விஸ்வரூபம் – அத்தியாயம் பதினாறு

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

இரா.முருகன்ஃப்ளையிங் ஸ்காட்ஸ்மேன் ரெடி டு லீவ் ஃபார் எடின்பரோ வேவர்லி, ஹே மார்க்கெட், பிர்த் ஓஃப் ஃபோர்த், அப் நோர்த்.

கிங்க்ஸ் கிராஸ் ஸ்டேஷன் முழுக்க கனமாக எதிரொலிக்க ட்வீட் துணியில் உடுப்பு அணிந்த ஒரு நெட்டையன் ரெயில்வே சிப்பந்தி உரக்க அறிவித்துக் கொண்டு போனான்.

ரெயில்வே சிப்பந்திகள் ட்வீட் அணிந்தவர்கள். நெட்டையானவர்கள்.

பறக்கும் ஸ்காட்லாந்துக்காரன் என்று ஏன் ரயிலுக்குப் பெயர் வைக்க வேணும்?

தெரிசாவுக்குப் புரியவில்லை. அது பறக்கும் ஸ்காட்லாந்துக்காரி என்று ஏன் இருக்கக் கூடாது?

வேணாம். தாமஸ் கேட்டால் உடனே ரெயில் கம்பேனிக்கு எழுதிப் போட்டு மாற்றச் சொல்லலாம் என்பான். சகலரும் சட்டமாக ஆரோகணிக்கிற சாத்தியம் பறக்கும் ஸ்காட்லாந்துக்காரிக்கு விபரீதமாகப் பொருந்தி வரும்.

தெரிசாவும் பறக்கும் கறுப்பியானால் இன்னும் சந்தோஷம் அவனுக்கு.

வேண்டாம் வேண்டாம் என்றாலும் சனியன் போல் மனசு இந்த தாமஸைப் பற்றி நினனக்கிறதே. தெரிசாவுக்கு எரிச்சலாக வந்தது. இந்த கசின் இப்படி நாய்க்குட்டி மாதிரி கூடவே ஈஷிக்கொண்டு காலை நக்கிக்கொண்டு வருகிற காரணத்தால் இது நேர்கிறதோ என்னமோ.

கசினை ஓரமாகத் தள்ளி விட்டு கர்த்தரை நினை. போற வழிக்குப் புண்ணியம்.

எது போகிற வழி?

நகருங்க. தயவு செய்து நகர்ந்து போங்க.

பின்னால் நெட்டித் தள்ளிக் கொண்டு யாரோ கடந்து போனார்கள். எந்த கோட்டைக்கோ சீமாட்டி. அவள் வீட்டுக்கார பிரபு எங்கே? பிக்கடலியில் குடித்து விட்டு சாரட் வண்டிக்கு முன் உருண்டு கிடக்கிறானா?

தெரிசா ஜன நெரிசலுக்கு நடுவே நடந்தாள்.

சேச்சி, அந்த முலக் கச்சு.

தூக்கி வாரிப் போட ஒரு வினாடி நின்றாள். விடாமல் துரத்தும் இந்தக் குரல் எங்கே இருந்து வருகிறது? எப்படி இதை இந்தப் பத்து நிமிடத்தில் முழுக்க மறந்து போனேன்?

பின்னால் இருந்து வேகவேகமாக தள்ளுவண்டியில் தோல் வாரால் இறுகக் கட்டிய படுக்கைகளை அடுக்கித் தள்ளிக் கொண்டு வந்த இரண்டு ரயில்வே போர்ட்டர்கள் அவள் மேல் மோதாமல் வண்டியை வளைத்துத் தள்ளிப் போனார்கள்.

சீமாட்டி, கொஞ்சம் கவனமாக நடக்கலாமே.

வயோதிகர் ஒருத்தர் தொப்பியை உயர்த்திச் சொல்லி விட்டு புன்சிரிப்போடு முன்னால் நின்ற ரயில் பெட்டியில் ஏற முனைந்தார்.

சேச்சி. சேச்சி.

பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு தெரிசா அந்த ரயில் பெட்டி பக்கமாக நகர்ந்தாள்.

அந்த ஓரமாப் போ பெண்ணே. மூணாம் வகுப்பு கம்பார்ட்மெண்ட் இல்லே இது.

ரெயில் சிப்பந்தி குரலில் உதாசீனத்தோடு அவளைத் தடுத்தான்.

ரெயில் சிப்பந்திகள் பிரயாணிகளை தினசரி சந்திக்க வேண்டிய பெருந்துன்பமாக நினைப்பவர்கள். அதுவும் தெரிசா போன்ற கறுப்பிகளை. கறுப்பர்களின் தேசத்தை விக்டோரியா மகாராணி ரட்சித்து, போஷித்து அநாதை என்று கருணை கொண்டு வளர்த்து வருகிற காரணத்தால் அல்லவோ இந்தக் கறுப்பி லண்டன் மாநகரில் பிரபுக்களுக்கும் சீமாட்டிகளுக்கும் சரிசமமாக கரிந்த தோலோடு எந்த லஜ்ஜையும் இன்றி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள். ரெயிலில் வேறே, அதுவும் முதல் வகுப்பில் ஏற என்ன அறியாமை இந்த அடிமைச்சிக்கு? மகாராணி சார்பில் அவளை நேர்வழிப்படுத்துவது ரெயில்வேயின் கடமையன்றோ. என்றால், ரெயில்வே சிப்பந்தி என்று மாசா மாசம் அவன் முன்னூறு பவுண்ட் சம்பாத்தியம் வாங்குவது மயிரைப் பிடுங்கவா என்ன? இந்த மாதிரியான தப்பை எல்லாம் தடுக்கத் தானே?

உனக்கு இங்கிலீஷ் அர்த்தமாகலியா பெண்ணே? என் உதட்டைக் கவனிச்சுப் பார்.

அவன் குரலைக் கொஞ்சம்போல் உயர்த்தினான்.

இது – உனக்கான – ரெயில் – பெட்டி – இல்லை.

தெரிசாவுக்கு முன்னால் ரெயில் பெட்டியில் ஏறிய கனவான் ஜன்னல் அருகே உட்கார்ந்து பத்திரிகையைப் பிரித்தார். அது போன வாரத்து பஞ்ச் என்று தெரிசாவுக்கு அட்டையைப் பார்த்தே தெரிந்தது. இதுவா இப்போ முக்கியம்?

ஆபீஸர், பேசறதுக்கு முன்னாடி யார் கிட்டே பேசறோம்னு கவனிக்கணும். இவங்க கிட்டே முதல் வகுப்பு டிக்கெட் இருக்கு.

எங்கிருந்தோ முன்னால் வந்து, மிரட்டும் தொனியில் தாமஸ் குரல் கேட்டது.

ரயில்வே உத்தியோகஸ்தன் தாமஸைக் கூர்ந்து பார்த்தான்.

முதல் வகுப்பு டிக்கெட் இருக்குங்கறதாலே முதல் வகுப்பிலே ஏறிட முடியுமா?

தெரிசாவுக்கு ரோஷம் வந்து விட்டது. அது எப்போதும் தாமதமாகத்தான் வந்து தொலைக்கிறது. உடம்புக்குள், ரத்தத்தில் அடிமைத்தனம் ஊறிப்போயிருப்பதால் இருக்கும்.

உன் கிட்டே உத்தரவு வாங்கிட்டுத்தான் ரயில்லே ஏறணுமா என்ன? கருப்புத் தோல் இருந்தா மூணாம் வகுப்புன்னு எந்த ரயில்வே சட்டத்திலே இருக்கு? எங்கே எடுத்துக் காட்டு. நானும் சட்டம் படிச்சவ தான். மேஜர் பீட்டர் மெக்கன்ஸிஸ் லீகலி வெட்டட் ஒய்ப் ஃபார் தி பாஸ்ட் ட்வெல்வ் இயர்ஸ் அண்ட் வில் பீ ஸோ ஃபார் எவர். ஆல்ஸோ எ சின்சியர் பிரிட்டீஷ் சிட்டிசன் இன் எவ்வரி ரெஸ்பெக்ட்.

வசீகரமான ஆங்கிலத்தில் அழுத்தமாக வந்து விழுந்த வார்த்தைகள் அந்தச் சிப்பந்தியைத் தகித்துப் போட்டன. இவளிடம் வம்பு வளர்த்தால், க்ரேட் நார்த்தன் ரயில்வே கம்பேனி நிர்வாகி நார்ட்டன் துரை காதுக்கு உடனே விஷயம் போய்ச் சேரும். இன்றைக்கு ராத்திரியாகிற போது இந்தக் குப்பாயத்தைக் களைந்து வைத்துவிட்டு உத்தியோகத்திலிருந்து இறங்க வேண்டிப் போகும். அப்புறம் பிக்கடலி ஓரமாக குந்தி உட்கார்ந்து தொப்பியை எடுத்து எடுத்து ஒவ்வொருத்தராகப் பார்த்து கும்பிட்டு சில்லறை இருந்தா போடுங்க பிரபுவே என்று யாசிக்க வேண்டி வரும்.

ரெயில்வே சிப்பந்திகள் பயந்தவர்கள். உத்தியோகமே சர்வமுமாக இருப்பவர்கள்.

அவன் அவசரமாகத் தொப்பியைத் தலையில் இருந்து எடுத்து தெரிசா முன்னால் ஆகப் பாதிக்குக் குனிந்து வணங்கினான். கழுத்துப் பட்டியில் அழுக்குத் தீற்றியிருக்கும் நாள் கணக்காகக் குளிக்காத வெள்ளைக்காரன்.

தாமஸ் அவனை அலட்சியமான கையசைப்பால் அந்தாண்டை போகச் சொல்லி ஒதுக்கி விட்டு தெரிசா படி ஏற வாகாக ரயில்பெட்டிக் கதவைப் பிடித்தபடி நின்றான்.

குறுகிய படிகளில் தெரிசா ஏறும் போது திரும்ப சேச்சி, சேச்சி.

தாமஸ், உனக்குக் கேக்குதா? யாரோ என்னை கூப்பிடற சத்தம்.

யாரு, அந்தக் கிறுக்கு பிடிச்ச கிழட்டு நாய் ரயில்வேக்காரனா? அவன் காலுக்கு நடுவிலே கல்லடி பட்ட மாதிரி பொத்திக்கிட்டு அங்கே பதுங்கறான் பாரு.

தாமஸ் தணிந்த குரலில் சொல்லி விட்டு உரக்கச் சிரித்தான். அவளோடு நெருக்கமான வார்த்தை பகிர்ந்து கொள்கிற போதை கண்ணில் தெரிந்தது.

அந்த ரயில்வேக்காரனைச் சொல்லலே.

தெரிசா வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினாள். இவனுக்குத் தெரிந்து என்ன ஆக வேணும்?

நீ உட்காரு தெரிசா. பெட்டி படுக்கையை எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கேன். போர்ட்டர் இன்னும் வந்து சேரலை. வேறே எங்கேயாவது போய் நிக்கறானான்னு பார்த்துட்டு வரேன்.

தாமஸ் ரயில் பெட்டியில் இருந்து குதித்து இறங்கி, நெரிசலை விலக்கிக் கொண்டு வேகவேகமாக நடந்து போனான்.

தெரிசா பழக்கூடையை பக்கத்தில் நெருக்கமாக வைத்துக் கொண்டாள். செல்லமாக அதை அணைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

விசாலமான ரயில் பெட்டி அது. இங்கேயே குடித்தனம் செய்ய உத்தேசித்தாலும் சரி என்று சகல ஏற்பாடும் செய்து கொடுக்க க்ரேட் நார்த்தர்ன் ரெயில்வே கம்பேனி சித்தமாக இருந்ததாகத் தெரிந்தது தெரிசாவுக்கு. அதுவும் அவள் போன்ற முதல் வகுப்பு பிரயாணிகளுக்கு. கருப்பும் வெளுப்பும் பிரச்சனை இல்லை.

ஜன்னல் ஒன்று விடாமல் பூப்போட்ட திரைச் சீலை மறைக்க, உட்காரும் ஆசனம் கெட்டி மெத்தை வைத்துத் தைத்து, வெல்வெட் தலையணைகளோடு திருவாங்கூர் மகராஜா கொட்டாரம் மாதிரி நேர்த்தியாக இருந்தது.

அனந்தைக் கொட்டாரத்து அங்கணம் இல்லை இது. உள்ளே வெகு தூரம் கடந்து போனால், தம்பிராட்டிகள் இருக்கப்பட்ட இடம்.

தெரிசா திருவனந்தபுரம் போயிருக்கிறாள். கொட்டாரத்துக்கோ பத்மனாப ஸ்வாமி க்ஷேத்ரத்துக்கோ எல்லாம் போனதில்லை. தகப்பன் கிட்டாவய்யன் வேதத்தில் ஏறுவதற்கு முன் கூட்டிப் போயிருந்தால் அந்த வினோதம் எல்லாம் பார்த்து வரக் கிடைத்திருக்குமோ என்னமோ.

கொட்டாரம் போய், வயசன் மகராஜாவின் சயன கிரஹத்தைப் பார்ப்பதில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது?

கொட்டாரம் மேத்த மணி உண்டே சேச்சி. க்ஷேத்ரக் குளத்திலே ஸ்நானம் பண்ணிட்டு அம்பலத்தில் கேரித் தொழுதால் என்னமா ஒரு சம்திருப்தி. வந்து என்ன? எல்லா அம்பலத்திலேயும் கேரியாச்சு. இப்போ இப்படி அலையறேன்.

அந்தப் பெண்குரல் காதுக்குள் ரகசியம் பேச, தெரிசாவுக்குக் கண் இருண்டு வந்தது.

இருக்கையில் சாய்ந்து படுத்து ஒரு வினாடி கண்ணை மூடிக் கொண்டாள் அவள்.

மனசு குறக்களி காட்டுகிறது. காலையில் அசுத்த நினைப்பாக பீட்டரோடு சுகிப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டே தேவ ஊழியம் பண்ணக் கிளம்பினது தப்பு. அதுவும் தலை நனைய ஒரு குளி இல்லாமல், விழுப்பு வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டு. கூடவே மேலே கையை வைக்க நேரம் பார்க்கிற கசின் கடன்காரன் வேறே.

எல்லோரும் நரகத்துக்குப் போவார்கள். ஹாட்லி பிரபு, ஸ்கொயர் ஆஃப் நாஷ்வில், தெரிசாவை அவிசாரி என்று சொன்ன காக்னி சாரட்காரன், மார்த்தா கெல்லருக்கு முத்தம் கொடுக்கும் பட்டாள உடுப்பு அணிந்த ஒற்றைக் கைய்யன், இந்த ரெயில்வே சிப்பந்திகள், தாமஸ், பீட்டர் எல்லாரும். வரிசைக் கடைசியில் அவள் இருப்பாள்.

கர்த்தரே என்னை ரட்சித்து அருளும். சப்த ரூபமாக, பிரத்தியட்சம் இல்லாத காட்சி ரூபமாக மனசை அலட்டுகிற சகலமானதையும் விலக்கி என்னை வழிநடத்திப் போம். உமக்கு ஸ்தோத்ரம்.

கழுத்தில் மாட்டிய சிலுவையைக் கண்ணில் ஒற்றியபடி பிரார்த்தித்தாள். கண்ணைத் திறந்தபோது ரயில்பெட்டியிலும் வெளியிலும் நல்ல வெளிச்சமாக இருந்தது. வெளியே ரயில் ஏற வருகிறவர்கள் எழுப்பும் சத்தத்தையும், உருளை வண்டி இரைச்சலையும், எங்கோ குழந்தை வீறிடுகிறதையும் தவிர மருட்டுகிற மாதிரி காதுக்குள் வேறு ஏதும் சத்தம் வந்து படவில்லை.

மேடம், குடிக்க இதமாக வென்னீர் வேணுமா?

வயதான ரயில்வே சிப்பந்தி ஒருத்தன் அவள் அருகே வந்து குனிந்து மெல்லிய குரலில் கேட்டான். அவனுடைய மரியாதை தெரிசாவுக்கு வேண்டியிருந்தது. இவன் சொர்க்கத்துக்குப் போகக் கூடியவன்.

வென்னீர் எடுத்து வந்து கொடுத்து விட்டு அங்கே போகட்டும். கொஞ்சம் தாமதமானாலும் பாதகமில்லை.

குடிக்கக் கொஞ்சம் வென்னீர் கிடைக்குமா?

தாராளமாக. இதோ கொண்டு வரேன். சாப்பிடவும் ஏதாவது கொண்டு வந்து தரட்டுமா?

வயசன் திரும்ப மரியாதை விலகாமல் விசாரித்தான்.

எதுக்கு? இந்த மாம்ச பதார்த்தங்கள் அவளுக்கு ஒத்துக் கொள்ளாது. பழமும், ரொட்டியும், பப்படமும் போதும். நேற்றைக்கு மரியா கெல்லர் பாலோடு கொண்டு வந்த பாலாடைக் கட்டியும் கூட இருக்கிறது. நாலைந்து கேக்குகளும் சாப்பாட்டுக் கூடையில் உண்டு. முழுக்கச் சாப்பிட்டு ஊட்டுப்புறை சாப்பாட்டுக்காரன் போல் வயிற்றைத் தள்ளிக் கொண்டு தூங்கலாம். ஓடுகிற ரயிலில் செய்ய வேறு என்ன இருக்கு?

இந்த ரெயில் எப்போது எடின்பரோ போகும்?

அந்தக் கேள்வியை எதிர்பார்த்ததுபோல் ரெயில் உத்யோகஸ்தன் தகவல் கொடுத்தான்.

வண்டி பகல் பனிரெண்டுக்குக் கிளம்பும். அதாவது இன்னும் பதினைந்து நிமிடத்தில். கிரந்தம் ஒண்ணரை மணிக்கு.

கிரந்தமா? அம்பலப்புழை கிருஷ்ணஸ்வாமி அம்பலத்தில் தாளியோலையில் எழுதிய பழைய கிரந்தங்களை சதா உருவிட்டபடி சுற்றம்பலத்திலும் குஞ்சன் நம்பியார் ஓட்டந்துள்ளிய மிழா வைத்த மண்டபத்திலும் உட்கார்ந்திருக்கும் நம்பூத்ரிகள் நினனவுக்கு வந்தார்கள். கோட்டும் வாயில் புகையும் சுருட்டும் முன்குடுமியுமாக இங்கே கிரந்தம் ஸ்டேஷனில் ரயிலேறக் காத்திருக்கிற வெள்ளைக்கார நம்பூத்ரி ஒருத்தர் ரெயில்வே சிப்பந்தியின் முகத்தில் அழிச்சாட்டியமாக ஒட்டிக்கொண்டு சிரிக்க தெரிசாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

ரெயில்வே உத்யோகஸ்தன் மரியாதைக்குச் சிரித்து வைத்து, ராகம் இழுப்பது போல் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தான்.

யார்க் மூணு மணி பத்து நிமிஷத்துக்கு வரும். பெர்விக் ஆறரை மணிக்கு போயிடலாம். எடின்பரோ வேவர்லி ஏழே முக்காலுக்கு. எட்டு மணிக்கு முன்னாடி எடின்பரோ ஹே மார்க்கெட். அதை விட்டா அப்புறம் டால்மெனி.

ஒரு புன்சிரிப்போடு அவனை நிறுத்தச் சொல்லிக் கைகாட்டி, தெரிசா நன்றி சொன்னாள். அவன் இன்னொரு தடவை ஜாக்கிரதையாக வணங்கிவிட்டு வென்னீர் விளம்பி எடுத்துவரப் போனான்.

எடின்பரோ ஹே மார்க்கெட் பகுதியில் தான் தெரிசா இருக்க விடுதி ஏற்பாடு செய்ததாக தாமஸ் சொல்லியிருந்தது நினைவு வந்தது. ராத்திரி நேரத்தில் அங்கே போய் இறங்கினால், யாராவது வாசல் கதவைத் திறந்து உள்ளே விடுவார்களா? இருக்க, படுக்க, குளிக்க எல்லாம் சவுகரியமான இடம்தானா அது?

தாமஸ் பார்த்துக் கொள்வான் எல்லாவற்றையும். அவனுடைய சகாயமும் வேண்டித்தான் இருக்கிறது. ஜாக்கிரதையாகப் பழகினால் அவனும் விசுவாசமான வேலைக்காரனாக வென்னீர் கொண்டு வந்து கொடுப்பான். சொர்க்கத்துக்கும் போக சிபாரிசு செய்ய தெரிசா அப்போது ஒருவேளை உத்தேசிக்கக் கூடும்.

யார்க்கிலேருந்து பெர்விக் போகிறபோது அதி விரைவாக மணிக்கு ஐம்பத்திரெண்டு மைல்கல் வேகத்தில் ஓடற வண்டி இது. அப்புறம் மேட்டுப் பிரதேசம் ஆனதாலே பெர்விக்லேருந்து எடின்பரோ மணிக்கு நாற்பத்தாறு மைல் வேகத்திலே தான் போகவேண்டி வரும். ரம்மியமான ஸ்காட்லாந்து பிரதேசம்.

போகிற வழியில் கொஞ்சம் நின்று கூடுதல் தகவல் அறிவித்தான் ரெயில்வே சிப்பந்தி. அவன் ஸ்காட்லாந்துக்காரனாக இருக்கலாம். ஸ்காட்லாந்துக்காரன் என்றால் பாவடை சுற்றின மாதிரி இடுப்பில் கட்டியிருப்பானே.

ரெயில்வே சிப்பந்தி கில்ட் அணிவது தடை செய்யப்பட்டிருக்கிறதோ என்னமோ.

அவன் சொன்ன மேலதிகத் தகவலுக்காக இன்னொரு தடவை நன்றி சொன்னாள் தெரிசா.

அவசர அவசரமாக தெரிசாவின் பிரம்புக் கூடையையும், பெட்டி படுக்கையும், தாமஸின் பிரயாண உருப்படிகளுமாக ஒரு ரெயில்வே போர்ட்டர் நுழைந்தான். தெரிசாவின் காலடியில் பெட்டிகளை இழுத்து வைத்துவிட்டு, மேலே பலகைத் தட்டில் பிரம்புக் கூடையை வைத்தான்.

அது தீனி சமாசாரம் நிறஞ்ச கூடை. மேலே வைச்சா பப்படம் நொறுங்கித் தலையிலே சிதறும்.

தாமஸ் வழக்கத்தை விட உரக்கச் சொல்லிக் கொண்டு போர்ட்டருக்குக் காசு கொடுத்தான். ரயில் கிளம்பி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.

சீக்கிரம் இறங்கு. இல்லேன்னா அடுத்த ஸ்டேஷன் வரை இங்கே தான் இருந்தாகணும்.

தாமஸ் பதற்றத்தோடு சொல்ல, போர்ட்டர் எல்லாம் தெரிந்த பாவனையில் சிரித்தான்.

அவுட்டரில் வண்டி ஐந்து நிமிஷம் நின்னுட்டுத்தான் யாத்திரையாகும். அப்ப இறங்கிக்கலாம்.

அவன் சொன்னபோதே ரயில் வேகம் கூட்ட, பாய்ந்து அவசரமாக இறங்கிப் போனான் அவன்.

சொன்னா கேக்கணும், எனக்குத் தான் எல்லாம் தெரியும்னு உன்னை மாதிரி ஒரு அடம்.

தாமஸ் தெரிசாவை சின்னச் சிரிப்போடு பார்த்தான். அவளும் சிரிக்க வேணுமென எதிர்பார்க்கிறான். சிரித்துவிட்டுப் போகலாம். என்ன குறைஞ்சு போகும்?

ப்ளையிங் ஸ்காட்மேன் வண்டின்னு சொன்னா, காட்டன் க்வீன் ரெயில் பக்கம் பெட்டி படுக்கையோட நிக்கறான். பிடிச்சு இழுத்துட்டு வந்தேன். முழு முட்டாள்.

அவன் அங்கேயே இறங்கிட்டான். இன்னும் ஏன் நீ அவனை விட மாட்டேங்கறே?

தெரிசா கேட்டாள்.

முட்டாள்களை சகிச்சுக்கறது மாதிரி அபத்தமான விஷயம் வேறே இல்லே. ஒரே நாளில் எத்தனை பேர்?

அவன் மனசுக்குள் கணக்குப் போட்டு விரல் மடக்கினான்.

அது போறது. இந்த ரயில்லே எலக்ட்ரிசிட்டி விளக்கு இருக்காமே. மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகையிலே படிச்சிருக்கேன். இங்கே எங்கேயும் காணோமே?

தெரிசா விசாரித்தாள்.

முதல் வகுப்பில் இன்னும் வரலை. மகாராணியோ வேல்ஸ் இளவரசரோ இந்த ரயில்லே ஸ்காட்லாந்து போகிறபோது தனியா ஒரு பெட்டி சேர்ப்பாங்க. அதில் மின்சார விளக்கு, தனி சமையலறை, சிப்பந்திகளுக்கான இடம், ஒயினும், பிராந்தியும் நிறைச்ச பார், அவசர சிகிச்சைக்கு மருந்தோடு ஒரு அப்பாத்திக்கரி, டாக்டர் இப்படி எல்லா ஏற்பாடும் இருக்கும்.

முதல் வகுப்பில் என்ன எல்லாம் இருக்கும்?

தெற்குக் கோடியில் அருமையான கழிப்பறைகள், நீ குடிச்சுட்டு இருக்கியே வென்னீர், அது. வேணும்னு கேட்டா ஏற்கனவே தயார் செய்து வைத்த சாப்பாடு, போர்த்திக்க கம்பளிப் போர்வை, பத்திரிகை, உபசரிக்க சேவகன், அப்புறம் நான். இத்தனையும் உண்டு.

அவன் நாடகத்தில் அபிநயிப்பது போல் இரண்டு கையையும் விரித்துக் காட்டினான். பிரயாணம் அவன் மனசை லேசாக்கி இருந்ததாக தெரிசாவுக்குத் தோன்றியது. அவனுடைய சந்தோஷத்தை நசுக்கிப் போடும் எந்த வார்த்தையும் பேசவோ, செயல்படவோ மாட்டாள் அவள்.

உடனே வருவதாகச் சொல்லி தாமஸ் வண்டியோடு கூட ஆடிக் கொண்டு நீள நடந்து போனான். தெற்குக் கோடியில் கழிப்பறை வசதிகளைத் தேடி இருக்கும். அங்கே குளிக்கிற வசதி கூட இருக்குமா? இருந்தால் உடனே குளித்து. வேணாம். உடுப்பை மாற்றிக் கொள்வது கஷ்டமாகிப் போகும். விழுத்துப் போட்ட ஈரத் துணியை எப்படி எடுத்துப் போவது? பெண்களுக்குத் தனிக் கழிப்பறை இருக்குமா? தாமஸிடம் கேட்பதை விட அந்த வயசன் ரெயில்வே சிப்பந்தியிடம் விசாரிக்கலாம். இல்லை, அவளே கூட காலாற நடந்து தேடிவிட்டு வரலாம்.

காட்டன் க்வீன் ரெயில் எந்த ஊருக்குப் போகிறது? வென்னீர் கொண்டு வந்தவன் திரும்பி வரும்போது மறக்காமல் விசாரிக்க வேணும். ஒரு தகவல் தான் அது. எப்போதாவது எங்கேயாவது உபயோகப்படும். மனுஷர்கள், தகவல், பொருட்கள் எல்லாருக்கும் எல்லாத்துக்கும் உபயோகம் இருக்கிறது. உபயோக சூன்யமான ஒன்றால் யாருக்கும் பிரயோஜனம் ஏதும் ஏற்படப் போவதில்லை.

சேச்சி, அந்த முலக் கச்சு. ஓரமாக் கிழிஞ்சு இருக்கு. உங்களுக்கு உபயோகம் ஆகாது. கொடுத்திடுங்கோ. என் குழந்தை. பத்து வருஷமா தெரட்சி ஆகி இப்படி உடுப்பு அரையும் குறையுமா நிக்கறதை பார்த்தா பெத்த வயிறு பத்தி எரியறதே. பசி வேறே. தாகம் வேறே. என்னை ரட்சிக்க மாட்டியா என் பொன்னு சேச்சி?

பறக்கும் ஸ்காட்லாந்துக்காரன் வேகம் கொண்டபோது எதிர் வசத்து இருக்கையில் அந்தப் பெண்ணைப் பார்த்தாள் தெரிசா. கூடவே கோழிக் குஞ்சு மாதிரி நடுங்கிக் கொண்டு ஒரு சின்ன வயசுப் பெண் குழந்தையையும்.

என்ன ஏது என்று தெரியாத சோகத்தில் அவள் மனசு கரைந்து போனது.

தெரிசா அடக்க முடியாமல் அழ ஆரம்பித்தாள்.

(தொடரும்)


eramurukan@gmail.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts