உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



மூலம்: ஆங்கில நாடக மேதை பெர்னாட் ஷா
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

கலையைப் பற்றி வரையறை விளக்கம் கூற வேண்டுமானால் முதலில் அது மக்களுக்கு இன்பம் தரும் ஓர் ஆக்கமாகக் கருதுவதைத் தவிர்த்து, அது மனித வாழ்வுக்கு வேண்டிய ஒரு நிபந்தனை என்று எடுத்துக் கொள்வது அவசியம். இவ்விதம் நாம் அதை நோக்குவதால் கலையானது மனிதனோடு மனிதன் தொடர்பு கொள்ளும் ஒரு நடைமுறைச் சாதனங்களில் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு கலைப் படைப்பும் கலை ஆக்குவோனுடன் ஒரே சமயத்திலோ, முந்தியோ அல்லது பிந்தியோ அதே கலைத்துவ முத்திரை பெறும் எல்லோரையும் ஏதோ ஒரு வகைக் கூட்டுறவில் நுழையச் செய்கிறது.

லியோ டால்ஸ்டாய் : ரஷ்ய இலக்கிய மேதை (1828-1910) (The Religious Significance of Art)

—- சிறைத் தண்டனையும் கொலைத் தண்டனை போல் திருப்பம் பெறாத ஒரு தண்டிப்புதான் !

—- கொடுங் கொலையாளிகள் சட்டத்தின் கையில் சாவதில்லை ! மற்ற மனிதருடைய கரங்களால் கொல்லப் படுகிறார்.

—- ஜான் வில்கிஸ் பூத் ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கனைக் கொலை செய்து அவரை ஓர் உன்னத மனிதன் ஆக்கினான் ! அமெரிக்கா அதே முறையைக் கையாண்டு பூத்தையும் மேன்மை யானவனாய் ஆக்கியது !

—- தூக்கு மேடையில் கொலையாளியைத் தொங்க விடுவது மிகக் கொடூரமான ஒரு படுகொலையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அது பொதுநிதியில் முதலீடு செய்யப்பட்டு சமூகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது !

—- ஒருவனுடைய செய்கைதான் அவனுக்குக் கல்வி கற்பிக்கிறது, நாமதற்குத் தரும் பெயரன்று !

—- கொலைக் குற்றமும் தூக்குத் தண்டனையும் ஒன்றை ஒன்று நிவர்த்தி செய்யும் எதிர்ப்புத் தண்டிப்புகள் அல்ல ! அவை இரண்டுமே அவற்றை வளர வைக்கும் ஒத்த வழித் தன்மைகள்.

—- புலியைக் கொல்லப் போகும் ஒருவன் வேட்டையாடுவதாய்ச் சொல்லிக் கொள்கிறான் ! ஆனால் புலி பாய்ந்து ஒருவனைக் கொன்றால், அதைக் கொடூரத்தனம் என்று கூறுகிறான் ! குற்றம் புரிவதற்கும் நியாயம் தருவதற்கும் உள்ள வேறுபாடு மிகுதியாக இல்லை !

—- கில்லட்டின் யந்திரத்தில் தலை வெட்டப் பட்ட குற்றவாளி இடத்தை நிரப்பத் தேவயில்லை ! ஆனால் கில்லட்டினில் நறுக்கப்பட்ட ஓர் சமூக ஏற்பாடு மாற்றப்பட வேண்டியது அவசியம் !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்: “குற்றமும் தண்டனையும்”)

****************

Fig. 1
Tanner’s Car under Repair

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 2 பாகம் : 1

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 2 பாகம் : 1)

கதா பாத்திரங்கள்: ஜான் டான்னர், காரோட்டி ஹென்றி ஸ்டிராகெர், அக்டேவியஸ் ராபின்ஸன்.
காலம்: காலை வேளை
இடம்: கார்கள் நிறுத்தப்படும் திடல்.

(காட்சி அமைப்பு : ஒரு மாவட்ட மாளிகை முன்பாகக் கார் நிறுத்தும் திடலில் ஜான் டான்னரின் கார் பழுதாகி முடங்கி நிற்கிறது. காரோட்டி (ஹென்றி ஸ்டிராகெர்) முன்மூடியைத் திறந்து என்ன பழுது என்று குனிந்து உளவி வருகிறார். டான்னர் பொறுமை இழந்து நடமாடிக் கொண்டிருக்கிறார். காரோட்டி மெதுவாகப் பேச்சைத் துவங்குகிறார்)

காரோட்டி: இன்னும் சிறிது நேரம் ! என்ன பழுது என்று தெரிந்து கொண்டேன். காருக்கும் மனிதரைப் போல் வயது ஏறுகிறது ! கார் தள்ளாடும் நிலையில் உள்ளது ! இந்தக் கார் பழுதாகும் போதுதான் நான் கற்றுக் கொள்வது அநேகம் ! காரோட்டிகளுக்குச் சொல்லிக் கொடுக்க நல்ல கார் இது ! இது காட்சிப் பொருளாய் இருக்க வேண்டிய கார் ! ஓடும் போது வீதியில் செல்வோரை பயமுறுத்துவது ஒரு பக்கம் ! நிறுத்த மிதித்தால் நிற்காமல் போகும் வேறு பக்கம் ! விரைவாக்க மிதித்தால் கார் முணுமுணுக்கும் ! ஓய்வெடுக்க வேண்டிய கார் என்னுயிரை வாங்குது !

ஜான் டான்னர்: ஆடத் தெரியாத மேடம் கோணல் மேடை என்றானாம் ! காருக்கு வயதானாலும் ஓய்வெடுக்கும் காலம் வரவில்லை ! உனக்குத்தான் ஓய்வு கொடுக்க நினைக்கிறேன்.

காரோட்டி: நானே ஒருநாள் ஓடிப் போக வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று காரை மாற்றுங்கள் ! அல்லது ஆளை மாற்றுங்கள் !

Fig. 2
Anne & Octavius

ஜான் டான்னர்: காரை மாற்றும் போது ஆளையும் மாற்ற உத்தேசம் ! மிஸ்டர் மலோன், மிஸ் ஆன்னி வொய்ட்·பீல்டையும், மிஸ்டர் ராபின்ஸனையும் அவரது தங்கை வயலட்டையும், தன் காரில் ஏற்றிச் செல்வார் ! நாம் மிஸ் ரோடாவை ஏற்றிச் செல்ல வேண்டும் தெரியுமா ?

காரோட்டி: மிஸ் ரோடா மிஸ் ஆன்னி வொயிட்·பீல்டின் சகோதரிதானே ! நல்லது. ஏன் மிஸ் ஆன்னி வொயிட்·பீல்டு உங்கள் காரில் செல்ல வில்லை ?

ஜான் டான்னர்: ஆன்னி எதற்கு என்னுடன் வரவேண்டும் ? அவளுடன்தான் காதலன் அக்டேவியஸ் சவாரி செய்கிறானே !

[அப்போது அமெரிக்கன் நீராவிக் காரில் அக்டேவியஸ் வந்து வெளியே எட்டிப் பார்க்கிறார்]

அக்டேவியஸ்: காலை வணக்கம் ஜான் ! என்ன பெட்ரோல் கார் படுத்துக் கொண்டதா ? பாருங்கள் எங்கள் நூதன நீராவிக் காரை ! பாய்ந்தோடும் குதிரை ! ஆமாம் எத்தனை நேரம் காத்து நிற்கிறீர் ?

ஜான் டான்னர்: சுமார் ஒரு மணி நேரம் ! காரோட்டிக்குப் பயிற்சி பற்றாது ! பத்து நிமிடத்தில் பழுதைக் கண்டுபிடிக்க வேண்டாமா ?

காரோட்டி: கார் புராதனக் கார் ஸார் ! காரோட்டிக்கு என்ன பயிற்சி கொடுத்தாலும் போதாது ! கார் நொண்டிக் கார் ! சண்டித்தனம் அதிகம் ! ஆமாம் உங்கள் நீராவிக் கார் எப்படிப் போகுது ? இந்தக் காருக்கு யாராவது ஆவி கொடுத்தால் நல்லது !

அக்டேவியஸ்: ஜான் ! இவரை எனக்கு அறிமுகப் படுத்துவாயா ?

ஜான் டான்னர்: அக்டேவியஸ் ! இவர்தான் ஸ்டிராகெர் ! காரோட்டி ஹென்றி ஸ்டிராகெர் ! தானொரு கார் நிபுணன் என்று பெருங் கர்வம் உண்டு இவருக்கு ! ஹென்றி ! இவர்தான் எழுத்தாளர் மிஸ்டர் ராபின்ஸன் ! அக்டேவியஸ் ராபின்ஸன் ! எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ள நாணிக் கொள்வார் !

காரோட்டி: மிஸ்டர் டான்னர் ! மனிதனுக்குக் கொஞ்சம் மதிப்பளியுங்கள் ! உங்கள் சொல்லில் நடத்தையில் தானோர் உன்னத மனிதன் என்றோர் எண்ணம் உங்களுக்கு ! ஆனால் நான் கார் நிபுணன் என்று நீங்கள் தரும் பட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

அக்டேவியஸ்: நிறுத்துக்கள் உங்கள் பேச்சை ! ஜான் ! முதலில் என் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் ! கேளுங்கள் சொல்கிறேன்.

ஜான் டான்னர்: என்னவாயிற்று உனக்கு ?

அக்டேவியஸ்: ஆன்னியைப் பற்றி நான் சொல்ல வேண்டும்.

ஜான் டான்னர்: திருமணம் செய்து கொள்ளும்படி நீ அவளைத் தொந்தரவு செய்தாயா ?

அக்டேவியஸ்: நேற்றிரவு மூர்க்கத்தனமாய்க் கேட்டேன் ! தோற்றுப் போனேன் !

ஜான் டான்னர்: மூர்க்கத்தனம் என்றால் என்ன அர்த்தம் ?

அக்டேவியஸ்: ஆடவர் பெண்ணிடம் மூடராகவே நடந்துகொள்கிறார் ! நான் விதிவிலக் கில்லை ! எனது நாக்கு அரம்போல் சொர சொரப்பானது ! வழு வழுப்பான தில்லை ! பெண்ணின் மன உணர்வுகளை நான் புரிய முடிவில்லை. நான் அவள் மனதைப் புண்படுத்தி விட்டேன் ! தந்தை இறந்தது அவள் மனத்தை அழுத்துகிறது ! திருமணத்தைப் பற்றி இன்னும் சிந்திக்க வில்லையாம். என் மேல் பிரியம் உள்ளது ! ஆனால் திருமண செய்துகொள் என்றால் அழுகிறாள் ! திருமணப் பேச்சை ஆரம்பித்தாலே காதை மூடிக் கொள்கிறாள் !

***************************

(தொடரும்)

*********
தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan March 4, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts