தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


எது என்னவாக இருந்தாலும் சரி சுரேஷ¤டன் எப்போதும் போல் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று வசந்தி முயற்சி செய்தாள். சுரேஷ் வீட்டுக்கு வந்ததும் சிரித்த முகத்துடன் அவனுக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து கொடுத்தாள். முகத்தில் கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் ரொம்ப சாதாரணமாக வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த வசந்தியை வியப்புடன் பார்த்தான் சுரேஷ்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது குழந்தைகளைப் பற்றி பேசிக் கொண்டார்கள். அதிகமாக சவிதாவைப் பற்றிதான், ஹாஸ்டலில் எப்படி அவஸ்தைப் படுகிறாளோ என்று.
சாப்பாடு முடிந்ததும் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு மேஜை அருகில் சென்றான் சுரேஷ்.
வசந்தி ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. “இதுவே நிலிமாவாக இருந்தால் இப்படி புத்தகமும் கையுமாக உட்கார்ந்திருப்பீங்களா?” தீவிரமான குரலில் கேட்ட வசந்தியை திகைப்புடன் பார்த்தான்.
“அர்த்தம் இல்லாமல் ஏன் இப்படிப் பேசுகிறாய் இதை அர்ஜென்டாக பார்க்கணும். நாளை காலையில் ஒரு ஆபரேஷன் இருக்கிறது.”
சுரேஷ் மறுபடியும் புத்தகத்தில் தலையை நுழைத்தான்.
“எல்லாம் வெறும் பேச்சு. பொய்! அந்த ஆபரேஷன் கேஸ் ஒன்றும் முக்கியமானது இல்லை. பத்து நாட்கள் லீவ் போட்டுவிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் ஊர் சுற்றியவருக்கு அர்ஜென்ட் கேஸ் இருக்குன்னு சொன்னால் நம்பக் கூடிய விஷயம்தானா? என்னுடன் பேசுவதில் விருப்பம் இல்லை. என் பக்கத்தில் படுத்துக் கொள்வதில் விருப்பம் இல்லை. என்னை அரவணைத்துக் கொள்வதில் விருப்பம் இல்லை. அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத்தான் இந்த நாடகம்.” வசந்திக்கு அளவு கடந்த துக்கம் ஏற்பட்டது.
“எதற்காக இந்த அழுகை?” கோபமாக கேட்டான் சுரேஷ்.
“எதற்காகவா? என்னைக் கண்டால் உங்களுக்கு பிடிக்காமல் போனதற்கு. நான் இன்னும் சாகாமல் இருப்பதற்கு. சொல்லுங்க. இன்று ஏதோ ஒன்றை முடிவு செய்யுங்கள். நான் வேண்டுமா இல்லை அவள் வேண்டுமா? இரண்டில் ஒன்றை சொல்லுங்கள். இனி மேலும் என்னால் இந்த நரகத்தை தாங்கிக் கொள்ள முடியாது.”
“வசந்தீ பிளீஸ்! நீலிமாவுடன் உறவை முறித்துக் கொள்வது என்னால் முடியாத காரியம். உன்னிடம் எனக்கு வெறுப்பு இல்லை. ஆனால் நீலிமா என்றால் அன்பு …. காதல்.”
“என்னிடம் உங்களுக்கு வெறுப்பு இல்லை. ஆனால் விருப்பம் கூட இல்லை. அப்படித்தானே. அதை ஒப்புக்கொள்ளுங்கள் முதலில். அவளிடம்தான் உங்களுக்கு காதல். அவளிடமே போங்கள். அவள் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள். போய் விடுங்கள்.” ஹிஸ்டீரியா வந்தது போல் கத்தினாள் வசந்தி.
“வசந்தீ! சும்மா இரு.” சுரேஷ் எழுந்து வந்து வசந்தி¨யின் கையைப் பற்றிக் கொண்டான்.
வசந்தி கையை உதறித் தள்ளினாள். “சீ … என்னை தொடாதீங்க. அந்த தேவடியாளுடன் இருந்து விட்டு என்னிடம் வர வேண்டாம். வெட்கம் மானம் எதுவும் இல்லை அவளுக்கு. கல்யாணம் ஆனவனுக்கு வைப்பாட்டியாக இருக்கிறாள். எச்சில் சாப்பாட்டுக்கு ஆசைப் பட்டாள். அந்த தேவடியாளுடன் உறவை முறித்தக் கொண்டு வந்தால்தான் நான் இந்த வீட்டில் இருப்பேன். இல்லையா செத்துப் போகிறேன். இல்லையா எங்கேயாவது போய் விடுகிறேன்.”
ஹிஸ்டீரிக்காக அழுதுக் கொண்டே வெளியில் போவதற்காக வசந்தி போராடிக் கொண்டிருந்தாள். சுரேஷ் அவளை வலுக்கட்டாயமாக கட்டில் மீது தள்ளிவிட்டான். வசந்தி வாய்க்கு வந்த படி நீலி¨மாவை வசை பாடிக் கொண்டிருந்தாள். சுரேஷ் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து அவள் வாயை மூட வைத்தான். அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் இயலாமையுடன் நின்றுவிட்டான்.

***************************************************************************************
மறுநாள் மாலை வரையில் அப்படியே படுத்துக் கொண்டிருந்தாள் வசந்தி. பச்சை தண்ணீரை கூட குடிக்கவில்லை. மாலையில் அண்ணண், அண்ணி வந்ததைப் பார்த்த பிறகும் அவளுக்கு எழுந்து கொள்ளணும் என்று தோன்றவில்லை. லக்ஷ்மி வலுக்கட்டயாயமாக எழுப்பி முகத்தை அலம்பச் செய்து காபி குடிக்க வைத்தாள். தலையை வாரிவிட்டுக் கொண்டே மெதுவாக இதோபதேசம் செய்தாள்.
“வசந்தீ! இப்படி பைத்தியமாக இருக்கிறாயே? காலையில் சுரேஷ் வந்து எல்லாவற்றையும் சொன்னான். நீ இப்படி ரகளை செய்துக் கொண்டிருந்தால் விவாகரத்தைத் தவிர வேறு வழியில்லை என்றான். ஏன் இப்படி உன் கையாலேயே உன் குடித்தனத்தை நாசமாக்கிக் கொள்கிறாய்? நகத்தால் கிள்ளி எரிய வேண்டிய விஷயத்திற்கு யாராவது கோடாலியைப் பயன்படுத்துவாங்களா? நான்கு நாட்கள் கண்களை மூடிக் கொண்டு சும்மா இரு. சின்னவளுக்கு திருமணம் ஆக வேண்டாமா? அவனாக சொன்னதால்தான் விஷயம் உனக்குத் தெரிந்தது. இல்லாவிட்டால் எப்படி தெரியும்? அவன் தவறு செய்திருக்கிறான். அந்த தவறை திருத்திக் கொள்வதற்கு டைம் கொடுக்கணுமா இல்லையா? சொத்து முழுவதையும் அவளுக்கு தாரைவார்த்தால் வருத்தப்படலாம். அதுதான் இல்லையே? உனக்கு எல்லா பொறுப்பும் முடிந்துவிட்டது. சின்னவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டால் இனி கவலைப்பட வேண்டியது இல்லை. இப்போ சண்டை போட்டு குடித்தனத்தை நடுத்தெருவுக்கு கொண்டு நிறுத்தப் போகிறாயா? உங்க அண்ணன் விஷயத்தை கண்ணால் பார்த்தாய் இல்லையா? பத்துமாதம் போவதற்குள் அவள் வேறு வழியைத் தேடிக் கொண்டு போய்விட்டாள். இவருக்கும் புத்தி திரும்பி வந்தது. என் மதிப்பு புரிந்தது. நீ சண்டை போடவும் வேண்டாம். சாப்பாடு, தண்ணி இல்லாமல் குன்றிப் போகவும் வேண்டாம். உனக்கு என்ன தலையெழுத்து? சுரேஷின் மனைவி நீ. இரண்டு குழந்தைகளின் தாய். தலையை நிமிர்த்திக் கொண்டு பெருமையுடன் வளையம் வா. ‘உன் மனைவி எங்கே? இந்த அம்மாள் யாரு?’ என்று நான்கு பேர் கேட்டால் சுரேஷ்தான் குன்றிப் போகணும். கல்யாணம் காட்சி ஒன்றும் இல்லாமல் அடுத்தவரின் சொத்துக்கு ஆசைப்பட்டவள் அவள். அவள்தான் தலையைக் குனிந்து கொள்ளணும். நீ மகாராணியைப் போல் இருக்கணும்.” ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, காதில் குடியிருக்காத குறையாக அறிவுரைகளை வழங்கினாள் லக்ஷ்மி.
தானே எல்லோருக்கும் சமையல் செய்தாள். வசந்தியைச் சாப்பிட வைத்து அவர்களும் சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் போன சற்று நேரத்திற்கெல்லாம் சுரேஷ் வந்தான். வசந்தி முகத்தைத் திருப்பிக் கொண்டு “மேஜை மீது எல்லாம் இருக்கு. பரிமாறிக் கொண்டு சாப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டு போய் படுத்துக் கொண்டாள்.
நாடகள் பாரமாக கழிந்துக் கொண்டிருந்தன. வசந்தி நாளுக்கு நாள் இளைத்து துரும்பாகிக் கொண்டிருந்தாள். சுரேஷ் நீலிமாவின் உறவு தன் கண் முன்னாலேயே பலப்படுவதைப் பார்த்துக் கொண்டு வேறுமே இருப்பது அவளுக்கு நரகத்தில் இருப்பது போல் இருந்தது. சுரேஷ் மறுபடியும் தனக்கு நெருக்கமாவான் என்ற ஆசை கற்பூறமாய் மறைந்துக் கொண்டிருந்தது.
அண்ணியின் அறிவுரையின் படி ஒரு மாதம் எதையும் பொருட்படுத்தாமல் இருந்ததும் வசந்திக்கு பைத்தியம் பிடித்தாற்போல் இருந்தது. சுரேஷ் பாட்டுக்கு தன்னுடைய வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான். வசந்தியிடம் அதிகம் பேச மாட்டான். காலையில் போய் விட்டு இரவு பத்து மணிக்கு வந்து கொண்டிருந்தான். அவனிடம் நேரடியாக பேசுவதை விட மனதிலேயே விதவிதமாக கேள்விகளைக் கேட்டு பதில் சொல்ல முடியாமல் அவன் தலை குனிந்து நிற்பது போல் ஊகித்துக் கொள்வது அவளுக்குப் பிடித்திருந்தது. கொஞ்சநாட்கள் கழித்து அதுவும் சலிப்பை ஏற்படுத்தியது.
அன்று மாலை வீட்டின் முன்னால் இருந்த செடிகளுக்கு முன்னால் போய் நின்றுக் கொண்டிருந்தாள் வசந்தி. மலரும் மொட்டுக்களுடன் ரோஜா செடி கண்கொள்ளாமல் காட்சி தந்தது. அந்த மொட்டுக்கள் எல்லாம் பூவாக மலரும். பூக்களை பறிப்போம். மறுபடியும் பூக்கள் மலரும். மறுபடியும் பறிப்போம். கொஞ்ச நாட்கள் கழித்து ரோஜா செடி காய்ந்து போய்விடும். ரோஜா செடி எதற்காக வளர்ந்தது? பூக்களை தந்து விட்டு செத்துப் போவதற்காகவா? அந்த செடியின் மூலமாக எத்தனை பேருக்கோ சந்தோஷம் ஏற்பட்டிருக்கும். உயிரோடு இருக்கும் வரையில் சந்தோஷத்தைக் கொடுத்து விட்டு மண்ணில் கலந்து விடும்.
தான் பிறந்த போது தாய் தந்தை சந்தோஷப்பட்டிருப்பார்களோ என்னவோ. ஆனால் நாளாக நாளாக தான் அவர்களுக்கு பாரமாகிவிட்டாள். சுரேஷின் கையில் தன்னைப் பிடித்துக் கொடுக்கும் வரையில் அவர்கள் கண்களில் ஏதோ சுமை! தன்னைப் பற்றிய கவலைதான் அவர்களுக்கு எப்போதும். சுரேஷ¤க்கும், குழந்தைகளுக்கு தன்னிம் பிரியம் இருக்கிறதா? எந்த மாதிரியான பிரியம்? தான் சுரேஷின் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டாள். அவனும் நல்லவனாக இருந்தான். குழந்தைகளை பாசத்தோடு வளர்த்தாள். அவர்களும் பாசத்தோடு இருந்தார்கள். எல்லாம் நல்லபடியாக நடப்பது போலிருந்தது. வாழ்க்கை தனக்கு புரிபட்டு விட்டாற்போல் இருந்தது. இப்போ சுரேஷ் செய்த காரியத்தினால் தன் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிட்டது. ஏன்? அப்படி ஏன் ஆக வேண்டும்? சுரேஷ¤ம், குழந்தைகளும் இல்லை என்றால் இந்த உலகமே தனக்கு இல்லாமல் போய் விடுமா?
உலகம் என்றால் தன்னைப் பொறுத்தவரையிலும் என்ன? தானும், தன்னைச் சுற்றியிருப்பவர்களும். இதற்கு மிஞ்சிய உலகம் வேறு என்ன இருக்க முடியும்? சுற்றிலும் இருப்பவர்கள் தன்னைப் பார்த்து இரக்கப் படுவார்கள். ஏதோ குறை இருந்திருக்கும், அதான் விட்டுவிட்டான் என்பார்கள். உள்ளூர சிரித்துக் கொள்வார்கள். தான் இப்படியே அழுமூஞ்சியாக இருந்தால் சலித்துக் கொள்வார்கள். எரிந்து விழுவார்கள். எதையும் பொருட்படுத்தாமல் இருந்தால் கணவன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலும் லட்சியமில்லை என்பார்கள். அப்படி லட்சியம் இல்லாததால்தான் கணவன் திசை மாறிப் போனான் என்பார்கள். தான் எப்படி இருக்கணும்? என்ன செய்யணும்? எது செய்தால் சரி, எது செய்தால் தவறு? தவறுக்கும் சரிக்கும் அப்பாற்பட்டது எதுவும் இல்லையா? எண்ணங்களில் ஆழ்ந்து போன வசந்தி கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்து கொண்டிருந்த ரோகிணியைக் கவனிக்கவில்லை.
“வசந்தீ!” என்று அழைத்த ரோகிணியை நம்பமுடியாவள் போல் பார்த்தாள் வசந்தி.
“எப்போ வந்தாய்?”
“காலையில். இங்கே சர்ஜன்ஸ் கான்·பரென்ஸ் நடக்கிறது. அதற்காக வந்தேன். இரண்டு நாட்கள் இருப்பேன். என்ன விஷயம்? வீட்டில் விளக்குக் கூட போடாமல் வெளியில் இருட்டில் நின்று கொண்டிருக்கிறாய்?” ரோகிணி சிரித்த முகத்துடன் குசலம் விசாரித்ததும் வசந்திக்கு ஏதோ பற்றுகோல் கிடைத்தாற்போல் தோன்றியது.
“ரோகிணீ! வா.. வா” என்று உள்ளே அழைத்துப் போனாள். மளமளவென்று குடிக்க தண்ணீர் கொண்டு வந்து தந்தாள்.
“சுரேஷ் இல்லையா?” என்று ரோகிணி கேட்ட கேள்விக்கு வசந்தியின் முகம் சுருங்கிவிட்டது.
“வருவார். தாமதமாகும்.” முணுமுணுப்பது போல் சொன்னாளள்.
“என்ன ரொம்ப இளைத்துவிட்டாயே? குழந்தைகளைப் பார்க்கவில்லையே என்ற ஏக்கமா?”
ரோகிணி கேட்ட போது பார்வையைத் தாழ்த்திக் கொண்டாளே ஒழிய பதில் சொல்லவில்லை.
ரோகிணி கொஞ்சம் நேரம் தன் குழந்தைகளைப் பற்றி, தன்னுடைய பிராக்டீஸைப் பற்றி, கான்·பரென்ஸ் பற்றி பேசினாள். வசந்தி ஆர்வம் காட்ட வில்லை என்று உணர்ந்ததும் பேச்சை நிறுத்திவிட்டாள். வசந்தி ரோகிணிக்கு இந்த விஷயத்தை எப்படி சொல்வது, சொன்னால் ரோகிணி எப்படி எடுத்துக் கொள்வாள், என்ன நினைப்பாள் என்ற யோசனையில் மூழ்கிவிட்டாள்.
கடைசியில் இரண்டு நிமிடங்கள் மௌனமாக இருந்த ரோகிணி இனியும் தாங்கிக் கொள்ள முடியாமல் “வசந்தீ! என்ன ஆகிவிட்டது உனக்கு?” என்று திரும்பத் திரும்ப கேட்டதும் வசந்தி இந்த உலகிற்கு வந்தாள்.
“எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ரோகிணீ! சுரேஷ் நீலிமா என்ற பெண்ணை காதலிக்கிறானாம். சமீபகாலமாய் அவளுடன்தான் இருக்கிறான்.” சொல்லும் போதே வசந்தியின் குரல் அடைத்துக் கொண்டுவிட்டது.
ரோகிணி பதற்றமடைந்தாள். “என்னதான் நடந்தது? எப்போ?” என்று வசந்தியின் அருகில் வந்தாள்.
தனக்காக கலவரப்பட்டுக் கொண்டிருந்த சிநேகிதியைப் பார்த்ததும் வசந்தியால் மேலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அழுது கொண்டே, ரோகிணி ஆறுதல்மொழிகளுக்கு கொஞ்சம் தேறிக் கொண்டு விவரங்களை எல்லாம் சொன்னாள்.
“என் வாழ்க்கையில் இப்படி ஏன் நடக்கணும்? நான் என்ன பாவம் செய்தேன்?” என்று அழுதுக் கொண்டிருந்த வசந்தியை இரக்கத்துடன் பார்த்தாள் ரோகிணி.
“இந்த நிலைமையிலிருந்து எப்படி வெளியேறணும் என்று யோசிக்கணுமே தவிர அழுதுக் கொண்டு உட்கார்ந்திருந்தால் எப்படி?”
“என் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ புரியவில்லை. நான் என்ன செய்தேன் என்று எனக்கு இந்த தண்டனை? என் குறை என்ன?”
“நீ ஒன்றும் செய்யவில்லை வசந்தீ. ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்து கொள்ளணும். இந்த காலத்தில் திருமணங்கள் நீடித்து நிலைப்பதில்லை. இதில் தவறு யாருடையது என்பதை ஒதுக்கிவிட்டு, திருமண பந்தத்தைப் பற்றி நம் எண்ணங்களை மாற்றிக் கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது. அதற்கு அவ்வளவு மதிப்பு தரவில்லை என்றால் நமக்கு இவ்வளவு வெதனை இருக்காது” என்றாள் ரோகிணி ஆழமாக யோசித்துக் கொண்டே.
“திருமணத்திற்கும், குடும்பத்திற்கும் மதிப்பு தரவில்லை என்றால் இனி வேறு எதற்கு மதிப்பு தருவது? சுரேஷ் இப்படி நடந்து கொள்வது தவறு இல்லையா?”
சுரேஷ் செய்தது தவறுதான் என்று ரோகிணி அவனை வசைபாடாதது வசந்தியை வருத்தியது.
“சுரேஷ் செய்தது தவறு என்று குற்றம் சாட்டுவதால் நமக்கு என்ன ஆகப் போகிறது? தன்னுடைய நிலைமையை அவன் நிலை நாட்டிக் கொள்வான். முந்தா நாள் வரையில் சுரேஷ் நல்லவனாகத்தானே இருந்தான். எந்த சூழ்நிலையில் வந்தாளோ தெரியாது, இன்னொரு பெண் அவனுடைய வாழ்க்கையில் வந்து விட்டாள். உடனே அவன் கெட்டவனாகி விடுவானா? அப்படியே அவன் கெட்டவனாக இருந்தால் அவனைப் பற்றி உனக்கு என்ன வருத்தம்? அவனுடைய செயல்களுக்குத் தகுந்த பலனை அவன் அனுபவிப்பான். உன்னிடமிருந்து விலகிப் போவதே அவனுக்குக் கிடைக்கும் தண்டனையாக இருக்கலாம். அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இந்த நிலைமையிலிருந்து எப்படி வெளியேறுவது? எப்படி சீர் படுத்துவது என்று யோசிப்பது நல்லது. சுரேஷிடம் நான் பேசிப் பார்க்கட்டுமா?
“என்னவென்று பேசுவாய்?”
“அவன் மனதில் என்ன நினைக்கிறானோ கேட்கிறேன்.”
“அவனிடம் கேட்டால் டைவோர்ஸ் தந்து விடுகிறேன் என்பான். சொத்தை என் பெயருக்கு மாற்றி விடுகிறேன் என்பான். எனக்கு டைவோர்ஸ் வேண்டாம். சொத்தும் வேண்டாம். சுரேஷ்தான் வேண்டும்.”
“சுரேஷிடம் உனக்கு இன்னும் அன்பு இருக்கிறதா? அவன் இன்னொரு பெண்ணைக் காதலிக்கிறான் என்று…”
ரோகிணியின் வார்த்தைகள் இன்னும் முடியவில்லை. வசந்தி இடையிலேயே நிறுத்திவிட்டாள்.
“காதல் காதல் என்று பைத்தியக்காரத்தனமாக பேசாதே. நான் சுரேஷை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அவன் என் போட்டோவைப் பார்த்து என்னை கல்லூரியில் வந்து நேரில் பார்த்து விருப்பப்பட்டு கல்யாணம் செய்து கொண்டான். நான் அவனுடைய போட்டோவை எப்போ பார்த்தேன் தெரியுமா? முகூர்த்தம் வைத்த பிறகு. மணமேடையில்தான் ஆளை பார்த்தேன். அவன் என்னுடைய கணவன். நான் அவனுடைய மனைவி. என் கழுத்தில் தாலியைக் கட்டியிருக்கிறான். அவனிடம் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவனுக்கு அனுகூலமாக நடந்து கொள்ளவில்லை என்றால், தீராத நோயுடன் படுத்துக் கொண்டிருந்தால் அவன் என்னை விட்டுவிட்டுப் போனாலும் ஒரு அர்த்தம் இருக்கும். எனக்கு என்ன குறை? நான் என்ன குறை வைத்துவிட்டேன் என்று இன்னொருத்தியிடம் போகணும்? எதற்காக டைவோர்ஸ் தருவதாக சொல்லணும்? இதெல்லாம் என்னவென்று நறுக்குன்னு கேட்டு அவனை வழிக்குக் கொண்டுவருபவர்களே இல்லையா?”
ஆவேசத்தில் வசந்தியின் முகத்தில் வியர்வை அரும்பியது. ரோகிணி வசந்தியின் கையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.
“ஆவேசத்தை விட்டுவிட்டு யோசித்துப் பாரு. இது சரியில்லை என்று சுரேஷிடம் சொல்வது ஒரு பிரச்னை இல்லை. நம்முடைய வார்த்தைகளை அவன் லட்சியப்படுத்துவானா? ஒருக்கால் வலுக்கட்டாயமாக அவனைத் தடுத்து நிறுத்தினாலும் அவனுக்கு உன்னிடம் காதல்….”
“மறுபடியும் காதல் என்கிறாயே? அந்த காதல் எனக்கு வேண்டாம். எனக்கு கணவன் வேண்டும். வீட்டில் ஒவ்வொரு விஷயத்திற்கும் என்னைச் சார்ந்திருக்கும் கணவன், என்னைப் பாதுகாக்கும் கணவன், என்னை போஷிக்கும் கணவன், மாலையில் வீட்டுக்கு வரும் கணவன், எனக்காகவும், என் குழந்தைகளுக்காகவும் வாழும் கணவன் வேண்டும் எனக்கு. காதல் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. நான் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளவில்லை. கணவனுக்காக, அவனுக்கு பெற்றுத் தரும் குழந்தைகளுக்காக நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு கணவன் வேண்டும். குழந்தைகள் வேண்டும். குடும்பமும் வேண்டும். ஆனால் சுரேஷ¤க்கு நான் தேவையில்லை. லாவண்யாவுக்கு சொத்தை தவிர அம்மா வேண்டியதில்லை. சவிதா எதையும் பொருட்படுத்த மாட்டாள். இப்போ நான் என்ன செய்யட்டும்? எனக்கு ஏன் இந்த நிலைமை?”
வசந்தியை எப்படி சமாதானப்படுத்துவது என்று ரோகிணிக்குத் தெரியவில்லை.
“அழாதே வசந்தீ! ப்ளீஸ்!” என்று சொல்வதை தவிர அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
அன்று இரவு சுரேஷ் வீட்டுக்கு வராததால் ரோகிணிக்கு நிலைமை கொஞ்சம் தீவிரமாகவே இருப்பது போல் தோன்றியது.
காலையில் எழுந்து கொண்டதும் காபி, டிபன் தயாரிப்பதில் வசந்திக்கு கூடமாட ஒத்தாசை செய்துவிட்டு, வசந்தியுடன் சேர்ந்து டிபனை சாப்பிட்டு விட்டு கான்·பரென்ஸ¤க்கு கிளம்பினாள் ரோகிணி.
“மாலையில் சீக்கிரம் வந்து விடுகிறேன். நீ தயாராக இரு. இருவரும் சேர்ந்து கொஞ்ச நேரம் வெளியில் போவோம்” என்று சொல்லிவிட்டுப் போனாள் ரோகிணி.
சர்ஜென்ஸ் கான்·பரென்ஸில் காலையில் நடக்கும் கூட்டம் முடிந்தது. லஞ்சுக்காக எல்லோருடனும் சேர்ந்து டைனிங் ஹாலுக்குப் போன போது யாரோ “நீலிமா!” என்று அழைத்ததைக் கேட்டு அந்தப் பக்கம் திரும்பினாள் ரோகிணி.
“நீலிமா!” இந்த முறை குரலை உயர்த்தி அழைத்தார்கள். “யாரு? ஓ… நீயா?” என்ற படி நீலிமாவும் அந்த நபரிடம் சென்றாள்.
‘இவளிடம் பேசிப் பார்த்தால்?’ என்ற எண்ணம் வந்தது ரோகிணிக்கு. ‘என்னவென்று பேசுவது? நீங்க சுரேஷை விட்டுவிடுங்கள். வசந்தி ரொம்ப வேதனையில் இருக்கிறாள்’ என்று சொல்வதா?
அவள் என்ன பதில் சொல்லக் கூடும்? உங்களுக்கு அனாவசியம் என்றால்? சுரேஷ்தான் என்னை விட்டுப் போக மாட்டேங்கிறான். முடிந்தால் நீங்களே அவனை அழைத்துக் கொண்டு போங்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டால்?
நீலிமாவிடமிருந்து சுரேஷை இழுத்து வந்து வசந்தியின் குடித்தனத்தை நிலை நாட்ட முடியுமா? கட்டாயத்தின் பேரில் சேர்ந்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்குமா?
சுரேஷ் ஏன் வசந்தியிடமிருந்து பிரிந்து போனான்?
நீலிமாவுக்கு ஏன் நெருக்கமானான்?
இவ்வளவு பெரிய ரிஸ்கை எதற்காக எடுத்துக் கொண்டான்?
இதை எல்லாம் ஆழ்ந்து யோசிக்காமல் சினிமாவில் வருவது போல் நீலிமாவை தியாகம் செய்யச் சொல்வதில் அர்த்தம் என்ன இருக்கு?
முதலில் சுரேஷிடம் பேச வேண்டும். அப்பொது பிரச்னை என்னவென்று புரிய வாய்ப்பு இருக்கிறது.
இந்த விதமாக யோசித்ததால் ரோகிணி நீலிமாவை தொலைவிலிருந்து கவனித்தாளே தவிர அருகில் செல்லும் முயற்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் மாலையில் நீலிமாவுக்காக வந்த சுரேஷ் தனக்குப் பக்கத்திலேயே ஸ்கூட்டரை நிறுத்தியதால் சுரேஷிடம் குசலம் விசாரிக்க வேண்டியதாயிற்று.
சுரேஷ் ரோகிணியிடம் பேசிக் கொண்டிருந்த போதே நீலிமா அங்கே வந்தாள்.
“டாக்டர் நீலிமா. இவள் ரோகிணி, வசந்தியின் சிநேகிதி. திருச்சியில் பிராக்டீஸ் செய்கிறாள்.” ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்து வைத்தான்.
நீலிமா நட்புடன் முறுவலித்துவிட்டு “வாங்க. காபி சாப்பிடுவோம்” என்றபடி கேண்டினை நோக்கி நடந்தாள்.
சுரேஷ¤ம் ரோகிணியும் அவளுக்குப் பின்னாலேயே நடந்து கொண்டிருந்தார்கள்.
“வீட்டுக்கு போனீங்களா?” சுரேஷ் கேட்டான்.
“இரவு அங்கேதான் தங்கினேன்” என்றாள் ரோகிணி.
“நேற்றிரவு சுரேஷ் என்னிடம் தங்கிவிட்டான்” என்றாள் நீலிமா இடையில் புகுந்து.
ரோகிணிக்கு சங்கடமாக இருந்தது. முவரும் உட்கார்ந்து கொண்டார்கள். காபி வந்ததும் குடிக்கத் தொடங்கினார்கள்.
நீலிமா ரோகிணியின் ஆஸ்பத்திரியைப் பற்றியும், பிராக்டீஸ் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தாள். ரோகிணி ஏதோ பேசியாக வேண்டும் என்பது போல் பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ரோகிணி சொன்னாள். “வசந்தியும், நானும் நெருங்கிய சிநேகிதிகள். கல்யாணம் முடிந்து வசந்தி வெளியூருக்குப் போகும் வரையில் தினமும் ஒரு தடவையாவது சந்தித்துக் கொள்ளவில்லை என்றால் எங்களுக்கு என்னவோ போல் இருக்கும். திருமணமானதும் வசந்தி எங்கள் எல்லோரையும் மறந்துவிட்டு குடும்பத்தில் மூழ்கிவிட்டாள்.” தான் ஏன் இப்படி பேசுகிறோம் என்ற சந்தேகம் வந்ததும் திடீரென்று நிறுத்திவிட்டாள் ரோகிணி.
“என்னுடன் பேச வேண்டும் என்று நினைக்கிறீங்களா? எங்க வீட்டுக்குப் போகலாமா?” முறுவல் மாறாமலேயே கேட்டாள் நீலிமா.
“வேண்டாம். உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டியது எதுவும் இல்லை. பேசி ஏதாவது தீர்வு காண்பதாக இருந்தால், பேசாமலேயே நீங்கள் இருவரும் அந்தக் காரியத்தை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வசந்திக்கு அதிகம் துன்பம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதைவிட என்னால் வேறு என்ன சொல்ல முடியும்?” என்றாள் ரோகிணி.
மூவரும் அவரவர்களின் யோசனையில் மூழ்கியபடி ரொம்ப நேரம் மௌனமாக இருந்தார்கள்.
ரோகிணி முன்னால் எழுந்துக் கொண்டாள். “நான் கிளம்புகிறேன்” என்றாள். அவள் பின்னாலேயே சுரேஷ¤ம், நீலிமாவும் நடந்தார்கள்.
“வசந்தீ! நி கொஞ்ச நாட்களுக்கு என்னுடன் திருச்சிக்கு வாயேன்” சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள் ரோகிணி.
“இப்பொழுதா? இந்த சூழ்நிலையில் சுரேஷை விட்டுவிட்டா?”
“வசந்தீ! சுரேஷ் நீலிமாவுடன் இருந்தால் உன்னால் வேதனைப் படாமல் இருக்க முடியுமா?”
வசந்தி பதில் சொல்லவில்லை.
“சுரேஷ் நீலிமாவுடன் இருந்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று நீ பலமாக நினைத்தால் அதற்கு தயாராக இருக்கணும். அப்படி இல்லாமல் சுரேஷ் நீலிமாவுடன் உறவு வைத்திருப்பதில் உனக்கு ஆட்சேபணை இருந்தால் அந்த விஷயத்தை சுரேஷிடம் பேசி ஏதோ ஒரு முடிவை எடுத்துக் கொள்ளணும். இப்படி அழுது ஆர்பாட்டம் செய்து, சாப்பாட்டையும் தூக்கத்தையும் விட்டு விட்டு உன்னை நீயே துன்புறுத்திக் கொள்வது நல்லது இல்லை. நீ இப்படி இளைத்து துரும்பாவதை என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. எந்த முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாலும் மனம் அமைதியாக இருப்பது முக்கியம். இப்படி தினமும் சுரேஷ¤க்காக எதிர்பார்த்துக் கொண்டு, அவன் வந்ததும் சண்டை போட்டுக் கொண்டு ..இது உன் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது இல்லை. கொஞ்ச நாட்கள் என்னுடன் வந்து இரு. கொஞ்சம் தைரியம் வரும். ஏதோ ஒரு முடிவை எடுத்துக் கொள்.”
ரோகிணி நயமான குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் போது வசந்தி பற்றற்ற மனதுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். “ஏதோ ஒரு முடிவை நான் எடுக்கணுமா? நீலிமாவுடன் சேர்ந்து இருப்பதோ இல்லை சுரேஷை விட்டுப் பிரிவதோ ஏதோ ஒன்றை நான் முடிவு செய்யணுமா? எதற்காக? இந்த நீலிமா யாரு? தனக்கு இந்த நிலைமை வருவானேன்? இவர்கள் எல்லோரும் ஏன் இப்படி பேசுகிறார்கள்?
“நீலிமா யாரு என்பதை இப்போதைக்கு விட்டு விடு. ஒரு மனிதனுக்கு மற்றொரு நபருடன் இருக்கும் உறவு அவனுடைய விருப்பத்திற்கு உட்பட்ட விஷயம். அந்த உறவை எப்படி வேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்குத்தானே இருக்கும்? நீ என்னுடன் இருக்கும் நட்பை துண்டித்து விட வேண்டும் என்று முடிவு செய்தால் அது உன் விருப்பம். நான் எவ்வளவு வேண்டிக் கொண்டாலும் உன் மனதை மாற்ற முடியாது. உன்னுடைய நட்பு இல்லாமல் வாழ கற்றுக் கொள்வேன். என் சுயகௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வேன். உன்னுடைய நட்பு இல்லாவிட்டால் செத்துப் போய் விட மாட்டேன் இல்லையா?”
“ரோகிணி! நீ சொல்வதற்கு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? நட்பும் கணவன் மனைவி உறவும் ஒன்றுதானா? நட்பை இழப்பதும், திருமண பந்தத்தை இழப்பதும் ஒன்றுதானா?”
“அது நீ கொடுக்கும் மதிப்பீடுகளை பொறுத்து இருக்கும் வசந்தீ! நானாக இருந்தால் இரண்டையும் ஒன்றாக எடைபோடுவேன். பெரியவர்களின் விருப்பங்களுடன், லௌகீகத்துடன் முடிச்சு போடப்பட்ட திருமணங்களை விட ரசனைகள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் தெரிந்த பிறகு நாளாக நாளாக வளரும் நட்புதான் மதிப்பு வாய்ந்தது என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட நட்பை இழக்கும் போதுதான் வேதனை அதிகமாக இருக்குமோ என்னவோ. ஆரம்பத்திலிருந்தே நீ திருமண பந்தத்திற்கு அதிக மதிப்பு தந்தாய். அது மட்டும் இருந்தால் போதும். மற்ற எதுவும் தேவையில்லை என்று நினைத்தாய். இப்போ அந்த பந்தம் நிலைக்கப் போவதில்லை என்று தெரிந்த பிறகு துடிதுடிக்கிறாய்.” வெளிறிப் போய்விட்ட வசந்தியின் முகத்தைப் பார்த்து ரோகிணி நிறுத்தினாள்.
“எனக்கு சுரேஷ் மீது எந்த உரிமையும் இல்லையா?” தன்னை தானே நம்ப முடியாதவள் போல் வசந்தியின் குரல் ஒலித்தது.
“இல்லாமல் என்ன? தாராளமாய் இருக்கு. அவன் மீது கேஸ் போட்டு அவனை உன்னுடன் குடித்தனம் செய்யச் சொல்லி கோர்டாருக்கு வேண்டுகோள் விடுத்து அவர்கள் ஆணையிட்டால் வேறு வழியில்லாமல் திரும்பி வந்த சுரேஷை என் கணவன் என்று கொண்டாடும் உரிமை இருக்கு. அவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமை இருக்கு. ஆனால் இவை எதுவும் என் கண்ணோட்டத்தில் நீ செய்யக் கூடிய காரியங்கள் இல்லை. அவன் மனதில் உன் பால் பிரியம் இல்லாத போது அவன் மீது உரிமை கொண்டாடி நீ எதை சாதிக்கப் போகிறாய்? அசலானதை உன்னால் பெற முடியாது இல்லையா?”
வசந்தி பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். மனம் முழுவதும் மரத்துப் போனாற்போல் இருந்தது. காதல்! காதல்! காதல்!
காதல் என்ற வார்த்தையையே அழித்து விட வேண்டும் என்ற அளவுக்கு ஆவேசம் வந்தது.

தொடரும் …..

தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation

author

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்

Similar Posts