தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


தொடுவானம் தொட்டுவிடும் தூரம்
அத்தியாயம் 3

“மாலையில் வருவதற்கு தாமதமாகும். நீலிமாவிடம் போகிறேன்.”
வசந்தியின் பக்கம் பார்க்காமலேயே சொல்லிவிட்டு அவசர அவசரமாக போய்விட்டான் சுரேஷ்.
வசந்தி திகைத்துப் போனவளாய் அப்படியே நின்றுவிட்டாள். தன்னுடைய நிலை என்னவென்று அவளுக்கே புரியவில்லை.
என்ன செய்வது? எவ்வளவு தைரியமாக சொல்லிவிட்டுப் போகிறான்! இரவு நேரம் கழித்து வந்தால் “எங்கே போயிருந்தீங்க?” என்று கேட்பதற்கு வாய்ப்பு கொடுக்காமல் முன்னாலேயே சொல்லிவிட்டான். பொய் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து அவன் தப்பித்துக் கொண்டுவிட்டான். முழு பாரத்தையும் தன் மீதே போட்டு விட்டான்.
இப்போ என்ன செய்வது? “நீங்க நீலிமாவிடம் போகக் கூடாது” என்று சொன்னால்? “போகாமல் என்னால் இருக்க முடியாது” என்பான்.
“முடியாவிட்டால் நான் உங்களுடைய மனைவியாக இருக்க மாட்டேன்” என்று சொல்லணும்.
“நல்லது” என்பான்.
அப்பொழுது தான் அவனுடைய மனைவி என்ற ஸ்தானத்திலிருந்து விலகிக் கொள்வதற்கு தயாராக இருக்கிறாளா?
இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் தான் சுரேஷின் மனைவியாகவே இருக்க வேண்டும். இந்த வீட்டை விட்டு விட்டு சுரேஷ¤க்கு தொலைவாக தன்னால் வாழமுடியாது. அம்மாடி! இந்த வீட்டை… தன்னுடைய வீட்டை விட்டுட்டுப் போவதா? இந்த வீடுதான் தன்னுடைய உயிர். தான் வேறு இந்த வீடு வேறு இல்லை. வசந்திக்கு இதயம் முழுவதும் இறுகிப் போய்விட்டாற்போல் இருந்தது. இருபது வருடங்கள் எப்படி வாழ்ந்தேன்? இந்த குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தேன்? இந்த வீட்டைத் தவிர வேறு உலகம் இருப்பதையே மறந்துவிட்டேன். சுரேஷ¤க்கும், குழந்தைகளுக்கும் சின்ன அசௌகரியம் கூட ஏற்பட்டு விடக் கூடாது என்று தன்னுடைய விருப்பங்கள், பொழுதுபோக்குகள் எல்லாவற்றையும் குழி தோண்டி புதைத்துவிட்டேன். அப்படி செய்வதுதான் தர்மம் என்று நினைத்தேன். அப்படிச் செய்யாமல் தங்களுடைய விருப்பங்களுக்காக, பொழுதுபோக்குகளுக்காக குடும்பத்தை அலட்சியப் படுத்துபவர்களை முட்டாள்கள் என்றேன். இளப்பமாக பார்த்தேன். அருவருப்பு கொண்டேன்.
இன்று ரோகிணி பெரிய டாக்டர்.
சாந்தா கல்லூரி பிரின்ஸிபால். இன்னும் நிறைய சிநேகிதிகள் சின்னதோ பெரியதோ வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தாழ்வாக நினைத்தேன். முந்தாநாள் ரோகிணி தன் தொழிலில் மூழ்கிப் போய் குழந்தைகளுக்கு சரியாக சாப்பாடு கூட போடவில்லை என்று சலித்துக் கொண்டேன்.
குழந்தைகள் இருவரையும் எந்த குறையும் இல்லாமல் வளர்த்தேன் என்று பெருமைபட்டுக் கொண்டேன்.
உண்மைதான். அப்படித்தான் வளர்த்தேன். திருமணமாகும் வரையில் பெரியவளுக்கு சாப்பாடு பிசைந்து ஊட்டிவிட்டிருக்கேன். சவிதா அப்படி ஊட்டினால் சாப்பிட மாட்டாள். தானாகவே சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிப்பாள். அதற்காக அவளை கோபித்துக் கொண்டிருக்கிறேன்.
அவர்கள் படித்துக் கொண்டிருந்த நாட்களில் காலையில் அவர்கள் எழுந்து கொள்ளும் முன்பே டிபன், காபி தயாராக இருக்கும். குளித்துவிட்டு வந்தால் அயர்ன் செய்த உடைகள் தயாராக இருக்கும். தானே சுயமாக அயர்ன் செய்து, அவர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைப்பாள். பெரியவளுக்கு ஸ்கூல் நோட்ஸ¤களை கூட எழுதி தந்திருக்கிறாள். குழந்தைகளுக்கு சின்ன உடல் நலக் குறைவு வந்தாலும் ராப்பகல் கண் விழித்து எத்தனை சிசுரூஷை செய்திருக்கிறாள்?
சுரேஷ¤க்கு மட்டும்? தன்னுடைய வாழ்க்கை முழுவதும் இவர்களுக்கு சேவை செய்வதிலேயேதான் கழிந்திருக்கிறது. இப்போ வேண்டாம்னு சொன்னால் இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன?
இத்தனை நாட்களும் தன் வாழ்க்கையின் அர்த்தம் இந்த மூவர்தான். இப்பொழுது?
இப்பொழுது மட்டும் என்ன நடந்துவிட்டது? சுரேஷ் இப்படி செய்கிறான் என்று சொன்னால் லாவண்யா சும்மா இருப்பாளா? தனக்காக உயிரையும் கொடுக்கமாட்டாளா? அப்பாவுடன் சண்டை போடமாட்டாளா?
சவிதாவுக்கு தந்தை என்றால் பிடிக்கும். ஆனால் லாவண்யா எப்போது தன்னுடைய மகள்தான்.
அம்மா! அம்மா! என்று எப்போதும் ஜபம் செய்து கொண்டே இருப்பாள்.
லாவண்யா தனக்கு இருக்கிறாள். தன் வாழ்க்கையின் அர்த்தமே குழந்தைகள்தான். சவிதா தந்தையின் மகளாக இருந்தாலும் லாண்யா தன்னுடைய மகள். வசந்திக்கு உடலில் புதிதாக தெம்பு வந்தாற்போல் இருந்தது. உடனே மதுரைக்கு புறப்பட்டாள். சுரேஷ¤க்கு சின்ன கடிதம் எழுதி மேஜை மீது வைத்தாள்.

தொடரும் …..

தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation

author

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்

Similar Posts