உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 8

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


கிரேக்கச் சொல்லான (Ethics) ஒழுக்கவியல், லத்தீன் சொல்லான (Morality) நெறித்துவம், என்றால் நாமென்ன அர்த்தம் கொள்கிறோம் ? அவற்றின் பொருள்: மனித நன்னடத்தை. அதன் அனுமானச் சிந்தனை இதுதான். நமது நலனை மட்டும் நாம் கருதாமல் மற்றோரது நலத்தையும் நாடி மனித சமூகத்தின் முழு நலத்தின் மீதும் கவனம் செலுத்துதல்.

நெறித்துவத்தின் அடிப்படைக்கு முதற் காற்தடம் : மாந்தருக்குள் விரிந்து பெரும் கூட்டுப் பொறுப்புணர்வு (Solidarity). ஏசு நாதரும் அவரது சீடர் பால் என்பவரும் கூறியவாறு மனிதன் மற்ற ஒவ்வொரு மனிதப் பிறவியின் நல்வாழ்வுக்கும் கடமைப் பட்டவன்.

ஆல்பெர்ட் சுவைஸர், மருத்துவ மேதை [Albert Schweitzer in Reverence for Life (1875-1965)]

—- ஒருவன் தனக்குத் தெரியாத ஒன்றைக் கற்றுக் கொள்ள விரும்பாத மற்றொருவனுக்குச் சொல்லிக் கொடுத்து, ஓர் உயர்ந்தச் சான்றிதழ் அளிக்கும் போது, அந்த நாகரீக மனிதன் தன் கல்வியை முடித்துக் கொண்டான் என்று கருதலாம்.

—- ஒரு முட்டாளின் மூளை வேதாந்த சிந்தனையை மூடக் கருத்தாகவும், விஞ்ஞானச் சித்தாந்தத்தை மூடப் பழக்கமாகவும், கலைப் படைப்பைப் பகட்டு நூலறிவாகவும் செரித்துக் கொள்கிறது ! ஆகவேதான் பல்கலைக் கழகக் கல்வி தேவைப்படுகிறது !

—- பெற்றோரை நேர்மையான நடத்தையில் கண்டுவந்த குழந்தைகள் நல் முறையில் வளர்க்கப் பட்டவர் என்று சொல்லலாம். தமது நயவஞ்சக நடத்தையைப் பிள்ளைகளுக்குக் காட்டுவது பெற்றோருக்கு முதற்கடன் ஆகாது.

—- ஒரு குழந்தையின் பண்பாட்டு முறையை வார்க்க முயற்சி செய்பவன் ஒரு வெறுக்கத் தக்க சீர்குலைப்புவாதி !

—- ஒன்றை அமைக்கும் தகுதி உடையவன் அதைச் செய்ய முயல்வான். அமைக்கத் தகுதியற்றவன் பிறருக்கு உபதேசம் செய்வான்.

—- சீராகச் செய்யும் செயற்பாடு ஒன்றுதான் அறிவு பெறுவதற்குப் பாதை வகுப்பது !

—- எந்நேரமும் படித்துக் கொண்டு காலத்தை வீணாக்கும் புத்தகப் புழு ஒரு முடங்கிய படிப்பாளிதான் ! அவனுடைய பிழையான கொள்கைமேல் பிறர் கவனமாக இருக்க வேண்டும். அறியாமையை விட அத்தகைய கொள்கை அபாயகர மானது !

—- ஒவ்வொரு மூடனும் அவனுடைய குருமார் அவனுக்கு உபதேசிப்பதை அப்படியே நம்புகிறான். தன்னுடைய நம்பிக்கை ஞானத்தையும் ஒழுக்கவியலையும் தந்தையின் தெய்வீக அருள்மொழியாக எடுத்துக் கொள்கிறான்.

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்: “கல்வி”)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 1 பாகம் : 8

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் ராம்ஸ்டன் (Miss Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker)

6. ஹெக்டர் மலோன் (Hector Malone)

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 1 பாகம் : 8)

கதா பாத்திரங்கள்: ரோபக் ராம்ஸ்டன், அக்டேவியஸ் ராபின்ஸன்.
காலம்: காலை வேளை
இடம்: மேயர் ரோபக் ராம்ஸ்டன் மாளிகை.

(காட்சி அமைப்பு : கோட்டு, சூட்டு அணிந்து ரோபக் ராம்ஸ்டன் தனது நூலக அறையில் படித்துக் கொண்டிருக்கிறார். நகரில் பேரும் புகழும் பெற்ற செல்வந்தர் அவர். மாளிகையில் மூன்று வேலைக்காரிகள் உள்ளார். அறையின் சுவர்களில் அழகிய ஓவியங்கள் தொங்குகின்றன. அறை பளிச்செனத் தூய்மையாக உள்ளது. நூல்கள் நேராகச் சீராக அடுக்கப்பட்டு நூலகம் காட்சி தருகிறது. நூலகத்தில் ராம்ஸ்டனும், அக்டேவியசும் உரையாடி வரும்போது, வேலைக்காரி மேரி ஜான் டான்னர், ஆன்னி வொயிட்·பீல்டு ஆகியோர் வந்திருப்பதை அறிவிக்கும் போது ராம்ஸ்டன் கோபப்பட்டு வரவேற்க மறுக்கிறார். இறுதில் ராம்ஸ்டன் டான்னருடன் வேண்டா விருப்புடன் உரையாடுகிறார். உரையாடலில் ஆன்னியும் அவளது அன்னையும் கலந்து கொள்கிறார்கள். ஆன்னியின் திருமணப் பேச்சில் அனைவரும் ஈடுபடுகிறார். அப்போது ராம்ஸ்டன் அக்டேவியஸ் தங்கை வயலட்டைப் பற்றி ஓர் அந்தரங்கச் செய்தியை வெளியிட்டு அதிர்ச்சி தருகிறார். வயலட் ஒருவனுடன் தொடர்பு கொண்டு கர்ப்பவதியானது தெரிந்து போய் அவளை எப்படி ஒளித்து வைப்பது என்பது பிரச்சனையாகி விட்டது.

ஆன்னி வொயிட்·பீல்டு: ஜான் ! நீ வாலிபக் குமரி வயலட்டுக்காகப் பரிந்து பேசுவது எனக்குப் பூரிப்பைத் தருகிறது. அவள் பொங்கும் இளமையும், காந்த விழிகளும் எந்த ஆடவனையும் வளைத்துப் பிடித்து விடும் ! உனக்கும் அவள் மீது மோகமுள்ளது ! உண்டா ? இல்லையா ? சொல் !

ஜான் டான்னர்: இல்லை என்றால் என்னை நம்ப மாட்டாய் ! உள்ளது என்றால் என் கன்னத்தில் அறைவாய் ! என்ன சொல்லலாம் என்று யோசிக்கிறேன்.

ஆன்னி: ஏன் புதிர் போடுகிறாய் ? இல்லை என்று சொல்வாய் என்று எதிர்பார்த்தேன் ! இருக்கிறது என்று காட்டி நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுகிறாய் !

ஜான் டான்னர்: அவள் என்னைக் கவர்ந்தாள் என்றால் உன் நெஞ்சில் ஏன் ஈட்டி பாய்கிறது ?

ஆன்னி: நீ ஒரு முட்டாள் ! உன்னைப் பெரும் அறிவாளி என்று நினைத்தேன் ! என்னைப் புரிந்து கொள்ளாத ஒரே ஆத்மா நீதான் ! எப்போது என்னைப் பற்றி அறியப் போகிறாய் ?

ஜான் டான்னர்: முட்டாளுக்குப் புரியும்படி அறிவாளி நீதான் சொல்ல வேண்டும் !

ஆன்னி: இதெல்லாம் சொல்லிப் புரிவதில்லை ! எனக்கு எத்தனை வயதாகிறது ? உனக்கு எத்தனை வயதாகிறது ? வயது அதிகமாகும் உனக்கு ஏன் அறிவு குறைந்து போகிறது ?

ஜான் டான்னர்: சில அந்தரங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும். நியூட்டனின் கவர்ச்சி விதிகள் புரியும் எனக்குப் பெண்டிரின் கவர்ச்சி முறைகள் தெரியாமல்தான் உள்ளன !

ஆன்னி: ஏன் இப்படி என்னுடன் கண்ணாம்பூச்சி விளையாடுகிறாய் ? கண்ணிருந்தும் நீ குருடன் ! காதிருந்தும் நீ செவிடன் ! வாயிருந்தும் நீ ஊமை ! கபட நாடகம் போடுகிறாய் ! உன் உள்ளத்தில் பஞ்சுக்குப் பதிலாகப் பாறாங்கல் இருக்கிறது !

ஜான் டான்னர்: என்னைப் பற்றி நல்ல பட்டியல் போட்டு விட்டாய் ! உன்னை எனக்குப் புரிய வில்லை என்பது உண்மை ! உனக்கு அக்டேவியஸ் மீது ஒரு கண் என்பது என் யூகம் ! ஆதலால்தான் நான் ஒதுங்கி நிற்கிறேன். அக்டேவியஸ் உன்னைப் பார்க்கும் பார்வை என்னை வதைக்கிறது ! பதிலுக்கு நீ அவனைப் பார்க்கும் பார்வை அதை விட என்னை வதைக்கிறது !
நான் நேசிக்கும் பெண்ணை நண்பன் தூக்கிக் கொண்டு போய்விடுகிறான் !

ஆன்னி: (புன்னகையுடன்) காதலைக் காட்டாமல் காதலிப்பவன் நீ ! எடுப்பாகச் சிரிக்கும் அக்டேவியஸை எந்தப் பெண்தான் நிராகரிப்பாள் ? அக்டேவியசுக்கு என் மீது மோகம் என்று எனக்குத் தெரியாதா என்ன ? ஆனால் எனக்கு அக்டேவியஸ் மீது விருப்பமும் இல்லை ! வெறுப்பு மில்லை ! வேறோர் அறிவழகன் நாடிவந்து என்னைத் தூக்கிக் கொண்டு போகாவிட்டால், நான் நிச்சயம் அக்டேவியஸை மணந்து கொள்வேன் !

ஜான் டான்னர்: [ஆர்வமாக] அக்டேவியஸை மணந்து கொள்ள உனக்குச் சம்மதம் என்பதை நேராக என்னிடம் சொல்லி யிருக்கலாம் ! அவனைத்தான் மணக்க விருப்பம் என்று இப்போதாவது சொல்கிறாயே ! இதுவரை உன்னை எந்த அறிவழகனும் நாடி வரவில்லை ! அதென்ன புதுச் சொல் ! அறிவழகன் ? யாரவன் ?

ஆன்னி: அறிவுக் களஞ்சியமாக இருக்கும் ஒரு மன்மதன் ! ஜான் டான்னர் போல் !

ஜான் டான்னர்: அறிவுக்கும் அழகுக்கும் உள்ள இடைவெளி நீண்டது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரம் போல ! ஒருவன் அறிவுக் களஞ்சியமாக குறைந்தது ஐம்பது வயது ஆக வேண்டும் ! என்னை அழகுப் பதுமையாகப் பார்க்காதே ! அறிவை அழகாக எண்ணுபவள் வயதுப் பெண். அழகை அறிவாக நினைப்பவள் பருவப் பெண் ! அறிவால் வருவது பணிவு ! அழகால் வருவது அகந்தை ! அறிவும், அழகும் போல பணிவும் அகந்தையும் சேரா மாட்டா.

ஆன்னி: நீ எப்போது திருமணம் செய்வதாய் நினைக்கிறாய் ? அப்படித் திருமணம் செய்ய முடிவு செய்தால் எப்படி இருக்க வேண்டும் உன் கண்மணி ?

ஜான் டான்னர்: என் புரட்சித் திட்டத்தில் திருமணம் என்னும் வார்த்தை முதல் ஐந்து இடங்களில் இல்லை ! போதுமா ? எனக்குத் தெரியும் திருமணம் பெண்ணுக்கு முக்கியக் குறிக்கோள் ! நிகழ்ச்சி நிரலில் முதலில் இருப்பது. நான் திருமணத்தை வெறுப்பவன். என் கடமைகள் அநேகம் ! பெண் பிள்ளை பெறும் யந்திரம் ! ஆண் அவளது கருவி ! கடவுள் படைப்பு அப்படித்தான் ! ஆனால் கண்ட பெண்ணைக் காதலிப்பது, அடுத்த கணமே கல்யாணம் செய்வது, ஓராண்டுக்குள் பிள்ளை பெறுவது இந்த மாதிரி நடப்பு வாழ்க்கை எனக்கு உகந்தது அல்ல !

ஆன்னி: காணாத பெண்ணை எப்படிக் காதலிக்க முடியும் ? கண்ட பெண்ணைத்தான் காதலிக்க முடியும் ! அதென்ன ? கண்ட பெண்ணை என்றால் எனக்குப் புரிய வில்லை ! அதாவது கண்ட பெண்ணென்றால் தெருவில் போகும் அந்நியப் பெண்ணைக் குறிப்பிடுகிறீரா ? அல்லது கண்ணால் மட்டும் பார்த்த பெண்ணைச் சொல்கிறீரா ?

ஜான் டான்னர்: ஆன்னி ! பெண்ணே ஒரு புதிர் எனக்கு ! ஏன் ? தனக்கே பெண் ஒரு புதிர்தான் ! காதலிக்கும் போது ஒருவித முகமூடி போட்டுக் கொள்வார் கணிகையர் ! ஆடவனை மணந்தபின் வேறொரு முகமூடி அணிவார் ! குழந்தைகள் பிறந்த பிறகு அடுத்தொரு முகமூடியைப் பூணுவார் ! திருமணத்துக்கு முன்பு ஆணுக்கு பெண் அடியாள் ! இல்வாழ்வு ஆரம்பத்த பின்பு ஆணும், பெண்ணும் சமமாக எண்ணிக் கொள்கிறார் ! நடு வயது கடந்த பிறகு ஆண் பெண்ணுக்கு அடியான் ! இறுதிக் காலத்தில் கணவன் மனைவிக்கு ஒரு மகனாய் ஆகிறான் ! ஒவ்வொரு வீட்டுக் கூரையைத் துளைத்து பார்த்தால் எல்லாரது இல்லத்திலும் இந்த நாடகம்தான் நடக்கிறது !

ஆன்னி: இந்த உபதேசங்கள் எல்லம் உங்கள் புரட்சி நூலில் எந்தப் பக்கங்களில் உள்ளன ?
கேட்கச் சகிக்கா விட்டாலும் படிக்க நன்றாக இருக்கிறது என்னை உங்களுக்குப் பிடிக்க வில்லை ! அதனால்தான் திருமணத்தை வெறுப்பதாய்ச் சொல்கிறீர் ! வயலட் மாதிரி ஓர் வனப்பு மங்கை கண்ணில் பட்டால் உமது உபதேச மெல்லாம் காற்றில் பறக்கும். என்னிட மிருந்து நீங்கள் தப்பிச் செல்வது எளிதல்ல ! வாலிபப் பெண் போடும் வலைக்குள் எந்த திமிங்கலமும் சிக்கிக் கொள்ளும் ! ஆனால் நான் உங்களை வெறுக்கிறேன். திருமணம் வேண்டா மென்னும் பாதிரியாருக்கு நான் விசிறி யில்லை ! உங்களை நானினிக் காண மாட்டேன் ! உங்களுடன் நானினிப் பேச மாட்டேன் ! உம்மை நேசிப்பதற்குப் பதிலாக ஒரு கற்சிலையைக் காதலிக்கலாம் !

(கோபமாக நாற்காலியில் உட்காருகிறாள்)

***************************

(தொடரும்)

*********
தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan February 20, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts