விஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

இரா.முருகன்


கொஞ்சம் பரபரப்போடு தான் நீலகண்டன் வக்கீல் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார் நடேசன்.

ஏகாம்பர ஐயர் பிரதி செய்யக் கொடுத்த டோக்குமெண்ட் இப்படி வெள்ளைக் கடுதாசியாகிப் போன மாயம் என்னவென்று ஒரு சுக்கும் மனசிலாகவில்லை அவருக்கு. ஏகாம்பார் ஐயர் தான் நிலை குலைந்து போய்விட்டார்.

இதென்னய்யா, இப்படி முழுக்க வெற்றுக் காகிதமா இருக்கே. நேற்று வரைக்கும் நீர் பிரதி செய்தது மட்டும் இருக்க, ஒரிஜினல் என்ன ஆயிருக்கும்?

அவர் வெற்று டோக்குமெண்டை திருப்பித் திருப்பிப் பார்த்தபடி கேட்டபோது பஞ்சாமி ஒரு வட்டையில் காப்பியோடு வந்து நின்றான். வேண்டித்தான் இருந்தது ஐயருக்கு. வீட்டில் இழவு விழுந்தாலும் காப்பிக் குடியை நிறுத்தாத பாண்டிப் பட்டன்மாரைப் பற்றி நடேசன் கேட்டது முழுக்க உண்மைதான் என்று நேரம் காலம் பார்க்காமல் மனசில் வந்து போனது.

சுவாமிகளே நீங்க யாதொண்ணுக்கும் கவலைப் பட வேண்டாம். மூடி மூடி பெருங்காய டப்பிக்குள் வச்சிருந்த காகிதக் கட்டை காற்றும் வெளிச்சமும் காணும்படிக்கு வெளியே எடுத்தபோது மசியெல்லாம் காற்றில் கலந்து போயிருக்கலாம். நான் எழுதியெடுத்துக் கிட்டத்தட்ட முடிச்சது இல்லையோ இந்தப் பிரதி? டோக்குமெண்டை முழுக்கப் படிச்சுட்டுத்தான் பிரதி எடுக்க உக்கார்ந்தேனாக்கும். வார்த்தைக்கு வார்த்தை கிரமமா நினைவு இருக்கு. வக்கீல் குமஸ்தன் வேலையில் இதொரு சௌகரியம். லா பாயிண்டும், சர்க்கார் பாஷையும் எங்கேயும் ஒரே மாதிரித்தான். நான் இந்தப் பிரதியை முழுப்பிச்சுத் தந்துடறேன்.

அவர் ஏதோ குருட்டு நம்பிக்கையோடு ஏகாம்பர ஐயரிடம் சொன்னபோது, காப்பியை டபாராவில் ஊற்றி ஆற்றிக் குடித்தபடி ஐயர் சொன்னார்.

அது சரிதான் நடேசன். ஆனால் அந்தப் பிரதியால் எனக்கு குண்டி துடைக்கக் கூட பிரயோஜனமில்லையே.

அதுக்கு நானாச்சு ஐயர்வாள். குதத்தைப் பத்தியது இல்லே இது. டோக்குமெண்ட் பத்தித்தான். எப்படியும் அதோட இன்னொரு பிரதி ஆலப்புழை ரிஜிஸ்தர் ஆப்பீசில் இருக்கும். நீலகண்டன் வக்கீலைப் பார்த்து வழி கேட்டால் ஒரு நிமிஷத்திலே சொல்லித் தரப் போறார். நான் எறங்கறேன்.

நடேசன் வேட்டியை முழங்காலுக்கு மடக்கிக் குத்தியபடி நடந்தபோது புதுத் துணியாக இருந்த காரணத்தால் மொடமொடவென்று அது சந்தோஷமாக இரைந்தது. ஒரு தடவை துவைத்துக் காயப் போட்டால் இந்த கம்பீரம் எல்லாம் அடங்கி விடும். புதுப் பெண்டாட்டிக்கு அடங்கின அந்த தூர்த்தன் குறூப்பு மாதிரி.

ஒரிஜினல் டோக்குமெண்ட் கிடைக்கக் கூடுமான்னு விசாரிச்சுச் சொல்லும்.

வெளியே நடக்கும்போது ஏகாம்பர ஐயர் சத்தம் கூட்டிச் சொன்னது நாலு கடை தாண்டிக் கேட்டிருக்கும். இந்த பட்டனுடைய ஒரு ஒரிஜினல் டோக்குமெண்ட். பெருத்த பிருஷ்டத்தில் செருகிக் கொள்ளறதுக்கா? கல்லாவில் உட்கார்ந்து காசு வாங்கிப் போடுகிறதில் வந்து சேரும் சந்தோஷம் எல்லாம் அங்கேதான் சதையாக இறங்கும் போல. அன்னமிட்டவனை தூஷிக்காதேடா என்றான் கிருஷ்ணன்.

நடேசன் நீலகண்டப் பிள்ளை வக்கீல் வீட்டுக்குள் நுழைந்தபோது சாயந்திரம் கடந்து ராத்திரி இப்பவே வரட்டுமா இல்லே இன்னும் சித்தெ நேரம் சென்று வரட்டுமா என்று விசாரித்து விளையாடிக் கொண்டிருந்தது.

வக்கீல் வீட்டில் இருக்கிற நேரமா இல்லை ஆத்மஞான சபைக்குக் கிளம்பிவிட்டாரா? நடேசனுக்கு சந்தேகமாக இருந்தது.

வக்கீல் வீட்டு முற்றத்தில் அவருடைய மூத்த பெண் வத்சலகுமாரியும் அவளுடைய சிநேகிதியும் நின்றபடிக்குப் பேசிக் கொண்டிருந்தது பாதி இருட்டில் தெரிந்தது.

எய் கௌரி, உனக்கு என்னவாக்கும் பிரச்சனை இப்போ? பதினெட்டு திகையற முன்பே ராஷ்ட்ரியத்தில் போய்க் கேர அதுவும் ஒரு பெண்குட்டி போய் ஆம்பளைகளுக்குச் சமமா உட்கார்ந்து பேசறது சர்யாப் படலே எனக்கு. அதுவும் நீ சாத்வீகமான காந்தி காங்கிரஸ் கூட இல்லே. நிவர்த்தன சமரக்காரி. அது எல்லாம் சரிதான். இல்லாட்ட இங்கே நாயர் பட்டாளம் தான் இருந்திருக்கும். ஆனாலும் கூட சோசலிஷ்ட் மோசலிஷ்ட்டுனு ஏதோ ஒரு கிறுக்கு உனக்கு பிடிச்சிருக்க வேண்டாம். கட்டன் சாயாவும் பருப்பு வடையுமா உலகை ரட்சிக்க உக்கார்ந்து மணிக்கணக்கா பேசற கும்பல்னு அச்சன் சொல்லியது மறக்கலே.

வத்சலகுமாரி புஷ்டியான புஷ்பிணிப் பெண். திரண்டுகுளி என்று ஊர் முழுக்கத் தண்டோரா போட வேண்டாம் என்று வீட்டு மட்டில் வைத்து விருந்து கொடுத்துக் கொண்டாடியபோது நடேசனையும் கூப்பிட மறக்கவில்லை அவர். வக்கீல் சார்பில் பெண்ணின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு தக்கலை, பத்மனாபபுரம் என்று யார் யாரையோ பார்க்க நடேசன் நடந்திருக்கிறார். வக்கீலுக்குக் காந்தி கிறுக்கு தணிந்து கருப்பு கோட்டைத் தூசி தட்டி எடுத்துப் போட்டுக் கொண்டு கோர்ட்டுக்குத் திரும்பப் போக ஆரம்பித்ததும் ஜாதகக் கட்டோடு இன்னும் பயணம் நடேசனுக்கு விதிக்கப்பட்டிருக்கலாம். அதில் ஏதாவது ஒண்ணு இந்தக் குட்டியின் கல்யாணத்தில் முடியட்டும். சரி, அப்படியே ஆகட்டும். வேறே என்ன வேணும்? பிச்சுப் பிச்சுக் கேக்காமச் சொல்லித் தொலை என்றான் கிருஷ்ணன்.

நீலகண்டன் பிள்ளை வக்கீல் மகளோடு கூட நின்று வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கிற அந்த மெலிந்து கருத்த பெண்பிள்ளை யாராக இருக்கும்? ஈழவப் பெண் என்று பார்க்கும்போதே மனதில் பட்டது நடேசனுக்கு. அது ஒரு சாமர்த்தியம். அப்படித்தான் நினைத்தார் அவர். யாரையும் பார்த்த மாத்திரத்திலேயே ஜாதி என்ன என்று பிடிபட்டுப் போகும். நாயர் என்றால் எந்த சாகை என்று கூட மோப்பம் பிடித்து விடுவார். நான் என்ன ஜாதி தெரியுமா என்று சீண்டினார் கிருஷ்ணசாமி. இடையரல்லவோ. போடா பிராந்தா, நான் துருக்கன். கிறிஸ்தியானி. புலையன். ஈழவன். நம்பூத்ரி எல்லாம் தான். பாழாப் போன பத்மநாபதாசன் மகாராஜா தவிர.

இந்தப் பெண்பிள்ளைக்கு கௌரி என்றில்லையோ பெயர். சரியாச் சொல்லிப் போட்டேடா நடேசா. நான் ஒரு ஆருடம் சொல்றேன் கேக்கறியா என்றான் கிருஷ்ணன். என்னவாக்கும் அது?

இவள் வர்த்தமான காலத்தில் ராஜ்யம் பரிக்கப் போறா. பார்த்துட்டே இரு. ஆளப் பிறந்தவள்.

கிருஷ்ணன் சும்மா பொழுது போகாமல் ஏதோ சொல்கிறான். நடேசன் வீட்டு முற்றத்துக்கு நடந்தார்.

நடேசன் அம்மாவனா. நல்ல நேரத்துக்கு வந்தீங்க.

நீலகண்டன் வக்கீல் மகள் சிரித்தபடி சொன்னாள். அச்சன் எங்கேயா? இந்த நேரத்தில் வேறே எங்கே? சொசைட்டி தான்.

நடேசனுக்கு ஆயாசமாக இருந்தது. திரும்பப் பாதி தூரம் நடந்து தெற்கில் திரும்பி இன்னும் கொஞ்சம் மேற்கொண்டு போனால் சொசைட்டி வரும். கொஞ்சம் முன்கூட்டியே யோசித்திருந்தால் வெட்டி அலைச்சலைத் தவிர்த்திருக்கலாம்.

சரியம்மா. நான் இறங்கறேன். அச்சனை சொசைட்டியிலே வச்சுக் கண்டு தான் வீடு திரிச்சுப் போகணும். நீ எதுக்கு இப்படி இருட்டற நேரத்திலே இங்கே நின்னுட்டிருக்கே. பூச்சி பொட்டு தட்டுப்படற நேரம். உள்ளே போய் உக்காந்து விடிய விடியப் பேசுங்களேன் ரெண்டு பேரும்.

இல்லே, நான் இறங்கறேன். படகு போயிடும்.

கௌரி கிளம்பத் தயாரானாள்.

கௌரியைக் கொஞ்சம் காயல் ஓரம் படகுத் துறையில் கொண்டு விட்டு சொசைட்டிக்குப் போங்களேன் அம்மாவா. புண்ணியமாப் போகும். அவ தானே நடந்து போய்க்கறேன்கிறா. நீங்க சொன்ன மாதிரி பூச்சி பொட்டு நெளியற பூமி. வெளியே இன்னும் அதிகம். பார்த்து ஜாக்கிரதையா நடத்திப் போகணும். விப்லவம் பேசும் பெண், புரட்சிக்காரின்னு பாம்பும் தேளும் ஒதுங்கி வழிவிடுமா என்ன?

கௌரி வேண்டாம் என்று முதலில் மறுத்தாலும் நடேசன் கூட ஒரு துணையாக வருவதில் ஆறுதல் கிடைத்திருந்தது அவள் வெளிச்சத்தில் வந்த போது தெரிந்தது. புத்தி தீட்சண்யமுள்ள ஈழவக் குட்டி என்றார் கிருஷ்ணஸ்வாமி. நடேசன் கேட்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை.

கௌரி கூட நடக்கும்போது அவளுடைய ராஷ்ட்ரீய விசனங்கள் பற்றி விசாரித்தார் நடேசன். நடை அலுக்காமல் இருக்க ஏதாவது பேச வேண்டி இருக்கிறது. அது ராஜாங்க விவகாரமாக இருந்துவிட்டுப் போகட்டுமே.

அந்தப் பெண் ரொம்பத் தெளிவாக மாகாண காங்கிரஸ் தலைவர்களை நார் நாராகக் கிழித்து வழி ஓரமாகப் போட்டாள்.

மெட்ராசில் ஒரு ஷண்முகம் செட்டியார், முக்ய மந்திரி வந்து சொன்னாராம். இங்கேயும் பொம்மைக் கொலு மாதிரி ஒரு சர்க்கார். மக்கள் ஆட்சியும் மண்ணும் இதானாம். சித்திரைத் திருநாள் கண்ணசைத்தால் தான் இந்த மாகாண காங்கிரஸ் மந்திரிகள் நிற்பாங்க. நடப்பாங்க.

அவருக்கும் இந்த மாகாண காங்கிரஸ் போக்குவரத்து எந்தத் திருப்தியையும் தராத விஷயம். காந்தியும் நேருவும் டில்லியிலும் கல்கத்தாவிலும் ஏதோ மறியலும் மற்றதும் செய்துவிட்டுப் போகட்டும். அது எல்லாம் இந்தியா. வேறே நிலம். இது திருவிதாங்கூரை ஆஸ்தானமாக்கி ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜாவின் அனந்திரவனான பகுமானப்பட்ட சித்திரைத் திருநாள் மகாராஜா ராஜ்யபரணம் செய்யும் பூமி. போனால் போகிறது என்று அம்பாட்டு மேனோனையும் கூடவே அவருக்குக் கைலாகு கொடுக்க நாலு மாகாண காங்கிரஸ்காரன்மாரையும் பிடித்து நாற்காலி கொடுத்து உட்கார்த்தி அட்டணக்கால் போட்டு ராஜவிழி விழிக்கச் சொல்லியிருக்கிறார். முடிந்தவரை முழித்துவிட்டு ராஜபோகத்தை அனுபவித்துப் போகாமல் காந்தி சொன்னபடி, கத்தரிக்காய் காய்ச்ச படி மறியல், வக்கீலன்மார் கோர்ட்டுக் கச்சேரிக்குப் போகாமல் ,பள்ளிக்கூடத்துக்குப் பிள்ளைகள் போகாமல் யாரும் ஒத்துழைக்காத வெண்டைக்காய் சமரம். காந்தியாலும் சுதந்திரத்தாலும் ஒரு சக்கரம் பிரயோஜனம் இல்லை நடேசனுக்கு. கிருஷ்ணா நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். நான் கேட்கப் போறதில்லையாக்கும்.

கௌரி, எங்கே இவ்வளவு தூரம்? நான் கொண்டு போய் விடட்டா?

நெடுநெடுவென்று உசரமான ஒரு இளைஞன் பாதி வழிக்கு வைத்து கௌரியை நிறுத்திச் சொன்னான்.

யார் இந்தப் பிள்ளை என்று நடேசன் கூர்ந்து பார்த்தார். நாயர் தரவாட்டுப் பய்யன் தான். எங்கேயோ பார்த்த ஓர்மை.

நான் கோபாலன்.

நினைவு வந்துவிட்டது. செக்கனும் சிவப்புக் கொடி பிடித்து ராஷ்ட்ரீயம் பேசுகிறவன்.

அவன் நெருங்கி வந்து பெண்குட்டி காதில் சொன்னது நடேசனுக்கும் கேட்டது. பாம்புச் செவியில்லையோ கிருஷ்ணா?

பிணறாயி போறேன். நாளை ராத்திரி கூட்டம். கௌரிக்குட்டியும் வந்தா நல்லா இருக்கும்.

கௌரி சிரித்தாள்.

வேணாம் சகாவே. நீங்க எதிர் வழியில் போறவர்.

எல்லாம் ஒரே வழிதான் என்றார் கிருஷ்ணஸ்வாமி. அது உமக்கு என்றார் நடேசன். இந்தப் பெண் மட்டுமில்லை, செக்கனும் பிரசித்தனாக வருவான். கிருஷ்ணன் இன்னொரு ஆருடத்தை நடேசன் கேட்காமலே சொன்னான்.

சகாவு என்றால் என்ன கிருஷ்ணா?

படகுத் துறை நெருங்கிக் கொண்டிருந்தது.

அம்மாவா, படகு வந்துட்டு இருக்கு. நான் போயிக்கறேன்.

கௌரி அவரை அம்மாவன் என்று விளித்தது மனதுக்கு இதமாக இருந்தது. அந்தப் பெண் வெகு சீக்கிரம் ஒரு கிறிஸ்தியானியைக் கல்யாணம் செய்துக்கப் போறாள். சொல்லாமல் நடேசனுக்கே தோன்றியது. கலிகாலம் என்றார் அவர். மனுஷன் ஜெயிக்கிற காலம் என்று கௌரி சொல்லும்போது படகு வந்து நின்றது.

நடேசன் கைக் கடியாரத்தைப் பார்த்தார். சரியாக ஓடிக் கொண்டிருந்தது. உம்ம வேலையா. நன்றி சகாவே. கிருஷ்ணன் பதில் வார்த்தை சொல்லவில்லை.

இந்த ஆத்மஞான சபையாகப்பட்டது வக்கீல்களும், ஜட்ஜிமாரும், மாஜிஸ்ட்ரேட், தாசில்தார், பேஷ்கார், ரயில் ஆப்பீஸ்காரர் போன்ற பதவிகளை திருவிதாங்கூர் மகாராஜா திருமனசு கல்பித்தபடியும், துரைத்தனத்து நியமனப்படியும் வகித்து தேசத்தை ரட்சித்து வரும் உயர் உத்தியோகஸ்தர்கள் கூடி விளக்குக் கொளுத்தி வைத்துவிட்டு சத் விஷயங்களைப் பேசும் இடம். பேசிக் கொண்டிருந்தார்கள்.

பெசண்ட் அம்மை சொன்னபடிக்கு ஆத்மஞானத்தில் மனசு செலுத்தி, கவர்னர் ஜெனரல் துரையே நாடு வாழியாக தீர்க்காயுசோடு இருக்கட்டும்னு இருந்தா இப்படி கூட்டத்தோட சத்தியாக்கிரஹம், ஒற்றைக்கு சத்யாக்ரஹம் எல்லாம் வேண்டி வந்திருக்காது. கிரமமா பொழைப்பு நடத்தி நாலு காசு பார்த்திருக்கலாம்.

யார் சொல்கிறார்கள் என்று நடேசனுக்குத் தெரியவில்லை. யாராக இருந்தாலும் தீர்க்காயுசோடு இருக்கட்டும் என்று வாழ்த்தினார் அவர்.

நீலகண்டன் வக்கீல் தலை தெரிகிறதா என்று நோட்டமிட்டார்.

வட்ட மேஜையில் மெழுகுதிரி கொளுத்தியிருந்தது. நாலு பேர் பரத்தி வைத்த ஏதோ காகிதத்தில் ஒரு காசை வைத்து அழுத்தியபடி எதிரும் புதிருமாக உட்கார்ந்திருந்தார்கள். நீலகண்டன் பிள்ளை அதில் ஒருத்தர்.

ஐ ஆம் பர்வதவர்தினி. இண்டர்ட் இன் எடின்பரோ.

எழுத்து எழுத்தாகச் சொல்லி அப்புறம் முழுவதும் படிக்கிற நீலகண்டன் வக்கீல் குரல் கேட்டது.

நான் பர்வதவர்த்தினி. எடின்பரோ நகரத்தில் அடக்கமாகியிருக்கிறேன்.

அவர் உள்ளே நுழையும் நடேசனைப் பார்த்தபடி சொன்னார்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts