற காரியம் நல்ல நேரமாப் பாத்து ஆரம்பிச்சிருக்கான். இந்த மழை விட்டாத்தான் இனி முன்னே போக முடியும். ராசியான காரைக் கட்டிடம். இடிச்சுப் பொளிக்கவும் மனசு வராது. சும்மா விடவும் முடியாது.

தோமை வீடா? பிராமணர் மனை மாதிரி இருக்கே.

வேதையன் விசாரித்தான்.

சரியாச் சொன்னே மோனே. பூர்வீகத்திலே தேகண்ட பட்டர் குடும்ப வீடு. குப்புசாமி அய்யர் சோதரன்மார்னு ஆலப்புழை பிரதேசம் முழுக்க பிரசித்தம் ஒரு காலத்துலே.

வெடிக்காரன் சொன்னபோது வேதையனுக்கு உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஜிவ்வென்று மயிர்க்கூச்செறிந்தது.

இதுவா? இதுதான் வேதையனின் பரம்பரை வீடா?

அவன் பரபரப்பாக இறங்கினான்.

பார்த்து, பார்த்து அண்ணா, விழுந்து வைக்கப் போறீர் என்றபடி துர்க்கா பட்டனும் வண்டியில் இருந்து கீழே குதித்தான்.

வாடா கொழந்தே. வழி தெரிஞ்சுதா இப்பத்தான்.

வீட்டுக்குள் இருந்து குரல் கேட்ட மாதிரி இருந்தது வேதையனுக்கு.

அம்மா போல வாத்சல்யமான, ரொம்பவே பழக்கமான குரல் அது. மங்கலாபுரத்தில் கேட்க ஆரம்பித்தது இப்போது மனசுக்கு இதமாகத் தொடர்ந்தது. அந்த நேசத்திலும் பிரியத்திலும் வேதையனுக்கு கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டு பச்சைக் குழந்தை மாதிரி விசித்து அழவேண்டும் போல் இருந்தது.

அவன் இங்கே இருக்கப் பட்டவன். இந்த மண்ணில் தான் அவனைப் பெற்றெடுத்த சிநேகாம்பாள் அம்மாளும் ஜான் கிட்டாவய்யரும் இருந்து, கிடந்து, நடந்து சுவாசித்திருக்கிறார்கள். அவனுடைய தமக்கை தெரிசாவும் நிர்மலாவும் பிராமணச் சிறுமிகளாக சிற்றாடையில் ஓடி விளையாடிய பூமி இதுதான். ஒரு ஜீவ அணுவாக இங்கே தான் வேதையன் உருவானது. அவன் வேதையனானபோது இந்த இடத்தை விட்டு எல்லோருமே பிரிந்து நாலு திசையிலும் சிதறி விட்டார்கள்.

சொப்பனத்தில் நடக்கிறது போல் அந்த ஆளரவம் ஒழிந்த வீட்டுக்குள் அடிமேல் அடியாக வைத்து மெல்ல நடந்தான் வேதையன். ஒவ்வொரு அடி வைக்கும்போதும் அந்தப் பெண் குரல் பார்த்துடா கொழந்தே பார்த்துடா கொழந்தே என்று கரிசனத்தோடு சொன்னபடி கூடவே இழைந்து வந்தது.

வேதையனுக்கு வேறே எதுவுமே வேண்டாம். காலம் இப்படி இங்கேயே நின்று போகட்டும். அவன், இந்த வீடு, இந்த நிமிஷம் இதில் உறைந்து போக முடியுமானால்.

வேணாம்டா குழந்தே. என் குழந்தை மகாதேவன் குடும்பத்தோட உறஞ்சு போன துக்கம் உனக்கும் வரவேண்டாம்டா குஞ்ஞே. யாருக்கும் வரக்கூடாத கஷ்டம் அது.

அந்தப் பெண்குரல் விம்மியது. அழுகை பழக்கமில்லாததாலோ என்னமோ குரல் பிசிறடித்து சில வினாடிகள் மௌனம். அது திரும்ப இயல்பான உற்சாகத்தோடு இரைந்தது.

உங்கம்மாவும் அப்பாவும் இங்கே தான் சண்டை போட்டு சமாதானமாகி பேசிண்டு இருக்கறது. உங்க அப்பூப்பன் இந்த மாடிப்படி ஏறித்தான் மேலே போய் அம்பலத்து கொடிமரம் பக்கமா சாயந்திர நேரத்திலே பறந்து போய் மூத்ரம் ஒழிச்சது. பாவம், இவன் விரல் போச்சு அந்த வயசன் மேலே இருந்து விழுந்ததாலே.

வெடி மருந்து மூட்டையைக் கட்டிப் பிடித்தபடி நின்ற வெடிக்காரனை வேதையன் பார்த்த பார்வையில் புதிதாக ஒரு நேசம் தெரிந்தது.

வாங்க ஏமான். வண்டி சரியாயிடுத்து. உங்களை விசுவநாத அய்யர் சோத்துக் கடையிலே எறக்கி விடணும்னு மனசுலே தோணுது. நல்ல விசப்பு இருக்குமே?

வண்டிக்காரன் வந்து நின்று பரிவோடு குரல் கொடுத்தான்.

நான் தாண்டா கொழந்தே அவனை அங்கே போகச் சொன்னது. பசியாற நாலு இட்டலியும் உளுந்து வடையுமாச் சாப்பிடு. விசுவநாதன் சுத்தமா சுகாதாரமா ருஜியோடு அதெல்லாம் ஆக்கி வச்சிருப்பான். மங்கலாபுரம் விடுதி மாதிரி இல்லே.

அந்தப் பெண் குரல் திரும்ப பிரியத்தோடு சொன்னது. பெண் குரல் இல்லை. அம்மா பேசியது. அவள் தான் கூடவே இருந்து எல்லாம் நடத்தி வைக்கிறாள்.

சாப்பாட்டுக் கடைக்கு மழையோடு வந்த வேதையன் மழையோடு அங்கே இருந்து இறங்கினது அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து.

சாப்பாடு மட்டுமில்லை. அவன் விசுவநாத அய்யரிடம் அந்த தஸ்தாவேஜையும் ஒப்படைத்திருந்தான்.

அம்மா சொன்னபடிக்கு நடந்தது அது.

தஸ்தாவேஜின் கடைசி பக்கத்தில் அவன் நிறுத்தி நிதானமாக எழுதிக் கையெழுத்துப் போட்டது இந்தத் தோதில் இருந்தது.

அம்பலப்புழை, அது கழிந்து கோட்டயம், அதுவும் கழிந்து கண்ணூரை தாமச ஸ்தலமாகக் கொண்டிருந்த பரேதனாகிய ஜான் கிட்டாவய்யன் என்ற தேகண்ட பிராமணன். கிட்டாவய்யனின் ஏக புத்ரன் வேதையனான நான், கிறிஸ்தியானி ஆண் வயசு 32, இதில் கண்ட நிலத்துக்கு சகல உரிமையும் உள்ளவன்.

இந்தப் பத்திரப்படிக்கு எனக்கு என் ஒண்ணு விட்ட சோதரன் அம்பலப்புழை மகாதேவய்யன் மூலம் வந்து சேர்ந்த அந்த பாத்யதையை சாப்பாட்டுக்கடை ஜீவனமாக வைத்திருக்கும் அம்பலப்புழை விசுவநாத அய்யருக்கு ஒத்தி வைத்து ஒரு ரூபாய் மட்டும் வாங்கிக் கொள்கிறேன்.

தற்போது வெள்ளப் பொக்கத்தில் முழுகிக் கிடக்கிற நிலத்தை அதன் அடையாளங்களை தஸ்தாவேஜு மூலம் கண்டு நிச்சயித்து மேற்படி விசுவநாத அய்யர் வெள்ளம் வடிந்த பிறகு பயிர்ச் செய்கை செய்யத் தகுந்ததாக்க வேண்டியது.

விளையில் கிடக்கிற ஆதாயத்தில் இரண்டில் ஒண்ணரை பங்கை அம்பலப்புழை கிருஷ்ணன் அம்பலத்தில் காணிக்கையாகச் செலுத்த வேண்டியது.

இந்த சேவைக்காக மேற்படி விசுவநாத ஐயருக்கு நான் ஆயுசுக்கும் நன்றிக்கடன் பட்டவன் ஆவேன்.

அவராலோ சந்ததியாராலோ இந்தக் கைங்கரியத்தை தேக அசௌகரியம், மற்ற கஷ்டப்பாடு இப்படியாக ஏதேனும் காரணத்தால் செய்ய முடியாமல் போனால், நேரம் தாமதிக்காமல் நிலத்தை அம்பலத்துக்கே எழுதி வைக்க வேண்டியதும் மேற்படி விசுவநாதய்யர் மனமுவந்து ஏற்றுக் கொண்ட கடமையாகும்.

அதற்கும் அன்னாருக்கு நன்றி விசுவாசம் உள்ள, கண்ணூர் கலாசாலல மலையாளம் வித்வானும் கிட்டாவய்யன் புத்ரனுமான வேதையன்.

வேதையன் இதையெல்லாம் எழுதினது தானா அல்லது கையைப் பிடித்து அம்மா எழுதினாளா என்று ஆச்சரியம் தீராமலே அம்பலப்புழையிலிருந்து கிளம்பும்போது அடுத்த மழை நானும் வரேன் என்று துணைக்குச் சேர்ந்து கொண்டது.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts