உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



“இளஞர்களே ! எனது நம்பிக்கை எல்லாம் உங்கள் மீது உள்ளது ! தேசத்தின் அழைப்புக்கு உதவ முன்வருவீரா ? நான் சொல்வதை நீங்கள் உறுதியாக நம்பி முன்வந்தால் உங்கள் ஒவ்வொருவருக்கும் மகத்தான ஓர் எதிர்காலம் இருக்கிறது ! குழந்தையாக உள்ள போது நான் கொண்டிருந்த நம்பிக்கை போல் உங்கள் மீது நீங்கள் அழுத்தமான நம்பிக்கை வைத்துக் கொள்
வீர். ஒவ்வோர் ஆத்மாவிலும் நெடித்துவ வாழ்வுக்கு ஆற்றல் நிரம்பியுள்ளது. இந்தியா முழுமைக்கும் உங்களால் புத்துயிர் அளிக்க முடியும். அந்த நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவரும் மேற்கொள்வீர்.”

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

. . . . காலத்தின் பழிவாங்கல் (Time’s Revenges): டார்வின் மற்றவரை நமது இரத்த உறவினர் என்று நிரூபித்துக் காட்டிய பிறகும் மூர்க்கர் எனப்படுபவர் அவரைப் பழிவாங்கினர் !

கார்ல் மாக்ஸ் நடுத்தர வகுப்பு நபரைக் (பொதுவுடமைக் கோட்பாடு எதிர்ப்பாளிகள்) கள்வர் என்று குற்றம் சாட்டி முத்திரை குத்தினார். அந்த கள்வரும் பதிலுக்குப் பழிவாங்கினார் !

. . . . நல்லதைக் கருதி வேண்டல் (Good Intensions): நரகம் நல்ல வேண்டுகோள் நோக்கமுடன் பாதை இடப்பட்டது ! தீய எண்ணத்துடன் இல்லை ! எல்லாரும் நல்லதுதான் கருதுகிறார்.

. . . . (Natural Rights): கலை கைத்திறவாதி (The Master of Arts) எந்த மனிதனுக்கும் இயற்கையாகவே எந்த உரிமையும் தராதவாறு செய்து கொள்கிறான். தனக்கு உரிமை கிடைப்பதாகவும் அழுத்தமாய் எண்ணிக் கொள்கிறான் ! !

. . . . (The Pretty Woman): சிறுவனாக இருந்த போது ஒரு சமயம் வாலிப மங்கை ஒருத்தியை “இவள்தான் பேரழகி” என்னும் பிறர் கூறிய புகழ் மொழியை மறுத்துப் பேசினேன். என் அத்தை என்னைத் திட்டிச் சொன்னாள்: “எல்லாரிலும் கீழான தோற்றமுள்ள சகோதரியே குடும்ப அழகி என்பதை நினைவில் வைத்துக் கொள் எப்போதும்.”

மாவீரர் இல்லாத யுகமில்லை ! நிபந்தனைகளில்லை ! தேசத்தின் மிகத் தாழ்ந்த தகுதியுள்ள போர்த் தளபதி அதன் ஜூலியஸ் சீஸர் ! மூடத்தனம் மிகவும் குன்றிய தேசீயவாதி ஸொலோன் (Solon – Greek Hero) ! மிகக் குறைவான குழப்பம் கொண்ட சிந்தனைவாதி சாக்கிரடிஸ் ! மிகச் சாதாரண பொது நபர் அறிந்த கவிஞர் ஷேக்ஸ்பியர் !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 3
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 3)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனை உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான் : நான் யாரென்று தெரிகிறதா நண்பரே ?

வயோதிகர்: என்னை நண்பர் என்று அழைப்பவன் என் பகைவனாகத்தான் இருப்பான் ! ஆமாம் யார் நீ ? நண்பன் என்று அழைப்பவன் பின்னால் என்னை வஞ்சிக்க முயல்கிறான் ! முன்னால் வாழ்த்துப் பாடிப் பின்னால் கத்தியை நுழைக்கிறான் ! அப்படி ஒருவன் என்னைக் கொன்று விட்டான் ! அவன் நரகத்தில் தள்ளப்பட்டதாகக் கேள்விப்பட்டேன் ! அவனைக் காணத்தான் வந்திருக்கிறேன் !

தாஞ் சுவான்: நான் நண்பன் இல்லாவிட்டாலும் உனக்குப் பகைவன் அல்லன் ! உனது மகளைக் காதலித்தவன் ! அதனால் ஏற்பட்ட வாள் சண்டையில் போரிட்டு உம்மைக் கொன்றவன் நான்தான் ! நீவீர் தேடி வந்த மானிடன் நான்தான் ! நானிப்போது மாநிலத்தில் வாழ்ந்த நரனில்லை ! நரகாபுரியில் நடமாடும் மனித உருக்கொண்ட நரகன் ! உம்மைக் கொன்று உமது புதல்வியை அனாதை ஆக்கியதற்கு மிகவும் வருந்துகிறேன் !

வயோதிகர்: உன்னை நான் கொன்று போட்டு நரகத்துக்கு வந்திருக்க வேண்டும் ! என் மகளை நேசிப்பதாகச் சொல்லி அவளை மயக்கி வஞ்சிக்க முயன்றாய் ! அவளை மணந்து கொள்வதாய் உறுதி அளித்து ஏமாற்றி வந்தாய் ! உன் பத்து வேட்டைக் காதலிகளில் அவளும் ஒருத்தி ! உனக்கு உபரிப் பெண் ! உன் கண் பட்ட இடமெல்லாம் ஒரு காதலி ஏங்கிக் கொண்டிருப்பாள் ! உன் கால்கள் நடமாடும் இடமெல்லாம் உனக்கு வைப்பு ! உன்னைக் கொல்லாமல் விட்டது என் தப்பு ! மகா தப்பு !

(அப்போது மறைந்திருந்த வாலிப மங்கை வருகிறாள்)

தாஞ் சுவான்: அதோ உமது புதல்வி வருகிறாள் ! (வாலிப மங்கையைப் பார்த்து) பார் பெண்ணே ! உன்னைத் தேடி உன் தந்தை வந்திருக்கிறார்.

வாலிப மங்கை: நான் உங்களைக் காண சொர்க்கபுரிக்கு வர இயலாது ! ஆனால் நீங்கள் நரகாபுரிக்கு எங்களைக் காண வர முடிகிறது !

வயோதிகர்: அருமை மகளே ! நீ இந்த நாடோடி ரோமியோவை நேசிக்கிறாயா ? சென்ற விடமெல்லாம் இவனுக்குச் சிங்காரி உண்டு ! இவன் முத்தமிட ஏதுவாய் நீ பக்கத்தில் நிற்கக் கூடாது !

வாலிப மங்கை: அப்படி யெல்லாம் எனக்கு யாரும் ஆணையிடக் கூடாது இங்கே ! எனக்கு இந்த ரோமியோ மீது துளியும் மோகமில்லை ! பொருத்தமான கணவன் கிடைக்க நான் கடவுளைத்தான் பிரார்த்திக்க வேண்டும் !

வயோதிகர்: மகளே ! இங்கு எந்தப் பிரார்த்தனையும் பலனற்றது ! யார் செவியிலும் விழாது ! நரகத்தின் நுழைவாசலில் என்ன எழுதப்பட்டுள்ளது பார்த்தாயா ? “உங்கள் நன்னம்பிக்கை, எதிர்பார்ப்பை எல்லாம் விட்டுவிட்டு உள்ளே நுழைவீர்.” நல்ல உபதேசம் அல்லவா ? நமக்கொரு பொறுப்பு விடுவிப்பு ! சரி நம்பிக்கை என்பது என்ன ? அது நியாயமான பொறுப்பு ! இங்கு நாம் எதிலும் நம்பிக்கை வைக்கக் கூடாது ! இங்கே யாருக்கும் கடமை என்னும் ஒரு பொறுப்பில்லை ! ஒரு தொழில் இல்லை ! ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்றோர் உந்து நோக்கம் இல்லை ! அதனால் யாரிடமும் ஒரு போட்டி மனதில்லை ! போட்டியும், வெற்றியும் இல்லாத ஒரு மண்புழு வாழ்க்கை ! தேடல் இல்லாத ஒரு மூட வாழ்க்கை ! உண்ணலாம் ! உறங்கலாம் ! உடல் மட்டும் பெருக்கலாம் ! ஆனால் மூளை விருத்தியாகாத முடக்க வாழ்வு ! இதுதான் நரகம், நரக வாழ்வு தெரிந்துகொள் !

தாஞ் சுவான்: உன்னத உரையாடல் நண்பரே ! நரகத்தில் இருப்பவன் மூளை மழுங்கிப் போனதால் இவ்விதம் உபதேசம் செய்ய முடியாது ! சொர்க்கபுரியில் உள்ள உன்னத மேதைகள்தான் இப்படி அடிப்படை அமைப்புகளைப் பற்றிப் பேச முடியும் ! நரகம் எது என்பதை நான் இன்றுதான் அறிந்து கொண்டேன் !

வயோதிகர்: ரோமியோ ! எங்கே உன் நண்பன் ? அவன்தான் சாத்தான் ? அவனுடன் நான் பேச வேண்டும். அவனை இங்கு அழைத்து வருவாயா ?

தாஞ் சுவான்: அவனை நினைத்தாலே போதும் ! வந்து விடுவான் !. . . . அதோ நம்மை நோக்கி வருகிறான் சாத்தான் !

(ஹெர்குலிஸ் போல திடகாத்திர ரூபன் ஒருவன் சிரித்துக் கொண்டு வருகிறான்)

வாலிப மங்கை: சாத்தானைப் பார்த்தால் யுலிஸிஸ் போல் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறானே ! தாஞ் சுவானை விட அழகனாக இருக்கிறானே ! எந்தப் பெண்ணையும் மயக்கி விடும் சக்தி கொண்டவனாய் இருக்கிறானே ! எனக்கும் அவனுடன் பேச ஆசைதான் !

வயோதிகர்: நரகத்தில் வேலை செய்பவன் பிறகு எப்படி இருப்பான் மகளே ? உன் மனதை அவனிடம் இழந்து விடாதே ! தாஞ் சுவானை விடக் கொடூரமானவன் சாத்தான் ! அழகுப் பெண்ணுக்குச் சாத்தான் பேரழகாய்த் தெரிவதில் ஒன்றும் வியப்பில்லை ! அழகும் தீமையும் பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் !

சாத்தான்: (தலைவணங்கி) நான்தான் லூஸி·பர் (Lucifer – Biblical Rebel) உங்கள் ஆணைக்குப் பணிவேன் ! கலகம் பண்ண வேண்டுமா ? குழப்பம் உண்டாக்க வேண்டுமா ? சண்டை மூட்ட வேண்டுமா ? குடும்பத்தைப் பிரிக்க வேண்டுமா ? கொலை புரியத் தூண்டவா ? குற்றம் புரியச் செய்யவா ? பொய்ச் சாட்சி சொல்லவா ? எனது பட்டியல் நீண்டு செல்வது ! இவை யெல்லாம் என் அனுதின ஒழுங்குப் பணிகள் ! முழு மனதுடன் நான் புரியும் நரகச் சேவை !

தாஞ் சுவான்: (அருவருப்புடன்) நான் போகிறேன் ! என்னால் இவற்றைக் கேட்க முடியாது ! இவன் ஒரு துரோகி ! இவன் நிழல் கூட என் மேல் படக் கூடாது ! முன்னிற்கும் இவன் மூச்சை நாம் சுவாசிக்கக் கூடாது ! முரணான போக்கு ! கெட்ட சிந்தனை ! தீய செய்கை ! நமக்கிவன் உறவு தேவையில்லை ! நான் போகிறேன் !

***************************

(தொடரும்)

*********
தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan April 16, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts