உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


கலைத்துவப் படைப்பு அதை நுகர்வோரிடம் என்ன பாதிப்பை உண்டாக்குகிறதோ அதுதான் அதன் இயக்க விளைவு. அந்த பாதிப்பு இயக்கமே கலைப் படைப்பின் முக்கியப் பணி. மனிதரது வாழ்க்கையில் எண்ணற்ற கலைத்துவப் படைப்புக்கு ஏற்ற அனுபவங்கள் மறைந்து கிடக்கின்றன. தாலாட்டுப் பாடல், விகடப் பேச்சு, கட்டட அலங்காரம், ஆடை நளினம், ஆபரண அமைப்பு போன்றவை எல்லாம் ஒருவகைக் கலைத்துவப் படைப்புகளே. உணர்ச்சிகளை உண்டாக்கும் மனிதச் செய்கை அனைத்தும் கலைத்துவப் படைப்புகளாகக் கருதப்பட மாட்டா. சிறப்பாகக் குறிப்பிடப் பட்டும் சில மனித அனுபவப் படைப்புகள் மட்டும் கலைத்துவ ஆக்கங்களில் இடம்பெறத் தகுதி பெற்றவை. அந்த முறையில்டான் பண்டைக் கால ஞானிகள் சாக்ரடீஸ், பிளாடோ, அரிஸ்டாட்டில் கலைத்துவப் படைப்புகளைக் கண்டார்.

நமது சமூகத்தில் தாறுமாறான கலைத்துவப் படைப்புகளே சிறந்தவை என்று போற்றப் படுகின்றன. மெய்யாகக் கலைத்துவ ஆக்கங்கள் என்பவை எவை என்னும் கருத்தே உறுதியாகாமல் இழப்பாகி உள்ளது. முதலில் மெய்யான கலைக்கும் போலிக் கலைக்கும் உள்ள வேறுபாடு அறியப் படவேண்டும்.

லியோ டால்ஸ்டாய் : ரஷ்ய இலக்கிய மேதை (1828-1910) (The Religious Significance of Art)

நெறிகளும், தீவினைகளும் (Virtues & Vices)

. . . . ஒரு மனிதனிடம் உள்ள குறிப்பிட்ட எந்த ஓர் ஒழுக்கப்பாடோ அல்லது தீவினையோ வேறுவித ஒழுக்கப்பாடு அல்லது தீவினை இருப்பதற்கு எப்படிக் கற்பனை மூலமாகப் பிணைத்துக் கொண்டாலும் மறைமுகமாகக் குறிப்பிடாது.

. . . . ஒழுக்கப்பாடைக் கடைப்பிடிப்பது என்றால் தீவினையிலிருந்து ஒருவன் விலகியிருப்பது மட்டுமில்லை; அதை மனதில் சிந்தித்து வேண்டாமல் இருப்பதுமாகும்.

. . . . சுயப் புறக்கணிப்பு (Self-denial) ஒருவரது ஒழுக்கப்பாடாகக் கருதப்படாது ! அது பலாபலனைக் கருதி கவனிப்பாகச் செய்யும் ஓர் அயோக்கத்தனமே !

. . . . காவல்துறை அதிகாரியைக் கண்டால் ஏற்படும் பயம் நேர்மைத்தனத்தைத் தூண்டுவதுபோல் கீழ்ப்படியும் முறைமை கீழடக்கத்தைத் (Subordination) தூண்டுகிறது.

. . . . மிக்கத் துணிச்சலுடைய அபூர்வ நெறியான “கீழ்ப்படியாமை” (Disobedience) என்பது
உதாசீனமெனக் குறிப்பிடுவதை நாம் தவிர்க்க முடியாது. அது பொதுவாகக் காணப்படும் சோம்பற் தீக்குணம்.

. . . . தீவினை புரிவது வாழ்வை வீணாக்குவது. ஏழ்மை, கீழ்ப்படிதல், பிரமச்சரியம் ஆகியவை கிறித்துவ மதாதிபதிகள் விதித்த விதிகள் !

. . . . பொருட்சீர்ப்பாடு (Economy) ஒன்றுதான் வாழ்க்கைக்கு மிகவும் தேவைப்படும் கலை. நெறிப்பாடுகளின் அடிப்படையே பொருளாதாரச் செம்மைப்பாட்டு ஆதரவில் உள்ளது.

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 2 பாகம் : 3

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 2 பாகம் : 3)

கதா பாத்திரங்கள்: ஜான் டான்னர், காரோட்டி ஹென்றி ஸ்டிராகெர், அக்டேவியஸ் ராபின்ஸன். ஆன்னி வொயிட்·பீல்டு.
காலம்: காலை வேளை
இடம்: வொயிட்·பீல்டு இல்லத்தருகே கார்கள் நிறுத்தப்படும் திடல்.

(காட்சி அமைப்பு : ஆன்னி வொயிட்·பீல்டின் இல்லத்தருகில் கார் நிறுத்தும் திடலில் ஜான் டான்னரின் கார் பழுதாகி முடங்கி நிற்கிறது. டான்னரின் காரோட்டி (ஹென்றி ஸ்டிராகெர்) முன்மூடியைத் திறந்து என்ன பழுது என்று குனிந்து உளவி வருகிறார். டான்னர் பொறுமை இழந்து நடமாடிக் கொண்டிருக்கிறார். அக்டேவியஸ் டான்னருடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஆன்னி வொயிட்·பீல்டு அவரை நோக்கி வந்து தன் காதலை வெளிப்படுத்துகிறாள். தனித்து விடப்பட்ட இருவரும் வெளிநாடு சுற்றுப் பயணத்தைப் பற்றி திட்டமிடுகிறார்கள்)

ஜான் டான்னர்: ஆன்னி ! உன்னை உன் அன்னையை விட்டு வெளியே வா ! உல்லாசமாக நாமிருவரும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யலாம். என்னுடன் காரில் வருகிறாயா ?

ஆன்னி: (பூரிப்புடன் மனதிற்குள்) பழம் நழுவிப் பாலில் விழுகிறது ! உனக்குச் சில சமயம் ஞான ஒளி வீசுகிறது ! இந்த மாதிரி காதல் சிந்தனை உனக்கு உதிப்பதை நான் வரவேற்கிறேன் ! நான் வர மாட்டேன் என்று சொல்வேனா ஜான் ?

ஜான் டான்னர்: நீ மறுப்பாய் என்று முதலில் நினைத்தேன் ! எங்கே போகத் திட்டமிடுகிறாய் எனக் கேட்பாய் என்று எதிர்பார்த்தேன் ! ஏமாந்தேன் ! ஆனாலும் மிக்க மகிழ்ச்சியே !

ஆன்னி: ஜான் ! நீ எங்கு என்னை அழைத்துப் போகிறாய் என்றெனக்குக் கவலை இல்லை ! உனக்கு நான் இணையாய் எனக்கு நீ துணையாய் ஆகப் போகிறாய் என்பதே சொர்க்க உலகுக்கு இழுத்துச் செல்கிறது ! . . . சரி இப்போது கேட்கிறேன் ! எங்கே போகிறோம் ?

ஜான் டான்னர்: பயணத் திட்டத்தைச் சொல்லவா ? முதலில் பாரிசுக்குப் போகிறோம் ! பிறகு மார்சேல்ஸ் போகிறோம் ! அப்புறம் அல்ஜியர்ஸ் போகிறோம், அடுத்து பிஸ்கிரா ! நீ விரும்பினால் தென்னாப்ரிக்க முனைக்கும் போகலாம். அன்னையிடமிருந்து நீ வெளியேறி விடுதலை முரசடிக்க ஏற்றது அந்தப் பயணம் ! பிறகு அதைப் பற்றி ஒரு நூல் எழுதி பதிப்பிக்கலாம். அன்னைக்கும் விடுதலை ! பெண்ணுக்கும் விடுதலை ! உன்னுடைய நூல் அதற்குச் சாட்சி அளிக்கும் எதிர்காலத்தில் !

ஆன்னி: ஜான் ! உயில்படி நீ என் பாதுகாப்பாளி ! உன்னிடம் நான் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை ! நீயும் நானும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தருணம் வந்து விட்டது ! ஒருவருக் கொருவர் துணையாகும் வேளை வந்து விட்டது ! தங்கை ரோடாவைப் பற்றிப் பேசி மூடனாகக் காட்டிக் கொண்டதற்கு வருந்தினேன். இப்போதுதான் உன் மூளை தெளிவுற்று எனக்கு மகிழ்ச்சி ஊட்டியுள்ளது. எதிர்பாராத இந்த பயணத்துக்கு என்னை அழைத்தது டோராவின் கண்களில் நீர் சிந்த வைக்கும் ! சொல், எப்போது தொடங்கலாம் பயணத்தை ?

ஜான் டான்னர்: ஆன்னி ! அதோ அக்டேவியஸ் வருகிறான் ! அவன் பின்னால் ஒரு கூட்டம் வருகிறது. அவர்கள் போன பிறகு நமது பயணத்தைப் பற்றிப் பேசுவோம்.

(அப்போது உரையாடல் தடைப்பட்டுப் போக ஆன்னியின் அன்னை, அமெரிக்கன் ஹெக்டர் மெலோன், ராம்ஸ்டன், அக்டேவியஸ் ஆகியோர் வொயிட்·பீல்டு இல்லத்திலிருந்து வெளியே வருகிறார்கள்)

ஆன்னி: (தாயை நெருங்கிப் புன்னகையுடன்) அம்மா ! கேட்டாயா சேதி ? ஆனந்தச் செய்தி ! ஜான் என்னை பாரிசுக்கு அழைத்துச் செல்லப் போகிறாராம். அவரது காரில் போகப் போகிறோம். மெய்யாக இது ஆனந்தச் செய்தி இல்லையா ? அம்மா ! நான்தான் லண்டனிலே ஆனந்தக் கடலில் நீந்தும் அதிசயக் குமரி ! என்ன நினைக்கிறாய் எங்கள் பயணத்தைப் பற்றி ?

ஜான் டான்னர்: ஆன்னி ! ஏனதைக் கேட்கிறாய் ? எனது யூகம் உன் அன்னைக்குப் பிடிக்காது. என்பது !

ஆன்னி: அம்மா ! உங்களுக்கு இதில் ஆட்சேபனை ஏதாயினும் உள்ளதா ?

மிஸிஸ் வொயிட்·பீல்டு: என் ஆட்சேபனையா ? நானெதற்கு ஆட்சேபிக்கிறேன் ? ஆன்னிக்கு நல்லதுதானே ! அவள் டான்னருடன் உலகம் சுற்றிப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி தரும் ! ரோடாவையும் இப்படி யாராவது ஒருவர் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றால் நல்லதுதான் ! வீட்டில் அவள் தொந்திரவு அதிகம் !

ஆன்னி: (விரைவாக இடைமறித்து) (டான்னரைப் பார்த்து) ஜான் ! நான் மறந்து விட்டேன். இவர்தான் மிஸ்டர் ஹெக்டர் மலோன். (ஹெக்டரைப் பார்த்து) இவர்தான் மிஸ்டர் டான்னர். எனது பாதுகாப்பாளர். என்னைப் பாரிசுக்குக் காரில் அழைத்துச் செல்கிறார்.

(டான்னரும், ஹெக்டரும் புன்முறுவலுடன் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்)

ஹெக்டர் மலோன்: நீங்களும் ஆன்னியும் காரில் சுற்றுப் பயணம் செய்யப் போவதைப் பாராட்டுகிறேன். (சிரித்துக் கொண்டு) நானும் என் காரில் அப்படி ஓர் அழகியுடன் போக விரும்புகிறேன். உல்லாசப் பயணத்தில் சல்லாபம் கொள்வீர் ! ஆன்னி உண்மையாக அன்னையுடன் அடைபட்டுக் கிடக்கிறாள் ! அவளுக்கு விடுதலை !

ஜான் டான்னர்: (சிரித்துக் கொண்டு) எனக்குச் சிறை வாசம் ! என் சுதந்திரம் பறி போகும் ! . . பெருமகிழ்ச்சி ஹெக்டர் ! உன் நீராவிக் காரில் போகும் அதிர்ஷ்டம் எந்தப் பெண்ணுக்குக் கிடைக்கப் போகிறதோ ?

ஆன்னி: (ஆர்வமுடன்) ஹெக்டர் ! தயவுசெய்து சொல்வீரா ? யார் அந்த அழகி ? ரோடாவா ? இல்லை வேறு ஓர் மேடமா ?

ஹெக்டர் மலோன்: (சிரித்தவண்ணம்) மிஸ் ராபின்ஸன் உடன் வந்தால் பேருவகை அடைவேன் !

அக்டேவியஸ்: (ஆச்சரியமுடன்) ஆ ! என் தங்கை வயலட்டா ? . . நீங்கள்தான் . . அவளது . . ?

ஹெக்டர் மலோன்: ஆம் அந்தப் பேரிளம் கன்னிதான் ! அந்தப் பேரழகி வயலட்தான் !

ரோபக் ராம்ஸ்டஸன்: அவள் பேரழகிதான் ! ஆனால் அவள் கன்னி யில்லை !

ஆன்னி: ஹெக்டர் ! உனக்கு வயலட்டைத் தெரியுமா ? தெரிந்தாலும் தெரிந்ததுபோல் தெரிய வில்லையே ! . . . அவளும் நீயும் ஒருவரை ஒருவர் அறிவீரா ?

ஹெக்டர் மலோன்: (வருத்தமுடன்) அவள் ஒரு கன்னி . . . கன்னி இல்லையா ?

அக்டேவியஸ்: (வெறுப்புடன்) அவள் திருமணமாணவள் !

ஹெக்டர் மலோன்: (கவலையுடன்) வயலட்டுக்குத் திருமணம் ஆகிவிட்டதா ?

ரோபக் ராம்ஸ்டன்: திருமணம் ஆகி விட்டது ! இப்போது அவள் ஒரு கர்ப்பவதி ! காலையில் தலை சுற்றும் வயலட், காரில் எப்படி ஊர் தேசம் சுற்றுப் போகிறாள் என்பது தெரியவில்லை !

ஹெக்டர் மலோன்: அவள் கர்ப்பவதியா ? (தலை சுற்றிக் காரின் மீது சாய்கிறார். அக்டேவியஸ் ஓடிபோய்ப் பிடித்துக் கொள்கிறார். எல்லாரும் ஆச்சரியமுடன் ஒருவரை ஒருவர் பார்த்து முகம் சுளிக்கிறார்)

***************************
(தொடரும்)

*********
தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan March 18, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts