தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
Figure
Abraham Lincoln Memorial
Washington D.C.
“நான் சிறுவனாக இருந்த போது தெற்கே நியூ ஆர்லீன்ஸ் நகருக்கு ஒருமுறைப் பயணம் போயிருந்தேன். அங்கே நான் கண்ட கொடுமைக் காட்சி ! உண்டாக்கும் எனக்குப் பேரதிர்ச்சி ! அடிமைகளைச் சங்கிலியில் மிருகத்தைப் போல் கட்டிச் சவுக்கால் அடிப்பதைக் கண்டேன் ! காலால் எட்டி உதைப்பதைக் கண்டேன் ! அடுத்து ஏலத்தில் வாங்குவோர் திருப்தி அடைய ஓர் இளம் பெண்ணை மேலேயும், கீழேயும் தூக்கிக் காட்டி அவமதிப்பதைக் கண்டேன் ! கண்களை மூடிக் கொண்டேன் ! என் மனது அழுதது ! துடித்தது ! அப்போது நான் எடுத்த முடிவு : அந்த மனிதக் கொடுமைகளை நீக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமானால் உறுதியாக அவற்றை ஒழித்தே தீர்வேன் என்பது !”
ஆப்ரஹாம் லிங்கன்
“யாராவது ஒருவர் எப்போதெல்லாம் அடிமைத்தனத்தை ஆதரித்து என்னுடன் தர்க்கமிடுவதைப் பார்க்கும் போது, அவரை அடிமைகளாய் மாற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்குள் ஓர் ஆத்திரம் பொங்கி எழுகிறது.”
ஆப்ரஹாம் லிங்கன்
முன்னுரை:
ஆப்ரஹாம் லிங்கன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர். அவரது காலத்தில் அமெரிக்காவின் தென்புறத்து மாநிலங்களில் செல்வந்தர் நில புலங்களில் அடிமைகளாய்ப் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் (நீக்ரோ) நசுக்கப்பட்டுச் சமத்துவ நிலை அடையாது இன்னலுற்று வந்தார். அவரது அடிமை வாழ்வை ஒழித்திடக் கொதித்தெழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டிய தாயிற்று.
வடபுறத்து மாநிலங்களும் தென்புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் இருபுறத்திலும் அநேகர் காயமுற்றுச் செத்து மடிந்தாலும், முடிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வடபுறத்து மாந்தரே வெற்றி பெற்றனர். பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமை ஆப்ரஹாம் லிங்கனுக்கே சார்ந்தது. அத்துடன் அடிமை வாழ்வொழித்த அத்தகைய மகத்தான போராட்டத்தில் வெற்றி பெற்ற ஐந்து நாட்களில் வாஷிங்டன் தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது தென்மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் இரண்டாம் முறை ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் சுடப்பட்டு அமரரானார்.
ஆப்ரஹாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். அவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ், லிங்கன் ஒன்பது வயதாகும் போது காலமாகி விட்டார். தச்சு மரவேலை செய்த தந்தையார் தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். தனது 23 ஆவது வயதில் முதன்முதல் ஆப்ரஹாம் லிங்கன் “பிளாக் காக் போரில்” (Black Hawk War) கலந்து காப்டனாகப் பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையைக் காட்டியது.
1834 இல் ஆப்ரஹாம் லிங்கன் இல்லினாய்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் அரசாங்கப் பணியில் வேலை செய்தார். லிங்கன் தனது 33 ஆவது வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) என்னும் மாதை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1847 -1849 ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தவணைப் பணிபுரிந்தார்.
1860 இல் ரிப்பபிலிகன் நியமிப்பாளியாகி ஜனாதிபதித் தேர்வில் வெற்றி பெற்று 1861 மார்ச்சில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து (Union) தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன ! அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !
அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”
1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள், ஆப்ரஹாம் லிங்கனை வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) சுட்டுக் கொன்றான். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள மகிழ்ச்சிகரமான அந்த வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !
*************************
ஆப்ரஹாம் லிங்கன்
(வரலாற்று நாடகம்)
காட்சி -1 பாகம் -6
நடிகர்கள் :
ஆப்ரஹாம் லிங்கன் (Abraham Lincoln) (வயது 51)
மேரி டாட் லிங்கன் (Mary Todd Lincoln)
ஸாமுவேல் ஸ்டோன் (Samuel Stone) (50) விவசாயி
டிமதி க·ப்னி (Timothy Cuffney) (60) ஸ்டோர் கிளார்க்
வேலைக்காரி சூஸன் (Susan)
மற்றும் ரிப்பபிளிக்கன் கட்சி அரசியல்வாதிகள்.
இடம் : ஆப்ரஹாம் லிங்கன் மாளிகை ஸ்பிரிங்·பீல்டு, இல்லினாய்ஸ். மாளிகையின் முன்புற விருந்தினர் வரவேற்பறை.
காலம் : 1860 இன் ஆரம்ப ஆண்டுகள். மார்ச் மாத இள வசந்த காலம். இருட்டும் மாலை நேரம்.
(இதுவரை நடந்தது) விவசாயி, ஸாமுவேல் ஸ்டோன் & ஸ்டோர் கிளார்க் டிமதி க·ப்னி. வரவேற்பறை கணப்பு அடுப்பின் (Fire Place) முன்பு விருந்தினர் இருவரும் எதிர் எதிரே நாற்காலியில் அமர்ந்து சுருட்டுகளைப் புகைத்துக் கொண்டிருக்கிறார். லிங்கனின் மனைவி மேரி வந்து இருவரையும் வரவேற்றுப் பேசுகிறார். சிறிது நேரம் கழித்து ஆப்ரஹாம் லிங்கன் முன்னறைக்கு வந்து அவர் இருவரையும் வரவேற்று உரையாடுகிறார். அவர்கள் இருவரும் போன பிறகு வணிகர் : வில்லியம் டக்கர் (William Tucker), வழக்கறிஞர் : ஹென்றி ஹிண்டு (Henry Hind), பாதிரியார் : எலையாஸ் பிரைஸ் (Elias Price), தினச்செய்தி ஆசிரியர் : ஜேம்ஸ் மாகின்டாஷ் (James Macintosh) நுழைகிறார்கள். அப்போது தூதுவர் தலைவர் வில்லியம் டக்கர் ஆப்ரஹாம் லிங்கனை வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரிப்பபிளிகன் தேர்வாளராய் நிற்பதற்குச் சம்மதம் கேட்க வந்திருக்கிறார்.
ஆப்ரஹாம் லிங்கன்: யார் என்னைக் கேலி செய்தாலும் நான் தாங்கிக் கொள்ள முடியும் ! அதற்குக் கடவுள் எனக்களித்த பயிற்சி இருக்கிறது ! ஆனால் இந்த அடிமைத்தன வாழ்வு இருக்கிறதே அது கொடிய சிறை ! ஆயுள் தண்டனை அது ! ஆறாத மனக்காயம் அது ! கசப்பான உயிர் வாழ்க்கை அது ! ஆழமாய்ப் புரையோடிய அதிகாரப் பிணி அது ! அதை நான் அறிவேன் ! இந்தப் போராட்டத்தில் எனக்குள்ளது ஒரே சிந்தனைதான் ! அதில் எந்த மாறாட்டமும் இல்லை எனக்கு ! என் தீர்மானத்தை யார் எதிர்ப்பினும் நான் துறக்க மாட்டேன் ! எவர் எதிர்ப்பினும் நில்லேன் ! அஞ்சேன் ! அடிமைத்தன ஒழிப்பு சட்ட ரீதியாக வருவதற்கு நான் என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் துணிவேன் !
வில்லியம் டக்கர்: உங்கள் உன்னத அந்தக் குறிக்கோளை நாங்கள் ஆதரிக்கிறோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுந்ததற்கும் அதுவே பிரதான காரணம், மிஸ்டர் லிங்கன்.
ஆப்ரஹாம் லிங்கன்: ரிப்பபிளிகன் கட்சியில் அவ்விதம் நோக்காதவர் பலர் இருக்கிறார். அந்த கட்சியில் அதற்காக என்னை வெறுப்போரும் இருக்கிறார். நான் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றால் என் முதல் வேலை அதுதான் ! அடிமைத்தன ஒழிப்பு ! அதில் சிறிதும் எனக்கு மாற்றம் இருக்காது ! நமது கட்சியில் அதைப் பலர் எதிர்த்தாலும் நான் மாற மாட்டேன் ! வடக்கு மாநிலங்களுக்கும், தெற்கு மாநிலங்களுக்கும் அதனால் போர் வருமேயானால் அதை நான் தவிர்க்க முடியாது. இருபுறத்திலும் அநேக மரணங்கள் ஏற்படும். நான் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். நமக்குள் முரண்பாடுகள் இருப்பினும், என் நோக்கம் ஒன்றே ! சட்ட ரீதியாக அமெரிக்க யூனியன் கடைப்பிடிக்க அடிமைத்தனத் தடுப்பை அமுலாக்குவேன். அடிமைத்தன ஒழிப்பைத் திணிக்க நான் விரும்பவில்லை ! ஆனால் அடிமைகள் என்று ஒரு சாராரை மாளிகை வாசிகள் வைத்துக் கொண்டு அவரைச் சித்திரவதை செய்வதை நான் அனுமதிக்க மாட்டேன். அடிமைத்தன வைப்பு எல்லைக்கு ஒரு கஜ அளவு நீட்சி கூட நான் அனுமதிக்கப் போவதில்லை. அந்தக் தீர்மானம் என் குருதியில் கொதித்திக் கொண்டிருக்கிறது.
வில்லியம் டக்கர்: நீங்கள் இப்படி ஆவேசமாகப் பேசுவது என்னைப் பிரமிக்க வைக்கிறது மிஸ்டர் லிங்கன்.
ஆப்ரஹாம் லிங்கன்: நான் சிறுவனாக இருந்த போது தெற்கே நியூ ஆர்லீன்ஸ் நகருக்கு ஒருமுறைப் பயணம் போயிருந்தேன். அங்கே நான் கண்ட கொடுமைக் காட்சி ! உண்டாக்கும் எனக்குப் பேரதிர்ச்சி ! அடிமைகளைச் சங்கிலியில் மிருகத்தைப் போல் கட்டிச் சவுக்கால் அடிப்பதைக் கண்டேன் ! காலால் எட்டி உதைப்பதைக் கண்டேன் ! அடுத்து ஏலத்தில் வாங்குவோர் திருப்தி அடைய ஓர் இளம் பெண்ணை மேலேயும், கீழேயும் தூக்கிக் காட்டி அவமதிப்பதைக் கண்டேன் ! கண்களை நான் மூடிக் கொண்டேன் ! என் மனது துடித்தது ! ஏங்கிஅழுதது ! அப்போது நான் எடுத்த முடிவு : அந்த மாதிரி மனிதக் கொடுமைகளை நீக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமானால் உறுதியாக அவற்றை ஒழித்தே தீர்வேன் என்பது !
வில்லியம் டக்கர்: இந்த வாசகத்தைக் கேட்டதும் போது எனக்கும் துடிக்கிறது ! என் கரங்கள் அருகில் துப்பாக்கி இருக்கிறதா என்று தேடுகின்றன மிஸ்டர் லிங்கன் !
ஆப்ரஹாம் லிங்கன்: (ஆத்திரம் அடங்கி) மிஸிஸ் லிங்கனும் நானும் விரும்புகிறோம், நீங்கள் எங்களுடன் இருந்து விருந்துண்டு செல்ல வேண்டும்.
வில்லியம் டக்கர்: மிக்க நன்றி மிஸ்டர் லிங்கன். அப்படியே செய்கிறோம். எங்கள் கேள்விக்கு உங்கள் பதில் என்ன ?
ஆப்ரஹாம் லிங்கன்: நீங்கள் இங்கு வரும் போது என்னை யாரென்று அறிந்திருக்க வில்லை ! என்னைப் பற்றி இப்போது நீங்கள் வெளியே சொல்வதற்கு நிரம்ப உள்ளதல்லவா ? மிஸிஸ் லிங்கனுடன் நான் முதலில் கலந்து பேச வேண்டும். ஐந்து நிமிடங்கள் பொறுப்பீரா ?
(ஆப்ரஹாம் லிங்கன் மனைவியுடன் பேச உள்ளே செல்கிறார்)
எலையாஸ் பிரைஸ்: (ஆச்சரியமாக) என்ன ? மிஸ்டர் லிங்கன் ஒன்றும் பதில் சொல்லாமல் போகிறார் ! மனைவியைக் கலந்து பேசாமல் எதுவும் செய்ய மாட்டார் போல் தெரிகிறது. நான் நிறையக் குறிப்புகள் எடுத்திருக்கிறேன். மிஸ்டர் லிங்கனைப் பற்றிய நல்லதொரு கட்டுரையை இவ்வாரத்தில் வெளியிடப் போகிறேன்.
வில்லியம் டக்கர்: ஆப்ரஹாம் லிங்கன் ஜனாதிபதி பதவி ஏற்றாலும் “முதல் மாது” மிஸிஸ் லிங்கன்தான் அவருக்கு எஜமானியாக இருப்பார் ! மனைவியின் உத்தரவின்றி அவர் எதற்கும் உடன்பாடு தெரிவிக்க மாட்டார்.
எலையாஸ் பிரைஸ்: லிங்கனின் தீர்மானக் கொள்கை சரியானது. நம் எல்லாரையும் விட அவர் மனித உள்ளத்தின் ஆழத்தைக் காண்பவர். அடிமைகளின் விடுதலை தினம் எப்போது வருமோ அந்த நாளை நாம் எதிர்பார்ப்போம். நமக்குள் ஏதேனும் அதில் ஐயப்பாடு உள்ளதா ?
டக்கர், ஹிந்த், பிரைஸ்: (அனைவரும் ஒன்றாய்) இல்லை எதுவும் இல்லை.
(அப்போது ஆப்ரஹாம் லிங்கன் அவரை நோக்கி வருகிறார்)
ஆப்ரஹாம் லிங்கன்: மன்னிக்க வேண்டும் என் தாமதத்துக்கு ! எதையும் மெதுவாகச் சிந்தித்துத் தீர்மானித்து ஒப்புக் கொள்வது என் பழக்கம். உடன்பட்ட பிறகு பின்வாங்குவதில்லை நான் வென்றாலும் சரி வீழ்ந்தாலும் சரி ! முடிவு செய்வது சரியா நான் என்று இருபது முறை தன்னைத் தானே கேட்டுக் கொள்வது என் வழக்கம். நீங்கள் என்னிடம் கேட்க வேண்டிய கேள்வி வேறு எதுவும் உள்ளதா ?
வில்லியம் டக்கர்: ஒன்றுமில்லை மிஸ்டர் லிங்கன் ! உன்னத அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு ஒப்பற்ற ஒருவரைத் தேர்ந்திருக்கிறோம் என்று நாங்கள் பெருமைப் படுகிறோம். உங்கள் பூரணச் சம்மதம் ஒன்றைத்தான் இப்போது எதிர்நோக்கி உள்ளோம்.
ஆப்ரஹாம் லிங்கன்: (முறுவலுடன்) நன்றி, அப்படியானால் ஒப்புக் கொள்றேன்.
டக்கர், பிரைஸ், ஹிந்த், மாகின்டாஷ்: (அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன்) மிக்க நன்றி மிஸ்டர் லிங்கன் !
வில்லியம் டக்கட்: வரலாற்றில் இன்றைய தினம் ஒரு முக்கிய தினம். அமெரிக்க ஜனாதிபதி பதவித் தேர்வுக்கு உங்கள் உடன்பாடு பெற்ற தினம் ! நாங்கள் நால்வரும் பெருமைப் படுகிறோம் மிஸ்டர் லிங்கன். மிக்க நன்றி.
ஆப்ரஹாம் லிங்கன்: (மகிழ்ச்சியுடன்) எங்களுடன் விருந்துண்டு செல்லுங்கள்.
(எல்லாரும் எழுகிறார். சூஸன் வருகிறாள். அவளைப் பின்தொடர்ந்து நால்வரும் விருந்தறைக்குச் செல்கிறார். ஆப்ரஹாம் லிங்கன் மீண்டும் ஒருமுறை அமெரிக்கத் தளப்படத்தை மறுமுறை உற்று நோக்கி விருந்தறைக்குச் செல்கிறார்.)
(தொடரும்)
***************************
தகவல்
Based on The Play
Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition
The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)
1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html
2. Chambers Encyclopedia (1968 Edition)
3. Encyclopaedia Britannica (1973 Edition)
4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)
5. Britannica Concise Encyclopedia (2003 Edition)
6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)
7. The Wordsworth Dictionary of Quotations (1997)
8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961)
9. Lincoln The Unknown By Dale Carnegie (1959)
10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter (1958).
11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)
12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)
13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 25, 2008)]
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -6
- முடிவை நோக்கி !
- மீண்டும் நிலவைத் தேடிச் செல்லும் நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் ! (கட்டுரை : 4)
- கவிஞனின் மனைவி
- மொழியறியா மொழிபெயர்ப்பாளர்களும், விழிபிதுங்கும் தமிழர்களும்…………
- முனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையின் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்!
- நினைவுகளின் தடத்தில் (22)
- பற்றிப் படரும் பாரம்பரிய இசை விருட்சம்
- நிந்தவூர் ஷிப்லியின் ‘நிழல் தேடும் கால்கள்’
- அர்த்தம்
- இரண்டு கவிதைகள்
- மணிவிழா
- வி.பி. சிங் மறைந்தார்
- தமிழியல் ஆராய்ச்சிக்காக பனுவல் ஆய்விதழ்
- சிறந்த தமிழ் மென்பொருளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு
- “பாட்டிகளின் சிநேகிதன்” : நா.விஸ்வநாதனின் சிறுகதைத் தொகுப்பு
- இரண்டு கவிதைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினாறு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் -38 மாக்சிம் கார்க்கி.
- மினராவில் நட்சத்திரங்கள்
- அண்ணாவின் பெருமை
- வேத வனம் விருட்சம் 12 கவிதை
- பாவலர் பாரதியார் நினைவேந்தி…!
- கடைசியாக
- நிலை
- தாகூரின் கீதங்கள் – 57 தொப்புள் கொடி அறுப்பு !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -12 << தீவில் கழித்த இரவுகள் ! >>
- கடவுளின் காலடிச் சத்தம் – 5 கவிதை சந்நிதி