உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 4 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


ஆன்மீக, தனித்துவக் கல்விப் பயில்முறை ஒன்றை (Spiritual & Secular Education) நாம் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும். அது என்ன வென்று தெரிகிறதா ? அதைப் பற்றிக் கனவு காண வேண்டும் நீ ! அதைப் பற்றி உரையாட வேண்டும் நீ ! அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் நீ ! அதைச் செயற்படுத்த முனைய வேண்டும் நீ ! அதுவரை (இந்திய) இனத்துக்கு முக்தி இல்லை. தற்போது நீ மேற்கொண்ட கல்வி அமைப்பில் ஒருசில நன்மைகள் இருந்தாலும் அதில் நன்னெறிகளை நசுக்கும் பெரிய பின்னேற்றம் உள்ளது ! அக்கல்வி முறை உன்னத மனிதரை ஆக்குவதற்கு உதவாமல் முரண்பாட்டுக் கல்வியைப் (Negative Education) புகட்டுகிறது ! அத்தகைய கல்விப் பயிற்சி முரண்பாடுகள் மீது கட்டப்படுவது ! மரணத்தை விடக் கொடுமையானது ! பள்ளிக்குச் செல்லும் மாணவர் முடிவாக அறிவதென்ன ? தந்தை ஒரு மூடர்; தாத்தாவுக்கு மூளை கோளாறு; சொல்லித் தரும் ஆசிரியர் யாவரும் வஞ்சகர் ! புனித நூல்கள் எல்லாம் பொய் ! பதினாறு வயதை அடையும் மாணவன் உயிரற்ற, எலும்பில்லாத முரண்பாட்டுப் பொதியாக உருவாகிறான் ! மூளைக்குள் திணிக்கப்படுவை செறிக்காமல், வாழ்நாள் முழுவதும் ஊசிக் கிடக்கின்றன ! பயிலும் கல்வியின் பொதியளவு எத்தனை பெரியது என்பது முக்கியமல்ல ! புத்துயிர் அளித்துப் பண்பாடு வளர்த்து, உயர் மனிதனாக்கும் ஒருமைப்பாட்டுக் கருத்துக்கள் மாணவருக்காக உருவாக்க வேண்டும் !

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

. . . . அறக்கட்டளை (Charity): அறக்கட்டளை ஆணையகம் பொல்லாங்கு மிக்க ஒருவிதக் காமக் கோட்டத்தைப் போன்றது (Sort of Pruriency) !

. . . . வறுமைக்கும், நோயிக்கும் உதவி புரிபவன் எல்லாவற்றிலும் தீய இரு பெருங் குற்றங்களைச் செய்யப் பங்கேற்கிறான் !

. . . . தான் சம்பாதிக்காத பணத்தைத் தாராளமாகப் பிறருக்குத் தருபவன் மற்றவர் மெய்வருந்திய உழைப்பை உறிஞ்சும் கருணையாளி !

. . . . உண்மையான நல்லெண்ணமுள்ள மனிதன் பிறர் பிச்சை எடுப்பதையும், பிறருக்குப் பிச்சை கொடுப்பதையும் அறவே வெறுப்பவன்.

. . . . புகழோடு தோன்றல் (Fame): பிறப்பு அனைவரையும் சமநிலைப் படுத்துகிறது. இறப்பு மனிதர் உயர்ச்சியைக் காட்டுகிறது.

. . . . ஒழுக்க நெறிமுறை (Discipline): புரட்சிப் போராட்டங்கள் (Mutiny Acts) அதிகார உரிமையின்றி ஆணையிடும் சர்வாதிகாரிகளை எதிர்த்து எழுபவை ! தெய்வீக ஆணைக்குச் சவுக்கு தேவையில்லை !

. . . . இல்லத்து மாதர் (Women in the Home): இல்லம் என்பது மங்கையர்க்குச் சிறைவாசம் ! மாதருக்கு வேலை விடுதி !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 4
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 4)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: (அருவருப்புடன்) நான் போகிறேன் ! என்னால் சாத்தான் கூற்றைக் கேட்க முடியாது ! இவன் ஒரு துரோகி ! இவன் நிழல் கூட என் மேல் படக் கூடாது ! முன்னிற்கும் இவன் மூச்சை நாம் சுவாசிக்கக் கூடாது ! முரணான போக்கு ! கெட்ட சிந்தனை ! தீய செய்கை ! நமக்கிவன் உறவு தேவையில்லை ! நான் போகிறேன் !

சாத்தான்: யாரும் என்னைத் தவிர்க்க முடியாது ! யாரும் என்னை ஒதுக்க முடியாது ! நீ என்னைப் புறக்கணித்தாலும் மனிதருக்கு என் உதவி தேவைப்படும் ! உமது சினத்தைக் கண்டு நான் அனுதாபப் படுகிறேன் ! நீ சமூகத் தோல்வி அடைந்தவன் !

தாஞ் சுவான்: நீ தீமையின் வடிவம் ! உனக்கு ஆத்மா கிடையாது ! உன் நாக்கு முனையில் நஞ்சு உற்பத்தி ஆகுது ! நான் சமூகத் தோல்வி ஆனவன் என்பதில் வருத்தம் உள்ளது ! அதனால் நான் யார் முகத்திலும் விழிக்க நாணுகிறேன். பூமிக்கடியில் மீண்டும் ஒளிந்து கொள்கிறேன்.

சாத்தான்: என் ஆலோசனை இது ! நீ சொர்க்கபுரியில் ஒளிந்து கொள்ளலாம். அதுதான் உனக்கேற்ற இடம் ! (வாலிபப் பெண்ணைப் பார்த்து) நீ கனிவாகச் சொல் அவனுக்கு.

வாலிபப் பெண்: நான் சொன்னால் அவர் கேட்பவரா ? ஒருவர் விரும்பினால் உடனே சொர்க்க புரிக்குப் போய்விட முடியுமா ? எனக்கும் அங்கே போக ஆசைதான் ! அது நடக்கக் கூடிய கனவா ? அப்படிப் போக முடிந்தால் அனைவரும் அங்கு போக விரும்பமாட்டாரா ?

முதியவர்: நானதைப் பற்றிச் சொல்கிறேன். படைக்கப் பட்ட எல்லா இடங்களையும் விடத் தேவரும் தேவதைகளும் உள்ள சொர்க்கபுரி ஓர் மந்த புரியென்று சொல்வேன். சொர்க்கத்தில் காலை உதயமோ, மாலை அத்தமனமோ எதுவும் கிடையாது ! எப்போதும் ஒளிமயந்தான் ! இருளும், வெளிச்சமும், அறிவும், மடமையும், ஏற்றத் தாழ்வுகளும் அங்கில்லை ! இவை எல்லாம் பூலோகத்தில் உள்ளதால்தான் வாழ்க்கை இனிக்கிறது !

சாத்தான்: சரியான விளக்கம் ஐயா ! தொடருங்கள் ! சிலருக்குத்தான் சொர்க்கபுரி பிடிக்கிறது ! எல்லாம் எனக்குப் புரியாத மனித ஆன்மீகத்தில் இருக்கிறது ! எனக்கு அந்த ஆன்மீகத்தில் மோகம் கிடையாது ! அதைப் புரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை ! எல்லாம் துன்பமயம் என்பது என் வாய்ப்பாடு ! பிரபஞ்சத்தை உருவாக்க பல்வேறு இன மாந்தர் தேவைப்படுகிறார். தாஞ் சுவானுக்குச் சொர்க்கபுரி நிச்சயம் பிடிக்கும் !

தாஞ் சுவான்: எல்லாம் இன்பமயம் என்பது என் கையேடு ! துன்பமயவாதிகளைக் கண்டால் நான் ஒதுங்கிக் கொள்வேன். சாத்தானுக்கு ஏன் சொர்க்கபுரி பிடிக்காது ? மரத்தில் தாவி பழம் கிட்டாமல் போனால் “சீச்சீ ! அந்தப் பழம் புளிக்கும்” என்று நீ உரைப்பாயா ?

வாலிபப் பெண்: எனக்கு முடிந்தால் நான் இப்போதே சொர்க்கபுரி செல்லத் தயார்.

வயோதிகர்: மகளே ! ஓர் எச்சரிக்கை ! சொர்க்கபுரியில் பல பிரபுக்கள் சுகவாசியாகப் புகழ் மனிதராய்ப் பூரிப்போடு மட்டும் வாழவில்லை. சொர்க்கபுரி அவரது உயர் நிலையைக் காட்டுவதாக அவர் கருதுகிறார் ! சொர்க்கபுரியில் கால்வைக்கத் தகுதி இல்லாதவர் அங்கே மகிழ்ச்சியுடன் நிற்க முடியாது மகளே !

வாலிபப் பெண்: சொர்க்கபுரில் நிற்கத் தகுதியற்றவள் நானில்லை என்று எப்படிச் சொல்லலாம் ? ஒழுக்க மில்லாதவளா நான் ? ஓர வஞ்சகம் செய்தவளா நான் ? ஒருவர் வாழ்க்கையைக் கெடுத்தவளா நான் ? தந்தையே ! நீங்கள் சொர்க்கபுரிக்குப் போகும் போது நானுடன் வருவேன்.

வயோதிகர்: சொர்க்கபுரியில் மக்கள் தொகை சிறியது. நரகத்தில் இட நெருக்கடி அதிகம் ! நூறில் அல்லது ஆயிரத்தில் ஒருவர்தான் அங்கே போவார் ! மீதிப்பேர் எல்லாம் நரகத்தில்தான் வசிக்கிறார் ! புனிதர் போவது சொர்க்கபுரிக்கு ! ஆனால் அவரைக் கண்டுகொள்ளாத மதாபதிகள் நரகா புரியில் தள்ளப் படுகிறார்.

தாஞ் சுவான்: (வாலிப் பெண்ணைப் பார்த்து) நிச்சயம் நீ என்னுடன் சொர்க்கபுரிக்கு வர விரும்ப மாட்டாய் அல்லவா ?

வாலிபப் பெண்: உன்னுடன் நான் எங்கும் உலவ மாட்டேன். எல்லா ஆத்மாவும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. செய்த தவறுகளுக்குக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்பாயா நீ ?

தாஞ் சுவான்: (கோபமாய்) குறும்பாகப் பேசாதே பெண்ணே ! தவறுகளுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதா மனிதப் பண்பாடு ? மானிட வாழ்க்கை சிக்கலானது ! மனிதர் உறவுகள் கசப்பை உண்டாக்குபவை ! மரணமே இனிப்பானது ! ஆயினும் நான் உன்னுடன் உலவி வரவே விரும்புகிறேன். உன் மீது எனக்கு மிக்க வாஞ்சை உள்ளது ! வெறுக்காதே என்னை !

***************************

(தொடரும்)

*********
தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan April 22, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts