விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

இரா.முருகன்


விரோதமாகப் பேசி நோகடிப்பான் என்று எதிர்பார்த்துப் போன மனுஷன் தன்மையாக உபசரித்து மனசுக்கு இதமாக நல்ல வார்த்தை சொல்லி நாலு உத்தரிணி நாரிங்காய் வெள்ளம் மதுரமாக இனிக்க எடுத்து வந்து கொடுத்த மாதிரி வேனல் பகல் தண்ணென்று குளிர்ந்து போனது. துர்க்கா பட்டன் சாப்பாட்டுக்கடைக்குள் துணி சஞ்சியோடு ஏறுவதற்குள் முகத்தில் தெரித்து விழுந்த சாரல் துளிகள் தொப்பமாக நனைத்துப் போட்டன. அட, என்ன அவசரம், படி கேரின பிற்பாடு விழுந்து வச்சாத்தான் என்ன? பட்டனுக்கு கோபம் இல்லை. முகத்தில் சிரிப்பாக ஒரு சந்தோஷம் தான் எட்டிப் பார்த்தது. மங்கலாபுரத்தானுக்கு மழையைக் கண்டாலே ஆனந்தம் களி துள்ளாதா என்ன?

துணி சஞ்சியில் இருந்து சாதம் வைத்த தூக்குப் பாத்திரம், மெழுக்குப் புரட்டி, புளிக் குழம்பு, சம்பாரம், இஞ்சிம்புளி, சாப்பிட வெள்ளித் தாலம் எல்லாத்தையும் எடுத்து சாப்பாட்டுக் கடை ஓரமாக தண்ணீர் தெளித்து சுத்தம் பண்ணி வைத்திருந்த இடத்தில் வைத்தான் துர்க்கா பட்டன்.

கூடவே பழுப்பு நிற சர்க்கார் உறையில் அடைத்த ஏதோ காகிதமும் சஞ்சியிலிருந்து வெளியே வந்தது. அது நனைந்து போகவில்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்டு இன்னொரு தடவை இடுப்பு சோமனில் துடைத்து சுவர் ஓரமாக நகர்த்தி விட்டு வாசலுக்குப் போனான் துர்க்கா பட்டன். மழை இன்னும் விளையாட்டு காட்டிக் கொண்டிருக்க நடுப் பகலின் சுவடே இல்லாமல் குளிரக் குளிர ஒரு காற்று சாவகாசமாக தெருவோடு நடந்து போனது.

என்ன பட்டரே, மீன் வேணுமா? நல்ல கரிமீன். வாங்கி கறி வச்சுப் பாரும். எங்கே எங்கேன்னு எம்பின்னாடி சுத்துவீரு சொல்லிட்டேன்.

மீன் விற்கிற அப்துள்ளா முசலி தென்னந்தட்டி தலையில் போர்த்திய தென்னந்தட்டி ஊடாக எட்டிப் பார்த்து கூகூவென்று கூக்குரலாகச் சொன்னார். சட்டென்று வந்திறங்கிய மழை அவரையும் கூட சந்தோஷப் படுத்திப் போட்டிருக்க வேண்டும். பின்னாலேயே சீலைக் குடையை பாதி விரித்தபடி நடந்த குஞ்ஞாலிக் குட்டி மௌல்வியையும். மதியத் தொழுகைக்கு அத்தர் வாசனை எட்டு ஊருக்கு கமகமக்கப் பள்ளிக்குப் போகிறவர் அவர்.

பட்டனுக்கு பாசகம் செய்ய மடின்னா சொல்லட்டும். நானே வச்சு எடுத்துவந்து தர்றேன் திவசேனம்.

அத்தர் வாசனை பட்டனை இதமாகக் கடந்து அந்தாண்டை போனது.

ஓட்டமும் நடையுமாக கையில் மணி கட்டிய ஈட்டியோடும் தோளில் கடுதாசி சஞ்சியோடும் எதையும் யாரையும் லட்சியம் செய்யாமல் ஓடும் வர்க்கி, மிட்டாய்க் கடைக்கு சரக்கு எடுத்துப் போகிற சாகர்லால் சேட்டு, சாப்பிட்டு நிம்மதியாக தூக்கம் போட பெட்டியடியை விட்டு வீட்டுக்கு நடக்கிற பாண்டிக்கார வைரவன் செட்டியார் இப்படி ஒருத்தர் பாக்கி இல்லாமல் மனசை இதமாக்கிப் போன மழையை ரசித்தபடிக்கு சாப்பாட்டுக் கடை வாசலில் நின்றான் துர்க்கா பட்டன்.

வேதையன் அண்ணா மதியச் சாப்பாட்டுக்கு வரும் நேரம் கடந்து போய்க் கொண்டிருக்கிற சங்கடம் அவன் முகத்தில் எழுதி இருந்தது. வேளா வேளைக்கு சாப்பிடாமல் வேதண்ணா கலாசாலையில் பிள்ளைகளுக்குத் தொண்டை வரளக் கத்தி நாள் முழுக்க போதிக்காமல் சாப்பாட்டுக் கடையை நிர்வகித்துக் கொண்டு இங்கே சுகமாக உட்கார்ந்திருந்தால் போதாதா?

துர்க்கா அண்ணா, நாளிகேரம், பச்சை மிளகாய், புழுங்கின அரிசி, வெல்லம் இது நாலும் வைகிட்டாவது போய் வாங்கி வந்துடணும். நாளைக்கு ஒருநாள் தான் வரும்.

கடை உக்கிராணத்தில் இருந்து பரசுவய்யன் வாசலுக்கு வந்து, மடியில் இருந்து புகையிலைக் கட்டையைக் கிள்ளி வாயில் அடக்கியபடிக்குச் சொன்னான்.

எடோ பரசு, அதான் ஒரு ப்ராவஸ்யம் சொல்லியாச்சே. எனக்கு ஓர்மை இல்லாது போச்சா என்ன? அதோ, நான் படு வயசன் ஆகிட்டேனா போதம் கெட்டுப் போக?

துர்க்கா பட்டன் பரசு குடுமியை விளையாட்டாகப் பிடித்து இழுக்க அதுக்குள் சிங்காரமாக வைத்திருந்த சாமந்திப் பூ தரையில் விழுந்தது.

அய்யன் பெண்ணாக பிறக்க வேண்டியவன். அவன் தளுக்கி, இடுப்பு துடுப்புப் போட உக்கிராணத்துக்கு நடந்து போய் நின்றான்.

நீரே இங்கே வந்து பாரும்.

வாசலில் நின்ற துர்க்காவிடம் ராகம் இழுத்துச் சொன்னான்.

போக வேண்டாம் என்று ஒரு மனசு சொன்னாலும் இன்னொரு மனசு உள்ளே போகச் சொன்னது. கடையில் ஆளொழிந்த பொழுது. மழையானதாலோ என்னமோ, வேதமண்ணா வருவதும் தாமதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

துர்க்கா பட்டன் உக்கிராணத்துக்குள் நுழைந்து இலைக்கட்டுக்கும் பாதி அரிந்த பரங்கிக்காய், வழுதணங்காய் குவியலுக்கும் நடுவே நின்றபோது பரசு அவன் பின்னால் நெருங்கி வந்து இறுக்கி ஆலிங்கனம் செய்தான். பட்டனுக்கு இது தப்பு என்று மனசு திரும்பத் திரும்பச் சொன்னது. ஆனாலும் உடம்பு வேணும் என்றது. பரசுராமன் கை பட்டனின் இடுப்புக்குக் கீழே சாரைப் பாம்பு மாதிரி ஊர்ந்தது.

பட்டனின் முகத்தைத் திருப்பி அவன் உதட்டில் தீர்க்கமாக முத்தம் பதித்த பரசுவின் புகையிலை வாசனை துர்க்கா பட்டனுக்கு லகரி ஏற்றியது. இதோடு இறங்கிப் போய் கோர்ட் கச்சேரிக்குப் பின்வசம் குச்சுக்காரி யாரையாவது இழுத்துப் பிடித்துத் தரையில் சாய்த்து ஆசை தீர அனுபவிக்கச் சொன்னது மனசு.

சீக்கு வரவழைக்கும் தெரியுமா அவா கூட எல்லாம் படுத்தா? பரசுராமன் முந்தாநாள் இப்படி இசகுபிசகாக இடுப்புக்குக் கீழே இறுக்கிப் பிடித்தபடி சொன்னது நினைவு வந்தது.

இது மட்டும் சீக்குலே கொண்டு விடாதா?

பட்டன் அவன் குடுமியைப் பற்றி இழுத்துத் தலையைத் திருப்பிக் கேட்டான். தேக சம்பந்தம் இல்லாத வரைக்கும் ஒரு கேடும் சம்பவிக்காது என்றான் பரசு கையைத் தளர்த்தாமலேயே.

அண்ணா, கொஞ்சம் அந்தக் கள்ளியம்பெட்டி மெலே சித்தெ உக்காரணும்.

பரசு துர்க்கா பட்டனை ஓரமாக வலித்துத் தள்ளி அவன் இடுப்புச் சோமனை உருவியபடிக்குக் குனிந்தான்.

துர்க்கா, வந்துட்டியா? பசி உசிரு போகுது.

வெளியே வேதையன் சத்தம்.

பரசுவின் தலையை அரைக்கட்டில் இருந்து அவசரமாகத் தள்ள அந்த ப்ரம்மஹத்தி தேங்காய் மட்டையில் மண்டை மோத விழுந்தான். வாய்க்குள்ளேயே அவன் வாதனையோடு அலற, அவசரமாகச் செம்புத் தண்ணீரில் சுத்தம் செய்து கொண்டு துர்க்கா பட்டன் முன்வாசலுக்கு வேட்டியை நேராக்கிக் கொண்டு வந்தான்.

இன்னிக்கு ஒரு நாளைக்கு வீட்டுச் சாப்பாடு வேணாம்னா பரிபூரணம் கேட்க மாட்டேங்கறா. நான் என்ன குழந்தையா? கண்டதையும் வெளியே வாங்கித் தின்னு உடம்பு கெட்டுப் போக?

வேதையன் இருந்த படிக்கே கிண்ணி ஜலத்தில் கையை நனைத்து தோர்த்தில் துடைத்துக் கொண்டு இலையைப் பார்த்து கிழக்கு நோக்கி உட்கார்ந்தான். துர்க்கா பட்டன் பரிமாற ஆரம்பித்தான்.

நல்ல பசி என்பதால் இலையில் வட்டித்த அன்னம் முழுக்க ஐந்தே நிமிஷத்தில் சாப்பிட்டு முடித்தான் வேதையன்.

கடையில் வச்ச அன்னமோ புட்டோ கொஞ்சம் விளம்பட்டா வேதண்ணா?

பட்டன் கேட்டபோது அது ஒண்ணும் வேணாம் என்றபடி கை அலம்பி வந்து, அவன் நீட்டிய வெற்றிலைச் சுருளை வாயில் போட்டுக் கொண்டான் வேதையன்.

வேறே ஏதாவது வர்த்தமானங்கள்?

வேதையன் கேட்க, சட்டென்று பட்டனுக்கு காகிதப் பொதி ஞாபகம் வந்தது.

சுவர்ப் பக்கம் குனிந்து அதை எடுத்து வேதையனிடம் நீட்டினான் பட்டன்.

கிளம்பறபோது வர்க்கி கொண்டு வந்து கொடுத்தான். சர்க்கார் காகிதம் மாதிரி இருக்கு.

என்னவாம்?

உறையைப் பிரித்து காகிதங்களை நேராக்கி வேதையன் வாசிக்கத் தொடங்கினான். அவன் கண்களில் வியப்பு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது பட்டனுக்கு.

துர்க்கா, யாருடா இதை உன் கிட்டே கொண்டு வந்து கொடுத்ததுன்னே? வர்க்கியா?

ஆமாண்ணா. ஏதும் சங்கடமான விஷயமா?

வர்க்கியேட்டன் இப்போ எங்கே இருக்கான் தேடிக் கூட்டிண்டு வா.

வர்க்கியை நான் எங்கே தேட அண்ணா? அரை மணிக்கூர் முந்தி அவன் கையிலே மணி கட்டின கொம்போடு தோல் சஞ்சியைத் தூக்கிண்டு கோழிக்கோட்டு மார்க்கமா ஓடிண்டு இருந்தான்.

துர்க்கா பட்டன் நிச்சயம் இல்லாத தொனியில் சொல்லிச் சிரித்தான். அவனுக்கு வீட்டுக்குப் போய் அசுத்தம் தீரக் குளிக்க வேண்டும் போல் இருந்தது. வர்த்தமானம் சொல்வதும் வர்க்கியைத் தேடுவதும் அது கழிந்துதான். ஆகாரம் கூட அப்புறமாக வைத்துக் கொள்ளலாம். மன்னி மிச்சம் மீதி இருக்கிறதை பாத்திரத்தை வழித்துப் போட்டதே போதும். வீட்டுக்குக் கூடப் போக வேண்டாம்.

வர்க்கி பதிவா கடை எடுத்து வைக்க முந்தி ஆகாரத்துக்கு வருவானாக்கும்.

உள்ளே இருந்து வந்த பரசு சொன்னான். அவனை நிமிர்ந்து பார்க்க துர்க்கா பட்டனுக்கு கஷ்டமாக இருந்தது. அசிங்கம் பிடித்தவன். இவனோடு கூட லௌகீகமா இழைய மனசு ஏன் அத்து கடந்து போய் சகதிக் குழியிலே விழணும்?

பரசு, ராத்திரி வர்க்கி வந்தா கொஞ்சம் என்னை உடனே பாக்கச் சொல்லு. எத்ர நேரம் கழிஞ்சாலும் சரி.

வேதையன் எழுந்தான். அவன் கலாசாலைக்குத் திரும்ப வேண்டிய நேரம்.

துர்க்கா, அம்பலப்புழை போக வேண்டி இருக்கு. இந்த வாரக் கடைசியிலே வச்சுக்கலாம். ஏற்பாடு செஞ்சிடு.

வெளியே இறங்கும் முன்னால் வேதையன் துர்க்கா பட்டனிடம் சொன்னான்.

என்னவாக்கும் அவசரம் அண்ணா? நீங்களும் மன்னியும் போற மாதிரியா?

துர்க்கா விசாரித்தான். இங்கே இருந்து வண்டியும் வள்ளமுமாக மாறி மாறி ஏறி இறங்கிப் போய்ச் சேர ரெண்டு முழு நாள் கழிந்து விடும். கையில் குழந்தையோடு பரிபூரணம் மன்னி கஷ்டப்பட வேண்டி வரும். போகிற வழியில் ஆகாரம் எல்லாம் சரியாகக் கிடைக்குமா என்றும் துர்க்கா பட்டனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

பரிபூரணம் வேண்டாமடா துர்க்கா. நான் மட்டும் போறேன்.

இல்லே அண்ணா, தனியாப் போக வேணாம். நான் கூட வரேன். அங்கே என்ன மாதிரி ஜோலின்னு சொன்னா அதுக்குத் தக்கபடி யாத்திரைக்கான ஏற்பாடு, எங்கே தங்கியிருக்கலாம் எங்கே ஆகாரம் பண்ணலாம்னு இன்னும் ஒரு மணிக் கூர்லே விசாரிச்சு ஏற்பாடு பண்ணிடறேன். ஒண்ணும் கஷ்டமில்லே. எளுப்பம்தான்.

துர்க்கா பட்டன் உற்சாகத்தோடு சொன்னான். பிரயாணம் வைக்கிறதில் ஏற்படுகிற சந்தோஷம் அது. வேலை நிமித்தமாக ஓயாமல் ஒழியாமல் நகர்ந்து கொண்டே இருந்தால் மனசில் கசடும் தேகத்தில் அசுத்தமும் நோக்காடும் அண்டாது. அவனுக்குத் தெரியும், இந்த பரசு கடன்கரன் மேலே விழுந்து ஈஷிக் கொள்ளாமல் விலகிப் போகட்டும். ஒரேயடியாக மனசில் இருந்து துன்மார்க்கமான நினைப்பு எல்லாம் பொடிப்பொடியாகி ஒண்ணுமில்லாமல் போகட்டும். பட்டன் மங்கலாபுரத்தில் இருப்புக் கொள்ளாமல் ரெண்டு கொல்லம் முன்பு ஒரு உதயத்தில் கண்ணூருக்கு புறப்பட்டு வந்து சேர்ந்தது இதுக்காக இல்லை.

இந்த காகிதத்தை பத்திரமா வீட்டு அலமாரியில் கொண்டு போய் வையடா துர்க்கா. சட்டபூர்வமான விவரம் சொல்கிற பத்திரம் இது.

துர்க்கா பட்டன் காகிதக் கட்டை வாங்கி மேலோட்டமாகப் பார்த்தான். மலையாள அட்சரங்கள் காகிதம் முழுக்க நெளிந்து ஏதோ முக்கியமான தகவலை ஊர் உலகத்துக்கு அறிவித்துக் கொண்டிருந்தன. ராஜா தலை அச்சடித்த காகிதம் அதை கவுரவமானதாகவும், ரொம்ப முக்கியமானதாகவும் ஆக்கிக் காட்டியது. ஏகப்பட்ட முத்திரைகள் காகிதத்துக்கு ரெண்டு பக்கமும் குத்தி இருந்தது வேறே தலை போகிற சர்க்கார் விஷயம் என்று அடித்துச் சொன்னது.

உனக்கு ஓர்மை இருக்கோ. மங்கலாபுரத்துக்கு நான் வந்தபோது சொன்னேனே.

வேதையன் கேட்டான்.

என்ன சொன்னீர் அண்ணா?

யோசித்துப் பார்த்தும் துர்க்கா பட்டனுக்கு உடனடியாக ஒண்ணும் நினைவு வரவில்லை. பசி வேறு வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. உடம்பு அசுத்தம் எல்லாம் அதுக்கு பெரிசு இல்லை சனியன்.

வீட்டுக்குப் போய் குளித்து விட்டு பரிபூரணம் மன்னி எடுத்து வைத்த ஆகாரத்தை சாப்பிட்ட பின்னால், கொஞ்சம் தோட்ட வேலை. அப்புறம் கடைக்கு கொள்முதல் பண்ண ஒரு நடை.

புழுங்கிய அரிசி வீட்டு சம்பரணியில் இருந்து எடுக்க வேண்டும். அது மாடனோ காளனோ பத்திரமாக சம்பரணிக்குள் இறங்கி நாழியில் நிறைத்து நீட்ட, வாங்கி வெளியே கொட்டிக் கொள்வதாக இருக்கும். பயல்கள் கள்ளுக்கடைக்கு நடப்பதற்குள் பிடித்துக் கூட்டி வந்து வேலையை முடிக்காவிட்டால் நாளைக்கு பரசு இட்டலி உண்டாக்க அரிசி இல்லை என்று மடியைப் பிடித்து இழுப்பான். கள்ளியம்பெட்டியில் உட்கார்த்தி, இன்னிக்கு மாதிரி. வேணாம் பரசு நினைப்பு.

என்ன சொன்னேனா? இருக்காது தான். உன் கிட்டே சொல்லியிருக்க தோதில்லையடா. மங்கலாபுரத்திலே நடந்திருக்க வேண்டியது அதிலே கொஞ்சம் போலவாவது இப்போ முடிஞ்சிருக்கு. அப்பன் இருந்தா சந்தோஷப்பட்டிருப்பார்.

வேதையன் தெருவை வெறித்தபடி சொன்னான். அவனுக்கு சீலைக் குடையைப் பிரித்துக் கொடுத்தான் துர்க்கா பட்டன்.

வேதையன் இறங்கினபோது மழை விட்டிருந்தது.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts