இரா.முருகன்
நான் வரதராஜ ரெட்டி. மகாலிங்கய்யன் போன நிமிஷத்தோடு கைலாச ப்ராப்தி அடைந்தான். அவன் கௌரவமாக ஜீவித்துக் கிடக்க இந்தப் பூலோகத்தில் இனி எந்த மார்க்கமும் இல்லை. ஸ்திரியை மானபங்கப் படுத்திக் கொன்றதாகக் குற்றம் சாட்டி காராக்ருஹத்தில் தூக்கு தண்டனை எதிர்பார்த்து இத்தனை வருஷம் பூட்டி வைத்து வெளியே விடப்பட்டவனாக்கும் அவன். பொணம் தூக்குகிற வேலைக்குக் கூட அந்த பிரம்மஹத்தியைக் கூப்பிட மாட்டார்கள். பிராமணப் பொணமாக இருந்தால் தானே அது. நான் இப்போ ரெட்டி.
என் ப்ரியமான லலிதாம்பிகே, பேரையும் அடையாளத்தையும் மாற்றி வைத்துக்கொள்ள நிச்சயம் செய்துகொண்டதும் எனக்குள் கொஞ்சம் தெம்பு வந்தது. மாற்றி வைத்துக் கொண்டு சென்னைப் பட்டணத்திலேயே ஒண்டிக் கொண்டு கீரைக்கட்டு விற்று, குற்றேவல் செய்து ஏன் கஷ்டப்பட வேணும்? உலகத்தில் இதைத் தவிர பிழைக்க வேறே இடமே இல்லையா என்ன? பாஷையும் தமிழ், தெலுங்கு என்று ஒன்றுக்கு ரெண்டாகத் தெரியும். கொஞ்சம் போல் இங்கிலீஷும் அர்த்தமாகும். வாய் வார்த்தை வெகு பேஷாக வரும். கணக்கும் சுமார் ரகம். இதெல்லாம் தான் முதல். கைப்பணமாக இருபத்தஞ்சு ரூபா வேறே.
போகிறது தான் போகிறேன், உன்னையும் கூட்டிக் கொண்டு போய்விட வேண்டியதுதான். கூழோ கஞ்சியோ கபாலீசுவரன் கிருபையில் சம்பா அரிசி சாதமோ இனி உன்னோடு தான் பகிர்ந்து கொள்ளணும். உன்னை இத்தனை நாள் நிர்க்கதியாக நிறுத்திய பாவமே ஏழு தலைமுறைக்குப் போதுமானது இல்லையா. அடுத்த தலைமுறைக்கே வழியில்லாத பிராமணா, எழவெடுத்த ஏழும் எட்டுமாக உமக்கு எங்கே வாய்ச்சது என்கிறாயா? அது என்னடி அப்படிச் சொல்லி விட்டாய்? இன்னும் நாற்பது கூட ஆகவில்லை. உனக்கு என்ன, முப்பது இருக்குமா? கொண்டித்தோப்பு வைத்தியனிடம் மயில் எண்ணெய் கிடைக்கும். வேணாம். கழுகு றெக்கை வாடை. உனக்குப் பிடிக்காது. உனக்கு ரசிக்காத எதையும் நான் இனிமேல் கொண்டு எக்காலத்தும் செய்ய மாட்டேன். நம்பு என்னை.
நான் மைலாப்பூர் வெங்கடேச அக்கிரஹாரத்தை நோக்கி மெல்ல நடந்தபோது மனசில் இதெல்லாம் கோர்வையாக இல்லாமல் வந்து போனது. அது மாத்திரமில்லை. சட்டென்று திருக்கழுக்குன்றம் மலையடிவாரத்தில் வைத்து என்னோடு வர்த்தமானம் சொல்லிக் கொண்டிருந்த மலையாள பிராமணன் நினைவு வேறே ஏன் எதற்கு என்று தெரியாமல் கூடவே ஒட்டிக் கொண்டது.
ரெட்டிக் கன்யகையை மானபங்கப் படுத்திப் படுகொலை புரிந்ததாக என்னைக் கைது செய்து கொண்டு போவதற்கு பத்து இருபது நிமிஷம் முந்தி எங்கிருந்தோ வந்து என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தவன் யார்? ம்காதேவய்யன் என்றோ எதோ பெயர் சொன்னான். எனக்கு ஏதோ தூரத்து பந்து அவன். ஆலப்புழையோ அம்பலப்புழையோ ஊர். சின்ன வயசில் நானும் அங்கெல்லாம் போயிருக்கிறேன்.
அந்த பிராமணன் என் கையில் கொடுத்த தாமிரச் சொம்பு என்ன ஆனது? எத்தனை யோசித்தாலும் நினைவு வரமாட்டேன் என்கிறது. ஒரு வேளை போலீஸ் சிப்பாய்கள் என்னைப் பிடித்துக் கட்டி விலங்கு மாட்டிய களேபரத்தில் அந்த ஸ்தாலி செம்பை கையிலிருந்து நழுவ விட்டு விட்டோனோ. அதில் என்னமோ இருக்கிறதாகச் சொன்னானே மகாதேவய்யன். யாரிடமோ அதைப் பத்திரமாக ஒப்படைக்கவும் கேட்டுக் கொண்டானே அவன். அதை நிறைவேற்ற வேண்டாமா? அந்தப் பாவமும் சேர்ந்து தான் இத்தனை நாள் கஷ்டப்பட வைத்து விட்டதோ?
நான் தெருத் திரும்பி நுழையும்போது முதல் வீட்டு வாசல் திண்ணையில் இருந்து சத்தம் கேட்டது – ஓய் மகாலிங்கம். மகாலிங்கமய்யரே. நில்கணம். கேட்டோ.
திரும்பிப் பார்த்தேன். அந்த மலையாள பிராமணன். சாட்சாத் அவனேதான். நிற்கச் சொல்கிறான். என்னத்துக்கு?
நினைத்த மாத்திரத்தில் பிரத்யட்சப்பட இவன் என்ன பூதமா பிசாசா? அப்படியும் இருக்குமோ. அந்தி சாயும் நேரத்தில் பிசாசு அலையுமா என்ன? அதுவும் வண்டியும், இரைச்சலும், ஜன சந்தடியும் நெரிபடும் பட்டணத்து வீதியில்.
காலை நீட்டித் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். சந்தியா காலத்தில் கைகால் சுத்தி செய்து, மேல் கழுவித் துடைத்து வீபூதி குழைத்துப் பூசி, நூற்றெட்டு காயத்ரி சொல்லி சந்தியாவந்தனம் செய்தவன். ராத்திரி இருட்ட ஆரம்பிக்க வெகு முன்பே ஆகாரம் கழித்துத் திண்ணையில் சிரம பரிகாரமாகக் குந்தி இருக்கிறவன். தாம்பூலம் தரித்தபடி வழியோடு போகிறவன் வருகிறவனை வாயைப் பிடுங்கிப் பொழுது போக்குகிறவன். என் தாயார் வழிப் பாட்டனார் போல் சதா சுகஜீவனம் செய்கிற தோதில் இருந்தது அவன் இருப்பும் பேச்சும்.
சுவாமி, நான் ஆத்துக்குப் போகணும். ரொம்ப நாழிகையாச்சு.
நான் முணுமுணுப்பாகச் சொல்லியபடி தயங்கினாலும் கால் என்னமோ அவன் இருந்த திசைக்கு வெகு சுபாவமாக நகர்ந்து போனது.
என்னய்யா இத்தனை கொல்லம் இல்லாம இப்படிக்கு ஒரு புது ஏற்பாடு. ஆத்துக்கும் குளத்துக்கும் காலிலே றக்கையைக் கட்டிண்டு என்னத்துக்குப் பறக்கணும்? அங்கே மணியடிச்சா சாதம் போடக் காத்துண்டு இருக்காளா என்ன?
அவன் கையைச் சற்றே விரித்துப் பறப்பது போல் அபிநயித்துச் சிரித்தான். அந்தக் கைகள் விரிந்து தாழ்ந்தது கழுகு பறக்கிற மாதிரி இருந்தது ஒரு வினோதம்.
இவனைத் தெரிந்ததுபோல் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று தீர்மானித்தேன். அதில் பல இடைஞ்சலும் வந்து நுழையக்கூடும்.
சுவாமி, நீர் வெளக்கு வைக்கிற நேரத்தில் சரியாகப் பார்க்காமல் என்னை உங்களவர்னு நினைக்கற மாதிரித் தெரியறது. நான் அப்பிராமணன். வரதராஜ ரெட்டி. நெல்லூர்காரன். அரிசி வியாபாரம் பண்றவன்.
ஆத்துக்குப் போயிண்டு இருக்கறதாச் சொன்னீரே ரெட்டிகாரு? அது என்னவோ? அட, ஒரு நிமிஷம் உட்காருமய்யா. அது என்ன பையிலே, மாமியார் வீட்டு சீதனம் பொதிஞ்சு கொடுத்து அனுப்பியிருக்காளா? கட்டுச்சாதக் கூடையும் மத்ததும் பின்னால் வருதோ?
அவன் திரும்ப அடக்க முடியாமல் அட்டகாசமாகச் சிரிக்க, நான் திண்ணைப் பக்கம் போய் பராக்குப் பார்க்கிற தினுசில் நின்றேன்.
லேசுப் பட்டவன் இல்லை இந்த மனுஷன். ஆதியோடந்தமாக என் விருத்தாந்ததம் முழுசும் கரதலபாடமாக ஒப்பிக்கக் கூடியவன் என்று பட்டது. என் ப்ரிய லலிதே, நீயும் நானும் கல்யாணம் ஆன புதுசில் சிருங்காரம் கொண்டாடினதுக்கு எல்லாம் இவன் சாட்சியாக ஒரு மூலையில் உட்கார்ந்தபடி திருப்தியாகப் பார்த்துக் கொண்டிருந்திருப்பானோ என்ன எழவோ. கேட்டால் அதையும் ஒப்பிப்பான்.
பயப்படாதீர். யாத்திரை கிளம்புகிறதும், மனசு கட்டு விட்டுப் போறதும், கச்சு அவிழ்க்கிறதும், கைது ஆகிறதும் இன்னிக்கு நேத்திக்கு சம்பவிக்கிற விஷயமா என்ன? லோகம் சுத்திக் கெறங்க ஆரம்பிச்ச நேரம் முதல் கொண்டு நடக்கற காரியமாச்சே இதெல்லாமே?
இல்லே சுவாமி. நம்புங்கோ என்னை. ரெட்டியோ மகாலிங்க அய்யனோ ஏதாவது எழவெடுத்தவனா நான் இருந்துட்டுப் போறேன். ரெட்டிப் பொண்ணை நான் கொலை செய்யலை. இத்தனை வருஷம் கழிச்சு சர்க்காருக்கும் அது புரிஞ்சு போச்சு.
ஓய் மகாலிங்கம். அதைப் பத்தி நான் கேட்டேனா? என்ன என்ன நடக்கணுமோ அதது விதிச்சபடிக்கு க்ருத்ய சமயத்துலே தன் பாட்டுக்கு நடந்துண்டுதான் போகும். அதுக்கு உம்மைக் குத்தம் சொல்ல, சர்க்காரை, தெய்வத்தை விரோதிச்சு நாலு வார்த்தை பேச எனக்கு என்ன அருகதை இருக்கு சொல்லும். போறது, நான் உம்ம கிட்டே ஒப்படைச்சேனே, ஸ்தாலி சொம்பு. அது இப்போ எங்கே இருக்குன்னு தெரியுமா? அதானய்யா, நீர் கோணகதாரியா, நக்ன சரீரனா மலை சவட்டி இறங்கி வந்து நின்னபோது உம்ம கிட்டே எல்பிச்சேனே. ஓர்மை இருக்கோ?
நான் அவனை உற்றுப் பார்த்தேன். இந்த மலையாள பிராமணன் பில்லி சூனியம் வைத்து மனுஷாளை வசப்படுத்தி ஆட்டி வைக்கிற கூட்டத்தில் பட்டவனாக இருக்கும். அவன் பரிச்சயம் உண்டான அந்த நிமிஷம் காலைச் சுற்ற ஆரம்பித்த சனியன் பிடித்த பிடி எப்போ விடுமோ. என் பிராண சகி, தெரியலையடி எனக்கு.
ஓய், நான் குட்டிச் சாத்தானையும், யக்ஷியையும் உபாசிக்கிற துர்மந்திரவாதி எல்லாம் இல்லை. சொன்னேனே, அம்பலப்புழை மகாதேவயன். உமக்கு தூரத்து பெந்து. என் பூஜ்ய தாயாரோட அஸ்தியும் ரெண்டு எல்லும் வச்ச ஸ்தாலி சொம்பு அது. கொல்லூர்லே சமுத்திரத்தோட விட முடியாம போச்சு. குடும்பத்தைத் தான் விட வேண்டி வந்தது. உம்ம மாதிரி நானும் பொண்டாட்டியைத் தேடறவன் தான். எங்கே இருக்காளோ. என் ஓமனக் குட்டி பெண்குஞ்சு என்ன பண்றாளோ?
அவன் ஒரு வினாடி அங்க வஸ்திரத்தால் வாயை மறைத்துக் கொண்டு விம்மினான். பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. இவன் எனக்குக் கெட்டது நினைக்கிறவன் இல்லை. சந்தர்ப்ப வசத்தால் நான் கண் இருண்டு போய் தத்துப் பித்தென்று ஏதெல்லாமே செய்து எங்கேயோ தொலைந்து போனது போல் இவனும் இன்னொரு விதத்தில் எதையெல்லாமோ தொலைத்துத் தேடிக் கொண்டிருக்கிறவன். ஒரு வினாடி இவனோடு ஆதரவாக வார்த்தை சொல்லிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் என் செல்லக் கண்ணு லலிதாம்பிகே உன்னை தரிசிக்க நடக்கலாம். அந்த ஸ்தாலி செம்பு எங்கே? உனக்குத் தெரியுமோடி பொண்ணே?
நான் சொல்றேனய்யா அது எங்கே போச்சுன்னு. இப்படி உட்காரும்.
மலையாளத்தான் தரையில் கையை வைத்து மெல்ல ரெண்டு தடவை தட்டினான். அவன் சொன்ன இடத்தில் உட்கார்ந்தால் என் பிருஷ்டம் அவன் வலது கையில் ஆரோகணிக்கக் கூடும். நெருப்பை சுமக்கிற கரம் அது. அசுத்தப்பட்டுத்தலாகாது.
நான் கொஞ்சம் விலகினாற்போல் உட்கார்ந்து என் சஞ்சியை மடியில் இருத்திக் கொண்டேன். ஒரு நிமிஷம் ரெண்டு நிமிஷம் மரியாதைக்கு வார்த்தை கேட்டுவிட்டுக் கிளம்பவேணும். இல்லாவிட்டால் உன்னை, என் உசிருக்கு உசிரான லலிதையை யாசகர் கூட்டத்தில் தேட வேண்டிப் போகும் என்று மனசு எச்சரித்தது. சும்மாக்கிட சனியனே, அந்த அபாக்கியவதிக்கு இனியும் ஒரு குறைவும் வராமல் கண்ணுக்குக் கண்ணாக வைத்து நான் காப்பாற்றப் போறேன். ரெட்டிப்பொண்ணின் ஸ்தனபாரம், பங்காரு தாசியின் பருத்த தொடை எல்லாம் இனி என்னை அழைக்கழிக்காது. அழகிகளும் அகழிகளும் போதத்தில் ஏறமாட்டாமல் என் லலிதாம்பிகையோடு சுகிக்கும்போதும் சத்விஷயத்தை நினைத்து மெச்சப்பட்டுப் போவேன் இனி. இந்தப் பிராமணன் நேரம் கடத்தாமல் இருந்தாலே போதும்.
நான் என்னத்துக்கு உம் நேரத்தைக் கடத்தப் போறேன். உம்மால் எனக்கு உபகாரம் ஆக வேண்டியிருக்கிறது. அதை அபேட்சிக்கத்தான் அழைத்தது. எல்லாம் அந்த ஸ்தாலிச் செம்பு தான். என் அம்மாளின் அஸ்திக் கலசம்.
அதைத்தான் தவற விட்டுட்டேனே ஸ்வாமி. எட்டு வருஷம் முந்தி காணாமல் போக்கியதை இன்னிக்கு வந்து கேட்டால் நான் எந்தப்படிக்குத் தேடி எடுத்துக் கொடுக்கறது சொல்லும். ஒரு வாரம் பத்து நாள் அவகாசம் கிடைத்தால் ஏதாவது செய்யமுடியுமா என்று பார்க்கலாம். பிதுர்க்காரியம். எனக்கு அதோட முக்யத்துவம் அர்த்தமாறது. ஆனாலும் எல்லாத்துக்கும் வேளை வரணுமே.
நான் கேட்க உத்தேசித்ததை மனசில் கோர்வையாகச் சொல்லிப் பார்த்து சத்தம் எழுப்ப உத்தேசித்தபோது அவன் என்னைக் கை காட்டி நிறுத்தினான்.
ஒண்ணும் மிண்ட வேணாம். கேட்டீரா. எனக்கு வல்லாத்த க்ஷீணம். வெள்ளைக்கார சீமை எல்லாம் சுத்தி அலைஞ்சு திரும்பி இங்கே திரிஞ்சாறது. பக்கத்துலே தான் இருக்கா, ஆனா ரொம்ப தூரத்திலே குரல் கேட்கறது. ஆத்துக்காரியும் பொண்ணும் தான். எப்படியோ தவற விட்டுட்டேன். கொல்லூர் போனதே தப்போ.
மலையாளப் பிராமணன் சொன்னது நிறையத் தமிழ் கலந்து விளம்பித்தான் என்ற போதும் எனக்கு ஒண்ணும் அர்த்தமாகவில்லையடி லலிதாம்பாளே. இன்னும் கொஞ்சம் நேரம் இவனோடு போக்கினால் எனக்கும் சித்தப் பிரமை வருமோ என்று பயம் வேறு பிடித்துக் கொண்டது.
எங்கே இருக்கு அந்த ஸ்தாலிச் சொம்புன்னு அண்ணா சொன்னா தேடிக் கொண்டு வரலாமான்னு பார்க்கலாம்.
அப்படியா? இதோ கேளும். அது சென்னப் பட்டணத்து பிரதம கோர்ட்டுக் கச்சேரியில் தஸ்தாவேஜு சேகரிக்கும் ஓட்டுக் கட்டடத்தில் ஒரு மர அலமாரிக்குப் பின்னால் உருண்டு கிடக்கு. தூசி வாடையையும், வியாஜ்யம், பிராது, நமூனா, கூடவே அரக்கு உருக்கும் வாடையையும் முகர்ந்தபடி, பிதுர்ராஜ்ய சொத்துத் தகராறையும், பாகப் பிரிவினையையும் சொல்லி முறையிடும் கருப்பு மசி அட்சரங்களைக் காலம் முழுக்கப் பார்த்துக் கொண்டு கச்சேரிக்குள் குடுங்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கு. உம்மால் ஒரு சுக்கும் செய்ய முடியாது. உம் சகோதரன், நேவிகேஷன் க்ளார்க்கன் நினைச்சா ஒரு வேளை அந்தச் சொம்பை மீட்டு எடுத்துத்தர முடியலாம். அவனுக்கு எளுப்பம். கழிவுள்ளவனாச்சே.
இதோடு இவன் தொந்தரவு முடிந்து இனி நல்ல காலம் ஏற்படலாம். ஸ்தாலியும் செம்பும் எனக்கு எதுக்கு? கொல்லைக்குப் போய் குண்டி அலம்ப இருக்கப்பட்ட சொம்பு தவிர நம்மாத்தில் ஏது செம்பும் வெள்ளியுமடி பொண்ணே? நீயே சொல்லு.
உம்ம புத்திக்கு நிறைய சுத்தி அவசியம்மய்யா. மூத்திர வாடையும் மயில் றெக்கை எண்ணை வாடையுமா பகல் நேரத்திலே பங்காரு தாசி கஷ்கத்து வியர்ப்பை முகர்ந்தபடி முயங்கினவன் ஆச்சே. நிணநீர் நாறும் இருட்டுப் புழையும், மலஜல விசர்ஜனம் கழிந்து சொம்பில் அரையும் குறையுமாக வெள்ளம் சேந்தி கழுவுகிறதாகப் பேர் பண்ணி கல அழுக்கைத் தக்க வைத்த குதமும் அல்லாது உம்ம புத்தி மேலே ஏறவே ஏறாது போம்.
அவன் என்னைக் கடிந்து கொண்டபோது சும்மா இருக்க வேண்டிப் போனது. தப்பு என் பேரில் தான். இத்தனை வருஷம் காராக்ருஹத்தில் கழித்தாலும் புத்தி தடுமாறி சகலமான அசுத்தத்தையும் பற்றிக்கொள்ள பன்றி மலம் தின்ன ஓடி வருகிறதுபோல் பாய்ந்தோடி வருகிறது. என் பீஜத்தை அறுத்துப் போட்டால் இதெல்லாம் இல்லாமல் போகுமோ? அப்புறம் என் லலிதாம்பிகைக்குக் கொடுக்க வேறென்ன இருக்கு?
லலிதாம்பிகை அம்மாளுக்கு, என் மன்னியும் ஆச்சே ஓய், அவாளுக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும். அதாகப்பட்டது, கப்பல் ஏறறதுக்கு முந்தி அவாளைப் பார்க்க முடிஞ்சா. மனசிலாச்சா மகாலிங்கய்யரே?
நான் விநயமாகக் கையைக் கூப்பி அவனை நமஸ்கரித்தபடி நின்றேன். அவன் சொன்னதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்க வாயைத் திறந்தபோது அந்தத் திண்ணை ஆள் அரவமில்லாமல் இருந்தது.
விளக்கு வைக்கிற நேரத்திலே யாசகம் கேட்டு நிற்கிறியே. யாருப்பா அது? ராப்பிச்சைன்னா இன்னும் நேரம் கழிச்சு வரணும். பொங்கித் தின்னா இல்லே மிச்சத்தை கொண்டாந்து உனக்குக் கொட்ட.
உள்ளே இருந்து லாந்தர் விளக்கோடு வந்தவன் என்னைப் பார்த்துச் சொன்னான்.
என் கையை மங்கின வெளிச்சத்தில் ஒரு வினாடி கூர்ந்து பார்த்து விட்டு அதையே தெலுங்கில் சொன்னான்.
யாசகத்துக்கு வந்தாலும் ஜம்பமா பேரை கையிலே பச்சை குத்தி வச்சிறிக்கியே. ஒரேய் வரதாராஜ ரெட்டி, நீவு ஏதி ஊருரா?
நான் என் இடது கைத்தண்டையைப் பார்த்தேன். அங்கே பெரிய கம்பளிப் பூச்சி ஊர்கிறது போல் பெரிய பெரிய தெலுங்கு எழுத்தாக முளைத்துக் கிடந்தது. சுவர்க்கோழிகள் அந்தப் பெயரைத் திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தன. அதில் ஒன்று லலிதாம்பிகை காத்திருக்கா நகர்ந்து போடா நாயே என்று விரட்டியது.
(தொடரும்)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பால்வீதி மையத்தில் பூதக் கருந்துளை (கட்டுரை 50 பாகம் -1)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -19 << அருகில் நீ இல்லாமை !>>
- தாகூரின் கீதங்கள் – 64 வந்தனம் உனக்கு அதிபனே !
- பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்
- அ.மார்க்ஸின் சுவனத்தின் ஆதாரப்பிழைகள்
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்
- உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1
- கொற்றவை படைத்த ஜெயமோகன்
- ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்
- அழகியலும் எதிர் அழகியலும்
- தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு ‘மக்கள் விருது 2008’
- கவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு
- தமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்) வெளியீட்டு நிகழ்வு
- எஸ்ஸார்சி எழுதிவரும் “வேதவனம்”
- பயணக் கட்டுரைகள் ” திசைகளின் தரிசனம் “
- சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்
- விதி விலக்கான சில ஆச்சரிய நிகழ்வுகள்
- நினைவு மலர்களின் தொகுப்பு வரிசையில்…நின்று நிலைக்கும் நினைவுத் தொகுப்பு
- பொங்கல் வாழ்த்துகள்
- உயிர்ப்பிக்கும் ஏசுநாதர்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -2 பாகம் -7
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திமூன்று
- தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்
- சூரியன் வருவான்
- கோபம்—————இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா?
- நினைவில் எம்.ஜி.ஆர்
- தேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை
- யமுனா ராஜேந்திரன் உயிர்மையில் புரிந்த அவதூறுக்கு பதில்
- பெருந்துயரின் பேரலை
- பொம்மை நேசம்
- கொடுமையிது! அறக்கொலையே
- கவிதைகள்
- பிறப்பு…
- வேத வனம் விருட்சம் 19
- ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே
- கஜினி Vs கஜினி
- சூரிய ராகம்