விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தேழு

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

இரா.முருகன்


நாங்கள் புதுச்சேரி போய்ச் சேர்ந்தபோது ராத்திரி ஆகியிருந்தது. அம்பலத்தடியார் வீதி என்று பெயர் சொன்ன ஒரு விஸ்தாரமான தெருவில் ராத்தங்க ஜாகை ஏற்பாடானதாகத் தெரிந்தது.

ரொம்ப நெருக்கமாக சமுத்திரம் இருந்ததாலோ என்னமோ உப்பு வாடையும் குளிர்ச்சியுமாக ஒரு காற்று ரம்மியமாக வீசியது. நிலா வெளிச்சத்துக்கு அது ரொம்பவே இணங்கி வந்தது.

யாராவது குளிக்கணும்னா சொல்லலாம். வென்னீர் காய்ச்சித் தரேன்.

இடுப்பில் நாலு முழத் துண்டோடு வந்த சமையல்காரன் சொன்னான்.

ராத்திரி அத்தனை நேரம் கழித்து குளிக்க யார் வீட்டிலும் இழவு விழவில்லை என்று அவனுக்கு சொல்லலாமா என்று மனசில் பட்டாலும் சும்மா இருந்தேன். வாயையும் மற்றதையும் மூடிக் கொண்டு பரதேசம் போய்ப் பிழைக்க வந்திருக்கிற வரதராஜ ரெட்டி நான். வாய்த் துடுக்கு எல்லாம் மகாலிங்க அய்யனோடு போச்சு.

ராத்திரி ஆகாரம் என்று ஆளுக்கு ஆறு இட்டலி வீதம் கல்லுக் கல்லாகக் கொடுத்தானது. ஆசாரம் பார்ப்பதைத் தொலைத்துத் தலை முழுகிவிட்டதால் யார் இட்லிக்கு அரைச்சது, யார் வார்த்தது, யார் துவையல் அரைச்சது என்று தேவையில்லாத யோஜனை ஏதும் வராமல் இலையில் விழுந்ததை எடுத்து முழுங்கி ராத்திரி சுகமாக நித்திரை போனேன்.

மூத்திர விசர்ஜனத்துக்காக நடு ராத்திரி எழுந்தபோது தலைமாட்டில் யாரோ உட்கார்ந்திருக்கிற மாதிரி இருந்தது. நிலா வெளிச்சத்தில் மாம்பழப் பட்டுப் புடவையும் மூக்கில் வைர மூக்குத்தியுமாக அது எங்கம்மா மகராஜி கோமதியம்மாள்தான்.

அவளைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் விம்மி விம்மி அழ ஆரம்பித்தேன்.

அம்மா, அடி அம்மா, ஏன் நான் இப்படி நாய் படாத பாடு படறேன்? புத்தி சிதிலமாகிப் போய் ஏதேதோ நடந்து தீர்ந்து ஜீவிதமே கெட்டு எதுக்காக இத்தனை வாதனை அனுபவிக்கணும்? நீ பார்த்துக் கல்யாணம் செஞ்சு வச்சியே. சகல சௌபாக்கியத்தோடும் கூடிய லலிதாம்பா. ஆயுசு முழுக்கக் கூட இருந்து சந்ததி வளர்க்க கிருஹத்துக்கு வந்த என் தர்ம பத்தினி. அவளையும் விட்டுப் பிரிஞ்சாச்சு. யாரோ தீர்மானிச்ச படிக்கு எங்கேயோ எல்லாம் அலைந்து திரிய என் பூர்வ ஜென்ம பாவம் தான் என்ன?

எங்கம்மாவைக் கேட்டேன்.

அவள் பதிலே சொல்லாமல் சிரித்தாள்.

ராத்திரி திடுதிப்பென்று விடிந்து கிரகணம் பற்றின காலையாக மாறினது. இது நொங்கம்பாக்கத்து வீடு. மச்சில் நானும் தமையனும் நிற்கிறோம். கண்ணுக்கு மேல் கையை வைத்து மறைத்தபடி நான் சூரியனைப் பார்க்கிறேன். ஏதோ நிழல் ஆடுகிறது.

கிரகணத்தை வெறுங் கண்ணாலே பார்க்கக் கூடாதுடா குழந்தே. பள்ளிக்கூடத்திலே பாதிரி சொல்லலியா?

அவள் என் தலையை வாஞ்சையாகத் தடவினாள்.

எனக்கு கண் இருண்டு வந்தது.

ஒரு சின்னக் குழந்தையாக மறுபடியும் அவள் மடியில் படுத்துக் கொண்டேன். அந்த நிமிஷத்தைப் பிடித்து நிறுத்தினால் போதும். அது நழுவினாலும் பிரயத்னம் செய்தாக வேண்டும். முடியலியா, ஒன்றுமே மிச்சம் இல்லாமல் சமுத்திரக் காற்றில் கரைந்து போகணும். மனசு கிடந்து அடித்துக் கொண்டது.

அப்படிக் கரைகிற சுகத்தில் திரும்ப நித்திரை போனேன்.

விடிகாலையில் முழிப்பு தட்டிய போது கருக்கிருட்டு. பக்கத்தில் சமுத்திர இரைச்சல் மட்டும் கேட்க, காற்று நின்று போயிருந்தது.

ராத்திரி தலைக்கு பக்கமாக அம்மா உட்கார்ந்து ஆசிர்வாதம் செய்து போனதை நினைக்க ஒரு பக்கம் சந்தோஷம். இன்னொரு பக்கம் அவளுக்கு எள்ளும் தண்ணியும் கூட இரைக்க வழி இல்லாமல் நான் இத்தனை வருடம் ஜெயிலில் கடத்தினதில் விசனம்.

இதுவும் போதாமல் இப்போது சமுத்திரம் தாண்டி வயிறு நிமித்தம் போகிறேனே என்று வருத்தம் வேறே நானும் நானும் என்று வந்து நின்றது.

ஒண்ணும் வருத்தப்படாமல் போய் வாரும். எல்லாம் நல்லதுக்குத்தான்.

மாட்டை ஓட்டிக் கொண்டு வீட்டு வாசலில் நிறுத்திக் கறக்கப் போய்க் கொண்டிருந்த யாரோ சொன்னான்.

வேறே யார்? அந்த மலையாளத்து பிராமணன் தான்.

எங்கே போனாலும் கூடவே விடாமல் துரத்துகிறதும் பழகிக் கொண்டு வருகிற படியால், இனியும் அதெல்லாம் ஒரு தொந்தரவாகத் தெரியவில்லை.

பொலபொல என்று விடிந்ததும் மற்றவர்களும் ஒருத்தர் ஒருத்தராக எழுந்திருக்க, எங்களைத் தேடிக் கொண்டு கருப்பு கோட்டும் நாலு முழ சோமனும் கோண கிராப்பு வெட்டிய தலையுமாக ஒருத்தர் வந்து சேர்ந்தார். புது நாகரீக மனுஷர். நம்மை மாதிரி கட்டுக் குடுமி, மூலத்தார் வேட்டி கோவிந்தாக் காரன் இல்லை.

மெட்ராஸ்லே இருந்து சௌக்கியமா வந்து சேர்ந்தீங்களா? இங்கே ஜாகை விஷயமா குறைபாடு இல்லியே? ஆமா, உங்களிலே யாரு வரதராஜ ரெட்டி?

அவர் என்னைப் பார்த்துத்தான் கேட்டார். அது இங்கிலீஷில் இருந்தது.

வெகு ஜாக்கிரதையாக ஒன்றுக்கு ரெண்டு தடவை மனசில் சொல்லி சரி பார்த்துக் கொண்டு நான் அவருக்குத் தகுந்த பதில் சொன்னேன்.

ரெட்டியாரே, இன்னிக்கு பகல் ஒரு மணிக்கு போலீஸ் கச்சேரியில் போய் உங்க எல்லாரையும் பத்தின விவரங்களை பதிவு செய்யணும்.

அதுவுஞ் சரிதான், காத்திருக்கோம், இன்னிக்கு போயிடலாம் என்று சொன்னேன்.

நீர் தான் ஹெட் மஸ்தூர்னு சொல்லி இருக்கோம்.

ரொம்ப உபகாரம் செய்தீர் என்றேன்.

வேறே குப்பாயம், வேஷ்டி எல்லாம் இருக்கு இல்லியா? துரைக்கு முன்னாடி அட்டுப் பிடிச்சாப்பல போய் நிக்கக் கூடாது.

கருப்புக் கோட்டுக்காரர் தமிழில் தொடர்ந்து வார்த்தை சொன்னார்.

நான் தெலுங்கு தேச வரதராஜ ரெட்டி வேஷத்தில் இருக்கிறபடியால் அரை வார்த்தை தமிழும் பாக்கி தெலுங்கும் அங்கங்கே இங்கிலீஷுமாக பேச வேண்டிப் போனது.

அவருக்கும் அது பிடித்திருந்தது.

என்னிடத்தில் புதுசாக ஒரு குப்பாயமும் கிடையாது. நல்லதாக வேஷ்டி வேணுமானால் இருக்கு.

இதைச் சொல்லியபடிக்கு பையில் இருந்து நான் எடுத்துக் காட்டிய குப்பாயத்தைப் பார்த்து விட்டு இது போதாது என்று தலையை அசைத்தார் அவர்.

யாரையோ கூப்பிட்டார்.

என் ஷேர்ட்டிலே ஒண்ணு இஸ்திரி போட்டு எடுத்து வா.

அந்த ஜாகைக்கு அடுத்துத்தான் அவர் வீடு இருக்க வேண்டும். உத்தரவு கொடுத்து அனுப்பிய வேலைக்காரன் ஒரு நீல நிறக் குப்பாயத்தோடு சடுதியில் திரும்ப வந்து சேர்ந்தான்.

புதுசு மாதிரி தெரியவில்லை. ஆனால் புது மோஸ்தரில் தையல் பண்ணினதாக இருந்தது. யாரோ விழுத்துப் போட்ட துணியை எல்லாம் உடுத்தாகணும் என்று மனசில் தைத்தபோது வேலைக்காரன் என் காதில் சொன்னான்.

வண்டிப் படிக்கட்டில் விரிச்ச சிவப்பு வஸ்திரத்துக்கு இது எவ்வளவோ மேல்.

சந்தேகமே இல்லை. அம்பலப்புழை பிராமணன் என்னை ஆயுசுக்கும் விடப் போகிறதில்லை. நல்லதாகப் போச்சு. பரதேசத்துக்கு பேச்சுத் துணை. ஆயுள் முடிந்து கூட நான் தனியாக அலைய வேண்டாம். என்னோடு சேர்ந்து ஆவியாக உலாத்தவும் சம்மன் இல்லாமல் ஆஜராகி விடுவான்.

குப்பாயத்தில் இருந்து இதமான ஒரு வாசனா திரவியம் மணத்தது. இது நம்ம தேசத்து அத்தர், ஜவ்வாது வாசனை இல்லை. இங்கிலீஷ் செண்டு வாசனை கூட இல்லை. பூவைக் கொட்டி அப்புறப்படுத்தின மாதிரி ஒரு மெலிசான வாடை.

நெருப்புக் கங்கு போட்ட பெட்டியை துணி மேல் வைத்து இழுத்து இழுத்து அதிலே சுருக்கம் இல்லாமல் செய்திருந்ததால் பெரிய உத்தியோகஸ்தர்கள் உடுத்தக் கூடிய தோதில் அது மிடுக்காகவும், நெருப்பு மிச்சம் வைத்த சூட்டோடும் இருந்தது.

உம்ம வேஷ்டியையும் இவன் கிட்டே கொடுங்கோ. இஸ்திரி பண்ணித் தருவான்.

கருப்புக் கோட்டுக் காரர் கையைக் காட்டினார்.

குளிச்சுட்டு வந்து தரட்டுமா?

நான் அந்த வேலையாளை தெலுங்கில் கேட்க அவன் பேபே என்று ஏதோ சொன்னான்.

இவனுக்கு வாய் பேச வராது ரெட்டிகாரு. ஆனா, வேலை சுத்தம்.

அதுவுமப்படியா என்று அதிசயித்தபடி நான் குளிக்கக் கிளம்ப சமையல்காரன் வந்து நின்று வென்னீர் இருக்கு என்றான்.

அந்த சுகம் கொண்டாடறது எல்லாம் போய் எத்தனையோ யுகமானபடியால் வேண்டாம் என்று சொல்லி கிணற்றடிப் பக்கம் திரும்பினேன்.

ரெட்டியாரே, வேஷ்டியைக் கொடுத்துட்டுப் போம். அதுக்கென்ன குளியும் பூஜையும்?

கருப்பு கோட்டு மனுஷர் என்னை மேலே போகவிடாமல் நிறுத்திக் கேட்டார்.

வேண்டாம்தான்.

கொண்டு வந்திருந்த துணிப்பையை எடுத்தேன்.

நீர் பஞ்சகச்சமா, மூலத்தாரா?

பஞ்ச கச்சத்துக்கு நான் பிராமணன் இல்லை என்று சொல்லி விட்டு பையில் இருந்து பிரிமணை மாதிரி முறுக்கி வைத்திருந்த வேஷ்டியைக் கொடுத்தேன்.

இதை நல்லா தண்ணியிலே நனைச்சுட்டு இஸ்திரி போடு புரியறதா? நெறைய யூதிகோலன் போடணும். மக்கின வாடை, நீர்க்காவி வாசனையே வரக் கூடாது.

கருப்புக் கோட்டு அவனுக்கு ஏகப்பட்ட சைகைகளோடு விஸ்தாரமாகச் சொல்லிக் கொண்டிருக்க நான் காதில் போட்டுக் கொண்டபடிக்கு கிணற்றடிக்குப் போனேன்.

ஒரு நாவிதன் கிரமமாக எங்கள் எல்லோருக்கும் சவரம் செய்து முகத்தை பார்க்கிற தோதில் மாற்றுகிற வித்தையைச் செய்தான். அப்புறம் அங்கேயே கிணற்றடியில் குளியல்.

ஜாகைக்குள் போக, ராத்திரி மாதிரி ஆளுக்கு ஆறு இட்டலி. எனக்கு மட்டும் கொஞ்சம் நெய்யும் ஊற்றி விட்டுப் போனான் பரிசாரகன். ஹெட் மஸ்தூரோ என்னமோ சொன்னாரே கருப்புக் கோட்டு ஆசாமி அதுபடிக்கு இது கூடுதல் உபசாரம் போல.

மூலக் கச்ச வேஷ்டியும், மேலே குப்பாயமும், தலையில் ஒரு தலைப்பாகையுமாகக் கிளம்பினேன். கருப்புக் கோட்டு மனுஷர் ஒரு பிரம்பையும் என்னத்துக்காகவோ என் வலது கையில் திணித்தார்.

ஒரு ஆகிருதிக்குத்தான் இதெல்லாம். துரையை தரிசனம் முடிச்சு வந்ததும் பிரம்பையும், தலைப்பாவையும் ஞாபகமாக இவனிடம் கொடுத்து விட்டு கப்பல் ஏறும். இல்லாவிட்டால் ஏழு கடலும் நீந்தி இவன் வசூல் செய்ய வந்து விடுவான்.

தன் வேலைக்காரனை அபிமானத்தோடு பார்த்தபடி கருப்புக் கோட்டு சொன்னார்.

தூப்ளே வீதியிலே தான் பீரோ.

பீரோன்னா?

புரியாமல் கேட்டேன்.

ஆபீஸ். பிரஞ்சிலே அதான் பெயர். நேரா போய் வலது பக்கம் திரும்பி கொஞ்சம் நடந்தா, பீரோ தான். வாங்க, நான் வாசல்லே இருப்பேன்.

அவர் விவரம் சொல்லி விட்டுக் கிளம்பினார். நாங்கள் சமுத்திரக் கரை வழியாக நாலு வீதியும் நேர்த்தியாகக் கோடு இழுத்த மாதிரி இருக்கிற அழகைப் பார்த்து ஆனந்தப் பட்டுக் கொண்டே தூப்ளே வீதிக்கு வந்து சேர்ந்தோம்.

பிரஞ்சு பாஷையில் எழுதின ஒரு சர்க்கார் ஆபீஸ். சொன்னபடிக்கு வாசலில் கருப்புக் கோட்டு எங்களை எதிர்பார்த்துக் கொண்டு நின்றார்.

மசமசன்னு வராம, கொஞ்சம் வேகமா வந்திருக்கலாமே. சாயந்திரம் கப்பல் ஏறணும். நினைவு இருக்கோ இல்லியோ?

அவர் தமிழில் என்னிடம் எரிந்து விழுந்தது புரியலை என்பதாக முகத்தை வைத்துக் கொண்டேன்.

இந்த நபரை இனி ஒரு நாளும் திரும்பப் பார்க்கப் போவதில்லை. தலப்பா, பிரம்பு ரெண்டையும் இவரிடம் கூட வேணாம், ஊழியக்காரனிடத்தில் ஒப்படைத்ததும் எல்லா தொடர்பும் முடிஞ்சு போகும். ஒண்ணொண்ணா இப்படி விட்டுப் போனால் இன்னும் கூட நிம்மதியாக இருக்கும். என்ன சொல்றேடீ லலிதா?

சர்க்கார் கச்சேரிக்குள்ளே வெல்வெட்டு தைத்த மேஜையும், நாற்காலியும் போட்டு ஒரு துரை உட்கார்ந்திருந்தார். சேப்பங்கிழங்குக்குக் கைகாலை ஒட்டி மேலே போலீஸ் உத்தியோக உடுப்பை மாட்டின மாதிரி இருந்தது. இங்கிலீஷ்கார அதிகாரி மாதிரி மிடுக்கு இல்லாவிட்டாலும் தோரணை அதேபடிக்கு இருந்தது.

போ’ழூர் மிஸ்யே அந்த்வான்

கருப்புக் கோட்டை பார்த்து விநோத பாஷையில் துரைதான் முதலில் முகமன் கூறினார். கருப்புக் கோட்டு பிரசித்தமான நபராக இருக்க வேண்டும்.

ஒரு துபாஷி பக்கத்து மரமேஜை பின்னால் பவ்யமாக வந்து நின்றான்.

துரை என்னைப் பார்த்து, பெயரும் வயசும் கேட்டார். மொரிஷியஸில் கரும்புத் தோட்டத்தில் இருபது கூலிகளை கண்காணிக்கிற உத்தியோகத்துக்குப் போக உம் சுய விருப்பத்தோடு வந்திருக்கிறீரா?

துரை கேட்டதை துபாஷி இங்கிலீஷ் ஆக்க, நான் இஷ்டப்பட்டு வந்ததை அவன் மூலமே துரைக்கு தெரியப்படுத்தினேன்.

உமக்கு என்ன சம்பாவனை பேசியிருக்கு என்று அடுத்து அவர் விசாரித்தார்.

கருப்பு கோட்டு எழுந்து மாசம் இருபத்தைந்து ரூபாய் என்று பவ்யமாகச் சொன்னார்.

எனக்கு நிஜமாகவே சந்தோஷம். சென்னைப் பட்டணத்தில் காரியஸ்தன் மாசம் பதினஞ்சு தான் சொன்னதாக ஞாபகம்.

உமக்கு அட்வான்ஸ் தொகை ஏதாவது கொடுத்திருக்கா?

துரை கேட்டார். எனக்கு அது அர்த்தமாகவில்லை.

உம்ம அவசர செலவு எதுக்காவது முன் கூட்டியே கொஞ்சம் சம்பளப் பணத்தை கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறீரா? துரை கேட்கிறார்.

கருப்புக் கோட்டு விளக்கம் சொன்னது.

எங்கிட்டேயே இருபத்தஞ்சு ரூபா இருக்கு. இப்போதைக்கு இதுவே எதேஷ்டம்.

என் பதில் துரைக்கு திருப்தியளித்திருக்க வேண்டும். ஒரு தஸ்தாவேஜைக் காட்டி கையெழுத்து போடச் சொன்னார் அந்த மனுஷ்யர். வரதராஜ ரெட்டி என்று இங்கிலீஷில் உருட்டி உருட்டிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

துரை முகத்தை சுளித்தமாதிரி இருந்தது. அப்புறம் என் பின்னால் நின்ற மற்றவர்களைப் பார்த்து வலது கட்டைவிரலை மேலும் கீழுமாக ஆட்டியபடி சிரித்தார்.

அந்த போலீஸ் கச்சேரியில் இருந்தவன், வந்தவன், போனவன் எல்லாம் இந்த ஹாஸ்யத்துக்காக ரொம்பவே சிரித்து மகிழ்ந்தார்கள். ஏதோ அசங்கியமான சமிக்சையாக இருக்கும் இப்படி கட்டை விரலை ஆட்டிக் காட்டுவது என்று எனக்கு மனசில் பட்டது.

சிருங்கார புஸ்தகம் போட என்னோடு இருந்த பாகஸ்தன் முதலி இருந்தால் இதுக்கு என்ன அர்த்தம் என்று சட்டென்று சொல்லி இருப்பான். பொடிக்கடை நிர்வாகம் பண்ணின ராவ்காரு இருந்தாலும் அப்படித்தான். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்களோ?

கையெழுத்து, ரேகை புரட்டல் சமாசாரங்கள் ஒருமாதிரி முடிவடைவதற்குள் மதியம் ரெண்டு மணி ஆகி விட்டது.

சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டு கிளம்ப வேண்டும். அதோ கப்பல் நிக்கிறது பாருங்க.

கருப்பு கோட்டு கண்ணைக் கூச வைக்கும் சூரிய வெளிச்சத்தை கைக்குத் தடுப்பு வைத்துப் பார்த்தபடி இடது கையை சமுத்திரத்தை நோக்கிக் காட்டினார்.

கடலில் அலைக்கு அசைந்து கொடுத்தபடி ஒரு பெரிய கப்பல் நின்று கொண்டிருந்தது.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts