விஸ்வரூபம் – அத்தியாயம் ஆறு

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

இரா.முருகன்


ஏகாம்பர ஐயர் ஓட்டலிலிருந்து நடேசன் இறங்கும்போது மணிக்கூண்டு இரைந்தது. டண்டண் என்று விட்டு விட்டு மணி அடிக்கிற சத்தம். அதை எண்ணிக் கொண்டு கண்ணை மூடியபடி தெரு ஓரமாக நின்றார் நடேசன். ஜன்மத்துக்கும் இதை மட்டும் செய்து கொண்டு இங்கேயே நில்லு என்று பகவான் கல்பித்திருந்தால் சரி என்று சொல்லியிருப்பார் அவர். கால் மரத்துப் போய் பூமியில் ஊன்றி நிலை கொண்டு விருட்சமாக வளரட்டும். உடம்பு வயிரம் பாய்ந்து வெயிலிலும் மழையிலும் ஊறி உலர்ந்து காற்றைத் தின்று காற்றையே குடித்து காற்றோடு கலக்கும் வரை அவர் மணிச் சத்தத்தை மட்டும் காது கொடுத்து எண்ணிக் கொண்டிருப்பார். அல்லது எண்ணிக்கை கூடக் காத்திருப்பார். இப்போதைக்கு ஒன்பது மணி அடித்து ஓய்ந்தது. நேரம் அதுதான் என்றான் பகவான்.

நேரம் அது இல்லை. கூடவே ஒரு பதினைந்து நிமிடத்தைக் கூட்டிக்கொள்ள மனதில் பழகியிருந்தது. வருடக் கணக்காக பழுதாகி கால் மணி நேரம் தாமதமாகவே ஓடுகிறது மணிக் கூண்டு கடிகாரம். அது ஊரில் எல்லார் மனதிலும் பதிந்து போயிருக்கிறது. விரல் விட்டோ மனதுக்குள்ளேயோ ஒண்ணு, ரெண்டு என்று எண்ணத் தெரிந்த எல்லோரும் அதே பிரகாரம் எண்ணி முடித்து இப்படிக் கூட்டிச் சேர்த்துக் கொள்ளவும் தவறுவது இல்லை. நடேசனும் அப்படிதான்.

வயிறு நிறைந்திருந்தது. பட்டாபி சாயந்திர நேரத்தில் வாழை இலை விரித்து அம்பாரமாக விளம்பிக் கொடுத்த சோறும் கூட்டானும் மற்றதும் சாப்பிட்டு கூடவே ஒரு குவளை கருப்புக்கட்டி காப்பியும் இறங்கி இன்னும் இதமாக புரண்டு கொண்டிருந்தது அது. நாளை விடியும் வரைக்கும் புகார் ஏதும் செய்யாது. நடேசன் மனம் போனபடிக்கு வேறு காரியங்களில் தாராளமாக ஈடுபடலாம்.

வீட்டுக்குப் போய் தோர்த்தை தரையில் விரித்துத் தூங்கிவிடலாமா என்று யோசித்தார் நடேசன். வீடு இருக்கிறது. மீனச் சூட்டில் ராத்திரியிலும் அனலாகக் காய்ந்து கொண்டு தரை அங்கே உண்டு. கழுத்தில் ஈரிழை துண்டு மாலை மாதிரி தொங்குகிறதும் உண்மைதான். அதில் விழுந்த கிழிசல் தெரியாமல் சாமர்த்தியமாக மடித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார் அவர். தரையில் விரிக்கும் முன்னால் ஜாக்கிரதையாக அம்பலக் குளத்தில் நனைத்துவிட்டு ஈரமாக அதைப் பரத்தினால் அந்தக் குளுமையோடு நித்திரை போய்விட முடியும்.

போய் என்ன செய்வது? சொப்பனங்களில் நடேசன் புஷ்பப் பல்லக்கில் கல்யாணிகுட்டியை விவாகம் கழிக்க சதா வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டேயிருப்பார். தும்பைப் பூ போன்ற டபிள் முண்டும் மேலே காந்திக் காரர்கள் போல் அதே வண்ணத்தில் ஜிப்பாவும் தரித்து பெண் வீட்டுக்குப் போகிற நடேசன். யௌவனமும் மிடுக்குமாக கையிடுக்கில் கருப்பு பர்மா குடையோடு அவர் போகிறதற்குள் கல்யாணம் முடிந்திருக்கும். விருந்துக்கு வந்தவர்கள் சாப்பிட்டு எழுந்து, வாசலில் வாழை இலைகள் குவித்துப் போய்க் கிடக்கும். நாளைக்கு வாரும். கல்யாணிக்குட்டி வீட்டுக்குள் இருந்தபடிக்கே யார் தோளிலோ சாய்ந்த படிக்குச் சொல்வாள். அவள் இப்போது இல்லை. கண்டத்தில் மாதவன் நாயருக்கு வாழ்க்கைப்பட்டு, நாலு பெண் குட்டிகளைப் பெற்று அதுகளையும் நாயர் யுவன்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விட்டு, ஒரு திருவாதிரை புலரியில் அவள் மரித்தபோது மத்ய வயது ஸ்திரியாக இருந்தாள். அவள் அடியந்திரத்தில் ஊண் கழிக்க நடேசனும் போயிருந்தார். அப்போது வாசலில் வாழை இலையைப் போடும்போதும் கல்யாணிக்குட்டி அதையேதான் சொன்னாள். நாளைக்கு வாரும்.

சொப்பனங்களில் கல்யாணிக் குட்டிக்காக இன்னும் காத்திருக்கிற அவஸ்தையை இன்றைக்கும் பட நடேசன் தயாரெடுப்பில் இல்லை. அவள் அடியந்திரம் கனவில் வரலாம். அது இப்போது வேண்டியிருக்காது. ஏகாம்பர ஐயர் ஓட்டலில் வயிறு நிறைந்து கிடப்பதால் இன்னொரு தடவை வேறெங்கும் சாப்பிட முடியாது.

சோற்றுக்கு அலைவதே வாழ்க்கையாக அமைந்து போனது நடேசனுக்கு. ஆனாலும் நாராயணியம்மா அவருக்கு சந்தோஷமாகக் கழுத்தை நீட்டினாள். முன்சீப் கோர்ட் வக்கீலுக்கு குமஸ்தன். சட்டைப் பையில் சதா நாலு சக்கரம் கிலுங்க பர்மா குடையும் கையுமாக புஷ்பப் பல்லக்கில் போகிற மிடுக்கோடு நடை போடுகிற செக்கன். நாராயணியின் மாமனும் தரவாட்டுக் காரணவருமான கோபால மேனோன் சுருக்கமாகக் கணக்குப் போட்டு நடேசன் பெண் கேட்கப் போகாமலேயே யார் யாரையோ வைத்துக் கலந்து பேசி கல்யாணத்தை நிச்சயித்தார். ஐநூறு ஆயிரம் ஜனம் கூடி இருந்து, புள்ளுவனைக் கூப்பிட்டுவிட்டு சர்ப்பந் துள்ளல் வைத்து விஸ்தாரமாக சர்வாணி கழித்து ஊரோடு இலையை வீசிப் போட ஐவேசு இப்போது கைவசம் இல்லை. நீரும், கூட உம் சிநேகிதர் ரெண்டொருத்தர், ஒரு நாலு பந்து மித்ரங்கள், அவரோட ஆள்கார் இது மதி. நிறைபறைக்கும் நிலவிளக்குக்கும் செலவு செய்யாமல் முடியாது. ஏற்பாடு முன்னே பின்னே இருந்தாலும் நீர் விகல்பமாக எடுத்துக் கொள்ளாமல் தரவாட்டுப் பெண்குட்டியைக் கல்யாணம் கழித்துக் கூட்டிக் கொண்டு போய் சுகமாயிரும்.

நடேசன் அதேபடிக்கு இம்மியும் குறையாது நடந்து கொண்டார். நாராயணியம்மையை ஒற்றை முறி வீட்டில் தாமசமாக்கியதும் ஒரு மீன மாசத்தில் தான். அவள் உடுத்தியிருந்த புளியிலைக்கரை முண்டு அவளைத் தரையில் கிடத்தியதும் நடேசன் கையோடு வந்தது. அம்பலக் குளத்துக்குப் போக வேண்டியிருக்காமல், குடிக்க வைத்திருந்த வெள்ளத்தில் பாதியும் செலவழித்து அதை நனைத்துத் தரையில் விரித்தபோது மனதில் கல்யாணிக் குட்டி நாளைக்கு வாரும் என்று வழக்கம்போல் பூடகமாகச் சொன்னாள்.

கேசவனையும் மாதவியையும் கார்த்தியாயினியையும் நாராயணியம்மா பெற்றுப் போட்டதும் அந்த சூடு பரந்த ஒற்றை முறித் தரையில் தான். குண்டும் குழியுமாகப் போன தரையில் தான் அவளை தகனத்துக்கு முன் கிடத்தியது. ஈர வஸ்திரம் விரிக்கலாகாது என்று அண்டை அயலில் இருந்து வந்தவர்கள் சொல்லிவிட்டதால் அவள் வெறுந்தரையின் சூட்டை உள்வாங்கியபடி எரிந்து அடங்கினது நாலு கொல்லம் முன்பு.

கேசவனும் மாதவியும் கார்த்தியாயினியும் எங்கே? எத்தனை நினவு படுத்திப் பார்த்தாலும் நடேசனுக்குப் புரிபடவில்லை. இல்லை. அவர் மனம் குறக்களி காட்டுகிறது. அப்படி யாருமே இல்லை. அவருக்கும் நாராயணிக்கும் புத்ர பாக்கியமே இல்லை. வெறும் வயிறுதான் நாராயணிக்கு விதிக்கப்பட்டிருந்தது. அப்படியானால் மாடத்தில் பத்திரமாக எடுத்து வைத்த பழைய நாலாம் கிளாஸ் மலையாள பாட புஸ்தகம்? பென்சிலால் கணக்கு போட்டு பாதி வரைக்கும் ரப்பரால் அழித்து மேலே அடுத்த கணக்கை போட்டு அதையும் இன்னும் கொஞ்சம் அழித்து எண்கள் கலங்கி இருக்கும் அழுத்தமான பழுப்புக் காகித நோட்புக்? எல்லாவற்றிலும் மேலே பெயர் எழுதியிருக்கிறதே? கேசவன், மாதவி, காத்தி.

அதெல்லாம் நாராயணியம்மா கடைத்தெருவில் காகிதம் விலைக்கு நிறுத்து வாங்கிக் கொள்கிற அபு அம்சா கடையில் கேட்டு வாங்கி வந்தது. பழைய மாத்ருபூமியையும் மனோரமாவையும் இங்கிலீஷ் தினப் பத்ரங்களையும் பண்டிலாகக் கட்டி எடுத்து வந்து தராசில் நிறுத்து காசு வாங்கிப்போக ஒரு கூட்டம் இருந்தால், அங்கே பழைய நோட்டுப் புத்தகத்தை இலவசமாக வாங்கிப் போக ஒரு நாராயணியும் இருந்தாள். நடேசன் அப்படித்தான் நினைத்தார்.

ஆனாலும் அவர் அடியந்திரங்களை நடத்தியிருக்கிறார். கலந்து கொண்டு எல்லோரும் துக்கம் பிரகடனப்படுத்திவிட்டு பார்த்துப் பார்த்து உண்டு முடித்துப் போன பிறகு இலையை வாரிப் போட்டுவிட்டு அவரும் சாப்பிட்டிருக்கிறார். நாராயணிக்காக, கேசவனுக்காக, மாதவிக்காக, காத்திக்காக, கல்யாணிக் குட்டிக்காக எத்தனை ஈமக் கிரியைகள். அதோடு உச்சைக்கு ஊணில் பலாக்காய் கறி. பலாக்காய் சாப்பிட வெகு ருஜி. ஆனால் நாலு நாளைக்கு வயிற்றை உபத்திரவப் படுத்தும். சொப்பனத்தில் சாப்பிட்டாலும் சரிதான். இந்த லட்சணத்தில் நாளைக்கு மறுபடியும் வரச் சொல்லி கல்யாணிக்குட்டி உத்தரவு போடுகிறாள். வேண்டாம். வீட்டுக்குப் போய் அந்தி உறங்கினால் தானே கஷ்டம். நடேசன் இந்த ராத்திரி தன் ஒற்றை முறி வீட்டுக்குத் திரும்பப் போவதில்லை.

டாக்கி போட நேரமாச்சு. வாப்பூ. இப்படி நொச்சு நொச்சுன்னு தின்னுக்கிட்டு இருந்தா செட்டியார் இரைய ஆரம்பிச்சுடுவாக. சட்டுப் புட்டுனு முளுங்கிட்டு வெரசா வந்து சேரு. நான் போய் டிக்கெட்டு கொடுத்திட்டு இருக்கேன்.

தலையில் உருமாலும், முழங்காலுக்கு மேலே மடித்துக் குத்திய முண்டுமாக ஒரு தமிழன் ஆள் அரவமற்ற தெருவில் அலை பாய்ந்து கொண்டிருந்தான். பின்னால் இன்னொருத்தன் ஒரு இலைப் பொதியில் கட்டி வைத்திருந்த புளிசோறையோ வேறு எதையோ அடைத்துக் கிடந்த கடைத் திண்ணையில் உட்கார்ந்தபடிக்கு அவசரமாக விழுங்கிக் கொண்டிருந்தான். சினிமாக் கொட்டகை ஆள்காரில்லையோ. நடேசன் அவர்களை சிரத்தையில்லாமல் பார்த்தார்.

வந்துட்டேன் வந்துட்டேன். செத்த நில்லு.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் இன்னும் ஒரு கவளத்தை அள்ளி வாயில் திணித்துக் கொண்டு இலையை வீசி எறிந்தான். வீசி எறியும் எச்சில் இலை எல்லாம் நடேசன் காலடியில் தான் எப்போதும் விழுகிறது. கால தேச, கனவு, நினைவு வர்த்தமானம் அதற்கு இல்லை. நடேசன் காலை விலக்கிக் கொண்டு குனிந்து பார்த்தார். புளிசோறு மாதிரி தெரியவில்லை. நடுவிலே நீட்டமாக முழித்துக் கொண்டு என்னது அது? கோழி இறைச்சியா? அத்தனை அவசரமாகச் சாப்பிட்டுப் போக இறைச்சி எல்லாம் சரிப்படுமா? பலாக் கறி போல இதுவும் வயிற்றில் இரையாதா?

இலையில் மிச்சம் இருந்த சோறு பெரிசு பெரிசாக விழித்துக்கொண்டு நடேசனை மிரட்டியது. ரத்தச் சிவப்பில் அதை மூடியிருந்த மிளகாய் விழுது அரைத்த ஏதோ பதார்த்தம் கூடவே அதட்டியது. கீழே குனிந்து உட்கார்ந்து இலையை மடியில் வைத்துக் கொண்டு எச்சில் சோறைச் சாப்பிட்டாக வேண்டும் என்று கல்யாணி காதில் கிசுகிசுத்தாள். ஆமா, அப்போ தான் நாளைக்கு கல்யாணி வீட்டுக்குப் போக விடுவேன் என்று இன்னொரு பக்கம் நாராயணி முண்டு அவிழ்ந்து தெருவில் இலையை மூட நக்னமாக நின்று சொன்னாள். சும்மா கிட சவத்து மனசே. நடேசன் அதட்டியது ஒரு உறுமலாக மட்டும் வெளியேற, இலையை அவர் காலடியில் போட்டவன் மன்னிச்சுக்குங்க ஐயா, தெரியாம விழுந்துடுச்சு என்றான்.

கொட்டாயிலே பயாஸ்கோப் காட்டித்தர பய்யன்மாரா?

நடேசன் நகர்ந்து கொண்டிருந்தவனை விசாரித்தார்.

ஆமாங்கய்யா.

என்ன டாக்கி போட்டிருக்கு?

அவர் கேள்விக்கு அவன் ஓடிக்கொண்டே சொன்ன பதில் நடேசன் காதில் சரியாக விழவில்லை. எதுவாக இருந்தால் என்ன? நடேசன் அதைத் தெரிந்து கொண்டு காரியமாக ஒன்றும் ஆகப் போகிறதில்லை.

ஏன் ஆகப் போகிறதில்லை? நடேசன் இன்றைக்கு ராத்திரி பயாஸ்கோப் பார்க்கப் போகிறார். நடு ஜாமம் வரைக்கும் கொட்டகை மணலில் உட்கார்ந்தும் படுத்தும் கருப்பிலும் வெள்ளையிலும் நகர்ந்து சதா பாடிக்கொண்டே இருக்கும் பயாஸ்கோப். பார்த்து முடிந்தால் அங்கேயே நித்திரை போய்க் காலையில் கிளம்பிவிடலாம். டாக்கி கொட்டகைக்கார சொக்கநாதன் செட்டியார் நீலகண்டன் வக்கீலுக்கு நாள்பட்ட கட்சிக்காரர். அவருக்காக பத்து பதினைந்து வருடமாக ஹரிப்பாடு பக்கத்தில் ஒரு பரம்பு பற்றி முன்சீப் கோர்ட்டில் வியாஜ்யம் நடந்து ஓய்ந்த பாடாக இல்லை.

சொக்கநாதன் செட்டியார் உறங்க விட்டாலும் கொட்டகை உள்ளே அனுமதிக்கிறவன் காசு வாங்காமல் விடமாட்டானே? அவன் தெரிசனம் முடிந்துதானே பயாஸ்கோப் ஆப்பீஸில் செட்டியார் கட்டை குட்டையாக பிரம்பு நாற்காலியில் அரைத் தூக்கத்தில் சர்வாங்க தெரிசனம் தருவார்? அதென்னமோ செட்டியாருக்கு இடுப்பில் முண்டு நிற்பதே இல்லை. நாராயணி தேவலை இந்த விஷயத்தில். படுத்தால் மட்டும் தான் அது இடுப்பை விட்டு விலகும். செட்டியார் உட்கார்ந்தபடி உறங்கினாலும் நழுவி தரையில் புரண்டு கிடக்கும் வேட்டி. கவனமாகக் காசு சேர்க்கிற இடத்தில் உடுதுணியை யார் பார்க்க போகிறார்கள்?

காசு. நடேசன் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். கோபால மேனோன் அம்மான் கல்யாண நேரத்தில் சொன்னது எப்போதாவது பலிக்கிறது உண்டு. குப்பாயத்தில் நாலு சக்கரம் குலுங்குகிற நாள் இது. ஏகாம்பர ஐயருக்கு டோக்குமெண்ட் காப்பி செய்து கொடுப்பது பாதியில் நின்றாலும் வேலை முடிந்த அளவுக்கு காசு தரத் தவறவில்லை அந்தப் பட்டன்.

மீதியை விடிகாலையிலே வந்து பிராதல் கழிச்ச பின்னே முடிச்சுத் தாரும். பட்டாபியை இட்டலியும், கொத்துமல்லி சம்மந்தியும் எடுத்து வைக்கச் சொல்றேன்.

அவர் கடையடைக்கும்போது ஒரு ரூபாய் காசை கல்லாவிலிருந்து எடுத்து நடேசனிடம் கொடுத்தபடி சொன்னார்.

இன்னும் கொஞ்சம் வேகமாக நகல் எடுத்தால் ராத்திரிக்குள்ளேயே நடேசன் முடித்திருப்பார்தான். ஆனால் நாளைக்கு இட்டலியும் இன்னும் நாலு காசும் கிடைக்காதே?

நிதானமாக அதை படியெடுத்தபோது நடேசன் நினைவில் அம்பலப்புழை தேகண்ட பிராமணர்களின் போன தலைமுறைக் குடும்பம் ஒன்று மெல்ல விரிந்தது. டோக்குமெண்ட் எழுதி நாற்பது கொல்லம் கழிந்தாகி விட்டது. சாதாரணமாக காகிதம் சீக்கிரம் செல்லரித்துப் போகும் என்று நடேசனுக்குத் தெரியும். முன்சீப் கோர்ட்டிலேயே நிலுவையில் நிற்கிற எத்தனையோ கேசுகளில் வாதியும் பிரதிவாதியும் மரித்து வழக்கைக் கேட்ட ஜட்ஜியும் வக்கீல்மாரும் அதேபடிக்கு போய்ச் சேர்ந்து சும்மா வெறுதே கட்டி வைத்த எத்தனையோ காகிதங்களை அவருக்குத் தெரியும். அதெல்லாம் கரையான் அரித்து அப்புறம் கோர்ட் வராந்தாவில் தனு மாசத் தணுப்புக்குக் குளிர் காய கோர்ட் சேவகன் கோலப்பன் பந்தம் கொளுத்தி எரிப்பதுண்டு. ஆனாலும் நாற்பது வருடத்தில் பொடி உதிர்கிறதாக அதில் எதுவும் இல்லை. அம்பலப்புழை பட்டன்மார் பெருங்காயம் வைத்த பரணியில் டோக்குமெண்டையும் வைத்து சம்ரட்சித்து அதை இப்படி நசிக்க விட்டிருப்பார்களோ?

அம்பலப்புழை பிராமணர்கள் எப்படியோ போகட்டும். நடேசன் டாக்கி பார்க்கிற நேரத்தில் அவர்கள் குறுக்கே வந்து நிற்க வேண்டாம். கல்யாணிக் குட்டியும், நாராயணியும் கூடத்தான். குப்பாயத்தில் ஒரு டிக்கெட் எடுக்கத்தான் பணம் உண்டு. கூட்டம் சேர்த்துக்கொண்டு உள்ளே நுழைய முடியாது. கோபால மேனோன் அம்மான் கோபித்துக் கொள்வார்.

நடேசன் டாக்கி கொட்டகை வாசலுக்கு நடந்தார்.

சாயற பெஞ்சு வேணுமா சார்வாளுக்கு?

டிக்கட் கொடுக்கிறவன் நடேசனை விசாரித்தான். பதினைந்து நிமிடம் முன்னால் அரைகுறையாக கோழி இறைச்சி சாப்பிட்டு விட்டு நடேசனை எதிர்பார்த்துக் கொண்டு முணுக் முணுக்கென்ற காடா விளக்கு வெளிச்சத்தில் காத்திருக்கிறான்.

சாய்மானம் ஏதும் வேணாம். நிம்மதியா மணலைக் குவிச்சு நீட்டி நிமிர்ந்து கிடந்துக்கறேன். என்ன டாக்கி ஆடுது இப்ப?

கிருஷ்ணலீலா சாரே.

இங்கேயும் வந்துவிட்டீரா?

நடேசன் கிருஷ்ணனை செல்லமாகக் கோபித்துக் கொள்ள கிருஷ்ணன் கதகளிகாரன் போல் முகம் எழுதிக்கொண்டு ஓலைத் தட்டியில் ஒட்டி வைத்த நோட்டீசில் சினிமாத்தனமாகச் சிரித்தான்.

சாரே, உள்ளே கேரும். டாக்கி போடற நேரமாயிடுச்சு.

பின்னால் இருந்து அவசரமாக யாரோ சொன்னார்கள்.

நடேசன் இருட்டில் தட்டுத்தடுமாறி உள்ளே நுழைந்தார். தரை டிக்கெட் பிரதேசத்தை உத்தேசமாகக் கணித்து அங்கே போய் தோர்த்தை விரித்து உட்கார்ந்தார். புதுசாகக் கொட்டி வைத்த சமுத்திர மணலோ என்னமோ. கடல் வாடை சுற்றிலும் கெட்டியாகக் கவிந்து கொண்டிருந்தது. தணுப்பும், வியர்ப்பும், நாக்கில் உப்பு ஊறுகிற சுவையுமாக சம்போக நேரத்து அனுபவம் போல.

ஏன் தரை டிக்கெட்டில் வேறு யாரையும் காணோம்? அவர்களுக்கு சமுத்திர வாடை கிளப்பித்தரும் சம்போக நெடி வேண்டாம். நாலு சுவர்களுக்கு நடுவே இப்போது பிரத்யட்சமாக அது கிடைத்திருக்கும். வீட்டு ஸ்த்ரி இடுப்பிலிருந்து புளியிலை முண்டு அவிழ்ந்து புரள ஆலிங்கனத்தில் ஆனந்தப்படுத்திக் கொண்டிருப்பாள். நாளைக்கு வரச் சொல்வாள் கல்யாணிக்குட்டி எல்லோரிடமும். அது இன்னும் லகரி ஏற்றிக் கொடுக்கிற குரலாச்சே.

நடேசனுக்கு ஒரு வினாடி கண் இருண்டு வந்தது.

மணிக்கூண்டில் மணி முழக்கும் சத்தம். அவர் எண்ண ஆரம்பித்தார். வேண்டாம். இதை எண்ணி முடித்து என்ன ஆகப் போகிறது? எத்தனை தடவை வேண்டுமானாலும் அடிக்கட்டும். சொக்கநாதன் செட்டியாரோ, இறைச்சி சாப்பிட்ட பாண்டிப் பையனோ அதையெல்லாம் காசோடு எண்ணி கணக்கு வைத்துக் கொள்ளட்டும். மறக்காமல் பதினைந்து நிமிடத்தைக் கூட்டினால் தான் கணக்கு நேராகும்.

படத்தைப் போடாமக் கழுத்தறுக்கறானுங்க சவத்துப் பயக்க.

இனிமேக்கொண்டு ஆரம்பிச்சு எப்போ முடிஞ்சு எப்போ வீட்டுக்குப் போறது?

பின்னால் சாய்மான வசதி கொண்ட பெஞ்சில் குந்தியிருந்த யாரோ பரஸ்பரம் ஆவலாதி வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாண்டிக் குரல்கள். படமும் தமிழில் பேசிப் பாடுகிறதாக இருக்கும்

பரசுராம பூமி முழுக்க பாண்டிப்படை ஊடுருவி விட்டது. ஆலப்புழை, அஷ்டமுடிக் காயல் தீரம் வரை எங்கேயும் விட்டு வைக்கவில்லை. பட்டன்மாரும் செட்டியார்களுமான அவர்களோடு நடேசனுக்கு ஒரு விரோதமும் இல்லை. இருக்கப்பட்ட கொஞ்சம்
பூமியில் அவரும் ஒதுங்கிப் பிழைக்க இடம் கிடைத்தால் எல்லாரும் சமாதானமாக இருக்கலாம் தான்.

கனமான பீடிப் புகை சூழ்ந்து கொள்ளும் வாடை. காத்திருந்து அலுத்தவர்கள் பற்ற வைத்து ஊதுகிறார்கள். அதில் ஒருத்தன் பீடி கொளுத்தியபடி நடந்து ஓரமாக மூத்திரம் ஒழிக்க உட்கார்கிறான். அவன் காறித் துப்புவது இருட்டில் கேட்கிறது.

நடேசன் பார்த்துக்கொண்டே இருந்தபோது முன்னால் திரையில் பிரகாசம். காளைவண்டி ஒன்று இருட்டுக்கு நடுவே மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது.

வண்டிக்குள் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. உரத்த குரலில் தமிழ்ப் பேச்சு.

ஐயோ தெய்வமே. எங்களை ரட்சியும். காலமும் நேரமும் கடந்துபோன இந்த இருட்டு பூமியில் நானும் என்னைக் கட்டியவளும் பெண்குஞ்சும் இப்படி தாகித்தும் பசித்தும் திரிந்து கொண்டே இருக்கிறோமே. தயவு பண்ணி வந்து ரட்சிக்கக் கூடாதா? நாங்கள் உசிரோடு இருக்கிறோமா? அதையாவது சொல்லும்.

பாண்டி பட்டன் ஒருத்தன் குடுமி அவிழ்ந்து தொங்க இரண்டு கையையும் தலைக்கு மேல் உயர்த்தித் தேம்பிக் கொண்டிருந்தான். ஒரு ஸ்திரியின் அழுகையும் குழந்தை கரைச்சலும் கூடவே வந்தது.

அவர்கள் அம்பலப்புழை தேகண்ட பிராமண குடும்பம் என்று நடேசனுக்கு ஏனோ தோன்றிய போது அந்த காளைவண்டி அவரை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தது.

(தொடரும்)
eramurukan@gmail.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts