தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 2

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


பெண்கள் கல்லூரியைப் பார்த்ததும் இதயம் தொண்டைக்குழி வரையிலும் வந்தது போலிருந்தது வசந்திக்கு. அந்த தோட்டமும், வகுப்பு அறைகளும் முறுவலுடன் தன்னை குசலம் விசாரிப்பது போலிருந்தது. சில மரங்கள் அன்று இருந்தது போலவே இருந்தன.
பழக்கமான பாதையில் பிரின்ஸ்பால் வீட்டு பக்கம் நடந்தாள். “பாவம் சாந்தா. இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்படித்தான் தனியாக இருக்கிறாளோ?” என்று நினைத்துக் கொண்டே காலிங் பெல்லை அழுத்தினாள்.
வேலைக்காரப் பெண் போலும் கதவைத் திறந்து “அம்மா எழுதிக் கொண்டு இருக்காங்க. உட்காருங்கள்” என்று வராண்டாவில் உட்காரச் சொல்லிவிட்டு போனாள். ஒரு நிமிஷம் கழித்து பெயரைக் கேட்டுக் கொண்டு போனாள். நேராக உள்ளே போகாமல் இப்படி வராண்டாவில் உட்கார்ந்திருப்பது வசந்திக்கு எப்படியோ இருந்தது.
தன் கணவரைத் தேடிக் கொண்டு யாராவது வந்தால் வசந்தி இப்படித்தான் அவர்களை உட்காரவைப்பாள். சாந்தாவும் அந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறாள் என்றால் வருத்தம் இல்லையே தவிர, ஏனோ சாந்தா இது போன்ற முறைகளை கடைபிடிக்காமல் வீட்டுக்கு வந்தவர்களை தானே எதிர்கொண்டு அழைத்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. பத்துநிமிடங்களுக்குப் பிறகுதான் சாந்தா வந்தாள்.
சாந்தா வந்ததும் தன்னையும் அறியாமல் எழுந்து நின்றாள் வசந்தி. சாந்தா வசந்தியை அடையாளம் கண்டுகொள்வதற்கு முழுவதாக இரண்டு வினாடிகள் எடுத்துக் கொண்டாள்.
“வசந்தீ…. நீயா! மைகாட்! இப்போ .. திடீரென்று! யாரோ என்று நினைத்து விட்டேன். ஹாஸ்டலில் தங்கியிருக்கும் மாணவிகளின் தாய் யாராவது வந்திருப்பார்கள் என்று எண்ணினேன். வா .. கமான்!” என்றபடி தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு உரிமையுடன் உள்ளே அழைத்துப் போனாள். வசந்திக்கு தயக்கம் நீங்கிவிட்டாலும் கூச்சம் அதிகரித்தது. குசலம் விசாரிப்பது, விருந்தோம்பல்கள் எல்லாம் முடிந்த பிறகும் வசந்தியால் சகஜமாக பழக முடியவில்லை. இவள் பழைய சாந்தா இல்லை என்று தோன்றியது.
“சொல்லு, என்ன விசேஷம்?” சாந்தா உற்சாகத்துடன் கேட்டாள்.
“இத்தனை பெரிய வீட்டில் நீ மட்டும் தனியாக இருக்கிறாயா?”
“ஆமாம். திருமணம் செய்துகொள்ளவில்லை. தம்பியின் குழந்தைகளும், தங்கையின் குடும்பமும் விடுமுறையின் போது வருவார்கள். அப்பொழுது வீடு முழுவதும் ஒரே சந்தடியாக இருக்கும்.”
“ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?” சாந்தா வருத்தப்படக்கூடும் என்ற எண்ணம் தோன்றுவதற்குள் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டாள் வசந்தி.
“என் படிப்பு முடிவடைவதற்குள் அப்பா போய்விட்டார். அண்ணண் தன் வழியைப் பார்த்துக் கொண்டு போய்விட்டான். நான் வேலை பார்த்து என் தம்பியை, தங்கையை படிக்க வைத்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தேன். என் திருமணத்தைப் பற்றி யோசிக்கும் போது அந்த வயது தாண்டிவிட்டது. இனி திருமணம் செய்து கொள்ளணும் என்று தோன்றவில்லை.” சாந்தா கொஞ்சம் கூட வருத்தப்பட்டுக் கொள்ளாமல் சாதாரணமாக சொன்னாள்.
வசந்தி தன் குடித்தனத்தைப் பற்றி, குழந்தைகளைப் பற்றி சொன்னாள். “பத்து வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் திருச்சிக்கு வருகிறேன் சாந்தா! திருமணமாகிவிட்டால் இனி அந்த உலகமே வேறுதான். கணவர், குழந்தைகள், பொறுப்புகள், அவர்களுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்வது … உன் கல்லூரி வேலைக்கு சற்றும் குறைந்ததில்லை. எவ்வளவு கஷ்டப்பட்டால் அவ்வளவு திருப்தி. ரோகிணி பாவம்! ஒரு பக்கம் ஆஸ்பத்திரி இன்னொரு பக்கம் குழந்தைகளுடன் ரொம்ப நலிந்து போய்க் கொண்டிருக்கிறாள். குழந்தைகளுக்கு வயிறு நிரம்ப சாப்பாடு கூட போட முடியாமல் திண்டாடுகிறாள். அவளைப் பார்த்தால் இப்படியாவது வேலைக்குப் போய்த்தான் ஆகணுமா என்று தோன்றுகிறது. என்னுடைய இரு குழந்தைகளையும் எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்தேன். அவர் வெளிவேலைகளை நிம்மதியாக பார்த்துக் வருகிறார் என்றால் அதெல்லாம் என்னால்தான். சட்டைப் பையிலிருக்கும் கைக்குட்டை முதல் எல்லாம் அவருக்கு நான்தான் எடுத்து வைப்பேன். இன்றைக்கும் நான் இல்லாவிட்டால் அவர் எவ்வளவு திண்டாடிப்போய் விடுவார் தெரியுமா? நான் இங்கே இருக்கப் போகும் இந்த ஒரு வாரமும் அவர் எப்படி கஷ்டப்படுவாரோ, அதை நினைத்தால் உடனே போய் விடலாமா என்று கூடத் தோன்றும்.” திருப்தியுடன், பெருமையுடன் கண்கள் மின்ன பேசிக் கொண்டிருந்த வசந்தியைப் பார்த்து மனப்பூர்வமாக சந்தோஷப்பட்டாள் சாந்தா.
“உன் சந்தோஷத்தைப் பார்த்தால் எனக்குக் கூட உடனே திருமணம் செய்துகொண்டு உடனே தாயாகிவிடணும் என்று தோன்றுகிறது.” வாய்விட்டு சொல்லவும் செய்தாள்.
“உண்மையிலேயே நீ பைத்தியக்காரத்தனமாக நடந்துகொண்டிருக்கிறாய். கல்யாணம், குடித்தனம் எதுவும் இல்லாமல் தனியாக வாழ்வானேன்? நினைத்துப் பார்க்கவே எனக்கு பயமாக இருக்கு” என்றாள் சாந்தாவை இரக்கம் ததும்பும் விழிகளுடன் பார்த்துக் கொண்டே.
“என்னவோ தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையும் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. என்னுடைய வேலை, பொழுதுபோக்குகளுடன் நன்றாகதான் கழிந்துக் கொண்டிருக்கிறது. தனிமையில் இருப்பதாக நினைப்பே இல்லை. சில நாள் ஓய்வு என்பதே இருக்காது.”
இருவரும் தங்களுடைய வாழக்கையை மற்றவருக்கு அறிமுகப்படுத்தும் வேலையில் மூழ்கிவிட்டார்கள். சாந்தா தான் சேகரித்து வைத்திருக்கும் இசைத் தட்டுகளை காண்பித்தாள். வீணையின் தந்திகளை மீட்டி காண்பித்தாள். பத்திரிகைகளில் தான் எழுதிய கட்டுரைகளைப் பற்றிச் சொன்னாள்.
வசந்தி தன்னுடைய கணவரின் அன்பைப் பற்றி, அவர் எப்படியெல்லாம் தன்னைச் சார்ந்திருக்கிறார் என்பதைப் பற்றி விவரமாக சொன்னாள். வீட்டை நேர்த்தியாக வைத்திருப்பதைப் பற்றி சொன்னாள். பெரிய மகள் லாவண்யாவின் திருமண விசேஷங்களை வருணித்தாள். சின்ன மகள் சவிதாவைப் பற்றிச் சொல்லும் போது “உன்னைப் போல் திருமணம் செய்துகொள்ளாமல் நின்றுவிடுவாளோ என்னவோ?” என்று கவலைப் பட்டாள்.
“எனக்கென்ன? ராணியைப் போல் இருக்கிறேன். என்னைப் போல் ஆனால் நீ கவலைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை” என்றாள் சாந்தா.
அன்று இரவு அங்கேயே படுத்துக் கொள்வதாக ரோகிணியிடம் ·போன் செய்து சொல்லிவிட்டாள் வசந்தி.
“எந்த டென்ஷனும் இல்லாமல் நான் இப்படி தனியாக வேறு இடத்தில் தங்கியிருப்பது இதுதான் முதல் தடவை. இது கூட நன்றாகத்தான் இருக்கு” என்றாள் சிறுமியைப் போல்.
“எல்லாம் நன்றாகத்தான் இருக்கும் என்று சொன்னால் நம்பமாட்டாயா? திருமணம் செய்துக் கொள்ளாவிட்டாலும் ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடாது. நிம்மதியாக வாழ முடியும்.”
“அது போகட்டும். ஆண் துணையில்லாமல் எப்படி இருக்கிறாய்? துணை என்றால் நான் சொல்ல வந்தது…”
“புரிகிறது. அந்தத் துணை எனக்கு இருக்கிறது” என்றாள் சாந்தா சாதாரணமானக் குரலில்.
“அப்படி என்றால்?
“அதாவது எனக்கு ஒரு அ·பையர் இருக்கு. அவ்வப்பொழுது வந்து போய்க் கொண்டிருப்பான். விடுமுறை நாட்களில் இருவரும் சேர்ந்து எங்கேயாவது வெளி ஊர்களுக்குப் போவோம். என்ன இது? ஏன் உன் முகம் இப்படி ஆகிவிட்டது?” வெளிறிப் போயிருந்த வசந்தியின் முகத்தைப் பார்த்து கலகலவென்று நகைத்தாள் சாந்தா.
“பின்னே .. பின்னே அவனை ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?”
“அவனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.”
“திருமணம் ஆனவனா?” வசந்திக்கு வாயிலிருந்து வார்த்தை வெளிவர மறுத்தது. சாந்தா ஒருவனுக்கு வைப்பாட்டியாக இருக்கிறாளா? நினைத்துப் பார்க்கும் போதே அருவருப்பால் உடல் சிலிர்த்தது. இப்படியாவது வாழ்வானேன்? ஒழுங்காக திருமணம் செய்துக் கொண்டிருக்கலாம் இல்லையா? அவன் எங்கே கிடைத்தான்? அவனுயை மனைவி என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்? அவ்வளவு விரும்புகிறவனாக இருந்தால் அந்த மனைவியை விட்டு விட்டு சாந்தாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் இல்லையா? வசந்தியின் மனம் நிம்மதியில்லாமல் தவித்தது.
“போயும் போயும் திருமணமானவனுடனா?”
சாந்தா முறுவலித்துவிட்டு பேசாமல் இருந்தாள்.
“பாவம்! அந்த மனைவியின் நிலைமை என்ன? அவளுக்கு இந்த விஷயம் தெரியுமா?”
“என்னவோ? ஒருக்கால் தெரிந்திருக்குமாயிருக்கும்.”
“பாவம்! அந்த மனைவி உன்னை எப்படி எல்லாம் சபித்துக் கொண்டிருப்பாளோ?” சிநேகிதியின்பால் அளவுக் கடந்த அன்பு இருந்தாலும் வசந்தியால் அந்த வார்த்தையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
சாந்தாவின் முகத்தில் முறுவல் மறைந்துவிட்டது. ஐந்து நிமிடங்கள் இருவரும் பேசாமல் மௌனமாக இருந்தார்கள்.
“சீ.. இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுப்பாய் என்று நினைக்கவில்லை. இந்தக் காரியம் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை” என்றாள் வசந்தி பொறுமையற்ற குரலில்.
“உனக்குத் தெரியாத அந்த நபரின் மீது காண்பிக்கும் அக்கறையில், இரக்கத்தில் கால் பங்காவது என் மீது காட்டக் கூடாதா வசந்தீ? என்னைப் பற்றி ஏன் யோசிக்க மாட்டேங்கிறாய்?”
“உன்னைப் பற்றி யோசிப்பதால்தான் நீ செய்த காரியம் நன்றாக இல்லைன்னு சொல்கிறேன்.”
“நல்ல காரியம் என்று நான் சொன்னேனா?”
“கெட்ட காரியம் என்று தெரிந்த பிறகு அதைச் செய்வானேன்?”
“கெட்ட காரியம் என்று நான் நினைக்கவில்லை.”
“நல்லதும் இல்லாமல் கெட்டதும் இல்லாமல் என்ன காரியம் அது? ஏதாவது அர்த்தம் இருக்கிறதா அந்த காரியத்தில்?”
“நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடுவில் வாழ்க்கை இருக்கிறது வசந்தீ! என் வாழ்க்கை இருக்கிறது. நானும் அன்புக்காக, ஆணின் துணைக்காக ஏங்கினேன். என் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக சாதாரணமாக நடக்க வேண்டிய திருமணம் நடக்கவில்லை. பணப்பற்றாக்குறை, குடும்பப் பொறுப்புகள், தங்கை, தம்பிக்களின் எதிர்காலம் எல்லாம் சூழ்ந்துகொண்டன. இவ்வளவுதான் என் வாழ்க்கை என்று நான் மனதைத் தேற்றிக் கொள்ள முயன்ற போது ராதாகிருஷ்ணனின் அறிமுகம் கிடைத்தது. இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவனுக்கு பட்டப் படிப்பு படிக்கும் போதே மாமன் மகளுடன் திருமணமாகிவிட்டது. அவளிடம் விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. எல்லோரையும் போல் குடித்தனம் செய்து வருகிறான். எங்களுடைய நட்பு எங்கள் வாழ்க்கையில் மிகவும் அபூர்வமானது. ரொம்ப கவனமாக அதைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறோம்.”
“போகட்டும். மனைவியிடம் விருப்பம் இல்லை என்று சொல்கிறான் இல்லையா? விவாகரத்து பெற்றுக் கொண்டு உன்னைத் திருமணம் செய்து கொள்ளலாம் இல்லையா?”
“நான்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்”
“உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.”
“இல்லை. பைத்தியம் பிடிக்கவில்லை. இரண்டு குழந்தைகளின் தாய். மறுமணம் அவள் விஷயத்தில் சாத்தியம் இல்லை. தனியாக வாழ்க்கையைக் கழிக்கணும். என் காரணமாக அவளுக்குக் கஷ்டம் ஏற்படுவானேன்? எனக்குத் திருமணம் வேண்டாம். ராதாகிருஷ்ணனின் அன்பு மட்டும் வேண்டும். எனக்கு உரிமைகள் வேண்டாம். அங்கீகாரம் தேவையில்லை. ராதாகிருஷ்ணன் என் கணவன் இல்லை. ஒரு சிநேகிதன். எனக்குப் பிடித்தவன். ஒரு தனி மனிதனாக நான் அவனை விரும்புகிறேன். அந்த அன்பை நான் கட்டுப்படுத்தவில்லை. அவனும் கட்டுப்படுத்தவில்லை. எதற்காக கட்டுப்படுத்தணும்? வருடத்தில் ஒரு மாதம் நாங்களிருவரும் ஒன்றாக வாழ்ந்தால் இந்த உலகம் தலைகீழாகிவிடுமா?” சாந்தா ஆவேசமாக கேட்டாள்.
“உன் மீது மற்றவர்களுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? யாருக்கோ வைப்பாட்டியாய்…”
“வசந்தீ!”
“சாரி சாந்தா.”
“பரவாயில்லை. வரலாற்றிலேயே பல பெண்கள் வைப்பாட்டியாய் இருந்திருக்கிறார்கள். கணவன் மனைவி என்ற பந்தம் இல்லாத காதலில் பெண்ணாகப் பட்டவள் வைப்பாட்டியாகத்தான் இருந்திருக்கிறாள். மனைவியாக இருப்பதை விட எனக்கு வைப்பாட்டியாய் இருப்பதே பிடித்திருக்கிறது. அதை நான் கௌரவக்குறைவாய் நினைக்கவில்லை. ஆனால் ஒரு விஷயம் வசந்தீ! திருமணத்திற்கு பணம் வேண்டும். அழகு வேண்டும். வயது வேண்டும். திருமணம் நடக்க இன்னும் என்னவெல்லாமோ வேண்டும். அந்தத் திருமணத்திலிருந்து வெளியேறிவிட்டால் மறுபடியும் திருமணம் நடக்காது. வாழ்க்கையில் பாதுகாப்பு இருக்காது. ஆனால் எனக்கு அன்பு மட்டும்தான் வேண்டும். அந்த நபர் எனக்கு வேண்டும். அவன் எனக்குச் சொந்தமாக வேண்டும் என்றால் இரண்டு திருமணங்கள் தடையாய் இருக்கு.
ஒன்று எனக்கு ஆகாத திருமணம்.
இரண்டாவது அவனுக்கு ஆகிவிட்ட திருமணம்.
பணம், வயது இவற்றுடைய பிரமேயம் இல்லாமல் ஆண் பெண்ணுக்கு இடையே பந்தம் ஏற்பட முடிந்தால், திருமணமாகி பிரிந்து விட்ட பெண்ணுக்கு வாழ்க்கை நரகமாக ஆகாமல் இருந்திருந்தால்,
எங்களுடைய உறவு இப்படி இருந்திருக்காது.
என்னுடையது நியாயம் இல்லை என்று சொல்லும் முன் நியாயத்தைப் பற்றி யோசி. அதற்கும் பணத்திற்கும் உள்ள உறவைப் பற்றி யோசி. திருமணமான பெண்ணுக்கு கணவனைத் தவிர வேறு போக்கிடம் இல்லாத அவலநிலையைப் பற்றி யோசி. இதையெல்லாம் யோசித்துவிட்டுத்தான் எனக்குத் தோன்றிய வழியை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அது உனக்குப் பிடிக்கவில்லை. அந்த விஷயத்தை இனி விட்டு விடு.” சாந்தாவின் முகம் களையிழந்தது. கட்டில் மீது போர்வையை சரிப்படுத்தி விட்டு ” வா உட்கார்ந்து பேசுவோம்” என்றாள்.
வசந்திக்கு உடனே அங்கிருந்து போய்விட வேண்டும் போல் தோன்றியது. சாந்தா வருத்தப்பட்டுக் கொண்டாலும் சரி, எப்படியாவது இந்த இடத்தை விட்டுப் போய் விட வேண்டும்.
“டைம் என்ன ஆகிறது?” என்றாள் கைகடியாரத்தைப் பார்த்துக் கொண்டே.
“பத்தரை”
“ரோகிணிக்குப் ·போன் செஞ்சு பார்ப்போம். அவளுடைய கணவர் வந்து என்னை அழைத்துக் கொண்டு போக முடியுமா என்று கேட்கணும். தூங்குவதற்கு முன்னால் குளிக்கவில்லை என்றால் என்னால் சரியாக தூங்க முடியாது. துணிமணி அங்கே இருக்கு. இன்னொருத்தரின் உடைகளை போட்டுக் கொள்வதும் எனக்குப் பிடிக்காது.”
சாந்தா மறுபேச்சு பேசாமல் எழுந்து போய் ரோகிணிக்கு ·போன் செய்தாள். “வசந்தி அங்கேயே வந்து விடலாம்னு நினைக்கிறாள். உன் கணவர் இங்கே வந்து அழைத்துக் கொண்டு போக முடியுமா என்று கேட்கிறாள்.”
“என்ன ஆச்சு? திடீரென்று எண்ணத்தை மாற்றிக் கொள்வானேன்? ராதாகிருஷ்ணன் அங்கே வந்தானா என்ன?”
“ராதாகிருஷ்ணனின் பிரஸ்தாபனை மட்டும் வந்தது. வசந்தியால் அதையே தாங்கிக் கொள்ள முடியவில்லை.”
சாந்தா முறுவலுடன் ·போனை வைக்கும் போது வசந்தி வியப்புடன் பார்த்தாள்.
“ராதாகிருஷ்ணனை ரோகிணிக்குத் தெரியும்” என்றாள் சாந்தா சாதாரணமாக இருப்பதற்கு முயற்சி செய்து கொண்டே.
காலிங்பெல் ஒலித்ததும் சாந்தா போய் கதவைத் திறந்தாள். ஹாஸ்டலில் வசிக்கும் மாணவிகள் ரூபாவும் லக்ஷ்மியும் நின்றிருந்தார்கள்.
“மேடம்! ரம்யாவுக்கு ரொம்ப ஜுரமாய் இருக்கு. க்ரோசின் மாத்திரையைப் போட்டுக் கொள்ளச் சொன்னால் “மேடம் விழித்துக் கொண்டிருப்பார்களோ என்னவோ? ஏதாவது மாத்திரையை தரச் சொல்லேன்” என்று அழுதுக் கொண்டிருக்கிறாள்” என்றாள் ரூபா.
புத்தகத்தையும், மருந்து பெட்டியையும் கையில் எடுத்துக் கொண்டே “வாங்க போகலாம்” என்றவள் “வசந்தீ! ஹாஸ்டல் வரைக்கும் வருகிறாயா? இங்கேயே உட்கார்ந்திருப்பாயா?” என்று கேட்டாள்.
வசந்திக்கு தனியாக உட்கார்ந்திருக்க என்னவோபோல் இருந்தது. “வா போகலாம்” என்றாள்.
நால்வரும் அந்த இருளில் மரங்களுக்கு நடுவில் ஹாஸ்டல் கட்டிடத்தை நோக்கி நடந்தார்கள்.
சாந்தாவுக்கு ஹோமியோபதி வைத்தியம் தெரியும். ஹாஸ்டலில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு தேவைப்பட்டால் மருந்துகளை தருவாள். ரம்யாவைப் போன்ற மாணவிகள் இந்த தித்திப்பு மாத்திரைகளுக்கு பழக்கப்பட்டு விட்டார்கள்.
சாந்தா ரம்யாவிடம் சென்றாள். “ஜுரம் வந்தால் யாராவது சின்னக் குழந்தையைப் போல் அழுவார்களா என்ன?” என்று கிண்டலடித்துக் கொண்டே டெம்பரேச்சரை பார்த்தாள்.பொதுவாக பேசிக் கொண்டே மாத்திரையைக் கொடுத்தாள். ஊர்க் கதைகளை பேசி மாணவிகளை சிரிக்க வைத்தாள்.
அதே அறையில் இருபது வருடங்களுக்கு முன்னால் ஜுரம் வந்து அழுது கொண்டிருந்த தன்னை சமாதானப்படுத்தி எப்படி சிரிக்க வைத்தாளோ இன்றும் அதே போல் ரம்யாவை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சாந்தாவைப் பார்த்து வசந்தி ஆச்சரியமடைந்தாள்.
சாந்தா ரொம்ப மாறி விட்டாள். மாறவே இல்லை. இதில் எது உண்மை? இரண்டுமே உண்மைதானோ? தான் ஏன் இவ்வளவு அமைதி இல்லாமல் இருக்கிறாள்? சாந்தாவின் மனதை நோகடிப்தற்காகத்தான் தான் இங்கே வந்திருப்பது போல் தோன்றியது. சாந்தாவைப் பார்க்காமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அவ்வளவு குளிர்காற்றில் கூட வசந்திக்கு வியர்த்துக் கொட்டி உடல் கசகசவென்றிருந்தது. மூளை கொதித்துக் கொண்டிருப்பது போல் உச்சந்தலை சூடாக இருந்தது. இருவரும் வீட்டுக்கு வரும் போது ரோகிணி ஹாலில் உட்கார்ந்திருந்தாள். வசந்தி நின்று கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு “உட்காரு” என்றாள் ரோகிணி.
“போகலாம்” என்றாள் வசந்தி உட்கார்ந்து கொள்ளாமல்.
“எங்கே போகிறது இந்த ராத்திரி நேரத்தில்? உன் துணிமணிகளை கொண்டு வந்திருக்கிறேன். போய் குளி. ஷியாம் என்னை இங்கே இறக்கி விட்டுட்டுப் போனார். நாம் நாளை காலையில் போகலாம்” என்றாள்.
வசந்தி திகைப்புடன் பார்த்தாள்.
சாந்தா செல்லமாக ரோகிணியின் தலையில் குட்டிவிட்டு தேநீர் போட்டுக் கொண்டு வருவதாக சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.
“நீ இப்படி நடந்து கொண்டால் சாந்தா வருத்தப்பட மாட்டாளா?” ரோகிணி லேசாக கடிந்துக் கொண்டாள்.
“எனக்கு ஏனோ அவள் செய்த காரியம் பிடிக்கவில்லை.”
“உனக்குப் பிடிக்காவிட்டால்? உனக்குப் பிடிக்குமா இல்லையா என்று யோசித்து விட்டு அதன்படி சாந்தா நடந்து கொள்ளணுமா? நீ வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பது எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால் நீ உன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வாயா?”
“அதுவும் இதுவும் ஒன்றா?”
“ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரவர்களுக்குப் பிடித்த விதமாக அவரவர்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள். நீ இப்படி சிறுப்பிள்ளைத்தனமாக யோசிப்பாய் என்று நினைக்கவில்லை.” கடிந்துகொள்ளும் தோரணையில் சொன்னாள் ரோகிணி.
“அப்போ அந்த மனைவியின் கதி என்ன?” பிடிவாதமாக கேட்டாள் வசந்தி.
“அவள் விஷயத்தை அவள் பார்த்துக் கொள்வாள். சாந்தா அவளுக்குத் தேவையான உதவியைச் செய்திருக்கிறாள். சாந்தா உண்மையிலேயே பிடிவாதம் பிடித்தால் ராதாகிருஷ்ணன் அவளுக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு வந்துவிட்டிருப்பான். சாந்தா அவளைப் பற்றி யோசித்துதான் இந்த விதமாக வாழ்ந்து வருகிறாள்.” திடமான குரலில் சொன்னாள் ரோகிணி. சாந்தா தேநீர் கொண்டு வந்தாள். வசந்தி குடிக்க மறுத்து விட்டாள்.
மூவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.
இருவருடன் உறவு வைத்திருப்பதை சாந்தாவால் எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது? ஏன் சகித்துக் கொள்ளணும்? வசந்திக்குப் புரியவில்லை.
“உன்னுடைய சாவித்திரி ஆல்பத்தை எடுத்துக் கொண்டு வா. அதைப் பார்த்தாலாவது வசந்திக்குக் கொஞ்சம் மூட் வரும்” என்றாள் ரோகிணி.
சாந்தா உள்ளே போய் ஆல்பத்தை எடுத்து வந்தாள்.
சிறு வயதில் இருவரும் சேர்ந்து தயாரித்த ஆல்பம். வெள்ளைக் காகிதங்களை சேர்த்து தைத்த புத்தகம். காகிதங்கள் பழசாகி போனாலும் கசங்காமல் இருந்தன.
“இன்னும் இருக்கா இந்த ஆல்பம்?” என்றாள் வசந்தி வியப்புடன் புத்தகத்தை வாங்கிக் கொண்டே.
“என்னால் ஏனோ அந்தப் புத்தகத்தை தூக்கிப் போட முடியவில்லை” என்றாள் சாந்தா.
அந்தப் பக்கங்களை புரட்டும் போது பத்து பதினாங்கு வயதில் தன் வாழ்க்கையைத் தொடுவது போலவே இருந்தது வசந்திக்கு.
விதவிதமான கோணங்களில் நடிகை சாவித்திரி!
பாசமலரில் அண்ணனின் அன்பில் கரைந்து போன தங்கையாய்,
மாயாபஜாரில் கடோத்கஜனின் குரலும் வற்சலாவின் உருவமும் கொண்ட இளவரசியாய்.
வசந்தி அந்த போட்டோக்களையும், அதன் கீழே தாம் எழுதிய வார்த்தைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தேவதாஸ் படத்தில் பார்வதியாய் சாவித்திரியின் போட்டோவுக்குக் கீழே எழுதியிருந்ததைப் படித்துக் கொண்டிருந்த போது சாந்தா சொன்னாள். “சின்ன வயதில் அந்த வாக்கியத்தை எப்படியெல்லாம் பாராட்டியிருக்கிறோமோ நினைவு இருக்கா? தேவதாஸ்தான் பார்வதியின் உண்மையான கணவன், பார்வதிக்கு யாருடன் திருமணம் ஆகியிருந்தாலும் சரி என்று. அது உண்மையும் கூட. பார்வதி அப்படித்தான் வாழ்ந்து வந்தாள். இன்று ராதாகிருஷ்ணன் யாருக்குக் கணவனாக இருந்தாலும் சரி எனக்குக் காதலன். என்னுடையவன்.” சாந்தாவின் கண்கில் நீர் தளும்பியது.
“ஆனால் பார்வதி உன்னைப் போல் இல்லை. கணவரையும், குழந்தைகளையும் எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டாள்?” வெறுப்பை குரலில் காண்பிக்காமல் வசந்தியால் இருக்க முடியவில்லை.
“பணிவிடைகளை செய்தாள். சமுதாயத்திற்கு பயந்த தேவதாஸின் கோழைத்தனத்தைப் பார்த்து வேறு வழியில்லாமல் பணிவிடைகளை செய்தாள். ஆனால் மனதில் மட்டும் தேவதாஸின் நினைப்புகள்தான். இன்று ராதாகிருஷ்ணன் கணவனாக தன் கடமைகளை சேய்து கொண்டிருக்கிறான். உள்ளூர என்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறான். நாங்கள் விரகம் தாங்க முடியாமல் குடித்து சீரழிந்து போகவில்லை. அப்படிச் செய்திருந்தால் உலகத்தாரின் இரக்கம் எங்களுக்கு சுலபமாகவே கிடைத்திருக்கும். மற்றவர்களுக்கு அதிகம் கஷ்டம் தராமல் எங்களுடைய சுகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம். சுகமாக இருப்பவர்களை சமுதாயம் இரக்கத்துடன் பார்க்காது. என்ன செய்வது?”
ரோகிணி இடையில் புகுந்து சாந்தாவின் பேச்சைத் தடுத்தாள். “வசந்தியிடமிருந்து உன் வாழ்க்கை முறைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று ஏன் முயற்சி செய்கிறாய்? சாந்தா! நீ வசந்தியை புரிந்துகொள். வசந்தியின் வாழ்க்கைமுறை, அவளுடைய நம்பிக்கைகள், மதிப்பீடுகள் எல்லாமே வேறு. அவற்றின்படி அவளால் உன் வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்றுக் கொள்ளவும் மாட்டாள். அந்த விஷயத்தை இனி விட்டு விடுங்கள். ஏதோ ஒரு விதமாக ஆணுடன் இருக்கும் உறவைப் பொறுத்துதான் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ளணுமா? ராதாகிருஷ்ணனுடன் சம்பந்தம் இல்லாமல் இருந்தால்தான் சாந்தாவின் நட்பு வேண்டும் என்று வசந்தி சொல்வது, வசந்தி தன் கணவனுடன் குடித்தனம் செய்தால்தான் அவள் என்னுடைய சிநேகிதி என்று நான் சொல்வது … இதெல்லாம் எவ்வளவு அர்த்மில்லாத விஷயங்கள்? அந்த விஷயங்கள் இல்லாமல் நமக்கு எவ்வளவு வாழ்க்கை இருக்கிறது? நமக்கு என்று எத்தனை எண்ணங்கள் இருக்கு? எத்தனை அனுபவங்கள் இருக்கு? முப்பத்தைந்து வருடங்கள் நிரம்பிய பந்தம் நம்முடையது. ஒரு நபர் ஒருவரின் வாழ்க்கையில் நுழைந்ததும் அந்த பந்தம் அறுந்து போய்விட வேண்டுமா? அந்த விஷயத்தை ஆழமாக யோசித்து புரிந்துகொள்வதற்கு ஏன் முயற்சி செய்யக் கூடாது? புரியவில்லையா? போகட்டும். எனக்குப் புரியவில்லை என்றால் என்ன நஷ்டம்? அதனுடைய கஷ்டசுகங்களை அவளே அனுபவிக்கட்டும் என்று மௌனமாக இருக்கலாம் இல்லையா.
எல்லோரும் … நாம் எல்லோருமே அதே தவறைதான் செய்துகொண்டிருக்கிறோம். ஒரு ஆணுடன் சம்பந்தப்படுத்தாமல் ஒரு பெண்ணை தனி மனுஷியாக பார்க்க மாட்டோம்.” ரோகிணி எழுந்து போய் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
வசந்தி சாந்தாவின் கையைப் பற்றிக் கொண்டு “சாந்தா! ஐ யாம் சாரி” என்று முணுமுணுத்தாள்.
“போய் படுத்துக்கொள். எனக்கு இப்போ தூக்கம் வராது. சற்று நேரம் புத்தகம் ஏதாவது படிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சாந்தா பக்கத்து அறைக்குச் சென்றுவிட்டாள்.
வசந்திக்கு தூக்கம் வரவில்லை. “ஆணுடன் இருக்கும் உறவை பொறுத்துதானா பெண்ணின் வாழ்க்கை?” என்ற ரோகிணியின் கேள்வி மண்டைக்குள் குடைந்துகொண்டே இருந்தது. அந்தக் கேள்வி வசந்திக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.
“இல்லையா பின்னே? சுரேஷ் இல்லா விட்டால் தன் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன இருக்கிறது? சுரேஷ், லாவண்யா, சவிதா இவர்கள்தான் தன் வாழ்க்கையில் எல்லாமே. இவர்கள் மீதுதான் சார்ந்திருக்கிறாள். அவர்கள் இல்லை என்றால் தன் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை.
“அவள்தான் சுரேஷின் மனைவி” என்று பத்து பேர் சொல்லும் போது தனக்கு எவ்வளவு பெருமையாய் இருக்கும்?
“லாவண்யா, சவிதாவின் தாய் அவள். குழந்தைகளை ரொம்ப நன்றாக வளர்த்திருக்கிறாள்” என்று எல்லோரும் பாராட்டும் போது எவ்வளவு திருப்தியாக உணர்ந்தாள்?
லாவண்யாவுக்குக் கல்யாணம் முடிந்து போகும் போது ஒரு பக்கம் துக்கமாக இருந்தாலும் இன்னோரு பக்கம் நல்லபடியாய் கடைமையை முடித்துவிட்ட நிம்மதி ஏற்பட்டது.
லாவண்யா, கவிதாவின் அன்புக்கு முன்னால் ..
“அம்மா!” என்று அவர்கள் அழைக்கும் போது ஏற்படும் திருப்திக்கு முன்னால்….
அவர்களுடைய விருப்பங்களை தீர்த்து வைக்கும் போது ஏற்படும் உவக்கைக்கு முன்னால் ..
வேறு ஏதாவது பந்தம் நிற்க முடியுமா? தன்னுடைய குடும்பம், தன் குடித்தனம், இருபது வருடங்களாக தான் உழைத்து உருவாக்கிய பூந்தோட்டம் இல்லை என்றால் தன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன இருக்கிறது?
இல்லவே இல்லை.
அர்த்தம் நிறைந்த அது போன்ற வாழ்க்கை அமையாததால்,
அர்த்தம் நிறைந்த வாழ்க்கையை வாழும் என்னைப் பார்த்து பொறாமைபட்டுக்கொண்டு,
கணவன் இல்லாவிட்டால் உன் வாழ்க்கையே வேறு என்று சொல்கிறார்கள்.
அப்படிப்பட்ட வாழ்க்கை தனக்குத் தேவையில்லை. வேண்டவே வேண்டாம்.
அமைதியான தன் வீடு. சுத்தம் சுகாதாரம் நிறைந்த தன் வீடு. புனிதமான தன் வீடு.
அது இல்லததால் அர்த்தம் இல்லாமல் ஏதேதோ சொல்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை தனக்குத் தேவையில்லை. தன் உலகம் வேறு. தன் எல்லைகள் வேறு. வீட்டை விட்டு வெளியே வந்தால் இந்த உலகத்தில் தன்னால் ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை.
கூடிய சீக்கிரம் இந்த இடத்தை விட்டு போக வேண்டும். மறுபடியும் தன் வீட்டுக்கு, தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும் வீட்டுக்கு போக வேண்டும். குடித்தனத்தை எப்படி சீராக வைத்துக் கொள்வது என்று லாவண்யாவுக்கு கற்றுத் தர வேண்டும். சவிதாவின் மனதை திருமணத்தின் பக்கம் திசை திருப்ப வேண்டும். சுரேஷின் களைப்பை போக்கி எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலையாய் கொந்தளிக்க வசந்தா அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.
பின்னால் வந்த இரண்டு நாட்களும் வசந்திக்கு பொழுது போவது கஷ்டமாக இருந்தது. ஓரு நாள் தாங்கள் படித்த பள்ளிக் கூடத்திற்கு போய் விட்டு வந்தார்கள். ஏற்கனவே இருந்த ஆசிரியர்களில் ஓரிருவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. ஸ்கூல் கட்டிடம் அப்படியே இருந்தாலும் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டிருந்தது.
“நம்மை பயமுறுத்தியதைப் போல் இந்தக் காலத்துக் குழந்தைகளை பயமுறுத்த முடியவில்லை.” சத்தமும், கும்மாளமுமாக காம்பவுண்ட் முழுவதும் ஓடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே வசந்தி சொன்னாள்.
“இந்தக் காலத்து குழந்தைகள் ஆசிரியர்களையே பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள் ரோகிணி தன்னுடைய குழந்தைகளை நினைவு படுத்திக் கொண்டே.
பெல் அடித்ததுமே குழந்தைகள் வகுப்பை நோக்கி ஓடினார்கள். கிரவுண்ட் முழுவதும் காலியாகிவிட்டது. திடீரென்று நிசப்தமாகிவிட்ட கிரவுண்டுக்கு நடுவில் நின்றிருந்த அவ்விருவருக்கும் தாம் அங்கே விளையாடியது, பாடியது எல்லாம் திரைப்படக் காட்சி போல் கண்முன் தோன்றியது. அந்தக் கனவுலகிலிருந்து சட்டென்று அவர்களால் மீண்டு வரமுடியவில்லை.
மறுநாள் ரோகிணி மறுத்த போதும் கேட்காமல் வசந்தி தட்டை, முறுக்கு, தேங்குழல் செய்தாள். “குழந்தைகள் நான்கு நாட்களுக்கு சாப்பிடுவார்கள். நீ அவர்களுக்கு கேக்கும், பிஸ்கெட்டுமாக வாங்கித் தருகிறாய். அதைச் சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து விட்டிருக்கும். நீ ஆஸ்பத்திரிக்கு போய் வரும் வரையில் நான் என்ன செய்யட்டும்?” வசந்தி ரோகிணியை பதில் பேசவிடவில்லை.
ரோகிணி மதியம் இரண்டரை மணிக்கு வரும் போது வசந்தி வியர்க்க விருவிருக்க வேலைக்காரப் பெண்ணின் உதவியுடன் செய்த பட்சணங்களை எல்லாம் டப்பாக்களில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
“எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறாய்?” என்று ரோகிணி கேட்ட போது, “மாலையில் குழந்தைகள் வந்ததும் பாரு, எப்படி சாப்பிடுவாங்களோ” என்றாள் வசந்தி வியர்வையை தலைப்பால் ஒற்றிக் கொண்டே.
மாலையில் ரோகிணியின் குழந்தைகள் இருவரும் தட்டை, முறுக்கை பார்த்து துள்ளிக் குதித்தார்கள்.
“அம்மா! வசந்தி ஆன்டீயிடம் கற்றுக்கொள். நாமே முறுக்கும் தட்டையும் செய்யலாம்” என்றார்கள்.
“இனி தினமும் முறுக்கைக் கொண்டுவா, மாலாடுவைக் கொண்டுவா என்று கேட்டால் நான் எங்கே போவேன்?” ரோகிணி பயந்தாற்போல் நடித்தாள்.
அதற்குப் பிறகு வசந்திக்கு பொழுது போகவில்லை. மறுநாளே கிளம்புகிறேன் என்று பிடிவாதம் பிடித்தாள். உடனே டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்தாள். அன்று மாலை ரோகிணி ஆஸ்பத்திரிக்குப் போகவில்லை.
“நாளைக்குப் போய் விடப் போகிறாயே, சாந்தாவைப் பார்த்து விட்டு வருவோமா?” என்று கேட்டாள்.
“வேண்டாம். இப்பொழுது எனக்கு எங்கேயும் போகணும் போல் இல்லை” என்றாள் வசந்தி ஆர்வமற்ற குரலில்.
“நீ சாந்தா விஷயத்தில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாயோ எனக்குப் புரியவில்லை. பாவம்! அவள் என்ன நினைத்துக் கொள்வாள்?”
“நீ என்னதான் சொல்லு. சாந்தா செய்த காரியம் எனக்குப் பிடிக்கவில்லை. ஒன்று கல்யாணம் பண்ணிக் கொள்ளணும். இல்லையா தனக்கு அந்த யோகம் இல்லைன்னு ஒழுக்கத்துடன் வாழணும். அவ்வளவுதானே தவிர..” வெறுப்புடன் நெற்றியைச் சுளித்தாள் வசந்தி.
“ஒழுக்கத்துடன் வாழணும். எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டாய். காதல் எதிர்பட்ட போது அதை மறுத்து ஒழுக்கத்துடன் வாழ்க்கையை நடத்துவது அவ்வளவு சுலபமா? அப்படி இருக்க வேண்டிய அவசியம்தான் என்ன?” வாதம்புரிய தயாராகிவிட்டாள் ரோகிணி.
“ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.”
“ஏற்றுக்கொள்ள வேண்டாம். புரிந்துகொள்ளலாம் இல்லையா?”
வசந்தி பதில் பேசாமல் மௌனமாக இருந்துவிட்டாள்.
சாந்தாவைப் பார்க்காமலேயே சென்னைக்கு ரயில் ஏறினாள். சென்னையில் ரயிலை விட்டு இறங்கி ஆட்டோவில் வீட்டுக்குப் போய்க் கொண்டே “திருச்சி திருச்சின்னு தேடிக் கொண்டு போனேனே ஒழிய எல்லாம் வெறும் பிரமை. எனக்கு வேண்டியது திருச்சியில் இல்லவே இல்லை. சென்னையில்தான் இருக்கிறது. இந்த நகரத்துடன்தான் என் வாழ்க்கை பிணைந்திருக்கிறது” என்று நினைத்துக் கொண்டாள்.
மதியம் இரண்டு மணி வாக்கில் வீட்டுக்குப் போய் சேர்ந்த வசந்தி இரவு எட்டு மணி வரையிலும் மூச்சுகூட விட முடியாதபடிக்கு வேலையில் மூழ்கிவிட்டாள்.
வீடு முழுவதும் ஒரே தூசியும், குப்பையுமாய் இருந்தது. வீட்டைப் பெருக்கி துடைத்து ஒழுங்குப் படுத்தி விட்டு சமையலை முடிக்கும் போது இரவு எட்டரை ஆகிவிட்டது.
“சுரேஷ¤க்கு டெலிகிராம் கிடைக்கவில்லையா? ஸ்டேஷனுக்கு வராவிட்டாலும் போகட்டும், நேரத்தோடு வீட்டுக்கு வரலாம் இல்லையா?” என்று நினைத்தபடி நிமிடங்களை எண்ணத் தொடங்கினாள். சமீபகாலமாய் ரொம்பவும்தான் வீட்டில் இருக்காமல் வெளியிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். எப்போதும் ஆஸ்பத்திரி, நோயாளிகள் .. இதுதான் அவருடைய உலகம். லாவண்யாவின் கல்யாணத்திற்கு கடனாகிவிட்டது என்று சமீபத்தில்தான் க்ளினிக் ஒன்றை திறந்திருக்கிறார். இவரையொத்த டாக்டர்கள் எல்லோரும் எப்படியெல்லாமோ சம்பாதிக்கிறார்கள். இவருக்கு அரசாங்கம் கொடுக்கும் சம்பளம்தான் ஆதாரம். தான் எவ்வளவு சிக்கனமாக, சாமர்த்தியமாக குடித்தனத்தை நடத்திக் கொண்டு வருகிறாளோ யாருக்கும் தெரியாது. லாவண்யாவுக்கு வரதட்சணை என்று கொடுக்காவிட்டாலும் அளவுக்கு மீறி செலவாகிவிட்டது. “இருப்பது இரண்டே மகள்கள்தானே. பின்னால் இரண்டு பேருக்கும் ஆளுக்கு பாதியாக கொடுத்துவிடுங்கள்” என்றார் லாவண்யாவின் மாமனார். நல்ல வேளை! இப்பொழுதே இரண்டு லட்சம் வரதட்சிணை கொடுங்கள் என்று கேட்டிருந்தால் என்ன செய்திருப்போம்? சுரேஷ¤க்கு கிராமத்தில் இருக்கும் நிலத்தை விற்றாலும் அவ்வளவு பணம் கிடைத்திருக்காதோ என்னவோ. அந்த நிலத்தையும், வீட்டையும் பார்த்துதானே அவர்களும் பண்ணிக் கொண்டார்கள்.
ஆஸ்பத்திரிக்கு போன் செய்தாள். இல்லை என்று சொன்னார்கள். க்னிக்கில் இந்த நேரத்திற்கு மேல் இருக்க வாய்ப்பு இல்லை. எங்கே போயிருப்பார்? சலித்துக் கொண்டே படுக்கையில் படுத்துக் கொண்டாள். தன் வீட்டில் இருக்கிறோம் என்ற நிம்மதியில் வசந்தி ஆழமான தூக்கத்தில் மூழ்கிவிட்டாள். காலிங்பெல் அடித்த ஓசையைக் கேட்டதும் திடுக்கிட்டு கண்விழித்தாள். சுரேஷ் வந்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டே பரபரப்புன் ஓடிப் போய் கதவைத் திறந்தாள்.
“எப்பொழுது வந்தாய்?” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் சுரேஷ்.
“டெலிகிராம் கிடைக்கவில்லையா?” அவன் பின்னாலேயே உள்ளே போனாள் வசந்தி, கண்களைக் கசக்கிக் கொண்டே.
“கிடைத்தது.” சுருக்கமாக பதில் சொன்னான் சுரேஷ்.
“பின்னே அப்படி கேட்கிறீங்களே? வைகையில் வந்தேன். இத்தனை நேரம் எங்கே போயிருந்தீங்க?” என்று கேட்டுக் கொண்டே கடியாரத்தைப் பார்த்தாள் வசந்தி.
மணி நான்கு.
“நான்கு மணியாகிவிட்டதா? விடியப் போகிறதா? எங்கே இருந்தீங்க இத்தனை நேரம்? நான் வருகிறேன் என்று தெரிந்த பிறகும் வீட்டுக்கு வராமல் எங்கே போயிருந்தீங்க?” வசந்திக்குக் கோபம் வந்து விட்டது.
சுரேஷ் பதில் சொல்லாமல் உடைகளை மாற்றிக் கொள்ளத் தொடங்கினான்.
“கேட்டால் பதில் சொல்லாமல் இருப்பானேன்? பார்ட்டீ ஏதாவது இருந்து தொலைத்ததா என்ன?”
“இல்லை.”
“பின்னே எங்கேதான் போனீங்க? நான் இல்லாத போது வேறு எவளையாவது ஏற்பாடு செய்து கொண்டீங்களா என்ன?” கேட்டுக் கொண்டே சுரேஷிடம் கைலியை நீட்டினாள் வசந்தி.
“ஆமாம்” என்றான் சுரேஷ்.
“ஆமாவா?” நக்கலடித்தபடி உதட்டை சுழித்தாள். “அந்தப் பெண்மணி யாராம்?” தூண்டுவது போல் கேட்டாள்.
“நீலிமா. எங்க ஆஸ்பத்திரியில் டாக்டர்.”
“ஷ்! போதும் உங்க பேச்சும் நீங்களும். யாரோ ஒரு பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவானேன்?” கட்டிலில் படுத்துக் கொண்டே தூக்கக் கலக்கத்தில் கொட்டாவி விட்டாள்.
சுரேஷ் வந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். “உண்மைதான் வசந்தீ! ரொம்ப நாளாய் உன்னிடம் சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். உன்னை ஏமாற்றுவது போல் தோன்றுகிறது. நானும் நீலிமாவும்…” பாதியில் நிறுத்திவிட்டான்.
வசந்திக்கு உலகமே சூனியமாகி விட்டது போல் இருந்தது. என்ன யோசிப்பது என்று தெரியாமல் மூளை செயல்பட மறுத்துவிட்டது. உடலில் எல்லா உறுப்புகளும் ஸ்தம்பித்து விட்டாற்போல் அப்படியே சுரேஷை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீலிமாவுடன் என் நட்பு இவ்வளவு தூரத்திற்கு போகும் என்று நாங்கள் இருவருமே நினைக்கவில்லை. ஆனால் நடந்துவிட்டது. இதை உனக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பதை என்னாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.”
சுரேஷ் சொல்வது எதுவும் வசந்திக்குப் புரியவில்லை. “நீலிமா .. நான். நானும் நீலிமாவும்” இந்த இரண்டு சொற்கள்தான் புரிந்தன. அவைதான் மூளையில் சுழன்றுக் கொண்டிருந்தன.
“நீலிமா ..நான். நீலிமாவும் நானும்”
“வசந்தீ! என்னை புரிந்துகொள். உனக்கு அநியாயம் செய்ய மாட்டேன்.” சுரேஷ் சொல்லிக் கொண்டிருந்தான்.
வசந்தியின் உடலும், உள்ளமும் சுவாதீனத்திற்கு வர மறுத்தன.
“இதெல்லாம் பொய். இப்படி எல்லாம் எதுவும் நடக்கவே இல்லை. இந்த பேச்சு, இந்த வார்த்தைகள் எதுவுமே நிகழவில்லை. பத்து நிமிடங்களுக்குப் முன்னால் இருந்த தன் வாழ்க்கை திரும்பவும் வந்து விடப்போகிறது.
உடலும் உள்ளமும் போராடிக் கொண்டிருந்தன, பத்து நிமிடங்களுக்கு முன்னால் இருந்த வாழ்க்கைக்காக, காலத்தை அழிப்பதற்காக. மெள்ள மெள்ளமாக மறுபடியும் ரத்தம் உடலில் பாயத் தொடங்கியது. இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
“இன்று நீ கேட்டது நல்லதாகிவிட்டது. இந்த விஷயத்தை உன்னிடமிருந்து மறைப்பது எனக்கு நரகமாக இருக்கிறது.”
சுரேஷின் குரல் மறுபடியும் வசந்தியின் சக்தியை முழங்கடித்துவிட்டது.
“ஏதாவது பேசு வசந்தீ!”
“என்ன பேசட்டும்? வசநதியின் குரலில் துக்கம் பெரிய அலைபோல் எழும்பியது.
விசும்பி விசும்பி அழுதுக் கொண்டிருந்த வசந்தியை சுரேஷ் அருகில் இழுத்துக் கொண்டான். “வசந்தீ! எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நீ இப்படி அழுதால் எப்படி?”
“அழாமல் என்ன செய்யட்டும்?” வசந்தியின் குரலில் துக்கமும், கோபமும் கலந்திருந்தன. “எவ்வளவு நாட்களாய்?”
“ஆறுமாதங்களாய்.”
“ஆறுமாதங்களாகவா?” வசந்தி அழுது கொண்டிருந்தாள்.
“வசந்தீ! அழாதே. உனக்கு எந்த அநியாயமும் நடக்காது.”
“இன்னும் என்ன நடக்கணும்? நீங்க பேசாதீங்க. போங்க அந்தப் பக்கம்” சுரேஷைப் பிடித்து தள்ளினாள்.
சுரேஷ் பேசாமல் உட்கார்ந்துகொண்டான்.
ஆறுமாதங்களாக நீலிமாவும் சுரேஷ¤ம்… அதாவது லாவண்வின் திருமணத்தின் போதே இவர்களிருவரும் ..சீ …சீ..
என்ன செய்வது? தன்னுடைய நிலைமை என்ன? எவ்வளவு தைரியமாக சொல்கிறார்?
இப்படி எல்லாம் ஏன் நடந்தது? இதெல்லாம் என் வாழ்க்கையில்தான் நடக்கணுமா?
என் குடும்பம், என் வீடு, என் கணவன், என் குழந்தைகள். இதெல்லாம் என்னுடையது.
இது எப்படி நடந்தது? சுரேஷ¤க்கு என்னிடம் விருப்பம் இல்லையா?
எத்தனை முறை புகழ்ந்திருக்கிறான், நீ என் மனைவியானது என்னுடைய அதிர்ஷ்டம் என்று.
முத்து முத்தான குழந்தைகளைப் பெற்றுத் தந்தாய் என்று எத்தனை முறை கொஞ்சி குலாவியிருக்கிறான். அதெல்லாம் பொய்தானா?
இப்போ ஆறுமாதங்களாக இருக்கும் உறவு மட்டும்தான் உண்மையா?
எப்படி ஆக முடியும்?
இந்த குடித்தனம் பொய்தானா? இல்லை. இல்லவே இல்லை. எப்படியாவது இதிலிருந்து மீளணும்.
நான் இறந்து போகக் கூடாது.
இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டதும் வசந்தியால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
உரத்தக் குரலில் அழுது கொண்டிருந்த வசந்தியின் அருகில் வந்தான் சுரேஷ்.” வசந்தீ! உன்னை வருத்தப்பட வைக்கணும்னு நான் நினைக்கவில்லை. உன் மீது எனக்குக் கோபமும் இல்லை.”
“நீங்க பேசாதீங்க.” உரத்தக் குரலில் கத்தினாள் வசந்தி. “ஆறுமாதங்களாக என்னிடமிருந்து ஏன் மறைத்தீங்க?”
“நீ என்னவாகிவிடுவாயோ என்று பயமாக இருந்தது.”
“நான் என்னவாகிவிடுவேனோ என்று பயம்! அந்த பயம் இருந்தால் இப்படி நடந்திருக்குமா? அதெல்லாம் வெறும் பேச்சு. நடக்க வேண்டியது எப்பவோ நடந்து விட்டது.” வசந்தி பைத்தியம் போல் அழுது கொண்டிருந்தாள்.
பொல பொலவென்று பொழுது விடிந்தது. வசந்தி கட்டிலை விட்டு எழுந்துகொள்ள வில்லை. சுரேஷ் காபி கலந்து எடுத்து வந்தான். வசந்தி குடிக்கவில்லை.
பத்து மணிக்கு மேல் சுரேஷ் வெளியில் போனான்.
எங்கே போயிருப்பான்? அந்த நீலிமாவிடம்தானா?
அந்த நினைப்பு வந்ததும் எழுந்து உட்கார்ந்துகொண்டாள் வசந்தி.
“வசந்தியிடம் சொல்லிவிட்டேன். இனி ரகசியமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று நீலிமாவிடம் சொல்லப் போகிறானா?
வசந்தி அழுதுகொண்டே படுத்திருந்தாள்.
இருவரும் சேர்ந்து தன் மீது இரக்கம் காட்டுவார்களா? இல்லை நக்கலாக சிரித்துக் கொண்டிருப்பார்களா?
வசந்தியின் மனம் முழுவது வெறுப்பு நிரம்பியது. மெதுவாக கட்டிலை விட்டு எழுந்து கொண்டாள். எதிரே நிலைக் கண்ணாடியில் தன் முகம் தனக்கே பயங்கரமாக காட்சி தந்தது. களைப்பு, சோர்வு, இரவு முழுவதும் தூங்காமல் அழுததால் சிவந்துவிட்ட கண்கள், கண்களுக்குக் கீழே கருவளையங்கள். வசந்திக்கு தன் மீதே இரக்கம் தோன்றியது.
தான் அழகாக இல்லையா? கிழவியாகிவிட்டாளா? முகத்தில் தென்பட்ட சுருக்கங்களைக் கவனமாக பரிசீலித்தாள்.
ஐந்து நிமிடங்கள் கண்ணாடியில் தன் உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பிறகு அங்கிருந்து எழுந்து கொண்டாள். குளித்துவிட்டு காபியைக் குடித்தாள். சமையலை முடித்தாள். மனதில் சுழன்றுக் கொண்டிருந்த எண்ணங்களை வலுக்கட்டாயமாக ஒதுக்கிவிட்டு வீட்டு வேலைகளை மளமளவென்று செய்தாள். வீட்டை ஒழுங்குப் படுத்தினாள்.
இந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அண்ணாவிடம் சொல்லி பிரயோஜனம் இல்லை. அவனும் இது போன்ற சிக்கலில் மாட்டிக் கொண்டு ரொம்ப கஷ்டபட்டு அதிலிருந்து மீண்டு வந்தவன்தான். அவனால் சுரேஷ¤க்கு எடுத்துச் சொல்ல முடியாது. அண்ணியிடம் சொன்னால் என்ன சொல்வாளோ? அந்த யோசனை வந்ததும் ஆட்டோவில் கிளம்பிப் போனாள்.
“ஊரிலிருந்து எப்போ வந்தாய்?” வாசலுக்கு வந்து வரவேற்றாள் லக்ஷ்மி.
“நேற்றே வந்து விட்டேன்” சோர்ந்து போன குரலில் சொல்லிவிட்டு வலுக்கட்டாயமாக முறுவலித்தாள் வசந்தி.
“உடம்பு சரியாக இல்லையா? சுரத்தாக இல்லையே? உட்காரு முதலில்” என்று குடிக்க தண்ணீர் கொண்டு வருவதற்காக உள்ளே போனாள். லக்ஷ்மி தண்ணியைக் கொண்டு வந்த போது வசந்தி கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
லக்ஷ்மி என்ன நடந்தது என்று பரபரப்புடன் கேட்டாள்.
விசும்பலுக்கு நடுவில் நடந்ததை எல்லாம் சொன்னாள் வசந்தி.
“இந்த ஆண்களுக்கு புத்தி ஏன்தான் இப்படிப் போகிறதோ? ஒரு பக்கம் குழந்தைகள் வளர்ந்து கல்யாணம் ஆகிக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் இவர்களுடைய ராசலீலைகள்! கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல்” வார்த்தைகளில் வெறுப்பைக் கொட்டினாள்.
“அண்ணீ! நான் என்ன செய்யட்டும்? என்னால் அந்த வீட்டை விட்டுட்டு இருக்க முடியாது.” அழுகையினூடே சொன்னாள் வசந்தி.
“உனக்கென்ன தலையெழுத்து வீட்டை விட்டு வெளியேறுதற்கு? இந்த கூத்தெல்லாம் மூன்று நாட்களுக்குதான். இந்த மூன்று நாட்களும் நாம் வாயை மூடிக் கொண்டுதான் இருக்கணும். வேறு வழியில்லை. நீ அவசரப் பட்டுக் கொண்டு அவனிடம் சண்டை போடாதே. பொறுமையாய், அமைதியாய் இரு. நீ அவசரப்பட்டாய் என்றால் முதலுக்கே மோசமாகிவிடும். அந்த எரிச்சலில் அவன் ஏதாவது செய்தால் நஷ்டம் நமக்குத்தான். ஏதோ நான்கு நாட்கள் புது மோகத்தில் ஊர் சுற்றுவார்கள். அந்த மோகம் தீரும் வரையில் மௌனமாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. நீ ஏதாவது தொண தொணத்தால் அவன் அந்தப் பக்கம் சாய்ந்து விடுவான். நீ அழுது புலம்பாமல் ஒன்றுமே நடக்காதது போல் சிரித்த முகத்துடன் இரு. அவனுக்கு எல்லாம் செய்து கொடு. எந்தக் குறையும் வராமல் பார்த்துக்கொள். இதை எல்லாம் அவன் உன்னிடம் சொல்லவே இல்லை என்றால் என்ன செய்திருப்பாய்? அப்படியே இரு. ஆண்களுக்கே புத்தி கொஞ்சம் கோணல்தான். நீ சிரித்த முகத்துடன் வளையம் வந்து கொண்டிருந்தால் அவள் மீது இருக்கும் மோகம் தானே குறைந்து போய்விடும். இந்த கஷ்டங்களை எல்லாம் நான் அனுபவிக்கவில்லையா என்ன?”
லக்ஷ்மி தன்னுடைய அனுபவத்தை எல்லாம் கோடிச்சு வசந்தியிடம் அறிவுரை வழங்கினாள். அண்ணி பேச்சை கேட்ட பிறகு வசந்திக்கு தைரியம் வந்தது. நிலைமை தன்னுடைய கட்டுக்குள் இருப்பது போல் தோன்றியது.
அங்கேயே சாப்பிட்டு விட்டு நான்கு மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். சுரேஷ் வீட்டிலேயே இருந்தான். வசந்தியைப் பார்த்ததும் பதற்றத்துடன் கேட்டான்.
“எங்கே போயிருந்தாய்? இத்தனை நேரம் எங்கே இருந்தாய்?”
“அண்ணியின் வீட்டுக்கு” என்றாள் அவள் அறைக்குள் போய்க் கொண்டே.
“என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கக் கூடாதா? நான் சாப்பாட்டுக்கு வந்த போது நீ வீட்டில் இல்லை. இதோ வந்து விடுவாய் என்று காத்திருந்தால் வரும் ஜாடையே காணும். என்ன செய்வது என்று புரியாமல் பயந்துவிட்டேன்.”
“பயப்படுவானேன்? நான் ஒன்றும் சாகமாட்டேன்” என்றாள் கடினமான குரலில்.
சுரேஷின் முகம் வெளிறிப் போய்விட்டது. “வசந்தீ! ஏன் இப்படி பேசுகிறாய்? நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனை உனக்குப் புரியாது” என்று முணுமுணுத்தான்.
“நன்றாகத்தான் புரிகிறது. எவ்வளவு வேதனை இல்லாமல் இருந்தால் இந்தக் காரியத்தைப் பண்ணியிருப்பீங்க.” வலுக்கட்டாயமாக சிரிப்பை உதிர்த்தாள். சுரேஷ் அந்த கடுப்பான மொழியைக் கேட்டு பதில் சொல்லவில்லை. வசந்தி உள்ளே சென்று காபி கலந்து எடுத்து வந்தாள்.
“எங்கேயாவது வெளியே போகாலாமா?” காபியைக் குடித்துக் கொண்டே கேட்டான் சுரேஷ். வசந்தியைக் கொஞ்சமாவது சமாதானப்படுத்தி பேச வைக்க வேண்டும் என்று சுரேஷ் முயற்சி செய்தான்.
“எங்கே?” என்னதான் கட்டுப்படுத்த முயன்றாலும் வசந்தியின் குரலில் கத்தியின் கூர்மை வெளிபட்டது.
“சும்மா எங்கேயாவது போய் வருவோம்.”
“சரி கிளம்புவோம். புடவையை மாற்றிக் கொண்டு வருகிறேன்.”
வசந்தி ரொம்ப நாட்களுக்குப் பிறகு சிரத்தை எடுத்துக் கொண்டு பாந்தமாக, நேர்த்தியாக புடவையைக் கட்டிக் கொண்டாள். எப்போது போல் உடலைச் சுற்றிக் கொண்டால் போதும் என்று நினைக்கவில்லை. கண்களுக்கு மையைத் தீட்டினாள். தளர்வாக பின்னிக் கொண்டாள். காது பக்கம் கூந்தல் வரும் விதமாக வாரிக் கொண்டாள். புடவையின் கொசுவங்களை சரி செய்துக் கொள்ளும் போது “நீலிமாவுக்கு என்ன வயசு இருக்கும்?” என்ற எண்ணம் வந்து உடல் முழுவதும் அதிர்ச்சி அலையாய் பரவியது.
தன்னை விட சின்னவளாய் இருப்பாள். நிச்சயமாக சின்னவளாகத்தான் இருப்பாள். துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. வலுக்கட்டாயமாக அந்த துக்கத்தை கண்ணிமைகளுக்கு பின்னால் அடக்கிவிட்டு வெளியே வந்தாள்.
சுரேஷ் தன்னைப் பார்த்ததுமே வியப்படைந்ததையும், போகப் போக அந்த வியப்பு இரக்கமாய் மாறியதையும் கவனித்த வசந்திக்கு தன் மீதே அருவருப்பு ஏற்பட்டது.
“உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறானோ? பதினாறு வயது பாலாகுமாரியாய் சிங்காரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சிரித்துக் கொள்கிறானாய் இருக்கும். போய் அந்த நீலிமாவிடம் சொல்வானோ என்னவோ? தான் இப்படி பைத்தியம் போல் நடந்துக் கொள்வானேன்? ஒரு பக்கம் நீலிமாவும் நானும் என்று அவன் அவ்வளவு ஸ்பஷ்டமாக சொன்ன பிறகும் தான் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சீவி சிங்காரித்துக் கொண்டு ஸ்கூட்டர் பின்னால் உட்கார்ந்து கொண்டு… சீ .. சீ…ஸ்கூட்டர் பின்னாலிருந்து கீழே குதித்துவிட்டால் என்ன என்று தோன்றியது. பலவந்தமாக அடக்கிக் கொண்டாள். எலியட்ஸ் பீச் முன்னால் ஸ்கூட்டரை நிறுத்தினான் சுரேஷ். இருவரும் கடலைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொதுதான் பொழுது சாய்ந்து வானத்தில் இருள் பரவிக் கொண்டிருந்தது.
“அவளுக்கு என்ன வயசு?” திடீரென்று கேட்டாள் வசந்தி.
“யாருக்கு? நீலிமாவா? வயசு …” தடுமாறினான் சுரேஷ்.
“என்னை விட சின்னவளா?” குரலில் துக்கம் கலந்திருந்தது.
“இருக்கலாம். எனக்கு சரியாக தெரியாது.” சங்கடப்பட்டுக் கொண்டே முணுமுணுத்தான்.
“அழகாய் இருப்பாளா?”
“இப்போ அந்த விஷயம் எதுக்கு வசந்தீ! லாவண்¡வுக்குக் கடிதம் எழுதினாயா? அவள் எழுதி ரொம்ப நாட்களாகிவிட்டது இல்லையா? சவிதா பொங்கலுக்குக் கூட வரமாட்டாளாம். பரீட்சைகள் இருக்கு என்று எழுதியிருக்கிறாள். குழந்தைகள் இல்லை என்றால் எப்படியோ இருக்கு இல்லையா?” சுரேஷ் விடாமல் பேசிக் கொண்டிருந்தான்.
‘எவ்வளவு சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கிறான், எதுவுமே நடக்காதது போல்? தம் இருவருக்கும் நடுவில் யாருமே இல்லாதது போல், தம்முடையது சாதாரணமான குடும்பப் பிரச்னை என்பது போல்.’
மனதில் எழும்பிய கோபத்தை பலவந்தமாக அடக்கிக் கொண்டாள் வசந்தி. அவன் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கிறான். தான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளணும். இப்போ அவனைப் பிடுங்கி எடுத்து நிலைமையை மேலும் மோசமாக ஆக்கக் கூடாது. இதெல்லாம் சீக்கிரமாகவே முடிந்துவிடும். பின்னால் அவனே பச்சாத்தாபம் அடையப்போகிறான்.
இருவரும் அவரவர்களின் எண்ணங்களில் மூழ்கிவிட்டார்கள்.
“போகலாம் வாங்க” என்றாள் வசந்தி குளிர்ந்த காற்று உடலில் பட்டதும்.
சுரேஷ் மௌனமாக எழுந்துகொண்டு ஸ்கூட்டரை எடுத்தான்.

தொடரும் …..

தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation

author

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்

Similar Posts