உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 14 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


“உடல் வலுவற்று, உள்ளத் தளர்ச்சியுடன் ஆன்மீகச் சிந்தனையின்றி நெறி இல்லாமல் இருக்காதீர், மேலை நாடுகள் “செய் ! செயல் மூலம் உன் வலுவைக் காட்டு,” என்று சொல்கின்றன. ஆனால் இந்தியா, “இன்னல் படுவதின் மூலம் உன் வலுவைக் காட்டு,” என்று சொல்கிறது. ஒரு மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு மிகையாக வைத்துக் கொள்ளலாம் என்னும் பிரச்சனையை மேலை நாடுகள் தீர்த்திருக்கின்றன. ஒரு மனிதன் எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ளலாம் என்பதை இந்தியா தீர்த்துள்ளது. மனித இனத்தைக் கவர்ந்த பூரண நாகரீகத்தில் (Ideal Civilization) தியாகம் செய்வது, மண்டியிட்டு வழிபடுவது, சுலோகங்களை முணுமுணுப்பது ஆகியவை மெய்யான மதமாகக் கருதப்படா ! வீர தீர கலைத்துவச் செயல் புரிய நம்மைத் தூண்டுவதற்கும், சிந்தனைகளை உன்னதப் படுத்த நம்மை உயர்த்துவதற்கும், தெய்வீகப் பூரணத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கும் உதவி செய்தால்தான் அவை நற்பழக்கமாகும். அவ்விதமின்றி கடவுளை நம் எல்லோருக்கும் பிதாவாகப் பிரார்த்தனையில் கருதி, நாம் ஒவ்வொருவரையும் நமது சகோதரராக அனுதினமும் நடத்தாவிடில் மதத்தால் என்ன நற்பயன் ஏற்படும் ?”

“மதத்தைப் பற்றி நான் சொல்வது என்ன ? நம்மிடையே மதத்தை வைத்துக் கொள்ளலாமா ? அல்லது அதை நீக்கி விடலாமா ? மதம் நிலைத்து நம்முடன் இருக்க வேண்டுமானால் அதற்கு உன்னத வல்லுநர், நெறியுள்ள பணியாளர் பலர் தேவை. குருமார்கள் மத வல்லுநர்தான். மதக்குரு மதத்தைத் தனது ஒற்றைத் தொழிலாக வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டவர். அவரே கடவுளின் பணியாளர். தம்மை அத்தகைய சீரான பணிக்கு அர்ப்பணித்துக்கு கொண்ட மதக் குழுவினர் நீண்ட காலம் இருக்கும் போது, மதம் ஏன் மறைந்து போகிறது ?”

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

கடந்தது பாதி வழி உன் ஆயுட் காலம் !
கடிகா ரத்தின் கரங்கள் சுற்றிடும் !
துடிக்குதுன் ஆத்மா அச்ச மிகுந்து !
தொலைதூரக் கரையில் திரியும் ஆன்மா
தொங்கி நிற்கும் உனைக் கண்டு கொளாது !
கடந்தது பாதி வழி உன் ஆயுட் காலம் !
மணிக்கடுத்த மணி வலிதான், பிழைதான் !
ஏனிங்கி ருக்கிறாய் மனிதா ?
எதை மிகுதியாகத் தேடுகிறாய் ?
இதைத் தான்நான் தேடுவது
ஏனிங்கு நான் இருக்கிறேன் ?

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் வேத ஞானி [Friedrich Nietzsche (1844-1900)]

உன்னத மனிதரை உருவாக்க . . . .

திருமண நடப்பு முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. இங்கிலாந்தில் மணவிலக்கு விதிகளும், பெண் சொத்துரிமைச் சட்டங்களும் திருமண வாழ்க்கையைத் தற்போது மாற்றி யிருக்கின்றன. இங்கிலாந்தின் திருமண முறை பிரான்ஸ் திருமண அமைப்புக்கும், ஸ்காட்லந்து திருமண நிகழ்ச்சிக்கும் வேறு பட்டுள்ளது. இங்கிலாந்தோ அல்லது அமெரிக்காவோ திருமணம் புரியும் வழக்கத்தை முறித்து விடுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. ஆனால் அதைச் செம்மையாய்ச் சீர்திருத்த இரண்டு நாடுகளும் தயாராக இருக்கும்.

உன்னத மனிதர் ஆக்கும் முயற்சிக்கு ஒரு பொதுக் கொள்கை தேவைப்படுகிறது. அது என்ன வென்றால் கட்டாயத் திருமண வாழ்வில் உன்னத மனிதரை உருவாக்க ஆண்-பெண் தம்பதி இருவர் உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பது. அதே சமயத்தில் உடலுறவைப் பெரும்பான்மை யானவர் திருமண வாழ்க்கையின் முக்கியத் தேவையாகக் கருதுகிறார். ஆனால் அந்தக் கருத்தைத் தவறு என்று சொல்வேன் நான். ஆண்-பெண் உடலுறவு திருமண வாழ்வில் நேரும் ஒரு சந்தர்ப்ப நிகழ்ச்சி என்றோ அல்லது நிகழும் சம்பவம் என்றோ வைத்துக் கொள்ளலாம். உடலுறவு வெறும் சந்ததி இனவிருத்தி நிகழ்ச்சிக்கு மட்டும் இல்வாழ்வில் அவசியான ஒரு தேவை. உடலுறவு திருமணத்தைத் தவிர பிற முறைகள் மூலமும் கிடைப்பதால், திருமணம் செய்வதற்கு அதுதான் ஒரு காரணம் என்பது தவறாகிறது. ஆதலால் உன்னத மனிதனைப் படைக்கும் திட்டத்துக்குத் திருமணங்கள் சிக்கன முறைகள் அல்ல என்று முடிவு செய்ய நேரிடுகிறது.

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

இயற்கை உணர்வை ஒழுக்கமற்றதாக நீ நினைப்பாயா ? எனக்கு அது நாணத்தை அளிக்கிறது. இயற்கை நமக்குக் காதல் தூது ! காலம் நம் வாழ்வைச் சிதைப்பது ! மரணம் நம்மைக் கொலை புரிவது ! என் வாழ்க்கையில் மோகம் பலதடவை வந்து நழுவிப் போனது. காதல் பிணக்கில் சிக்கித் தவித்த காலம் உண்டு ! உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தோடி என் நாக்கில் அழகு மொழிகள் பொங்கி இன்பமளிக்க இச்சை உண்டாகித் தாறுமாறாகப் பேசினேன் ! மற்ற சமயங்களில் நான் என் உணர்ச்சிக்கு முரணாகப் போராடிக் கண்ணீர் விழவைத்துச் சாத்தானைப் போல் கூத்தாடினேன் ! ஆயினும் கனிவுடன் இருந்த போதும் கடுமையாக இருக்கும் போதும் காதல் உணர்ச்சியிலிருந்து என்னால் தப்பிக் கொள்ள இயலவில்லை ! ஒரு மாதின் கண்ணோட்டம் என்னைப் பிடிக்க வந்த போது ஒருகணம் என்னுள்ளம் உடன்பட்டு அடிமையானது ! அடுத்த கணம் இடத்தை விட்டு ஓடிவிடு என்றென்னைத் தூண்டியது !

நானா பீற்றிக் கொள்கிறேன் ? நீ நம்பினாலும் சரி விலக்கினாலும் சரி நான் சொன்னவை யாவும் உண்மை ! என்னை மீறி நான் எப்போது வாழ்க்கையில் ஓர் உன்னதக் கோட்பாடைக் கண்டுபிடிக்கிறோனோ அப்போது நான் விஞ்ஞானி ஆகிறேன் ! உடனே அதை நிலைநாட்ட முனைவேன் ! அல்லது அது நடமாடப் பாதை இடுவேன் ! அதுதான் என் வாழ்வின் விதி ! அவ்வுணர்வே என்னை உன்னதம் அடைய வைக்கும் ஆன்மீக உள்ளுணர்வு ! அந்த ஆன்மீக எழுச்சியே கண நேரம் இன்ப மளிக்கும் இந்தக் காதல் மோகத்தை நசுக்கி வைத்தது ! காதல் மோகினி வீனஸ் என்னைப் பெண்ணிடம் தள்ள வில்லை ! களைத்துப் போன தருணம்தான் சந்தர்ப்பம் என்னைக் காதற் பெண்களிடம் தள்ளியது !

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 14
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 14)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆன்னி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: சந்ததி உந்துசக்தி ஆண்-பெண் இருவருக்கும் உடற் கவர்ச்சியை உண்டாக்கிக் கண்கள் விழுங்கி ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளச் செய்கிறது ! பெண்ணைக் கலந்து கொள்ளாமல் அவள் கருத்தை அறிந்து கொள்ளாமல் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணங்களில் இவ்விதக் கேளிக்கைகள் நிகழ்வதைக் காண வில்லையா ? இங்கிலாந்து தேசத்தில் உயர்குடிச் செல்வந்த ஆடவர் பெண்டிர் ஒருவரை ஒருவர் தெளிவாக அறிந்து கொள்ளாது குடியானவர் (Peasants) போல் குலாவிக் கொள்வதைக் கண்டு அருவருப்பு அடைவதில்லையா ? பார்த்தவுடன் ஒருவரை உன் வழக்காளராகவோ, மருத்துவராகவோ ஏற்படுத்தாத போது, கண்டதும் ஒருவர் மீது எப்படிக் காதல் கொண்டு உடன்பட்டு மணந்து கொள்வது ?

இளம்மாது: நியாய மில்லாத முறைகளை நாம் அறிவோம். நீவீர் எப்போதும் மாதருக்கு விளையும் பாதகங்களை விலக்கி விடுவீர். திருமண ஒப்பந்தம் தேவையானது என்பதை நீவீர் ஒப்புக் கொள்ள வேண்டும் முதலில். உமது கொள்கைப்படி காதலுக்குச் சிறுபான்மை மதிப்புதான் கிடைத்துள்ளது.

தாஞ் சுவான்: மனிதக் உறவுகளில் காதலுக்கு உன்னத மதிப்பில்லை என்று நான் சொல்ல வில்லை ! நான் சொன்ன தெல்லாம் திருமணத் தம்பதிகள் உடலுறவு தனிப்பட்ட சொந்த நிகழ்ச்சியில்லை என்பதே. அவரது உறவால் மூளைக் கோளாறான பிள்ளைகள் பிறந்து சமூகத்தின் பிரச்சனை ஆகலாம் ! தம்பதிகளின் தொத்து நோய் பிறக்கும் பிள்ளைகளைப் பற்றி பிறரைத் தீண்டலாம் ! ஆகவே திருமணம் என்பதும், உடலுறவு என்பதும் சமூகத்தைத் தாக்கும் பிரச்சனைகளே ! என்னை விரும்பும் மாதரின் பண்பும், அறிவும் எனக்குச் சமமாகவோ அல்லது மிகையாகவோ இருக்க வேண்டும். அந்தப் பெண்பால் மேல் எனக்கு உண்டாவது சாதாரண ஆண்பால் உணர்ச்சிதான் !

இளம்மாது: அப்படியானல் அந்த இயற்கை எழுச்சி ஒழுங்கற்ற உணர்ச்சி என்று சொல்கிறீரா ?

தாஞ் சுவான்: என்னருமை மேடம் ! இயற்கை உணர்வை ஒழுக்கமற்றதாக நீ நினைப்பாயா ? எனக்கு அது நாணத்தை அளிக்கிறது. இயற்கை நமக்குக் காதல் தூது ! காலம் நம் வாழ்வைச் சிதைப்பது ! மரணம் நம்மைக் கொலை புரிவது ! என் வாழ்க்கையில் மோகம் பலதடவை வந்து நழுவிப் போனது. காதல் பிணக்கில் சிக்கித் தவித்த காலம் உண்டு ! உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தோடி என் நாக்கில் அழகு மொழிகள் பொங்கி இன்பமளிக்க இச்சை உண்டாகித் தாறுமாறாகப் பேசினேன் ! மற்ற சமயங்களில் நான் என் உணர்ச்சிக்கு முரணாகப் போராடிக் கண்ணீர் விழவைத்துச் சாத்தானைப் போல் கூத்தாடினேன் ! ஆயினும் கனிவுடன் இருந்த போதும் கடுமையாக இருக்கும் போதும் காதல் உணர்ச்சியிலிருந்து என்னால் தப்பிக் கொள்ள இயலவில்லை ! ஒரு மாதின் கண்ணோட்டம் என்னைப் பிடிக்க வந்த போது ஒருகணம் என்னுள்ளம் உடன்பட்டு அடிமையானது ! அடுத்த கணம் இடத்தை விட்டு ஓடிவிடு என்றென்னைத் தூண்டியது !

இளம்மாது: போதும் உமது முரண்பாட்டுப் பேச்சு ! முதுகு எலும்பில்லாத ஓர் ஆண்பிள்ளை நீவீர் ! எனக்கு முன்பாக, என் தந்தை முன்பாக ஏன் இப்படித் தம்பட்டம் அடிக்கிறீர் ? ஒவ்வொரு பெண்ணும் உம்மீதுதான் கண்ணும் கருத்தும் கொள்கிறார் என்று பீற்றிக் கொள்கிறீர் ! இவற்றில் உண்மை எது ? புளுகு எது ? யாருக்குத் தெரியும் ?

தாஞ் சுவான்: நானா பீற்றிக் கொள்கிறேன் ? நீ நம்பினாலும் சரி விலக்கினாலும் சரி நான் சொன்னவை யாவும் உண்மை ! என்னை மீறி நான் எப்போது வாழ்க்கையில் ஓர் உன்னதக் கோட்பாடைக் கண்டுபிடிக்கிறோனோ அப்போது நான் விஞ்ஞானி ஆகிறேன் ! உடனே அதை நிலைநாட்ட முனைவேன் ! அல்லது அது நடமாடப் பாதை இடுவேன் ! அதுதான் என் வாழ்வின் விதி ! அவ்வுணர்வே என்னை உன்னதம் அடைய வைக்கும் ஆன்மீக உள்ளுணர்வு ! அந்த ஆன்மீக எழுச்சியே கண நேரம் இன்ப மளிக்கும் இந்தக் காதல் மோகத்தை நசுக்கி வைத்தது ! காதல் மோகினி வீனஸ் என்னைப் பெண்ணிடம் தள்ள வில்லை ! களைத்துப் போன தருணம்தான் சந்தர்ப்பம் என்னைக் காதற் பெண்களிடம் தள்ளியது !

இளம்மாது: நீவீர் சொல்வது எனக்குப் புரிய வில்லை காதல் மன்னா ! நீவீர் களைத்துப் போனாலும் கண்மூடிப் பெண் மடியில் தூங்கும் பித்தர் இல்லை ! உம்மைக் காதலித்துக் களைத்துப் போன பெண்டிர்தான் பலர் ! அவரது கண்ணீர்க் கடலில் நீந்தியவர் நீவீர் ! அதில் ஐயமில்லை !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 2, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts