தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


தொடுவானம் தொட்டுவிடும் தூரம்
அத்தியாம் 9

வசந்திக்கு திருமணமான அடுத்த வாரமே பி.ஏ. ரிசல்ட்ஸ் வந்து விட்டன். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள். சிநேகிதிகள் எல்லோரும் வாழ்த்துக்களை தெரிவித்த போது வசந்திக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவற்றை லட்சியப்படுத்தவும் இல்லை. அப்பொழுது அவள் பார்வை படிப்பின் மீது இருக்கவில்லை.
சுரேஷ¤க்கு என்ன பிடிக்கும்? எப்படி இருந்தால் தன்னை அவனுக்கு பிடிக்கும்? மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி? நாத்தனாரிடம் பிரியமாக நடந்துகொள்வது எப்படி? சண்டை சச்சரவுகள் வராமல் எப்படி பார்த்துக் கொள்வது?
இது போன்ற யோசனைகளுடன் வசந்தியின் மூளை குழம்பியிருந்தது. மாமியார் மாமனாருக்கு பணிவிடை செய்து அவர்களிடம் நற்மதிப்பை பெறுவாள். கணவனுக்கு வேண்டியவிதமாக நடந்துகொள்வாள். நாத்தனாரை கூடப் பிறந்த சகோதரியாக பார்த்துக் கொள்வாள். சீரும் சிறப்புமாக தன்னுடைய குடித்தனம் ரொம்ப நன்றாக இருக்கும். அழகான இந்த கனவு வசந்தியை ஒரு இடத்தில் நிற்க விடவில்லை. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது, சிநேகிதிகள் பாராட்டியது இவை எதுவும் வசந்தியின் மனதில் நிற்கவில்லை.
ஒருநாள் வரலக்ஷ்மியும், சாந்தாவும் வந்து வலுக்கட்டாயமாக வசந்தியை கல்லூரிக்கு இழுத்துக் கொண்டு போனார்கள், மதிப்பெண்களை வாங்கி வருவதற்கு.
ஆபீஸில் மதிப்பெண் சான்றிதழை வாங்கி வரும் போது இங்கிலீஷ் டிபார்ட்மென்ட் வாசலில் லெக்சரர் மூர்த்தி வசந்தி மற்றும் அவளுடைய சிநேகிதிகளை உள்ளே அழைத்தார். “எம்.ஏ. இலக்கியத்தில் என்ன எடுத்துக் கொள்ளப் போகிறாய்? ஆங்கிலமா தமிழா?”
அவருடைய கேள்வி புரியாமல் வசந்தி திகைத்துப் போனாள்.
“ஆங்கிலம் எடுத்துக் கொள். அந்த மொழியின் மீது உனக்கு நல்ல ஆளுமை இருக்கிறது. சிலருக்குத்தான் அது சாத்தியம். ஆங்கிலம் படித்தால் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.” மேலும் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.
“நான் மேற்கொண்டு படிக்கப் போவதில்லை சார்” என்றாள் வசந்தி.
அவர் திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு ” ஏன்?” என்று கேட்டார்.
“கல்யாணம் நிச்சயமானது முதல் வசந்தியின் முகத்தில் வெட்கம் படர்ந்து ரொம்ப அழகாக தென்படுகிறாள் இல்லையா? ஆனால் வெட்கப்பட்டுத்தான் ஆக வேண்டுமா ? உன்னைப் போல் வெட்கப்பட என்னால் முடியாது என்று தோன்றுகிறது.” ரோகிணி கிண்டலடித்தாள்.
லெக்சரர் மூர்த்தி வசந்தியின் வெட்கத்தை லட்சியப்படுத்தவில்லை. உட்காரு என்று நாற்காலியை சுட்டிக் காட்டினார்.
வசந்தி உட்கார்ந்துகொண்டாள். அரைமணி நேரம் மூர்த்தி ஏதோதோ சொன்னார். அதனுடைய சாராம்சம் அவள் மேலும் எம்.ஏ. படிக்கணும். வசந்தியின் காதுகளில் அவர் சொன்னது எதுவும் விழவே இல்லை. தாமதமாகிக் கொண்டிருக்கிறதே? சுரேஷ் வீட்டில் தனக்காக காத்துக் கொண்டிருப்பான். இவர் பாட்டுக்கு வளவளவென்று பேசிக்கொண்டே இருக்கிறாரே?” என்று உள்ளூர சலித்துக் கொண்டாள். அவர் சொல்லி முடித்ததும் ” ஆகட்டும் சார்” என்று விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்துவிட்டாள்.
“மூர்த்தி சார் சொன்னபடி எம்.ஏ. படித்திருந்தால்?” இன்று மனதில் ஏதோ சலனம்!
எம்.ஏ. படித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சுரேஷ் இப்படி நடந்துகொண்டதற்கு தனக்கு வருத்தம் ஏற்பட்டிருக்காதா? ஏதாவது வேலைக்கு போயிருந்தால் மட்டும் கணவன் தன்னை ஒதுக்கிவிட்டால் வருத்தம் இல்லாமல் போய் விடுமா?
இன்று சுரேஷ் தன்னை விட்டு விலகிவிட்டான் என்ற வேதனையுடன் தன் வாழ்க்கை முழுவதையும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் அர்ப்பணம் செய்துவிட்டு, தான் இன்று வெறுமையுடன், புத்திச்சாலித்தனம் எதுவும் இல்லாதவளாக, எந்த பற்றுகோலும் இல்லாதவளாக இந்த மூன்று பேரைத் தவிர வேறு அடையாளம் எதுவும் இல்லாதவளாக எஞ்சி நின்று விட்டாள்.
இவர்களுடைய கருணைக்காக எதிர்பார்க்க வேண்டிய நிலைமை. தானும் ஒரு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தால் தனக்கும் ஒரு தனிப்பட்ட அங்கீகாரம் கிடைத்திருந்தால், தனக்கும் ஒரு ஆதாரம் இருந்திருக்கும். தன் இரண்டு கால்களில் ஒன்றாவது தரையில் கொஞ்சம் ஊன்றியிருக்குமோ என்னவோ. இப்படி திடீரென்று காலுக்கடியிலிருந்து நிலம் நழுவி தான் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிப்பது போல், பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாமல் பள்ளத்தாக்கில் விழுந்து கொண்டிருப்பது போல் தோன்றியிருக்காதோ என்னவோ.
ஆனால் தன்னால் இதையெல்லாம் எப்படி ஊகிக்க முடியும்? சுரேஷ் இப்படி எல்லாம் செய்வான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒரு மனைவியாய், ஒரு தாயாய் இருப்பதை விட ஸ்திரமான ஸ்தானம் வேறு எதற்கு இருக்க முடியும்? ஆனால் அவையெல்லாம் வெறும் கூடுகள் என்றும், நிலையற்றவை என்று எப்படி தெரியும்? ஆனால் உலகில் எல்லோரும் சுரேஷை போல் இருக்க மாட்டார்கள். மனைவியை கைவிட்டு விடமாட்டார்கள். அந்த நீலிமா போன்றவர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் குறுக்கே வரமாட்டார்கள்.
நீலிமாவைப் பற்றிய நினைப்பு வந்ததும் வசந்தியின் இதயம் நெருப்பாய் தகிக்கத் தொடங்கியது. துக்கம் பொங்கி வந்தது.
“தூங்காமல் அப்படியே உட்கார்ந்திருக்கிறாயா?” சுரேஷ் எழுந்துகொண்டான்.
“விழிப்பே வராமல் போய் விடுமோ என்று” சொல்லிக் கொண்டே கடியாரத்தின் பக்கம் பார்த்தாள்.
மணி நான்காகியிருந்தது. “எழுந்துகொள்ளுங்கள். போகலாம்” என்றாள் வசந்தி.

தொடரும் …..

தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation

author

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்

Similar Posts