தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
“லாவண்யா விஷயம் உனக்கு தெரியுமா? உன்னை வரச் சொல்லி எழுதியிருப்பதாய் சொன்னாள்.” முறுமுறுப்பது சொன்னான் சுரேஷ்.
“ஆமாம். கடிதம் எழுதியிருந்தாள். ஆனால் எனக்கு எங்கே முடியும்? கடிதம் எழுதவே நேரம் இல்லை. பிரசவம் ஆன பிறகு பத்து நாட்கள் இருந்து விட்டு வரணும்.”
சுரேஷ் திகைத்துப் போனான்.
லாவண்விடம் உயிரையே வைத்திருந்த வசந்தி இன்று லாவண்யா தனக்கு எதுவுமே ஆகமாட்டாள் என்பது போல் பேசுகிறாள்.
அதற்குள் சுந்தரி வந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
“சவிதாவின் அப்பா” வசந்தி அறிமுகப்படுத்தினாள். சுந்தரி திகைப்புடன் பார்த்தாள். குழந்தையை தூங்க வைப்பதற்காக உள்ளே போனாள் சுந்தரி. வசந்தி பின்னாலேயே வந்து “குழந்தையை நான் தூங்க வைக்கிறேன். நீ போய் கொஞ்சம் அவருடன் பேசிக் கொண்டிரு. என்னுடன் பேசுவதற்கு அவருக்கு சங்கடமாக இருக்கு. சவிதா வரும் நேரம் ஆகிவிட்டது. டீயைக் கலந்து கொடு” என்றாள். சுந்தரி வியப்படைந்தவளாய் சமையலறைக்கு சென்று டீ யை தயாரித்துக் கொண்டிருந்தாள்.
வசந்திக்கு வீணாவின் நினைவு வந்தது.
“நான் தான் ஜெயித்தேன் வீணா! எனக்கு அவன் மீது கோபம் வரவில்லை. இருபத்தி இரண்டு வருடங்கள் சேர்ந்து குடித்தனம் செய்தோம். பிரிந்துவிட்டோம். அவரவர்களின் வாழ்க்கை அவரவர்களுக்கு. என்னுடைய வாழக்கை என் கையில் இருக்கிறது. என் கஷ்ட சுகங்கள் என்னுடையவை. என் இருப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. நான் ஒரு நபருக்கு மனைவி, இரு குழந்தைகளுக்கு தாய் மட்டுமே இல்லை. இந்த சமுதாயத்துடன் தொடர்பு இருக்கும் ஒரு மனுஷி நான். என் சூழ்நிலையை என்னால் மாற்றிக் கொள்ள முடியும். என் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நான் செய்யும் முயற்சி கூட எனக்கு சந்தோஷம் தருகிறது. இந்த சந்தோஷத்திற்கு முன்னால் வேறு எதுவும் இணையாகாது. நான் எதையும் இழந்து விடவில்லை. கணவனின் வீட்டில் தவிர பெண்ணுக்கு சுகம் இருக்காது என்று சொன்னது யாரோ தெரியவில்லை. ஆனால் அது உண்மையில்லை. இன்று நான் இருப்பது போல் சுயகௌரவத்துடன் யாருமே இல்லை. கணவன் இல்லாவிட்டால் மனைவிக்கு தனிமைதான் என்பது பொய்தான். இன்று என்னை சுற்றிலும் மனிதர்கள் இருக்கிறார்கள்.”
வசந்தி யோசனையில் ஆழந்திருந்த போது சவிதா வந்தாள். தந்தையைப் பார்த்து சந்தோஷப்பட்டாள். இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு சுரேஷ் தாழ்ந்த குரலில் சொன்னான். “அம்மாவை நீ ரொம்ப மாற்றிவிட்டாய். ரொம்ப ஆச்சரியமாக இருக்கு.”
சவிதா முறுலித்தாள். “அம்மாவை நான் மாற்றவில்லை டாடீ! அம்மாவின் சுபாவமே அதுதான். ரொம்ப புத்திசாலி, பொறுமை, மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம், பகிர்ந்து கொடுக்கும் அன்பு எல்லாமே இருந்தன. ஆனால் இவை எதுவும் உங்களுடைய மனைவியாக, எங்களுக்கு தாயாக இருந்த போது வெளியில் வரவில்லை. வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு விதமாக சொன்னால் நான்கு சுவர்களுக்குள் மங்கிப் போய்விட்டாள். அம்மாவுக்கு இருக்கும் சக்தி நம் யாருக்குமே இல்லை” என்றாள்.
சுரேஷ¤க்கு புரிந்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் மௌனமாக இருந்தான்.
அன்புள்ள லாவண்யாவுக்கு,
உன் கடிதம் கிடைத்து ஒரு வாரமாகிவிட்டாலும் பதில் போடுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. இங்கே சவிதாவின் சிநேகிதி சுந்தரி நம் வீட்டில் பிரசவித்திருக்கிறாள். பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்வதிலேயே எங்க மூவருக்கு பொழுது சரியாக இருக்கிறது. நீ குளிக்காமல் இருப்பதை கேட்டு நானும் சவிதாவும் ரொம்ப சந்தோஷப்பட்டோம். உனக்கு பெண்குழந்தைதான் பிறக்க வேண்டுமாம். சவிதாவின் விருப்பம் இது. உன் உடம்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும். டாக்டரிடம் சென்று ரெகுலர் ஆக செக்கப் செய்துகொள். இப்போதைக்கு என்னால் வர முடியாது. பிரசவம் ஆன பிறகு வருகிறேன். தேவைப் பட்டால் பதினைந்து நாட்கள் தங்குகிறேன்.
அடுத்தவாரம் நான் திருச்சிக்கு ரோகிணியிடம் போகிறேன். அங்கே ஆஸ்பத்திரியில் அவளுக்கு கூடமாட ஒத்தாசை செய்து கொண்டு அங்கேயே இருப்பேன்.
லாவண்யா! இதனால் உன்னுடைய கௌரவத்திற்கு இழக்கு வந்து விடும் என்று பயப்படாதே. உங்க அம்மா தனி நபராக தன் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள் என்று பெருமைப் படு. உங்க அம்மா நான்கு பேருக்கு உதவியாக இருக்கிறாள் என்று சந்தோஷப்படு.
உண்மைதான் லாவண்யா! நான் இப்போ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை என் கையில் இருக்கிறது. அது மட்டுமே இல்லை. ஒருத்தருடைய வாழ்க்கை அவர்களுடைய கையில்தான் இருக்க வேண்டும் என்ற உண்மையும் புரிந்தது. இந்த ஞானம் ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டியது முக்கியம். நியாயமோ அநியாயமோ எனக்கு நானே செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறேன். யாரோ எனக்கு அநியாயம் செய்து விட்டார்கள் என்று வாழ்க்கையை முடித்து கொள்ளும் நிலையிலிருந்து வெளியேறிவிட்டேன்.
இருபது வருடங்கள் குடித்தனம் செய்த போது உங்க அப்பாவுக்கு மனைவியாக, உங்களுக்கு தாயாக வாழ்ந்தேன்.
உங்க அப்பா என்னை நெசிக்கவில்லை. நானும் உங்க அப்பாவை நேசிக்கவில்லை. நேசிக்கணும் என்ற விஷயம் கூட எனக்கு தெரியவில்லை. உங்க அப்பா என்னுடைய கணவன். கணவனுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, கணவனிடமிருந்து எதை பெற்றுக் கொள்ள வேண்டுமோ இந்த சமுதாயம் எனக்கு கற்றுக் கொடுத்தது. அதைத்தான் செய்தேன். கணவனிடம் மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, குழந்தையை எப்படி வளர்க்க வேண்டுமோ அதைத்தான் நான் செய்தேன். எந்த குறையும் வராமல் நடந்து கொண்டேன்.
ஆனால் நான் தோற்றுப் போய்விட்டேன். தோற்றுப் போகாமல் முடியாது. மணல் அஸ்திவாரத்தின் மீது எந்த கட்டிடமாவது நிலைத்திருக்குமா? இந்த மணல் அஸ்திவாரத்தின் மீது நம்முடைய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று எனக்கு அளவுகடந்த கோபம் வருகிறது. என்னை விட்டு பிரிந்ததில் உங்க அப்பாவுக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. இருபது வருடங்களாக யாரை என் வாழ்க்கையின் லட்சியம் என்று நம்பியிருந்தேனோ அந்த நபரக்கு நான் இல்லை என்றால் எந்தக் கவலையும் இல்லை தெரிந்த பிறகு நான் எங்கே போவது?
என் உயிரையும் பணயம் வைத்து, சதையை ரத்தத்தைப் பகிர்ந்து கொடுத்து ராப்பகலாய் கண்விழித்து பெற்று வளர்த்த மகளுக்கு நான் ஒரு கௌரவப் பிரச்னையாக தவிர வேறு விதமாக தென்படவில்லை என்ற போது……
தனக்கு தேவைப்பட்ட போது தவிர என் நினைப்பே அவளுக்கு வரவில்லை என்ற போது…
நான் என்னவாகணும்?
வேறு யாராவது இருந்திருந்தால் என்னவாகியிருப்பார்களோ தெரியாது. ஆனால் நான் மனுஷியாகி விட்டேன். ஒரு மனைவியாக, ஒரு தாயாக இல்லாமல் மனுஷியாக நிலைத்து நின்றேன்.
நான் தேர்தெடுத்த லட்சியமே தவறு என்றும், அது ஒரு நாளும் என்னை கரை சேர்க்கப் போவதில்லை என்றும், ஏதோ ஒரு நாள் என்னை மூழ்கடித்து விடும் என்று எனக்கு அப்போ தெரியாது.
இந்த விஷயத்தை முன்னாடியே தெரிந்திருப்பது பெண்களுக்கு வரம். அந்த ஞானோதயம் எனக்கு ஆகிவிட்டது. என் வாழ்க்கையின் லட்சியத்தை முடிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மகளாக, மனைவியாக, தாயாக வாழ்ந்து பழகிவிட்ட எனக்கு ஆரம்பத்தில் பயமாக இருந்தது.
எந்த பாதுகாப்பும் இல்லையே என்று தோன்றியது. எந்த ஆதாரமும் இல்லாமல் என்னவாகி விடுவேனோ என்று கஷ்டமாக இருந்தது.
நாட்கள் போகப் போக என் கால்களில் தெம்பு வந்தது. என் கண்கள் பார்க்க கற்றுக் கொண்டன. என் வாய் பேசத் தொடங்கியது. என்னுள் உயிர்சக்தி பாயத் தொடங்கியது. நான் மனுஷியாகிவிட்டேன்.
லாவண்யா!
என்னை மனுஷியாக பார்க்க கற்றுக்கொள். உங்களுக்காக உழைக்கும் அம்மாவாக பார்ப்பதை விட்டுவிடு. என் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே.
இன்று என் வார்த்தைகள் உனக்கு அர்த்தம் இல்லாதவையாக தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு மனுஷியாக மாற வேண்டிய நாள் வந்தே தீரும். மனுஷியாக மாற வேண்டும் என்ற விருப்பம் பலமாக தோன்றும் அந்த நிமிடத்திற்காக என் வார்த்தைகளை கவனமாக உன் மனதில் பூட்டி வைத்துக் கொள்.
மனுஷியாக மாற வேண்டிய அந்த நாள் வரும் போது, அப்படி மாறக் கூடிய சக்தி இல்லை என்றால் நாம் எல்லோரும் சர்வநாசனம் ஆகிவிடுவோம். நாமே எஞ்சியிருக்க மாட்டோம். அதனால் நம் உயிரை பணயம் வைத்தாலாவது சரி மனுஷியாக மாற வேண்டிய சக்தியை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். என் வார்த்தைகளைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாரு.
உன்னை என்னுடைய மகளாகவோ, மனோகரின் மனைவியாகவோ அல்லாமல் ஒரு மனுஷியாக அடையாளம் காணப்போகும் நாளுக்காக காத்துக் கொண்டிருப்பேன்.
பிரியமுடன்,
வசந்தி
முற்றும்
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
- துய்ப்பேம் எனினே தப்புந பலவே – வாழ்க்கை இதுதான்!
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 3
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 4
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(2) (முற்றும்)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 25 விலகிச் செல்லாது விதி !
- தாகூரின் கீதங்கள் – 37 மரணமே எனக்குச் சொல்லிடு -2 !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 13 (சுருக்கப் பட்டது)
- திருமதி. “ரத்திகா” அவர்களின் கவிதைநூல் வெளியீடு நிகழ்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேபி பிரபஞ்சத்தைப் பின்னிய அகில நாண்கள் (Cosmic Strings) (கட்டுரை: 32)
- மாயமாய்ச் சூலுற்ற தூயமாது!
- அபார்ட்மெண்ட் அட்டகாசம்!!!
- கவிதைகள்
- Last kilo byte – 18 மும்பை அரங்குகளில் தமிழ்படங்களும், முகங்களும்
- உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா
- Launching of Creative Foundation
- சீனாவின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் – நரேந்திரன் கட்டுரை
- பைரவர்களின் ராஜ்ஜியம்!
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம்
- ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம் – இலக்கிய வடிவங்கள்
- தழல் ததும்பும் கோப்பை
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(1)
- மானுடத்தைக் கவிபாடி…
- தூக்கத்தோடு சண்டை
- தன்னுடலை பிளந்து தந்தவள்
- நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்
- பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்