விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பது

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

இரா.முருகன்


நாடகக் கொட்டகைக்கு தெரிசா புறப்பட்டபோது ராத்திரி ஆனது போல இருட்டிப் போயிருந்தது. இத்தனைக்கும் சாயந்திரம் ஆறரை மணி கூட கழியவில்லை.

லண்டனை விட சீக்கிரத்தில் இருட்டு வந்து புகுந்து கொள்கிற ஊர் இந்த எடின்பரோ என்று தோன்றியது தெரிசாவுக்கு. இருள் அடைய அடைய தப்புக் காரியம் செய்ய மனசு இன்னும் ஊக்கம் காட்டி முன்னேறும். வாய்ப்பும் வந்து சேர்ந்தால், நரகத்தில் கொண்டு போய் விழவைக்கவும் அது சளைக்காது.

தெரிசாவுக்கு இருட்டைக் கண்டு பயம் ஏதும் இல்லை. அவளுக்கு மனசிலும் செயலிலும் தப்பு ஏதும் தற்செயலாகத் தட்டுப்படக் கூட விடமாட்டாள். கிருஷ்ண பகவானோ கிருஸ்து மகரிஷியோ இல்லை ரெண்டு பேரும் கூடிப் பேசியோ அவளை தடுத்தாட்கொள்ள ஏதாவது உருவில் வந்துவிடுவார்கள். திடமான நம்பிக்கை எப்போதும் அவளுக்கு உண்டு.

தெரிசாவின் சாரட் வண்டி விடுதியில் இருந்து கிளம்பி பத்தே நிமிடத்தில் ராயல் தியேட்டர் போய்ச் சேர்ந்து விட்டது. லோத்தியன் வீதிக் கோடியில் பிரின்சஸ் வீதி சந்திக்கும் இடத்துக்கு வடக்கே தான் அந்த மரக் கொட்டகை இருந்தது. இவ்வளவு பக்கத்தில் என்று தெரிந்திருந்தால் காலாற நடந்தே வந்திருக்கலாம்.

இனி தேவ ஊழியம் செய்ய நாள் முழுக்க நடக்கத்தானே போறே, இப்போ கொஞ்சம் இளைப்பாறிக் கொள்.

பிரின்சஸ் தெரு செயிண்ட் தாமஸ் சர்ச் மணி அலையலையாகச் சொன்னது.

தெருவில் அலைந்து கூவிக் கூவி சிகரெட் விற்கிற பையன்கள், பூங்கொத்து விற்கிற சின்னப் பெண்கள் என்று லோத்தியன் வீதி கலகலப்பாக இருந்தது. லண்டன் ஸ்ட்ராண்ட் மாதிரி அது பிரம்மாண்டமாக கண் இமைக்காமல் பார்த்து ஆச்சரியப்பட வைக்கும் அழகு இல்லை. எடின்பரோவும் லண்டனில் எட்டில் ஒரு பங்கு இருந்தாலே அதிகம். ஆனாலும் அந்தக் குறுக்கமே ஊருக்கு ஒரு தனி அழகையும் அந்நியோன்னியத்தையும் கொடுத்ததாக தெரிசா நினைத்தாள்.

ஓ சூசன்னா நாடக வசனம் புத்தகம் வேணுமா?

வழி மறித்த ஒரு பெண் கேட்டாள். ஒரு காகிதப் பொதியைக் கையில் பிடித்துத் தூக்கிக் கொண்டு நாடகக் கொட்டகை வாசலில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தாள் அவள்.

ஒரு ஷில்லிங் தான் விலை. கொள்ளை மலிவு மேடம். உள்ளே போனா, ஒண்ணரை ஷில்லிங் விற்கிற புத்தகம்.

அவள் தெரிசாவை விடாமல் துரத்தி வந்து புத்தகத்தைக் கையில் திணித்தாள்.

நாடகம் பார்த்தால் புரியாதா என்ன? புத்தகம் எதுக்கு?

தெரிசாவுக்குத் தெரியவில்லை. ஆனாலும் நாடகக் கொட்டகை படியேறிய பலரும் ஆளுக்கொரு புத்தகம் வாங்கிப் புரட்டியபடி படி ஏறுவதைப் பார்த்து அவளும் ஒன்று காசு கொடுத்து வாங்கிக் கொண்டாள்.

தெரிசா கைக்கடியாரத்தைப் பார்த்தாள். ஏழு மணி ஆகி விட்டிருந்தது. நாடகக் கொட்டகை உள்ளே முதல் மணியோ இரண்டாம் மணியோ தொடர்ச்சியாக அடிக்கிற சத்தம். இது நின்று படுதாவை ஏற்றியதும் நாடகம் ஆரம்பமாகி விடும்.

தாமஸ் எங்கே போய் ஒழிந்தான்?

நீ தியேட்டர் ராயலுக்கு நேரே வந்துடு. நான் அங்கே காத்திருக்கேன் என்று சொல்லி அவன் பிற்பகலிலேயே கோட்டை மாட்டிக் கொண்டு தொப்பியையும் தரித்தபடி படி இறங்கிப் போய்விட்டான். பியானோ வாடகைக்கு எடுக்க அலைந்து கொண்டிருக்கிறானா இல்லை விர்ஜினியா புகையிலை சிகரெட் விற்கிற கடைகளில் எதில் உசந்த தரத்து சரக்கு கிடைக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறானா? கார்டன் ஏதோ புகையிலைக்கடை பெயர் சொன்னானே? அரசூரில் பகவதி சித்தி வீட்டுக்காரர் மாதிரி இங்கே எத்தனை புகையிலைக்கடைக்காரர்களோ. சித்தி எப்படி இருப்பாள் இப்போ? இருக்காளா?

தெரிசா, சீக்கிரம் வா, நாடகம் ஆரம்பிக்கப் போகுது.

தாமஸ் குரல் கேட்டது.

அவன் நாடகக் கொட்டகை வாசலில் சீட்டு வாங்கிக் கிழித்து உள்ளே அனுமதிக்கிறவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.

இங்கே சீட்டுக் கிழிக்க ஒத்தாசை பண்றானா என்ன?

தெரிசா உள்ளே போகும்போது தாமஸ் மூச்சில் பலமாகக் கவிந்து வந்த விஸ்கி வாடை மூக்கில் குத்தியது. கேட்டால் மருந்து என்று சொல்வான். சதா மருந்து குடிக்கும் சீக்காளி வைத்தியன் அவன்.

மதப் பிரசங்கம்னதும் பியானோ கிட்டத்தட்ட இலவசமாகவே கிடைச்சுடுத்து. எல்லாம் நம்ம ஹீரோ கார்டன் ஒத்தாசை பண்ணித்தான்.

தாமஸ் நாடகக் கொட்டகை உள்ளே கை காட்டியபடி சொன்னான்.

நல்லதாப் போச்சு. அதை கொண்டாட இப்படி மூக்கு முட்டக் குடிச்சுட்டு வந்தியா?

அவனுக்கு மட்டும் கேட்கிற குரலில் கொஞ்சம் அதட்டலாக விசாரித்தாள் தெரிசா. என்ன இருந்தாலும் அவளை விட ஏழெட்டு வயசு சின்னவன். பீட்டர் மெக்கன்ஸியின் கசின் அவளுக்கும் கரிசனமான உறவுக்காரன் தான். இந்த இந்த இழவெடுத்த வைத்தியன் சாயந்திரத்திலேயே போத்தலைத் திறந்து குடிக்க ஆரம்பித்து கெட்டுக் குட்டிச் சுவராகிப் போவதை அவள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.

விளையாட்டுக்காக கார்டனோட சேர்ந்து ஒரே ஒரு லார்ஜ் அடிச்சேன். வெளியே எங்கேயும் போக வேணாம். அதோ அங்கே பார். பித்-ஓ-மவ்த்னு பலகை தொங்குதே. அதான். மணக்க மணக்க மால்டட் ஸ்காட்ச் விஸ்கி.

தாமஸ் நாடகக் கொட்டகைக்கு உள்ளே காட்டிய மூலையில் நாலைந்து உயரமான மர ஸ்டூல் போட்டு வேலை மெனக்கெட்டு அதில் எப்படியோ ஏறி உட்கார்ந்து சட்டமாக குடித்துக் கொண்டிருந்த ஆண்களைக் கவனித்தாள்.

நாடகம் பார்க்க வந்து விட்டு இப்படி சுதி ஏற்றிக் கொண்டு உச்சாணிக் கொப்பில் உட்கார்ந்திருந்தால் எப்போ இறங்கி வந்து எப்போ பார்த்து முடித்து வீட்டுக்குப் போய்ச் சேர முடியும்? அல்லது ஒரு வேளை குடிக்க ஒரு சால்ஜாப்பாக நாடகம் பார்க்க போவதாக வேண்டப்பட்டவர்களிடம் சொல்லி விட்டு வந்து சேர்ந்தவர்களா?

இவன்கள் எக்கேடும் கெட்டு ஒழியட்டும். இந்த தாமஸ் கடன்காரன். அப்புறம் அந்த ராஜபார்ட் கார்டன். நாசமாகப் போறவன் குடிச்சுட்டா நடிக்கப் போறான்?

கார்டன் நேரமாயிடுச்சுன்னு மேக் அப் போட்டுக்க உள்ளே க்ரீன் ரூமுக்குப் போயிட்டான். அவன் போன துக்கத்தைக் கொண்டாட இன்னும் ஒரு லார்ஜ் அடிச்சேன். அதுக்கு இலவசமா ஒரு ஸ்மால் கொடுத்தான். அதையும் குடிச்சாச்சு.

தாமஸ் கொஞ்சம் தள்ளாடியபடியே கோட் பாக்கெட்டில் இருந்து இரண்டு பெரிய அட்டைகளை எடுத்து தெரிசாவிடம் நீட்டினான்.

பால்கனியிலே முதல் வரிசை கோடியிலே ஒரு சீட்டு.

இன்னொண்ணு அது பக்கத்திலா? இந்தக் குடியனின் உளறலும் சீண்டலும் இன்னும் நெருக்கமாக வந்து ஈஷிக் கொள்ள மூணு மணி நேரம் பொறுமையாக இருக்க வேணுமா என்ன? தெரிசாவுக்கு எரிச்சலை மீறிய பொறுமை இருந்தது.

கதவு பக்கமா எனக்கு நாற்காலி சொல்லியிருக்கேன். அப்பப்ப வெளியே போக சவுகரியமா இருக்கும். நான் பக்கத்தில் இல்லேன்னு பயப்படாம உக்கார்ந்து நாடகம் பாரு. எடின்பரோ கனவான்கள் நிறைந்த இடம். எந்த பயமும் வேணாம்.

தெரிசா முதல் தடவையாக சந்தோஷப் பட்டாள். கனவான்கள் வாழ்க. கதவு பக்கம் தாமஸுக்கு தனி இடம் ஒதுக்கிக் கொடுத்ததும் அவர்கள் கருணையாகத்தான் இருக்க வேண்டும்.

அவள் முதல் வரிசைக்கு நடந்தபோது தோளில் இரும்பு வளையத்தில் வட்டத் தட்டு ஒன்றைக் கோர்த்து சுமந்து வந்தவன் சிகரெட் வேணுமா என்று கேட்டான்.

சாரி? தெரிசா புரியாமல் விசாரித்தாள். இருட்டில் பெண் என்று புரியாமல் சிகரெட் விற்க முயற்சி செய்கிற பாவப்பட்ட செக்கனாக இருக்கும்.

லேடீஸ் சிகரெட் மேம். ரொம்ப மென்மையா, டாபடில் பூ மாதிரி சுகமான புகை. தரமான புகையிலை.

அவள் வேண்டாம் என்று உறுதியாகத் தலை அசைத்து முன்னால் நடக்க, இரண்டாவது மணி நீளமாக ஒலித்தது. திரைச்சீலை உயரத் தொடங்கியது.

தெரிசாவுக்கு பக்கத்து நாற்காலியில் பருமனான ஒருத்தி பக்பக் என்று சிகரெட்டை கொளுத்தி ஊதிக் கொண்டு உட்காந்திருந்தாள். பின்னாலும் வரிசைக் கோடியிலும் எல்லாம் கையில் காகிதப் பொட்டலங்களைப் பிடித்துக் கொண்டு ஆளாளுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மேடைக்குக் கீழே சாப்பிட்டு முடித்து காகிதத்தை சுருட்டி மேலே விட்டெறிய, பால்கனியில் இருந்து நாடகம் பார்க்க வந்தவர்கள் அதே படிக்கு கீழே சகலமான அசுத்தத்தையும் வீசி எறிந்து கொண்டிருந்தார்கள்.

வேசி என்றும் வேசி மகன் என்றும் கீழே இருந்து பலமாக ரெண்டு தடவை சத்தம் உயர்ந்து சிரிப்பு கேட்டபோது மேடையில் விளக்குகள் பளிச்சென்று எரிய, வைத்தியனின் வீடா ஆஸ்பத்திரியா என்று புரியாதபடிக்கு ஒரு ஜோடனை.

நீளமான மேஜை. அதில் கலைத்துப் போட்டுக் கிடக்கிற காகித உறைகள். ஒரு பெண் அறையை பெருக்கி சுத்தம் செய்தபடி மேஜைப் பக்கம் வருகிறாள். மேஜையில் வைத்திருந்த நாலைந்து காகித உறைகளைப் பிரித்துப் படிக்கிறாள்.

டாக்டர் ஜான் ஷெப்பர்ட். நான் ஏன் இப்படி திடகாத்திரமா இருந்து தொலைச்சேன். உடம்பு சரியில்லாம இருந்தா நீ என் பக்கத்துலே இருப்பியே.

அவள் தாபத்தோடு ஏங்க ஒன்றிரண்டு சிரிப்பு அங்கும் இங்குமாக எழுந்தது. நான் வேணுமானால் பக்கத்தில் வந்து இருக்கட்டுமா என்று சகட்டுமேனிக்கு கீழேயிருந்து குரல்கள் துரத்தின. அவளை உள்ளாடையைத் திறந்து காட்டச் சொல்லி யாரோ கத்த அடுத்த சிரிப்பு ஆரம்பமானது. தெரிசா பக்கத்து தடிச்சி அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்து இன்னும் கொஞ்சம் புகை இழுத்தாள்.

மேடையில் இருந்த பெண் மேஜை மேல் வைத்த கடுதாசிக்கெல்லாம் ஒன்று விடாமல் முத்தம் கொடுக்கிறாள்.

மேடைக்கு கீழே இருந்து விசில் சத்தம். பால்கனியில் தெரிசா பின்னால் இருந்து கூச்சல்.

அடியே, காகிதத்துக்கு முத்தம் கொடுக்காம என் கால் இடுக்கில் கொடு. இந்தா இடுப்புக்கு உள்ளே செருகி வைச்சுக்க. இப்போதைக்கு இதான் இருக்கு.

அந்தக் குடிகாரன் பச்சென்று தன் உள்ளங்கையில் ஒரு முத்தம் கொடுத்தபடி நீட்டிய கையோடு முன்னால் நடக்க முயன்று வழியை அடைத்தபடி விழுந்தான்.

நாடகக் கொட்டகை சிப்பந்திகள் வேகமாக வந்து அவனை தரையோடு இழுத்துப் போக, மேடையில் கருப்பு தலைமுடி டோப்பாவோடு ஒரு வயோதிகனும் இரண்டு அழகான பெண்களும். சிக்கென்று மாரையும் இடுப்பையும் கவ்விப் பிடித்த அந்தப் பெண்களின் உடுப்பைப் பார்த்தோ என்னமோ கீழே இருந்து திரும்ப விசில் சத்தம்.

வேலை வெட்டி இல்லாத டாக்டர், அவனுக்கு வேலைக்காரி, டாக்டருக்கு பணம் எழுதி வைத்த பணக்கார அத்தை, சொந்தக்கார வக்கீல், வக்கீலுடைய பெண்கள், அவர்களுடைய காதலர்கள் என்று வசவசவென்று ஓ சூசன்னா முன்னேறிக் கொண்டிருந்தது.

நான் மட்டும் ஆம்பிளையா இல்லாம இருந்தா நிச்சயம் ஒரு விதவையா இருப்பேன். எத்தனை ஆம்பிளைகள் விதவையை சுத்தி சுத்தி வராங்க.

ஆஸ்பத்திரி எடுபிடி பையன் சொல்ல அரங்கமே அதிரும்படி சிரிப்பு. தெரிசாவுக்கு இதில் என்ன விகடம் இருக்கு என்று புரியவில்லை. இவங்களை ஒரு மண்டலம் சாக்கியார் கூத்து பார்க்க சொல்ல வேண்டும். பாஷை புரிந்து, அந்த மேன்மையான நையாண்டி புரிந்து சிலாகிக்கப் பழகிக் கொண்டால் இப்படி விதவையை வைத்து நையாண்டி செய்கிற அபத்தமெல்லாம் காணாது போய்விடும். ஆமா, அது ஏன் விடோ என்பதை விட்டர் என்றும் அதையே இன்னும் திரித்து வைடர் என்றும் சொல்கிறான்கள்?

ஐ வில் பி எ ஜாலி குட் வைடர்.

அந்த சிப்பந்தி வேஷக்காரன் கால் கவட்டைப் பிளந்து காட்ட இன்னும் அதிகமான சிரிப்பு. அட தேவடியா மக்களா, இதுதானா வைடருக்கு அர்த்தம்?

தெரிசாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ராஜபார்ட்காரன் ஸ்டான்லி கார்டன் எப்போ மேடைக்கு வருவான் என்று தெரியவில்லை. அவன் வந்தாலும் இந்த நாடகத்தை கடைத்தேற்ற முடியாது என்று தோன்றியது அவளுக்கு.

வெளியே இதமான குளிரோடு இரவு கவிந்திருந்தது உள்ளே இருந்தே தெரிந்தது. இங்கே புகையிலை வாடையும், விஸ்கி வாடையும், முட்டைப் பண்ட சாப்பாட்டு நெடியும் மூச்சு முட்ட இந்த கழிசடையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்காமல் ஒரு நடை கால் வீசி நடந்து விட்டு அப்படியே விடுதிக்குப் போய்ச் சேரலாம் என்று தோன்றியது.

அவள் எழுந்து வாசலுக்கு வந்தாள்.

தாமஸ் எங்கே? நாடகக் கொட்டகையின் வலப்புறக் கோடியில் புகை மண்டலத்துக்கு இடையே உயர ஸ்டூலில் இருக்கிற ஆசாமிகளில் அவனும் இருப்பானோ.

இருக்கட்டும், இறங்கவே வேண்டாம்.

அவள் மெல்ல லோத்தியன் வீதியின் கருங்கல் பாவிய நடைபாதையில் நடந்தபோது அலாதியான அமைதியும் ஆனந்தமுமாக இருட்டு கூடவே வந்தது.

நான் என்ன தப்பு செய்ய மட்டும் துணை வருவேனா என்ன? உன்னை மாதிரி ஒரு கூட்டுக்காரி கிட்டினால், இதமாக தொடர்ந்து வந்து நீ நித்திரை போகும் நேரம் வரை கூடவே இருந்து மனசை சாந்தியடைய வைக்க மாட்டேனா?

இருட்டு கேட்டது.

இருள் எல்லாம் கெடுதல் இல்லை. வெளிச்சம் மட்டும் நல்லது இல்லை. தெரிசாவுக்கு புரிந்த மாதிரி இருந்த போது விடுதி வந்திருந்தது.

என்ன மேடம், சூசன்னா அலுப்புத் தட்டி விட்டதா? பாதியிலேயே எழுந்து வந்துட்டீங்க போல இருக்கு?

விடுதிக்கார உபசாரப்பெண் விசாரித்தாள். அவளும் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் ஓ சூசன்னா நாடக வசனப் புத்தகம் ஒன்றைத்தான் அக்கறையாகப் படித்துக் கொண்டிருந்தாள்.

இல்லே, ராத்திரி சரியா தூக்கம் இல்லாததாலே உக்கார முடியலே. கொஞ்சம் ஓய்வா நடந்துட்டு ராத்திரி ஆகாரம் சாப்பிட்டு நேரம் அதிகம் ஆகிறதுக்கு முன்பே தூங்கினா, விடிகாலையிலே முதல் ஆளா எழுந்துடலாம்.

நல்லது மேடம். இன்னும் அரை மணி நேரத்துலே உங்க ரொட்டியும், அரிசி சமைத்ததும் தயாராயிடும். தயிர் வாங்கி வந்துட்டேன். இது மட்டும் போதுமா?

தெரிசா போதும் என்று தலையாட்டினாள். எங்கே போனாலும் இந்த தயிர் சாதத்தை மட்டும் விட முடியவில்லை. கையோடு கொஞ்சம் அரிசி எடுத்துப் போய், அதை பாகம் செய்ய ஒரு பத்து நிமிஷம் சொல்லிக் கொடுத்தால் உடனே கிரகித்துக் கொண்டு உதவி செய்ய, தயிர் வாங்கி வந்து கொடுக்க அங்கங்கே யாராரோ உண்டு. சீக்கிரம் சீனாக்காரன் கடை இருக்குமிடம் தெரிந்தால் இங்கே இருக்கும் வரை அவன் புண்ணியத்தில் அரிசிக்கும் தட்டுப்பாடு இல்லை. சகாயம் செய்யும் எல்லோருக்கும் அம்பலப்புழை கிருஷ்ணனின் அனுக்ரஹம் கிட்டட்டும். கிறிஸ்து மகரிஷி அதெல்லாம் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்?

தெரிசா மாடிப்படி ஏறி அவள் அறைக்குள் நுழைந்தாள்.

மங்கிய வெளிச்சத்தில் கொஞ்சம் நேரம் ஓ சூசன்னா வசனப் புத்தகத்தைப் புரட்டி வாசிக்க முயற்சி செய்து தோற்று அப்படியே படுக்கையில் விழுந்தாள்.

நல்ல நித்திரையில் தெரிசா இருந்தபோது அவளுடைய தோளைப் பற்றி யாரோ பலமாக உலுக்கினார்கள்.

விளக்கு அணைந்து போயிருந்தது. ஒரே புழுக்கமாக இருந்தது.

சேச்சி, சேச்சி.

யார், யார் அது?

சேச்சி. எழுந்து என் கூட வாங்கோ.

யார் அது?

வாங்கோ சேச்சி. சொல்ல நேரம் இல்லே. கோணிப்படி இங்கே இருக்கு. இறங்குங்கோ. இப்படி வாங்கோ. விரசா நடக்கணும்.

தூக்கத்தில் நடக்கிறதுபோல் அவள் நடந்தாள். தடதடவென்று மரப்படிகளில் வெறுங்கால் சப்திக்க வெளியே இறங்கி விடுதித் தோட்டத்துக்கு வந்ததும் நின்றாள். இதமான குளிரோடு சுற்றிச் சூழ்ந்து இருந்த பவுர்ணமி ராத்திரி அது.

தோட்டத்தில் கொச்சுக் குட்டிப் பெண் குழந்தையோடு அம்பலப்புழை மருமகள் நிற்பதை நிலா வெளிச்சத்தில் பார்த்தாள் தெரிசா.

வாங்கோ சேச்சி, வெளியே போயிடலாம்.

அவள் தெரிசாவின் கையைப் பிடித்து இழுத்து தெருவுக்கு வந்தபோது பின்னால் ஏதோ சத்தம்.

தெரிசா திரும்பிப் பார்த்தாள்.

ஒரு பெரிய நெருப்புக் குவியலாக அந்த விடுதி பற்றி எரிந்து கொண்டிருந்தது.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts