மாதங்கி
பதி, மனைவி கவிதாவைப் பார்த்தான். “பார்த்து, பார்த்து, மிக பத்திரமாகக் கொடு, நானே உன் பக்கத்தில் வருகிறேன்; பாவம் பச்சை உடம்புக்காரி நீ,” என்றவாறு அவளருகில் தன் வயிற்றை உந்தியவாறே தத்தித்தத்திப் போனான்.
கவி வெகு ஜாக்கிரதையாக அந்தப் பொருளை அலுங்காமல் நலுங்காமல் அவன் அடிவயிற்றுக்குக் கீழும் அவன் காலுக்கு மேலுமாய் பூப்போல இடம் மாற்றினாள்.
“அப்பாடா” கவி தன் கடமையைச் சரியாகச் செய்த திருப்தியுடன் பதியைப் பார்த்தாள். பதி, கவி கொடுத்தப் பொருளை நன்றாக கவனித்தான். அது ஒரு திடகாத்திரமான பேரரசு பெங்குவினின் முட்டை. கீழ்ப்பகுதி உருண்டையாகவும் மேல் பகுதி கூம்பு போலவும் இருந்தது.
“கவி பார் நம் குழந்தையின் மாளிகையை; 15 செ.மீ. நீளமும் 12 சி.மீ குறுக்களவும் இருக்கிறது, எடை நிச்சயம் ஒரு பவுண்ட் இருக்கும்; உறுதியாக இருக்கு பார்”.
பதியின் அடிவயிற்றின் கீழ்ப்பகுதியில் ஒரு மடிப்பு போல் இருந்தது. அதற்குக் கீழே அவன் கால் பாதங்கள். இரண்டுக்கும் இடையில் பத்திரப்படுத்தினான். கவி வைத்த கண் வாங்காமல் அவன் சரியாக வைத்துக்கொள்கிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள்; அவனுக்கு இது முதல் அனுபவம் ஆயிற்றே.
பதி ஆரோக்கியமானவன். 1.1 மீட்டர் உயரம் நாற்பது கிலோ எடை; தலைப்பகுதியும் சிறகுகளும் நல்ல கறுப்பு. மூக்கு நல்ல ஊதா கலந்த இளஞ்சிவப்பு. கழுத்துக்கு இரு புறமும் நல்ல ஆரஞ்சு நிறத்தில் வட்டமான பட்டைகள் தகதகக்கும். பனி நிறத்தில் நெஞ்சும் வயிறும். பளபளக்கும் வளப்பமான மேனி. பேரரசு பரம்பரையில் வந்தவர்களுக்கே உரிய கம்பீரத்துடன் அவளும் இருந்தாள்.
“கவி, கவிம்மா, என்ன எதோ பலத்த யோசனையில் இருக்கியா?”
“இல்லை உங்களை முதன்முதலில் மார்ச் மாதம் சந்திச்சதை நெனச்சுக்கிட்டேன். . இதோ மேமாதம் பேரரசர் பதி இந்த அண்டார்டிக் கடற்கரையில் காலில் ஒரு முட்டையுடன் நிற்கிறாரே என்று பார்த்தேன்”.
“கரை என்றால் இங்கு என்ன- அதுவும் ஐஸ்கட்டிதானே?” “பேரரசன் ஆனாலும் நான் ஒரு பொறுப்பான தந்தைதான் கண்ணு; பச்சை உடம்புக்காரி நீ, பட்டினி இருக்கக்கூடாது; முதலில் நீ சாப்பிடணும்; நல்லா ஓய்வெடுக்கணும். நான் நம்ம குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன். நீ கவலைப் படாமல் போய்வா”
பிரியத்துடன் பிரியாவிடை கொடுக்க, அவனையும் தன் குழந்தையின் மாளிகையையும் பார்த்துக்கொண்டே, ஐஸ் தரையையில் நடந்து, அவள் சில்லிடும் கடலை நோக்கிப் போனாள். “வா மகளே வா, உன் பசியை நான் போக்குகிறேன்; பசியாற வாம்மா” என்று கடல் அன்னை அவளை அன்புடன் அழைப்பது போல் தோன்றியது. அவள் சிறகுகள் உறுதியான துடுப்பு போல் இருந்தன. அவளுக்குப் மிகவும் பிடித்த உணவுகள் நிறைந்த கடல் அது. சில்லிட்ட தண்ணீரைப் பொருட்படுத்தாது கடலில் பாய்ந்தாள்.
பதிக்கு தந்தையானது பரவசமூட்டுவதாய் இருந்தது. அடிவயிற்றின் கதகதப்பான மடிப்பில் முட்டை இருந்தது. இனி அவன் மிகவும் பதவிசாக நடந்து கொள்ளவேண்டும். கொஞ்சம் அசிரத்தையாக இருந்துவிட்டால், அவ்வளவுதான், அவர்களது திருமணப் பரிசு உருண்டோடி விழுந்துவிடும்; பின்னர் அதை அடையாளம் கண்டு எடுத்துக்கொள்ளக் கூட அவனுக்குத் தெரியாது.
பரிசு தானாக திறக்க கிட்டத்தட்ட 65 நாட்களாகும். அதுவரை என்ன செய்வது ஒரே இடத்தில் நின்று கொள்ள வேண்டியதுதான். சாப்பாடாவது ஒன்றாவது; இந்த ஐந்து வருடங்களாக ஆசை தீர உண்ணவில்லையா. கவி வரும் வரை இந்தப் பொக்கிஷத்தைப் பத்திரமாகக் காக்கவேண்டும். மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டான். சரி எப்படி பொழுதைப் போக்குவது. மிகத் தேவையான சூழல் வராதவரை, இருக்கும் சக்தியை கொஞ்சம் கூட வீணாக்கக் கூடாது. அப்படியே நின்று கொண்டு ஆடாமல் அசையாமல் இருக்கவேண்டியதுதான்.
“குளிர்காலத்திலா பிரசவத்தை வைத்துக்கொள்ளவேண்டும், வேனிற்காலம் இந்த அண்டார்டிங் பிரதேசத்தில் சுகமாக இருக்குமே” என்று கவியை அவன் முன்பொருமுறை கேட்டான்.
“சரிதான்; குளிர்காலத்தில் பிறந்தால்தான், சரியாக ஐந்து மாதம் கழித்து, நம் குழந்தை சுதந்திரமாக நடைபயிலும் போது, வேனிற்காலம் அவளுக்கு மிக உகந்ததாக இருக்கும் -என்று பதில் கூறியிருந்தாள். கவி கெட்டிக்காரிதான். பெண்தான் என்று தீர்மானமாகச் சொல்கிறாள். பாவம் அவள் இந்த இரண்டு மாதங்கள் கஷ்டப்பட்டு சுமந்திருக்கிறாள். நல்ல கொழுமையான ஸ்விக்டும் மீனும் ஆக்லோபஸ¤ம் அவளுக்குக் கிடைக்கட்டும். அவளது தற்காலிகப் பசிக்கு நீந்தும்போதே கிடைக்கும் மீன்கள் கிடைக்கட்டும். அப்போதுதான் அவளால் தெம்புடன் ஆழ்கடலுக்குள் போக இயலும். கண்ணை மூடிக்கொண்டான் அவன். குறைந்தது 50 மைல் தூரமாவது கவி பிரயாணித்திருப்பாள். .
கடுங்குளிரைத் தாங்கிக்கொண்டு அவன் ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டேயிருந்தான். மோனமே சக்தி தரும். முட்டை கீழே விழுந்தால் அதை அவன் உணர்ந்துகொள்ளக்கூடிய ஓரிரு நிமிட இடைவெளிக்குள் உறைந்து விடும்.
இடையிடையே தூக்கத்தில் ஆழ்ந்து போனான். சிறந்த ஆழ்கடல் நீந்தும் தம்பதிகள் பரிசாக பனிக்கோப்பை பதிக்கும் கவிக்கும் கொடுக்கப்பட்டது. அவர்களை வாழ்த்திய நடுவரை கொல்லும் திமிங்கிலம் விழுங்கியது; கவியும் பதியும் ஒரு ஹெலிகாப்டர் தனியாக இருந்ததைப் பார்த்தார்கள்; உள்ளே முழுக்க பலவித மீன்கள். வெளியே வந்ததும் பதியை கடல் சிங்கம் துரத்தியது; அவன் அடிவயிறு மடிப்பிலிருந்த பாப்பா நழுவி விழுந்து முட்டையாகிவிட்டது ; ஐஸ்தரையில் ஒரு பேரரசி முட்டையை எடுத்துக்கொண்டாள். பதி திடுக்கிட்டு விழித்தான். எல்லாம் கனவு. நல்ல வேளை; பாப்பா மாளிகையுள் பத்திரமாக இருந்தது.
திடீரென்று பேய்க்காற்று வீசியது; கடும் பனிப்புயல் அடிக்கத் துவங்கியது. ஒற்றுமையே வலிமை. அங்கங்கு ஐஸ்கட்டிகளின் மேல் அவனைப் போல் இருந்த பல ஆண்கள் அனிச்சையாக அருகருகில் ஒண்டிக்கொண்டனர். பெரிய வட்டத்தில் கூட்டமாக நின்றுகொண்டனர். வலுவான தன் கால் நகங்களால் ஐஸ்கட்டித் தரையை பதி கெட்டியாகப் பற்றிக்கொண்டான். நெருக்கமாய் நான்கடுக்கில் கட்டப்பட்டிருந்த அவன் இறக்கைகள் எப்பேற்பட்ட பனிப்புயலையும் தாங்கும் சக்தியை அவன் உடலுக்குத் தந்தன.
கொஞ்சம் கொஞ்சமாய் நிற்குமிடத்தை மாற்றிக்கொள்ளும் குழுமனப்பான்மை எல்லோருக்கும் இருந்தது. ஆம்; வட்டத்தின் வெளிபகுதியில் நெடுநேரம் ஒரு சிலரே நிற்பதில்லை; மத்தியில் உள்ள கதகதப்பில் நிற்க அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புக் கிட்டியது. மிக மிக கவனமாக தத்தம் முட்டையுடன் இடம்மாறிக்கொண்டனர். மைனஸ் 60 டிகிரி வெப்பமுடைய சூழலில் முட்டையை 31 டிகிரி C வெப்பத்தில் அடை காப்பது வாழ்க்கையில் ஒரு சவால் என்று நினைத்துக்கொண்டான்.அவர்கள் அனைவருக்கும் பட்டினியாய் வாரக்கணக்கில் கிடப்பது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. முட்டையை கதகதப்பில் பத்திரமாய் வைத்து அவரவர் மனைவியர் வரும்போது நல்லமுறையில் ஒப்படைக்கவேண்டும் என்ற பொறுப்புணர்வே மிகுந்திருந்தது. தொடர் பட்டினியுடன் ஐஸ்கட்டி மேல் நின்றுகொண்டே இருப்பதால் அவன் எடை பாதியாகக் குறைந்திருந்தது. எப்போதாவது வாயை ஈரப்படுத்திக்கொள்ள மிகக் குறைந்த அளவு பனியை அவன் ஓரிரு முறை உட்கொண்டிருந்தான் அவ்வளவே. கவி உரிய நேரத்தில் வந்துவிடுவாள் என்று பதி நம்பினான். அவள் தாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவே என்றாலும் சோமுவின் மனைவி ரதி போல் திரும்பி வரவில்லையென்றால் அவனும் சோமுபோல் பட்டினியில் இறக்க வேண்டியதுதான்- இது அவன் நண்பன் விந்தன் அவனுக்கு விடுத்த எச்சரிக்கை மற்றும் அறிவுரை.
முட்டையை தன் ஆசை மகனோ மகளோ தங்கள் இளம் அலகால் குத்தி உடைத்து வெளிவரும் நேரத்தில் சரியாக கவி வந்து விட்டால் நன்றாக இருக்கும். அவள் வந்துவிட்டால், பதி என்று பாசத்துடன் குரல் கொடுப்பாள். சுற்றியுள்ள நூற்றுக்கணக்காக ஆடவரில் என்னை அவள் எவ்வளவு எளிதாய் என் குரல் மூலம் அடையாளம் காண்கிறாள். பாவம் அவளும் தேவையான சக்தியை திரட்டிக்கொள்ள வேண்டாமா.
பனிப்புயல் சற்று குறைந்தாற்போலிருந்தது. அவன் தன் தவத்தைக் கலைக்க விரும்பவில்லை. ஏதோ பிப் என்ற மிக மெலிதான ஓசை கேட்டாற்போலிருந்தது. குனிந்து பார்த்தான். வியப்படைந்தான். “அட குட்டி மாளிகையை உடைக்கத் துவங்கிவிட்டதா; உன்னால் முடியும் கண்ணு; உனக்கு வலிமை இருக்கு; கடவுளே கவி இன்னும் வரக்காணோமே; சரி குட்டி முழுமையாக தன் வீட்டை உடைத்துவர இரண்டு மூன்று நாட்களாகலாம். அதற்குள் அவள் வந்துவிடுவாள். பாப்பா பசியோடு இருக்குமே, என்ன செய்வது ”
கவிவருவதற்குமுன் அவள் தந்த பரிசு முந்திக்கொண்டுவிட்டது. நல்ல வித்தியாசமான பட்டைகளுடனும் வெளிர் சாம்பல் நிற உடலில், பாப்பா ப்பியு ப்பியு என்று அவன் அடிவயிற்றுமடிப்பிலிருந்து குரல் கொடுத்தது.
“அட என் பட்டுகுட்டி, இப்போ நீ அப்பா மடியடியிலேயே இருக்கியாம். சமத்துக்கட்டியோட அம்மா சீக்கிரம் வருவாள். பாப்பாக்கு தொப்பை பசிக்கிறதா, கொஞ்சம் இரு கண்ணு; ”
அவன் தன் தொண்டைக் குழாயிருந்து வெள்ளையான ஒரு திரவத்தை வரவழைத்தான்.
அப்படியே கீழே குஞ்சின் வாயை நோக்கி குனிந்து தொடுகையில் குஞ்சு அனிச்சையாக அதை உள்வாங்கிக்கொண்டது. குஞ்சு வாயில் ஊட்டினான். கவி இன்னும் வரவில்லை. அவன் எடை உபவாசத்தால் பாதியாகிவிட்டிருந்தது என்றாலும் மிக மிக கவனமாக தான் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்தான். பாப்பா ஆர்வம் காரணமாய் பனித்தரையில் விழுந்துவிடக்கூடாது. அதன் இறக்கைகள் தண்ணீர்புகாத் தன்மை இன்னும் அடையவில்லை.
“பொறுமையாக இருக்கண்ணு; இது ஒண்ணுதான் சாப்பாடுன்னு நினைக்காதே, அம்மா வந்தால் செழிப்பான எண்ணெய், பாதி செரிக்கப்பட்ட மீன் எல்லாம் ஊட்டுவாள். அப்பா அங்கிங்கு போகமுடியாமல் இருக்கிறேன் இல்லையா; இல்லாவிட்டால் உனக்கு மீன் குட்டிகளை பதமாக்கி ஊட்டமாட்டேனா”.
பாப்பா “ப்பியு, ப்ப்யு ” என்றது.
“அம்மாவுக்கு ஒன்றும் ஆயிருக்காது; முன்பொருமுறை வானில் பறந்த ஹெலிகாப்டர் சத்தம் அவளுக்கு பயமாக இருந்ததாம். பிறகு அதுவும் பழகிவிட்டதாம். அம்மா ரொம்ப தைரியசாலி கண்ணு; 700 அடி ஆழத்தில் தொடர்ந்து பல நிமிடங்கள் அனாயாசமாய் போய் வருவாள். நீயும் பெரிசானா நிறைய சாகசம் பண்ணலாம். இப்போ சமத்தா அப்பாவின் அடிவயிற்று மடிப்புக்கடியில் இருப்பியாம்”.
“என்ன பதி; உன் மனைவி இன்னும் வரவில்லையா? சில நண்பர்கள் விசாரித்தார்கள். பதி தன் உடலில் தங்கியிருந்த பெரும்பான்மையான சேமிக்கப்பட்ட கொழுப்பை இழந்திருந்தாலும், மன உறுதியோடு இருந்தான்.
‘க்ரக் க்ரக்’ ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அவன் பார்வையைவிட செவிப்புலன் இன்னும் கூர்மையானது. இல்லை; இது கவி இல்லை; வேறு ஒருத்தி அட விந்தனின் மனைவி ரதி; இதோ விந்தனைக் கூப்பிடுகிறாள். அவனும் ‘ராணி இங்கே வா; இதோ இருக்கிறேன் பாரு’ என்று கூவுகிறான். பத்துவினாடிகளில் விந்தனிடமிருந்து முட்டையை ஏந்திக்கொண்டு அடைகாத்து ஓரிரு நாட்களில் பொரித்து விடுவாள். இன்னும் பலருக்கு அவரவர் மனைவியர் வந்துவிட்டனர்.
“கண்மணி இன்னும் கொஞ்சம் வெள்ளைத் தண்ணீர் குடிக்கிறாயா” கீழே அடிவயிற்றில் குனிந்து பார்த்தான்.
“ப்யுக், ப்யுக் ” பாப்பா கொஞ்சியது.
“இன்னும் கொஞ்சம் பொறுமை கண்ணு; அம்மா நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்திகிட்டு வந்தாதானே பாப்பாவை கவனிக்க முடியும்? அதுவரை சமத்தா இருப்பியாம் “.
மீண்டும் ஒரு முறை பாப்பா அடிவயிற்றின் மடிப்புக்கும் கால்களுக்கும் இடையில் சரியானபடி இறுத்திக்கொண்டான். சமநிலையை சமாளிக்க சற்று அசைய வேண்டியுள்ளது. மிக கவனமாக இருக்க வேண்டுமே.
“பதி, பதி எங்கே இருக்கிறீர்கள்;” அருகில் ஒரே சலசலப்பு; இருந்தாலும் கவியின் குரல் அவனுக்குக் கேட்டது.
“கவி! கவி! இங்கே வா அப்படியே நேராக வந்துகொண்டே இரு; நான் இங்கே இருக்கிறேன். கவி, கவிக்கண்ணம்மா” குரல் கொடுத்தான். குரலைவைத்துத்தான் கவி அந்தப் பெரிய கூட்டத்தில் அவனை அடையாளம் கண்டுகொள்ள இயலும். கவி அவனை உடனே கண்டுபிடித்துக்கொண்டு வந்துவிட்டாள்.
கவி உற்சாகமாக இருந்தாள். ஆரோக்கியமாகக் காணப்பட்டாள். “பதி நீ பாதியாக இளைத்துவிட்டாய். நம் குஞ்சு பாப்பாவைக் கொடு; நான் முதலில் பாப்பாவை வாங்கிக்கொண்டு எனக்கு நேர்ந்த ஒரு புதிய அனுபவத்தைக் கூறுகிறேன்”.
கவி சற்று எதிர்பாராத விதமாய் பாப்பாவைத் தர பதி சம்மதிக்கவில்லை!
“பதி உனக்கென்ன பைத்தியமா! நீ சாப்பிட்டு எத்தனை மாதங்களாகின்றன தெரியுமா? “; பாப்பாவை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ போய் முதலில் சாப்பிட்டு வா”.
“கவி, கவீஈஈஈஈ! ப்ளீஸ்! இன்னும் கொஞ்ச நாள் நானே வைத்துக்கொள்கிறேனே”.
“பதி, தயவு பண்ணி தாமதிக்காதே அப்புறம் உனக்கு நீந்தி இரை தேடக்கூட சக்தியிருக்காது. சொன்னால் கேளு; போய் ஒரு இரண்டு வாரம் நன்றாய் ஆழ்கடலுக்குள் போய் சாப்பிட்டுவிட்டு வா. பிறகு பாப்பாவை உன்னிடம் விட்டுவிட்டு நான் போய் வருகிறேன். வீண்பிடிவாதம் பிடிக்காதே; நாம் இருவரும் மாறி மாறி போய் சாப்பிட்டுவந்தால்தான் பாப்பாவை நன்கு கவனிக்க முடியும்?”.
பதிக்கு இஷ்டமே இல்லை; பாப்பாவின் ப்யுக் ப்யுக் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது; கவி சொல்வது போல் இன்னும் தாமதித்தால் பின் நிரந்தரமாக பாப்பாவைப் பார்க்க முடியாமல் போய்விடும். ஒருவாறு அரை மனதுடன் பதி பாப்பாவை லாவகமாய் அதன் அன்னையிடம் விட அதை பக்குவமாய் கவி ஏற்றுக்கொண்டு கொஞ்சத் துவங்கினாள். தன் வயிற்றிலிருந்து பாதி செரித்த உணவை வரவழைத்து ஊட்டினாள்.
‘ப்யுக், ப்யுக்’ பாப்பா குதூகலித்தது.
பதி தயங்கி நின்றான்.
“இன்னும் என்ன பதி; இங்கேயே பார்த்துக்கொண்டு, சாப்பிடப்போன்னு எத்தனை முறை சொல்லுவது?”
“கவி ஏதோ சுவாரசியமான செய்தின்னு சொன்னியே; அது என்னம்மா – அதையாவது கேட்டுவிட்டு நான் போகலாமா?”
“ஓ அதுவா? சாரி பதி, பாப்பாவை பார்த்த சந்தோஷமும் நீ சாப்பிடப் போகவேண்டும் என்ற கரிசனத்திலும் மறந்தே போனேன். ஹெலிகாப்டருக்கு நான் பழகிவிட்டேன்; பயமில்லை என்றேனல்லவா. ஒரு நாள் இரண்டு மனிதர்கள் எனக்கு மீனெல்லாம் கொடுத்து ஆசை காட்டி அழைத்துப் போனார்கள்”.
“ஹெலிகாப்டரின் உள்ளேயா?”
“சீச்சீ, இங்கிருந்து அறுபது மைல் தொலைவிருக்கலாம்; ஐஸ்தரையில்தான்; ஹெலிகாப்டர் பக்கத்தில் இருந்தது.பிறகு இருவரும் பேசிக்கொண்டு என் உயரம் எடை பற்றிய குறிப்புக்கள் எழுதிக் கொண்டு என்னை திருப்பி விட்டுவிட்டார்கள். நீ பத்திரமாய் போய்ட்டுவா பதி,” என்றாள் கவி.
பாப்பா ‘ப்யுக் ப்யுக்’ என்றது.
பேரரசுப் பெங்குவின்களின் வாழ்க்கை முறையை அண்ட்டார்ட்டிகாவிலேயே தங்கி கூர்ந்து கவனித்துவந்த ஆராய்ச்சியாளர் வடிவழகன் தான் எழுதிய சிறுகதையைப் படித்துப்பார்த்தார். பல்கலைக்கழகத்திற்கு மின்மடலில் ஆய்வேட்டை அனுப்பியாகிவிட்டது, ஊருக்குப் போனதும் முதலில் மகன் நித்தியன் வீட்டிற்குப் போகவேண்டும்; இரவு கண்விழித்துக் கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்வது யார் என்பது பெரிய பிரச்சனையாகி மனைவியை அவன் விவாகரத்து செய்வதாக வந்த தகவலைப் பற்றி பேசுவதற்காகவாவது.
mathangihere@gmail.com
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5
- வீடு
- அஷ்டாவதானம்
- நாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை ? (கட்டுரை: 23)
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் !
- தாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி !
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்
- அவன்
- கோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்
- தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி
- பாகிஸ்தான் பாரதி
- ஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- ‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி
- முகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு
- விரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008
- குழந்தை
- தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு
- அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்
- மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்
- தமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று
- “நாம்” அறிமுகம் “சிங்கப்பூரில்”
- “ஏர்வாடியில் கண்டெடுத்த ஏட்டுச்சுவடிகள்”
- ஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்
- கழுதை வண்டிச் சிறுவன்
- நடை
- ஜனவரி இருபது
- மன்னியுங்கள் தோழர்களே…
- கடவுள் தொகை
- தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்!
- பின்னை தலித்தியம்
- நினைவுகளின் தடத்தில் – (7)
- கவிதைகள்
- என் வீடு
- கர்நாடகம் தமிழகம்
- அடுக்குமாடி காலணிகள்
- கடவுள் வந்தார்
- ஆறு கவிதைகள்
- காட்டாற்றங்கரை – 1