நீர்வளையத்தின் நீள் பயணம்-1

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

த.அரவிந்தன்



வெந்நீராய்க் கலங்கின மாடஷின் கண்கள். முறையாகக் கலங்கியது குளம் என்று சொல்வதுதான் சரி. சதுரக் கரைகளுக்குள் அதன் இருப்பிற்காக அலையும் குளம், உடலுக்குள் பாய்ந்து அமிழ்ந்து அலைகிறது என்பது அவருக்குள் வெட்டிக்கொண்டது.

முன்பெல்லாம் குளத்தில் குளிக்க இறங்குகையில் சூடாய்க் கரையும் உச்சிச்சூரியன் மீது படித்துறையில் பாசி வழுக்கித் தடுமாறியது போன்று வருத்தம் எழுந்ததுண்டு. குளத்தின் ஆவியை வாங்குது என்று முனகியதாகவும் ஞாபகம்.

மாடசாமி மூழ்குவான். மேற்மட்ட மஞ்சள் வெந்நீர் வெளியைக் கண்கள் திறந்து பார்ப்பான். இன்னும் அமிழ்வான். அடியாழ இருள்நீர் வெளி சூழும். மணற்தரை காலைத் தட்டும். ஆழ் நீரின் குளிர் அவன் முதுகை அழுத்திவிடும். அப்படியே மூச்சடக்கி இருபது காலடித் தூரத்துக்கு அடியாழத்திலேயே நீந்துவான். கொழகொழவென்று களிமண் சேறு காலில் கையில் படத்தொடங்கும். மூச்சு முட்டை மேலெழும்பும் வேகத்தில் உடனே மேலே வருவான். திருகாணியோடு மூக்குத்தியும் விழுந்ததுபோல எங்கோ கழன்று விழுந்திருக்கும் வருத்தம்.

வெந்நீரைக் கட்டுப்படுத்துவதற்கு மாடஷ் எடுத்த ஆயத்தங்கள் அனைத்தும் தண்டு அறுந்து மிதக்கும் தாமரை இலைபோல பயன் இல்லாமலே போயின. ஏறுவெயிலாய் ஏறிக்கொண்டே இருக்கிறது அவர் உடற்குளத்தின் வெப்பம். அடியாழத்தையும் குமிழ்களின் மேல் குமிழ்களாய்க் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள் அவரின் பேத்திகள்.

மூத்த பேத்தி ஜாய்ஃபுல் அவள் கல்லூரித் தோழி ஸீ பேர்ட்டிடம் அலைப்பேசியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். முடித்ததும் சத்தம்போட்டு தரை அதிரக் குதித்து, இளைய பேத்தி ப்ளு ஸ்கையையும் தாத்தா மாடஷையும் கணினி அறைக்குத் தொந்தரவால் இழுத்து வந்தாள். இரு பக்கத்திலும் அவர்களை உட்கார வைத்து கணினியை இயக்கி இணையத்தில் கூகுளுக்குள் நுழைந்தாள். தேடல் கட்டத்தில் www.wikimapia.org என்ற முகவரியைப் பதித்து நுழைவு பொத்தானை அழுத்தினாள். நீலம், பச்சை, வெள்ளை நிறங்களில் உலக வரைபடம் வந்தது.

“கடைகளில் வாங்கும் காகித வரைபடம் போல் இல்லை இது. பூமி உருண்டையில் எதையும் மிச்சம் வைக்காமல் காட்டும். மிரளாமல் பாருங்க.” என்று சத்தத்தால் ஜாய் சிரித்தாள் . ப்ளு ஸ்கை சிறகோசை எழுப்பினாள். மாடஷ் உள்ளத்துள் எழுந்த சிரிப்பு உதட்டுக்கரையில் மெலிதாய் மோதித் திரும்பியது. அந்தத் தளத்திலொரு தேடல் கட்டம் இருந்தது. அதில் “இங்கிலாந்து ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையம்’ என்று பதித்தாள். சிவப்பு நிறத்தில் ஒரு சக்கரம் சுழன்று முடிந்து, வரைபடத்தின் கிழக்கோரப் பகுதியில் ஒரு வெள்ளைத்திரையின் மேல் இங்கிலாந்தின் சில இடங்கள் கி.மீட்டர் விவரங்களுடன் வந்தன. அதில் ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையம் என்றும் இருந்தது. அதை அழுத்தி வரைபடத்தைப் பெரிதாக்கினாள். மேல் கோணத்தில் ரயில் நிலையம் தெரிந்தது. அதன் மேலும் கட்டம் கட்டி பெயர் குறிக்கப்பட்டிருந்தது. கொய்யாக்காயின் மீது தன் கால்களை வைத்து ஓர் எலி நகர்த்திக் கொண்டுபோவதுபோல எலி விசையைப் பயன்படுத்தத் துவங்கினாள் ஜாய். ‘லண்டன் ஐ’ இராட்சத இராட்டினத்தின் உச்சிப்பெட்டியிலிருந்து கீழே பார்ப்பதுபோல மிரட்சியின் கிச்சுக்கிச்சு மூட்டலில் இருந்தன மூவரின் வயிறுகள்.

நிலையத்துக்கு வெளியில் வந்தாள். அகலமான ஈஸ்ட் ஹாம் கடைவீதியில் திரும்பினாள். வீதித் தொடக்கத்திலேயே சாம்பார் மணம் மூக்கின் நரைமுடிகளைக் கடந்து மாடஷுக்குள் காற்றாய் நுழையத் தொடங்கியது. கட்டடப் பிரம்மாண்டங்களின் மேல் நகர்ந்துகொண்டே வந்தாள். பொம்மைப்பெண் கும்பிட்டு வரவேற்கும் ஈழத் தமிழர் துணிக் கடை வந்தது. சுரிதார் எடுத்துப்போட்ட அடலரசுவின் ஓரப்பார்வையைத் திருடி வந்ததை நினைத்து சிரிப்பை முழுங்கிக் கொண்டாள் ப்ளு ஸ்கை. நகைக் கடை, மளிகைக்கடை, சில அடுக்கக வீடுகளைத் தாண்டிப் போனார்கள். தெருவிலிருந்து விலகி நிற்கிற மகாலட்சுமி அம்மன் கோயில் வந்தது. “தொலைந்துபோன என் செருப்பு கிடைக்குமா தாத்தா?” என்று கோயில் வாசல் பக்கம் சிரித்தபடியே ஜாய்ஃபுல் போய்…போய் வந்தாள். ஒலிப்பேழை கடை, புத்தகக் கடை, சரவணபவன் ஓட்டல், சென்னை தோசா ஓட்டல், லண்டன் அலுவலர்களுக்கு மதிய உணவு அளிக்கும் விடுதிகளைக் கடந்ததும் இராட்டினப் பெட்டி கீழிறங்கியதுபோல பெரும் சந்தோஷச் சத்தம் எழுப்பினார்கள் பேத்திகள். “இதுக்குள்ள…இதுக்குள்ளதான் நாம இருக்கோம்” என்று ஸ்கை கத்தினாள். மென்மையாய் மெய்சிலிர்த்துக்கொண்டு “அப்படியே நம்ம அடுக்ககம்.” என்று மாடஷ் உற்றுப் பார்த்துச் சொல்லிக்கொண்டார். மாயசால நிமிடங்கள் ‘வீட்டிற்குள் உட்கார்ந்திருக்கோமா? இணைய வீட்டிற்குள் உட்கார்ந்திருக்கிறோமா?’ என்கிற மயங்கிய பொழுதாய் இருந்தது.

வீட்டின் மேல் எலி விசை மூலம் ஒரு பெரிய கட்டம் கட்டி, அப்பா “டேங்க்’, அம்மா “மல்லிகா’ பெயர்களுடன் அவர்கள் மூவர் பெயரையும் ஜாய் குறித்தாள். அந்த வீதியிலேயே கடைசியாய்ப் பெயர் குறிக்கிறோம் என்பதில் அவளுக்கு மிகப்பெரிய வருத்தம்.

‘கொஞ்சக் காலத்திற்குள் உயிர்கள் உட்பட அசையும் சொத்துக்களையும் காட்டத் தொடங்கிவிடுவார்கள். வீட்டிற்குள்ளும் இயல்பாய் இருக்கமுடியாது. ஒவ்வொருவரின் அந்தரங்கம் என்னாகும்?’ ஸ்கை யோசித்து முடிப்பதற்குள், ‘இங்கிலாந்து தேம்ஸ்’ என்று தேடல் கட்டத்தில் ஜாய் பதித்து நதிக்கு வந்தாள்.

எம்பாங்க்மென்ட் படித்துறையிலிருந்து புறப்பட்ட படகில் ஓடிவந்து கடைசியாய்த் தொத்துவதுபோல சேர்ந்துகொண்டாள் ஸ்கை. நதி போக்கில் ஜாய் போனாள். ஆடைகள் நனைந்ததுபோன்று சிலீரிட்டது. வழக்கப் பழக்கத்தில் பிக்பென் கடிகாரம் பார்த்தார்கள். கிழிப்பட்ட நீர்ப்பாதையில் வேகம் கூடியது. கரையிலிருந்த நாடாளுமன்றக் கட்டடம், லண்டன் ஐ இராட்சத இராட்டினம், நீள மூக்கு தூண் எல்லாம் பின்னால் கரைந்தோடின. செயின்ட் பால் தேவாலயம் அருகே வந்ததும் நதி மேலேயே மூவரும் நின்றனர். அங்கு படகு ஒன்று தனித்துக் கிடந்தது. அதன் மேல் கட்டம் கட்டி, ‘ஜாய்ஃபுல்’ என்று குறித்தாள். தன்னுடைய பெயரையும் அதில் சேர்க்கச் சொல்லி ஸ்கை சண்டை போட்டாள். அதில் கவனம் கொள்ளாமல் மாடஷ் அவருக்குள் ஊறிய ஆசையின் ஊற்றுக்கண்களில் தொய்ந்தார்.

‘பொன்வாசநல்லூர் சின்னக் குளமும் இதுபோல் தெரியுமா? அதன் படித்துறை தெரியுமா? சத்தமான மூச்சுக் காற்றில் விலகுகிற அலைகளுடன் பசுக்கள் தண்ணீர் குடிப்பது தெரியுமா? மையக் குளத்தில் மாடஷ் என்று குறிக்க வேண்டும். வேண்டாம். மாடசாமி என்றே… ஒரு காலத்தில் அந்தக் குளத்தில் குளிக்கிறபோதே உயிர் போகவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்…’

வேறொரு படகில் பெயர் வைக்கிற சமாதான உடன்படலோடு ஜாய் நதி நகர்த்திப்போனாள். டவர் பாலம் அருகில் எச்.எம்.எஸ்.பெல்ஃபாஸ்ட் என்ற இரண்டாம் உலகப் போர்க் கப்பல் அதன் முதுமையைக் கழித்துக் கொண்டிருந்தது. அந்தக் கப்பலுக்குள் சுற்றிப் பார்க்க அப்பாவோடு நுழைந்த போது முன்னால் போனவரின் கால் தட்டி விழுந்த நினைவில் ஜாய் விழுந்தாள். அந்தக் கப்பலிலாவது தன்னுடைய பெயரைக் குறிக்குமாறு ஸ்கை எலிவிசையைப் பிடுங்கப் போனாள். ‘போர்க் கப்பலில் வேண்டாம். வேறு எதிலாவது வைக்கிறேன்’ என்று நதியை விட்டு தனித்து டவர் பாலத்திலேறி ஜாய் போகத் தொடங்கினாள்.

“சின்னக்குளம்” } சிறிதாய்த் தலை தூக்கி நீந்திப் போகிற தண்ணீர் பாம்புபோல மெல்ல தன் விருப்பத்தைத் தெரிவித்தார் மாடஷ்.
“பொறு தாத்தா. பக்கிங்ஹாம் அரண்மனையைப் பார்த்துட்டு வர்றோம்”
“குளம்”
“கோவண்ட் தோட்டம் போறோம்”
“….”
“பிக்கடில் போய் பர்லிங்டன் ஆர்க்கேட்டில் சிற்பம் வாங்கப் போறேன்”
“குளம்”
“பிரான்ஸ் ஈபிள் டவர் மேல ஏறணும்”
நண்டு வளை பெரிதாகி கசிவு அதிகமானது. இருக்கையை மாடஷ் பின்னால் எடுத்துப் போட்டுக்கொண்டார். துண்டால் கசிவைக் கட்டுப்படுத்தினார். கால்களை இறக்கி, தொப்பை முன் தள்ள இருக்கையில் சரிந்துகொண்டு கண்களை மூடினார். உள்ளுக்குள் நீந்தியபடியே மாடசாமி பேசத் தொடங்கினான்.

‘சொல்லிக்கொள்ளாமல் சூரியன் திரும்பிக்கொண்டிருக்கிறது.கடைசி ஈரமாயிருந்த தாத்தாவையும் சுடுகாட்டில் வைத்து எரித்துவிட்டு வந்தவர்கள் ஒவ்வொருவராய் மஞ்சள் மணம் வரும் சின்னக் குளத்தில் இறங்குகிறார்கள். படித்துறை வலப்பக்க சறுக்குச்சுவரில் ஏறி வேகமாய் ஓடிவந்து தொபுக்கடீரெனப் பல்டி அடித்து மூழ்குகிறான் ஐந்தாம் வகுப்பு கருப்பன். நாலாப்பக்கமும் தண்ணீர் தெறித்து சத்தம் எழுந்து நிசப்த்தமாகிறது. மூழ்கியவன் அதே இடத்தில் இருப்பதற்கான குறியீட்டு நீர்வளையம் எதுவும் அங்கு தெரியவில்லை. சலனமற்ற ஐந்து நிமிடங்கள் முடிவுக்கு வந்து நடுக்குளத்தில் எழுந்து “மாடசாமி’ என்று கத்துகிறான் கருப்பன். இரண்டாம் வகுப்புக்குரிய உடலைக் கடைசிப்படியில் குப்புறக் கிடத்திக்கொண்டு கால்களைத் தண்ணீரில் நீட்டித் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறேன். கத்தியழைத்த நேரம் மீன் ஒன்று கால் சிரங்கில் கடிக்கிறது. வலி பொறுக்காமல் பதறி உடலோடு விழுந்து மூழ்கி தண்ணீர் குடித்து மூச்சடைத்து தத்தளிக்கிறேன். இறுதி மூச்சு மூழ்கப்போகிற சமயம் தலையின் கொத்து முடி பிடியில் பிழைத்துக்கொள்கிறேன். முடி பிடியின் சொந்தக்காரர் யாரென்று பல வருடங்களாய் யோசித்துப் பார்த்துவிட்டேன். இந்த எண்பதிலா வரப்போகிறது. இப்போது உயிரோடு இருப்பானா கருப்பன்?’

“ஓ…ஓ…ஓ…. தாத்தா இங்க பாரு. சுவிட்சர்லாந்து சுவிஸ் பேங்க். இதுல பணம் கிணம் போட்டு வைச்சுட்டு சொல்லாமக் கொள்ளாமச் செத்துப் போயிடப் போற… ” பின்னால் திரும்பி மாடஷை உலுக்கிச் சிரித்தாள் ஜாய். தவளைக் குஞ்சுகளைப் பிடித்துவிட்டு கெண்டைக் குஞ்சுகளைப் பிடித்ததாய்த் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் குழந்தைகளைப் போன்று சிரிக்க வைத்துவிட்டதாய்ப் பேத்திகள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மாடஷ் உதடுகளை விரித்தார். பேத்திகளுக்கு அவர் சிரித்தாரா என்பதைக்கூட பார்க்க முடியாத உலக அவசரம்.

‘மொட்டப்புள்ள, மாக்கான், விடிஞ்சான் சனியன், நான். நான்கு பேரும் சேர்ந்து தாமரை பறிக்க வலப்பக்கக் கரையில் நடந்தோம்.வயலுக்குத் தண்ணீர் பாய்கிற வடிகுழாய்க்கு அருகில் நெருங்கினோம். “அங்க பாரு… வானம்’ என்று நீர்க்குமிழ்களைக் காட்டி ‘ஒண்ணு…. ரெண்டு … மூணு’ என்று எண்ணினான் மாக்கான். “உடையாத வானத்தை யாரு அதிகமா எண்ணுறாங்களோ… அவுங்கதான் ஜெயிச்சவங்க… ஆனா நான் எண்ணுற பக்கம் எண்ணக்கூடாது. அந்தப் பக்கம் எண்ணுங்க…’ என்று வேறு சொன்னான். “என்ன விளையாட்டு இது. யாரு கண்டுபிடிச்ச விளையாட்டு. விதியெல்லாம் யார் வகுத்தது’ என்று கேட்பதற்குள் மொட்டப்புள்ள வேறு பக்க வானங்களை எண்ணுகிறான். விடிஞ்சான் சனியன் சுற்றிச்சுற்றிப் பார்த்தான். கருவை மரத்துக்கு அடியில் ஒரு சவுக்காரம் கிடந்தது. சவுக்காரங்கிற வார்த்தையை எவ்வளவு நாளைக்குப் பிறகு நினைக்கிறேன். அதை எடுத்து தண்ணீரில் கரைச்சான். ஏகப்பட்ட வானங்கள். ‘என்னுடையதை யாராவது எண்ணினால் அவ்வளவுதான் …’ என்று மிரட்டினான். எனக்குப் பயங்கரக் கோபம். வானத்தைப் பிரதிபலிக்கும் நீர்க்குமிழ்களைத்தான் எண்ணுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே எனக்கு அதிகம் நேரமாகிவிட்டது. என்ன செய்வது என்று யோசித்தேன்… என்ன செய்தேன் தெரியுமா? ஆ…ஆ…ஆ…ஆ…’

“எப்ப சொன்ன ஜோக்குக்கு எப்ப சிரிக்கிறாரு பாரு தாத்தா… ஜிஸô பிரமிடு எப்படித் தெரியுது பாரேன்… ”

‘ ‘சொய்ங்’ன்னு இப்படியும் அப்படியுமா மூணு பேரோட குமிழ்கள் மேலயும் சிறுநீர் விட்டு, “ஒரு வானம், இரண்டு வானம்’ என்று எண்ணத் தொடங்கினேன். கோபம் பொத்துக்கிட்டு மூணுபேரும் துரத்துகிறார்கள். ‘அவுனுங்க’ என்று சொல்வதா? அவர்கள் என்று சொல்வதா? களிமண் காய்ந்து சின்னச்சின்னக் கட்டிகளாக கிடக்கிற கரையில் வேகமாக ஓடமுடியாது. அப்படியும் ஓடுறேன். சரிவோரப் பகுதியில் கால் வைத்திருப்பேன்போல். சறுக்கிவிட்டது. குளத்தில் விழுவதற்குள் ஓரத்தில் இருந்த தென்னம்பிள்ளையைப் பிடித்து மேலே வந்தேன். கால் முட்டி தோல், கை முட்டி தோல் தேய்ந்து இரத்தம் கசியுது. மூணு பேரும் பயந்துவிட்டார்கள். “சின்ன வாத்தியார்ட்ட சொல்லிடாதடா’ என்று கெஞ்சுகிறார்கள். நான் சொல்லமுடியுமா? சிறுநீர் விட்டதற்கு என்னைத்தான் வாத்தியார் அடிப்பார் என்று தெரியும். அதை அவன்களிடம் சொல்லவில்லை. செத்துக்கல் விளையாட வாங்க என்று அழைத்தேன். எப்போதும் கால்சட்டைப் பையில் மெலிதான சல்லி ஓடுகளைத் தயாராய் வைத்திருப்பேன். அங்க இங்க ஓடி மட்டி, ஓடு எடுத்து வந்தார்கள். மாக்கான் மட்டும் வரவில்லை. ஆடு ஓட்டப்போகணும் என்று போய்விட்டான். கீழே விழுவதுபோல சாய்ந்துகொண்டு மட்டியை வீசினான் மொட்டப்புள்ள. காத்து பலமாக இருந்தது. குளத்திலேயே விழவில்லை. விடாது சிரித்தோம். ஓட்டை எடுத்து ஓரளவு சாய்ந்து நின்று வீசினான் சனியன். மீன் கொத்த வந்த குருவியின் கால் பட்டு போவதுபோல செத்துக்கல் ஒன்று, இரண்டு, மூன்று இடங்களில் பட்டுப்போனது. ராஜாதி ராஜ, ராஜக் கம்பீர, ராஜக்குல திலக, ராஜ மார்த்தாண்ட, ராஜக் குலோத்துங்க, ராஜப் பராக்கிரம, தண்ணீர் பிரதேச மகாராஜா பராக்..பராக் பாவனையோடு வந்து எறிகிறேன். ‘டொடங்..டொடங்…டொடங்..டொடங்… நாலு’. மொட்டப்புள்ள ஓட ஆரம்பித்துவிட்டான். பிடித்துவந்து பாதி தூரம் அவனையும், பாதி தூரம் சனியனையும் உப்புமூட்டை தூக்க வைத்தேன். தூக்க முடியாமல் கீழே போட்டுவிட்டு சமாளிப்பதற்காக வறுத்து ஊறவைத்த புளியங்கொட்டையைக் கால்சட்டை பையில் இருந்து எடுத்துச் சாப்பிடக் கொடுத்தான். எவ்வளவு புளியங்கொட்டை சாப்பிட்டிருக்கேன்? இதுவரை ‘டொடங்’- ஐந்து வரை விட்டிருக்கேன். திரும்பத் திரும்ப ‘டொடங்…டொடங்’ என்று சொல்லவேண்டும் போல் ஆசையாய் இருக்கிறது. ஆறாவது ‘டொடங்’ விட்டால் எப்படி இருக்கும்? ஓடெடுத்துச் சும்மா இப்படி விடணும்?’

“ம்கும்.. எழுந்திருக்கவே மாட்டேன்… தள்ளாத தாத்தா… ஆல்ப்ஸ் மலைத் தொடர்ச்சி மேல நடக்கப் போறோம்…”

இருக்கையை இன்னும் பின்னால் எடுத்துப் போட்டுக்கொண்டார் மாடஷ். கதை கேட்க இறால்கூட்டமும் வந்துவிடட்டும் என்பதுபோல சிறிது நேரம் மாடசாமி அமிழ்ந்து கிடந்தான்.

Series Navigation

author

த.அரவிந்தன்

த.அரவிந்தன்

Similar Posts