தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
பிக்னிக்லிருந்து வந்த பிறகு வசந்தி மேலும் சோர்ந்துவிட்டாள். நேரத்திற்கு சாப்பாடு இல்லை. வீட்டு வேலைகளிடம் சிரத்தை இல்லை. எப்போதும் ஏதோ யோசனை இல்லையா அழுகை.
அண்ணனும், அண்ணியும் வந்து தைரியம் சொல்லுவார்கள். “இது போன்றவை அவ்வப்பொழுது நடந்துகொண்டுதான் இருக்கும். அதை எல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது. நான்கு நாட்கள் பொறுமையாக இருந்தால் அவனே வழிக்கு வருவான்” என்பார்கள்.
“எனக்குத் தெரிந்து நான்கு மாதங்களாகிவிட்டது. அதற்கு ஆறுமாதங்களுக்கு முன்னாலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்றது. மெலும் நான்கு மாதங்கள் நீடித்தால் இனி அந்த உறவு சாசுவதமாகிவிட்டால்?” என்பாள்.
“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. இப்படிப்பட்ட உறவுகளை ஆயிரத்தெட்டு பார்த்திருக்றோம். லட்ணமாய் இருக்கும் மனைவியை எவனாவது இழப்பனா என்ன? ஆனால் அவளுக்கு பணம் எதுவும் தாரைவார்த்துவிடாம்ல ஜாக்கிரதையாக இருக்கணும்” என்பார்கள்.
பணத்தைப் பற்றிய பேச்சை எடுத்ததும் வசந்திக்கு மூளை கலங்கிவிடும் போல் இருந்தது. “எல்லோருக்கும் பணத்தைப் பற்றிய கவலைதான். லாவண்யா, அண்ணன், அண்ணி மற்றும் எல்லோருக்கும் நீலிமா சுரேஷிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டுவிடுவாளோ என்ற பயத்தைத் தவிர வேறு எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. மனுஷன்தான் முக்கியம் என்று யாருக்குமே தோன்றவில்லை தன் ஒருத்திக்கு தவிர. பண இழப்பு தனக்கு முக்கியமில்லை. “சுரேஷ் மனைவியை விட்டுவிட்டான். நீலிமாவுடன் இருக்கிறான்” என்று பத்து பேர் சொல்லுவதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது.
அவனுடைய வேலைகளை செய்யாமல், அவன் இல்லாமல் இந்த வீட்டில் இருப்பது ரொம்ப கஷ்டம்.
பின்னே என்னதான் செய்வது? இதே கேள்விதான் திரும்பத் திரும்ப அவள் மனதை குடைந்துக் கொண்டிருந்தது. பதில் மட்டும் தெரியவில்லை.
சுரேஷ் பெயரளவுக்கு வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தான்.
இருவருக்குமிடையே பேச்சு வார்த்தையே இல்லை. அவனாக பேச முயன்றாலும் பதில் சொல்ல வசந்திக்குப் பிடிக்கவில்லை. அவன் அவ்வளவு ஸ்பஷ்டமாக மறுப்பை வெளிப்படுத்திய பிறகு இனியும் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று தோன்றியது.
மூளையைக் கலங்கடிக்கும் எண்ணங்களின் கொந்தளிப்புடன், தகித்துக் கொண்டிருந்த அவமானத்துடன் வாழ்வது சாத்தியம் இல்லை என்று தோன்றிவிட்டது.
“எதற்காக வாழணும்? எத்தனை நாட்களுக்கு வாழணும்? செத்துப் போனால்தான் என்ன?” சாவைப் பற்றிய நினைப்பு வந்ததும் வேட்டைக்காரனைப் பார்த்துவிட்ட முயல் குட்டியைப் போல் நடுநடுங்கிப் போவாள். இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கும். தூக்கமில்லாத இரவுகளில் பயத்தினால் நடுக்கமெடுத்து வியர்வையால் உடல் தொப்பலாக நனைந்துவிடும். அறையில் இருக்கும் ஜன்னல்கள், பொருட்கள் எல்லாம் தன்னைப் பார்த்து பரிகாசம் செய்து கொண்டே தன் மீது பாய வருவது போல் தோன்றும். பயந்து போய் கண்களை அழுத்தமாக மூடிக் கொள்வாள்.
உயிரோடு இருப்பதற்கு எந்த காரணமும் இல்லாததால் செத்துப் போவதில் வசந்திக்கு எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. ஆனால் எப்படி செத்துப் போவது என்று தான் தெரியவில்லை. நாள் முழுவதும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.
கேஸை திறந்து விட்டு தீக்குச்சியை கொளுத்தி விடலாம்.
தூக்கமாத்திரைகளை விழுங்கிவிடலாம். உயரமான கட்டிடத்திலிருந்து குதிக்கலாம். இல்லையா குளமோ குட்டையோ பார்த்து விழுந்து சாகலாம்.
முடிந்துவிடும். வசந்தியின் கதை முடிந்துவிடும். வசந்தி இருக்க மாட்டாள். அவளுடைய துக்கமும் இருக்காது.
ஆனால்…..
“வசந்தி இறந்து போய்விட்டாள். பாவம்! கணவன் அவளை விட்டுவிட்டான் இல்லையா? அதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்” என்று இரக்கம் காட்டுவார்கள்.
“செத்து எதை சாதித்தாள்? எப்படியாவது கணவனை தன் வழிக்குக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டாமா?” என்று பழித்துக் காட்டுவார்கள்.
அதற்கு பிறகு எல்லோரும் மறந்து போய்விடுவார்கள். சுரேஷ், லாவண்யா, சவிதா எல்லோரும் சிலநாட்கள் அழுதுவிட்டு மறந்து போய்விடுவார்கள்.
அதற்காகவா தான் தற்கொலை செய்துகொள்வது?
நான் … நான் யாரு?
எதற்காக இந்த உலகிற்கு வந்தேன்? வந்ததற்கு என்ன செய்தேன்?
எனக்குக் கூட உதவி செய்ய முடியாத இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தேன். சகலமும் என்று நினைத்த கணவனை இழந்துவிட்டேன். யாருக்கும் தேவையில்லாமல், இந்த பாரம் தங்கள் தலை மீது விழுந்து விடுமோ என்று எல்லோரும் பயந்து கொண்டிருக்கும் போது, என்னால் யாருக்கும் கடுகளவு பட பிரயோஜனம் இல்லாத போது, அந்த விஷயத்தை எல்லோரும் தன்னிடமே ஸ்பஷ்டமாக சொல்லிவிட்டதால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் செத்துப் போய்விடுவாள். அது எவ்வளவு பயங்கரமானது?
இந்த உலகில் ஒருத்தருக்குக் கூட நான் தேவையில்லையா?”
“வசந்தீ! நீ இல்லா விட்டால் நாங்கள் என்னவாகிவிடுவோம்? உன்னுடைய உதவி, உன்னுடைய இருப்பு எங்களுக்கு தேவை” என்று சொல்லக் கூடிய நபர் ஒருத்தர் கூட இல்லையா? யாருக்கும் அக்கறை இல்லாத போது நான் எதற்காக வாழணும்? யோசிக்க யோசிக்க வசந்திக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. பயத்தையும் வெற்றிக் கொண்டுவிட்ட மனக்குழப்பம் ஆக்டோபஸ் போல் வசந்தியை சூழ்ந்துக் கொண்டுவிட்டது.
ஒரு முறை சவிதாவை பார்த்து விட்டால்? தாயின் உள்ளத்தில் ஏதோ ஒரு மூலையில் முணுமுணுப்பு கேட்டது. எதற்காக சவிதாவைப் பார்ப்பது? லாவண்யாவைப் பார்த்தது போறவில்லையா? லாவண்யாவாவது சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு தன்னிடம் வரச்சொன்னாள். சவிதா அப்படி இல்லை. உடனே வேலையைத் தேடிக் கொள்ளச் சொல்வாள். சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பாள். ஏதேதோ சொல்லி தன்னை மேலும் தனிமையில் தள்ளிவிடுவாள். தன்னுடைய வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளவே அவளுக்கு சரியாக இருக்கு. இன்னும் தன்னுடைய பாரத்தை எங்கே சுமக்கப் போகிறாள்?
என்னை யாரும் பார்த்துக் கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடித்தேன். சவிதா பிறந்த போது செத்துப் பிழைத்தேன். இந்த விஷயத்தை சொன்னால் அவளுக்குப் புரியுமா? என்னுடைய மகள்கள் என்று பெருமைபட்டுக் கொள்ளும் சுரேஷ¤க்குத்தான் புரியுமா?
யாரும் தன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. யாரும் துணைக்கு வரப் போவதில்லை. உதவிகரம் நீட்டப் போவதில்லை. “கடலில் போய் குதி” என்பார்கள். “தனியாக அலைகளுடன் போராடி வெளியில் வா” என்பார்கள். “எங்களை கூப்பிடாதே. உன் வேதனையைப் பார்க்க முடியாமல் நாங்களும் கஷ்டப்படணும். எங்களுக்கு என்ன தலையெழுத்து?” என்று சலித்துக் கொள்வார்கள். வேண்டாம். யாரையும் கூப்பிட வேண்டாம். தனியாக இந்த வீட்டில் நிசப்தமாக மறைந்து போக வேண்டும்.
அழக் கூடாது. எதற்காக அழுவது? யாருகாக அழுவது? உனக்காக நீயே அழுவானேன்?
வசந்தி தூக்க மாத்திரை பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டாள். டம்ளரில் தண்ணீரை எடுத்து வந்தாள். ஒவ்வொன்றாய் விழுங்கிக் கொண்டிருந்தாள். ஒன்று .. இரண்டு.. மூன்று… நான்கு… ஐந்து … ஆறு… ஏழு …எட்டு…. ஒன்பது…பத்து….பதினொன்று….
வசந்திக்கு திடீரென்று துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. “நான் சாக மாட்டேன். வாழணும். வாழத்தான் வேண்டும்” என்று அழுது கொண்டே கையிலிருந்த பாட்டிலை வீசி விட்டு கட்டிலில் விழுந்து அழுதுக் கொண்டிருந்தாள். அழுது அழுது தன்னையும் அறியாமல் மயக்கத்தில் ஆழ்விட்டாள்.
மறுபடியும் விழிப்பு வந்த போது சுற்றிலும் மனிதர்கள். சுரேஷ், அண்ணன், அண்ணி, லாவண்யா, மனோகர். கையில் சலைன் ஏறிக் கொண்டிருந்தது. வசந்திக்கு பெரிதாக சிரிக்க வேண்டும் போல் தோன்றியது. லேசாக முறுவலித்துவிட்டு கண்களை மூடிக் கொண்டாள். சுரேஷ் லாவண்யாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
“அம்மாவை உன்னுடன் அழைத்துப் போ லாவண்யா! கொஞ்ச நாட்களுக்கு உன்னிடம் வைத்துக்கொள்.”
“அம்மாடியோவ்! எனக்கு பயமாக இருக்கு டாடீ! அம்மா இது போன்ற காரியம் ஏதாவது செய்தால் என்னால் என்ன செய்ய முடியும்? மனோகருக்கு இதெல்லாம் பிடிக்காது.” முதல்நாளே மனோகர் எச்சரித்தது நினைவுக்கு வந்து இயலாமையுடன் பேசினாள் லாவண்யா.
வசந்தியின் அண்ணி லக்ஷ்மி கூட அதையேதான் சொன்னாள். “எங்கள் வீட்டுப் பெண் எங்களுக்கு பாரமா என்ன? ஆனால் இப்படி ஏதாவது நடந்தால் பின்னால் எல்லோரும் என்னைத்தான் சொல்லிக் காட்டுவார்கள். அந்த பழியை என்னால் சுமக்க முடியாது.”
சுரேஷ் கடைசி வாய்ப்பாக ரோகிணிக்கு ·போன் செய்தான். “வசந்தியின் நிலைமை சரியாக இல்லை. தூக்கமாத்திரைகளை விழுங்கிவிட்டாள். ஆபத்து எதுவும் இல்லை. சில நாட்கள் உங்களிடம் இருந்தால் கொஞ்சம் தேறிக் கொள்வாள்.”
ரோகிணி உடனே “இன்று இரவே கிளம்பி வருகிறேன்” என்று சொன்ன பிறகு சுரேஷ் சிறுப் பிள்ளையைப் போல் விசும்பி விசும்பி அழுதான். வசந்தி தன் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயன்றாள் என்ற விஷயம் அவன் இதயத்தை மலையாய் அழுத்தியது. அதை எப்படி இறக்குவது? வசந்தியை எப்படி காப்பாற்றுவது, நீலிமாவை என்ன செய்வது? இந்த நிலைமை ஏன் வந்தது? எதுவும் புரியாமல் எல்லாம் குழப்பமாக இருந்தது.
அந்த நிமிடம் ரோகிணி பெரும் துணையாக தென்பட்டாள். “நாளை காலையில் ரோகிணி வருகிறாள்.”
சுரேஷின் வார்த்தைகள் காதில் விழுந்தாலும் வசந்தியிடம் சலனம் ஏற்படவில்லை. அவளுடைய மூளை செயல்பட மறுத்துக் கொண்டிருந்தது. கண்ணெதிரே தென்படும் காட்சிகளை பார்த்துக் கொண்டும், பார்க்க முடியாதபோது கண்களை மூடிக் கொண்டும் காலத்தைக் கழிப்பதைத் தவிர வசந்தியால் எதையுமே யோசிக்க முடியவில்லை.
“திருச்சிக்கு வந்து பத்து நாட்கள் நிம்மதியாக என்னுடன் இருந்துவிட்டு வரலாம் வா” என்று ரோகிணி சொன்ன போதும் பற்று இல்லாமல்தான் இருந்தாள். ரோகிணி அவளுக்கு வேண்டிய உடைகளை எடுத்து வைத்தாள். வசந்திக்கு கொஞ்சம் தெம்பு வந்ததும் பயணத்திற்கு ஏற்பாடு செய்தாள்.
நான்கு மாதங்களுக்கு முன்னால் திருச்சிக்கு போன வசந்திக்கும் இந்த வசந்திக்கும் ஒற்றுமையே இல்லை.
ரயிலில் உட்கார்ந்திருந்த வசந்திக்கு தன்னுடைய கடந்த கால தாம்பத்திய வாழ்க்கை தனக்குப் பின்னால் இடிந்து மண்ணோடு மண்ணாகி விட்டது போல் தோன்றியது. நிலநடுக்கம் வந்து வீடுகள் எல்லாம் சிதிலமடைந்த பிறகு அந்த இடம் எப்படி இருக்குமோ அப்படி இருந்தாள் வசந்தி. மறுபடியும் அங்கே வீட்டை கட்டும் வாய்ப்பே இல்லையோ என்று தோன்றியது வசந்தியை பார்க்கும் போது. ரயில் செண்ட்ரலை விட்டு கிளம்பியதும் வசந்தியால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இனி சென்னை என்பதே தனக்கு இல்லையா? சென்னை என்ற வார்த்தைக்கு இனி தன் வாழ்க்கையில் இருக்கப் போகும் அர்த்தமே வேறு.
இதெல்லாம் சுரேஷால்தான் வந்தது. சுரேஷ் இல்லையென்றால் தன் வாழ்க்கையில் சென்னையும் இல்லை.
இது சுரேஷின் தவறா இல்லை தன்னுடையதா?
சென்னையின் பக்கம் ஓடிக் கொண்டிருந்த மனதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் வசந்தி களைத்துப் போய்விட்டாள்.
திருச்சிக்கு வந்து பத்துநாட்களாகி விட்டன. இந்த பத்து நாட்களில் ரோகிணி பேசுவதை கேட்பது, தன்னுடைய யோசனைகளில் மூழ்கிக் கிடப்பது தவிர வசந்தி வேறு எதுவும் செய்யவில்லை. இரவில் ரோகிணி தரும் தூக்கமாத்திரையின் உதவியுடன் தூங்கிக் கொண்டிருந்தாள். ரோகிணி வலுகட்டாயமாக சாப்பிட வைப்பதால், உணவை விழுங்கிக் கொண்டிருந்தாள். மாலை நேரத்தில் ரோகிணியின் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதையும் தவிரக்க முடியவில்லை. ரோகிணி வேண்டுமென்றேதான் குழந்தைகளை வசந்தியிடம் அனுப்பி வைத்தாள்.
குழந்தைகளுடன் இருக்கும் போது வசந்திக்கு பொழுது நன்றாகத்தான் கழிந்து கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் உறங்க சென்றபிறகு மறுபடியும் தனிமை வந்து சூழ்ந்து கொண்டது.
ரோகிணி ஆஸ்பத்திரியிலிருந்து வந்த பிறகு தன் கணவனை ஆபீஸ் அறையிலிருந்து இழுத்துக் கொண்டு வருவாள். மூவரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிடும் போது ஷியாம் கோர்ட்டில் நடந்ததை, ரோகிணி ஆஸ்பத்திரி சமாசாரங்களை சொல்லி சிரிக்க வைப்பார்கள். பிறகு ரோகிணி வசந்தியுடன் சற்று நேரம் பழைய கதைகள் எதையாவது பேசிக் கொண்டிருந்துவிட்டு தூக்கமாத்திரையைக் கொடுத்து வசந்தியை தூங்கச் செய்வாள். மறுபடியும் காலையில் தனிமை என்ற பிசாசு வசந்திக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
தான் வந்தது முதல் ரோகிணி சாந்தாவைப் பற்றி பேச்சை எடுக்காததை வசந்தி கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். தானாக சாந்தாவைப் பற்றி பேசவும் விருப்பம் இல்லை. கடைசியில் ஒருநாள் சாந்தாவிடம் தானாகவே கிளம்பினாள். தான் போகப் போவதாக ரோகிணியிடம் சொல்லவும் இல்லை.
ரோகிணி ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிப் போனதும் தானும் தயாராகி பெண்கள் கல்லூரிக்குப் போனாள். கல்லூரிக்கு விடுமறை போலும். கல்லூரி வளாகம் நிசப்த்மாக இருந்தது. கல்லூரியைத் தாண்டி குவார்ட்ர்ஸ் பக்கம் போய்க் கொண்டிருந்த போது “தான் இப்போ எதற்காக இங்கே வருகிறோம்?” என்ற யோசனை வந்ததும் நின்றுவிட்டாள். மறுபடியும் ஏதோ ஒன்றை செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக நடந்து போய் சாந்தாவின் வீட்டுக் கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்த வேலைக்காரி பழையபடி பெயரைக் கேட்டுக் கொண்டு “உட்காருங்கம்மா” என்று சொல்லிவிட்டு சாந்தாவிடம் சொல்வதற்காக உள்ளே போனாள்.
பரீட்சை பேப்பர்களை திருத்திக் கொண்டிருந்த சாந்தா வசந்தியைப் பார்த்தும் வியப்புடன் எழுந்து கொண்டாள்.
“வசந்தி! வா உட்காரு” என்று சொல்லிக் கொண்டிருந்த சாந்தாவின் வார்த்தைகள் முடிவ¨யும் முன்பே வசந்தி அங்கே இருந்த நாற்காலியை வேகமாக இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்துகொண்டாள்.
சாந்தா முறுவலுடன் பார்த்துவிட்டு “எப்போ வந்தாய்?” என்று கேட்டாள்.
“பத்து நாளாச்சு.”
“எல்லோரும் சுகம்தானே?” சாந்தா குடிக்க தண்ணீரை கொண்டு வந்து தந்தாள்.
“யாரும் சுகமாக இல்லை.” டம்ளரை பிடுங்கி பக்கத்தில் வைத்தாள்.
“ஏன்? என்ன நடந்தது?” சாந்தா சாதாரணமான குரலில் கேட்டாள்.
“ஒன்றுமே தெரியாதா? ரோகிணி சொல்லவில்லையா?” சண்டைக்கு வந்தவள் போல் கேட்டாள் வசந்தி.
“சொன்னாள். ஐயாம் சாரி வசந்தி!” என்றாள் சாந்தா.
“சாரி எதுக்கு? உனக்கு சந்தோஷமாகத்தான் இருக்குமோ என்னவோ.”
“எனக்கு சந்தோஷமாக இருப்பதாவது?” நயமான குரலில் சொல்லிக் கொண்டே வசந்தியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் சாந்தா.
“என்னை பார்த்த பிறகாவது, என் வேதனையை புரிந்துக் கொண்டாலாவது திருந்துவாய் என்று உன்னிடம் வந்தேன் சாந்தா! ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளாதே.”
“ஆகட்டும். நீ சாதாரணமாக இரு. இப்போ அந்த ரகளை எல்லாம் எதுக்கு?”
“அப்படி இல்லை. முதலில் இந்த கேள்விக்கு பதில் சொல்லு. நீ செய்தது தவறா இல்லையா? நீயும் அவனும் சேர்ந்து இன்னொரு பெண்ணுக்கு அநியாயம் செய்வது பாவம் இல்லையா? முதலில் உன் தவறை ஒப்புக்கொள்.”
வசந்தியின் மனநிலை புரிந்ததும் சாந்தாவின் மனம் இளகிவிட்டது. தனக்கு அநியாயம் நடந்துவிட்டது. நீலிமாவும் சுரேஷ¤ம் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்கள். அவர்களை என்ன செய்வது என்று புரியாத வெறுப்பு! அவர்கள் தவறை புரிந்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையை தனக்கு திருப்பித் தரவேண்டும் என்ற ஆழமான விருப்பம்!
இதனால் வசந்தியின் மனநிலை ரொம்ப பாதிக்கப்பட்டு விட்டதென்றும், உள்ளுக்குள் நரகவேதனை பட்டுக் கொண்டிருக்கிறாள் என்றும், தன்னை ஏசி, தவறை ஒப்புக்கொள்ள செய்து திருப்திப்பட்டுக் கொள்ளும் எண்ணத்துடன் வந்திருக்கிறாள் என்று சாந்தாவுக்கு புரிந்துவிட்டது. இப்பொழுது என்ன செய்வது என்று ஒரு நிமிடம் யோசித்தாள்.
வசந்தி சொன்னதற்கெல்லாம் தலையை அசைத்துவிட்டு, தான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டு அனுப்பிவிடலாம். அதனால் தற்காலிகமாக அவளுக்கு அமைதி கிடைக்கும்படியாக செய்யலாம். ஆனால் அதனால் அவள் வெறுப்பு மேலும் கூடுமே ஒழிய குறையப் போவதில்லை. அவளை சாதாரண மனுஷியாக்க வேண்டும் என்றால் மறுபடியும் யோசிக்கும்படியாக அவளை மாற்றுவது ஒன்றுதான் வழி.
சாந்தா அதை செய்யத்தான் முடிவு செய்தாள். “வசந்தி! நான் செய்த தவறு என்ன?” நேராக கேட்டுவிட்டாள்.
“கல்யாணமானவுடன் ஏன் உறவு வைத்திருந்தாய்?” அதைவிட நேராக கேட்டாள் வசந்தி.
“அவனுக்கும் எனக்கும் பிடித்திருந்தது. அதனால்”
“அவனுடைய மனைவிப் பற்றி யோசிக்க வேண்டாமா? அவள் எங்கே போவாள்?”
“என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவளுக்கு எங்களுடைய உறவு பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்வாள். சகித்துக் கொள்ள முடிந்தால் சகித்துக் கொள்வாள். நான் அவனிடம் நீ இப்படி இருவருடனும் இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால் அவனே அவளுக்கு டைவோர்ஸ் கொடுக்கக் கூடும். எது வேண்டுமானாலும் நடக்கலாம். வசந்தீ! ஒரு விஷயம் சொல்லு. கணவன் மனைவி பிரிந்து போகக் கூடாதா?”
“பிரிந்து போகலாம். அவள் ஏதாவது தவறு செய்திருந்தால்…. திருமண வாழ்க்கைக்கு அவள் லாயக்கு இல்லாமல் போய் விட்டால் பிரிந்து போகலாம்.”
“திருமணம் என்பதே ஒரு தவறு வசந்தீ! எல்லோரும் சேர்ந்து செய்யும் தவறு. அந்த தவறை தெரிந்துகொண்டு அதை திருத்த முயற்சி செய்தால் மட்டும் அது தவறு என்று ரகளை செய்வார்கள். ராதாகிருஷ்ணனுக்கு அவளிடம் எந்த பந்தமும் இல்லை. பெரியவர்களாக பார்த்து கட்டி வைத்தார்கள். வேண்டாம் என்று சொல்லக் கூட தெரியாத வயது. அவளுக்கும் அப்படித்தான். தவறு நடந்துவிட்டது. இனி காதல் என்ற உணர்வே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் பட்டமரமாய் அவன் வாழணுமா?”
“நீ கண்ணில் படாமல் இருந்தால், நீ சம்மதிக்காமல் இருந்தால் அப்படித்தான் வாழ்ந்திருப்பான் இல்லையா?” நிஷ்டூரமாக சொன்னாள் வசந்தி.
“காதல் என்று உணர்வை அவன் சந்திக்கவில்லை என்றால் அப்படித்தான் வாழ்ந்திருப்பானோ என்னவோ? காதலை தேடும் முயற்சியில் அவன் வாழ்க்கை முடிந்து போயிருக்குமோ என்னவோ. ஆனால் அவனுக்கு காதல் கிடைத்துவிட்டது. எதற்காக மறுக்கணும்? மறுத்து எதை சாதிக்கப் போகிறான்? கடைமைக்காக செய்யும் குடித்தனத்திற்காக காதலை விட்டுவிடணுமா?”
“நாளைக்கு உன்னை விட அதிகமாக காதலிக்கும் நபர் கிடைத்துவிட்டால்?” ஏளனமாய் கேட்டாள் வசந்தி.
“அப்பொழுது என் சுயகௌரவத்திற்கு இழுக்கு வராத விதமாக விஷயத்தை செட்டில் செய்து கொள்வேன். கிடைக்காத ஒன்றுக்காக அழுது புலம்பும் ஹீனமான நிலைக்கு, என் இல்லாமைக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று ஏசும் நிலைக்கு தாழ்ந்து போக மாட்டேன். அதே போல் என் காதலுக்கு ராதாகிருஷ்ணன் தகுதியானவன் இல்லை என்று எனக்குத் தோன்றிய அடுத்த நிமிடம் அவனுக்கு என் அன்பு கிடைக்காது. என் காதல் விலை மதிப்பற்றது. ஒரு பிடி சோற்றுக்காக, குழந்தைகளுக்காக, எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்காக என் காதலை செலவழிக்க முடியாது. மனிதனை மனிதனாக நேசிப்பேன். எங்களுடைய உறவு சொத்து, மானமரியாதை போன்ற எல்லைகளுக்கு உட்பட்டது இல்லை. அப்படிப்பட்ட காதலை பற்றி உனக்குத் தெரியாது.” மூச்சு இரைத்தால் நிறுத்தினாள் சாந்தா.
“ஒரு பிடி சோற்றுக்காக நான் சுரேஷை விரும்புகிறேனா?” தீவிரமான குரலில் கேட்டாள் வசந்தி.
“சோற்றுக்காக இல்லை என்றால் ஹோதாவுக்காக. சுரேஷின் மனைவி என்று பறைச்சாற்றிக் கொள்வதற்காக. கணவன் விட்டுவிட்டான் என்று தெரிந்தால் சுற்றிலும் இருப்பவர்கள் ஏளனம் செய்வார்களோ என்ற பயம்! இந்த பயங்கள் எதுவும் இல்லை என்றால், மானமரியாதை பிரச்னைகள் இல்லை என்றால், நீ மட்டுமே இல்லை, இந்த உலகில் எந்த மனைவியும் கணவனுக்காக இப்படி பிராதேயப்பட்டுக் கொண்டிருக்க மாட்டாள். ராதாகிருஷ்ணனின் காதலுக்காக நான் என் மானமரியாதைகளை பொருட்படுத்தவில்லை. என்னை தாழ்வாக பேசினாலும் லட்சியப்படுத்தவில்லை. நல்ல சிநேகிதி என்று நினைத்திருந்த நீயும் அந்த விஷயம் தெரிந்ததும் வெறுத்துவிட்டு உடனே கிளம்பிப் போகணும் என்று சொன்னாய். உன்னைப் போன்றவர்களின் வெறுப்பையும் நான் பொருட்படுத்தவில்லை. யார் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி ராதாகிருஷ்ணனின் அன்பு எனக்கு வேண்டும். அந்த அன்பு இல்லாமல் என் வாழ்க்கைக்கு முழுமையில்லை என்று நினைத்தேன்.”
சாந்தாவின் ஆவேசத்தைக் கண்டு வசந்தி திகைத்துப் போனாள். சாந்தாவின் கண்களில் கண்ணீரைப் பார்த்து மனம் கலங்கினாள்.
“வசந்தீ! உன் பார்வையில், உலகத்தின் பார்வையில் நான் கெட்டவளாக இருக்கலாம். ஆனால் நான் என்ன செய்துவிட்டேன்? ராதாகிருஷ்ணனை வலுக்கட்டாயமாக என் வாழ்க்கையில் இழுத்துக் கொண்டேனா? என் வீட்டு வாசற்படியைத் தாண்டிப் போகக் கூடாது என்று தடை செய்தேனா? எனக்கு மாதாமாதம் பணம், காசு தரச் சொல்லி வற்புறுத்தினேனா? உனக்குக் குழந்தைகள் இருந்தால் என்ன? உன் மூலமாய் எனக்குக் குழந்தைகள் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேனா? எதுவும் செய்யவில்லை. நான் செய்ததெல்லாம் அவனுடைய காதலை மறுக்காமல் போனதுதான். என்னைப் பார்த்தால் ஜொலிக்கும் அந்தக் கண்களை என்னால் மறுக்க முடியவில்லை. என்னுடைய பேச்சை, நான் வரைந்த ஓவியங்களை ரசனையுடன் கேட்கும், பார்க்கும் அவன் மனதை என்னால் மறுக்க முடியவில்லை. இங்கே எனக்கு நிம்மதியாக இருக்கு என்று என்னைத் தேடிக் கொண்டு வந்தவனை வெளியில் போகச் சொல்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஏன் என்றால் எனக்கும் அன்பும், அமைதியும் வேண்டும். இந்த பிரச்னைக்கு சரியான தீர்வு என்னவென்று எனக்குத் தெரியாது. நான் செய்து கொண்டிருப்பது சரியா தவறா அதுவும் தரியாது. ஆனால் இப்படி இருப்பது எனக்கு நிம்மதியாக இருக்கு. நான் யாருக்கு தீங்கு செய்ய நினைக்கவில்லை. வருத்தப்பட வைக்கணும் என்ற எண்ணமும் இல்லை. ஆனால் இதில் நான் செய்யக் கூடியது எதுவும் இல்லை. இந்த சமுதாயமும், திருமணத்திற்கு தரும் மதிப்பீடுகளும் சேர்ந்து இந்த பிரச்னையை உருவாக்கிவிட்டன. என்னை குற்றம் சாட்டினால் என்னால் என்ன செய்ய முடியும்?” தன்னையும் அறியாமல் சாந்தா அழத் தொடங்கினாள்.
“அழாதே சாந்தா! அழாதே. என் வருத்தத்தில் நான் ஏதோ சொல்லிவிட்டேன். அழாதேம்மா ப்ளீஸ்!” என்றப் சாந்தாவை கட்டிக் கொண்டாள் வசந்தி.
தான் சாந்தாவை தேற்றுவோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்காத வசந்தி, விசும்பி விசும்பி அழுதுக் கொண்டிருந்த சாந்தாவின் முதுகில் தடவிக் கொடுத்தாள். கண்ணீரைத் துடைத்துவிட்டாள். “சாந்தா! பெண்களின் வாழ்க்கையே இப்படித்தான்” என்று தானும் கண்ணீரை உகுத்தாள்.
எதிர்மறையான நிலைமையில் இருந்த அந்த இரண்டு பெண்களும் தாம் பெண்கள்தான் என்பதை முதல் முறையாக உணர்ந்துக் கொண்டது போல் கைகளை கோர்த்துக் கொண்டார்கள். ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் ஆதாரமாக நின்றார்கள். வாழக்கையைப் பற்றியும், திருமணபந்தத்தைப் பற்றியும் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். தைரியம் சொன்னார்கள். மாலையாகும் போது ரோகிணி வந்தாள்.
“நீ இங்கே இருக்கிறாயா? வீட்டில் சொல்லிவிட்டு வந்திருக்கக் கூடாதா? நான் பயந்தே போய்விட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. சென்னைக்கு திரும்பிப் போய்விட்டாயோ என்று நினைத்தேன். சாந்தாவைப் பார்த்து மேற்கொண்டு என்ன செய்வது என்று கேட்கத்தான் வந்தேன். இங்கே வந்திருப்பாயோ என்ற சந்தேகம் கூட வந்தது. ஆக மொத்தம் என்னைக் கொன்று விட்டாய் போ.” வசந்தி தென்பட்டதும் சந்தோஷத்தில் ரோகிணி மூச்சுவிடாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
“எதற்காக அவ்வளவு பதற்றம்? நான் ஒன்றும் செத்துப் போக மாட்டேன். எனக்கு சாகணும் என்று தோன்றவில்லை. எப்படியாவது வாழணும் என்றுதான் நினைக்கிறேன்” என்றாள் வசந்தி சோர்வு கலந்த முறுவலுடன்.
“பார்த்தாயா எப்படி பைத்தியமா போல் பேசுகிறாளோ? இப்போ என்ன நடந்துவிட்டது என்று இந்த பேச்சு? உனக்கு எவ்வளவு சுதந்திரம் கிடைத்திருக்கிறதோ தெரியாது” என்றாள் ரோகிணி நிலைமையை எளிதாக்குவது போல்.
“ஆமாம். சுதந்திரத்தை தவிர வேறு என்ன?” என்றாள் வசந்தி.
“நாம் சின்ன வயதில் பெண் எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை படித்துவிட்டு என்ன சொல்லுவோம் நினைவு இருக்கிறதா? ஒரு கதையில் கணவனின் அன்புக்காக ஏங்கும் மனைவியைப் பற்றி ரொம்ப பரிதாபமாக எழுதியிருந்தாள். அந்தக் கணவன் எவளுடனாவது ஓடிப் போய் இந்த மனைவியை நிம்மதியாக வாழவிடக் கூடாதா என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போ நீ என்ன சொன்னாய் தெரியுமா? அப்படிச் செய்தாலும் இந்த பெண்களுக்கு புத்தி வராது. தற்கொலை செய்து கொள்வார்கள் இல்லையா கணவனின் காலடியில் விழுந்து கிடப்பார்கள் என்று.” சிரித்துக் கொண்டே சொன்னாள் சாந்தா.
“அப்போ இந்த நிலைமை எனக்கு வரும் என்று கனவு கண்டேனா?”
“இப்போ உன் நிலைமைக்கு என்ன வந்து விட்டது? நீ ஒரு மனுஷியாக உன்னை அடையாளம் காணும் நாட்கள் வந்துவிட்டன. நிம்மதியாக உனக்குப் பிடித்த காரியங்களை செய்து கொள். கணவன் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று மட்டும் நினைக்கதாதே.” ரோகிணி சொன்னாள்.
“ஆனால் இப்போ என்னால் என்ன செய்ய முடியும்” சோர்ந்து போன குரலில் சொன்னாள் வசந்தி.
“இப்போ தொடங்குவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம் ஆனால் அசாத்தியம் மட்டும் இல்லை. அதனால்தான் பெண்கள் திருமணம் மட்டும்தான் வாழ்க்கை என்று நினைக்கக் கூடாது. நமக்கு என்று ஒரு வாழ்க்கை, ஒரு வேலை, ஒரு இடம் தனியாக இருக்கணும்.”
“சவிதாவைப் போலவே பேசுகிறாய்” என்றாள் வசந்தி.
“சொல்ல மறந்து விட்டேன். சவிதா கடிதம் எழுதியிருக்கிறாள்” என்றபடி ரோகிணி பர்ஸிலிருந்து போஸ்ட் கார்டை எடுத்துக் கொடுத்தாள்.
இரண்டே வரிகள், இருபதாம் தேதி கிளம்பி வருகிறேன். நீ நலமாய் இருப்பாய் என்று நினைக்கிறேன் என்று
“பன்னிரெண்டாம் தேதி அன்றே சென்னைக்கு வந்துவிட்டாள். நான் இல்லைன்னு தெரிந்ததுமே உடனே கிளம்பி வந்திருக்க வேண்டியதுதானே. அப்பாவுடன் ஒரு வாரம் தங்கிவிட்டு பிறகுதான் வருகிறாள். என்ன இருந்தாலும் அவளுக்கு அப்பாவிடம் தான் பிரியம் அதிகம்.” வசந்தி வருத்தப்பட்டுக் கொண்டாள்.
“இந்த விஷயங்களை எல்லாம் அப்பாவிடம் பேசுவாளாய் இருக்கும். குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரும் முக்கியம்தான்” என்றாள் சாந்தா.
“லாவண்யாவுக்கு நாங்களிருவரும் முக்கியம் இல்லை. பணம்தான் பிரதானம்.”
“லாவண்யா இப்போ நம் வீட்டு குழந்தை இல்லை. இன்னொருத்தனின் மனைவி. அவனுக்கு எது முக்கியம் என்று தோன்றுகிறதோ தனக்கும் அதுதான் முக்கியம் என்று நினைப்பாள்” என்றாள் ரோகிணி.
“லாவண்யா அப்படி நினைப்பது இயற்கை. வசந்தி தன்னுடைய சக்தியெல்லாம் தாரைவார்த்து உனக்கு கணவன்தான் முக்கியம் என்று பாலாடையால் புகட்டாத குறையாக மகளுக்கு கற்றுக் கொடுத்திருப்பாள். அப்படித்தானே?”
வசந்தி ஆம் என்பது போல் தலையை அசைத்தாள்.
“நம்மை எல்லாம் மகள், மனைவி, தாய் என்பதைத் தவிர ஒரு மனுஷியாக நினைவில் வைத்துக் கொள்ளமாட்டோம். சின்ன வயதில் அப்பா அம்மாவுக்கு, அண்ணன் தம்பிகளுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று தான் முயற்சி செய்வோம். பிறகு கணவனை சந்தோஷமாக வைத்திருப்பது, குழந்தைகளை வளர்ப்பது, இத்துடன் நம்முடைய வாழ்க்கை முடிந்து போய்விடும். வசந்தி! உனக்கு நினைவு இருக்கா? உங்க பக்கத்து வீட்டில் இருந்த கல்யாணியை ஒரு நாள் அவளுடைய அப்பா எப்படி அடித்தாரோ?”
வசந்திக்கு நினைவு வந்துவிட்டது.
கல்யாணி ஒரு நாள் கல்லூரியிலிருந்து திரும்பி வரும் போது எவனோ ஒருவனை டாக்ஸி மோதி பக்கத்தில் தள்ளிவிட்டு வேகமாக போய் விட்டது. காலில் அடிபட்டுவிட்டதால் அவனால் எழுந்துகொள்ள முடியவில்லை. தெருவிலும் யாரும் இல்லாததால் கல்யாணி அவனுக்கு கைக்கொடுத்து அவன் காலுக்கு கைக்குட்டையால் கட்டுப் போட்டு எழுந்து நிற்கும் வரையில் துணையாய் இருந்தாள். பிறகு ரிக்ஷ¡வை கூப்பிட்டு அவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள்.
இதையெல்லாம் கல்யாணியின் பக்கத்து வீட்டில் இருப்பவர் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கல்யாணியின் தந்தையிடம் என்ன சொன்னாரோ தெரியாது. அன்று இரவு அவளுடைய தந்தை அவளை மாட்டை அடிப்பது போல் அடித்தார்.
“ஒரு ஆண்பிள்ளையை நடு ரோட்டில் கட்டிப் பிடித்து நின்று கொண்டிருந்தாயா? உடலில் திமிரு ஏறிவிட்டதா?” என்று வாய்க்கு வந்தப் ஏசினார். கல்யாணி சொல்லவந்ததை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தன்னுடைய மகள் தன் வீட்டு மானமரியாதையை காப்பாற்ற வேண்டுமே தவிர எவனோ முன் பின் தெரியாதவனின் உயிரைக் காப்பாற்றத் தேவையில்லை என்பது அவருடைய நம்பிக்கை. பெண்பிள்ளைகள் அதற்குறிய லட்சணங்களோடுதான் இருக்க வேண்டுமே தவிர மனிதநேயத்தோடு இருக்க வேண்டியதில்லை என்பது அவருடைய எண்ணம்.
அவருக்கு மட்டுமே இல்லை. இந்த நாட்டில் லட்சக் கணக்கான தந்தைகளுக்கு, கணவர்களுக்கு, அண்ணன்தம்பிகளுக்கு, மகன்களுக்கு அந்த அபிப்பிராயம்தான். பெண்கள் பெண்களுக்குறிய லட்சணங்களுடன் இருக்க வேண்டும்.
அந்த லட்சணங்களை பின்பற்றி பெண்கள் தங்களைச் சேர்ந்த ஆண்களின் கௌரவத்தை காப்பாற்றவேண்டும். அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்.
வசந்திக்கு கல்யாணியுடன் ரமா, ராணி, வீணா, சாரதா, வரலக்ஷ்மி எல்லோரும் நினைவுக்கு வந்தார்கள். அவர்களுடைய படிப்பு பாதியில் நின்று போன விதமும் நினைவுக்கு வந்தது.
பி.ஏ. முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது ஒரு பையன் வரலக்ஷ்மிக்கு காதல் கடிதம் எழுதினான். வரலக்ஷ்மி ரொம்ப சந்தோஷப்பட்டாள். கூட படித்துக் கொண்டிருக்கும் நான்கைந்து சிநேகிதிகளுக்கு காண்பித்தாள். சாந்தா, ரோகிணி அந்த கடிதத்திற்கு பதில் எழுதச் சொல்லி அவளை உற்சாகப் படுத்தினார்கள். அந்த பையனை எல்லோருக்கும் தெரியும். ஏ.சி. கல்லூரியில் பி.எஸ்ஸி. மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். அந்தக் கல்லூரியின் கல்சுரல் செகரெட்ரியாக இருந்தான். அவனை எல்லோருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்டவன் தன்னை விரும்புவதாக தெரிந்த போது வரலக்ஷ்மிக்கு பெருமையாக இருந்தது. சிநேகிதிகளும் சந்தோஷப்பட்டார்கள்.அன்று இரவு வரலக்ஷ்மி சுந்தரத்திற்கு பதில் எழுதினாள். அவள் மனம் சுதந்திரமாக செயல் பட்ட முதல் காரியம் அதுதானோ. மறுநாள் அந்தக் கடிதம் எப்படி போய்ச் சேர்ந்ததோ தெரியாது. அவளுடைய தந்தையின் கைக்கு சிக்கியது.
பெண்பிள்ளைகளின் நோட்டுப் புத்தகங்களை, பேக்குகளை சோதனை போடுவது பெரும்பாலான தந்தைகளுக்கும், அண்ணன்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.
அவர் சுந்தரம் எழுதிய கடிதத்தைக் கூட வாங்கி படித்தார். அதற்குப் பிறகு வரலக்ஷ்மி கல்லூரிக்கு வரவில்லை. நான்கைந்து மாதங்களில் அவளுக்கு திருமணமாகிவிட்டது. திருமணத்திற்கு வந்திருந்த சாந்தாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தாள் வரலக்ஷ்மி. “இந்தக் கடிதம் எங்கப்பாவின் கண்களில் பட்டதால்தான் இதெல்லாம் நடந்தது. இந்தக் கடிதத்தில் நான் எழுதியதெல்லாம் உண்மை என்று சுந்தரத்திடம் சொல்லு. என் நிலைமையை விளக்கிச் சொல்லு. அவனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதையும் சொல்லு.” அழுதுக் கொண்டே சொன்னாள் வரலக்ஷ்மி.
சிநேகிதிகளுகெல்லாம் ரொம்ப கோபம் வந்தது. ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும்?
வரலக்ஷ்மியின் திருமணம் முடிந்துவிட்டது.
வரலக்ஷ்மி என்ன தவறு செய்துவிட்டாள். காதல் கடிதம் எழுதுவது தவறா? போகட்டும் தவறுதான் என்று வைத்துக் கொண்டாலும், ஒரு சின்ன தவறுக்காக அவளுடைய வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா?
ரோகிணியும், சாந்தாவும் அந்த விஷயத்தைப் பற்றி பேசும் போது வசந்தி புதிதாக கேட்டுக் கொள்வது போல் கேட்டுக் கொண்டாள்.
“பழைய விஷயங்களை எல்லாம் நான் மறந்து போய்விட்டேன். ஆனால் லாவண்யா யாரையாவது காதலித்தேன்னு சொல்வாளோன்னு பயந்து கொண்டுதான் இருந்தேன். சவிதா மட்டும் நிச்சியமாக எவனையோ ஒருவனை காதலித்து தீருவாள். அது மட்டும் நிச்சியம்.”
“தாய் என்ற வேடத்திலும் நீ நன்றாக பொருந்திவிட்டாய். இனி அந்த வேடங்களை எல்லாம் விட்டுவிடு. ஒரு மனுஷியாக வெளியில் வா” என்றாள் சாந்தா.
சிநேகிதிகள் இருவரையும் பார்த்து இயலாமையுடன் சிரித்தாள் வசந்தி. சவிதா வருகிறாள் என்றால் வசந்திக்கு சந்தோஷத்தோடு பயமும் ஏற்பட்டது. சவிதா இந்த விஷயமாக தன்னுடைய அப்பாவிடம் பேசிவிட்டு வருவாள். இந்த விஷயமாக ஏதோ ஒரு முடிவு செய்து கொண்டுதான் வருவாள் என்ற நம்பிக்கை இருந்தது. அதோட தன்னை விமரிசனம் செய்வாள். இப்படி இருக்காதே… அப்படி இரு என்று ஏதேதோ சொல்லுவாள் என்ற பயமும் இருந்தது.
சவிதா தன் தந்தைக்கு புத்திமதி சொன்னால்!
தன்னை மறுபடியும் சென்னைக்கு அழைத்துப் போனால்?
சுரேஷ் தன்னுடைய தவறை உணர்ந்துவிட்டால்?
எவ்வளவு நன்றாக இருக்கும்? சவிதாவால் அந்த காரியத்தை செய்ய முடியும். சவிதாவின் பேச்சை சுரேஷ் தட்டமாட்டான். மகளிடம் அவன் உயிரையே வைத்திருக்கிறான். அவள் கேட்டால் அவனால் மறுக்க முடியாது. சவிதா இந்த காரியத்தை மட்டும் செய்து முடித்தால் வாழ்நாள் முழுவதும் அவளுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பேன் என்று நினைத்துக் கொண்டு ஆசையை அடக்கிக் கொள்ள முடியாமல், ஒருக்கால் அப்படி நடக்காமல் போனால் எப்படி என்ற பயத்தை ஜெயிக்கவும் முடியாமல் வசந்தி திண்டாடிக் கொண்டிருந்தாள்.
சாந்தா, ரோகிணி சொன்னது எல்லாம் உண்மைதான் என்று ஏற்றுக் கொண்டாலும் அதெல்லாம் தனக்கு சம்பந்தப்பட்டது இல்லை என்று தோன்றியது. பெண்கள் சுயகௌரவத்தை இழக்கக் கூடாது. உண்மைதான். ஆனால் தனக்கு வீடு வேண்டும். அந்த வீட்டில் சுரேஷின் மனைவியாக இல்லாமல் வேறு விதமாக, யாரும் இல்லாதவளாக, கணவனால் ஒதுக்கப் பட்டவளாக, கணவனை ஒதுக்கிவிட்டவளாக வாழ்வது தேவை இல்லை என்று தோன்றியது.
இந்த விஷயத்தை மனதில் வைத்தக் கொள்ள முடியாமல் ரொகிணியிடம் சொல்லிவிட்டாள். ரோகிணிக்கு கோபம் வந்துவிட்டது போலும்.
“நீ உன் கணவனுடன் சேர்ந்து சந்தோஷமாக குடித்தனம் செய்யணும்னு நினைப்பதில் தவறு இல்லை. அதற்காக கணவனால் புறக்கணிக்கப் பட்டவர்களை, கணவனை விட்டுவிட்டவர்களை இளப்பமாக பார்க்காதே. அந்த போக்கு நல்லது இல்லை” என்றாள் சீரியஸாக.
“நான் ஏன் இளப்பமாக நினைக்கப் போகிறேன்?” என்றாள் வசந்தி தன் தவறை உணர்ந்தவளாக.
“உன் பேச்சில் அந்த தொனிதான் இருக்கு. உலகம் உன்னை எப்படி பார்க்குமோ என்ற கவலைப் படுகிறாய். உனக்கு சுரேஷிடம் பிரியம் இருந்தால் அவனுக்காக வருத்தப்படு. உலகத்தைப் பற்றி கவலைப்படாதே. கணவனால் கைவிடப் பட்ட மனைவியர்கள் எல்லாம் லாயக்கில்லாதவர்கள் என்றும், தரம் தாழ்ந்தவர்கள் என்று எடைபோடாதே. அவரவர்களின் சூழ்நிலை அவரவர்களுக்கு. கணவனின் ஸ்டேட்டஸ் வைத்துக் கொண்டு பெண்ணை அடையாளம் காணும் வழக்கம் ஒழிந்து போனால் தவிர பெண்களுக்கு விமோசனம் இல்லை” என்றாள் கோபம் தணியாத குரலில்.
சவிதா வந்துவிட்டாள். அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று படபடக்கும் இதயத்துடன் உட்கார்ந்திருந்தாள் வசந்தி. தாயையும், ரோகிணியையும் குசலம் விசாரித்துவிட்டு முகம் அலம்பிக் கொண்டு வந்தாள் சவிதா.
வசந்தி மகளுக்கு காபி கலந்து கொடுத்துவிட்டு தானும் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டாள்.
“அம்மா! வைசாக்கில் ஹாஸ்டல் அறையை காலி செய்துவிட்டேன்” இன்றாள் சவிதா.
“என்ன விஷயம்?” என்றாள் வசந்தி அதிகம் ஆர்வம் காட்டாமல்.
“சின்னதாக போர்ஷனை பார்க்கச் சொல்லி என் சிநேகிதிகளிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். நம் இருவருக்கும் இரண்டு அறைகள் இருந்தால் போதும் இல்லையா?” என்றாள் சவிதா.
“நம் இருவருக்கா?” என்று வசந்தி சொல்லிக் கொண்டிருந்த போதே ” ஆமாம் அம்மா! ஹாஸ்டலில் எனக்கு சாப்பாடு சரியாக இல்லை. ஒழுங்காக படிக்கவும் முடியவில்லை. அம்மா! இரண்டு வருடங்கள் நீ எனக்கு ஒத்தாசையாக இருந்தால் அதற்குப் பிறகு மேற்படிப்புக்கு சென்னைக்கு வந்துவிடுகிறேன்.”
“சவிதா! உங்கப்பா என்னை வைசாக்கிற்கு அழைத்துப் போகச் சொன்னாரா?” வசந்தி சக்தியை முழுவதுமாக திரட்டிக் கொண்டு கேட்டாள். அவளுக்கு தான் சவிதாவின் மீது வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது போல் தோன்றியது.
“சவிதா! உங்கப்பா என்னதான் சொல்கிறார்? நீ எதுவுமே கேட்கவில்லையா? அவளை விட்டு விடுவதாக சொன்னாரா இல்லையா? இந்த விஷயத்தை அவரிடம் பேசினாயா? இல்லை உங்க அக்காவைப் போல் தப்பித்துக் கொண்டாயா?” வசந்தி ஆவேசமாக கேட்டாள்.
“பேசினேன் அம்மா!” என்றாள் சவிதா தலை குனிந்தபடி.
“என்ன சொன்னார்?”
சவிதா பதில் பேசவில்லை.
“சொல்லு சவிதா! என்னதான் சொன்னார்?”
“அம்மா! உன்னால் அங்கே நிம்மதியாக இருக்க முடியாது. அப்பாவால் அவளுடைய நட்பை துண்டித்துக் கொள்ள முடியாது.”
“நட்பை துண்டித்துக் கொள்ள முடியாதாமா?” வசந்தி பைத்தியம் பிடித்தவள் போல் பார்த்தாள்.
“அம்மா! வருத்தப்படாதே. என்ன செய்வது என்று எனக்கும் புரியவில்லை. உன் மீது காதல் இல்லை என்று அப்பா சொல்கிறார்.”
“இத்தனை வருடங்கள் குடித்தனம் செய்துவிட்டு என் மீது காதல் இல்லையா? என்னுடைய குறை என்ன?”
“உன்னிடம் எந்த குறையும் இல்லை அம்மா! அப்பா அந்தப் பெண்ணை காதலிக்கிறார்.”
“சீ… கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் வளர்ந்த மகளிடம் தன் காதல்லீலைகள் எல்லாம் தெரிவித்தாரா?”
“அம்மா! அப்பா என்னிம் எல்லா விஷயங்களையும் சொன்னார். மேற்கொண்டு நடக்க வேண்டியது என்ன என்று பார்க்க வேண்டுமே தவிர அப்பாவை திட்டுவதால் பிரயோஜனம் என்ன?”
“உங்க அப்பாவை திட்டக் கூடாதா? மனைவிக்கு துரோகம் செய்தவனை திட்டக் கூடாதா? சொல்லு, உங்க அப்பா துரோகி இல்லையா?”
“அப்பா உனக்கு வேதனைதரும் காரியத்தைத்தான் செய்திருக்கிறார். ஆனால் அப்பா துரோகி இல்லை அம்மா! ரொம்ப நல்லவர். இந்த நிலைமை ஏற்பட்டதற்கு எவ்வளவு வேதனைப் படுகிறாரோ உனக்குத் தெரியாது.”
சவிதா இப்படி சொன்னதும் வசந்திக்கு கோபம் வந்துவிட்டது. “வேதனைப்படுகிறாரா? எதற்காக வேதனைப் படணும்? நான் உயிரோடு இருக்கிறேன் என்பதற்காகவா? உங்க அப்பா துரோகி இல்லை. நான் தான் வஞ்சகி. என்னை விட்டுவிடுங்கள். எல்லோரும் என்னை ஒதுக்கிவிடுங்கள்.”
உரத்தக் குரலில் கத்திக் கொண்டிருந்த தாயை சவிதா மார்போடு அணைத்துக் கொண்டாள். “அம்மா! நான்தான் இருக்கிறேனே? நீ கவலைப்படாதே” என்று சொல்லிக் கொண்டிருந்த மகளை விட்டு தொலைவுக்கு நகர்ந்து “உங்க அப்பாதான் நல்லவர் இல்லையா. அவரிடமே போய்விடு. என்னைப் பற்றிய கவலை உனக்கு எதற்கு? என் மீது காதல் இல்லையாமே. நான் உங்க அப்பாவுக்கு தாலி கட்டிய மனைவி. சொல்லு மனைவிதானே?”
“மனைவியை காதலித்தாகணும்னு இல்லையே அம்மா?”
“மனைவியைக் காதலிக்காமல் வேறு யாரை காதலிப்பார்கள்? எல்லா கணவன் மனைவியும் பரஸ்பரம் அன்பாக இல்லையா?”
“உலகில் எல்லா தம்பதிகளும் பரஸ்பரம் காதலித்துக் கொள்வார்கள் என்று நீ நம்புகிறாயா அம்மா? எனக்கு ஏனோ எல்லா தம்பதிகளும் சமாதானமாகப் போய் எப்படியோ குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.”
“உனக்கு நாளைக்கு கல்யாணமானால்…”
வசந்தியின் வார்த்தைகளை இடையிலேயே நிறுத்திவிட்டாள் சவிதா. “நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன். ஒரு ஆணின் காதலுக்காக வாழ்நாள் முழுவதும் அழுதுக் கொண்டிருக்க மாட்டேன்.” கோபமாக சொன்னாலும் திடமாக ஒலித்தது சவிதாவின் குரல்.
தான் நினைத்தபடி ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டாள் வசந்தி. சவிதாவிடம் இனி பேசி பயன் இல்லை. அந்த ஆசையும் போய்விட்டது. சவிதாவுடன் வைசாக்கிற்கு போகட்டும் என்பது சுரேஷின் எண்ணம்.
வசந்தியை ஏமாற்றம் சூழ்ந்து கொண்டுவிட்டது. யார் என்ன சொன்னாலும் வசந்தி கேட்டுக் கொள்ளவில்லை. கட்டிலை விட்டு எழுந்துகொள்ளவும் இல்லை. தாயின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் சவிதா தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
மூன்றாவது நாள் வசந்தியின் அண்ணி லக்ஷ்மி வந்தாள். சவிதாவுடன் வசந்தி வைசாக்கிற்கு போவதாக சுரேஷ் தெரிவித்தால் திருச்சிக்கு வந்தாள்.
வந்ததுமே கட்டில் மீது உட்கார்ந்திருந்த வசந்தியைக் கட்டிக் கொண்டு ஹோவென்று அழப்போனாள்.
சவிதா மாமியை தடுத்துவிட்டு “சும்மாயிருங்கள் மாமீ! இப்போ என்னவாகிவிட்டது? ஏற்கனவே அம்மாவுக்கு உடல்நலம் சரியாக இல்லை” என்று வலுக்கட்டாயமாக பிரித்து நாற்காலியில் உட்கார வைத்தாள்.
“என்ன நடந்ததா? உங்க அப்பா என்ன காரியம் செய்து விட்டார்? நம்பினால் நம்பு. உங்க மாமாவுக்கு இரண்டு நாட்களாக சாப்பாடே பிடிக்கவில்லை. திடீரென்று எனக்கு மனைவி பிடிக்கவில்லை என்று சொன்னால் போகட்டும் என்று விட்டுவிடுவதற்கு கல்யாணம் என்ன குழந்தைகளின் விளையாட்டா?” என்று சுரேஷை வசைபாடத் தொடங்கினாள். கடைசியில் “இப்படியே போனால் எப்படி? இத்தனை வருடங்களும் குடித்தனம் செய்து விட்டு இப்போ வேண்டாம்னு சொன்னால் சும்மா விட்டு விடுவதா?” என்று நீட்டி முழக்கினாள்.
“என்ன செய்யலாம்?” ரோகிணியும், சவிதாவும் கேட்டார்கள்.
“ஜீவனாம்சத்திற்காக கோர்ட்டுக்கு போகணும். சொத்து முழுவதையும் பிரித்துக் கொடுக்கச் சொல்லணும். அப்போ தெரியும் காதலும் கத்திரிக்காயும்” என்றால் பழிப்பது போல்.
“அப்பா சொத்து முழுவதையும் எங்க மூவரின் பெயருக்கு எழுதி வைத்துவிட்டார். நிலத்தைக் கூட எனக்கும் அக்காவுக்கும் சரி சமமாக பிரித்துக் கொண்டுத்துவிட்டார். வீடு எப்படியும் அம்மாவின் பெயரில்தான் இருக்கு. மாதா மாதம் வரும் சம்பளத்தை மூவருக்கும் சமமாக பங்கு போடுவதாக சொல்லிவிட்டார். அக்காவுக்கு இப்போ அப்பா அனுப்ப வேண்டியதில்லையே?”
லக்ஷ்மி திகைத்துப் போனாள். “அதெல்லாம் வெறும் பேச்சு. இப்போ பிரச்னையை சமாளிப்பதற்காக அப்படி சொல்லியிருப்பார். முதலில் எழுதி வாங்கிக் கொள்ளணும்.”
“அந்த வேலையையும் அப்பா செய்து முடித்துவிட்டார் மாமீ! லாவண்யாவும், மனோகரம் தங்களுடைய பங்கு சொத்தை கேட்டார்களாம். அப்பா எல்லோரையும் பற்றி யோசித்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்.
லக்ஷ்மிக்கு மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “சொத்து கொடுத்துவிட்டால் மட்டும் போதுமா? கணவன் விட்டுவிட்டான் என்ற அபக்கியாதியை சுமத்திவிட்டு, இன்னொருத்தியுடன் மட்டும் எப்படி இருப்பான்? நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் கேட்க வேண்டாமா? அத்தையை கணவன் தள்ளிவைத்துவிட்டான் என்றால் நாளைக்கு என் குழந்தைகளுக்கு கல்யாணம் கார்த்தி ஆக வேண்டாமா?” என்றாள் இல்லாத துக்கத்தை குரலில் வெளிப்படுத்திக் கொண்டே.
“மாமீ! எங்க அப்பாவை அப்படி எல்லாம் பேசாதீங்க. எனக்குப் பிடிக்காது” என்றாள் சவிதா.
“ஓஹோ! அப்பாவிடம் அவ்வளவு அன்பு பொங்கி வழிகிறதா? நீ கிளம்பு வசந்தீ! சென்னைக்கு போகலாம்” என்றாள் வசந்தியிடம்.
“நான் வரமாட்டேன்” என்றாள் வசந்தி.
“பின்னே எங்கே இருப்பாய்? கஷ்டமோ நஷ்டமோ பிறந்தவீட்டார்தானே அடைக்கலம் தரணும்”
“அம்மா என்னிடம் இருப்பாள் மாமீ! நீங்க கவலைப்பட வேண்டியதில்லை,”
“கொஞ்ச நாட்களுக்கு அவள் நிம்மதியாக இங்கேயே இருக்கட்டும்” என்றாள் ரோகிணி.
“இன்னும் எங்கே நிம்மதி? வாழ்க்கையே நாசமாகிவிட்ட பிறகு.” லக்ஷ்மி சலித்துக் கொண்டே விடுவிடென்று போய்விட்டாள்.
வைசாக் போய்ச் சேரும் போது காலை ஒன்பது மணியாகிவட்டது. சவிதா சாமான்களை இறக்கிவிட்டு ஆட்டோ பேசினாள். இருவரும் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வீட்டைப் பற்றி யோசித்துக் கொண்டே ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டார்கள்.
அவர்கள் போய்ச் சேர்ந்த போது வீடு முழுவதும் சாமான்களுடன் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வரிசையாக மூன்று அறைகள். கடைசி அறை சமையலறை. சமையலறையில் நின்று கொண்டிருந்தால் ஜன்னல் வழியாக் கடல் தென்பட்டுக் கொண்டிருந்தது. உயரமாய் எழும்பி கரையில் வந்து மோதிவிட்டு பின்னால் சென்று கொண்டிருந்த அலைகளை பார்த்துக் கொண்டு வசந்தி நின்று கொண்டிருந்தாள்.
“இந்த வீடு நமக்கு போறுமா அம்மா? உனக்கு பிடித்திருக்கிறதா?” சவிதா கேட்டாள்.
“தாராளமாய் போதும். அது இருக்கட்டும். இந்த சாமான் எல்லாம் யாருடையது? யார் இதை எல்லாம் அடுக்கி வைத்தது? ·பேன்களை கூட ·பிக்ஸ் செய்திருக்கிறார்கள்.”
அப்பா இதையெல்லாம் ஏற்பாடு செய்தார் என்று சொன்னால் அம்மாவின் மனம் காயப்படும் என்று உணர்ந்த சவிதா “என் நண்பர்கள் இருக்கிறார் என்று சொன்னேன் இல்லையா? அவர்களுக்கு கடிதம் போட்டிருந்தேன். எல்லாம் தயாராக வைத்தார்கள்” என்றாள்.
மேலும் “அம்மா! இன்றைக்கு சமைக்க வேண்டாம். நண்பர்களின் வீடு பக்கத்தில்தான் இருக்கு. அங்கே வரச்சொல்லி ரொம்பவும் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் வந்து விடுவார்கள்” என்றாள் குளிக்கத் தயாராகிக் கொண்டே.
“நான் யார் வீட்டுக்கும் வர மாட்டேன்” என்ற வசந்தியை கெஞ்சி சம்மதிக்க வைத்தாள்.
“அவர்கள் உங்க அப்பாவைப் பற்றிக் கேட்டால் எப்படி?” பேதையாக கேட்டுக் கொண்டிருந்த தாயைப் பார்த்ததும் சவிதாவுக்கு இரக்கம்தான் ஏற்பட்டது.
“அம்மா! அவர்கள் என் நண்பர்கள். அவர்களுக்கு என்னுடைய விஷயம் எல்லாம் தெரியும். யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டார்கள். நீ வா.”
“எல்லாம் சொல்லிவிட்டாயா? நான் வர மாட்டேன். என்னை வற்புறுத்தாதே.” வசந்தி நகர மறுத்துவிட்டாள்.
“அம்மா! அவர்கள் எல்லோரும் நல்லவர்கள். உன்னை ரொம்பவும் விரும்புவார்கள் பாரேன்.”
“என்னை விரும்புவானேன்? கணவனால் கைவிடப் பட்டவளை விரும்புவது புது நாகரீகமா?” கடினமான குரலில் சொன்னாள் வசந்தி. எல்லோரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுகிறார்கள் என்றும் அந்த இரக்கத்தை கடினமான பேச்சுக்கள் மூலமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் தாயை இயலாமையுடன் பார்த்தாள் சவிதா.
அதற்குள் வாசற்கதவு தட்டும் சத்தம் கேட்டது. நான்கு இளைஞர்கள் பிலுபிலுவென்று உள்ளே வந்தார்கள்.
வசந்தி பதற்றத்துடன் எழுந்து நின்று கொண்டாள்.
சவிதா “நீங்களே வந்துவிட்டீங்களா? எங்களுக்கு கொஞ்சம் தாமதம் ஆகும் போலிருந்தது. அட! கையில் கேரியர் வேறு கொண்டு வந்தீங்களா?” என்றப் அவர்களிடமிருந்து கேரியரை வாங்கிக் கொண்டாள்.
“எங்க அம்மா” என்று வசந்தியை சுட்டிக் காட்டினாள்.
“அம்மா! இவன் ஸ்ரீனிவாஸ். இவன் கோபி. அவன் ரமணன். கடைசியாக இருப்பவன் சர்மா. ஸ்ரீனிவாஸ¤ம் கோபியும் இன்ஜினியரிங், என்னை விட ஒரு வருஷம் சீனியர். ரமணன் எம்.எஸ்ஸி. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். சர்மா ஹவுஸ் சர்ஜன்” என்று எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். வசந்திக்கு என்ன சொல்வதென்று புரியாமல் எல்லோரையும் உட்காரச் சொன்னாள்.
“அம்மா! இவர்கள் அடுத்தத் தெருவில் ஒரு பெரிய அறை எடுத்துக் கொண்டு தங்கியிருக்கிறார்கள். சமைத்துப் போட ஆள் இருக்கிறான். ரூமில் இருப்பதாக சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எங்களுடையது வீடு என்பார்கள். உங்க அறைக்கு வருகிறேன்னு சொன்னால் வராதே, வீட்டுக்கு வருவதாக இருந்தால் வா என்பார்கள்.” சவிதா கலகலவென்று பேசிக்கொண்டிருந்தாள்.
சவிதாவின் பேச்சு முடிவடையும் முன்பே வசந்தி உள்ளே போய் படுத்துக் கொண்டாள்.
இங்கே இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ? சவிதாவை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்ற பயம் பிடித்துக் கொண்டது வசந்திக்கு. ·பிரண்ட்ஸ் என்று சொன்னால் பெண்பிள்ளைகள் என்று நினைத்தாள். நான்கு பேரும் பையன்கள். ஒரே வகுப்பு சேர்ந்தவர்களும் இல்லை. எப்படி நட்பு ஏற்பட்டிருக்கும்? சவிதா இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்? எப்படி கேட்டுத் தெரிந்துகொள்வது? சுரேஷ¤க்கு தெரிந்தால் என்ன சொல்லுவான்? தானே தடம் புரண்டுவிட்ட பிறகு மகளை என்ன சொல்ல முடியும்? அப்பாவின் சலுகை இருப்பதால்தான் இவள் இப்படி நடந்து கொள்கிறாளா? எப்படியாவது சவிதாவை வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தாள் வசந்தி.
புது இடம், புதிய பொறுப்புகள் வசந்திக்கு கொஞ்சம் தெம்பு வந்தாற் போலிருந்தது. சவிதா அவர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்த போது வசந்தி சாப்பாடு பரிமாறுவதற்கான ஏற்பாடுகளை செய்தாள்.
அன்று மாலை இரண்டு பெண்கள் வந்தார்கள். சோபா, வீணா என்று அறிமுகப்படுத்தினாள் சவிதா. நண்பர்கள் கூட்டத்தில் பெண்பிள்ளைகள் கூட இருப்பது தெரிந்து நிம்மதியாக மூச்சை விட்டுக் கொண்டாள் வசந்தி. அவர்கள் மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்த போது அருகில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
அடிக்கடி பையன்களின் பெயர்கள் வருவது, ஏதேதோ புத்தகங்களைப் பற்றி அர்த்தம் இல்லாமல் பேசிக் கொள்வது … இதையெல்லாம் பார்க்கும் போது வசந்திக்கு கவலைப் பிடித்துக் கொண்டுவிட்டது.
“சவிதா! உங்கள் பேச்சு எனக்கு புரியவே இல்லையே?” இரவு படுத்துக் கொள்ளும் முன்பு பேச முயன்றாள்.
“இப்பொழுதுதானே வந்திருக்கிறாய். போகப் போக தானே புரியும். எல்லோரையும் புரிந்துகொள்வாய். தூக்கம் வருகிறது.” முகத்தை மூடிக் கொண்டு தூங்க முற்பட்டாள் சவிதா.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
- மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்
- பெயரின் முக்கியத்துவம் பற்றி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ? (கட்டுரை: 29)
- பிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)
- அமெரிக்கத் தேர்தல் களம்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5
- தெய்வ மரணம்
- சேவல் திருத்துவசம்
- எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11
- தொ(ல்)லைக்காட்சியின் கதை!
- காலம் மாறிப்போச்சு:
- தமிழவனின் “வார்சாவில் ஒரு கடவுள்” – கருத்தரங்கம்
- தமிழும், திராவிடமும்!
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்
- பார்வை
- வேரை மறந்த விழுதுகள்
- தாஜ் கவிதைகள்
- பட்ட கடன்
- தேடல்
- நினைவுகளின் தடத்தில் (9)
- ஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு
- வார்த்தை மே-2008 இதழில்
- வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?
- ஒரு ரொட்டித்துண்டு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !
- தாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு !
- கருணாகரன் கவிதைகள்
- தீபச்செல்வன் கவிதைகள்
- எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?!!
- ஊனப்பிள்ளை வேண்டுமா? ஞானப்பிள்ளை வேண்டுமா?
- இல்லத்தின் அமைப்பியல் விதி !