தரிசனம்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

சு. சிவக்குமார்


– சிறுகதை
காதலைப் பத்தி இந்த மண்ணாங்கட்டிகளுக்கு என்ன தெரியும். மாட்ட அடிக்கிற மாதிரி எல்லாவனும் சேந்து இப்படி அடிக்கிறானுங்களே. எல்லாத்துக்கும் காரணம் இந்த அப்பன்காரன் தான். மனுஷனா அவன். பெல்டை எடுத்து விளாசிட்டானே. முன்னப்பின்ன காதல் பண்ணியிருந்தா தெரிஞ்சிருக்கும் இந்த மரமண்டைகளுக்கு. அந்த ஆளு தான், ‘+2 முடிச்சு வீட்ல சும்மா உட்காராத, டைப் ரைட்டிங் கிளாஸ் போ’ அப்படின்னு விரட்டினாரு.

போன முதல் நாளே பார்த்தேன் அந்த அற்புதத்தை. என் மிஷினுக்கு நேர் மேலே ஜன்னல். அந்த ஜன்னல் வழியாக எதிர்வீட்டு ஜன்னல். அதன் வழியாக அந்த அற்புத தரிசனம். தரிசனத்துக்கு சொந்தக்காரி கீதா. இரண்டாம் நாள் தரிசனத்தில் கொஞ்சம் புன்னகை இழைந்தது. அதற்கடுத்த இரண்டு வாரங்களும் தரிசன வாரங்களாகிப் போனது. asdf (space) ;lkj இதுக்கு மேல் தாண்டவே முடியவில்லை.

மூன்றாவது வாரத்தில் கிளாஸூக்கு வரும் வழியில் அந்தக் குறுகலான சந்தில் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தாள். மனது ‘படபட’ வென அடிக்க ஆரம்பித்தது. எதாகிலும் பேசலாமான்னு நினைச்சேன். என்னுடன் நினைப்பாக மட்டும் நின்று போனதை அவளால் ஜெயிக்க முடிந்தது. உன் பெயர் என்ன? என்றாள். சொன்னேன். ‘ஏன் அப்படிப் பார்க்கிற’ ன்னு கேட்டா. ‘பார்க்கக் கூடாதா’ ன்னேன். ‘இன்னைக்கு காளியம்மன் கோவிலுக்கு சாயந்திரம் வருவேன்’ னு சொல்லிட்டு, மாயமா மறைஞ்சுட்டா. ஆமா, அவள் வார்த்தைகளை மட்டுமே நான் பார்த்துக்கிட்டு நின்று கொண்டிருக்கும் போது, சூன்யத்தில் நழுவி விட்டிருந்தாள். (கொஞ்சம் ஓவராகத்தான் பேசுறேனோ. இதுக்கு தான் கண்ட இலக்கிய புக் எல்லாம் படிக்கக் கூடாதுன்னு சொல்றது) அவள் விலகிச் சென்ற மாயமே புரியவில்லை. சத்தியமா. அப்புறம் அன்னைக்கு கிளாஸைப் பத்தி கேக்கவே வேண்டாம்.
asdf ;lkj
asdf ;lkj
qwef polk
ASD ‘;LK
AWDF PLKJ

மாடு வாங்கி மேய்ச்சு பால் வியாபாரம் பண்ணலாம். நல்ல பிஸினஸ். அப்படின்னு ட்யூட்டர் சொன்னாரு.

திருவிழா, செவ்வாய், வெள்ளி தவிர்த்து கோவில் பெரும்பாலும் வெறுமையாகத்தான் இருக்கும். வேப்ப மரத்தடியில உட்கார்ந்திருந்தேன். தரிசனம், தரிசனத்திற்காக உள்ளே சென்றது. வெளியே வருவதற்கு இரண்டு வாரமாவது ஆகியிருக்கும். நேராக என்னை நோக்கி தான் வந்தாள். இதயம் வெடித்து விட்டதா. இல்லை. ‘உட்காரு’ என்றேன். ஒரு புன்னகையைத் தந்தபடி எனக்கு எதிராக அமர்ந்தாள். ஏதேதோ பேசினோம். அதையெல்லாம் நான் எதுக்கு உங்ககிட்ட சொல்லனும். ம்கூம். சொல்லமாட்டேன். அது ரகசியம்.

அதற்குப் பின் ஜன்னல் தரிசனத்துடன் கோவில் உரையாடல்களுமாக நாட்கள் உவப்பாக நகர ஆரம்பித்தது.

‘நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா’, அவள் தான் கேட்டாள்.
‘பண்ணிக்கலாமே, ஆனா ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணிக்கலாம். அதுக்குள்ள நானும் ஒரு நல்ல வேலையில் இருப்பேன். ஆனால் நீ வேற ஜாதி, நான் வேற ஜாதி,உங்க வீட்டில ஒத்துக்கிடுவாங்களா?’ என்றேன்.
‘எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். நீ கூட பாத்திருப்பியே, அவன் சொன்னா வீட்டில கேப்பாங்க’ என்றாள்.
‘அப்படியா’ என்றேன்.
அதற்கடுத்த சில ராத்திரிகளில் கனவில் அவளுடன், அவள் அண்ணனும் சேர்ந்து வரலானான். அவனை எப்படி சமாளிப்பது என்று தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.
அடுத்த நாள் வழியில் அவனை சந்தித்தேன்.
‘ஹலோ பாஸ், ஒரு நிமிஷம்’ என்று அழைத்தேன்.
‘யாரு, என்ன’ என்று உளறினான்.
என்னை விடப் பெரிய பயந்தாங்கொள்ளியாக இருந்தான். நான் அவன் தங்கையைக் காதலிப்பதையும், ஜாதிப் பிரச்சனைகளையும் சொன்னேன். அவன் முகம் இருண்டது. அங்கு நிலவிய கனத்த மவுனத்தில் இரண்டு பேருமே கலங்கிப் போயிருந்தோம். அடுத்து என்னுடைய அஸ்திரத்தை எடுத்தேன்.
‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறா. நான் எங்க வீட்டில பேசி அவளை உங்களுக்கு கல்யாணம் முடிச்சு வைக்கிறேன். எப்படியாவது இந்த பிரச்சனை தீர்ந்தால் சரி’ என்றேன்.
அவன் கொஞ்சம் யோசிப்பது மாதிரி இருந்தது.
‘உங்க வீட்ல ஒத்துக்கிடுவாங்களா’ என்றான்.
‘அதப் பத்தி நீங்க கவலைப் படவேண்டாம், நான் பார்த்துக்கிறேன்’ சொல்லி விடைபெற்றேன். மனம் நிறைந்திருந்தது. எப்படிப்பட்ட அஸ்திரம். பய ஆடிப்போய்ட்டான்ல.
ஆனால் மனதில் நிறைந்த மகிழ்ச்சி, ஒரு நாளைக்கு கூட நீடிக்கவில்லை. இதுக்கு மேலே நடந்ததை சொல்லமாட்டேன். எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. புரிஞ்சுக்கோங்க. என்னடா இவன் கிளைமாக்ஸ்ல கொண்டு வந்து கதையை நிப்பாட்டுறானேன்னு நினைக்கிறீங்களா? சரி மிச்சத்தையும் சொல்லிடுறேன். ஆனா விலாவரியா சொல்ல மாட்டேன்.
அந்தக் குறுகல் சந்துக்குள்ள வச்சு கீதா வோட சொந்தக்காரங்க ஆறு பேர் கிட்ட அடியும், மிதியும் வாங்கினேன். எதோ ஒரு நாய், இந்த விஷயத்தை எங்க வீட்லயும் வந்து சொல்லிடுச்சு. வசவு, பெல்ட் அடி, இப்போ தான் முடிஞ்சது.
உடம்பெல்லாம் வலி. மொட்டை மாடியில படுத்திருக்கேன், நட்சத்திரங்களைப் பார்த்தபடி. வானத்தில் ஜன்னல் திறக்கிறது. அதற்குள்ளே தரிசனம். அடுத்த அஸ்திரத்தைத் தயார் செய்தபடி, தரிசனத்தில் மூழ்குகின்றேன்.


sdotsiva@yahoo.com

Series Navigation

author

சு. சிவக்குமார்

சு. சிவக்குமார்

Similar Posts