விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தாறு

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

இரா.முருகன்


என் பிரியமுள்ள லலிதாம்பிகே. இதுக்கு முந்தி எழுதின கடிதாசு பத்தரமாக வந்து சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். படிக்கச் சொல்லிக் கேட்டு வர்த்தமானம் எல்லாம் ஒருவாறு விளங்கியிருக்கலாம். நீ உடனே பதில் கடுதாசு அனுப்பிவைக்க வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. வசதிப்படும்போது எந்த மார்க்கமாகவாவது தென்பட்டால் அதுபடிக்கு ரெண்டு வரி மட்டும் உன் தேக க்ஷேமத்தைத் தெரியப் படுத்தினால் மெத்தவும் சந்துஷ்டி அடைவேன்.

ஆக, நான் சொல்லிக் கொண்டு வந்தபடிக்கு, நடப்பில் இருக்கப்பட்ட விஷ்வாவசி வருஷம் சித்திரை மாசம் தேதி பதினஞ்சு வெள்ளிக்கிழமை விடிகாலையிலே பரதேச யாத்திரை கிளம்பியானது. முதலில் புதுச்சேரி. அங்கே இருந்து கப்பல் மார்க்கமாக சமுத்திரம் கடந்து பிரயாணம்.

புதுச்சேரி போக ரெண்டு மாட்டு வண்டி அமர்த்தியிருந்தது. நம் அகத்து வாசலில் வண்டி வந்து நிற்கக் காத்துக் கொண்டு என்னோடு கூட இன்னும் பத்து பேர் திண்ணையில் இடித்துப் பிடித்து உட்கார்ந்திருந்தோம்.

இன்னொரு வண்டி கொண்டு வந்திருந்தால் கொஞ்சம் சௌகரியமாக பிரயாணம் போயிருக்கலாம் என்று எல்லோரும் ஒருத்தனுக்கு ஒருத்தன் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதை எங்களைக் கூட்டிப் போகிற பெண்பிள்ளையிடம் சொல்ல யாருக்கும் மனோதைரியம் இல்லாமல் போனது.

அவளுடைய பெயர் கருப்பாயி அம்மாள் என்று காரியஸ்தனோடு பேசிக் கொண்டிருந்தபோது தெரிய வந்தது. தெற்கத்தி சீமைப் பெண்பிள்ளையாக இருக்கும் என்று எனக்கு ஒரு சமுசயம். அவள் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நசித்துப் போனதாக நான் நினைத்திருந்த ஒரு ஜீவிதத்தை திரும்ப ஆரம்பிக்க வைத்து அந்நிய தேசத்துக்கு கப்பல் ஏற்றி அனுப்ப எல்லா முஸ்தீபும் செய்து தருவதால் சாட்சாத் கற்பகாம்பாளே தான் அவள்.

போகிற வழியில் பசி எடுத்தால் சாப்பிட எங்கள் எல்லோருக்கும் புளியஞ்சாதமும் எலுமிச்சங்காய் அன்னமும் பூவரசு இலையில் கட்டி ஒவ்வொருத்தருக்கும் கொடுக்க வழிவகை செய்திருந்தான் காரியஸ்தான். நம் வீட்டுப் பின்கட்டில் கோட்டை அடுப்பு வைத்து ஒரு ஐயங்கார் பையனும் எடுபிடிகளுமாக விடிய முந்தியே வடித்து ஓலைப்பாயில் கொட்டி இறக்கி விட்டுப் போனது அது. கல்யாணச் சாப்பாட்டுக் களை வராவிட்டாலும் வீட்டில் அப்படி நாலுபேர் குடித்தனம் இருக்கப்பட்ட மாதிரி புழங்கியதால் ஏதோ சீமந்தம், சுபசுவீகாரம் நடக்கிற தோதில் மனசுக்கு சமாதானமாகத் தெரிந்தது.

காரியஸ்தன் முந்தின நாள் ராத்திரி எல்லோரையும் நம் வீட்டுத் திண்ணையிலேயே படுத்து நித்திரை போகச் சொன்னான். நம் அகத்தில் தூங்கச் சொல்லி நமக்கே ஒருத்தன் உத்தரவு போடுகிறது சகிக்க ஒண்ணாத துக்கமே. ஆனாலும், நல்ல காலம் வரப் போகிறது என்று தெரிந்த காரணத்தால் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டிப் போனது. நீயும் வீட்டில் இருந்தால் தம்பதி சமேதராக வண்டி ஏறிப் புதுச்சேரி போயிருக்கலாம் என்று கூடத் தோன்றியது. ஆனால் நீ லட்சுமிகரமாகப் புழங்கும் வீட்டில் இப்படி அந்நிய ஆம்பிளைகள் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்து கொண்டிருக்க முடியாதுதான். அதுவும் அந்த சுருட்டுக் கிழவன் காலில் இருந்து பாதரட்சையைக் கழட்டுவதே இல்லை என்று ஒரு தீர்மானத்தோடு இருந்தான். அவன் தலையில் இடிவிழ. காலில் ரோகம் பற்றி இற்றுப்போய் அது இடுப்பிலிருந்து கழண்டு விழுந்து காணாமல் போகட்டும்.

ஓய் வரதராஜ ரெட்டி, இவங்க எல்லோரையும் உம்ம பொறுப்பில் விடறேன். படிப்பறிவில்லாத ஜன்மம் இது எல்லாம். நல்ல படிக்கு புதுச்சேரியும் அங்கே இருந்து கயானோவோ பிஜியோ வேறே ஏதேதோ இதுகளுக்குப் பேர் விளங்காத தீபகர்ப்பமோ – உம்மோடு கூட்டிப்போய் சுகமாக இருக்க வழிபண்ணும். வேதபுரீசன் உம்மையும் சந்ததியையும் எப்பவும் காப்பாத்துவான்.

கருப்பாயி அம்மாள் வாயில் போட்டிருந்த தாம்பூலத்தை ஒரு வெள்ளிக் கிண்ணியில் துப்பியபடிக்கு நல்ல வார்த்தையாக நாலு என்னைப் பார்த்துச் சொல்லி அனுப்பி வைத்தாள்.

இங்கே அந்த கருப்பாயி பற்றி இன்னொண்ணை உனக்காக சொல்லியாக வேணும். கருப்பு ரதி மாதிரி, கழுக்குன்றத்தில் என் மனசை அலைக்கழித்து நாசமாகப் போக வைத்த ரெட்டிய கன்யகை மாதிரி எல்லாம் சௌந்தர்யமான ஸ்திரி அவள் என்று நினைத்திருந்தால் உடனே அந்த நினைப்பை அழித்துப் போடுவது சிலாக்கியமானது. ஆம்பளைக்கு பொண்ணு வேஷம் போட்டது போல் ரொம்ப தாட்டியான, மத்திய வயசு கடந்த பொம்பளை அவள். குரலும் என் சத்தத்தை விட கரகரப்பாக, கிட்டத்தட்ட உங்கம்மா பேசுகிற மாதிரி வந்து விழும்.

நான் நாலெழுத்து அதுவும் இங்கிலீசில் எழுதவும் பேசவும் தெரிந்தவன் என்பதால் என்மேல் கருப்பாயிக்கு ரொம்ப அபிமானம்.

ரெட்டியாரே, உம்மைப் போல் இன்னும் நாலு பேர் உம்ம ஊரில் இருந்தா வரச் சொல்லும். கணக்கு எழுதுகிற பெட்டியடி உத்தியோகத்துக்கு துரை ஆள் அம்பு கேட்கிறான்.

அவள் என்னிடத்தில் சிநேகிதமாக விசாரித்தபோது வேறு யாரையும் தெரியாத காரணத்தால் விசனப்பட்டேன். நான் நல்ல ஸ்திதியில் இருந்தால் புகையிலைக்கடையில் வேலை பார்க்கிற மற்ற சிநேகிதர்களை இதுக்காக சித்தப்படுத்தலாம். இப்போ எங்கே போய் ஆளைப் பிடிக்க?

போனால் போகிறது ரெட்டியாரே, நீர் வந்ததே எதேஷ்டம் என்று திருப்திப்பட்டாள் கருப்பாயி. நானும் என் பங்குக்கு அவளைப் பற்றிய வர்த்தமானம் எல்லாம் கூடிய மட்டும் வாயைப் பிடுங்கி விசாரித்து வைத்துக் கொண்டேன்.

அவளும் புதுச்சேரியில் தான் குடித்தனம் வைத்திருக்கிறாளாம். கைம்பெண்டு. புருஷன் இப்படி பிரஞ்சு பட்டிணத்தில் இருந்தும் மதராஸ் ராஜதானியில் இருந்தும் தக்க நபர்களை பிரஞ்சு தீவுகளுக்கு அனுப்புகிற ஏஜெண்டு வேலை பார்த்தவன். அவனுக்குக் கூடமாட ஒத்தாசையாக இருந்து, நாலைந்து வருஷம் முன்னால் அவன் காலம் முடிந்து போய்ச் சேர்ந்ததும் இவளே ஏஜெண்டு ஆகிவிட்டாளாம்.

பட்டணத்தில் பிரதி மாசம் பத்து நாள் இருந்தால் புதுச்சேரியில் மீதி தினம் என்று கணக்கு வைத்துக் கொண்டு ரெண்டு இடத்துக்குமாக சதா அலைகிறாளாம்.

இவள் நேரடியாக ஒவ்வொருத்தராகப் பார்த்துப் பேசி சொத்தை சொள்ளை இல்லாதவன் என்று தீர்மானம் செய்ய வேண்டுமாம். அப்படி இவள் பார்வைக்குத் தேறின ஆசாமிகள் அன்றி வேறே யாரையும் உத்தியோகத்துக்காக இங்கேயிருந்து பிரஞ்சு தீவுக்குக் கப்பல் ஏற்ற வேண்டாம் என்று பிரஞ்சு துரைகள் கண்டிப்பாக ஆக்ஞை பிறப்பித்திருக்கிறதால் இந்தக் கருப்பாயி ஆனவள் இங்கே சொன்னபடிக்கு லோல்பட வேண்டி வந்ததாம். தலைக்கு கம்மீஷனாக அவளுக்கு பதினஞ்சு ரூபா தருவதாக ஏற்பாடாம். அந்தக் காசுக்காகத் தான் கைம்பெண்டாட்டியாக இருந்தாலும் முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு வீட்டோடு முடங்காமல் இப்படி சஞ்சாரமும் மற்றதும் எல்லாமாம்.

துட்டு, காசு, தனம், எந்தப் பெயரோ அதைத் தேடிப் போய்ச் சேர்க்க, விருத்தி பண்ண லோகத்தில் என்ன எல்லாம் செய்ய வேண்டியிருக்கு பார்த்தியோடீ லலிதாம்பிகே?

நம்முடைய மதராஸ் பட்டிணம் இங்கிலீஷ்கார ராஜதானி ஆனபடியாலே வேறே தேசங்களுக்கு இப்படி அடிமை உத்தியோகம் பார்க்க ஆள் அனுப்புவது அபூர்வம். ஆனால் பிரான்சு தேசத்தின் சமாச்சாரமே வேறே. அதுவும் அவர்களுக்கு அடிமைப்பட்ட பிரதேசங்கள். அங்கே காப்பிரிகள் தான் இத்தனை நாள் எல்லா அடிமைக் காரியமும் பார்த்துக் கொண்டிருந்ததாகப் பிரஸ்தாபம். அவர்கள் இப்போது அதையெல்லாம் அடியோடு நிறுத்தியாச்சு. கையில் கொஞ்சம் காசு சேர்ந்திருந்த காரணத்தால் குச்சுவீடோ மச்சுவீடோ கிரயத்துக்கு வாங்கி அங்கேயே குடியும் குடித்தனமுமாக இருக்கார்களாம்.

எனவே அடிமை வேலைக்கு நம் தேசத்தில் இருந்து மனுஷர்கள் போகவேண்டி வந்ததாம். அங்கே போன முகூர்த்தம் அந்தக் காப்பிரிகள் போல் நமக்கும் கையில் நாலு காசு வந்து சேராதா என்ற நப்பாசை என்னையும் சேர்த்து எல்லோருக்கும் இருந்ததால் இப்படி அவனவன் ஏழு சமுத்திரம் தாண்டி யாத்திரை வைத்துக் கொண்டிருக்கிறான்.

வண்டி நகரத் தொடங்கி மாட வீதி வந்து சேர்ந்தோம். கற்பகாம்பாள் சந்நிதி வாசலில் ஒரு நிமிஷம் நிறுத்தச் சொல்லி அவசரமாக தரிசனம் செய்து கொண்டேன். அப்படியே பக்கத்தில் ராயன் கடையில் நாலைந்து மெதுவடையும் அப்பமும் அரையணா கொடுத்து வாங்கி வைத்துக் கொண்டேன். விடிகாலையில் ஐயங்கார் பையன் எலுமிச்சங்காய் சாதம் பிசைகிறேன் பேர்வழி என்று இருட்டில் வெங்கலப் பானைக்குள்ளே வந்து விழுந்த என்னத்தை எல்லாம் கொட்டிக் கலந்து பிருஷ்டம் அலம்பின கையால் கட்டிக் கொடுத்தானோ. அது உச்சந்தலைக்கு உஷ்ணம் ஏறும் நடு மத்தியானத்தில் சாப்பிட லாயக்கில்லாமல் கெட்டுப் போனால் லேசம் பசியாற ராயன் கடை வஸ்து பிரயோஜனமாகுமே.

வண்டி அப்புறம் கடந்து போன பாதை கிட்டத்தட்ட எனக்கு சொப்பனத்தில் எல்லாம் தப்பாமல் வந்து இன்னும் இம்சை பண்ணுகிற அதே வழிதான். கொஞ்சம் வடமேற்காகத் திரும்பினால் திருக்குழுக்குன்றம். எனக்கு ஜென்ம சாபம் வந்து சேரவைத்த ஸ்தலம். ஊரைச் சொல்லி குரோதம் பாராட்டுவானேன்? கோமணத்தை இறுக்க முடிந்து கொண்டு பரஸ்த்ரி நினைப்பு இல்லாமல் கழுகு தரிசனம் முடித்து இறங்கி இருந்தால் இந்நேரம் இதை எல்லாம் எழுத வேண்டி வந்திருக்காது தான். விதி யாரை விட்டதடி என் பிராணசகி சதா சுமங்கலி லலிதாம்பிகை அம்மாளே.

மகாபலிபுரத்துக்குப் பக்கம் சேற்றுக் குட்டையை இன்னொரு தடவை கடக்க வேண்டி வந்தது. ஏழு வருஷம் முன்னால் பார்த்ததை விட திராபையாக ஆகியிருந்தது அந்த இடம். அப்போ வண்டிக்காரனுக்கு ஒத்தாசையாக பன்னிக் கூட்டத்துக்கு நடுவே வண்டியைத் தள்ளிப்போக தேகத்தில் தெம்பு இருந்தது. இப்போ அது குறைந்து அசதியும் மனசு ஓரத்தில் ஒரு அவமானமும் தான் பாக்கி இருக்கிறது. மற்றதைத் தொலைத்தது போல் உன்னையும் தொலைத்து விடுவேனா என்று ஒரு கிலியும் சதா ஆட்டுகிறது. போதாக் குறைக்கு அந்த ப்ரேத பிராமணன் வேறே ஏதோ தஸ்தாவேஜைக் கொண்டா, ஸ்தாலிச் செம்பை கோர்ட் கச்சேரி சுவரேறிக் குதித்து எடுத்து வா என்று விடாமல் நச்சரிக்கிறான். கஷ்டம் தான் போ.

நாங்கள் மரக்காணம் போகிறதுக்குள் நல்ல வெய்யில் வந்து விட்டது. போன விசை ராத்தங்கி இருந்த அதே பொட்டலுக்குப் போய்ச் சேர்ந்தோம். தகித்துக் கிடக்கிற உஷ்ண காலமானதால் அங்கே மரத்தடியில் உட்கார்ந்து பூவரச இலை பொட்டலத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு அவனவன் சம்பிரதாயமாக சாப்பிட ஆரம்பித்தான். எனக்கோ அந்த இடமே வள்ளிக்கிழங்கு வாடையும் தெலுங்கு தேசப் பெண்பிள்ளை வாசனையுமாக மருட்டிக் கொண்டே இருந்ததால் தொண்டையில் சோறு செல்லவில்லை. ராயன்கடை வடையை ஒரு மாதிரி மென்னு முழுங்கி ஒரு சிராங்காய் தீர்த்தம் குடித்து பசியாறினதாகப் பெயர் பண்ணினேன்.

குளக்கரையில் இலையை எறிந்து விட்டுக் கை கழுவி வரப் போனபோது அந்தப் பெண்பிள்ளை நினைப்பில் ஒரு ராத்திரி முழுக்க மனசில் சித்தம் செய்து வைத்திருந்த சிருங்கார வெண்பாவும் தரவு கொச்சகக் கலிப்பாவும் ஒண்ணாவது மனசில் வருகிறதா என்று பிரயத்தனம் செய்து பார்த்தும் கழுக்குன்றம் புராண விஷயமாக யாத்த பாதி வெண்பா தான் நினைவுக்கு வந்தது. உனக்கு நல்ல காலம் பிறந்தாச்சுடா வரதராஜ ரெட்டி என்று மாதுஸ்ரீ கருப்பாயி அம்மாள் தாம்பூலத்தை என் மேல் உமிழ்ந்து கொண்டு சொன்னதுபோல் ப்ரமை.

அவிழ்த்துப் போட்ட வண்டிகளைத் திரும்பக் கட்டிக் கொண்டு கிளம்பியானது. பகல் மூணு மணி சுமாருக்கு போகிற வழியில் அவற்றை யாரோ தடுத்து நிறுத்தினார்கள். என்ன சமாசாரம் என்று வண்டிக்குள் இருந்து இறங்கிப் பார்க்க எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. இந்த ஆஜானுபாகு மனுஷன் அன்றைக்கு என்னை பிடித்து போலீசு கச்சேரியில் ஒப்படைத்த கோவில் தர்மகர்த்தா முதலி இல்லையோ?

பகவானே, இவன் கண்ணிலே நான் பட்டு கொஞ்ச நஞ்சம் திரும்பத் துளிர்க்கிறதும் ஓய்ந்தொழிந்து பட்டுப் போய் விடுமோ? மனசில் உண்டான பயம் காரணமாக அவனைப் பார்க்காமல் கண்ணைக் கவிந்து கொண்டு ஒரு ஓரமாக நின்றேன்.

எங்கே ஓய் கோஷ்டியாகப் புறப்பட்டீர்? திருத்தணிக்கோ?

அந்த தர்மகார்த்தா கேட்டது காதில் விழுந்தது. யாரும் பதில் சொல்லாமல் இருக்கவே நான் சங்கடமாக நிமிர்ந்து நோக்க அவன் என்னைத் தான் குறிப்பாகப் பார்த்தான்.

ஜருகண்டியா? ஓய் மொட்டை மண்டை. உம்மைத்தான். வாயிலே என்ன லட்டுவா?

அவன் என்னைக் கேட்கக் கேட்க எனக்கு கட்டுக்கடங்காமல் சந்தோஷமாகப் போனது. இழவெடுத்த முதலிக்கு என்னை அடையாளம் தெரியாதது நல்லதாகப் போச்சு. ஊர்ப் பெரிய மனுஷன் என்பதற்காக வருகிற போகிற வண்டிகளை நிறுத்தி வைத்து ரெண்டு வார்த்தை விசாரணை பண்ணி விட்டுப் போகட்டும். ஊர் கெட்டுக் கிடக்கிறது. அவனவன் பெண்பித்து பிடித்து கழுகு காட்டுகிறேன், கரடி காட்டுகிறேன் என்று சின்ன வயசுக் குட்டிகளை குன்றத்துக்கு மேலே கூட்டிப் போய் மாரைத் தடவிக் கொண்டிருக்கிறான்கள்.

அவனெல்லாம் சர்வ நாசமாகப் போகிறவன். நான் க்ஷேமப் பட்டது தெய்வாதீனம். இன்னொரு தடவை நீச புத்தி மனசில் வந்து புகுந்தால் நரகம் தான்.

நேனு வரதராஜ ரெட்டி.

நான் தெலுங்கில் பதில் சொல்ல தர்மகர்த்தா முதலி திரும்ப கேள்வி கேட்டான்.

அரவம் மாட்லாடுமா?

ஜாஸ்தி லேது. கொஞ்சம் கொஞ்சம்.

அது எதேஷ்டம். ஏனய்யா, இப்படி மாடுகள் சித்தரவதை அனுபவிக்கிற படிக்கு ஒரு வண்டிக்கு அஞ்சாறு பேர் அடைஞ்சு போகிறீர்களே. அந்த வாயில்லாப் பிராணிகள் சாபம் கொடுத்தால் நீர் உத்தேசித்துப் போகிறது பங்கமாகி விடுமே.

முதலி வத்தலும் தொத்தலுமாக நாக்குத் தள்ளி மூச்சு வாங்கிக் கொண்டிருந்த வண்டி மாடுகளைக் காட்டியபடி சொன்னான். கூட நின்ற அவனுடைய ஆட்கள் அது நியாயந்தான் என்கிறதாக முகத்தை வைத்துக் கொண்டு கையில் குண்டாந்தடியோடு முழித்துப் பார்த்தார்கள். பிறக்கும்போதே அதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்து விழுவார்கள் போல இருக்கு.

இன்னும் ரெண்டு வண்டி பண்ணிக் கொண்டு போனால் மெச்சப்பட்டதாக இருக்காதோ. இல்லை, வண்டிக்கு ரெண்டு பேர் இடம் ஒழித்து இறங்கி வண்டியோடு கூடவே நடந்து வந்தாலும் பாதகமில்லை. இதுகள் சம்பந்தப்பட்ட பாவம் வராது ஒழியும்.

விளக்கெண்ணெய் முதலி யோசனை சொன்னதை உடனடியாக நடப்பாக்கிப் போட்டோம். ரெண்டு வண்டியில் இருந்தும் ரெண்டு ரெண்டு தடியன்களை இறங்கி நடந்து வரச் சொல்லியானது. நானும் சித்தெ காலாற நடக்கிறேன் என்றபோது வண்டிக்காரன் என்னை வண்டியிலேயே உட்காரச் சொன்னான். நடக்கிற யாருக்காவது கால் வலித்தால் அவனை உட்கார வைத்து அப்புறம் கொஞ்ச நாழிகை நான் நடக்கலாம் என்று தீர்மானம் செய்து கொண்டு அதேபடி கிளம்பிப் போனோம்.

வண்டி இருபது அடி போயிருக்காது. அந்த முதலி பின்னால் இருந்து என்னைக் கூப்பிட்டது ஸ்பஷ்டமாகக் கேட்டது.

ஓய் மகாலிங்க அய்யர். மொட்டை அடிச்சா உம்மை அடையாளம் தெரியாது போய்விடுமா என்ன?

அவன் அபஸ்வரமாகச் சிரித்தான்.

எனக்கு அது அஸ்தியில் ஜூரம் வரவழைத்தது.

என்னைத் தவிர வேறே யாரும் அதைக் கேட்கவில்லை என்ற தோதில் இருந்தார்கள்.

தயவு செய்து போகவிடுமய்யா. நீர் என்ன சொன்னாலும் கேட்கிறேன்.

வண்டியை நிறுத்தி விட்டு ஓடிப் போய் இவனுக்கு முன்னால் முட்டிக்கால் போட்டு நிற்கலாமா என்று யோசனை. இவன் கட்டியிருக்கிற வேட்டியை உருவி மடித்து வைத்து விட்டு, இவனுடைய அரைக்கட்டில் வாயை வைத்து உறிஞ்சச் சொன்னால் கூட செய்து விட்டுப் போகலாம். பாதகமில்லை.

இவன் நினைத்தால் திரும்பவும் என்னை காராக்ருஹத்தில் அடைத்துப் போடக் கூடியவன். இவனுடைய வண்டிப் படி ஏறும் இடத்தில் பழைய சிவப்புச் சுருணை சகலமானவரின் கால் தூசு துப்பட்டையோடு கிடந்ததைப் பார்த்தேன். முன்னைக்கிப்போது இவன் ரெட்டை நாடி சரீரமாகி தொந்தி சரிந்ததால் ஏகத்துக்கு இறங்கிக் கிடந்தது இடுப்பு வேட்டி. அதோடு கூட அந்த கால்மாட்டுத் துணியும் சேர்ந்து என்னை வாவா என்று கூப்பிட்டது.

ஓய், அந்த ஸ்தாலி செம்பு விவகாரம் ஞாபகம் இருக்கட்டும். பிரஞ்சு கயானா, மொரீஷியஸ் என்றபடிக்கு பிரயாணம் வைத்தாலும் யார் மூலமாவது பிரயத்னம் செய்வதை நிறுத்த வேணாம். என்ன புரிஞ்சுதா? சொல்லுமய்யா.

தர்மகர்த்தா நின்ற இடத்தில் மலையாளத்து ப்ரேத பிராமணன் நின்று கொண்டு விசாரித்தான்.

நான் வெறுமனே பார்த்தபடிக்கு வண்டியோடு நகர்ந்தேன்.

உம்ம வாயில் ஏதாவது அடச்சிருக்கா?

அவன் கேட்டபோது உருவம் திரும்ப மாறி தர்மகர்த்தா முதலி ஆகிவிட்டான்.

இதை வேணுமானா அடச்சுக்கோ என்று இடுப்புக்குக் கீழே அவன் கையைக் காட்டியபடிக்கு சுகமாக அங்கே சொரிந்து கொள்ள ஆரம்பித்தான்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts