விஸ்வரூபம் – அத்தியாயம் பனிரெண்டு

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

விஸ்வரூபம் – அத்தியாயம் பனிரெண்டு


இந்தக் கழுக்குன்றம் என்ற ஸ்தலம் இப்படி அதிக உயரமும் இல்லாமல் சுற்று வட்டாரத்து பூமியோடு கலந்து சமதரையாகவும் கிடக்காமல் ரெண்டுங்கெட்டானாக நிற்கிற அதிசயத்தை எனக்கு நானே பிரலாபித்துக் கொண்டேன். கொஞ்சம் இடைவெளி கொடுத்து நடந்து வந்து கொண்டிருந்த கல்யாணி என்ற பெண் என்ன சமாச்சாரம் என்கிறதுபோல் என்னைப் பார்த்தாள்.

கேட்டு ஒரு வார்த்தை அரை வார்த்தை சொன்னால் முத்து உதிர்ந்து விடுமோடீ? அட உதிரட்டுமே, அதையும் தான் பார்க்க வெகுவாக எனக்குள் ஆசையுண்டு கறுத்த பெண்ணே. உன் எச்சில் ருசியோடு அதையெல்லாம் எடுத்து மாதுளம் முத்தாக வாயில் மெல்ல எனக்குக் கொடுத்து வைத்திருக்கிறதா தெரியலை போ.

மட்டக் குதிரை வண்டி சவாரி சுகமானது அல்லவே. சுபாவமாகவே கோணக்க மாணக்க என்று திரியும் இந்த ஜந்துக்களுக்கு கண்ணை மறைத்து சேணத்தையும் பூட்டி ஓட்டிப் போகிறபோது அதுகள் தடுமாறித் தத்தளித்து சஞ்சரிப்பது பார்க்கவே கஷ்டமான ஒண்ணு இல்லையோ?

தோள் சஞ்சியை ஒரு தோளில் இருந்து மற்றதுக்கு மாற்றிக் கொண்டு நான் இங்ஙனம் உரக்கச் சொன்னதும் கல்யாணிக்குக் கேட்க வேண்டும், அவள் அனுசரணையாக வர்த்தமானம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தபடிக்குத் தான். கூடவே நடந்தால் மட்டும் சகஜமாக முடியாது என்றபடியால் அவளோடான சம்பாஷணை மூலம் அதை உண்டாக்கிக் கொள்ள மெனக்கெட வேண்டிப் போனது. அந்தக் கடன்காரியோ கல்லும் பாறையுமாக இருந்த பாதையில் கல் மனசோடு மேல் நோக்கி காலடி வைத்து ஏறுகிறதிலேயே குறியாக இருந்தாள்.

இதென்ன பேசாமடந்தைப் பெண்ணும் அசமஞ்சமான பிராமணனும் நடந்து போன வழிக்கு வைத்து கரடியைப் பார்த்த கதை போல் இருக்குதே.

நான் அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தேன். நினைத்தபடி சரியாகத்தான் போய் விழுந்தது அது.

அது என்ன கதை பிராமணரே?

அவள் முகத்தில் சிரிப்பு தெரிய என்னைப் பார்த்துக் கேட்டாள். ஆனாலும் அந்தச் சிரிப்பு வாயைத் திறந்து வந்த ஒன்றில்லை. மூக்கு கொஞ்சம் விடைத்து புருவம் ஏறிக் கண்ணால் சிரிக்கிற அபூர்வமான அழகி அவள்.

செங்கல்வராய முதலிக்காக கொக்கோகம் காலிகோ பைண்ட் புஸ்தகம் அச்சுப் பிழை பார்த்துக் கொடுத்த வேளையில் பதுமினி, சித்தினி இப்படி பல ஜாதிப் பெண்களைப் பற்றிய புலவரின் வர்ணனை அதுமிதுமாக குழப்பமாக நினைவில் வந்து போனது. இவள் என்ன ஜாதி? எல்லா ஜாதியும் கலந்த அபூர்வ புஷ்பமா?

ஓய் பிராமணரே, ரெட்டிப் பெண் கேட்டால் பதில் சொல்லக் கூடாதுன்னு உம் சாஸ்திரம் சொல்லுதாக்கும். வாய் வார்த்தைக்கும் தீட்டு பார்க்கிறவரா நீர்?

வெகு சுபாவமாக அவள் அரை மரியாதை விளிக்கு வந்து சேர்ந்தது நல்லதுக்குத்தான் என்று நினைத்தேன்.

என்ன கேட்டாயம்மா?

அம்மகாருவும் ஆச்சு, அத்தகாருவும் ஆச்சு. என்னைப் பார்த்தா தலை நரைச்ச கிழவி மாதிரியா தெரியறேன்? பதினாறு முடிஞ்சு பத்து நாள் தான் ஆச்சு ஓய்.

இந்த விளையாட்டைத் தொடர நான் சித்தம் செய்து கொண்டபடி அவளிடம் பதிலுக்கு வார்த்தையாடியது இப்படியாக இருந்தது.

நான் என்ன பித்தனா பெண்ணே? உனக்கு பதினாறு வயசுக்கு மேலே ஒருநாள் கூட்டிச் சொன்னாலும், மதியம் அன்னம் எடுக்க வரும் கழுகு சித்தெ முன்னாடியே வந்து சேர்ந்து என் நெஞ்சில் கொத்திப் புண்ணாக்கிப் போடும் என்பது சர்வ நிச்சயம். அதுக்குப் பிறகு எனக்குத்தான் பத்தும், கிரேக்கியமும், வருஷாப்தியும்.

சொன்னபடிக்குக் குடுமியை அவிழ்த்து உதறி மறுபடியும் இறுக முடிந்தேன்.

யாரோ போன வழிக்குக் கரடி எதிர்ப்பட்ட கதையை குடுமியில் முடிந்து வைத்திருக்கிறீரா? இல்லை கரடி அங்கே உக்கார்ந்து இருக்கா?

கரடி இருக்கப்பட்ட இடத்தைச் சொல்ல நினத்தேன். எனக்கு சிரிப்பு வந்தது. கரடிக் கதை. பிராமணக் கரடி. கரடிக் கன்னி. மான் கண்ணி. மெல்லிதழ் பேதை. முத்தன்ன வெண்நகையாள். விசாலமும் திடமுமான முலைச்சி. கரடிக் கதை என்று ஒன்று இருக்கா என்ன? அந்த நிமிஷம் அவளிடம் பேச எடுத்து விட்ட விஷயம் இல்லையோ அது?

நான் உத்தியோகம் பார்க்கும் பொடிக்கடையில் வீரராகவ ஐயங்காரன் என்ற சோழியப் பிள்ளை ஒருத்தன் என் கூட நின்று வாழைப் பட்டையில் பொடி மடித்துத் தருகிற ஜோலியில் மும்முரமாக இருக்கிறான். கடையில் ஆள் வராத நேரத்தில் அவன் இட்டுக்கட்டி ஹாஸ்யமாகப் பலதும் சொல்வது வழக்கம். பரமார்த்த குரு கதை என்ற பெயரில் ஒரு பாதிரி தூஷணணயாக எழுதின ஒரு கிரந்தத்தை ஒரு தினம் அவன் எடுத்து வந்து உரக்கப் படிக்க அந்த வர்த்தமானங்களைக் கேட்டு எல்லோரும் அடக்க முடியாமல் விழுந்து விழுந்து கண்ணிலே நீர் வரச் சிரித்தோம். கடையின் தலைமை உத்யோகஸ்தரான ராவ்காரு தலையை உயர்த்திப் பார்த்து உடனே அதை நிறுத்திப் போடுமய்யா என்று சத்தம் கூட்டிச் சொன்னார்.

இப்படி அன்னிய மத தூஷணையாக ஒரு பாதிரி மனம் போனபடிக்கு எழுதினதை எல்லாம் மற்ற பாதிரிகள் புஸ்தகம் போட்டு நாலு காசு சம்பாதிச்சுக் குப்பாயத்தில் அடைச்சுக் கொள்கிறாங்கள். அவங்களெல்லாம்தான் அப்படி என்றால் உமக்கும் ஏனய்யா புத்தி கெட்டுப் போனது ஐயங்காரே? அதைக் கொண்டு வந்து உத்தியோக நேரத்தில் உரக்க வாசித்து மற்றவர்களை என்னத்துக்கு இம்சைப் படுத்தணும்?

ராவ்காரு சொன்னபடிக்கு வீரராகவன் என்ற சோழியப் பிள்ளை வாசிப்பதை நிறுத்தினாலும் நான் அந்த கிரந்தத்தை ஒரு ராத்திரி கடன் வாங்கிப் போய் லலிதாம்பிகைக்குப் படித்துக் காட்டி அவளையும் சந்தோஷப்படுத்த நினைத்தேன். ஆனாலும் அவள் எழுத்தறிவில்லாத காரணத்தால் இதில் இருக்கப்பட்ட ஹாஸ்யம் புரியாமல், பரமார்த்த குருவுக்கு அஞ்சு சிஷ்யர்கள் என்று ஆரம்பித்த மாத்திரத்திலேயே வாயைப் பிளந்துகொண்டு நித்திரை போய்விட்டாள். அந்தக் கதையும் கல்யாணியோடு சல்லாபிக்கிற நினைவில் நடந்த எனக்கு உடனடியாக ஞாபகத்தில் வரவில்லை.

சரிதான் போ, நாமே புதுசாக ஒரு கற்பனையை எடுத்து விடலாம் என்று உத்தேசித்து மேற்கொண்டு வார்த்தை சொல்லலானேன்.

சாஸ்திரம் படித்து விட்டு வந்த கரடியொன்று வழியோடு போன பிராமணப் பிள்ளையை வம்புக்கு இழுத்து இலக்கண சந்தேகம் கேட்க, அவன் திருதிருவென்று முழிக்கிறான். இப்படி ஆரம்பித்துக் கதை கட்ட ஆரம்பித்தேன். என்ன மாயமோ இந்தப் பொண்ணு என் அண்டையில் இருந்து ஏற்படுத்தியது? சரம் சரமாக வார்த்தைகள் ஒண்ணோடு ஒண்ணு பின்னிப் பிணைந்து வாயிலிருந்து நேர்த்தியாகப் புறப்பட்டது. எனக்கே அது வெகு சுவாரசியமாக இருந்தது.

எனக்குத் தெரிந்த சமஸ்கிரதமும் தமிழ் செய்யுளும் சேர்த்து அந்தக் கதையை அவளுக்கு ஒருவாறு சொல்லி முடித்தேன். மேற்படி கட்டுக்கதை தற்போது ஞாபகத்தில் இல்லாத காரணத்தால் அதை துரைத்தனக்கு உண்மை உரைக்க எழுதும் இந்த லிகிதத்தில் சேர்க்க இயலாமல் போனது. பெரிய மனசு பண்ணி மன்னிக்க வேணும் என்று கோருகிறேன். பிற்பாடு அது நினைவில் வந்தால் அனுபந்தமாக அனுப்ப இந்த அடிமை பிராமணன் இனி ஆயுசுள்ளவரை சித்தம்.

நான் விஸ்தாரமாகக் கதை சொல்லி முடித்த பிறகு கல்யாணி முகத்தில் ஒரு சகஜ பாவம் தட்டுப்பட்டது. பிரவாகமாக செய்யுள் என் மனசில் மேலே கிளம்பி வந்தது.

இளமான் கன்னி கண்ணியில் வீழு பெண்மான். தேமா தேமா கூவிளம் தேமா தேமா. வாம்மா. செய்யுளாக எனக்கு வசப்பட்டு என்னோடு வாயேண்டீ.

உம் தோளில் சஞ்சியில் என்ன வைத்திருக்கிறீர்? மடி வஸ்திரம் தானே?

எல்லாம் தெரிந்த பாவனையில் கேட்டாள் அவள்.

துணி இல்லை. ஆகாரம். மதியம் பசித்தால் எடுத்து உண்ண சத்துமாவும் நாலைந்து மலைவாழைப் பழமும்.

எனக்குப் பசித்தால் கொடுப்பீரா? இல்லை தீட்டாகிவிடுமா?

என்னையே கொடுப்பேனடி என்று நினைத்தபடி சஞ்சியைத் திறக்க ஆயத்தமானேன்.

வேணாம். இப்போ பசி கிஞ்சித்தும் இல்லை.

அவள் சொல்லிவிட்டு ஒரு வினாடி என்னை கேசாதி பாதம் உற்று நோக்கினாள். ஆள் மிடுக்கு அவளை அசத்திப்போட்டது அவள் பார்வை தரைக்குக் கவிழ்ந்ததில் தெரிந்து போனது.

நீர் என்ன உத்தியோகத்தில் இருக்கிறீர்?

முணுமுணுப்பாக விசாரித்தாள் கல்யாணி.

கருப்புப் பட்டணத்தில் பிரசித்தமான மூக்குத் தூள் விற்கிற கடையை என் பூஜ்ய பிதா எனக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டு ஸ்வர்க்கம் போயிருக்கிறார். ஒரே மகனான நான் கலாசாலையில் பரீட்சை கொடுத்து ஜெயமடைந்தாலும் வேறு துரைத்தன உத்தியோகம் வேண்டம் என்று முடிவு செய்து கடையை முழுக்கக் கட்டி நிறுத்தி நிர்வாகம் செய்து வருகிறேன். புகையிலை லட்சுமி மாதிரி வஞ்சனை இல்லாமல் தனத்தை வழங்கும் தேவதையாச்சே.

அவள் தனத்தை வெறித்தபடி மனசறிந்து பொய் சொன்னேன். மார்ச்சீலையை சரியாக்க மறந்து போயிருந்த அவள் கண்ணை விரித்து இதையெல்லாம் ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு மேற்கொண்டும் கேள்வி போட ஆரம்பித்தாள்.

எத்தனை குழந்தைகள் உமக்கு?

சரியாப் போச்சு. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை கல்யாணி.

இன்னொரு பொய்யை முந்தியதுக்கு மேலே வைத்துக் கட்டும்போது சுவாதீனமாக அவள் பெயரையும் விளித்துச் சேர்த்துக் கொண்டேன்.

கல்யாணம் ஆகலியா? எனக்கும் அதேபடி தான். தேச ஆச்சாரப்படி பார்த்தால் நாம் ரெண்டு பேரும் இப்படி தனியாக சஞ்சரிப்பது சரியில்லை. நீர் ஒரு பரிசுத்த ஆத்மா என்று என் அம்மாள் உம்மோடு மலையேறி தெரிசனம் செய்து வரச் சொல்லி என்னை அனுப்பி வைத்தாள். இல்லாவிட்டாலும் பார்த்த மாத்திரத்திலேயே நீர் கண்யமான மனுஷ்யர் என்று எனக்குத் தெரிஞ்சு போனதே.

அவள் சுபாவமாகச் சொன்னாள். காதில் கடுக்கனும், ஜரிகை வேஷ்டியும் வாயில் அலங்காரமான வார்த்தையும் எப்படியெல்லாம் நினைக்க வைத்துவிடுகிறது.

தேச ஆச்சாரம் அதுபாட்டுக்குக் கிடக்கட்டும். தேக ஆச்சாரம் உன்னை இழுத்துப் பிடித்துக் கிடத்தச் சொல்கிறதடி கண்ணே.

அவளுக்குக் கொஞ்சமும் சமஸ்கிருதம் தெரியாதது வசதியாகப் போனது. அரவம் மாட்லாடுவேன் என்று சொன்னாலும் தமிழும் அவளுக்கு வராத பாஷைதான்

எனக்கு நாளைக்கு மறுதினம் கல்யாணம் ஆகப்போறது. தெரியுமா?

அவள் குசும்பாகப் பார்த்தபடி கேட்டாள்.

சொன்னால் தானே தெரியும் ரெட்டிப் பொண்ணே. ஆனாலும் அவசரப் பட்டுட்டியே.

நான் கவலையோடு முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வதாகப் பாவனை பண்ணினேன்.

என்ன அவசரத்தைக் கண்டீர்? உம்ம ஜாதியில் பிள்ளை பார்த்திருப்பீரா?

நான் இல்லையா?

ஹாஸ்யம் சொல்கிறதுபோல் இஷ்டமானதைச் சொல்லிப் போட்டேன்.

கேட்டபடி அவள் துருத்திய நாக்கை உதட்டால் கௌவிக்கொள்ள வேணாமோ? பொறுடா பிரம்மஹத்தி என்றது மனசு. என்னத்துக்காகப் பொறுக்கணும்?

கொஞ்சம் நெருங்கிப் போனேன். அவள் தலைக்குப் பூசியிருந்த நல்லெண்ணெய்க்குத் தான் என்ன மாதிரி ஒரு அமானுஷ்ய வாசனை? கொண்டித் தோப்பு வைத்தியன் கொடுத்த மயில் றெக்கை எண்ணெய் மாதிரி துர்வாடை அடிக்காமல் இப்படி சுகந்த பரிமளமாக ஆகர்ஷிக்க வைக்கும் இதை இடுப்பில் பூசிக் கொண்டு லலிதாம்பிகையோடு சயனம் போயிருந்தால் அவள் இன்னேரம் இடுப்பைப் பிடித்துக் கொண்டு நிறைசூலியாக வந்து நிற்க மாட்டாளோ.

மயில் றெக்கை எண்ணெயும் கொண்டித்தோப்பு வைத்தியனும் நாசமாகப் போகட்டும். லலிதாம்பிகையும் என்னைத் தொந்தரவு செய்யாமல், மதியச் சாப்பாடு முடித்து பாத்திரம் ஒழித்துப் போட்டுவிட்டு சுகமாக உறங்கிக் கிடக்கட்டும். எனக்கு இங்கே இவளோடு கொஞ்சம் சல்லாபிக்க வேண்டியிருக்கிறது. இப்போது வேணாம். ஒரு மாதிரி நேரம் செல்லட்டுமே.

போகிற வழிக்கு வைத்து ஒரு சத்திரம் எதிர்ப்பட்டது.

உனக்குக் கதை சொல்லி நாக்கு வரண்டு போச்சு ரெட்டிப் பெண்ணே. இங்கே என்னமோ சத்திரம் மாதிரி இருக்கு பார். இவிடத்தில் பானகமோ நீர்மோரோ கிடைத்தால் தாகசாந்தி செய்து போகலாமே. கழுகு தரிசனத்துக்கு எதேஷ்டமா நேரம் பாக்கி இருக்கு.

நான் சொல்ல அவள் சரி என்று ஒப்புக்கொண்டு கூடவே வந்தாள்.

சத்திரத்துக்குள் களேபரமான கூட்டமாக இருந்தது. ஒரு தடவை குவளையில் நிரப்பிக் கொடுத்த பானகம் குடித்த ஒருத்தன் அந்தாண்டை போகமாட்டாமல் திரும்பத் திரும்ப வேணுமென்று பிடிவாதமாக நிற்க, சத்திரத்துச் சிப்பந்தி அவனை நகர்ந்து போகச் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

அய்யா, தாகத்தில் தொண்டை வரண்டு கிடக்கிறது. நீர் உழக்கு மாதிரி குவளையில் ஒரு சிராங்காய் தீர்த்தம் நிறைத்துக் கொடுத்துவிட்டு அப்பால் போகச் சொல்வது நியாயமா? இது என்ன வைத்தியன் சங்கில் கரைத்து சிசுவுக்குப் புகட்டச் சொல்லித் தருகிற அவுடதமா? வெறும் வெல்லம் கரைத்த ஜலம் தானே?

சிப்பந்திக்கு முன்னால் நின்றவன் தன் பங்கு நியாயத்தைச் சொல்லிக் கொண்டிருக்க நாங்கள் போய்ச் சேர்ந்தோம். எங்களை நிமிர்ந்து பார்த்த அந்தச் சிப்பந்தி சொன்னது இந்தப் படிக்கு இருந்தது.

ஓய் பிராமணரே, உம் பெண்ஜாதியை அந்தப் பக்கம் ஸ்திரிகளுக்கு பானம் கொடுக்கிற இடத்திற்கு போகச் சொல்லுமய்யா. இங்கே ஆம்பிள்ளைகள் தாக சாந்தி செய்து கொள்ள, அற்ப சங்கை தீர்க்க துரைத்தனத்தார் வசதி செய்து கொடுத்திருக்கிறது. உமக்குத் தெரியாதா என்ன? பெண்பிள்ளைகள் இங்கே வந்தால் அசங்கியமாக அனுபவப் படுவார்களே. அந்தப் பக்கம் ஸ்திரிகளுக்கானது. தயவு செய்து உம் மனைவியை அங்கே அனுப்பும்.

அந்த உத்தியோகஸ்தனை ஆலிங்கனம் செய்து கன்னத்தில் பலமாக முத்தமிட வேண்டும் என்று எனக்கு தோன்றினதென்னமோ நிஜம். ஒரு நிமிஷம் வார்த்தை சொல்வதற்குள் என் மனம் கவர்ந்த அப்சரஸை எனக்குப் பெண்டாட்டியாக வந்து வாய்த்தவள் என்று ஒரு தடவைக்கு ரெண்டு தடவையாகச் சொல்லிவிட்டானே.

அவன் இதையெல்லாம் தமிழில் அந்தப் பிரதேசத்துக்கே உரிய கொச்சையான உச்சரிப்போடு சொன்னதால் கல்யாணிக்கு அதொண்ணும் அர்த்தமாகாமல் போனதும் நல்லதுக்குத்தான் என்று நினைத்தேன். அவள் ஹாஸ்யத்தைக் கேட்ட பாவனையில் கண்ணால் சிரித்துக் கொண்டு நின்றாள். அந்தப் பக்கம் போங்கோ மாமி என்றான் சிப்பந்தி அரைகுறை பிராமணக் கொச்சையில். அவனுக்கு முன்னால் இன்னும் பானகம் கேட்டபடி நிற்கிற பருமனான மனிதன் கிளம்புகிற வழியாக இல்லல என்பதையும் மறந்தபடிக்கு நையாண்டியாக இருந்தது அது.

இதுதான் சாக்கு என்று நான் அவள் புஜத்தைப் பிடித்து அழுத்தி அவளை உள்ளே ஸ்திரீகளின் சத்தம் வந்து கொண்டிருந்த இடத்துக்கு நடத்திப் போனேன். ஒரு வினாடி அவள் துணுக்குற்றாலும் அடுத்த வினாடி மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல் நான் இழுத்த இழுப்புக்குக் கூடவே வந்தாள். புஜத்தில் வைத்த கையை இன்னும் இறக்கி அவளுடைய ஸ்தனங்களை வருட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தபடி நான் நடந்தது சேணம் பூட்டிய மட்டக்குதிரை குறி விரைத்து நடக்கிற தோதில் இருந்திருக்க வேணும் என்று தோன்றுகிறது.

நல்ல வேளையாக என்னைப் பார்த்த பின்னாடி பானகப் பிரியனான அந்த மனுஷ்யன் இன்னொரு குவளை கடைசியாக வாங்கி வாயில் எச்சில் படாமல் உசத்திக் குடித்து விட்டு மேல் வஸ்திரத்தால் வாயைத் துடைத்தபடி கிளம்பிப் போனான். சத்திரத்து சிப்பந்தி எனக்கு அடுத்து ஒரு குவளை பானகம் பக்கத்தில் வைத்திருந்த பெரிய கங்காளத்தில் இருந்து மொண்டு கொடுத்தான்.

ரெண்டு நாளாக கழுகுகள் நேரம் தாமதித்துத்தான் வருதாம். தெரியுமோ உமக்கு?

அந்த சிப்பந்தி என்னைக் கேட்டான். இந்தத் தகவல் ஏதோ விதத்தில் எனக்கு பிரயோஜனப்படும் என்று அவன் நினைத்திருப்பானாக இருக்கும்.

மேக மூட்டமாக அல்லது மழை பெய்கிற நாளாக இருந்தால் பட்சிகள் பிரசாதம் உண்ண வராது என்று கேட்டிருக்கிறேன் ஐயா. இது என்ன பலபலவென சூரியன் தகிக்கும் தினத்தில் இப்படி அவை இடக்குப் பண்ணுவது?

நான் ஸ்திரிகளுக்கு பானம் கொடுக்கும் இடத்தைப் பார்த்தபடி சொன்னேன். கல்யாணி இன்னும் வந்திருக்கவில்லை.

என்ன செய்ய, சொல்லும். அந்தக் கழுகுகளும் புதுசாகக் கல்யாணம் ஆகி பாரியாளிடத்தில் சுகத்தையும் உபத்திரவத்தை அனுபவிக்கிறவையோ என்னமோ.

சத்திரத்து சிப்பந்தி சிரித்தபடி சொன்னான். எனக்கு அப்புறம் பானகம் தரச் சொல்லி யாரும் வராததால் அவன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஓய்வாக இருக்கிற தருணம் இது என்று தெரிந்தது.

உமக்கும் சமீபத்திலேதான் கல்யாணம் ஆனதா?

நான் அவனை விசாரித்தேன். உமக்கும் என்பதை அழுத்தச் சொல்வதில் ஒரு சந்தோஷம். நான் கல்யாணியை கல்யாணம் கட்டி இங்கே கூட்டி வந்திருக்கிறேனாக்கும். அது வெகு சமீபத்தில் நடந்த கல்யாணம். மோகம் முப்பது நாளோ என்னவோ, இது முதல் நாள் கூட இன்னும் ஆரம்பிக்காத பொழுது.

அதை ஏன் கேட்கிறீர் என்று பொய்யாக அலுத்துக் கொண்டு அவன் சுகப்படும் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தபோது கல்யாணி வந்து சேர்ந்தாள். இவள் கொஞ்சம் தாமதித்தே வந்திருக்கலாமே என்று தோன்றியது. இவளுக்காகக் காத்திருப்பதில் உள்ள பரமானந்தம் அது.

கல்யாணியின் புடவை மார்புப் பக்கம் முழுக்க நனைந்திருந்தது. இதென்ன வாயில் ஊற்றிக் கொள்ளும் போது பாத்திரம் தவறி விழுந்ததோ என்று அவள் ஸ்தனங்களை விரலால் சுட்டிக் காட்டியபடி விசாரிக்கும்போதே எனக்குள் லகரி ஏறியது. பானகம் குடித்து ஈரமான உதடுகள் அதை இன்னும் அதிகமாக்கிப் போட்டன. பானகம். அதர பானகம். ஈர எச்சில் பருகச் சுகம்தானோ.

பானம் வைத்த பாத்திரம் உதட்டிலிருந்து தவறி விழுந்தாலும் சமுத்திரம் போன்ற மார்புப் பரப்பில் சுகமாகத் தங்கிக் கிடக்குமே தவிர தரையில் விழுந்து போகாதே.

சத்திரத்துச் சிப்பந்தி கையில் வெற்றுக் குவளையோடு பார்த்தபடி நிற்க இந்த ஈரத்தோடு அவளை ஆலிங்கனம் செய்து கொள்ள வேணும் என்று என்னுள் வெறி மிகுந்தது. அவனும் புதுசாகக் கல்யாணம் ஆனவன். இன்னொரு ஜோடி குலாவுவது அவனுக்குப் புரியும். ஆனந்தப் படுத்தும். கழுகுகளும் தாமதமாகவே வரட்டும்.

விரசா நடவுங்கள். இல்லையானால் இன்னிக்கு கழுகு தரிசனம் நமக்கு இல்லை.

கல்யாணி அவசரப்படுத்தினாள்.

பானகக் காரனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி வெளியே வெய்யிலில் கல்படி ஏறும்போது கல்யாணி தவறி விழப் பார்க்க, அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டேன். அவள் விடுவித்துக் கொள்ளாமல் அப்படியே வந்தாள். மட்டக் குதிரை மனசுக்குள் தறிகெட்டு அலைந்து கொண்டிருந்தது.

இந்தப் பாறைக்குத் தான் கழுகு வரும்.

நான் மேலே நிமிர்ந்து பார்த்துக் கையைக் காட்டினேன். சூரியன் தகிப்பு மாறி மேகத்துக்குள் புகுந்திருந்த நேரம். மேலே பாறைக்குப் பக்கம் கூட்டமாக சில பேர் காத்திருப்பது இங்கிருந்தே கண்ணில் பட்டது. என் வண்டிக்காரனின் பச்சைத் தலைப்பாகை கூட்டத்துக்கு மத்தியில் பளிச்சென்று தென்பட்டது. அவனும் என்னைப் பார்த்திருக்க வேணும். என் கல்யாணியையும்.

அவளைப் பிடித்த கையை அவசரமாக உதறி விட்டுக் கொஞ்சம் விலகி நடந்தேன்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts