ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -5 பாகம் -1

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


Fig. 8
Gettysburg National Park
(Last Image)

நமது கடவுளின் ஆண்டான 1863 ஜனவரி முதல் தேதி முதலாக எந்த மாநிலத்திற்குள்ளும் அல்லது மாநிலமாக மதிக்கப்பட்ட பகுதிக்குள்ளும் அடிமைகளாக அடைபட்டிருப்போரும், அமெரிக்க ஐக்கிய நாடுகளை எதிர்த்துப் புரட்சி செய்த மக்களும் இனிமேல் விடுவிக்கப் படுகிறார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கமும், அதன் இராணுவமும், கடற்படையும் அந்த மக்களின் விடுதலையை ஏற்றுக் கொண்டு அவ்விதம் அவர்கள் மெய்யாக விடுவித்துக் கொள்ளும் முயற்சிகளைத் தடுத்துக் கட்டுப்படுத்த எந்த நடைமுறைகளையும் கையாளாமல் நிரந்தரமாய் நிலைநாட்டி வரும்.

ஆப்ரஹாம் லிங்கன் (அடிமைகள் விடுதலை அறிவிப்பு) (ஜனவரி 1, 1863)

“எண்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை நிலைநாட்டிச் சுதந்திர வாழ்வைச் சிந்தித்து எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்னும் முன்மொழி வாசகத்தை நமக்கு ஒப்படைத்தார்கள். இப்போது நாம் அந்த தேசம் அல்லது அவ்விதம் உருவாகி உறுதியடைந்த ஒரு தேசம் நெடுங்காலம் பொறுத்துக் கொள்ளும் மாபெரும் ஓர் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கிறோம். அப்போரின் பெருங்களத்தில் நாமெல்லாரும் போராடச் சந்தித்தோம். அந்தக் களத்தில் ஒரு பகுதியை போரில் உயிர் கொடுத்தோருக்கு ஓய்விடமாய் அர்ப்பணித்துத் தேசம் நீடித்திருக்க முற்படுகிறோம். நாம் எல்லோரும் கூடி இதைச் செய்து முடிக்க வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தகுதி உடையது.”

ஆப்ரஹாம் லிங்கன், கெட்டிஸ்பர்க் உரைமொழி (நவம்பர் 19, 1863)

Fig. 1
Utah Militia in Civil War

உள்நாட்டுப் போர் முடியும் தருணம்.

(ஏப்ரல் மாதம் 1865)

காட்சி -5 பாகம் -1

பங்கெடுப்போர் :

ஆப்ரஹாம் லிங்கன், ஆப்ரஹாம் லிங்கன் கீழ்ப்பணி செய்து வடபுறத்தில் போர் புரிந்து வரும் ஜெனரல் யுலிஸிஸ் கிராண்ட், காப்டன் மாலின்ஸ், படைவீரன் டென்னிஸ் மற்றும் படைவீரன் வில்லியம் ஸ்காட்.

இடம் : போர்க்களத்தின் வெளியே ஜெனரல் தங்கியிருக்கும் ஒரு வேளாண்மைக் குடிசை.

இப்போதைய காட்சி: உள்நாட்டுப் போர் முடியும் தருணம். ஜெனரல் கிராண்ட் மேஜை முன்பாக அமர்ந்து காப்டன் மாலின்ஸோடு உரையாடுகிறார். கிராண்ட் வாயில் சுருட்டை ஊதிக் கொண்டு கையில் விஸ்கி பாட்டிலை வைத்திருக்கிறார். படைவீரன் டென்னிஸ் மேஜை ஓரத்தில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான்.

நேரம்: மாலை வேளை.

ஜெனரல் கிராண்ட்: (மேஜை மீதிருக்கும் கடிகாரத்தைப் பார்த்தபடிப் பரபரப்புடன்) ஒன்றரை மணிநேரம் ஆகிவிட்டது. இதற்குள் ஜெனரல் மீடு (Major General Meade) செய்த முடிவு தெரிந்திருக்க வேண்டுமே ! (டென்னிஸைப் பார்த்து) டென்னிஸ் !

டென்னிஸ்: (எழுந்து முன்வந்து) சொல்லுங்கள் ஸார்.

Fig. 2
States that were keeping
Slaves

ஜெனரல் கிராண்ட்: இந்த தகவல் தாள்களை எல்லாம் காப்டன் டெம்பிள்மன்னிடம் (Captain Templeman) கொடுத்திடு. பிறகு கர்னல் வெஸ்டிடம் (Colonel West) கேள் : இருபத்தி மூன்றாம் படைக்குழு (Twenty Third Division) இன்னும் போர்க்களத்தில் ஈடுபட்டுள்ளதா வென்று, போகிற போது சமையல்காரரிடம் சொல் : பத்து மணிக்கு சூப்பைக் கொண்டு வரவேண்டும் எனக்கு என்று. நேற்று அனுப்பியது குளிர்ந்து போய் விட்டதென்று புகாரிடு ! இன்றாவது சூடாக இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்.

டென்னிஸ்: அப்படியே சொல்கிறேன் ஸார் ! (வேகமாய்ப் போகிறான்)

ஜெனரல் கிராண்ட்: மாலின்ஸ் ! கொடு அந்த தளப்படத்தை (Map) ! (மாலின்ஸ் தளப்படத்தைக் கொடுக்கிறார்) (கிராண்ட் சில நிமிடங்கள் ஊன்றிப் பார்த்த பின்) எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை ! மேஜர் மீடு தூக்கிப் போனால் ஒழிய சில மணி நேரங்களில் முடிய வேண்டிய போரிது ! ஜெனரல் ராபர்ட் லீ பெரிய வீரர்தான் ! ஆனால் அவர்கூட இப்போது மீள முடியாமல் சிக்கிக் கொண்டார் ! (தளப்படத்தில் பென்சிலால் வட்டமிடுகிறார்)

காப்டன் மாலின்ஸ்: ஜெனரல் ! இதுதான் தென்னவரின் இறுதி மூச்சு ! அவரது முதுகெலும்பு முறிந்தது ! அவர்கள் நம்மிடம் சரண் அடைவதைத் தவிர வேறு கதியில்லை ! இதுதான் இறுதி முடிவு !

ஜெனரல் கிராண்ட்: (சிரித்துக் கொண்டு) ஜெனரல் ராபர்ட் லீ சரணடைந்தால் நாமெல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு வீட்டுக்குப் போகலாம் !

Fig. 3
Lincoln’s Famous Gettysburg Speech

காப்டன் மாலின்ஸ்: கடவுளே ! மகத்தான நிகழ்ச்சியாக இருக்கும் ஜெனரல் !

ஜெனரல் கிராண்ட்: அமெரிக்க வரலாற்று மகத்துமாக இருக்கும் ! ஒரே குண்டில் இரண்டு கோட்டைகள் வீழ்கின்றன ! பிரிந்த மாநிலங்கள் ஒருங்கிணையும் ! அடிமைக் கறுப்பருக்கு விடுதலை ! ஆனால் அதற்கு பெருத்த வெகுமதி அளித்தோம், ஆயிரக் கணக்கான உயிர்ப்பலிகள் !

காப்டன் மாலின்ஸ்: என் மனைவி மகனை எல்லாம் சீக்கிரம் பார்க்கப் போகிறோம் என்பதை நினைத்தாலே இனிக்கிறது.

ஜெனரல் கிராண்ட்: நீ சொல்வது உண்மை மாலின்ஸ் ! அடுத்த வாரம் என் மகன் பள்ளிக்கூடம் போகிறான். நானும் அவன் கூடச் சென்று பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வருவேன்.

(டென்னிஸ் வருகிறான்)

டென்னிஸ்: (சல்யூட் செய்து) ஜெனரல் ஸார் ! இருபத்தி மூன்றாம் படைக்குழு இன்னும் போர் புரிவதாகக் கர்னல் வெஸ்ட் கூறுகிறார் ! சமையல்காரர் வருத்தம் தெரிவித்தார் சூப் குளிர்ந்து போனதற்கு !

ஜெனரல் கிராண்ட்: நன்றி டென்னிஸ் ! நீ போகலாம் ! (டென்னிஸ் போகிறான்) (மாலின்ஸைப் பார்த்து) அந்த துப்பாக்கிகளை இன்று பகலில் அனுப்பினீரா ?

காப்டன் மாலின்ஸ்: ஆமாம் ஜெனரல் ! சொன்னபடி அனுப்பி விட்டேன்.

Fig. 4
Union General Ulysses Grant

(அப்போது ஒரு பணியாள் வருகிறான்)

பணியாள்: (சல்யூட் செய்து) பிரசிடெண்ட் லிங்கன் இங்கு வந்து கொண்டிருக்கிறார்

(ஜெனரல் கிராண்ட், காப்டன் மாலின்ஸ் இருவரும் எழுந்து நிற்கிறார்கள். லிங்கன் உள்ளே நுழைகிறார். பின்னால் மிஸ்டர் ஹேயும் வருகிறார். லிங்கன் கரம் நீட்டி ஜெனரல் கையை முறுவலுலோடு குலுக்குகிறார். காப்டன் மாலின்ஸ் சல்யூட் செய்வதற்கு லிங்கன் பதில் சல்யூட் செய்கிறார்)

ஆப்ரஹாம் லிங்கன்: என்னால் பொறுத்திருக்க முடியவில்லை ! போர் எப்படி நடக்கிறது ?

(லிங்கன், கிராண்ட், மாலின்ஸ் மூவரும் நாற்காலியில் அமர்கிறார்கள்)

ஜெனரல் கிராண்ட்: ஜெனரல் மீடு தகவல் அனுப்பியுள்ளார் : ஜெனரல் ராபர்ட் லீயும் அவரது படைகளும் முப்புறம் அடைபட்டு விட்டதாம். இன்னும் உள்ளது மூன்று மைல் தூரம்தான் ! அதுவும் குறுகிக் கொண்டே போகுது !

ஆப்ரஹாம் லிங்கன்: அப்படியால் போர் முடியப் போகுது ! கடவுளுக்கு நன்றி கூறுவேன் கோடி முறை !

ஜெனரல் கிராண்ட்: இந்த மூன்று மைல் தூரப் போரில் ஏதாவது திடீர் மாறுதல் ஏற்பட்டால் ஒழிய வேறு சந்தேகம் இல்லை ! போர் ஓயப் போகுது உண்மை ! ஜெனரல் மீடு அனுப்பும் கடைசித் தகவலை எதிர்ப்பார்த்துள்ளேன் !

Fig. 5
Confederate General
Robert Lee

ஆப்ரஹாம் லிங்கன்: இனிமேல் எங்காவது போர் நடக்குமா ?

ஜெனரல் கிராண்ட்: இன்றிரவு மட்டும் ஓரிரண்டு இடங்களில் நடக்கலாம் ! நடக்காமல் முடங்கி ஓய்ந்தும் போகலாம் ! ஆனால் ராபர்ட் லீக்குத் தெரியும் ! இனி ஒரு பலனும் அவருக்கு இல்லை ! சரண் அடைவதைத் தவிர ஜெனரல் லீக்கு வேறு வழியில்லை ! அடைப்பட்டு விட்டார் ! நமது முற்றுகையிலிருந்து அவர் இனிமேல் தப்பவே முடியாது !

(பணியாள் வந்து ஒரு தகவல் தாளை ஜெனரல் கிராண்ட் கையில் தந்து விட்டுப் போகிறான்)

ஜெனரல் கிராண்ட்: (முறுவலுடன்) நல்ல செய்தி ! திட்டமிட்டபடி நமது படையினர் முப்புறமும் சுற்றிக் கொண்டாராம் ! ராபர்ட் லீ சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை ! ஜெனரல் மீடு 10 மணி நேர அவகாசம் லீயிக்குக் கொடுத்திருக்கிறாராம் ! சரண் அடைய வேண்டும் ! அல்லது சாகத் துணிய வேண்டும் ! காலை ஆறு மணிக்குள் போரின் முடிவு தெரிந்து விடும் ! (அந்த தகவல் தாளை ஜெனரல் கிராண்ட் லிங்கனிடம் தருகிறார்)

ஆப்ரஹாம் லிங்கன்: கடவுளின் கருணை நமது பக்கம் விழுகிறது. ஜெனரல் ராபர்ட் லீயை அடைத்து முற்றுகை செய்வது அத்துணை எளியதா ? ஜெனரல் மீடு பாராட்டுக்குரியவர் !

ஜெனரல் கிராண்ட்: எனது சம்பவ நிரலின்படி இதுதான் இறுதித் தளப்போர் ! இனிமேல் எந்த இடமும் இல்லை !

ஆப்ரஹாம் லிங்கன்: பயங்கர யுத்தம் ! நம் பக்கம் யாருக்கும் தண்டனை தர வேண்டுமா ?

ஜெனரல் கிராண்ட்: ஆமாம் பிரசிடெண்ட் ! ஒரு குற்றவாளியைச் சுட வேண்டும் நாளை !

Fig. 6
Major General George Meade

ஆப்ரஹாம் லிங்கன்: சுடுவதைத் தவிர்க்க முடியாதா ? யாரவன் ?

காப்டம் மாலின்ஸ்: அவன் ஓர் அயோக்கியன் ! பெயர் வில்லியம் ஸ்காட் ! காலை சூரியோதயத்திற்கு முன் அவன் அத்தமித்துப் போவான் ! சுட்டுத் தள்ளும் குழு காலையில் அவனைச் சுட்டுத் தள்ளும் ! நாளை இந்நேரம் அந்த ஆளைக் காண மாட்டோம் !

ஆப்ரஹாம் லிங்கன்: எங்கே இருக்கிறான் இப்போது ? செம்மையாக விசாரணை செய்தீரா ?

காப்டன் மாலின்ஸ்: ஆமாம் பிரசிடெண்ட் ! ஜெயிலுக்குள் இருக்கிறான் ! காவல் செய்யும் போது தூங்கி விழுந்து நமது படைக்கு அபாயம் ஏற்பட வாய்ப்பளித்தவன் ! அவன் நாட்டுத் துரோகி !

ஆப்ரஹாம் லிங்கன்: அவன் சாவதற்குள் நான் ஒருமுறை பேச வேண்டும் ! அழைத்து வாருங்கள் என்னிடம் !

ஜெனரல் கிராண்ட்: மாலின்ஸ் ! அழைத்து வாருங்கள் துரோகி வில்லியம் ஸ்காட்டை !

(காப்டன் மாலின்ஸ் விரைவாகப் போகிறார்)

Fig. 7
Lincoln Visiting the Battlefield

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play :

Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition
The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)

1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html

2. Chambers Encyclopedia (1968 Edition)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

6 (a) The Great Quotations Compiled By : George Seldes (1967)

7. The Wordsworth Dictionary of Quotations (1997)

8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961)

9. Lincoln The Unknown By Dale Carnegie (1959)

10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter (1958).

11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)

12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)

13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)

14. The American Civil War – A History By : Mark Saunders (1993)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 18, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts