விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று

This entry is part [part not set] of 26 in the series 20090416_Issue

இரா.முருகன்


ரெண்டு பக்கமும் காய்த்துக் குலை தள்ளி இருந்த வாழை மரங்களுக்கு நடுவே துர்க்கா பட்டன் தவழ்ந்து கொண்டிருந்தான்.

ஆன, ஆன, கொம்பன் ஆன. வேகம் போ ஆன. திருசூர் பூரம் போ ஆன.

இது பேசுகிற ஆனை. குழந்தை கூடச் சேர்ந்து கொம்மாளி கொட்டிச் சிரிக்கிற ஆனை.

வேதையனின் பெண் குழந்தை அவன் முதுகில் உட்கார்ந்து பூக்குடலையைக் கவிழ்த்த மாதிரிச் சிரித்தது. அவன் வயிற்றில் சின்னக் காலால் மிதித்தது. ஆனையைத் தோட்டத்து வடக்கு மதில் சுவர் பக்கம் நகர்ந்து போகும்படி அடம் பிடித்துக் கொண்டிருந்தது அது.

வேதையன் வீட்டுத் தோட்டத்தில் வாழை மரங்களின் வரிசை முடிந்து இனி தென்னை, பலா, மா அப்புறம் பூச்செடிகள். ஆனை போக முடியாத ஒற்றையடிப் பாதையை அடுத்து சின்ன வாய்க்காலாக கிணற்றுத் தண்ணீர் பொசிந்து கொண்டிருந்தது. கடைகால் கடைகாலாக கிணற்றில் இருந்து நீர் சேந்தி அந்தச் சாலில் செலுத்திய படிக்கு வீட்டுப் பணிக்காரன் ஒருத்தன் தோட்ட வேலையில் கருத்தும் காரியமுமாக இருந்தான்.

பட்டரே, குஞ்ஞம்மையைக் குப்புறத் தள்ளிடாதேயும். தென்னை நட வெட்டி வச்ச குழி உண்டு அங்கே. பின்னே நீரும் கூடி அதிலே விழுந்து வைக்கப் போறீர். கண்ணு தொறந்து ஆனை நடக்கட்டும்.

பணிக்காரன் தண்ணீர் இறைப்பதை நிறுத்திச் சொன்னான். பட்டன் முதுகில் உட்கார்ந்து ஆனையை முன்னால் செலுத்திக் கொண்டிருந்த மூணு வயசுப் பெண் குழந்தை தீப ஜோதி மழலையில் அவனை அதட்டியது.

சும்மா போ தோமச்சா.

எண்டெ பொன்னு குஞ்ஞம்மே. தோமச்சன் சும்மாவும் போகும். சுகமாயிட்டு பாரம் சுமந்தும் போகும். விதிச்சது தீர்ந்தால் பின்னே குரிசுப்பள்ளி உண்டல்லே கிடக்க.

அவன் முடிப்பதற்குள் துர்க்கா பட்டன் குழந்தையை லாகவமாக இடுப்பில் இருந்து இறக்கி தோளில் சுமந்தபடி எழுந்து நின்றான்.

தோமச்சா. குஞ்ஞுக் குட்டியோடு சம்சாரிக்க வேறே விஷயம் ஒண்ணும் கெடக்கலியா உனக்கு?

அவன் குழந்தை நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வைக் கீற்றைத் தன் மேல் முண்டால் பதமாகத் துடைத்தான். குழந்தை நெற்றியில் மெலிசாக முத்தம் இட்டபோது அது அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு திரும்ப கூச்சலிட்டது.

அம்மாவா, ஆன, ஆன.

அம்மாவனு வல்லாத்த ஷீணம் குஞ்ஞே. ஒரு கவளம் சோறு கழிச்சு வந்நு ஆனக் கொம்பன் திருச்சூர் பூரம் காணான் இறங்கும். சரியா.

ஞானும் வயும். மன்னி, பூயம். பூயம்.

குழந்தை ஓட்ட ஓட்டமாக அம்மாவிடம் அனுமதி வாங்க ஓடியது.

கமுகு மர நிழலில் ஒரு வினாடி நின்று முகத்தை அழுத்தத் துடைத்துக் கொண்டான் துர்க்கா பட்டன். சாப்பிட வீட்டுக்குப் போய் விட்டு வரவேண்டும். பசி எடுக்க ஆரம்பித்திருந்தது.

துர்க்கா பட்டனுக்கு வீடு என்று ஒன்று தனியாக வைக்க வேண்டி வந்தது இந்த ரெண்டு மாதமாகத்தான். இதுவரைக்கும் வேதையனின் நிழலிலேயே ஒண்டிக் கொண்டு இருந்தாகி விட்டது.

வேதையனின் அப்பன் ஜான் கிட்டாவய்யன் தேக வியோகம் அடைகிறதுக்கு ஒரு வாரம் முன்னால் மலையாள பூமிக்கு வந்த அந்தத் துளுவ பட்டன், கிட்டாவய்யன் நல்லடக்கம் ஆகி ஒண்ணரை கொல்லம் அங்கே இங்கே எங்கேயும் போகாமல் வேதையனோடு கூடவே நிழலாக சுற்றி வந்தான். கிட்டாவய்யன் போகிற நேரத்தில் அவன் கையைப் பிடித்து மன்றாடிக் கேட்டுக் கொண்டபடிக்கு இது.

வேதையனுக்குப் பெண் குழந்தை பிறந்த சந்தோஷ சேதியை எடத்வா கேசவன் மூஸ் வைத்தியனோடு பகிர்ந்து கொண்டு கிட்டாவய்யன் வாசல் படியில் விச்ராந்தியாகச் சாய்ந்து உட்கார்ந்தபோது அவனுக்கு அந்திம ஓலை வந்து சேர்ந்தது. புறப்பட நாலு நாள் மட்டும் அவகாசம் கொடுத்து வந்த அழைப்பு அது.

அவன் வாசல் படியில் உருண்டபடிக்கு தீபம் தீபம் என்று முனகிக் கொண்டிருந்தபோது துர்க்கா பட்டன் தான் உள்ளே இருந்து ஓடி வந்து அவனைத் தூக்கிச் சுமந்தபடி நடு வீட்டில் கொண்டு போய்ப் படுக்க வைத்தான்.

அப்புறம் கிட்டாவய்யனுக்கு நினைவு போகிறதும் வருகிறதுமாக இருந்தது.

விருச்சிகம் ஒண்ணு இன்னிக்கு. மலைக்கு மாலை போட்டுக்கணும்.

நடுராத்திரியில் எழுந்து உட்கார்ந்து பக்கத்தில் தரையில் படுத்திருந்த துர்க்கா பட்டனை உலுக்கி எழுப்பினான்.

தொரைசாமி அண்ணா, எழுந்திருங்கோ. குளிச்சுட்டுக் கோவிலுக்குப் போகணும். கோவிலுக்கு போவானேன்? இதான் கோவில். விசாலாட்சி மன்னி ஜகஜ்ஜோதியா அம்பாள் மாதிரி நிக்கறா பாருங்கோ. விழுந்து கும்புடுங்கோ அண்ணா.

அவன் துர்க்கா பட்டனின் தோளைக் குலுக்கி உலுக்கினான்.

பட்டன் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து உட்கார அரை இருட்டில் அவன் முகத்தைப் பார்த்து சுய நினைவுக்கு வந்தான் கிட்டாவய்யன். அப்புறம் கழுத்தில் சிலுவையை இறுகப் பிடித்துக் கொண்டு தொலைவில் எங்கேயோ வெறித்தபடி நேரம் வெளுக்கிறது வரை ஒண்ணும் பேசாது உட்கார்ந்திருந்தான் அவன். பக்கத்திலேயே சுவர்க்கோழி சத்தம் கேட்டபடிக்கு ரா முழுக்க தூக்கம் விழித்துக் கொண்டு துர்க்கா பட்டனும்.

விடிகாலையில் கிட்டாவய்யனுக்கு திரும்ப நினைவு போய் நடு மத்தியானத்தில் போதம் மீண்டபோது வேதையன் பக்கத்தில் இருந்தான்.

இந்தக் கொழந்தையை நீயும் பரிபூர்ணமும் தான் பாத்துக்கணும். நீ இவனுக்கு அனுஜன். இவன் உன் ஜ்யேஷ்டன். மனசிலாச்சா?

துர்க்கா பட்டனின் கையைப் பிடித்தபடி வேதையனைக் காட்டிக் குழறிக் குழறி கிட்டாவய்யன் சொன்னபோது வேதையன் துக்கமெல்லாம் ஒருசேர மனசில் திரள, ஓவென்று கதறி அழுது விட்டான்.

அப்பன், நீர் எங்கேயும் போக மாட்டீர். உம்ம பேத்தி வரப் போறா. அவளோட விளையாடி அவ கூட குரிசுப்பள்ளிக்கு நடந்து போய், பள்ளிக்கூடம் கொண்டுபோய் விட்டு அழச்சுண்டு வந்து, அவ மாங்கல்யம் நடந்தேறி குழந்தை உண்டாகி. எல்லாம் பாத்துண்டு வல்ய அப்பூப்பனா நீர் இருப்பீர் அப்பன்.

தீபம், அவ பேரு தீபம். தீப லட்சுமி. தீப ஜோதி. தீப.

கிட்டாவய்யன் பளிச்சென்று சிரித்தான். வயோதிகம் ஏறிச் சுருங்கிக் கிடந்த அந்த முகம் அலாதி சோபையோடு ஒரு கணம் ஒளிர்ந்தது. அந்த ஒளியோடு கிட்டாவய்யனின் மூச்சும் விடைபெற்றுக் கொண்டு போய் மறைந்தது.

வைக்கத்துக்குப் போய் சேதி சொல்லி பரிபூரணத்தை அழைத்து வர, எடத்வா மூஸ் வைத்தியர் போனார். கூடத் துணைக்கு துர்க்கா பட்டன். தமக்கை தெரிசாவுக்கும் நிர்மலாவுக்கும் சேதி தெரிவித்து வேதையன் எழுதின லிகிதங்களை சீமைக்கு அனுப்பி வைக்க பட்டன் தான் வேண்டியிருந்தது. அவற்றைக் கோழிக்கோட்டுக்கு எடுத்துப் போய் தபால் கச்சேரியில் சேர்த்தது அவன் தான்.

குரிசுப் பள்ளியில் சவக் குழி வெட்டுவதை மேற்பார்வை செய்வதில் இருந்து, பெட்டிக்கு கருப்பு வர்ணம் தீட்டினது காய்கிறது வரை காத்திருந்து வாங்கி வந்தது, சவ அடக்கத்துக்கு பாதிரிக்கு வண்டி ஏற்படுத்திப் போய் கூட்டி வந்தது, சவ குடீரத்தை ஜான் கிட்டாவய்யன் கவுரதைக்கு ஏற்றபடிக்குக் கட்டி முடிக்க கொத்தனுக்கு யோசனை சொன்னது என்று சகலமானதுக்கும் துர்க்கா பட்டன் ஓடியாடி பம்பரமாகச் சுழன்று வேலை முடித்துக் கொடுத்தான்.

வேதையனை விட பரிபூரணத்துக்கு துர்க்கா பட்டன் வீட்டு மனுஷனாக, புருஷன் கூடப் பிறக்காத சொந்த சகோதரனாக மாறினது வெகு சுபாவமாக இருந்தது. அவன் அங்கேயே எப்போதும் இருக்கப்பட்டவன் என்றே பரிபூர்ணம் நினைக்கிற படிக்கு பட்டன் அந்த வீட்டோடு பிரிக்க முடியாதபடி இறுக ஒட்டிப் போனான்.

துர்க்கா பட்டன் அவளை பிரியமாக மன்னி மன்னி என்று கூப்பிட்டதை அவள் நாலைந்து முறை சேட்டத்தி என்று திருத்திப் பார்த்தாலும் பட்டன் வாயில் மன்னி தான் சரளமாகப் புழங்கியது. போதாக் குறைக்கு வீட்டில் வேலை பார்க்கிறவர்கள், அக்கம் பக்கத்து மனுஷ்யர் இப்படி எல்லோருக்கும் அவள் மன்னியாகி விட்டாள். குழந்தை தீபஜோதிக்கும் கூட அதே படிக்குத் தான்.

சாப்பாட்டுக் கடை கணக்கு வழக்கு பார்க்கவும் பணம் அடைக்க, வாங்கவும் எல்லாம் வேதையனுக்கு அத்துப்படியான விஷயங்களாக இல்லாது போனதால், பட்டன் தான் ஐந்தொகை சரி பார்க்க, வரும் கடன் வசூல் செய்ய, சாப்பாட்டுக் கடைக்கு காய்கறியும் பச்சரிசி புழுக்கிய அரிசி வகையறாவும் கொள்முதல் செய்து கொண்டு வர எல்லாம் அலைய ஆரம்பித்தது. உடம்போடு கணக்கும் வழக்கும் காறுபாறும் ஒட்டிக் கொண்டு பிறந்த மாதிரி எல்லாமே அவனுக்கு வாய்த்திருந்தது. வேதையன் ஞாயிற்றுக் கிழமை வேதக் கோவிலுக்குப் போகக் கிளம்பும் முன் வென்னீர்க் குளியலுக்கு வெளிச்செண்ணெய் புரட்டி விடக்கூட துர்க்கா பட்டன் எங்கே என்று காத்திருக்க வேண்டிய ஸ்திதிக்குப் போனான்.

வேதையன் அவனை பட்டரே என்று கூப்பிடுவது எடோ துர்க்கா என்று உரிமையோடு மாறியதும் சுபாவமாக சடுதியில் நிகழ்ந்த ஒன்று. முழுக்க வாஞ்சை நிரம்பிய விளியாக்கும் அது. பரிபூரணத்துக்கு மட்டும் அவன் எப்பவும் துருக்கன் தான்.

துருக்கா இங்கோட்டு வரூ.

அவள் ராகம் போட்டு விளிக்கும்போது வேதையன் பரிகாசம் பண்ணுவான்.

இப்படி துருக்கா துருக்கான்னு கூப்பிட்டா நாளைக்கு அரவைசாலை பாபுக்கா தெரு வழியே போனா என்ன பட்டத்தியம்மான்னு பதில் குரல் கொடுப்பார், நீ வேணுமானா பார்த்துண்டே இரு.

நல்லதாப் போச்சு. நான் பட்டத்தியல்லவே. மாம்சம் பாசகம் செய்யவும் கழிக்கவும் தால்பர்யம் உள்ள அசல் வைக்கம் கிறிஸ்தியானி ஸ்திரியாக்கும். தா, இத்திரி ஆட்டிறைச்சி வாங்கி உமக்கும் உம்ம அனியனுக்கும் கறி வச்சுத்தர பரிபாடி கூடி உண்டு.

சும்மா சீண்டலுக்கு அது. பரிபூர்ணம் பிறந்த வீட்டில் மாம்ச பதார்த்தம் எப்போதாவது யாராவது கொடுத்தனுப்பியது, எப்படி இருக்கும் என்று செய்து பார்த்தது என்றபடி ஏதாவது பெயரில் புழங்குவது உண்டுதான் என்றாலும், அவள் இங்கே கல்யாணம் கழிந்து படியேறியபோது அதெல்லாம் கூட வந்து சேரவில்லை. உள்ளியை மட்டும் விடாமல் அந்த ருஜியை இங்கேயும் கொண்டு வந்ததை பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விட்டுப்போக அனுமதித்திருந்தான் கிட்டாவய்யன். அவன் போன பிறகும் அந்த சீலம் அப்படியே தான் இருந்தது.

கிட்டாவய்யன் போய்ச் சேர்ந்த பிறகு குடும்ப நிலைமையைக் காரணம் காட்டி பக்கத்திலேயே பாதிரிமார் கலாசாலைக்கு உத்தியோக மாற்றல் வாங்கிக் கொண்டு வந்துவிட்டான் வேதையன். அப்பன் செத்த பிறகும் கூட அவனுக்கு செய்த பெரிய ஒத்தாசையில் இதுவும் கூட ஒண்ணு என்று துர்க்கா பட்டனிடம் அவன் சொன்னபோது பட்டன் ரெண்டு கரத்தையும் ஆகாசத்தைப் பார்த்து உயர்த்தி பிரார்த்தித்தது தவிர வேறேதும் செய்யவில்லை.

அவனையும் கிறிஸ்தியானி ஆக்கிவிடலாமா என்று யோசித்தான் வேதையன். எதுக்கு, அவன் என்னவாக இருக்க இஷ்டப்படுகிறானோ அப்படியே இருக்கட்டுமே என்றாள் பரிபூரணம். அவன் அம்பலம் தொழப் போய் கதலிப் பழத்தோடு வந்து நின்று அதை உரித்து குழந்தை தீப ஜோதிக்கு ஊட்டுகிறது அவளுக்கு மனசுக்கு நிறைவான காட்சியாக எப்பவுமே இருந்து வந்திருக்கிறது.

துருக்கா, வா, நல்ல உண்ணி மாங்காயும் தயிர் விரகிய சம்பா சோறும் வட்டிச்சிருக்கேன். மெழுக்குப் பெரட்டலும் தயார். நீ சாப்பிட்டு சரின்னு சொன்னாத்தான் உன் சேட்டனுக்கு அனுப்பித் தரணும். வந்து உட்காரு.

பரிபூரணம் விசிறி மாதிரி கொசுவம் மடித்திருந்த தன் புளியிலைக்கரை முண்டில் கை துடைத்தபடி தோட்டத்துக்கு வந்தாள். குழந்தை அவள் கைத் தண்டையில் இருந்தபடிக்கு பப்படத்தை கடித்து வழியெல்லாம் உதிர்த்தபடி இருந்தது.

இல்லே மன்னி. அம்மா வீட்டுலே ஆகாரம் உண்டாக்கி வச்சிருப்பா. ஒரு நடை வேகமா போய் முழுங்கிட்டு வந்து அண்ணாவுக்கு சாப்பாடு எடுத்துப் போறேன்.

துர்க்கா பட்டன் சொன்னபோது தான் அவன் குடும்பம் துளுவ நாட்டுப் பிரதேசத்தில் இருந்து இங்கே வந்திருப்பது பரிபூரணத்துக்கு ஞாபகம் வந்தது.

வந்து ரெண்டரை வருஷம் கழிந்தும் ஊர் நினைப்போ பெற்றவர்கள் ஞாபகமோ இல்லாமல் வேதையன் வீட்டு வேலை, சாப்பாட்டுக் கடை ஜோலித் தெரக்கு என்றே சுற்றிக் கெறங்கி வந்து கொண்டிருந்தவனை ஜபர்தஸ்தாக மங்கலாபுரத்துக்கு அனுப்பி வைத்தவள் அவள் தான். அது ரெண்டு மாசம் முன்பு.

துர்க்கா பட்டன் மங்கலாபுரம் போனவன் எண்ணி எட்டே நாளில் திரும்பி வந்து விட்டான்.

அங்கே இருப்பு கொள்ளலே மன்னி. நீங்களும் அண்ணாவும் தனியா என்ன கஷ்டப் படுவேளோன்னு நெனச்சுப் பார்த்தேன். குழந்தை வேறே கண்ணிலேயே சதா நிக்கறா. கண்ணை செத்தெ அயர்ந்தா பெரியவர் வந்து எடோ நான் போற தருணத்திலே சொன்னது ஓர்மையில்லையோ. உன் ஜேஷ்டனை கவனிச்சுக்காம இங்கே என்ன பண்றேடா புல்லே அப்படீன்னு தெறி பறையறார்.

துர்க்கா பட்டன் தன் வயோதிகத் தள்ளையையும் கூடவே கூட்டி வந்திருந்தான்.

அவள் தான் சோறாக்கி விட்டுக் காத்திருக்கிறாள்.

துருக்கா, எமிலிக் குட்டியை உனக்கு இஷ்டமா?

பரிபூரணம் கேட்டாள். எமிலி அவளுக்கு ஒன்று விட்ட தங்கை உறவு.

போங்கோ மன்னி. எப்பவும் பரிகாசம் தான் உமக்கு. எமிலி, ஏலி, காத்தின்னு ஏதாவது பேரை எடுத்து விட வேறே யாரும் கிடைக்கலியா?

துர்க்கா பட்டன் ஒரே ஓட்டமாக வாசலுக்கு ஓடி விட்டான்.

குழந்தை தீப ஜோதி குரல் பின்னால் இருந்து கூப்பிட்டபடி இருந்தது.

அம்மாவா, பூயம். பூயம்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts