உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 3 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



உன்னத இல்வாழ்வில் பிறந்தாலின்றி ஒருவர் பெருந்தன்மையாய் (Nobility) இருக்க இயலாது. வெறும் கல்வி ஞானம் மட்டும் ஒருவரைப் பெருந்தன்மை மனிதராக ஆக்காது. அதற்கு முரணாக கல்வி ஞானத்தை உன்னத மாக்க ஏதோ ஒரு பண்பாடு தேவை. அப்படியாயின் அது என்னவாக இருக்கும் ? (உன்னத வாழ்வுச் சந்ததிகளின்) குருதி . . . (பிரபுக்கள் குருதி அல்ல). உன்னத இல்வாழ்வுப் பிறப்பு, குழந்தைக்கு உயர்ந்த வளர்ப்பு ஆகிய இரண்டோடு கடுமுறைக் கல்வி அளிப்பு என்ற மூன்றாவதும் சேர்ந்தது உன்னத மனிதர் உருவாக்க உதவும் முறைப்பாடு (Formula). செம்முறைக் கல்வியானது நுட்பமும், ஆழமும், அகலமும் கொண்ட பூரணக் கல்வி. அக்கல்விப் பயிற்சி சுமுக வசதிகளின்றிப் (Few Comforts) பொறுப்புகள் நிரம்பியதாக இருக்கும். மனப் பயிற்சியும், உடற் பயிற்சியும் அளிக்கும் போது உடல் நோவை மௌனமாகத் தாங்கிக் கொள்ளும் தன்மை ஊட்டப்படும். அதுபோல் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் அடக்கமும், கட்டளையிடும் மேற்படி அதிகாரமும் கற்றுக்கொள்ள பயிற்சிகள் தரப்படும்.

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி (Friedrich Nietzsche) (1844-1900)

உலகத்திலே உன்னத மனிதராக நான் மதிப்பவர் இருவர் : கௌதம புத்தர், ஏசு கிறிஸ்து. ஏசு நாதரின் மலை உபதேசத்தையும், கீதையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை எத்தகைய எளிமையாக உள்ளன ! தெருவில் நடக்கும் சாதாரண மனிதருக்கும் அவை புரிகின்றன !எத்தகைய மகத்தான படைப்புகள் அவை ! அவற்றில் மெய்ப்பாடுகள் தெளிவாக, எளிதாகக் கூறப்பட்டு இருப்பதை நீங்கள் அறியலாம்.

புத்தர் மேன்மையான மெய்ப்பாடுகளை உபதேசித்தார். வேத நெறிகளை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் போதித்தார். உலக மாந்தருக்கு அவற்றை எடுத்துக் கூறினார். அவரது உன்னத போதனை நெறிகளில் ஒன்று மனித சமத்துவம் ! மனிதர் சம மதிப்புள்ளவர். அந்த கருத்தில் எவருக்கும் தனிச்சலுகை இல்லை. புத்தரே சமத்துவத்தைப் போதித்த ஓர் மகத்துவக் குரு ! ஒவ்வொரு மனிதருக்கும், மாதருக்கும் ஆன்மீக உன்னதம் அடைவதில் ஒரே தர உரிமை உள்ளது. அதுதான் புத்தரின் போதனை. குருமாருக்கும், பிற மானிடருக்கும் இருந்த வேற்றுமை புத்தரால் நீக்கப்பட்டது.

புத்தரின் வாழ்க்கை ஒரு மகத்தான கவர்ச்சி கொண்டது. என் வாழ்நாள் முழுவதும் நான் புத்தரைப் போற்றி வந்தேன். யார் மீதும் இல்லாத ஒரு தனி மதிப்பு அவர் மீது எனக்கிருந்தது : அவருக்கிருந்த அந்த மன உறுதி, அந்த அச்சமற்ற தன்மை, அந்த அளவில்லா அன்பு . . . (என்னைக் கவர்ந்தது.)

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 3

(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 3)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: வயலட் ராபின்ஸன், டிரைவர் ஹென்றி ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன்

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: வயலட்டும், மிஸ்டர் மலோனும் வாதாடிக் கொண்டிருக்கிறார். ஜான் டான்னர், ரோபக் ராம்ஸ்டன் இருவரும் முன்னே வரப் பின்னால் ஆக்டேவியசும் ஆன்னியும் தொடர்கிறார்கள்)

வயோதிகர் மலோன்: ஹெக்டர் ! என்ன சொல்கிறாய் நீ ? கண்களைத் திறந்து கொண்டே பள்ளத்தில் விழுகிறாய் ! உனக்கு உயர்ந்த நிலையைத் தரப் போவது என் சொத்தும், செல்வமும். அவற்றை எல்லாம் வேண்டாம் என்று நீ ஒதுக்குகிறாய் !

ஹெக்டர் மலோன்: அந்த நல்ல காரியத்தை நாசமாக்கியது – என் கடிதத்தைத் திறந்து வாசித்த உங்கள் தவறான பழக்கம் ! அது ஓர் ஆங்கில மாதின் கடிதம் ! எனக்கெழுதிய அந்தரங்கக் கடிதம் ! உங்கள் பெயருக்கு வந்த சொந்தக் கடிதமில்லை ! தனிப்பட்ட கடிதம் ! அதைத் திறந்து படித்தவர் தந்தை என்றால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை !

வயலட்: கடிதத்தைப் பார்த்ததிலும், படித்ததிலும் தவறில்லை ! ஏனெனில் அவரது குடும்பப் பெயர் உறையில் உள்ளது ! என்னை அவர் பின்னால் தெரிந்து கொள்வதற்கு முன்னால் அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது ! நானும் அவரைப் பின்னால் தெரிந்து கொள்வதற்கு முன்னால் அறிய முடிந்தது !

வயோதிகர் மலோன்: நன்றி மிஸ் ராபின்ஸன் ! என் மகனுக்குப் புரியா விட்டாலும் அது உனக்குப் புரிகிறது ! நம் குடும்பப் பெயரைக் காக்க நான் கடிதத்தை உடைக்க நேர்ந்தது ! உங்கள் கள்ளக் காதலை நான் காண முடிந்தது ! தந்தைக்குத் தெரியாமல் நீ செய்தது ஒரு தவறே !

ஹெக்டர் மலோன்: நானும் உனக்கு நன்றி கூறுகிறேன் வயலட் ! உன் மனது பெரியது, உயர்ந்தது ! அதனால்தான் நீளென் தந்தையை மன்னித்தாய் ! ஆனாலும் என் கடிதத்தை உடைத்து வாசித்தது பெரும் தப்புதான் ! அதை நான் மன்னிக்கப் போவதில்லை ! வயதானவர் மீண்டும் சிறு பிள்ளை ஆகிறார் !

வயலட்: இல்லை ! மகன் தந்தை ஆகிறார் ! மனப் பக்குவம் மாறுகிறது !

வயோதிகர் மலோன்: (உரத்த குரலில்) என்னை யாரும் எடை போட வேண்டாம்.

வயலட்: ஐயோ மெதுவாகப் பேசுங்கள் ! அதோ அங்கே எல்லோரும் வருகிறார் !

(ஜான் டான்னர், ரோபக் ராம்ஸ்டன் இருவரும் முன்னே வரப் பின்னால் ஆக்டேவியசும் ஆன்னியும் தொடர்கிறார்கள்)

ஜான் டான்னர்: அல்ஹாம்பிரா காட்சி மனை இன்று பொதுநபருக்கு ஏனோ திறக்கப்பட வில்லை. ஆதலால் பெருத்த ஏமாற்றம் அடைந்து திரும்பினோம். (ஹெக்டரைப் பார்த்து) ஏன் ஒரு மாதிரி காணப்படுகிறாய் ? யார் மீது கோபம் ? வயலட் மீது கோபமா ?

வயலட்: இல்லை ! வயதான மிஸ்டர் மலோன் மீது !

ராம்ஸ்டன்: வயலட் ! எப்படி இருக்கிறது உன் தலைவலி ? இந்த வெயிலில் நீ தலை வலியுடன் வெளியே வரலாமா ?

வயலட்: தலை வலி போய் விட்டது ! இப்போது வந்திருப்பது நெஞ்சு வலி ! (கனிவுடன்) ஹெக்டர் ! உன் தந்தையை எல்லோருக்கும் அறிமுகப்படுத்த மாட்டாயா ?

ஹெக்டர் மலோன்: இல்லை ! இவர் என் தந்தை இல்லை !

வயோதிகர் மலோன்: (மிக்கச் சினத்துடன்) என்ன ? என்னை உன் ஆங்கில நண்பர்கள் முன்பு இப்படி அவமானப் படுத்தலாமா ?

வயலட்: இப்படி மனம் உடையாதீர் மிஸ்டர் மலோன் !

ஹெக்டர் மலோன்: அப்படி சொன்னதற்கு நான் வருத்தப்பட வில்லை மிஸ் ராபின்ஸன் ! இவர் ஒருகாலத்தில் என் தந்தையாக இருந்தது மெய்தான் ! நானும் இவருக்கு மகனாக இருந்தது மெய்தான் ! அதுவும் கடமை தவறாத மகனாக இருந்தேன் ! இப்போது நான் சுதந்திர மனிதன் ! தந்தை நிழலை விட்டு நகர்ந்த மகன் நான் ! நிழலை விட்டுத் தாண்டியது என் தந்தைக்கு ஏனோ பிடிக்க வில்லை ! எனக்கு வந்த தனிப்பட்ட கடிதத்தை அவர் உடைத்துப் படித்து உன்னைத் திருமணம் செய்யக் கூடாதென்று எனக்குத் தடையிடுகிறார் !

ஜான் டான்னர்: (கூர்ந்து பார்த்து) ஹெக்டர் ! நீ வயலட்டை மணந்து கொள்ளப் போகிறாயா ?

ஹெக்டர் மலோன்: ஆம் ! நான் வயலட்டை மணம் புரிவதாக வாக்களித்து விட்டேன் !

ராம்ஸ்டன்: ஹெக்டர் ! நீ சிந்தித்துச் செய்த முடிவா இது ? அல்லது திடீர் முடிவா ?

ஜான் டான்னர்: நாங்கள் சொன்னதை எல்லாம் நீ மறந்து விட்டாயா ?

ஹெக்டர் மலோன்: நீங்கள் என்ன சொன்னீர் என்பதைப் பற்றி நான் கவலைப் படவில்லை !

ராம்ஸ்டன்: (கோபத்துடன்) இது அக்கிரம் ஹெக்டர் ! நீ வயலட்டைத் திருமணம் செய்யத் தகுதியற்றவன் !

வயோதிகர் மலோன்: என்ன ? எனக்கொன்றும் புரியவில்லையே ! இந்த மாதைத் திருமணம் செய்ய என் மகனுக்குத் தகுதி இல்லையா ? ஏனப்படிச் சொல்கிறீர் ?

ஜான் டான்னர்: மிஸ்டர் மலோன் ! இந்த மாதுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது ! ஹெக்டருக்குத் தெரியும் அது ! ஆனாலும் விடாமல் வயலட்டை விரட்டி மணந்து கொள்ளத் துணிந்து விட்டார் ! வீட்டுக்கு மகனைக் கூட்டிச் சென்று உள்ளே விட்டுப் பூட்டி விடுங்கள் !

வயோதிகர் மலோன்: (மனக் கசப்புடன்) ஓ ! ஏற்கெனவே மணமான மாதா இந்த சொப்பன சுந்தரி ? இந்த ஒப்பனை மாதுக்காகவா நீ என்னைக் கூட ஒதுக்கத் துணிந்து விட்டாய் ! நான் மனதில் நினைத்தது சரிதான் ! இவள் ஒரு நாடகக்காரி ! என் மகனை மயக்கிய சிங்காரி ! போயும் போயும் மணமான மாதையா நீ காதலிக்கிறாய் ? வெட்கக் கேடான திருமணம் இது ! பிரிட்டீஷ் கோமகனார் போல் நீயும் ஆகிவிட்டாயே !

ஹெக்டர் மலோன்: (கோபத்துடன்) அதெல்லாம் சரி ! என் தீர்மானத்தை யாரும் எடை போட வேண்டாம் ! நான் என்ன செய்கிறேன் என்ற எனது ஒழுக்கப்பாட்டைச் சொல்கிறேன் ! சற்று பொறுங்கள் தந்தையாரே ! முழுக்கதை தெரியாது உங்களுக்கு. ஒற்றைக் கடிதத்தைப் படித்து நியாயம் பேச வராதீர் தந்தையாரே !

வயோதிகர் மலோன்: நன்றி மகனே நன்றி ! இப்போதாவது என்னைத் தந்தை என்று கருதி அழைக்கிறாயே !

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 5, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts