தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
சொல்லாமல் கொள்ளாமல் வந்த தாயைப் பார்த்ததும் லாவண்யா சந்தோஷத்தில் திக்குமுக்காடினாள்.
“அம்மா! நெற்று இரவுதான் நினைத்தேன், அம்மா ஒரு தடவை வந்துவிட்டு போனால் நன்றாக இருக்குமே என்று. காலையில் நீயே வந்து விட்டாய்” என்று கட்டிக் கொண்டாள். வாடிப் போன முகத்தையும், சிவந்த கண்களையும் பார்த்தபோது பயணக் களைப்பு என்று நினைத்தாளே தவிர தாய்க்கு ஏதாவது கஷ்டம் வந்திருக்கக் கூடும் என்ற யோசனை கூட வரவில்லை லாவண்யாவுக்கு.
“அம்மா! நீ வந்தால் நன்றாக இருக்கும் என்று ஏன் நினைத்தேன் தெரியுமா?”
“எதுக்காகம்மா?” அன்பு ததும்பும் குரலில் கேட்டாள் வசந்தி.
“இரண்டு நாட்களில் எங்க மாமியார், நாத்தனார், குழந்தைகள் வருகிறார்கள். மாமியார் ஒரு பழைய பஞ்சாங்கம், மடிசஞ்சி. வீடு இப்படி இருந்தால் பிடிக்காது. இங்கே தூசியிருக்கு என்பாள். அங்கே குப்பை இருக்கு என்பாள். இந்த சாமான் இங்கே இருக்கக் கூடாது. அது அங்கே இருக்கக் கூடாது என்று ஒரே சத்தம் போடுவாள். நீ ஒரு தடவை வீட்டை ஓழுங்குப் படுத்தி வைத்தாய் என்றால் எனக்கு நிம்மதியாக இருக்கும். ஏதாவது பட்சணங்கள் நான்கைந்து விதமாக செய்து டப்பாவில் வைத்துவிட்டாயானால் இனி மதியம் டிபன் பிரச்னை கூட இருக்காது.. அவர்கள் இருக்கும் பத்து நாட்களும் நீயும் இருந்துதான் ஆகணும். போகவும் விட மாட்டேன்.” லாவண்யா தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.
“ஆகட்டும்மா!” என்று வசந்தி சொல்லிக்கொண்டிருந்த போதே பொல பொலவென்று அவள் கண்ணகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“என்ன நடந்தது அம்மா?” லாவண்யா கழுத்திலிருந்த கையை எடுத்துவிட்டு முன்னால் வந்து கேட்டாள்.
மகளைக் கட்டிக்கொண்டு விசும்பி விசும்பி அழுதாள் வசந்தி. லாவண்யா மிரண்டு போய்விட்டாள்.
“அம்மா! என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்?” என்று பதற்றமடைந்தாள்.
மகளிடம் அந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்று வசந்திக்குப் புரியவில்லை.
“உங்க அப்பா வெறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார்” என்று எப்படியோ வாயைத் திறந்து சொல்லிவிட்டு ஹோவென்று கதறினாள். லாவண்யா திகைத்தாள். ஓரு நிமிடம் குழப்பமாக இருந்தது. என்ன செய்வதென்று புரியாமல் அழுதுக் கொண்டிருந்த தாயைப் பார்த்துக் கொண்டே வெகு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். வசந்தி ஒவ்வொரு விஷயமாக சொல்லச் சொல்ல லாவண்யாவுக்கு தந்தையின் மீது கோபம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
“சீ! இந்த வயதில் அப்பாவுடைய புத்தி இப்படிப் போவானேன்? குழந்தைகள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் கூட வரவில்லையா? பாவம் அம்மா! இதையெல்லாம் எப்படி தாங்கிக் கொள்வாள்? இனி வாழ்நாள் முழுவதும் இப்படி அழுதுக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதானா? அம்மாடியோவ்! இன்னும் இரண்டு நாட்களில் மாமியார், நாத்தனார் எல்லோரும் வரும் போது அம்மா இது போல் அழுது கொண்டிருந்தால், அவர்கள் என்னவென்று கேட்டால் என்ன பதில் சொல்வது? இதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்தால் தன்னுடைய மதிப்பு என்ன ஆவது? மாமியார் இனி தன்னை லட்சியப்படுத்துவாளா? உங்க அப்பா அப்படி, உங்க அம்மா இப்படி என்று சொல்லிக் காட்ட மாட்டாளா?
லாவண்யாவின் இதயம் வேகமாக துடித்தது. தலையைப் பிடித்துக் கொண்டிருந்த மகளைப் பார்த்து வசந்தி “லாவண்யா! இந்த ஆபத்திலிருந்து நீ தான் என்னை மீட்கணும். உங்க அப்பாவிடம் நயமாகப் பேசுவாயோ சண்டைபோடுவாயோ, அவரை வழிக்குக் கொண்டுவரணும். இல்லையா நான் என்ன செய்யணுமோ, எப்படி வாழணுமோ வழிகாட்டணும். உங்க அம்மாவை நீதான் காப்பாற்றணும்” என்று அழுதாள் வசந்தி.
வெளியில் இருக்கும் வெயில் கூட உறைக்கவில்லை லாவண்¡வுக்கு. யோசனைகளால் அவள் மூளை சூடாகிவிட்டிருந்தது. இந்த விஷயத்தை மனோகரிடம் சொல்லணுமா வேண்டாமா? அமெரிக்காவுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் அக்காவுக்கு விடைகொடுக்கும் சந்தோஷத்தில் இருக்கிறான் அவன். சொன்னால் எரிச்சலடைவானோ? சொல்லவில்லை என்றால் ஏன் சொல்லவில்லை என்று கோபித்துக் கொள்வானோ? என்ன செய்வது? இந்த பிரச்னை ஏன்தான் வந்ததோ? கல்யாணம் ஆகி ஆறுமாதங்கள் கூட ஆகவில்லை, இவ்வளவு பெரிய பிரச்னை என் தலையில் வந்து விழணுமா?
இந்த அம்மாவும் ரொம்ப முட்டாளாக இருக்கிறாள். அப்பாவிடம் அன்பாக பேசி அவர் மனதை தன் பக்கம் திருப்பிக் கொள்வதை விட்டு விட்டு அவர் அந்த செய்தியைச் சொன்னதும் சண்டை போட்டுக் கொண்டு மகள் வீட்டுக்கு வந்து விடுவதா?
தாயின் மீது எரிச்சல், கோபம் இரண்டும் ஏற்பட்டன லாவண்யாவுக்கு.”இங்கே வந்து அழுதுகொண்டிருந்தால் எனக்கு எவ்வளவு இடைஞ்சலாக இருக்குமோ யோசிக்காமல் திடீரென்று கிளம்பி வந்துவிட்டாள். இப்போ என்ன செய்வது?
மனோகரிடம் இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள் லாவண்யா. எப்படியோ தாயைச் சமாதானப் படுத்தி நாளை காலையிலேயே சென்னைக்கு அனுப்பிவிட வேண்டும். மாமியாரும், நாத்தானாரும் வந்துவிட்டு போன பிறகு மனோகரிடம் விஷயத்தை சொல்லி தந்தையிடம் பேசச் சொல்லாம். மனோகர் பேசினால் தந்தைக்குக் கொஞ்சமாவது புத்தி வரலாம். அதைவிட வேறு வழியில்லை. கொஞ்சம் தெளிவு பிறந்தாற்போல் இருந்தது லாவண்யாவுக்கு.
மதியம் தாயை வலுக்கட்டாயமாக சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது லாவண்யாவுக்கு. “நல்லாத்தான் இருக்கு கூத்து!” என்று உள்ளூர சலித்துக் கொண்டாள். வசந்தாவின் வேதனை லாவண்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மனோகருக்கு இந்த விஷயம் தெரிந்து விடாமல் மறைத்து வைப்பது முக்கியமாகிவிட்டது அவளுக்கு. தாயின் சோர்ந்துவிட்ட முகம், சிவந்து விட்ட கண்கள் … இவற்றுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயமாகிவிட்டதால் அவற்றுக்குக் காரணமாக இருந்த தாயின் மீது எரிச்சல் ஏற்பட்டது. இரவு மனோகர் தூங்கப் போன பிறகு தாயிடம் வந்தாள் லாவண்யா.
“அம்மா!” என்றபடி பக்கத்தில் அமர்ந்துக் கொண்டு தாயின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“படுத்துக்கொள் லாவண்யா! நேரமாகிவிட்டது” என்றாள் வசந்தி மகளின் கையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே.
“அம்மா! எங்க மாமியாரைப் பற்றி உனக்குத் தெரியாதும்மா. ரொம்ப சந்தேகப் பேர்வழி. ஆயிரம் கேள்விகள் கேட்டு பிடுங்கியெடுப்பாள். நாத்தனாரோ அந்தத் தாய்க்கு தப்பாமல் பிறந்தவள்தான்.” தவறு செய்துவிட்டவள் பார்வையைத் தரையில் பதித்தாள்.
“என்ன வேண்டுமாம் அவர்களுக்கு? எந்தக் குறையும் இல்லாமல் அவர்கள் கேட்ட சீர்வரிசைகளை எல்லாம் செய்து கொடுத்தோமே? இன்னும் ஏதாவது வேண்டுமா? எது வேண்டுமானாலும் வாங்கிக் கொடுத்து விடலாம்” என்றாள் வசந்தி.
“அந்த விஷயம் இல்லை அம்மா!”
“பின்னே என்னவாம்? விவரமாக சொல்லு.”
கொஞ்ச நேரம் லாவண்யா எதுவும் பேசவில்லை. மகளுக்கு என்ன பிரச்னை வந்துவிட்டதோ என்று வசந்திக்கு பயமாக இருந்தது.
“அவர்கள் வரும் போது நீ இப்படி இங்கே இருந்தால் நன்றாக இருக்காது இல்லையா.”
வசந்தியின் தலையில் இடி விழுந்தாற்போல் இருந்தது.
மிரள மிரள தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தாயைப் பார்த்ததும் லாவண்யாவின் இதயம் இளகிவிட்டது.
“அது இல்லை அம்மா. அவர்கள் சரியாக புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏதோ ஒரு வார்த்தையைச் சொல்லி உன்னை நோகடிப்பார்கள். அவர்கள் வந்து விட்டுப் போன பிறகு நானும் மனோகரும் வந்து அப்பாவுடன் பேசுகிறோம். நீ நாளை காலையில் கிளம்பி சென்னைக்குப் போய்விடு.”
வசந்திக்கு துக்கம் கூட வரவில்லை. செயல் மறந்து போனவளாய் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
“நாளை காலையில் சென்னைக்குக் கிளம்பும்மா” தீனமாய், அபலையாய் லாவண்யாவின் குரல் வசந்தியின் காதுகளில் எதிரொலித்தது.
லாவண்யாவால் தனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. இத்தனை நாட்களும் அவள் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்தாள். இப்பொழுது கணவனின் பாதுகாப்பில் இருக்கிறாள். லாவண்யாவிடம் நான்கைந்து நாட்களுக்கு தங்குவது கூட சாத்தியப்படாது. மறுபடியும் சென்னைக்குத் திரும்பிப் போகணும் என்ற எண்ணமே வசந்தியை குன்றிப் போகும்படியாக செய்தது.
சுரேஷிடம் சொல்லாமல் வந்து விட்டாள். அடுத்த நாளே திரும்பி வந்தால் என்ன நினைத்துக் கொள்வான்? வேறு போக்கிடம் இல்லை என்று நினைக்க மாட்டானா? லாவண்யா தன்னுடைய எதிர்பார்ப்புகளை எப்படி தகர்த்தெறிந்து விட்டாள்?
பெற்ற மகள் இருக்கிறாள். அவளுக்கு தான் கொடுத்த அன்பு இருக்கிறது. அந்த அன்பு தனக்குத் திரும்ப கிடைக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பியிருந்தாள். லாவண்யாவும் தன் மீது அன்பு இல்லையா? எல்லாம் பொய்தானா?
மாமியார், நாத்தானார் என்று யோசிக்கிறாளே ஒழிய, தாய்க்கு எப்படிப்பட்ட கஷ்டம் வந்துவிட்டது என்று யோசிக்கவில்லை. எப்படி யோசிப்பாள்? திருமணம் நிச்சயமானது முதல் “இனி நீ அந்த வீட்டுப் பெண். உன் வீடு, உன் கணவன், உன் மாமியார், உன் நாத்தனார்….. அதுதான் உன் குடும்பம். எங்களுக்கு வேறு என்ன வேண்டும்? நீ அழகாக குடித்தனம் செய்துக் கொண்டிருந்தால், எப்போதாவது வந்து நான்கு நாட்கள் இருந்துவிட்டுப் போகப்போகிறவர்கள் நாங்க” என்று சொல்லி அனுப்பியது தான்தானே. லாவண்யா அவர்களுடைய வீட்டைச் சேர்ந்தவளாக இருப்பதால் இது போன்ற விஷயங்களில் பிறந்த வீட்டையும், பெற்ற தாயை¨யும் விலக்கி வைக்க நினைக்கிறாள். வயதில் சின்னவள்தானே. அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. புகுந்தவீட்டாருக்குத் தெரிந்து விட்டால் தாயை இளப்பமாக பார்ப்பார்களோ என்று பயப்படுகிறாள். அவர்களுடைய ஏச்சுகளுக்கு தான் நொந்துபோய்விடுவோமோ என்று முன்னாடியே யோசித்திருக்கிறாள். பைத்தியக்காரி! எவ்வளவு பயப்பட்டாளோ என்னவோ? இந்த விதமாக யோசித்து மனதை அமைதி படுத்துவதற்கு முயற்சி செய்தாள் வசந்தி.
மகளுடையது தவறு இல்லை என்று நினைத்துக் கொள்வதற்கு அவள் மனம் தயங்கவில்லை. ஆனால் மறுபடியும் சென்னைக்குப் போகணும் என்றால் மனம் எதிர்ப்பு தெரிவித்தது. லாவண்யாவிடம் தனக்கு புகலிடம் கிடைக்காதா என்று ஏங்கியது. கடைசியில் மனம் முழுவதும் விரக்தி பரவியது. “நாளை மறுபடியும் சென்னை … நாளை மறுபடியும் சென்னை” அவள் மனதில் திரும்பத் திரும்ப அந்த எண்ணம்தான் மேலோங்கியிருந்தது.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
- கவிதைகள்
- பெண் விடுதலைச் சிந்தனையில் தமிழ் இதழ்கள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 4
- எழுத்துக்கலை பற்றி இவர்கள் – 17 வி.ஆர்.எம்.செட்டியார்.
- வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…
- கவிதை ஒட்டகங்களுடன் நகர்ந்து செல்கின்றது – அரபு இலக்கியங்கள் ஓர் அறிமுகம்
- Last kilo Byte – 10
- சுஜாதா : பத்திரிக்கைப் பேராளுமை
- பாரதியாரது தத்துவ மரபு
- அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் நினைவாக…..
- திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சுக்கிரன் வரட்சிக் கோளாய் எவ்விதம் மாறியது ?(கட்டுரை: 22)
- தோஹா ஆசிய திரைப்படவிழா – கிரீஷ் காசரவல்லி அவர்களின் “நாயின் நிழலிலே”
- காற்றினிலே வரும் கீதங்கள் – 12 உறங்காமல் விழித்துள்ளவள் !
- தாகூரின் கீதங்கள் – 23 உலகைப் பிரியும் நாளில் !
- ஊழிக் கூத்து
- சம்பந்தமில்லை என்றாலும்- சைவாலயங்களில் சமசுகிருத மந்திரங்களே வேண்டும் (ஆ. சக்கரமூர்த்திப்பிள்ளை)
- எழுதுகோல் தெய்வமா?
- தில்லைச் சிற்றம்பல மேடையில் ஏறியது தமிழ்! …மார்ச் 2 அன்று!
- அழியும் தருவாயில் உண்மையானப் பெண்ணிலக்கியங்கள்
- காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் – நூல் வெளிவந்துள்ளது
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- மக்கள் சக்தி இயக்கம் – மத்திய மாநில பட்ஜெட் பொது விவாதம்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 4
- பக்தி நிலை வரும்போது__-
- என்னைக் கொஞ்சம் தூங்கவைத்தால்
- ரோபோக்களின் ஆசீர்வாதம்
- அன்புள்ள அப்பாவுக்கு !
- அடகுக் கடை
- கனவு மெய்ப்பட வேண்டும்!
- அநிச்சயக் கோடுகளில் உதிரும் புன்னகைகள்
- கைவளைக்கும் இல்லை கனிவு!
- முறிப்புக் கிராமம்
- கவிதைகள்
- கூவத்தமிழன் கூவுகிறேன்!
- நிலவுக்கும்…….