உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


இளைஞர்களே ! மதத்தின் இரகசியம் அதன் கோட்பாடுகளில் இல்லை. செயற்பாட்டில் உள்ளது. நன்னெறி உடையவராகவும் நல்வினை புரிபவராகவும் இருப்பதே மதப் பூரணம் அடைவது. “பிரபு பிரபு” என்று இறைவனை நோக்கிக் கூக்குரல் இடுவதில் இல்லை ! எழுதப்பட்ட மெய்நெறியைக் கடைப்பிடிப்பவர் உண்மையாக மதத்தைப் பின்பற்றுபவர். இளைஞராகிய நீவீர் அனைவரும் உன்னதம் உடையவர். அருகிவரும் எதிர்காலத்தில் உங்களில் சிலர் சமூகத்தின் ஆபரணங்களாக ஒளிவீசுவார். பிறந்த நாட்டின் பேராசிகளைப் பெறுவார். இடையிடையே உங்களுக்கு எதிர்ப்படும் உலகத்தின் புறக்கணிப்புக்கு மனம் தளராதீர் ! அவை எல்லாம் விரைவில் நீங்கி உமக்கு ஆதரவு உண்டாகும்.

நெறியுடன் வாழ்வீர் ! நிமிர்ந்து நிற்பீர் ! அஞ்சாதீர் ! ஆழ்ந்த மதக் கோட்பாடுகளைத் திணித்துக் கொண்டு மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டாம் ! கோழைகள்தான் பாபம் செய்யத் துணிவார் ! ஊக்கம் கொண்டவர் ஒருபோதும் பாபம் புரியார் ! மனதிலும் பாபத்தைக் கருத மாட்டார் ! எவரையும் நேசிப்பீர் ! எல்லோரையும் நேசிப்பீர் !

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

உபரி மொழிகள் (Stray Sayings):

. . . . நீ உனது மறுப்புரையைப் போராட எதிர்க்கும் தோல்வியாக எடுத்துக் கொள்ளாதே. – அதாவது அடிமையாக இருந்திட மறுப்பது ! – அடிமைப் படுத்துவை எதிர்ப்பது ! – அண்டை வீட்டான் போல் செல்வத்தில் புரள்வதை மறுப்பது ! – வறுமையில் இருந்திட மறுப்பது ! கோழையும், ஆணைக்குப் பணியாதரும், பொறாமைப் படுபவரும் உனது மறுப்புரைத்தலை ஆதரிக்கிறார்.

. . . . உனக்கு விருப்பமானதைப் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்து. இல்லாவிட்டால் பிறர் வற்புறுத்தித் திணிப்பதை நீ ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்கும் ! காற்றோட்டம் இல்லாத ஓர் இடத்தில் பசுமையான காற்று முழுமையாக வரவேற்கப் படுவதில்லை ! மதமில்லாத இடத்தில் வஞ்சக மொழிகள் செவிக்கு இனிதாக உள்ளன ! ஞானமில்லாத இடத்தில் அறிவின்மை (Ignorance) ஞானமாகப் பீற்றிக் கொள்கிறது !

. . . . தீயவர் பெருகிப் பலசாலிகள் பிழைத்து எழும் போது, இயற்கைக் கடவுளாக நிச்சயம் அயோக்கியர் ஆகிவிடுவார் !

. . . . வரலாறு மீள்கிறது என்று சொல்ல வந்தால் எதிர்பாராததே எப்போதும் வாழ்வில் நிகழ்கின்றது ! அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்வதில்லை என்னும் மனிதனுடைய வலுவற்ற தன்மை எத்தகைய தீவிரமானது !

. . . . இரக்கத்தன்மை (Compassion) நேர்மை யற்றவரின் (Unsound) உடன்பிறப்பு உணர்ச்சி !

. . . . தீவினையைப் புரிந்து கொள்பவர் மன்னித்து விடுக. எதிர்ப்பவர் அதை அழித்து விடுக !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 7
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 7)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)

காலம்: காலை வேளை

இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: அதனால்தான் யுத்தங்களால் பயனில்லை என்று சொல்கிறேன் ! மனிதர் அச்சத்தை நீக்க முடிவதில்லை ! அச்சம் இல்லாதவனும், ஆதிக்கவாதியும் உலகத்தில் உள்ள வரைப் போர்கள் நடக்கும் ! போர்கள் தொடரும் ! மனிதர் ஆயிரக் கணக்கில் மடிவார் ! மனிதத்துவம் நசுங்கிப் போன மானிடர் மரணப் போர்களில் மகிழ்ச்சி அடைகிறார் ! அவரது பூர்வீக மிருகத்தனம் மேலோங்கி வெளியே மீண்டும் மீண்டும் வருகிறது ! மனிதன் மடியக் காரணமாகும் ஒவ்வொரு கோட்பாடும் காத்தலிக் மதத்தைச் சார்ந்ததாக இருக்கும். அகில உலக விடுதலைக்கும் மனிதச் சமத்துவத்துக்கும் பட்டினி கிடந்து பாழடைந்த புழுதி மண்ணில் உயிரைவிடத் தயாராக இருக்கிறார்.

முதியவர்: பூ இதுதானா ? இது ஒன்றும் புதிய செய்தி யில்லை !

தாஞ் சுவான்: பூ என்று நீ உதறித் தள்ளும் இந்த விடுதலைப் போராட்டத்தில் குதிக்க எத்தனை பேர் முன்வருகிறார் என்பது உனக்குத் தெரியாது ! தாய்நாட்டு விடுதலையே ஒரு மனிதனின் தனித்துவ பிறப்புரிமை ! சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இம்மூன்றிலும் சுதந்திரமே மனிதனின் சிரம் ! சமத்துவம் உடம்பு ! சகோதரத்துவம் கை, கால்கள் ! சமூக விடுதலையைப் பற்றி காத்தலிக் மதத்துக்குக் கவலை இல்லை ! மன விடுதலைக்குப் பாடுபடும் அந்த மதம் மனித விடுதலைக்கு கண்மூடிக் கொள்கிறது ! மனிதன் பூரணமடைய உயிரை விடுகிறான். விடுதலை நாட்டத்தையும் விருப்போடு கைவிடுகிறான் !

சாத்தான்: மேலும் ஒருவரை ஒருவர் கொல்வதற்கு உகந்த காரணத்தை ஏற்படுத்திக் கொள்கிறான்.

தாஞ் சுவான்: அதனால் என்ன ? மரணம் முக்கிய மில்லை ! மரண பயமே முக்கியமானது ! மக்களைக் கொல்வதும், மனிதர் மடிவதும் நம்மை இழிவாக்குவதில்லை. அடிப்படை வாழ்வு, இழிவாக்கிடக் கிடைக்கும் கூலி இலாபம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வது முக்கியமானது ! உயிருடன் நடமாடும் அடிமை அல்லது அவரது கோமகன் வாழ்ந்திடப் பத்துப் பேர் சாவது ஒப்புக் கொள்ளப் படுகிறது ! காத்தலிக் மதத்தின் அடிமை ஒழிப்புக் கொள்கை : மகனுக்கு எதிராகத் தகப்பன், சகோதரனுக்கு எதிராகச் சகோதரன், ஒருவரை ஒருவர் கொல்லத் தயங்கார்.

சாத்தான்: நீ நீட்டி முழக்கும் விடுதலையும், சமத்துவமும் சுதந்திர வெள்ளைக் கிறித்துவரை, அடிமைச் சந்தை ஏலத்தில் விற்கப்படும் காட்டுமிராண்டிக் கறுப்பரை விட வணிகத் துறையில் மலிவாக்கி விட்டது ! கறுப்பு அடிமைகள் கடினமாக ஊழியம் செய்வது போல் வெள்ளைக் கிறித்துவர் வேலை செய்ய மாட்டார். வேலைக் கேற்ற கூலி ! கூலிக் கேற்ப வேலை ! வெள்ளைக் கிறித்துவரைப் பிடித்துக் கொண்டுபோய் அடிமைச் சந்தையில் விற்கும் ஒரு காலம் வரும் ! அப்போது அவரது நிதி மதிப்பு ஏறும்.

தாஞ் சுவான்: அஞ்சாதீர் ! வெள்ளை வர்க்கம்தான் இப்போது அதிகார பீடத்தில் உள்ளது ! கறுப்பர் வெள்ளையர் காலைத் துடைக்கும் வேலை உள்ளவரை ஒருவருக் கொருவர் துணை தேவைப்படும். இந்த மனித விலங்கு புதிரானது ! சுயநலப் பிராணி ! மண்டை ஓட்டைத் தாண்டி அண்டை வீட்டுத் தீயை அணைக்காது ! ஆழமான எலும்புவரைக் கோழையானது ! நெஞ்சுறுதி இல்லாது கூனிப் போவது ! ஒரு கோட்பாட்டுக்காகத் தீரமாய்ப் போராடுவது ! தன்னுயிரை இழக்கத் துணியும் மதவெறி கொண்டது ! ஆன்மீக சக்தி வலுவில்லாத போது எளிதாக அடிமை ஆக்கி விடலாம் அந்த உயிர்ப் பிராணியை !

வாலிப மாது: தன் பொறுப்பை எல்லாம் தூக்கி மனைவி மீது பொதி சுமக்க வைத்து விடுவான் ஆண்மகன் !

வயோதிகர்: அடித்துச் சொல் அப்படி அருமை மகளே ! ஆடவர் தலைகனத்து கொம்புக்குத் தாவினால் அடிமரத்தை வெட்டிவிடு !

தாஞ் சுவான்: மனிதனின் கடமையும் பொறுப்பும் பிள்ளைகள் உண்ண நாளுணவு மேஜைக்கு வந்ததும் முடிந்து விடுகிறது. பெண் குழந்தை பெறுவதற்கு இயற்கை படைத்த ஒரு கருவி ஆடவன் ! வாழ்க்கையின் ஒரு முடிவுக்கு வேண்டிய ஓர் மூலாதாராம் !

வாலிப மாது: இப்படித்தான் ஒரு மாது நினைப்பாள் என்பது உமது எண்ணமா ? அருவருப்பாக இருக்கிறது இதைக் கேட்டும் போது !

தாஞ் சுவான்: மன்னிக்க வேண்டும் மேடம் ! பெண்மனதில் என்ன நினைக்கிறாள் என்பது எனக்குத் தெரியாது ! எனக்குத் தெரிவது இது ஒரு பெண் தன்னைத் தாயாகப் பாராட்டிக் கொள்வது. மனித சந்ததி பெருக இயற்கை விளைவித்த உன்னத ஒரு வினைக்குப் பெண் படைக்கப் பட்டிருக்கிறாள் ! இயற்கையின் மகத்தான அப்பணியைப் பூர்த்தி செய்ய ஆண் வணிக முறையில் அதை நிறைவேற்றுகிறான் ! மனித சந்ததி விருத்திக்குப் பூர்வீக காலம் முதல் பெண்ணே ஆணைத் தயாராக்கி யிருக்கிறாள் ! பெண், ஆண் இரு பாலாரையும் பெண்ணே பெற்றுத் தருகிறாள் ! ஆயினும் ஆண் பெண்ணுக்கு நன்றி செலுத்துவ தில்லை ! ஆணுக்குப் பெண் நன்றி உரைப்பது மில்லை !

சாத்தான்: இயற்கை நியதி என்று சொல்லிய பிறகு எதற்கு ஆண் நன்றி சொல்ல வேண்டும் பெண்ணுக்கு ?

வாலிப மாது: வேடிக்கையான பேச்சு இது ! என் கேள்வி பெண் எதற்காக ஆணுக்கு நன்றி சொல்ல வேண்டும் ?

தாஞ் சுவான்: ஆணை எப்போதும் வரவேற்கிறாள் பெண் ! அவனது கனவுகள், கோட்பாடுகள், வீர தீரச் செயல்கள், மூடத்தனங்கள் அனைத்தும் ஒரு நிபந்தனையின் கீழ் வரவேற்கப் படுகின்றன. குடும்பத்தில் பெண்ணை ஓர் அன்னையாக வழிபட வேண்டும் ஆண் ! ஆணாதிக்கம் பெருகிடப் பெண் செய்த பிழைகள் என்ன ? முதல் பிழை : ஆணின் எண்ணிக்கையைத் தனக்குக் குறைவாக ஆக்கிக் கொண்டது ! இரண்டாவது பிழை : குடும்பத்தில் ஆணுக்குப் பூரண விடுதலை கொடுத்தது ! மூன்றாவது பிழை : வாயில் ஊட்டி உடலைத் தேக்கு போல் வலுவாக்கியது ! நாலாவது பிழை : ஆணின் மூளையை விருத்திசெய்து அவனே அறிவாளி என்று கர்வம் ஊட்டியது ! இறுதிப் பிழை : ஆணுக்கு விசிறி வீசிச் சுகவாசி ஆக்கிக் காலடியில் அமர்ந்து பெண் அடிமையாகிப் போனது !

வாலிப மாது : அடடா ! எத்தகைய ஞான மொழிகள் இவை எல்லாம் ! இன்னும் சொல்லுங்கள் பெண்ணிழைத்த பிழைகளை !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 13, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts