உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 2

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


தான் உணர்ந்த ஓர் உணர்ச்சியை ஒரு மனிதன் வரிகளாலோ, ஒலியாலோ, ஒளி நிறத்தாலோ, நடனத்தாலோ, நாடகத்தாலோ அதே தன்மையில் மற்றவரும் உணரும்படிக் கடத்த முடிந்தால் அதுவே கலைப் படைப்பின் இயக்கம்.

கலைப் படைப்பு மானிடரின் ஒருவகை வாழ்வுப் போக்கே. ஒரு மனிதன் சுய உணர்வுடன் சிற்சில வெளிப்புறச் சைகைகள் மூலமாகத் தான் வாழ்ந்து உணர்ந்ததை பிறருக்கு அளிப்பது, அதனால் பிறர் பாதிக்கப்படுவது, அதே அனுபவத்தைப் பிறர் அடைவது.

மேனிலைச் சித்தாந்தவாதிகள் (Metaphysicians) கூறுவது போல் கலைப் படைப்பு கடளின் மர்மான ஆக்கமோ அல்லது அழகின் ஆக்கமோ இல்லை ! அழகுமய உயிரியல்வாதிகள் (Aesthethetical Physiologists) சொல்வதுபோல் கலை என்பது மனிதன் தனது சேமிப்பு மிச்ச சக்தியை வெளிப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டில்லை ! மனிதனின் உள் ஆவேசத்தை வெளிப்புறச் சைகைகளால் காட்டும் ஒரு வெளிப்பாடில்லை கலை ! மனத்தைக் கவரும் வடிவங்களை உற்பத்தி செய்வதில்லை கலை ! எல்லாவற்றுக்கும் மேலாகக் கலை இன்பம் தருவதில்லை ! மனிதரை அதே உணர்வில் பின்னிப் பிணைக்கும் ஒரு மூலாதார ஆக்கமே கலைப் படைப்பு. மனித வாழ்க்கைக்கும், மனிதச் சுகநல முன்னேற்றத்துக்கும் தேவையானது கலை.

லியோ டால்ஸ்டாய் : ரஷ்ய இலக்கிய மேதை (1828-1910) (The Religious Significance of Art)

புனைப் பட்டங்கள் (Titles)
புனைப் பட்டங்கள் இடைத்தரக் (mediocre) கலைஞரைத் தனித்துக் காட்டுபவை. உன்னத கலைஞரைப் பேதலிக்கச் செய்பவை. கீழ்த்தரக் கலைஞரின் கேலிக்குள் ஆகுபவை.

மேன்மைத் தன்மை (Honor)
பூரண மேன்மைத்தன மனிதர் எங்கும் கிடையாது. ஆனால் ஒவ்வோர் உண்மை மனிதனும் ஒரு சிறப்பு மேன்மைத் தன்மையும் மற்றும் சிற்சில சிறு மேன்மைகளும் கொண்டவன்.

மேன்மையான சாதனகளைச் சாதித்துக் காட்டாமல் ஒருவர் மேன்மைத் தனத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது. உன்னைத் தூயவனாகவும், கூரிய புத்திசாலியாகவும் வைத்துக்கொள். ஏனெனில் வெளி உலகை உற்று நோக்க நீதான் உனக்குப் பலகணி !

உனது வார்த்தைகள் உன் பந்தபாசப் பிணைப்பைப் போல் அத்தனை வலுவாக இருக்க முடியாது. ஏனெனில் உனது கடந்த கால அனுபவ நினைவுகள் உன் மேன்மைத் தனத்தைப் போல் உறுதியாக நம்பக் கூடியவை அல்ல.

மதம்
எவன் தன்னுடைய கடவுள் வானுலகில் இருப்பதாகச் சொல்கிறானோ, அவனிடம் கவனிப்பாக இரு ! எதை ஒருவன் நம்புகிறானோ அதைத் தான் நம்பிடும் கொள்கைகள் மூலமின்றித் தான் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் சித்தாந்த அனுமானங்கள் மூலமாக மெய்ப்பிக்கலாம்.

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 2 பாகம் : 2

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 2 பாகம் : 2)

கதா பாத்திரங்கள்: ஜான் டான்னர், காரோட்டி ஹென்றி ஸ்டிராகெர், அக்டேவியஸ் ராபின்ஸன். ஆன்னி வொயிட்·பீல்டு.
காலம்: காலை வேளை
இடம்: வொயிட்·பீல்டு இல்லத்தருகே கார்கள் நிறுத்தப்படும் திடல்.

(காட்சி அமைப்பு : ஆன்னி வொயிட்·பீல்டின் இல்லத்தருகில் கார் நிறுத்தும் திடலில் ஜான் டான்னரின் கார் பழுதாகி முடங்கி நிற்கிறது. டான்னரின் காரோட்டி (ஹென்றி ஸ்டிராகெர்) முன்மூடியைத் திறந்து என்ன பழுது என்று குனிந்து உளவி வருகிறார். டான்னர் பொறுமை இழந்து நடமாடிக் கொண்டிருக்கிறார். அக்டேவியஸ் டான்னருடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஆன்னி வொயிட்·பீல்டு அவரை நோக்கி வருகிறாள்.)

ஆன்னி: காலை வந்தனம், ஜான். என் தங்கை ரோடா இன்று உன் காரில் வரமாட்டாள். அவளுக்கு எப்போதும் வரும் தலைவலி வந்து விட்டது ! மண்டையைக் குத்துகிறதாம். படுக்கையில் கிடக்கிறாள். அவளுக்குப் பெருத்த ஏமாற்றம் உன்னுடன் காரில் செல்ல முடியவில்லை என்று !

ஜான் டான்னர்: இங்கே எனது காரும் படுத்து விட்டது ! அதற்கு என்ன வலி என்பது தெரியவில்லை ! எனக்கும் ஏமாற்றம்தான் ரோடா வர முடியா தென்று அறியும் போது ! பாவம் அவளை டாக்டரிடம் அழைத்துச் செல்ல நான் தயாராக இருந்தாலும் என் கார் நகர முடியா தென்று என்று அடம் பிடிக்கிறது. உன் காரில் ரோடாவை அழைத்துச் செல் அக்டேவியஸ் !

அக்டேவியஸ்: உனக்கு எதுவும் புரியாது ஜான். ஆன்னி ஏமாற்றிக் கொண்டு உன் மீது பெரும் கருணை காட்டுகிறாள். ஆன்னி என் காரில் வருகிறாள் ! ரோடாவை உன் காரில் அழைத்துச் செல் !

ஆன்னி: அக்டேவியஸ் ! நீ என்ன சொல்கிறாய் ?

ஜான் டான்னர்: ரோடாவின் தலைவலியைக் குணப்படுத்துவாயா ஆன்னி ?

ஆன்னி: நிச்சயம் முயல்வேன். ஏன் அப்படிக் கேட்கிறாய் ? உன்னுடன் கூட்டிச் செல்லவா ?

ஜான் டான்னர்: இப்போது சொன்னதைச் சொல். மேலும் ரோடாவின் கடிதத்தை நான் படித்த பிறகு நீ இங்கு வந்ததாகச் சொல்வாயா ?

ஆன்னி: என்ன ? ரோடா உனக்குக் கடிதம் எழுதினாளா ?

ஜான் டான்னர்: ஆமாம் எல்லா விபரங்களையும் எழுதி யிருக்கிறாள்.

ஆன்னி: என்ன எழுதி இருக்கிறாள் சொல் ?

ஜான் டான்னர்: எல்லாம் விளக்கமாக எழுதி யிருக்கிறாள்.

ஆன்னி: (பொறுமை இழந்து) அப்படி என்னதான் எழுதி இருக்கிறாள் ?

ஜான் டான்னர்: நீ எனக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி ரோடா கேட்டால் நான் சொல்லலாமா ? நீ சும்மா விடுவாயா என்னை ? அவள் எழுதியதைக் கேட்டால் அலறி விடுவாய் நீ ! கடிதத்தில் இருப்பது உனக்குத் தெரிந்து விட்டால் அவள் வானுக்கும் பூமிக்கும் தாவுவாள் ! இடையில் உதை வாங்குவது நான்தான் !

அக்டேவியஸ்: புரட்சிக்காரர் உதை வாங்கியது எல்லா வரலாற்றிலும் உள்ளது. ஆன்னியை வெகு சாமர்த்தியமாக அமைதியாக்கி விட்டாய்.

ஜான் டான்னர்: ஆன்னி மீது உனக்குக் காதல் என்பது எனக்குத் தெரியும் அக்டேவியஸ் ! நான் உயிலில் உள்ளபடி ஆன்னியின் பாதுகாப்பாளி ! இன்று ஆன்னி உன்னுடன் செல்வதில் எனக்கு விருப்பமே ! அவளைப் பாதுகாப்பாக இல்லத்தில் கொண்டுவந்து நீ சேர்ப்பாய் என்னும் நம்பிக்கை உண்டு.

ஆன்னி: நான் ரோடாவைப் பற்றி உன்னிடம் கேட்க வேண்டும் ஜான் ! அதுவும் தனியாக ! அக்டேவியஸ் ! நீ அன்னையைக் கொஞ்சம் கவனித்து வா ! உன் அமெரிக்கத் தோழர் என்ன பாடு படுத்துகிறாரோ தெரியவில்லை ! அன்னை வீட்டை ஒழுங்கு பண்ணுகிறாள். உன் உதவி தேவைப்படும். சற்று உள்ளே போய் வருவாயா ?

அக்டேவியஸ்: இதோ பறந்து செல்கிறேன் ஆன்னி ! (வேகமாய் வீடு நோக்கி ஓடுகிறான்)

ஜான் டான்னர்: இதோ பார் ஆன்னி ! நீ விளையாடி வருகிறாய் என்னை ஏமாற்றிக் கொண்டு ! உனக்கு ஒரு கண் என் மீது ! அடுத்த கண் அக்டேவியஸ் மீது ! இந்த விளையாட்டு வேண்டாம் ! என்னை ஏமாற்றுகிறாய் ! அவனையும் ஏமாற்றுகிறாய் ! முடிவில் ஏமாறப் போவது நீ !

ஆன்னி: ஒரே சமயத்தில் இருவர் மீது காதல் வயப்படுகிறேன். உன்னை வெறுக்க முடிய வில்லை ! அக்டேவியஸை விலக்க விருப்ப மில்லை ! உனக்கு இரு மாதர் மீது காதல் உண்டான தில்லையா ? இவரா அல்லது அவரா என்று எனக்குப் போராட்டம் இருக்கிறது ! அவளா அல்லது இவளா என்று உனக்குள் காதல் போர் நிகழ வில்லையா ? நான் அக்டேவியஸிடம் உண்மையைச் சொல்ல முடிய வில்லை.

ஜான் டான்னர்: உனக்கு அக்டேவியஸ் மீது காதல் என்று நான் நினைத்தேன். எனக்கு ரோடா மீது காதல் என்று நீ எண்ணுகிறாய் இல்லையா ?

ஆன்னி: நான் சந்தேகப் பட்டது சரிதான் ! உன்னை நான் நம்ப முடியாது ! எங்கள் இல்லத்துக்கு வந்து என்னைக் காதலிப்பது போல் பாசாங்கு செய்து ரோடா மீது உன் காதல் வலையை வீசி யிருக்கிறாய் ? அவள் எப்படி உனக்குக் கடிதம் எழுதுவாள் ? நீயும் அடைக்கடி அவளுக்குக் கடிதம் எழுதுவாயா ஜான் ? . . . . ஏன் பேச்சாமல் விழிக்கிறாய் ? நீ விழிப்பதைப் பார்த்தால் நிரம்ப நாட்கள் ரோடாவுடன் தொடர்பு கொண்டுள்ளாய் என்று கணிக்கிறேன். என்னை விட அவள் எதில் திறமைசாலி ? உனக்கும் அவளுக்கும் வயதுப் பொருத்தம் இல்லை. (ஆன்னி கண்களில் கண்ணீர் மின்னுகிறது)

ஜான் டான்னர்: நீ ஏற்கனவே என்னைப் பற்றி ரோடாவிடம் கீழாகச் சொல்லி இருக்கிறாய். அந்த முறையில் அவளுடன் எப்படி நானோர் இனிய நட்புறவு கொள்ள முடியும் ? அவள் மனதில் நச்சு வித்துக்களை முளைக்க வைத்தாய் !

ஆன்னி: நான் சொன்னதை நம்பாமல் அவள் உன்னையே நம்புகிறாள். காதலனை எப்படிப் பிடிப்பது என்பது அவள் கல்லாமல் கற்றிருக்கிறாள் ! நான் காதலனை விரட்டக் கற்றிருக்கிறேன்.

ஜான் டான்னர்: ரோடாவிடம் என்னைப் பற்றி ஏன் பொய்யும் புளுகும் சொன்னாய் ?

ஆன்னி: என் தாய்தான் அவ்விதம் என்னைச் சொல்ல வைத்தாள். நீ ரோடாவை வெறுக்க வேண்டும். பிறகு என்னை நீ விரும்ப வேண்டும். இதுதான் என் அன்னையின் ஆசை.

ஜான் டான்னர்: எல்லா வம்புக்கும் உன் அன்னை காரண மென்று தெரிகிறது.

ஆன்னி: நான் என் அன்னையை நேசிக்கிறேன். எப்போதும் அவள் சொல் தப்பாது. அவள் எப்படிப் பயந்த சுபாவம் கொண்டவள் என்பது உனக்குத் தெரியாது. பயப்படுபவர் எல்லாம் பழமை விரும்பிகளாக இருப்பார். உன்னை மாதிரி புதுமை விரும்பிகளைப் பழைமை மாந்தர் ஒரு போதும் வரவேற்பதில்லை, தெரியுமா ? உண்மையாக ரோடா உன்னைக் காதலிக்க வில்லை ! காதலிப்பதாகக் காட்டி என்னை வெட்டிவிடத் துணிகிறாள். ரோடா உன்னை மணக்கப் போவதில்லை ! கடைசியில் ஏமாறப் போவது நீ ! நான் ! அக்டேவியஸ் மூவரும் !

ஜான் டான்னர்: அன்னையின் நிழலில் நடக்கும் நீ எப்போது தனியே நீயாகப் போகிறாய் ? உன் ஆத்மா சொல்வதைப் பின்பற்றப் போகிறாய் ? உன் அன்னை உன் மனதில் தன் விஷ வித்துகளை விதைக்கிறாள். உன்னைப் பெரும் சீமான் கையில் ஒப்புவிக்க நினைக்கிறாள். ஆகவே உன்னையும் ரோடாவையும் மோதிக் கொள்ளச் செய்கிறாள் ! வெல்வது யார் என்று வேடிக்கை பார்க்கிறாள். நான் சொல்கிறேன். வாலிப ஆணுக்கும், பெண்ணுக்கும் முதற்கடன் பெற்றோர் வேலிருந்து வெளியேறி முதற்கண் விடுதலைக் குரல் எழுப்புவது ! எவன் ஒருவன் தந்தையின் ஆதிக்கத்தில் சிறைப்பட்டுள்ளானோ அவன் மனிதனில்லை ! எவள் ஒருத்தி தாயின் ஆதிக்கத்தில் மாட்டிக் கொண்டுள்ளாளோ அவள் சுதந்திரப் பிள்ளைகளைப் பெற்று வளர்க்கத் தகுதியற்றவள் ! ஆன்னி நீ எப்போது உன் அன்னையின் அரணிலிருந்து விடுதலை அடைவாயோ அன்றுதான் உனக்கு ஒளிமயமான எதிர்காலம் கதவைத் திறக்கும் !

***************************

(தொடரும்)

*********
தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan March 11, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts