விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தெட்டு

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

இரா.முருகன்


இருந்த இடத்துக்கு ஒரு அடி முன்னால் தொடங்கி நீள நெடுக எங்கும் நீக்கமற நிறைந்த கடல்.

அலை ஒன்றே ஒன்று தயங்கித் தயங்கி நடுக் கடலில் இருந்து கிளம்பி சின்னதாக ஆர்பரித்து எழுந்து வெளியே வருகிறது. நீல நிறமில்லை. கருநீலமாக, கிட்டத்தட்ட கருப்பு வழியும் திரவமாக சமுத்திரம் துளும்பிக் கொண்டிருக்கிறது.

நேரம் காலம் தெரியாதபடிக்கு எங்கேயும் ஒரு இருட்டு கனமாகக் கவிந்து அப்பிக் கொண்டிருக்க, கடலின் இரைச்சல் தீனமாக அழுகிறது போல், திரும்பத் திரும்ப யாசிக்கிறது மாதிரி விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

அதை ஆமோதித்து ஒரு நீர்ப்பறவை கொக்கரித்தபடி கடல் அலைக்கு மேல் உயர்கிறது.

வந்துடேன்.

அது ஆதூரத்தோடு தெரிசாவை அழைக்கிறது.

சமுத்திரக் கரையில் கடலைப் பார்க்காமல் குனிந்து உட்கார்ந்திருக்கிறாள் அவள். அந்தப் பறவை தெரிசா தலைக்கு நேர் மேலே எம்பிப் பறந்து கீழே பார்த்து அலகைக் கோணலாக்கிக் கூப்பிடுகிறது.

வந்துடேன்.

வரமாட்டேன். எனக்கு வேலை இருக்கு.

தெரிசா தீர்மானமாகச் சொல்கிறாள்.

அப்படிச் சொல்லுங்கோ சேச்சி. இத்ரயோளம் கார்யத்தை எல்பிச்சுப் போயிருக்கா. செஞ்சு தீர்க்காம எறங்கிப் போகக் கழியுமோ?

குழந்தைப் பெண்ணை அணைத்துப் பிடித்து அவள் தலைமுடியை ஆதரவாக வருடிக் கொண்டு அந்த சின்ன வயசு பிராமண ஸ்த்ரி கடற்கரையோரமாக நிற்கிறாள். தெரிசா அந்தப் பெண் குழந்தையைப் பார்க்கிறாள். அரும்பு விடும் மார்பு மொட்டுகளின் மேல் தெரிசா கொடுத்த மார்க்கச்சு மறைத்து இருக்க சின்னதாக சீட்டிப் பாவாடையணிந்து, தலைமுடியை இழுத்துப் பின்னி வாழை நார் வவத்துக் கட்டி நிற்கிற குழந்தைப் பெண். பசித்த கண்ணும் உடம்பும் இதெல்லாம் பழக்கம் என்பதுபோல் விட்டேத்தியாகத் தெரிய அவள் தெரிசாவைப் பார்த்து சிநேகத்தோடு சிரிக்கிறாள்.

வந்துடேன். வந்துடேன்.

வானத்தில் கடல் பறவை திரும்ப வற்புறுத்துகிறது. அது ஒற்றையன் இல்லை. கூடவே ஏழெட்டு இப்போது அதைச் சுற்றிப் பறக்கின்றன. அது எல்லாம் தெரிசாவை ஒருசேர குரல் எழுப்பிக் கூப்பிடுகின்றன.

வந்துடேன். வந்துடேன். வந்துடேன்.

இங்கே எனக்கு ஜோலித் தெரக்கு.

தெரிசா ஏனோ முறையிடுகிற குரலில் சொல்கிறாள்.

கட்டினவனை யுத்தத்துக்கு அனுப்பி வச்சுட்டு அவனுக்கு ஜேஷ்டனோடு கூத்தடிக்கற ஜோலித் தெரக்கோ?

மேலே நிமிர்ந்து பார்க்க எல்லாப் பறவையும் அலகு விரிப்பில் கோரமாகப் பல் தெரிய அசிங்கமாகச் சிரிக்கின்றன.

கட்டாலே போக.

பிராமண ஸ்திரி அவற்றை ஏசுகிறாள். அவை எச்சம் போட்டது அவள் தலைமுடியில் இருந்து கன்னத்தில் வழிய, இடது கையால் அதைத் துடைத்தபடி ஏசுகிறாள்.

நான் தேவ ஊழியம் பண்ணனும்.

தெரிசா தலையில் முக்காடு போட்டபடி குரிசுப் பள்ளிக்கு நடக்கிறாள். நடந்தபடிக்கு அவள் கழுத்து டாலரில் கோர்த்த சிலுவையை வலித்தெடுத்து வாயில் வைத்துக் கடித்தபடி சொல்கிறாள்.

அங்கே வந்து பண்ணிக்கலாமே.

அவள் காதுப்பக்கம் தாழப் பறந்து வந்த பறவையொன்று ரகசியம் சொல்லும் குரலில் பேசுகிறது.

சேச்சி, எச்சலாக்க வேணாம். கேட்டேளா?

பிராமண ஸ்திரி தெரிசா கழுத்துச் சங்கிலியை நேராக்கி விட்டு அவள் தோளில் ஆதரவாகக் கை ஊன்றிக் கொள்கிறாள். யாருக்கு யார் ஆதரவு? தெரிசாவுக்குத் தெரியவில்லை.

இவாளைக் கடைத்தேத்தணும். இன்னும் எத்தனை நாள் பாவம் இப்படி அலைய முடியும்?

தெரிசா வானத்தை வெறித்தபடி கேட்க, பிராமண ஸ்திரி ஆமா என்கிறாள்.

அலையற யோகம் இருந்தா அலைஞ்சுண்டே இருக்க வேண்டியதுதான்.

தலை உச்சியில் நிழலிட்டுப் போன பறவையின் முகம் இப்போது ஆலப்பாட்டு வயசன் அப்பூப்பன் மாதிரி இருக்கிறது.. தேவ பிரச்னம் வைத்துப் பார்த்து பிரச்சனை நிச்சயமான எக்களிப்பில் ஆலப்பாட்டு முத்தச்சன் குரல் ஒலிக்கிறது.

உன்னாலே முடியும் சேச்சி. என்னை, இந்தக் குஞ்ஞை, இதோட அப்பாவை எல்லாம் நீ நெனச்சா நிமிஷத்திலே கரையேத்திடலாம்.

அலை வந்து போன ஈர மணல்.

பிராமண ஸ்திரி தெரிசா முன்னால் ஒரு சுமங்கலி இன்னொரு பழுத்த சுமங்கலியை வணங்குவது போல் கும்பிட்டுத் தொழுது, தாலிச் சரடைக் கண்ணில் ஒத்திக் கொள்கிறாள்.

இன்னொரு அலை மணலை அணைத்து வருடி விட்டு ஓடுகிறது.

இது ஓயாது. எப்பவுமே.

அது போகிற போக்கில் எக்காளத்தோடு சொல்லிப் போகிறது.

வந்துடேன். வந்துடேன். பாப்பாத்தியை விட்டுட்டு வந்துடேன்.

அத்தனை பறவைகளும் நீர்ப் பறப்பில் முக்குளித்து மறைகின்றன. கருப்பு திரவம் கசந்து துப்பின மாதிரி வழிய, கடல் இரைகிறது. அலைகள் தொடர்ந்து உயர்ந்து சூழலில் கருமையை இன்னும் இன்னும் அழுத்தமாகப் பூசிப் போக, எட்டிப் பார்த்து ஒரு வினாடி எல்லாவற்றையும் பிரகாசிக்க வைத்த சூரியன் அவசர அவசரமாக மேகத்துக்கும் அலைக்கும் பின்னால் போய் மறைகிறான்.

கடல் பறவைகள் மறுபடி சமுத்திரப் பரப்பில் மேலே வந்து தெரிசாவைச் சுற்றிப் பறக்கின்றன. அவை எல்லாம் ஜிவ்வென்று உயர்ந்து வானத்துக்கு எவ்வும்போதும் வந்துடேன். வந்துடேன்.

ஒற்றைப் பறவை மட்டும் அவள் தோள் பக்கம் இருந்தபடி, தொடர்ந்து நச்சரிக்கிறது. சொன்னாக் கேளு தெரிசா. நல்ல பொம்மனாட்டி இல்லியோ நீ. வந்துடுன்னா வந்துட வேண்டியதுதானே.

அது திரும்பத் திரும்பச் சொல்லியபடி தெரிசா வருவதற்காகக் காத்திருக்கிறது.

அவள் கண் திறந்தபோது அதைப் பார்த்தாள்.

ஜன்னல் விளிம்பில் தொக்கி இருந்தபடிக்கு வந்துடேன் என்றது இன்னொரு தடவை.

எங்கே இருக்கேன்? இது என்ன நாரையா, கொக்கா? விடாமல் என்னை ஏன் சல்யப்படுத்திண்டு இருக்கு சனியன் பிடிச்சது. அம்மா, அடீயே என் அம்மா. எங்கே போய்ட்டே?

தெரிசா கேவலோடு தொடங்கி சட்டென்று நினைப்பும் இடமும் காலமும் புரிபட நிறுத்தினாள்.

அம்பலப்புழையும் அம்மாவும் கேவலும் சிணுக்கமும் எல்லாம் எந்தக் காலத்திலோ முடிந்து போன கதை. இது லண்டன் வீடு. கென்சிங்டன் பகுதியில் மாடிவீடு.

இதுவா? வீடு ஏன் இப்படி சின்னதாகச் சிறுத்து ஒற்றைக் கட்டிலோடு மாறிப் போனது? பீட்டர். ஏய் பீட்டர். மிஸ்டர் பீட்டர் மெக்கன்ஸி. கேட்கிறாயா நீ?

கண்ணில் இன்னும் தூக்கம் போகாமல் இமை திரும்ப மூடுகிறது. வலுக்கட்டாயமாக அதைத் திறந்தபடி படுத்தேயிருக்கிறாள்.

பீட்டர், பீட்டர்.

கதவை யாரோ தட்டுகிறார்கள்.

உடுப்பை சரிபார்த்தபடி வரலாம் என்று சத்தம் கொடுக்கிறாள் தெரிசா.

கையில் ஒரு தாம்பாளமும் அதில் வென்னீர்க் குவளை, மேலே மடித்து வைத்த வெள்ளைத் துவாலையுமாக விடுதிக்காரப் பெண் உள்ளே வந்து குனிந்து வணங்கினாள்.

காலை வணக்கம் மிசஸ் மெக்கன்ஸி.

இது லண்டன் இல்லை. எடின்பரோ மாநகரம். தெரிசா நேற்று மதியம் லண்டனில் இருந்து கிளம்பி இங்கே வந்திருக்கிறாள்.

தேவ ஊழியம் நிமித்தம் பயணம்.

வந்துடறியா?

கடைசியாக ஒரு தடவை விசாரித்த கடல் பறவை ஜன்னல் கம்பியை விட்டுப் பறந்து தோட்டத்து மரக் கொப்பில் உட்கார்ந்தது.

தெரிசா ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.

தோப்புத் தெரு. தெருக்கோடி இங்கிருந்தே இறக்கத்தில் தெரிந்தது. அதில் நட்டு வைத்திருந்த கல்லில் பொறித்த பெயர்ப் பலகையும்.

தெரு ஏற்றமாக இருந்த முனையில் இருந்து ஒல்லியான ஒரு வயசன் சந்தோஷத்தோடு குதித்துக் குதித்து நடந்து போய்க் கொண்டிருந்தான்.

குட்மார்னிங் ஆனந்தக் குட்டன்.

தெரிசா வாய்க்குள் சொல்லியபடி கையை மெல்ல அசைத்தபோது மனதில் திரும்ப உற்சாகம் தொற்றி இருந்தது.

ஆனந்தக் குட்டனுக்கு என்ன சந்தோஷம் வந்து இப்படி கொம்மாளி கொட்டி குதித்துப் போகிறான்?

தெரிசா கொஞ்சம் ஆச்சரியத்தோடு பார்க்க, அந்த சந்தோஷம் தெரு ஏற்றத்திலிருந்து இறக்கத்துக்கு நடக்கிறவர்கள் எல்லோர் நடையிலும் இருப்பதைக் கண்டாள். கால் வேகமாக மலைச் சரிவு இறங்குகிற மாதிரி ஓடும்போது தன்னையறியாமல் எல்லோரும் குழந்தை ஆகிற சந்தோஷம் அது. அவர்களுக்கு எதிர்த்தாற்போல் பாதை இறக்கத்திலிருந்து ஏறுமுகமாக வந்து கொண்டிருந்தவர்கள் முகத்தில் உலகின் மொத்த சோகமும் துன்பமும் கவிந்திருந்த மாதிரி இருந்தது. சிலுவைப்பாடை இவர்களிடம் உபதேசித்தால் நின்று இளைப்பாறிக் கேட்டுப் போவார்களோ. தெரிசாவுக்குத் தெரியவில்லை.

ராத்திரி வரும்போது தோப்புத் தெருவின் ஏற்றமும் இறக்கமும், கருப்பு நிறக் கல்லால் கட்டி நிறுத்திய அந்தத் தெரு வீடுகளும், பெயர்ப் பலகையும் எல்லாம் கண்ணில் படவில்லை.

‘ப்ளையிங் ஸ்காட்மேன்’ ரயில் நியூகேசில் ஸ்டேஷனில் ஏதோ எஞ்சின் கோளாறு என்று இரண்டு மணி நேரம் நிறுத்தி வைத்து திரும்ப மெல்ல ஊர ஆரம்பித்து எடின்பரோவுக்கு வந்து சேர நடு ராத்திரி ஆகி விட்டது.

கிட்டத்தட்ட ஆள் ஒழிந்து வெற்றிடமாகக் கிடந்த ரயிலில் தெரிசாவும் கசின் தாமஸும் எதிரே கத்தோலிக்க பாதிரியாரும் தவிர வேறே யாரும் இல்லை.

அந்த பாதிரியாருக்கு மனசுக்குள் நன்றி சொன்னாள் தெரிசா. இவரும் இல்லாமல் இந்த நகரும் கூண்டுக்குள் தாமஸோடு ஒரு ராத்திரியின் பெரும்பகுதி நேரத்தைப் போக்க வேண்டிய தர்ம சங்கடத்திலிருந்து அவர் தான் காப்பாற்றினார்.

ஆனாலும் நியூகாசிலுக்கு ரெண்டு ஸ்டேஷன் சென்று அவர் இறங்கி விட்டார். தெரிசா அவரை குனிந்து வணங்கி நமஸ்கரித்து தேவனுக்கு ஸ்தோத்ரம் சொன்னபோது அவள் தலையில் வாஞ்சையோடு கைவைத்து முத்தச்சன் போல் ஆசிர்வதித்துப் போனார் அவர்.

இன்னும் ரெண்டே ஸ்டேஷன் தான். அப்புறம் சூடான தீனியோடு நமக்காக விடுதி காத்திருக்கும்.

தாமஸ் அவளுக்கு பக்கத்தில் நெருங்கி உட்கார வர, கார்டியன் பத்திரிகையை பிரித்தபடி எதிர் இருக்கையைக் காட்டினாள் தெரிசா.

பிரச்சனை இல்லை.

தாமஸ் அங்கே தொப் என்று மூட்டை முடிச்சை இறக்கின மாதிரி உட்கார்ந்து ரயிலுக்கு வெளியே நகர்கிற இருட்டை வெறித்துக் கொண்டு வந்தான். அவனோடு பேசாமல் இருக்கும் நிம்மதிக்காக ஏற்கனவே முழுக்கப் படித்திருந்த பத்திரிகையை திரும்பப் படிக்க வேண்டிப் போனது தெரிசாவுக்கு.

வேவர்லி ஸ்டேஷன். எடின்பரோ வேவர்லி.

சிவப்பும் பச்சையும் மாறிமாறிக் கண்சிமிட்டும் விளக்கை உயர்த்திப் பிடித்தபடி ஒவ்வொரு ரயில் பெட்டிக்குள்ளும் குனிந்து பார்த்து ஒரு ரயில்வே உத்தியோகஸ்தன் அறிவித்துப் போனான்.

தெரிசாவும் தாமஸும் இறங்கினார்கள்.

ரயில்பெட்டியின் படிகள் உயரத்தில் இருந்ததால் தெரிசா கொஞ்சம் தடுமாறினாள். கண்ணில் உறக்கம் வேறே பலமாகப் கவிந்து வந்தது.

தாமஸ் கீழே நின்று சும்மா பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் உட்கார அனுமதித்திருந்தால் இப்போது படி இறங்க உதவி செய்திருப்பான்.

சும்மா பாத்துக்கிட்டு நிக்கறியே. ஒரு கை கொடு.

தெரிசா அவனைப் பார்த்து சிரித்தாள். சட்டென்று அவளுக்குள் ஏதோ உற்சாகம் பரவியது. புது இடம். புது மனுஷர்களை சந்திக்க வேண்டும். கிறிஸ்துவுக்கு ஆன்மாவை ஒப்புக்கொடுக்க தெருத் தெருவாக, வீடு வீடாக, குரிசுப்பள்ளி ஒன்று விடாமல் பிரசங்கம், போதனை. இன்னும் நாலைந்து மாதம் ஓட்டமாக ஓடப் போகிறது.

தாமஸ் அவள் கையை இறுகப் பற்றி ரயில் பெட்டியில் இருந்து இறங்க உதவினான். அப்புறம் அந்தக் கையை விடுவிக்கவே இல்லை.

ரெட்டைக் குதிரை வண்டி இருட்டில் போன வழித்தடத்தை அவன் தான் ஜன்னல் வழியாக எக்கிப் பார்த்து பிரின்சஸ் தெரு, லோத்தியன் வீதி, மோரிசன் தெரு என்று தெரிசாவின் தகவலுக்காக அறிவித்தது.

மோரிசன் தெருவில் இடது புறம் திரும்ப, வண்டிக்காரன் ஒரு வினாடி குதிரைகளை நிறுத்தினான்.

எந்த விடுதின்னு சொன்னீங்க?

பாக்ஸ் ஹண்டர்ஸ்.

ஓ, அதுவா? வயசன் கானரியோட விருந்தாளிகளா? நல்ல மனுஷன். கொஞ்சம் லொடலொடன்னு வாய் ஓயாமப் பேசிட்டு இருப்பான். பியர் குடிக்கற போட்டியிலே இதுவரைக்கும் அவனை யாரும் ஜெயிச்சது இல்லே தெரியுமா. கானரிக்கு வாய்ச்சது வயிறா இல்லே பீப்பாயான்னு தட்டிப் பார்த்த்துத்தான் சொல்லணும்.

அவன் வண்டியை நிறுத்திய இடத்தில் சின்னத் தோட்டத்துக்கு நடுவே நரிவேட்டைக்காரர்கள் விடுதி. படுக்கையும், காலைச் சாப்பாடும் என்று போட்ட பலகை ஒற்றை விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது.

வாசலில் அந்த விளக்கு நிழல் படர்த்திய இடத்தில் வயிறே முழு உடம்பாக நின்று கொண்டிருந்தவன் கண்ணில் பட்டான். அவன் வயிற்றை நாளைக்கு தட்டிப் பார்க்கலாம்.

மிஸ்டர் அண்ட் மிஸ்டர் மக்நெய்ல். வெல்கம் டு எடின்பரோ.

வயிறு பெருத்த வயசன் சொன்னதைத் திருத்த தாமஸ் மெனக்கெடவே இல்லை என்பதை நினைத்தபடி தெரிசா படுக்கையில் விழுந்தது நினைவு வந்தது.

உங்க கணவர் உங்களுக்காக காலைச் சாப்பாடு மேஜையில் காத்திருக்கிறார் மேடம்.

விடுதிப் பெண் குனிந்து சொல்லியபடி கட்டில் பக்கத்து சிறிய மேஜையில் வெந்நீர் பாத்திரத்தையும் துணியையும் வைத்தாள்.

இவளுமா? தாமஸ் அவள் வீட்டுக்காரன் இல்லை என்பதை எத்தனை பேருக்கு இன்று தெரிசா சொல்ல வேண்டும்?

சுத்தம் செய்து கொண்டு கீழே வருகிறீர்களா மேடம்?

இந்த பொண்ணு மனசிலே நீ ராத்திரி முழுக்க என்ன பண்ணிட்டு இருந்தே தெரியுமா தெரிசா?

ஜன்னல் வெளியே இன்னும் இருந்த பறவை கேட்டது.

அவள் அதைக் கை வீசி விரட்டினாள். படுக்கைக்கு முன் ஆளுயர நிலைக் கண்ணாடியில் அந்தப் பறவை அவளோடு கூடவே தெரிந்தது.

புருஷனை ஊருக்கு அனுப்பிட்டு அவனோட அனியன், ஜேஷ்டன், அண்டை வீட்டுக்காரன் யாரோடோ வேற்று ஊர் வந்து ரா முழுக்க கலவி செய்தவளாக்கும் நீ. கருத்து கொஞ்சம் போல் வண்ணம் வச்சு இன்னும் உடம்பு கட்டு விடாதவள். கண்ணிலே முலை குத்துற மாதிரி துருத்தி நிற்கிற மத்திய வயது ஸ்திரி. வந்துடேன். இன்னும் விதவிதமா க்ரீடைக்கு ஆள் உண்டு. காட்டறேன் வா.

அந்த கடல் பறவை கொக்கரித்துக் கொண்டே பறந்து மறைந்தது.

தெரிசா மேல் உடுப்பைச் சுற்றித் தோளில் ஒரு கனமான போர்வையைப் போர்த்திக் கொண்டாள். மாடிப்படிகளில் இறங்கத் தொடங்கினாள்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts