ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -3

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



Fig. 1
Civil War Scene -1

“முன்னொரு முறை நான் சொல்லியதை மீண்டும் வலியுறுத்துகிறேன். ‘நான் எடுத்துக் காட்டிய பல்வேறு முறைகளில் எந்த விதத்திலும் அடிமைத்தன ஏற்பாடுகள் தவறான தென்று கருதாத ஒருவன் நம்மிடையே இருப்பானாகில் அவன் அமெரிக்க மண்ணில் தடம் வைக்கத் தகுதியற்றவன். அவன் நம்மோடு சேர்ந்து வாழக் கூடாது. அடிமைத்தன ஏற்பாடுகள் நம்மிடையே இருப்பதைப் புறக்கணிப்பவன், அதைத் திருப்தியான முறையில் அரசியல் ஆட்சி நியதி நெறிப்படி நீக்குவதில் உள்ள சிரமத்தைப் புரிந்து கொள்ளாதவன் நமது அரங்கில் இருப்பானாகில் அவன் நமது அமெரிக்கத் மண்ணில் தடம் வைக்கத் தகுதியில்லாதவன்.”

ஆப்ரஹாம் லிங்கன் (ஸ்டீ·பென் டக்லஸ் தர்க்கப் பதிலுரை) (அக்டோபர் 15, 1858)

“அடிமைத்தன ஒழிப்பைத் தவறாகக் கருதும் மனப்போக்கு பரவி வரும் இந்தச் சமயத்தில், நான் சொல்கிறேன் : இதுவரை இந்த அடிமைத்தனக் கொடுமை போல் வேறு ஏதாவது நமது அமெரிக்க ஐக்கியத்தைச் சீர்குலைக்கப் பயமுறுத்தி யுள்ளதா ? நாம் பற்றிக் கொண்டுள்ள முக்கியமான இதய இச்சை என்ன ? நமது உரிமைச் சுதந்திரம் ! எதிர்கால வாழ்வு வளம் ! அந்த இரண்டையும் பயமுறுத்தி வருவது அடிமைத்தன வைப்பு என்பது தவிர வேறில்லை என்று உங்களுக்குத் தெரிகிறதா ?

ஆப்ரஹாம் லிங்கன் (ஸ்டீ·பென் டக்லஸ் தர்க்கப் பதிலுரை) (அக்டோபர் 15, 1858)

நீண்ட காலமாய் நிலையாக எனக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்து வந்துள்ளன. ஒன்று அமெரிக்க ஐக்கியத்தை எப்ப்டியும் பாதுகாப்பது ! அடுத்தது அடிமைத்தனக் கொடுமையை ஒழிப்பது ! ஐக்கியத்தைக் காப்பது எப்படி என்பதில் எனக்குத் தெளிவான சிந்தனை உள்ளது. கசப்பான உள்நாட்டுப் போரில் இரண்டு ஆண்டுக்கும் மேலாய் வேதனை யுற்றாலும் என் மனவொளி (Vision) மங்கிப் போகவில்லை ! அமெரிக்க ஐக்கியத்துக்குப் போரிட்டு இப்போது வெற்றியும் பெற்று வருகிறோம் ! ஆனால் எப்போது எப்படி அடிமை விடுதலை அறிவிப்பை வெளிவிடுவது என்பதில் எனக்கு உறுதியில்லை ! அது சில நாட்களுக்கு முன்பு ! ஆனால் இப்போது தெளிவு பிறந்து விட்டது எனக்கு !

ஆப்ரஹாம் லிங்கன் (செப்டம்பர் 17, 1862)

Fig. 2
Civil War Scene -2

(செப்டம்பர் 17, 1862)

காட்சி -4 பாகம் -3

பங்கெடுப்போர் :

ஆப்ரஹாம் லிங்கன், மாநிலச் செயலாளர் : வில்லியம் ஸீவேர்டு, போர்த்துறைச் செயலாளர் : எட்வின் ஸ்டான்டன் (Edwin Stanton), நிதிப் பொறுப்புச் செயலாளர் : ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase), அஞ்சல் துறை அதிபர் : மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair), கடற்படைச் செயலாளர் : கிடியான் வெல்லெஸ் மற்றும் அரசாங்க உறுப்பினர் காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹ¥க் (Burnet Hook) ஆகியோர்.

இடம் : வாஷிங்டன் D.C. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கூட்டுரையாடல் அறை.

இப்போதைய காட்சி:

உள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. பெரு வெற்றி பெற்ற பிறகு ஜனாதிபதி அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) கறுப்பர் விடுதலை அறிவிப்பைப் பற்றி உரையாட வருகிறார்.. அரசாங்க உறுப்பினருடன் லிங்கன் “அடிமைகள் விடுதலை அறிவிப்பு” வெளியீடு பற்றிப் பேசுகிறார். தர்க்கம் முடிந்து அவர்கள் யாவரும் போன பிறகு பர்னெட் ஹ¥க் மட்டும் தனியே நின்று லிங்கனுடன் வாதாடுகிறார்.

ஆப்ரஹாம் லிங்கன்: நன்றாக நினைவில் உள்ளது ! ஆனால் அது சரியான தருணமில்லை. அதனால்தான் நான் மறுத்தேன் ! போருக்கிடையே என்ன நேரப் போகுதெனத் துடிக்கும் சமயத்திலே விடுதலை அறிவிப்பை வெளியிட எனக்கு விருப்பமில்லை ! கொள்கை ஒன்றைப் பின்பற்றி நிலைநாட்டுவது என் பொறுப்பு. தவறான தருணத்தில் வெளியிட்டு மக்கள் அதைப் புறக்கணிபதற்கு இல்லை ! அப்படிச் செய்வது தேசக் கடமை ஆகாது. நீண்ட காலமாய் நிலையாக எனக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்து வந்துள்ளன. ஒன்று அமெரிக்க ஐக்கியத்தை எப்ப்டியும் பாதுகாப்பது ! அடுத்தது அடிமைத்தனக் கொடுமையை ஒழிப்பது ! ஐக்கியத்தைக் காப்பது எப்படி என்பதில் எனக்குத் தெளிவான சிந்தனை உள்ளது. கசப்பான உள்நாட்டுப் போரில் இரண்டு ஆண்டுக்கும் மேலாய் வேதனை யுற்றாலும் என் மனவொளி (Vision) மங்கிப் போகவில்லை ! அமெரிக்க ஐக்கியத்துக்குப் போரிட்டு இப்போது வெற்றியும் பெற்று வருகிறோம் ! ஆனால் எப்போது எப்படி அடிமை விடுதலை அறிவிப்பை வெளிவிடுவது என்பதில் எனக்கு உறுதியில்லை ! அது சில நாட்களுக்கு முன்பு ! ஆனால் இப்போது தெளிவு பிறந்து விட்டது எனக்கு ! மேரிலாண்டிலிருந்து எதிர்ப்புக் கலகவாதிகள் துரத்தப்பட்ட பின் வெற்றி நம் பக்கம் என்பது உறுதியாகி விட்டது ! அந்த வெற்றிப் புத்தொளியோடு, பலிவாங்கப் பட்ட யூனியன் அடிமை ஒழிப்பையும் உடனே அறிவிக்க வேண்டும் என்று என் ஆத்மா உந்தியது ! அந்த உறுதி மொழியை நான் முன்பு எடுத்துக் கொண்டது எனக்கும் என்னைப் படைத்தவனுக்கும் ! புரட்சிக்காரர் விரட்டப் பட்டதும் நான் அந்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும் ! ஆதலால் உமது தடைமொழியை நான் நிராகரிக்கிறேன் ! உமது தனிப்பட்ட எதிர்ப்புக் கருத்துக்களை மதித்துக் கொண்டு நானிந்த முடிவெடுக்கிறேன். இந்த முடிவுக்கு நீங்கள் யாவரும் உடன்பாடு தெரிவிக்க வேண்டும் என்று நான் மன்றாடிக் கேட்கிறேன்.

Fig. 3
Civil War Scene -3

பர்னெட் ஹ¥க்: (சட்டென) இது ஆவேச அறிவிப்பாகத் தெரியுது எனக்கு. சிந்தித்து வெளியிடும் அறிவிப்பாய்த் தோன்ற வில்லை எனக்கு.

லிங்கன்: (தொடர்ந்து) மற்றுமொரு கருத்தைச் சொல்கிறேன். இந்தப் பிரச்சனையில் மற்றவர் என்னை விடச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றெனக்குத் தெரியும். ஆனால் அரசியல் நியதிப்படி என்னை உடன்பட வைத்துப் பொதுமக்கள் ஆதரவையும் பெற்று என் ஆசனத்திலிருந்து அமர்ந்து கொண்டு அவர் செய்ய வேண்டும் ! மகிழ்ச்சியோடு நான் அவருக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஆனால் இப்போது என் ஆசனத்தில் அமர்ந்து அதைச் செய்வோர் யாரு மிருப்பதாகத் தெரிய வில்லை. தேர்ந்தெடுத்த முடிவைச் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டியது என் கடமை ! அதை நான் செய்தே தீர வேண்டும்.

ஸ்டான்டன்: சிந்தித்து முடிவு செய்ய சில நாட்கள் தாமதப் படுத்துவீரா மிஸ்டர் பிரசிடெண்ட் ?

சேஸ்: இப்போது அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றுவது மட்டுமே நமது முதற் கடமை !

பர்னெட் ஹ¥க்: அதில் முற்றிலும் எனக்கு உடன்பாடு !

லிங்கன்: சீமான்களே ! வரலாற்றிலிருந்து நாம் தப்பிக்க ஓட முடியாது. நமக்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் நம்மை யாரும் மறக்கப் போவதில்லை ! தனிப்பட்டோருக்குப் பொதுநபர் மதிப்பளிக்க மாட்டார். அடிமைகளுக்கு விடுதலையை அறிவிக்கும் போது நாம் விடுபடுவோருக்கு சுதந்திரத்தை உறுதிப் படுத்துகிறோம். ஒன்று நாம் நேர்மையோடு அடிமைகளைக் காப்பாற்றுவோம் அல்லது வேதனையோடு நாம் இறுதியில் இழந்து போவோம் !

(லிங்கன் எழுந்து நின்று அடிமைகள் விடுதலை அறிவிப்பு வெளியீட்டுத் தாளை மேஜை மீது வைத்துக் கையொப்பமிட்டு “ஜனாதிபதி முத்திரை” இட்டு ஒரு பெருமூச்சு விடுகிறார்.)

“அடிமைகள் யாவரும் இந்த விடுதலை அறிவிப்புக்குப் பிறகு என்றும் சுதந்திர மனிதர்.” சீமான்களே உங்கள் யாவரது உடன்பாடுகளை நான் வரவேற்கிறேன். எதிர்பார்க்கிறேன்.

(எல்லா அரசாங்க அதிகாரிகளும் எழுந்து நிற்கிறார். ஸீவேர்டு, வெல்லெஸ், பிளேர் மூவரும் லிங்கனுக்குப் புன்முறுவலுடன் கைகுலுக்கி வெளியேறுகிறார். ஸ்டான்டன், சேஸ் லிங்கனுக்குத் தலைவணங்கிப் பின்பற்றிச் செல்கிறார். பர்னெட் ஹ¥க் ஒன்றும் செய்யாமல் நேர்நோக்கி விரைகிறார்)

Fig. 4
Civil War Scene -4

லிங்கன்: மிஸ்டர் ஹ¥க் ! சற்று நில்லுங்கள் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் !

பர்னெட் ஹ¥க்: (போனவர் திரும்பி நின்று) சொல்லுங்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் !

(எல்லாரும் போன பிறகு லிங்கன் பேசுகிறார்.)

லிங்கன்: உட்காருங்கள் மிஸ்டர் ஹ¥க் ! நமது உரையாடல் இன்னும் முடியவில்லை !

(ஹ¥க் நாற்காலியில் உட்காருகிறார்)

லிங்கன்: ஒருவர் உடன்பாடில்லாத ஒன்றைச் சொல்லிய பிறகு அதை மீண்டும் கூற வேண்டும் என்று வற்புறுத்துவது அவரை அவமானப்படுத்தத்தான் என்று நான் நினைக்கிறேன். அது பலன் அளிக்கும். ஆனால் அத்தனை எளிதாக என்னை யாரும் அவமானப் படுத்த முடியாது. எனக்கு இங்கு எதிர்ப்புக்கள் இருப்பது தெரியும் !

பர்னெட் ஹ¥க்: என்ன ? உங்களுக்கு எதிர்ப்பா ? எங்கே அமெரிக்க நாட்டிலேயா ?

லிங்கன்: இல்லை ! அரசாங்க உறுப்பினருக்குள்ளே !

பர்னெட் ஹ¥க்: எதிர்ப்பென்று நான் கருத வில்லை ! அதைக் குறைகூறல் என்று சொல்வேன் !

லிங்கன்: எதற்காகக் குறை கூறுகிறார் ? என் வழிகளைத் திருத்தவா ? அல்லது என்னை அடுத்து வராதபடிக் கவிழ்த்தவா ?

பர்னெட் ஹ¥க்: சரியாகச் சொன்னீர்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் ! அதுதான் !

லிங்கன்: முதலில் நீவீர் ஏன் அப்படிச் சொல்ல வில்லை என்னிடம் ?

பர்னெட் ஹ¥க்: மறைமுகமாகக் கூறினோம் !

லிங்கன்: என் ஆசனத்தில் அமர்ந்து நீவீர் சிந்திக்க வேண்டும் !

பர்னெட் ஹ¥க்: அறிவிலோ திறமையிலோ நான் உங்களை மிஞ்ச முடியாது மிஸ்டர் பிரசிடெண்ட் ! ஆனால் குறை கூறுவோன் உங்களுக்குச் சமமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது !

லிங்கன்: நான் சொல்வது அதுவல்ல ! என் பொறுப்பைச் சுமந்து கொண்டு நீவீர் சிந்திக்க வேண்டும் என்பது என் ஆலோசனை !

பர்னெட் ஹ¥க்: நான் அந்தப் பொறுப்புக்குப் போட்டியிடத் தகுதியற்றவன் மிஸ்டர் பிரசிடெண்ட் !


Fig. 5
Civil War Scene -5

லிங்கன்: அப்படியானால் அறிவில்லாமல், திறமையில்லாமல், பொறுப்பில்லாமல்தான் நீவீர் என்னுடன் இதுவரைத் தர்க்கமிட்டு வந்தீரா ?

பர்னெட் ஹ¥க்: (கோபத்துடன்) பொறுப்பில்லாதவன் என்று என்னை அவமானப் படுத்துகிறீர் மிஸ்டர் பிரசிடெண்ட் !

லிங்கன்: உமது தர்க்கப் போக்கு அதைத்தான் எனக்குக் காட்டுகிறது !

பர்னெட் ஹ¥க்: (மனமுடைந்து) அப்படியானல் நான் பதவியை விட்டு விலகிக் கொள்கிறேன் ! நன்றி உங்கள் ஆலோசனைக்கு ! நான் போகிறேன் !

(பர்னெட் ஹ¥க் ஆவேசமாய் எழுந்து கொண்டு விரைந்து போகிறார்)

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play :

Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition
The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)

1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html

2. Chambers Encyclopedia (1968 Edition)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Wordsworth Dictionary of Quotations (1997)

8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961)

9. Lincoln The Unknown By Dale Carnegie (1959)

10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter (1958).

11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)

12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)

13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)

14. The American Civil War – A History By : Mark Saunders (1993)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 4, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts