விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்பது இரா.முருகன்

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

இரா.முருகன்


குறுகலான மாடிப் படிகள். அதில் அங்கங்கே விரிசல் விட்டிருந்தது. மரத்தாலான படிகளில் பாதரட்சை அழுந்தப் பதிந்தபோது முழுப் படிக்கட்டுமே கொஞ்சம் சும்மா இரேன் என்று முனகியது.

இதெல்லாம் நூறு நூத்தம்பது கொல்லம் பழமை கண்டிருக்குமா?

தெரிசா நினைத்துப் பார்த்தாள்.

அம்பலப்புழை தேகண்ட பிராமணக் குடும்பம் பாண்டி பூமியிலிருந்து பரசுராம பூமிக்கு வந்து சேர்ந்து தோளில் அகப்பையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சோறு வடிக்கலியோ சோறு என்று ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்த அதே கொல்ல வருஷம் தான், இல்லை அதுக்குக் கொஞ்சம் முன்னே பின்னே, இதையும் இங்கே ஒரு வெள்ளைக்காரத் தச்சன் இழைத்துச் செதுக்கி நிறுத்தி இருப்பான். அம்பலப்புழை குடும்பம் உடைந்து எல்லாத் திசைக்குமாகச் சிதறிப் போய் விட்டது. அதே வயசு கண்ட இந்தக் கோணிப் படிகள் உடைந்து நொறுங்கி ஒன்றுமில்லாமல் போக நேரம் காலம் பார்த்துக் கொண்டிருக்கோ என்னமோ.

திஸ் வே மேடம்.

மாடிப்படி வளைந்து திரும்பும் இடத்தில் ஒரு பணிப்பெண் மரியாதையோடு கையைக் காட்டினாள்.

அங்கிருந்தே, படி இறக்கத்தில் ஒரு விசாலமான அறை தெரிந்தது. நடுவில் கம்பளம் விரித்து நாலு மேசைகள் அடுத்தடுத்துப் போடப் பட்டிருந்தன. கதவை ஒட்டி இருந்த மேசைக்கு நேரே தாமஸ் காத்துக் கொண்டிருந்தான். எதிர் வசத்தில் வேறே யார் யாரோ. யாரும் தெரிசாவுக்கு இதுவரை அறிமுகமானவர்கள் இல்லை.

இந்திய மகாராணி வரவு அறிவிக்கப்படுகிறது.

தாமஸ் குரல்.

படிக்கட்டில் காலடி ஒலிக்கக் கேட்டு எழுந்த அவன் தெரிசாவைப் பார்த்து உரக்கச் சொல்லித் தொப்பியைக் கழற்றி ஆடம்பரமாகக் குனிந்து வணங்கினான்.

அவனுக்கு எதிரே இருந்த ஒரு சிவப்புச் சாயமடித்த தலைக்காரன் மட்டுமில்லாமல் அந்த அறையில் காலைச் சாப்பாட்டுக்கு கூடியிருந்த ஏழெட்டு பேரும் ஒரு சேரக் கைதட்டும் சத்தம்.

கீழ்ப் படிகளை இறங்கக் கால் எடுத்து வைக்க முடியாதபடி ஒரு சங்கோஜம் தெரிசாவுக்கு சட்டென்று உடம்பில் வந்து புகுந்தது.

இத்தனை வயசுக்கு அப்புறம் நாணம் எட்டிப் பார்க்கிறது அவளுக்கு. குடும்பத்தோடு வேதத்தில் ஏறாமல் ஜான் கிட்டாவய்யன் வெறும் கிட்டாவய்யனாகவே இருந்திருந்தால் அம்மா சிநேகாம்பா போல கொசுவம் வைத்த மடிசார் புடவை, பதினாலு வயசில் ஒரு பிராமண செக்கனுக்கு நாலு நாள் கோலாகலமாக பாணிக்ரஹணம், புருஷாள் வரும் போதும் போகும்போதும் கதவுக்குப் பின்னால் இருந்து அரை வார்த்தை ஒரு வார்த்தை சொல்வது என்று நாணமும் பவ்யமும் உடம்பில் அது பாட்டுக்கு ஏறி இருக்குமோ என்னமோ.

அவள் காலை ஆகாரத்துக்கான அறைக்குள் நுழைந்தபோது யார்யாரோ இந்திய பிரின்சஸுக்குக் காலை வணக்கம் சொன்னார்கள்.

நான் மகராணி, மண்ணாங்கட்டி எல்லாம் இல்லை. எந்தக் கொட்டாரத்தில் இருந்தும் நாள் நட்சத்திரம் பார்த்துப் புறப்படாதவள். கால் தரையில் பாவாமல், ரத்னக் கம்பளத்திலும் சுமக்கிறவர்கள் தோளிலுமாக சதா பவனி வருகிற ராஜவம்சம் இல்லை. ஒய்யாரமாக முத்துப் பல்லக்கும் சிவிகையும் ஏறி ஊர்ந்து ஸ்காட்லாந்துக்கு வந்து சேர்ந்த உம்மிணித் தங்கச்சியோ, பார்க்கவி தம்புராட்டியோ கிடையாது. வெறும் தெரிசா. தரையில் பிறந்து தரையில் நடந்து தரையிலேயே அடங்கப் போகிறவள்.

ஒவ்வொருத்தரிடமும் பெயரைச் சொல்லிக் கை குலுக்கி விட்டு தாமஸுக்குப் பக்கத்து இருக்கைக்கு வந்தாள்.

வயிறு பருத்து நின்ற விடுதிக்காரன் வணக்கம் சொன்னான். அவன் முழங்காலுக்கு வரும் கட்டம் போட்ட பாவாடை மாதிரி உடுப்பும், மேலே முழு நீலச் சட்டையும் அணிந்து கழுத்துப் பட்டியோடு காணப்பட்டான்.

இந்தியாவில் இருந்து எங்களுக்கு என்ன கொண்டு வந்திருக்கீங்க யுவர் ஹைனஸ்?

அவன் சிநேகத்தோடு விசாரித்தான்.

நாகப் பாம்பு, பறக்கும் கம்பளம், அந்தரத்தில் நீளமாய் நின்று பிடித்து ஏறி சொர்க்கம் போக வழி செய்கிற தாம்புக் கயிறு.

தாமஸ் அடுக்கினான். அறை முழுக்க எதிரொலித்த சிரிப்பில் தெரிசாவும் கலந்து கொண்டாள்.

எங்க பிழைப்பை கெடுத்திடுவீங்க போலே இருக்கு.

தாமஸுக்கு எதிர் இருக்கையில் இருந்த செம்பட்டை முடி வெள்ளைக்காரன் கண் சிமிட்டியபடி சொன்னான். அவனுடைய இங்கிலீஷ் அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் பேசுகிற கம்பீரமான அழகும் மிடுக்கும் கொண்டதாக இருந்தது. அந்தக் குரலும் அதன் ஏற்ற இறக்கமும் தெளிவான உச்சரிப்பும் தெரிசாவுக்குப் பிடித்திருந்தது. கணீர் என்று ஒலித்த குரல் அவன் ஆகிருதிக்கும் வெகுவாகப் பொருந்தி வந்தது.

மீட் கார்டன். ஸ்டான்லி கார்டன். என் பிரியமான சிநேகிதன். பிரபல நாடக நடிகன். ஓ சூசன்னா இவன் நடிக்கற புது நாடகம். இங்கே எடின்பரோவிலே இப்போ ஆடிட்டு இருக்கு. இவங்க எல்லாம் நாடகத்திலே நடிக்கறவங்க.

தாமஸ் தெரிசாவுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்ததோடு சுற்றிலும் இருக்கப்பட்டவர்களையும் கையசைத்து யாரென்று சொன்னான். திரும்ப இன்னொரு சுற்று வணக்கம் கூறப்பட்டது.

எதிரே உட்கார்ந்திருப்பவன் நாடகக்காரன் ஸ்டான்லி கார்டனா? தெரிசாவுக்கு நம்ப முடியவில்லை. இவன் டாக்டர் வேஷத்தில் வரும் புது நாடகம் பற்றி டைம்ஸ் பத்திரிகையில் நல்ல விதமாக எழுதியிருந்தது அவளுக்கு நினைவு வந்தது. கார்டியனில் அதை கண்ணுக்கும் காதுக்கும் மூளைக்கும் ஒருசேர அவமரியாதை என்று கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டாலும் அந்தப் பத்திரிகையில் தினசரி சூசன்னா நாடக விளம்பரம் வருவது என்னமோ நிற்கவில்லை.

நாலு வருஷம் முன் இந்த ஸ்டான்லி கார்டன் நடித்த கிங் லியர் நாடகத்தை பீட்டரோடு லண்டன் வைக்கோல் சந்தை பகுதி நாடகக் கொட்டகையில் பார்த்திருக்கிறாள் தெரிசா. அப்போது இவன் கிரீடமும் ஒப்பனையுமாக கம்பீரமாக மேடையில் இருந்தவன்.

இப்போது பார்க்கிறவனுக்கு, கதகளிக்கு புனைந்த தாடி வேஷம் அழித்த கேளு நாயர் மாதிரி ஒரு பரிதாபமான சாயல்.

இன்னிக்கு சாயந்திரம் ஏழரை மணிக்கு ஓ சோசன்னா நாடகம் ராயல் தியேட்டர்லே இருக்கு. மிஸ்டர் அண்ட் மிசஸ் மெக்நீல் வந்தால் எனக்கும் எங்க நாடக் கோஷ்டிக்கும் சந்தோஷமாக இருக்கும்.

கார்டன் ஒரு விர்ஜீனியா சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு சொன்னான்.

மிசஸ் மெக்கன்ஸி.

தெரசா புன்னகையோடு அவனிடம் தெரிவித்தாள்.

கொஞ்சம் வியந்தபடி ராஜபார்ட்காரன் பார்க்க, தாமஸ் இரண்டு கையையும் விரித்து உயர்த்தி உரத்த குரலில் சொன்னான்.

நான் இந்த மகாராணிக்கு எடுபிடி. அவள் வீட்டுக்காரன் மேஜர் பீட்டர் மெக்கன்ஸிக்கு கசின்.

மிசஸ் மெக்கன்ஸி அண்ட் மிஸ்டர் மெக்நீல். ரெண்டு பேருமே அவசியம் சாயந்திரம் நாடகம் பார்க்க வரவேண்டும்.

மரியாதை விலகாத குரலில் கார்டன் திரும்பவும் சொன்னான்.

இன்னிக்கு சாயந்திரமா? நீ வேறே ஏதாவது வேலை வச்சிருக்கியா தெரிசா?

தாமஸ் விசாரித்தான்.

சாயந்திரம் ஒரு பியானோ வாடகைக்கு எடுக்கறதுக்கு போகணும்னு சொல்லிட்டு இருந்தியே தாமஸ்.

தெரிசா நினைவு படுத்தினாள்.

விடுதிக்காரன் தெரிசாவிடம் மரியாதை விலகாமல் ஒரு அட்டையை நீட்டினான். இங்கிலாந்தில் தொட்டதெற்கெல்லாம் மரியாதை பார்ப்பதை விட காலே வீசம் அதிகம் ஸ்காட்லாந்தில் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்துகிறார்கள் என்று தெரிசாவுக்குத் தோன்றியது. அதிவிநயம் தூர்த்த லட்சணம் என்று இல்லையோ அம்மா சிநேகாம்பாள் சொன்னது.

அவள் அட்டையைப் படித்தாள். ஹாகீஸ், போரிட்ஜ், ரொட்டி, ஆரஞ்ச் மர்மலெட், ஆரஞ்ச் ஜாம், வேக வைத்த முட்டை.

படிக்கறதுக்கோ யோசிக்கறதுக்கோ அவசியமே இல்லே. ஸ்காட்லாந்தில் வந்தால் காலையிலே ஹாகிஸ், ராத்திரியிலே ஸ்காட்ச் விஸ்கி.

எதிர் மேசையில் ரொட்டிக்கு வெண்ணெய் தடவ ஆரம்பித்த வேஷக்காரன் ஒருத்தன் சொன்னான்.

இந்த ஹாகீஸ் என்ன மாதிரிப் பட்டது?

தெரிசா தாமஸை ரகசியமாக விசாரித்தாள்.

என்ன சந்தேகம்? நூத்தைம்பது சதவிகிதம் அசைவம் தான். பன்றிக் குடலை வேகவைத்து செய்தது. ஸ்காட்லாந்து முழுக்க அதான் வழக்கமான காலை ஆகாரம். இங்கிலாந்திலே சாஜேஜ் மாதிரி. அங்கே பார்.

பக்கத்து மேஜைக்கு பணிப்பெண் எடுத்துப் போன ஹாகீஸைக் காட்டி ஆஹா என்று ரசனையோடு வாடை பிடித்தான் அவன்.

இந்தியாவில் ராஜ வம்சம் கூட மாமிசம் சாப்பிடாதா?

ரொட்டித் துண்டுக்கு நடுவே ஒரு பெரிய விழுது ஆரஞ்சு மார்மலெட் விழுந்து நிற்க அதை ஒரு வினாடி ரசித்தபடி இருந்த ராஜபார்ட் கார்டன் கேட்டான்.

ஆரஞ்சும் சர்க்கரைப் பாகும் சேர்ந்த அந்தக் கூழை சாப்பிட்டுப் பார்க்க தெரிசாவுக்கும் ஆசையாக இருந்தது. சின்ன வயசில் மனசில் ஏறிய முட்டாய் வாசனை. புடமுரிக்கும், கல்யாணம், அடியந்திரத்துக்கும் சமையல் செய்யப் போய்விட்டு அப்பா கிட்டாவய்யன் இலை நறுக்கிலும் காகிதத்திலும் பொதிந்து வாங்கி வந்து கொடுத்து, அம்மா சிநேகாம்பாள் வைய வையத் தின்று வளர்த்த சுவை.

எங்க விடுதியிலேயே செய்த ஸ்பெஷல் மார்மலெட் இது, மேடம். உங்களுக்கு ஊருக்கு எடுத்துப் போகக்கூட ஒரு ஜாடி ஆரஞ்ச் மார்மலெட் தரேன்.

விடுதிக்காரன் தாராள மனசோடு சொன்னான்.

ஒரு பவுண்ட் தான் கட்டணம்.

அதானே, சோழியன் குடுமி எதுக்கு சும்மா ஆடணும்?

நான் இப்போதைக்கு லண்டன் திரும்புகிற உத்தேசம் இல்லை. போகும்போது வாங்கிக் கொள்றேன்.

தெரிசா சொல்லியபடி போரிட்ஜ் ஒன்று கொண்டு வர முடியுமா என்று கேட்டாள்.

ஓட்ஸ் கஞ்சி. சுடச்சுட காய்ச்சி எடுத்து வரும் வெந்த ஓட்ஸ் கூழ் மேலே பாலைப் பெய்து சர்க்கரையையும் தாராளமாகக் கலந்தால், பாயசமேதான்.

போரிட்ஜா? அது எதுக்கு?

தாமஸ் முகத்தைச் சுளித்தான்.

அம்பலப்புழைக்காரிக்கு எப்படி பாயசம் பிடிக்காமல் போகும்?

முழு கோதுமை ரொட்டி இரண்டை அனலில் வாட்டி எடுத்து வந்த பணிப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்து விட்டு மடியில் சாப்பாட்டு மேசைத் துணியை விரித்தபடி மெல்லிய குரலில் கர்த்தருக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தாள் தெரிசா.

ராஜபார்ட் கார்டன் சாப்பிடுவதை உடனே நிறுத்தி, நானும் க்ரேஸ் சொல்கிறேன் என்று சேர்ந்து கொண்டான்.

ஆமா, இவன் முதல்லே இருந்து திரும்பவும் சாப்பிட ஆரம்பிக்க ஒரு சாக்கு.

தாமஸ் கார்டன் முதுகில் ஓங்கித் தட்டியபடி அவன் வைத்திருந்த காகிதப் பொதியிலிருந்து ஒரு சிகரெட்டை சுவாதீனமாக எடுத்துப் பற்ற வைத்தான்.

ஆ, சிகரெட்டுன்னா இதான். எங்கே பிடிச்சே?

கார்டன் காகிதத்துக்கு மேலே அச்சடித்த விலாசத்தை உரக்க வாசித்தான்.

எஃப். பெட்ரி, புகையிலைக்காரன், லீத் வீதி. ராத்திரி பதினொரு மணி வரைக்கும் எடின்பரோவிலே திறந்து வச்சிருக்கற ஒரே சுருட்டுக்கடை.

லீத் வீதிக்கு எப்படிப் போகிறது என்று அவன் தாமஸுக்கு விளக்கிக் கொண்டிருந்தபோது விடுதிப் பணிப்பெண் தெரிசாவிடம் ஹார்வி ஓட்ஸ் கட்டி போட்டு போரிட்ஜ் செய்து எடுத்து வரட்டுமா என்று கேட்டாள்.

ஹார்வியா? எதுக்கு அது? வேக வைச்சாலும் பச்சை மாமிசம் சாப்பிடற மாதிரி சவசவன்னு இருக்கும். எக்லிப்ஸ் ஓட்ஸ் கட்டி வாங்கி வைக்கலியா?

கார்டன் விசாரித்தான். அவன் இந்தப் பிரதேசத்து ஆகாரம், பானம், பழக்க வழக்கம் எல்லாம் அத்துப்படி ஆனவனாக இருந்ததை தெரிசா கவனித்தாள்.

சிகரெட் வாங்கணும். மூக்குத் தூள் டப்பா ரெண்டு வாங்கியாகணும். கொஞ்சம் அலெக்ஸ் ஃபெய்ர்லி விஸ்கி வேறே வாங்க வேண்டி இருக்கு. நீ எதுக்கு முகத்தை சுளிக்கறே தெரிசா? இது என் உடம்பிலே உயிர் தங்க அத்யாவசியமான மருந்து.

தாமஸ் தெரிசாவிடம் போலி வினயத்துடன் சொன்னான்.

ஒழியறது. இதையும் கூட சேர்த்துக்கலாம் உன் பட்டியல்லே.

தெரிசா விரலை மடக்கினாள்.

வாடகைக்கு ஒரு பியானோ எடுக்கணும். இன்னும் நாலைந்து மாசம் குடக்கூலிக்கு தங்க இங்கே ஒரு வீடு பார்க்கணும். நல்ல டாய்லெட் சோப்பு வாங்கணும். என் உடுதுணி தைக்க அட்யர் அண்ட் கோ போகணும். லண்டன்லே கிளம்பறபோதே ஸ்ட்ராண்ட் துணிக்கடையிலே சொல்லி அனுப்பினாங்க. அப்புறம் சைனாக்காரன் லீசான் தானியம் விற்கற கடை எங்கேன்னு வேறே பார்க்கணும்.

தெரிசா தேவையானதைப் பட்டியலாக்கினாள்.

ஆமா, இது ஒண்ணொண்ணுக்குமே ஏகத்துக்கு அலஞ்சு மெனக்கெடணும். அப்புறம், இதை விட்டுட்டியே தெரிசா. உனக்கு பச்சைக் காய்கறி, பழம் என்ன என்ன கிடைக்குதோ அதெல்லாம் வாராவாரம் வந்து சேர ஏற்பாடு நடத்தி ஆகணும். இல்லே நீ தினசரி அரைப் பட்டினி தான். ஆக, இத்தனை வேலை இருக்கு. கார்டன், நீ பாட்டுக்கு சாவகாசமா இன்னிக்கு சாயந்திரம் ஓ சூசனா.

தாமஸ் முடிப்பதற்குள் ராஜபார்ட்காரன் குறுக்கே வெட்டினான்.

எல்லாமே காகிதத்திலே பட்டியல் போட்டு எழுதி எடுத்து வை. இன்னும் ரெண்டு நாள்லே ஒண்ணொண்ணா அத்தனையும் முடிச்சுடலாம். அதிலே பியானோ இன்னும் ஒரு மணி நேரத்திலே ஏற்பாடு ஆகிவிடும். நாலு எட்டு நடந்தா பிரின்சஸ் வீதியிலே மெத்தீன் சிம்சன். எனக்கு ரொம்ப நெருக்கமான சிநேகிதன் வச்சிருக்கற கடைதான். சல்லிசா முடிச்சுத் தரேன். என்ன கமிஷன் தருவீங்க?

கார்டன் கண் சிமிட்டியபடி தெரிசாவிடம் கேட்டான்.

நான் எடின்பரோவில் இருக்கற வரைக்கும் வாராவாரம் இந்த நரிவேட்டை விடுதியிலே ஒரு போத்தல் அருமையான ஆரஞ்சு மார்மலேட் வாங்கி அனுப்பி வைக்கறேன் போறேன். சரியா?

தெரிசா சிரித்தபடி இன்னும் கொஞ்சம் மார்மலேடை வழித்து ரொட்டித் துண்டில் போட்டு ஸ்பூனால் சமச்சீராக்கினாள்.

எல்லாத் தரப்பும் விரும்புகிறபடியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது.

பாவாடை உடுப்பை முழங்காலுக்கு இழுத்துச் சரி செய்தபடி விடுதிக்காரன் நாடகத்தில் ராஜாங்க சேவகன் போல அறிவித்து விட்டு உள்ளே போனான்.

நிச்சயமா இவன் பரிமாறுகிறா மார்மலெட் வேணுமா? உடுப்புக்கு கீழே வேறே வஸ்திரம் ஏதும் போட்டுக்காத மனுஷன் இவன். இங்கே எல்லாரும் காத்தோட்டமா இருக்கப்பட்டவங்க தான். குளிக்கறது கூட அபூர்வம்தான்.

தாமஸ் தெரிசா காதில் ரகசியமாகச் சொன்னான்.

தெரிசாவுக்குத் தெரியும். ஸ்காட்டீஷ் தேசிய உடுப்பான இந்த கில்ட் கீழே காற்றோட்டமாகத் திறந்து தான் இருக்குமாம். ஸ்காட்லாந்தில் இஷ்டம் இருந்தால் குளிப்பார்கள். வருஷம் நாலஞ்சு தடவை அப்படியான இஷ்டம் வரும் போகும்.

அதுக்கும் மார்மலெடுக்கும் என்ன சம்பந்தம்?

தெரிசா தணிந்த குரலில் தாமஸிடம் பதிலுக்குக் கேட்டாள்.

மார்மலேட் விடுதிக்காரன் செய்வது இல்லை. உள்ளே ஹாகீஸும், ஓட்ஸ் கஞ்சியும் உண்டாக்கி அனுப்பும் இவன் பெண்டாட்டி செய்வது. அவள் நிச்சயம் உள்ளாடை போட்டிருப்பாள். போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், அவள் குளித்தாலும் குளிக்காவிட்டாலும் அதெல்லாம் தெரசா கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை.

சேச்சி, இவளுக்குக் கொஞ்சம் பாயசமும் ரொட்டியும் தர முடியுமா? ரொம்ப பசின்னு அழறா.

ஜன்னல் பக்கம் இருந்து குரல் வந்தது.

தெரிசா உற்றுப் பார்க்க, அங்கே கடல் பறவை ஒன்று குஞ்சுப் பறவையோடு மரக் கிளையில் உட்கார்ந்து தெரிசாவைப் பார்த்து அலகை விரித்துக் கொண்டிருந்தது.

ஒரு தட்டில் ரொட்டியும் மார்மலேடுமாக எடுத்துக் கொண்டு தெரிசா வெளியே வந்தாள்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts