தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 10

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


பகல் முழுவதும் சாத்தூர் அணைக்கட்டில் அங்கும் இங்கும் சுற்றினார்கள். பார்க்கும் காட்சிகள் எதுவும் இருவரின் மனதில் பதியவில்லை. அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் கலகலவென்று சிரித்துக் கொண்டு, சந்தோஷமாக இருந்தார்கள். வசந்தி நிம்மதியை இழந்தவளாய் வந்து படிகட்டின் மீது உட்கார்ந்துகொண்டாள். தண்ணீரில் அலைகள் வந்து கரையைத் தொட்டுக் கொண்டிருந்தன. ஆங்காங்கே மக்கள் படிகளில் உட்கார்ந்திருந்தார்கள்.
நதியில் குதித்துவிட்டால் என்ன என்று தோன்றியது வசந்திக்கு. தன்னையும் அறியாமல் இரண்டடிகள் முன்னால் வைத்தாள். எதற்காக செத்துப் போகணும்? ஏன் என்றால்? வாழ்க்கையில் மிக முக்கியமானது என்று தான் நினைத்தது தனக்கு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இனி வாழ்வதில் என்ன பயண்?
வசந்தியின் யோசனைகளை சிதறடித்தபடி திடீரென்று ஒரு காகிதம் காற்றில் பறந்து வந்து வசந்தியின் முகத்தை வந்து தாக்கியது. பின்னாலிருந்து ஒருத்தி “ஐயாம் சாரி!” என்றபடி முறுவலுடன் அந்தக் காகிதத்தை எடுத்தக் கொண்டாள். பக்கத்திலேயே படியில் உட்கார்ந்துக் கொண்டு வேகவேகமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். வசந்தியும் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். நடுவில் அந்தப் பெண் ஒரு தடவை நிமிர்ந்து வசந்தியின் பக்கம் பார்த்தாள். பிறகு முறுவலித்துவிட்டு மறுபடியும் தன் வேலையில் மூழ்கிவிட்டாள்.
“தனக்குத்தான் எந்த வேலையும் இல்லை. இவளைப் போல் தானும் ஏதாவது துறையில் ஈடுபட்டிருந்தால் இன்று மூச்சு கூட விட முடியாத அளவுக்கு வேலையில் மூழ்கியிருந்திருப்பாள்.
வீட்டு வேலைகளை ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் செய்து கொண்டிருந்தாள். விதவிதமான டிபன்கள், பட்சணங்கள் தயாரிப்பாள். வீட்டை எப்போதும் துடைத்துக் கொண்டோ, தூசியைத் தட்டிக் கொண்டோ இருப்பாள்.
எத்தனை வேலைகள்? இன்றும் அந்த வேலைகள் எல்லாம் அப்படியே இருக்கு. நாளைக்கு லாவண்யாவுக்கு மகனோ மகளோ பிறந்தால் தன்னிடம்தான் அனுப்பிவைப்பாள். முன்னால் ஒரு தடவை பேச்சு வாக்கில் சொல்லியிருக்கிறாள், அம்மாதான் அவளுடைய குழந்தைகளை வளர்க்கணும் என்று.
அப்படி வளர்த்தால் … மறுபடியும் அந்த வேலைகளை எல்லாம் செய்தால் தனக்கு ஓய்வு கிடைக்காத அளவுக்கு வேலை இருக்கும்.
ஆனால் தனக்கு அதனால் என்ன ஆகப் போகிறது? எப்படியும் அந்தக் குழந்தையும் லாவண்யாவை விட்டுவிட்டுப் போகத்தான் போகிறது. அப்படி இருக்கும் போது இந்த வேலைகளுக்கு, இந்த உழைப்புக்கு அர்த்தம் என்ன இருக்கிறது?
இத்தனை நாளும் நான் செய்த வேலைக்கு மதிப்பு இருக்கிறதா? மனைவி என்பதால் செய்தேன். தாய் என்பதால் செய்தேன். அந்த வேலைகள் எல்லாம் செய்ய வேண்டியவைதான் என்றாலும், அவற்றை செய்து கொண்டே எனக்காகவும் ஏதாவது செய்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?
நாள் முழுவதிலும் எனக்காக ஒரு நிமிஷமாவது செலவழித்திருந்தால் இன்று இந்த சூனியம் ஏற்பட்டு இருக்குமா?
“வசந்தி! கிளம்பலாம் வா” என்ற படி சுரேஷ் வந்தான். இருவரும் மறுபடியும் ஹோட்டலுக்கு வந்தார்கள். இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் வந்தார்கள். சுரேஷ் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தான். வசந்தி தலை குனிந்தபடி கட்டில் மீது உட்கார்ந்திருந்தாள். இந்த முயற்சியும் வீண்தானா? நாள் முழுவதும் மௌனமாக கழித்ததைத் தவிர இரண்டு பேரும் மனம் விட்டு பேசவில்லையே? ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வலுக்கட்டாயமாக ஒதுக்கிவிட்டு நிமிர்ந்தாள்.
“என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டான் சுரேஷ்.
“ஒன்றும் இல்லை.” அவனுடைய கையை தன் கையில் எடுத்துக் கொண்டாள். சுரேஷிடம் எந்த சலனமும் இருக்கவில்லை. எங்கேயோ பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். மெதுவாக அவன் தோளில் தலையை சாய்த்துக் கொண்டாள். அவன் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு அவன் கண்களுக்குள் ஆழமாக பார்க்க முயன்றாள். கழுத்தில் மென்மையாக உதடுகளால் ஒற்றியெடுத்தாள்.
“ரொம்ப களைப்பாக இருக்கு வசந்தி! நாள் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தோம் இல்லையா?”
சுரேஷ் வசந்தியின் கையை விலக்கி விட்டு கட்டிலில் அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான். அவமானத்தினால் வசந்தியின் உடல் நெருப்பாக தகிக்கத் தொடங்கியது.
“நான் அதற்குக் கூட லாயக்கு இல்லாதவளாகி விட்டேனா?” வசந்தியின் வார்த்தைகள் தொண்டைக் குழியிலேயே நின்று விட்டன. ஏற்கனவே சுரேஷ் போர்வையால் முகத்தையும் மூடிக் கொண்டு படுத்துவிட்டான்.
அந்த கட்டிலில் சுரேஷ¤க்கு பக்கத்தில் படுத்தால் பிணமாக மாறி விடுவோமோ என்ற உணர்வு எற்பட்டது வசந்திக்கு. தன்னுள் உயிர் சக்தி நசிந்துப் போய்விட்டது போலவும். இரத்தம் உரைந்து போய் நரம்புகள் செயலிழந்து விட்டது போலவும் இருந்தது. யோசிப்பது, வேதனைப்படுவது, ஆவேசமடைவது போன்ற உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவளாய் வெறுமையாய் மேற்கூரையை பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள். விடியற்காலையில் எப்போதோ உறக்கம் தழுவியதாலோ என்னவோ நன்றாக விடிந்த பின்னால் தான் விழிப்பு வந்தது.
ஏற்கனவே சுரேஷ் எழுந்துக் கொண்டு சாமான்களை எல்லாம் பேக் செய்துவிட்டிருந்தான்.
முதல் முறையாக “இனி பிரயோஜனம் இல்லை” என்ற அபிப்பிராயம் ஏற்பட்டது வசந்திக்கு.
நீலிமாவிடம் ஏற்பட்டிருப்பது வெறும் மோகம் இல்லை. அவர்களிருவருக்கும் நடுவில் நடந்த விஷயம் சாதாரணமானது இல்லை. இந்த எண்ணம் மேலோங்கியதும் வசந்திக்கு திடீரென்று சோர்வு ஆட்கொண்டது.
என்ன செய்வது? சுரேஷை விட்டுவிட்டு எப்படி வாழ்வது? யோசித்து யோசித்து மூளை சூடாகிவிட்டது. எதிரே தென்பட்ட நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டாள். தான் பருமானாகிவிட்டது உண்மைதான். ஆனாலும் அழகாகத்தான் இருக்கிறாள்.
இடுப்பு உடலோடு கலந்து போகாமல் மெலிந்து இன்னும் தனியாய் தென்பட்டுக் கொண்டுதான் இருந்தது. கைகள் குண்டாகிவிட்டாலும் மென்மையை இழக்கவில்லை. ஆண்களை இன்னும் ஈர்த்துக் கொண்டுதான் இருந்தாள். பொது இடங்களுக்கோ, சினிமாவுக்கோ போனால் ஆண்களின் பார்வை அவளைத் துரத்திக் கொண்டுதான் இருக்கும்.
இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தாலும் இளமையின் துள்ளலை இன்னும் இழக்கவில்லை. மார்புகள் சரிந்திருக்கலாம். இடுப்பில் இரண்டு மடிப்புகள் தோன்றியிருக்கலாம். இரண்டு குழந்தைகளை பெற்று பாலூட்டி வளர்த்து, வீட்டு வேலைகளை எல்லாம் ஒண்டியாக செய்துக் கொண்டிருந்தால் அந்த அளவுக்கு கூட உடலில் மாற்றங்கள் வராமல் எப்படி இருக்க முடியும்?
அப்படியும் தான் அழகை இழந்து விடவில்லை. தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு குரூபியாக இல்லை.
போன வருடம் கூட தன்னை மார்போடு அணைத்துக் கொண்டான். தன்னுடைய அழகு அவனைப் பைத்தியமாக்குவதாக மூச்சு முட்ட தழுவிக் கொண்டான்.
சுரேஷ் தன்னை விட்டு விலகிப் போனதற்கு சரிந்து போன மார்பகமோ, இடுப்பின் மடிப்புகளோ காரணம் இல்லை.
கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட மறந்து போனவளாய் கண்ணாடியின் முன்னால் அப்படியே நின்று கொண்டிருந்தாள் வசந்தி.

தொடரும் …..

தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation

author

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்

Similar Posts