இரா.முருகன்
வெங்கடேச அக்ரஹாரத்தில் நான் நுழைந்தபோது கெட்டித் துணி குப்பாயமும் அரையில் சாயவேட்டியும் உடுத்திய ஒரு குப்பன் நால்சந்தியில் விளக்கு ஏற்ற லாந்தரோடு வந்து கொண்டிருந்தான். எனக்கு அவனைத் தெரியும். தீபாவளிக்கும் தைப்பொங்கலுக்கும் இனாம் கேட்டு வாசலில் நின்று நச்சரித்து கால் ரூபாயும் அரை ரூபாயுமாகக் கொடுத்திருக்கிறதை அவனும் மறந்திருக்க மாட்டான்.
வீட்டுப் படி ஏறுகிற நேரத்தில் இவன் கண்ணில் பட்டு வைக்க வேணாமே என்று இருட்டு அப்பியிருந்த தெருமுனையில் ஒரு க்ஷணம் நின்றேன். சாமி எங்கே போயிருந்தீங்க இம்மா நாளு என்று கேட்பான். சாமி என்ன வேண்டியிருக்கு. இவனுக்கும் ஊரில் மற்ற குப்பன் சுப்பனுக்கும் எல்லாம் நான் போன இடமும் போக இருந்து மயிரிழையில் தப்பிப் பிழைத்த சங்கதியும் தெரிந்திருக்க இடமுண்டு. எகத்தாளமாக இல்லையோ கேட்பான் – யோவ் அய்யரே, மாமியா வூட்டுலே ஜாமானுக்கு வெள்ளிப்பூண் போட்டு மருவாதி பண்ணினாங்களா? அல்லாக்காட்டி பின்னஞ் சந்துலே லாடம் கட்டி அனுப்பிட்டானா?
காசு திருடி, பொய் பித்தலாட்டம் பண்ணி கம்பி எண்ணி விட்டு வந்தாலே இங்கே கிடைக்கிற மரியாதை சொல்லும் தரமில்லாததாச்சே. நான் பண்ணினதுக்கு அங்கே லாடம் கட்டி அடிக்காவிட்டாலும் இவன்கள் கையில் கிடைத்தால் குப்புறத் தொங்க விட்டு அரைக்குக் கீழே கரகரவென வெட்டி எடுத்து வாயில் திணித்து அனுப்பி விடுவான்களே. ஊர் கெட்டுக் கிடக்குடி பொண்ணே. ரொம்பவே.
லாந்தரும் சீமெண்ணெய் வாடையும் தூக்கலாக வர விளக்கு வைக்கிறவன் நடந்து போன பிற்பாடு நான் தோள் துண்டைக் குளிருக்குப் போர்த்திக் கொள்கிறதுபோல் தலையைச் சுத்தி முக்காடு போட்டுக் கொண்டு, இடுப்பு வேட்டியையும் தார் பாய்ச்சித் தெலுங்கன் போல் கட்டியபடிக்குத் தெருவில் இறங்கி நடக்கலானேன்.
ரெண்டு வீடு கடந்ததும் வீட்டுத் திண்ணையில் இருமல் சத்தம் கேட்டது. பெருமாள் கோவில் பட்டாச்சாரியான் வீடுன்னா இது. இருமித் துப்பிக் கொண்டு அவனுடைய சீக்காளித் தகப்பனார் அய்யங்கார் இன்னும்தான் மூச்சுவிட்டுக் கொண்டிருக்காரா? பிரம்புத் தட்டியைத் தூக்கிப் பார்த்துவிட்டு, தொண்டையிலே ஊறி உளுத்துப் போயிருக்கும் கோழையை எனக்கு முன்னால் துப்பிவிட்டு இந்தக் கிழமும் யோகஷேமம் விசாரிக்கும். ஷேமம் என்ன? நாசமாப் போனீரா ஓய்?
பிரப்பந் தட்டியைக் காணோம் அந்தத் திண்ணையில். வாசலில் இருமிக் கொண்டிருந்தது பட்டாச்சாரியான் தான். அவன் தகப்பனார் வைகுண்ட பிராப்தி அடைஞ்ச விவரம் சாவகாசமாக உன்னிடம் தானடி லலிதேம்பிகே விசாரிக்கணும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னும் ஊர்க்கதை, தெரு வம்பு எத்தனையோ பாக்கி இருக்கும். வருஷக் கணக்காகப் பெண்டாட்டியைப் பிரிந்து இருந்துவிட்டு வருகிறவனுக்குப் பேச வேண்டிய உதவாக்கரை விஷயம் எத்தனை கிடக்கு பார்.
அந்த மனுஷன் இருமி இளைத்துப் போவதிலேயே குறியாக இருக்க நான் நாலடி எட்டடி நகர்ந்தபோது வாசலில் தேக்கு மர பெஞ்சியைப் போட்டு நாலு பேர் சட்டமாகக் குந்தியிருப்பது தெரிந்தது. இந்த ஆசாமிகள் இருட்டில் இருந்ததபடியால் தெருமுனையில் கண்ணில் படாமல் போனார்கள். பட்டிருந்தால் நான் பக்கத்துக் குறுக்குச் சந்து வழியாக இவர்களையும் லகுவாகத் தாண்டி வந்திருப்பேன். நேரே போகாமல் குறுக்கும் நெடுக்கும் பாச்சை மாதிரி ஊற எனக்குப் படிந்து வந்துதான் வெகு காலமாச்சே. பொடிக்கடையில் மாசச் சம்பளத்துக்கு இருந்த கவுரதை என்ன, இப்போ முக்காடும், குற்றேவல்கார வேஷமுமாக என் வீட்டுப் படியேற நானே ஒளிந்து மறைந்து போகிற கஷ்டம் என்ன? எனக்கு பாத்தியதை இல்லாத ஸ்தனத்தையும் பிருஷ்டத்தையும் யோனியையும் இச்சித்து தெருநாய் போல் முகர்ந்தபடி பின்னால் போகாமல் இருந்தால் இந்த கதி வந்திருக்குமா?
சரி வந்தது வந்தாகி விட்டது. இனிமேல் கொண்டு திரும்பிப் போக சரிப்படாது. நடக்க வேண்டியதுதான். அவர்களைத் தாண்டிப் போனபோது அத்தர் ஜவ்வாது வாடை தூக்கலாக வந்தது. வெங்கடேச அக்ரஹாரத்தில் இந்தப்படிக்கு யாரோ?
யாரய்யா அது? எங்கே போய்ட்டு இருக்கே?
அதிகாரமாக எனக்குப் பின்னால் இருந்து குரல் தடுத்து நிறுத்தியது. வீட்டுக்குப் போய்ட்டு இருக்கேன் என்று சொல்லலாமா? இந்த வீட்டில் யார் இருந்தது? தபால் கச்சேரி உத்யோகஸ்தரா? அவர் அடுத்த தெருவாசி ஆச்சே. ஆஸ்பத்திரி டிரஸ்ஸர் குடும்பம் இருந்த இடமா இது? அவர் நம்மாத்துக்கு நேர் எதிர் வீடு இல்லையோ? இது வெகு காலம் வியாஜ்யத்தில் இருந்ததால் கோர்ட்டு கச்சேரி அமீனாவோ வக்கீலோ அரக்குக் காய்ச்சி சீல் வைத்து பூட்டியிருந்த வீடு அல்லவா? வழக்கு தீர்ப்பாகிக் குடிவந்தவர்களாக இருக்கும். ஜெயித்த மனுஷனுக்கு உள்ள தோரணை வாக்கில் வந்து விழுகிறது. பதில் சொல்லணும்.
இவன் என்னைத் தெரிந்தவன் இல்லாத பட்சத்தில் என் பாப மூட்டையை இவனுக்கு என்னத்துக்குத் திறந்து காட்டணும்? வரதராஜ ரெட்டியை இவனுக்குத் தெரியாது. தெரியப்படுத்த நேரம் இதுதான்.
பிழைப்புத் தேடி வந்தவன் சாமி. தெலுங்கு தேசத்தான். இங்கே ஒரு உபகாரி மனுஷரோட விலாசம் கொடுத்துப் பார்க்கச் சொல்லி தர்மகர்த்தா அனுப்பி வச்சார். பட்டணத்திலே எல்லா வீதியும் ஒரே மாதிரி இருக்கா. ஒண்ணும் புரியமாட்டேங்குது.
நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டு தெலுங்கில் சொன்னேன்.
யாரைத் தேடிப் போறீர், பேரைச் சொல்லும்.
அவன் தட்டுத் தடுமாறித் தெலுங்கில் கேட்டான். சரி, இந்த மட்டில் நாம் ஜெயித்தாகி விட்டது. மேற்கொண்டு நடக்கிறதைப் பார்க்கலாம்.
பெயர் கேட்கிறானே. என்ன பெயரைச் சொல்ல? வேறே யாராவது ஒரு ரெட்டி, ராவ், நாயுடு பெயராக மனசில் வந்து தொலைய மாட்டேன் என்கிறது.
யாரைப் பார்க்கப் போறீர்னு கேட்டேன்.
அவன் பொறுமையின்றிச் சொல்ல, நான் சட்டென்று மகாலிங்கய்யரைப் பார்க்கணும் என்றேன்.
எந்த மகாலிங்கய்யர்?
டவுணிலே மூக்குத்தூள், புகையிலை கடை. மொத்தமாவும் சில்லறையாகவும் விக்கறதாம். இங்கே போய்ப் பாருடா தெலுங்கான்னு அடுத்த தெருவிலே சொல்லி அனுப்பிச்சாங்க. அக்ரகாரம்னா இதானா சாமி?
மர பெஞ்சி மனுஷர்கள் கண நேரம் மௌனமாக இருந்தார்கள். இவர்களில் யாருக்கும் மகாலிங்கய்யனைத் தெரிந்திருக்காது.
ஏண்டா அம்பி, தெற்குலே தோ அங்கே ரெட்டைத் திண்ணை வீடு, ராமகிருஷ்ண ஸ்ரௌதிகள் ஆத்துக்குப் பக்கத்துலே. கங்காணி ஆபீசோ என்னமோ இருக்கே அதான்னு கேளு.
அதில் ஒருத்தன் என்னை குசலம் விசாரித்த மனுஷனிடம் தணிந்த குரலில் சொன்னான்.
அதே வீடு தான். எனக்குத் தெரியும்
இந்த எழவெடுத்தவனுக்கும் எப்படித் தெரிந்தது?
இருட்டில் எங்கேயோ வெளிச்சம் அசைந்து ஆடினது. திரும்பிப் பார்த்தேன். அஞ்சு விளக்கு ஏற்றிவிட்டு லாந்தரோடு வருகிறான் அநதக் குப்பன். அவன் கையில் பிடித்திருந்த ஜோதியில் மரபெஞ்சியில் குந்தியிருந்த நாலு பேரையும் பார்த்தேன். என்னத்தைச் சொல்லி எழவைக் கூட்ட? எல்லா முகமும் ஒரே சாயலில் தட்டுப்பட்டது. சாட்சாத் மலையாளத்து பிராமணன் மூஞ்சி அது.
ஒற்றை மனுஷக் கூட்டம். என்னைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. வாயைப் பிடுங்குவதிலேயே குறியாக இருந்தான் நாலாக வந்த அந்த ஒத்தை பிராமணன். ஸ்தாலி செம்புக்கு அடிபோட்டு கூடவே வருகிறான். என்ன செய்வேன் தெய்வமே. கோர்ட் கச்சேரிக்கெல்லாம் போய் அலமாரிக்குப் பின்னால் செம்பையும் மற்றதையும் தேட எனக்கு திராணியும் இல்லை. ஆள்படை அந்தஸ்தும் இல்லை என்பதை இந்த பிரேத ரூபத்துக்கு எங்ஙனம் புரிய வைக்கப் போகிறேன்? இது எப்போது என்னை விட்டு ஒழிந்து போகுமோ தெரியலியே.
கங்காணி ஆபீஸா? அங்கே விளக்கு வைச்ச பிற்பாடு யாரும் இருக்க மாட்டாளே.
எனக்கு கங்காணி ஆபீஸ் எல்லாம் போக வேண்டாம் சாமிகளே. மகாலிங்கய்யன் இருக்கப்பட்ட இடம் தெரிந்தால் சொல்லுங்க. இல்லே, நானே தேடிப் போய்க் கொள்கிறேன். இப்படி அவர்களிடம் கொஞ்சம் கறாராகச் சொன்னேன்.
பொழைப்புத் தேடி வந்துட்டு இந்த வீராப்பு வெத்து வார்த்தைக்கு மட்டும் குறைச்சல் இல்லே. உமக்கு ஒத்தாசை செய்யலாமேன்னு கேட்டேன். மத்தபடிக்கு நீர் மகாலிங்கய்யரைப் பார்க்க வந்தீரா மதில் சாடி கன்னக்கோல் போட்டுக் களவாடிப் போக வந்தீரான்னு தெரிஞ்சு எங்களுக்கு என்ன ஆகப் போறது? சாவடி போலீசுக்காரன் பாரா கொடுக்க வருவான். கட்டி இழுத்துண்டு போய் லாடம் கட்டுவான். வெள்ளிப்பூண் போட்டு விடுவான். பரம சுகமா இருக்குமாண்டா குப்பா.
நான் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். ஏன் என்னை இப்படிப் பின் தொடர்ந்து வதைக்கிறீர் என்று கோபத்தோடு விசாரிக்க நினைத்தேன். லாந்தரைத் தூக்கிக் கொண்டு ஆடி ஆடி போனவனோடு வெளிச்சமும் தொலைந்து போக, இருட்டில் அந்த முகங்கள் ஒண்ணுக்கு ஒண்ணு வித்யாசமாக இருந்தன. வேறே வேறே மனுஷர்கள். இவர்களில் யாரும் என் காலை பிரம்மஹத்தி போல சுற்றி வருகிற மலையாளத்தான் இல்லை. என் பார்வை ரொம்பவே பழுதாகி விட்டது போ.
மன்னிக்க வேணும். காலையில் இருந்து அலைச்சல். க்ஷீணம் வேறே. அதான் கொஞ்சம் பட்டென பதில் சொல்லிட்டேன். சாமிகள் சிரமப்பட வேணாம். இன்னும் பத்து இருபது அடி நடந்தால் தெரு முடிந்து அடுத்த வீதி வந்துவிடும். இங்கே இல்லாமல் போனால் அந்த அய்யர் சாமி பக்கத்திலேதான் வேறே எங்கேயாச்சும் இருப்பார்.
வேறே எங்கே? ஓசைப்படாம கப்பல் ஏறி கரும்புத் தோட்டத்துக்குப் போய்ச் சேர்ந்திருப்பார். புதுசா ஓலை மேஞ்ச குடிசைக்குள்ளே குந்தி உக்காந்துண்டிருப்பார். ஆத்துக்காரிக்கு மாஞ்சு மாஞ்சு லிகிதம் எழுதிண்டு இருப்பார். இந்த நிமிஷத்திலே நடந்த வரைக்கும் எல்லாத்தையும் விலாவாரியாச் சொல்லுவார் அதிலே. ஆத்துக்காரி இல்லாத வீட்டுலே வாசல் திண்ணையிலே காலை நீட்டிப் படுத்து ஒரு ராத்திரி தூங்கட்டுமே. பேஷாக.
அவர்கள் கூட்டமாகச் சிரிக்கும் சத்தம். பெஞ்சி காலியாகக் கிடந்தது.
நான் நம்ம வீட்டை அடைந்தபோது எதிரகத்தில் சுவர் கடியாரம் சத்தமாக மணியடிக்கிற ஓசை. ஒன்பது எண்ணினேன். நீ தூங்கி இருப்பாய். அத்தனை நேரத்துக்கு அப்புறம் தனியாக இருக்கப்பட்ட ஸ்திரி கண் முழித்திருப்பது பிராணாவஸ்தை என்று எனக்குத் தெரியும்.
இருக்கிறாயா இல்லே அந்த யாசகர் கூட்டத்தில் கலந்து?
மனசே, பிசாசே. செத்தெ சும்மாக் கிட. மலையாளத்தான் சொன்னானே கங்காணி வீடு என்று. அவன் எங்கே சொன்னான்? நானாக இல்லையா எல்லாம் மனசில் பிரமை ஏற்படுத்திக் கொண்டு நடுங்கி நடுங்கி நகர்ந்து வந்தேன்.
பின்னால் திரும்பி ருஜுப் படுத்திக் கொள்ள இன்னொரு தடவை பார்த்தேன். பெஞ்சியும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை.
நம் வீட்டுப் படி ஏறும்போது தான் வாசலில் திண்ணை கடந்து ஒரு கம்பிக் கதவு முளைத்திருப்பதும் உள்ளே இருந்து அது பூட்டியிருப்பதும் தெரிந்தது. பாதுகாப்பாக இருக்க வேண்டும். மதில் சாடி வந்து கன்னக்கோல் போட தார்பாய்ச்சி வேட்டி கட்டிக் கொண்டு தலையில் முக்காடு போட்டுக் கொண்டு ஊரில் ஏகப்பட்ட பேர் திரிகிறார்கள்.
பூட்டைத் திறவேண்டி பெண்ணே. நான் தான், உன் அகம்படையான் வந்திருக்கேன். இனிமேல் எந்தப் பூட்டும் திறப்பும் வேணாம். இந்த வீடும் தெருவும் ஊரும் கூட வேணாம். பொழுது விடியும்போது கிளம்பி வேறே எங்காவது ஒரேயடியாகப் போய்விடலாம். வண்டி கிடைத்தால் வண்டி. கப்பலானல் கப்பல்.
நான் பூட்டைக் கதவில் நகர்த்தி மெல்லத் தட்ட உள்ளே இருந்து தீபத்தை எடுத்துக் கொண்டு வந்தது நீயாக இருக்கும் என்று நினைத்தேன்.
யார்? யார் வேணும்?
இந்துஸ்தானியில் விசாரிக்கிற சத்தம். சப்த நாடியும் தளர்ந்து போனது எனக்கு. ஆகக் கூடி நீ இல்லாத வீடு. நான் தேடியும் ஓடியும் வந்தது எல்லாம் ஒரே நிமிஷத்தில் வியர்த்தமாகிப் போனது.
நீ எனக்குக் கை நழுவிப் போன திரவியம்.
ஓரமாக ஒதுங்கி நின்று விம்ம ஆரம்பித்தேன். அது அழுகையில் முடியும்போது தீபத்தோடு வந்த விருத்தன் திரும்பிப் போய்க் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அவனுக்குக் காது சரியாகக் கேட்காதிருக்கலாம். அல்லது நான் அழுத சத்தம் மனசில் மட்டுமாகக் கரைந்து வெளியே ஒரு இழைகூட பிரிந்து நழுவாமல் இருக்கலாம். என் துக்கத்தைச் சொல்லியழக் கூட திராணி இன்றிப் போனேனடி கண்ணே.
இருட்டு மண்டிய திண்ணையில் இருந்து கம்பி அழி வழியாக நம் வீட்டைப் பார்த்தேன். சின்னதாக இருந்தாலும் பார்த்துப் பார்த்துக் கட்டிக் குடிபோன பிரியமான வாச ஸ்தலம் ஆச்சே. வாசமும் இல்லை. ஸ்தலமும் இல்லை. நீயும்தான்.
இருட்டில் உள்ளே ஒண்ணும் தெரியவில்லை. திண்ணை கடந்து சின்ன ரேழி. நான் ராத்திரி உட்கார்ந்து முதலிக்கு வேண்டி சிருங்கார விருத்தம் எழுதிக் கொண்டிருக்கும் இடம். காடா விளக்கை சுவர் ஓரமாக வைத்து வைத்து அங்கே உன் வயிற்றுச் சுழியிலிருந்து கிளம்பும் ரோமரேகை மாதிரி ஒரு கருப்புக் கோடு சுவர் நெடுக நீளமாக விரிந்திருக்கும். ரேழியைத் தாண்டி உள்ளே கூடம். கட்டைப் பலகையை வைத்தபடி பகலில் நீ நித்திரை போகிற இடம். நாம் எப்போதாவது ரமிக்கிறதும் அங்கேதான். அமாவாசைக்கு துடைத்து மெழுகி தர்ப்பையும் எள்ளும் இரைபட என் பூஜ்ய மாதா பிதா பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்கிற ஸ்வாமி மூலையும் அதுக்கு அப்புறம் தான். ஸ்வாமி மூலையில் மரக் கதவு ரெண்டு சின்னதாகச் சார்த்தி உள்ளே வெங்கலத்தில் கிருஷ்ண விக்ரகம், ராம பட்டாபிஷேகப் படம், கங்கா ஜலம், வீபுதிச் சம்புடம் எல்லாம் கிரமமாக வைத்திருப்பாய். அதையும் தாண்டிப் போனால் இடுக்கில் மாட்டிக் கொண்ட மாதிரி இத்தனூண்டு சமையல்கட்டு. வாழைக்காயையும் பாகற்காயையும் இலைக் கட்டையும் வைக்க அலமாரி. கோட்டை அடுப்பு. இட்டலிப் பானை. தோசை மாவு கரைத்து வைத்த கல்சட்டி. ஊறுகாய் ஜாடி. அஸ்கா ஜீனி போத்தல். பின்னால் நடந்தால் கிணற்றடி. பிருஷ்டையாக நீ தனித்து சுருணை விரித்து உறங்கின இடம். அங்கே உன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டு திருக்கழுக்குன்றம் போனேன். அந்தக் கன்யகை கண்ணில் பட்டாள். ரெட்டிப் பெண்ணின் ஸ்தன பாரம் என்னைத் தூக்குக் கயிற்றில் ஏற்றி விட்டது. அவளை சுகித்திருந்தால் இன்னேரம் பரலோகம் போய்ச் சேர்ந்திருப்பேன். இந்தக் கஷ்டம் எல்லாம் இருந்திருக்காது. தப்பு இல்லையா? அடி போடி பெண்ணே. ஒரு நிமிஷமாவது லகரியின் உச்சத்துக்குப் போயிருப்பேனே. நீ தான் தூரத்துக்கு ஒதுங்கி உள்ளே கிணற்றடியில் கிடக்கிறாயே? செருப்புக் காலோடு ஒரு விருத்தன் ஸ்வாமி வைத்த மூலை இருக்கு என்று கூடக் கருதாமல் வீடு நெடுக செருப்பு போட்டுக்கொண்டு கையில் தீபத்தோடு நடந்து போகிறான். அப்படி என்ன கிணற்றடியில் உறக்கம்? வந்து வாசல் கதவைத் திறடி பெண்ணே. கச்சை எல்லாம் அவிழ்க்க மாட்டேன். என் காலுக்கு நடுவிலே கொத்திப் புண்ணாக்க கழுகுச் சனியன் வந்துசேரும். நான் பாட்டுக்கு ஒரு ஓரமாகப் படுத்து நித்திரை போகிறேன். நீ மயில் எண்ணை வாடை லவலேசமும் படாமல் மூக்கில் முந்தானையைப் இழுத்துக் கொண்டு தூங்கு.
எழுந்திரு. ஏண்டி லலிதாம்பிகே. உன்னைத்தான். எழுந்திரு.
நான் திண்ணையில் உட்கார்ந்து உள்ளே இருட்டில் வெறித்தபடி தலையைச் சாய்த்தேன். கண்ணை மறைத்துக் கழுகு றெக்கை உயர சிறகுகளின் சத்தத்தில் உறங்கியும் போனேன். கழுகுகளும் மலையாள பிராமணனும் ஒரே முகமும் உடம்புமாக என்னை எங்கேயோ எடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். அலையடிக்கிற கடல். அதைக் கடந்து உள்ளே உள்ளே போக அமைதியான சமுத்திரம். உப்புக் காற்று நாலு பக்கமும் மேலும் கீழுமாகச் சூழ்ந்து கொண்டது.
(தொடரும்)
- 2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தைக் கருமைச் சக்தி பிழைத்திடச் செய்யுமா அல்லது பிளந்திடச் செய்யுமா ?
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -3 பாகம் -1
- எமனுடன் சண்டையிட்ட பால்காரி!
- அகப்பாடல்களில் புறச் செய்திகள்
- ‘வண்ணநிலவனி’ன் கடல்புரத்தில் ஒரு பார்வை
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்:39. ராஜாஜி.
- கதிரையின் நுனியில் எறும்பு
- வேத வனம் விருட்சம் 20
- புத்தகம்
- ஆசை
- கேள்விகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -20 << காம வெறி ! >>
- தாகூரின் கீதங்கள் – 65 ஒளிக்கதிராய்ப் பரவுகிறாய் !
- சென்ரியு கவிதைகள்
- பொய்
- மரணச் சமாதியின் குருவி
- உயிர் ஊறும் ஒற்றைச் சொல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திநாலு
- ஈரம்
- அந்த இரவை போல்