தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
சென்னைக்கு வந்த இரண்டாவது நாள் முதல் லாவண்யாவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் வசந்தி. லாவண்யா வந்தால் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வசந்திக்குக் கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தியது. சவிதாவிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதில் பிரயோஜனம் இல்லை. சவிதாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் “அப்பாவுக்கு டைவோர்ஸ் கொடுத்துவிடு. ஏதாவது வேலையைத் தேடிக் கொண்டு வாழக்கையை நடத்து” என்று சொல்லுவாள் என்று வசந்தி பலமாக நம்பினாள்.
இந்த வீட்டுடன் தனக்கு இருக்கும் பிணைப்பை பற்றி அவளுக்கு என்ன தெரியும்? அவள் வெறும் துடுக்கு. ஒரு நாள் அவளுடைய புத்தகங்களை, துணிமணிகளை எடுத்து வைத்ததற்கு சலித்துக் கொண்டாள். “என் விஷயத்தில் தலையிடுவானேன்? என் பொருட்களை நான் எடுத்து வைத்துக் கொள்ள மாட்டேனா? அக்காவுக்கு ஊட்டிவிட்டு எதற்கும் லாயக்கு இல்லாதவளாக செய்தது போறாதா? வேறு வேலை இல்லை என்றால் எங்கள் உயிரை எடுப்பானேன்? பி.ஏ. வரையில் படித்திருக்கிறாய் இல்லையா. ஏதாவது வேலையைப் பார்க்கக் கூடாதா? உனக்கும் கொஞ்சம் பொழுது போகும். நாங்களும் நிம்மதியாக இருப்போம்” என்று பாய்ந்தாள்.
“உங்கள் எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து செய்வதுதான் என்னுடைய வேலை” என்றாள் வசந்தி.
“இது போன்ற பழங்கதைகளை சொல்லாதே. எனக்கு எரிச்சல்தான் வருகிறது. உன்னுடையது வெறும் சுயநலம்” என்றாள் சவிதா.
“சுயநலமா? உங்களுக்கும், அப்பாவுக்கும் எல்லாம் எடுத்து வைப்பது, பார்த்துப் பார்த்து செய்வது என்னுடைய சுயநலமா?” என்று வசந்தி கோபத்தில் வாதம் புரிந்தாள்.
“ஆமாம். வடிகட்டின சுயநலம்! நாங்கள் எல்லோரும் உன்னைச் சார்ந்து இருப்பது உனக்கு சந்தோஷம். ஒவ்வொரு விஷயத்திற்கும் அம்மா! அம்மா! என்று உன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கணும் என்பது உன்னுடைய எண்ணம். அப்பாவையும் அப்படித்தான் உருவாக்கியிருக்கிறாய். அப்பாவுக்கு சட்டைக்கு பொத்தான் தைத்துக் கொள்ள தெரியாது. பேனாவையும், மூக்குக்கண்ணாடியையும் தினமும் யாராவது தேடி தரணும். அப்பாவை கையாலாகாதவனாக ஆக்கிவிட்டாய். நான் மட்டும் அப்படி இருக்க மாட்டேன்” என்று சண்டை போட்டாள்.
இதையெல்லாம் சுரேஷிடம் சொல்லி சிரித்துக் கொண்டாள் அன்று. உண்மையிலேயே அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று உறவினர்கள், சிநேகிதிகள் யாருடைய வீட்டுக்கும் போக மாட்டாள். கல்யாணம் போன்ற முக்கியமான விழாக்களுக்கு முகூர்த்த நேரத்திற்கு மட்டும் போய் வருவாள். ரோகிணியின் கல்யாணத்தின் போது சவிதா பிறந்து மூன்று வருடங்களாகியிருந்தன. சவிதாவை அழைத்துக் கொண்டு போயிருக்கலாம். ஆனால் சுரேஷ¤க்கு ஜலதோஷம் என்றும், லாவண்யாவுக்கு பரீட்சைகள் நடக்கிறது என்றும் போகவில்லை. கல்யாணம் முடிந்த பிறகு ரோகிணி கணவனுடன் வந்து விட்டுப் போனாள். அதையெல்லாம் அவர்களுக்காக தான் சந்தோஷமாக விட்டுக் கொடுத்தாள். ஆனால் அது தியாகம் இல்லை சுயநலம் என்று பழிக்கிறாள் சவிதா.
அவளிடம் போனால் இந்த பிரச்னை மேலும் சிக்கலாகிவிடுமே தவிர சுரேஷ் தனக்குக் கிடைக்கமாட்டான். தான் இந்த வீட்டில் சுரேஷ¤டன் பழையபடி வாழவேண்டும். அதற்காக ஏதாவது செய்யணும் என்றால் லாவண்யா ஒருத்தியால்தான் முடியும். வசந்தி லாவண்யாவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். சுரேஷ் வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தான். எதுவும் நடக்காதது போலவே நடந்துகொள்கிறான். இரவு நேரங்களில் மட்டும் ரொம்ப தாமதமாக வீடு திரும்புகிறான். ஒரு நாள் அசல் வரவே இல்லை.
தன்னிடம் சொல்லிவிட்ட பிறகு அவனுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய பிடுங்கல் இல்லாமல் ரொம்ப நிம்மதியாகிவிட்டது போலும். தன்னை ஏமாற்றுவது பிடிக்காமல் அந்த உண்மையைத் தெரிவித்துவிட்டதாக சொன்னானே தவிர, தன்னுடைய சுகத்திற்காகத்தான் சொல்லியிருப்பான் என்று தோன்றியது. இப்பொழுது எவ்வளவு தாமதமாக வந்தாலும், வராமலே இருந்துவிட்டாலும் தான் புரிந்துகொள்ள வேண்டும். தப்பித்தவறி கேட்டு விட்டாலோ உடனே சொல்லிவிடுவான் நீலிமாவிடம் போயிருந்ததாக. தன்னால் என்ன செய்ய முடியும்?
அன்று இரவு இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்த சுரேஷைப் பார்த்து வசந்திக்கு பொறுமை நசிந்து போய்விட்டது.
“அந்த நீலிமாவின் வீடு எங்கே இருக்கு?”
“ஆஸ்பத்திரி குவார்ட்டர்ஸில்”
“இத்தனை நேரம் நீங்க அங்கே தங்கி விட்டால் நான் மட்டும் தனியாக எப்படி இருப்பேன்னு நினைத்தீங்க?”
“உனக்கு பழக்கம்தானே. நைட் ட்யூடி இருக்கும் போது தனியாகத்தானே இருப்பது வழக்கம்.”
“எப்பொழுதாவது இருப்பது வேறு. தினமும் தனியாக இருக்கணும் என்றால்?”
“நான் வந்து விட்டால் அங்கே நீலிமா தனியாகி விடுவாள். இருந்தாலும் உனக்காகத்தான் நான் இங்கே வருகிறேன்.”
சுரேஷின் பேச்சைக் கேட்ட போது வசந்திக்கு கண்மண் தெரியாத அளவுக்கு கோபம் வந்துவிட்டது.
“எனக்காக நீங்க இங்கே வந்துதான் ஆகவேண்டும். நான் உங்கள் மனைவி என்றும், நீலிமா என்ற நபர் இருக்கிறாள் என்று உங்களுக்குத் தெரிவதற்கு முன்பே, இருபது வருடங்களுக்கு முன்பே நான் உங்களுடைய மனைவியாகிவிட்டேன் என்றும் அவளுக்குத் தெரியாதா? அவள் தனியாக இருக்க முடியாமல் போவதற்கும் எனக்கும் சம்பந்தம் என்ன? என் கணவன் என் வீட்டுக்கு தாமதமாக வந்தால் கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இல்லையா? நீலிமா தனியாக இருப்பாளே என்று நான் எதற்காக யோசிக்கணும்? உங்களுக்காக நான் வீட்டில் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பேன் என்று அவள் ஏன் யோசிக்கக் கூடாது?”
“நீலிமா யோசிக்காமல் என்ன? அவள் உனக்காக ரொம்ப வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாள்.”
“நீலிமா எனக்காக வருத்தப்படுகிறாளாமா? ஏன் வருத்தப்படணும்? எனக்கும், தனக்கும் கூட வருத்தம் இல்லாதவிதமாக செய்வது அவளுக்கு கஷ்டம் ஒன்றும் இல்லையே?”
“அது கஷ்டமாக இல்லாமல் இருந்தால் எப்பொழுதோ செய்திருப்பாள். நீலிமா என்னிடம் உயிரையே வைத்திருக்கிறாள். நாங்கள் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொள்கிறோம்.”
“தாராளமாக காதலித்துக் கொள்ளுங்கள். நான் செத்துப் போகிறேன். கல்யாணமும் செய்து கொண்டு சந்தோஷமாக இருங்கள்.”
ஹிஸ்டீரிக்காக அழுது கொண்டிருந்த மனைவியைப் பிடித்துக் கொண்டு “வசந்தீ! அழாதே ப்ளீஸ். சும்மாயிரு” என்று சொல்லிக் கொண்டிருந்த சுரேஷை கோபமாக பார்த்தாள்.
கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் தீனமாக பார்த்துக் கொண்டிருந்த சுரேஷைப் பார்த்ததும் வசந்தியின் கோபம் தணிந்துவிட்டது. “நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கள்? சாகக் கூடாது. அழவும் கூடாது. வருத்தப்படக் கூடாது. இதென்ன காரியம் என்று உங்களைக் கேட்கவும் கூடாது. என்னை என்ன செய்யச் சொல்றீங்க?”
“நான் செய்தது தவறுதான் வசந்தீ! நீலிமாவை விட்டு விலகியிருந்திருக்கணும். ஆனால் முடியவில்லை. உன்னிடம் எனக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் நீலிமாவிடம் அன்பு. என்ன செய்வதென்று தெரியவில்லை. உங்க இருவருக்கும் நியாயம் நடப்பது போல் ஏதாவது வழி இருந்தால் தேவலை. உன்னை வருத்தம் ஏற்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை.”
“உங்களுடைய இரக்கம் எனக்குத் தேவையில்லை.”
“இரக்கம் இல்லை துக்கம்! நீ வேதனைப் படுவதைப் பார்க்கும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கோ உனக்குத் தெரியாது. ஆனால் நீலிமா விஷயம் கூட நான்தான் பார்க்கணும். உன் மீது இருப்பது பொறுப்பு என்றால் அவள் மீது இருப்பது அன்பு. என்ன செய்வது என்றுதான் புரியவில்லை.” தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டான் சுரேஷ்.
இந்த வருத்தமெல்லாம் உண்மைதானா? இல்லை வெறும் நடிப்பா? நீலிமாவிடமும் இப்படித்தான் பேசியிருக்கக் கூடும். நீலிமாவிடமிருந்து எப்படி மீட்பது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது என்னிடமிருந்து எப்படி மீட்பது நீலிமா யோசித்துக் கொண்டிருப்பாளாய் இருக்கும். கடைசியில் எந்த விதத்தில் போய் முடியப் போகிறது? நான் என்ன செய்ய வேண்டும்? நான் வேண்டுமோ அவள் வேண்டுமோ முடிவு சேய்யுங்கள் என்று சுரேஷிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக தன்னால் கேட்டுவிட முடியுமா? இத்தனை வருடங்களாக சுரேஷின் விருப்பம்தான் தன்னுடைய விருப்பம். அவனுடைய முன்னேற்றம்தான் தன்னுயை முன்னேற்றம். அவன் சந்தோஷம்தான் தன்னுடைய சந்தோஷம். எப்போதும் அவனுக்கு உறுதுணையாக இருப்பதைத் தவிர எதிர்த்து நின்று போராட தனக்குத் தெரியாது. அதற்கான தெம்பு தன்னிடம் இல்லை. அப்படிப் போராடுவது நல்லதா கெட்டதா என்றுகூடத் தெரியாது. யாராவது தனக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால் தேவலை, எதை செய்யலாமோ எதை செய்யக் கூடாதோ?
லாவண்யா! சீக்கிரம் வாயேன். வசந்தியின் நினைப்பு முழுவதும் லாவண்¨யா மீதுதான்.
மறுநாள் ஆஸ்பத்திரியின் குவார்ட்டர்ஸ¤க்குப் போகாமல் அவளால் இருக்க முடியவில்லை. நீலிமாவைப் பார்த்தாக வேண்டும் என்ற தவிப்பு அவளை ஒரு இடத்தில் நிற்க விடவில்லை. சுரேஷை ஈர்க்கும் அளவுக்கு அவளிடம் என்ன இருக்கிறது? அதன் சிறப்பு என்ன? அந்த குவார்ட்டர்ஸில் வசந்திக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குப் போய் நீலிமாவின் குடியிருப்பை கண்டுபிடித்து விடலாம் என்றுதான் கிளம்பினாள். ஆனால் அந்த காலனி கேட் அருகிலேயே சுரேஷின் ஸ்கூட்டரில், பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு போய்க் கொண்டிருந்த நீலிமா கண்ணில் பட்டுவிட்டாள். ஒரு நிமிடம் நீலிமாவை தலை முதல் கால் வரையில் எடை போடுவது போல் பார்த்தாள். “என்னை விட சின்னவள். என்னைவிட நிறம் மட்டுதான். ஆனால் அழகாக இருக்கிறாள்.” சோர்வாக இருந்தது வசந்திக்கு.
தன்னையும் அறியாமல் காலனிக்குள் நடந்தாள். காலையிலேயே இங்கு வந்து அவளுடன் ஆஸ்பத்திரிக்குப் போகிறான் போலும். திடீரென்று அவள் கால்கள் நின்றுவிட்டன. எதிரே தென்பட்ட வீட்டின் முன்னால் டாக்டர் நீலிமா என்ற பெயர்பலகையைப் பார்த்ததும் சுயநினைவு திரும்பியது போல் இருந்தது. வீடு பூட்டியிருக்கவில்லை. துணிச்சலை வரவழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டுக்குள் யாரும் இருக்கவில்லை. விசாலமாக இருந்த ஹாலுக்குள் திவானைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. வராணடாவில் நாற்காலிகள். உள் அறையில் சின்ன உணவுமேஜை ஒன்று இருந்தது. அதற்குப் பக்கத்து அறையில் கட்டிலும், ஆடைகள் மாட்டும் மரத்தினால் ஆன ஸ்டாண்டும் இருந்தன. சமையலறை மிகவும் சின்னது. பாத்திர பண்டங்கள் கூட அதிகமாக இல்லை. வீடு முழுவதும் விசாலமாக, தூய்மையாக காட்சியளித்தது.
“இதென்ன வீடு, சாமான் எதுவுமே இல்லாமல் மொட்டையாக இருக்கு?” என்று நினைத்துக் கொண்டே மறுபடியும் வராண்டாவுக்கு வந்தாள் வசந்தி.
அதற்குள் கேட்டைத் திறந்து கொண்டு “யாரு வேணும் அம்மா?” என்று கேட்டுக் கொண்டே வேலைக்காரச் சிறுமி போலும், உள்ளே வந்தாள். “டாக்டரம்மா இல்லை. ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க. குடிக்க தண்ணீர் வேண்டுமா?” என்று பணிவுடன் கேட்டாள்.
“வேண்டாம்” என்று சொல்லிவிட்டு வசந்தி அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.
மறுபடியும் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகுதான் அவளுக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
“என்ன வீடு அது? என்ன மனுஷி அவள்? அந்த வீட்டில் சுரேஷால் எப்படி இருக்க முடிகிறது?”
வசந்தி வீட்டை முழுவதுமாக கண்ணாலேயே பார்வையிட்டாள். வீடு முழுவதும் சாமான்கள் நிரம்பியிருந்தன. டிராயிங் ரூம் முழுவதும் ·பர்னிச்சர், டைனிங் ரூமுக்குத் தேவையான பெரிய உணவுமேஜை, ·பிரிஜ். சமையலறையில் பளபளவென்று மின்னும் பாத்திரங்கள், பீங்கான் கப்புகள், கண்ணாடி டம்ளர்கள், தட்டுக்கள் … எல்லாம் அந்தந்த இடத்தில் பாந்தமாக நேர்த்தியாக அடுக்கி வைக்கபட்டிருந்தன.
அவற்றுக்கு நடுவில் நின்று கொண்டிருந்த வசந்திக்கு தான் பாதுக்காப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் பலமாக தோன்றியது. அந்த ·பர்னிச்சர், சாமான்கள் தன்னைக் காப்பாற்றும் கேடயங்கள் போல் தோன்றின. ரொம்ப பாதுகாப்பான இடத்தில் நிம்மதியாக இருப்பது போல் உணர்ந்தாள். இந்த வீட்டுக்குப் பழக்கப் பட்ட சுரேஷ் எதுவுமே இல்லாத அந்த வீட்டில் எப்படி இருக்கிறானோ அவளுக்குப் புரியவில்லை. அந்த வீட்டில் சுவற்றில் ஒரு படம் கூட இல்லை. ஹால் முழுவதும் வெறிச்சோடிக் கொண்டு, உள்ளே எங்கேயோ கட்டில் மெத்தை. அதை நினைக்கும் போதே வசந்திக்கு பயமாக இருந்தது.
சுரேஷால் அங்கே இருக்க முடியாது. எங்கே திரும்பினாலும் குசலம் விசாரிக்கும் சாமான்களை எல்லாம் விட்டுவிட்டு அவனால் எப்படி இருக்க முடியும்? கட்டாயம் தன்னிடமே திரும்பி வருவான். இதெல்லாம் நான்கு நாள் கூத்துதான்.
வசந்திக்கு உள்ளிருந்து தைரியமும், தெம்பும் ஏற்பட்டன. வீட்டை ஒழுங்குப் படுத்த ஆரம்பித்தாள். சுரேஷின் உடைகள், புத்தகங்கள் எல்லாவற்றையும் நீட்டாக அடுக்கி வைத்தாள். எல்லாம் நேர்த்தியாக இருந்தால் சுரேஷால் ஒரு நாளும் இந்த வீட்டை விட்டு இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டே திருப்தியுடன் மூச்சை விட்டுக் கொண்டாள்.
சுரேஷ¤க்காக சூடாக வெங்காய பக்கோடா செய்தாள். இன்று சீக்கிரமாக வீட்டுக்கு வரச் சொல்லணும். நீலிமாவிடம் போவதற்கு முன்பே இங்கே வரவழைத்து விடணும். களைத்துப் போய் வரும் அவனுக்கு இங்கேதான் நிம்மதி கிடைக்கும்னு நிரூபித்துக் காட்டணும் என்று நினைத்துக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு ·போன் செய்தாள் வசநதி.
மறுமுனையில் சொல்லப்பட்ட பதிலை கேட்டு சிலையாய் நின்று விட்டாள்.
ஒரு வாரமாக சுரேஷ் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. லீவ் போட்டிருக்கிறான். இன்னும் மூன்று நாட்கள் லீவில்தான் இருக்கிறான்.
வசந்திக்கு திடீரென்று ஏதோ சந்தேகம் வந்து நீலிமா வேண்டும் என்று கேட்டாள். நீலிமாவும் அதே போல் விடுமுறையில் இருக்கிறாள். வசந்திக்கு ஒரேதிரியாய் உடலிலிருந்து சக்தி முழுவதும் வற்றிவிட்டாற் போலிருந்தது.
“இந்த ஒரு வாரமாக அவர்கள் இருவரும் பகல் முழுவதும் சேர்ந்துதான் இருக்கிறார்கள். பகல் மட்டுமென்ன? இரவுகளிலும் கூட. சுரேஷ் நள்ளிரவு தாண்டிய பிறகுதான் வீட்டுக்கு வருகிறான். அங்கே நீலிமா வீட்டில் பகலும் இரவும் சந்தோஷமாக இருக்கிறான்.”
சற்றுமுன் தனக்கு காவலாக இருப்பது போல் தோன்றிய பொருட்கள் எல்லாம் இப்பொழுது தன்னைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றிது வசந்திக்கு.
சுரேஷ¤க்கு அப்படி இருந்தால்தான் பிடிக்குமா? எதற்காக இத்தனை சாமான்கள் வீணாய் என்பான் வாடகை வீட்டில் இருக்கும் போது. சொந்த வீட்டுக்கு வந்த பிறகு நாளுக்கொரு ஒரு விதமாக வீட்டை எடுத்து வைத்தால் வேலை வெட்டி இல்லையா என்று சலித்துக் கொள்வான். ஆனால் தான் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை. இந்த ·பர்னிச்சர், சாமான்கள் இதெல்லாம் சுரேஷ¤க்குப் பிடிக்கவில்லையா?
சவிதாவுக்கு பிடிக்காது. “வீட்டில் சுதந்திரமாக நடமாடக் கூட முடியாதபடிக்கு சாமான்களை நிரப்பிவிட்டாய்” என்று சண்டை போடுவாள்.
வசந்திக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது.
“லாவண்யா! உங்க அம்மாவை இந்த பிர்சனையிலிருந்து எப்போ வந்து மீட்கப் போகிறாய்?”
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5
- வீடு
- அஷ்டாவதானம்
- நாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை ? (கட்டுரை: 23)
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் !
- தாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி !
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்
- அவன்
- கோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்
- தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி
- பாகிஸ்தான் பாரதி
- ஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- ‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி
- முகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு
- விரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008
- குழந்தை
- தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு
- அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்
- மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்
- தமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று
- “நாம்” அறிமுகம் “சிங்கப்பூரில்”
- “ஏர்வாடியில் கண்டெடுத்த ஏட்டுச்சுவடிகள்”
- ஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்
- கழுதை வண்டிச் சிறுவன்
- நடை
- ஜனவரி இருபது
- மன்னியுங்கள் தோழர்களே…
- கடவுள் தொகை
- தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்!
- பின்னை தலித்தியம்
- நினைவுகளின் தடத்தில் – (7)
- கவிதைகள்
- என் வீடு
- கர்நாடகம் தமிழகம்
- அடுக்குமாடி காலணிகள்
- கடவுள் வந்தார்
- ஆறு கவிதைகள்
- காட்டாற்றங்கரை – 1