உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 5

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


உன்னத மனிதன் யாரென்னும் கூக்குரல் சிந்தனையாளர் நியட்ஸே முதலாக மட்டும் எழவில்லை ! அவரது விளக்கத்தோடும் முடியவில்லை ! ஆனால் அத்தேடல் அதே கேள்வியுடன் அடங்கிப் போகிறது ! உன்னத மனிதன் என்பவன் எப்படிப் பட்டவனாய் இருக்க முடியும் ? தின்னும் ஓர் ஆப்பிளைத் தவிர வேறோர் உன்னத ஆப்பிளைப் பற்றியா நீ கேட்கிறாய் ? உன்னத குதிரையைப் பற்றியா ? இல்லை, வேகத்தில் செல்லும் குதிரையைப் ப்றி ! வலுவுடன் இழுக்கும் குதிரையைப் பற்றி ! இவ்விதம் உன்னத மனிதனைப் பற்றிக் கேட்பதில் ஏதாவது பயனுள்ளதா ? நீ தேடும் உன்னத மனிதனின் பண்பாடு பற்றி முதலில் ஒரு விளக்கவுரை தர வேண்டும். கண்கவரும் பெண்ணொருத்தி துணையோடு இருக்கும், மன்மதத் தோற்றமுள்ள ஒரு வேதாந்த விளையாட்டு வீரராக இருக்கலாம்;

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கைக் களஞ்சியம்)

மனித வழிபாடு (Idolatary)

— அரசாங்க ஆட்சி என்னும் அரங்கக் கலை, ஒரு தலைவன் வழிபாட்டுத் துறை அமைப்பே !

— ஆட்சி பீட அரசாங்கப் பணித்துறை அமைப்பு என்பது என்ன ? 1. மானிடக் கும்பலில் உயர்குடி வர்க்கத்தின் ஏகாதிபத்திய ஆட்சி; 2. தலைவ¨னை வழிபட்டு வருபவரின் பரம்பரைக் குடியரசு !

— பொதுநபருக்கு அரசாங்கப் பணித்துறை முறைகள் முழுவதும் புரிவதில்லை. அவருக்குத் தெரிவ தெல்லாம் உயர்குடித் தலைவர் வழிபாடு ஒன்றுதான் !

— சாதாரண மாந்தர் கற்சிலைகளையும், மரச் சிலைகளையும் வணங்குபவர். நாகரீக மனிதரோ ஊனும் உயிரும் கொண்ட தலைவருக்கே அடிபணிபவர்.

— பிரார்த்தனை நிறைவேறாது போனால், குடியானவன் கற்சிலை விக்ரகத்தை உடைக்கிறான். ஊனும் உயிரும் உள்ள தலைவன் திருப்திப் படுத்தாவிடில், நாகரீக மனிதன் அவன் தலையைச்
சீவுகிறான்.

— தலைவனைக் குத்திக் கொல்பவனும், தலைவனுக்காகத் தன்னுயிரை அர்ப்பணம் செய்பவனும் மனித வழிபாட்டு மானிடனே !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

மெய்யான கலைஞன் மனைவியைப் பட்டினி போடுவான் ! பிள்ளைகளை வெறுங்காலில் நடக்க வைப்பான் ! அவனுடைய அறுபது வயதுத் தாய் வெளி வேலை செய்து ஊதியம் கொண்டு வருவாள் ! அவன் தாய்ப்பாலைத் திருடி அதைக் கரு மையாக ஆக்கி அவளைக் கேலி செய்து நூலில் அச்சடிப்பான் ! உன்னதப் பெண்கள் என்று ஒய்யாரமாகப் புகழ்ந்து எழுதி வருவான். இல்வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே கலைஞன் தகுதியில்லாத ஒரு கணவன் என்ற அறியப் பட்டிருக்கிறான் ! அதை விடக் கேடு கெட்டவன் ! குழந்தைகள் பணத்தைத் திருடுபவன் ! மனைவி குருதியை உறிஞ்சுபவன் ! வஞ்சகன் ! ஏமாற்றுப் பேர்வழி ! [அக்டேவியஸைப் பார்த்து] அக்டேவியஸ் ! கலைஞனின் தொழில் என்ன ? மனிதர் மெய்யாக எவ்விதம் நடந்து வருகிறார் என்பதை நமக்குக் காட்டுவதுதான் ! கலைஞன் படைப்பு முறையில் பெண்ணைப் போல் இரக்கம் இல்லாதவனே ! ஆண் எப்படிப் பெண்ணுக்குக் கேடு ச
ய்கிறானோ, அதேபோல் பெண்ணும் ஆணுக்குக் கெடுதி இழைப்பவளே ! ஆணுக்குப் பெண் எவ்விதக் கவர்ச்சிப் பிறவியோ, அதே போல் பெண்ணுக்கு ஆடவனும் ஓர் கவர்ச்சிப் பிறவியாகவே தென்படுகிறான் ! மானிடப் போராட்டங்களிலே கலைஞனுக்கும், அன்னையாக அதிகாரம் செய்யும் மனைவிக்கும் ஏற்படும் போராட்டத்தைப் போல் கொடுமையானது எதுவுமில்லை ! எது எதனைத் தின்று விழுங்கும் என்பதை அறிய முடியாது ! அது மரணக் கொடூரம் ! ஏனெனில் உள்ளார அவர் இருவரும் காதல் மோகத்தில் கவரப்பட்டு ஒருவருடன் ஒருவர் ஒட்டிக் கொண்டு பிறரை வெட்டி விடுகிறார் !

ஜான் டான்னர்

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகத்தில்)

உன்னத மனிதன் நாடகத்தைப் பற்றி:

1903 ஆம் ஆண்டில் ஜியார்ஜ் பெர்னார்ட் ஷா காதல் மன்னன் “தாஞ் சுவான்” ஆய்வுக்கருவை (Don Juan Theme) உட்கருவாக வைத்து “மனிதன் & உன்னத மனிதன்” என்னும் நான்கு அங்க நாடகமாக எழுதினார். அந்த நாடகத்தை ஓர் நடிப்பு நாடகம் என்று சொல்வதைவிடப் படிப்பு நாடகம் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. ஏனெனில் பெர்னார்ட் ஷா மரபான நாடக நடப்பை விட்டுவிட்டு தனது புரட்சிக் கருத்துக்களை ஓங்கி முரசடித்திருக்கிறார். அவரது கருத்துக்களை அவ்விதம் நாடக மூலம் பறைசாற்றுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. ஆயினும் அங்கே பெர்னார்ட் ஷாவை நாம் முழுமையாகக் காண முடிகிறது. உன்னத மனிதன் நாடகம் 1905 இல் லண்டன் ராயல் கோர்ட் நாடக அரங்கில் முதன்முதல் மூன்றாவது அங்கமின்றி அரங்கேறியது. காரணம் அந்தப் பகுதியில் பெர்னார்ட் ஷா தனது புரட்சிகரமான பொதுவுடைமைக் கருத்துக்களைக் கொட்டியிருக்கிறார்.
உன்னத மனிதன் முழுநாடகமும் 1915 இல்தான் அரங்கேறியதாக அறியப்படுகிறது.

உன்னத மனிதன் நாடகம் எளிய முறை நளினத்தில் இன்பியல் நாடகமாக மேடை ஏறினாலும் பெர்னார்ட் ஷா அந்த நாடகத்தின் ஆழக் கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்த ஓர் உரைநடை நாடகமாக ஆக்கியுள்ளார். “உன்னத மனிதன்” என்ற தலைப்பைப் பெர்னார்ட் ஷா ·பிரடெரிக் நியட்ஸேயின் (Friedrich Nietzsche’s meaning “Superman”) உயர்மனிதன் வேதாந்தக் கோட்பாடுகளில் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. உன்னத மனிதன் நாடக உட்கருத்து நாடக பாத்திரம், “புரட்சிக் களஞ்சியப் பைநூல் ஆசிரியர்” (The Revolutionist’s Handbook & Pocket Companion) ஜான் டான்னரைச் (John Tanner) சுற்றி விரிகிறது. நாடகத்தின் இறுதியில் அந்தப் பைநூல் நெறிகள் 58 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளன. ஜான் டான்னர் நாடகத்தில் திருமணத்தை உதறித் தள்ளும் ஒரு பிரமச்சாரியாக அமைக்கப்பட்டிருக்கிறார். அவரைக் கவர்ந்து மணக்கத் துரத்திவரும் இளம்பெண் ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) எத்தனிதது முடிவில் டான்னரை மணக்க ஒப்பவைக்கிறாள். பெர்னார்ட் ஷாவின் கருத்து: “பெண் என்பவள் இல்வாழ்வின் உந்துவிசை (The Life Force). ஒவ்வொரு கலாச்சாரத்திலும் பெண்ணே ஆடவன் தன்னை மணக்கக் கட்டாயப் படுத்துகிறவள்; ஆடவர் அவ்விதம் பெண்ணைக் கட்டாயப் படுத்தில்லை”.

நாடக ஆசிரியர் பெர்னார்ட் ஷாவைப் பற்றி:

ஜியார்ஜ் பெர்னார்ட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கியப் படைப்புகளைப் படித்து வந்த பெர்னார்ட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாட்டில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராக உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House) போன்றவை.

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 1 பாகம் : 4

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் ராம்ஸ்டன் (Miss Ramsden) – ரோபக்கின் புதல்வி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker)

6. ஹெக்டர் மலோன் (Hector Malone)

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 1 பாகம் : 5)

கதா பாத்திரங்கள்: ரோபக் ராம்ஸ்டன், அக்டேவியஸ் ராபின்ஸன்.
காலம்: காலை வேளை
இடம்: மேயர் ரோபக் ராம்ஸ்டன் மாளிகை.

(காட்சி அமைப்பு : கோட்டு, சூட்டு அணிந்து ரோபக் ராம்ஸ்டன் தனது நூலக அறையில் படித்துக் கொண்டிருக்கிறார். நகரில் பேரும் புகழும் பெற்ற செல்வந்தர் அவர். மாளிகையில் மூன்று வேலைக்காரிகள் உள்ளார். அறையின் சுவர்களில் அழகிய ஓவியங்கள் தொங்குகின்றன. அறை பளிச்செனத் தூய்மையாக உள்ளது. நூல்கள் நேராகச் சீராக அடுக்கப்பட்டு நூலகம் காட்சி தருகிறது. நூலகத்தில் ராம்ஸ்டனும், அக்டேவி
யசும் உரையாடி வரும்போது, வேலைக்காரி மேரி ஜான் டான்னர், ஆன்னி வொயிட்·பீல்டு ஆகியோர் வந்திருப்பதை அறிவிக்கும் போது ராம்ஸ்டன் கோபப்பட்டு வரவேற்க மறுக்கிறார். இறுதில் ராம்ஸ்டன் டான்னருடன் வேண்டா விருப்புடன் உரையாடுகிறார். உரையாடலில் ஆன்னியும் அவளது அன்னையும் கலந்து கொள்கிறார்கள். ஆன்னியின் திருமணப் பேச்சில் அனைவரும் ஈடுபடுகிறார்.

ரோபக் ராம்ஸ்டன்: மிஸிஸ் வொயிட்·பீல்டு ! ஆன்னிக்கு ஏற்ற அறிவாளியை அறிமுகப் படுத்துவது என் பொறுப்பு. உலக ஞானமும், பரந்த அனுபவமும் உள்ள ஆடவரைத் தேடிப் பிடித்து ஆன்னிக்கு அறிமுகப் படுத்துவேன். ஆணால் தேர்ந்தெடுப்பது அவளது உரிமை !

ஜான் டான்னர்: மிஸ்டர் ராம்ஸ்டன் ! நீங்கள் தேடும் அறிவாளி, உலக ஞானி, அனுபவசாலி இருபத்தியெட்டு வயதில் எங்கே காத்துக் கொண்டிருக்கிறான் ? தேடிக் கண்டு பிடிப்பதற்குள்
நீவீர் தொண்டு கிழவனாய்ப் போய்விடுவீர் ! ஆன்னியும் கிழவி ஆகி விடுவாள் ! ஈதோ கண்முன்பாகக் காத்துக் கொண்டிருக்கிறார், அக்டேவியஸ் ! ஆன்னிக்கு ஏற்ற ஆடவன் ! ஆண் அழகன் ! எழுத்தாளன் ! ஆன்னியை இராப்பகலாக நேசிப்பவன் ! (ஆன்னியைப் பார்த்து) ஆன்னி ! உனக்கேற்றவன் அக்டேவியஸ் என்று எனக்குத் தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய் ?

ஆன்னி: [புன்சிரிப்புடன்] கண்ணியமானவர் ! கணவராய் இருக்கத் தகுதி பெற்றவர். ஆனால் கண்கள் அவரைக் காணும் போது ஏனோ என் நெஞ்சில் கனல் பொறிகள் எழவில்லை ? உடலைக் குலுக்கி என் உள்ளத்தை ஏனோ அசைக்க வில்லை ? உறக்கத்தைக் கலைத்துக் கனவுகளைக் காட்ட வில்லை !

அக்டேவியஸ்: [வருத்தமுடன்] அப்படிச் சொல்லாதே ஆன்னி ! என் நெஞ்சில் கனல் பொறிகளை எழுப்புபவள் நீ ! என் உறக்கத்தைக் கலைப்பவள் நீ ! அனுதினமும் கனவில் வருவது நீ ! நான் நேசிக்கும் ஒரே ஒருத்தி நீதான் ! எனக்கு ஏமாற்றம் அளிப்பது சரியா ?

ஆன்னி: கண்டதும் உண்டாகும் காதல், காணாத போது என்னைத் திண்டாட வைக்க வேண்டும். என்னைக் காதலிப்பரை நான் மணக்கப் போவதில்லை ! நான் காதலிப்பவரைத்தான் நான் மணப்பேன். என் காதல் ரோமியோ எப்போதோ பிறந்து விட்டான்.

ஜான் டான்னர்: அப்படியானால் உன் கனவுக் காதலன் யார் ? உன் நெஞ்சில் கனல் பொறிகளை எழுப்புவன் எங்கே இருக்கிறான் ? சொல் அவனை உன் முன் அழைத்து வருகிறேன்.

ஆன்னி: இப்போது சொல்ல மாட்டேன். தருணம் வரும்போது சொல்வேன் !

ஜான் டான்னர்: [ஆர்வமாய்] தருணம் எப்போது வரும் ஆன்னி ? உன்னைக் காதலிப்பவனை மணந்தால் அவன் ஆலயத்தில் வைத்துன்னைப் பூஜிப்பான் ! நீ காதலிக்கும் ஒருவன் உன்னை நேசிக்க மாட்டான். வேறொருத்தி மேல் கண் வைத்திருப்பான் ! உன்னை வாசல் துடைப்புக் கம்பளமாய் மிதிப்பான் !

அக்டேவியஸ்: [கவலையுடன்] ஆன்னி ! நீ யாரைக் காதலிக்கிறாய் என்று எனக்குத் தெரியும் ! நீ யாரை மணக்கப் போகிறாய் என்பது எனக்குத் தெரியும் !

ரோபக் ராம்ஸ்டன்: [ஆர்வமுடன்] சொல் அக்டேவியஸ் ! ஆன்னி யாரை விரும்புகிறாள் ?

அக்டேவியஸ்: ஆன்னி நேசிப்பது ஒருவரைத்தான் ! அவர் நம் முன்னால்தான் நிற்கிறார் ! மிஸ்டர் ஜான் டான்னர் ! வாழ்த்துக்கள் ஜான் ! நீவீர் ஓர் அதிர்ஷ்டசாலிதான் !

ஜான் டான்னர்: நான் யாரையும் மணக்கப் போவதில்லை ! அப்படி மணந்தாலும் ஆணவக்காரி ஆன்னியை நான் மணக்க மாட்டேன் ! என் சுதந்திரத்தை அவள் பறிக்க விடப் போவதில்லை. என்னைக் காதலிப்பவள் ஒருத்தி இருக்கிறாள் என்பதே அதிர்ச்சி தருகிறது ! என் உறக்கத்தைக் கலைக்க எந்தப் பெண்ணுக்கும் உரிமை இல்லை !

ரோபக் ராம்ஸ்டன்: [எரிச்சலுடன்] என்ன ? இந்த தாஞ் சுவானா ஆன்னியின் காதலன் ? எப்படி எனக்குத் தெரியாமல் போனது ?

ஆன்னி: [கொல்லெனச் சிரித்து] தாஞ் சுவான் ! வேடிக்கையான பெயர் ! ஆனால் நல்ல பெயர். காதல் மன்னர் ஜான் டான்னர் ! நான் அவருக்கிட்ட பெயர் வேறு, ரோமியோ ! [சிரிக்கிறாள்] தாஞ் சுவான் என்றே நானினி கூப்பிடுகிறேன் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: [கோபத்துடன்] மன்னித்து விடுங்கள் மிஸ்டர் டான்னர் ! ஆன்னி இன்னும் உலகம் அறியாப் பெண் ! (ஆன்னியைப் பார்த்து) ஆன்னி உன் வாய் நீளுகிறது. இப்படிப் பட்டப் பெயர் வைத்து அழைப்பது அநாகரீகம் ! நீ இன்னும் குமரிப் பெண்ணாகவே இருக்கிறாய். எல்லாருக்கும் பட்டப் பெயர் வைக்கிறாய் ! எனக்கு வேதனையாக இருக்கிறது.

ஜான் டான்னர்: [வருத்தமுடன்] மிஸ்டர் ராம்ஸ்டன் ! இப்படி எனக்குப் பட்டப் பெயர் சூடாதீர் ! நான் தாஞ் சுவானும் இல்லை ! நான் ரோமியோவும் இல்லை ! நான் நானேதான் ! ஜான் என்று அழைத்தாலே போதுமானது ! பட்டப் பெயர் இட்டால் என்னை வால்டேர் என்று அழைக்கலாம், மகிழ்வேன் ! என்னை ரூஸ்ஸோ என்று விளித்தால் பூரிப்பேன் !

ஆன்னி: அம்மா ! கேட்டீர்களா ? பட்டப் பெயர் வைத்துக் கொள்ள ஆசை இல்லாதவர் யார் ?

ரோபக் ராம்ஸ்டன்: பிரெஞ்ச் புரட்சியாளர் போன்றவரா நீவீர் ? என்ன புரட்சி செய்யலாம் என்று சிந்திக்கிறீர் ? உமது புரட்சிப் பைநூல் தூசிபட்டுக் கிடக்கிறது ! உம்மைத் தவிர வேறு யார் அதைப் படித்தாரோ ? நான் அதைப் படிக்கப் போவதில்லை.

ஜான் டான்னர்: நான் குடிமக்களுக்குச் சமூகவாதி ! சமூகக் குறைகளைச் சுட்டிக் காட்டுவது என் தொழில் ! அவற்றை நீக்குவது பொது மக்கள் தொழில் !

ரோபக் ராம்ஸ்டன்: [கேலியாகச் சிரித்து] சமூகக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவீர், ஆனால் நீக்க மாட்டீர் ! இது என்ன புரட்சி ? போலிப் புரட்சி என்று நான் சொல்வேன் !

ஜான் டான்னர்: குளத்தைக் காட்டி இதில் கெட்டநீர் உள்ளது, அதில் நல்ல நீர் உள்ளது என்று நான் சொல்கிறேன். கெட்ட நீர் குடிப்பவரைத் தடுக்க முடியாது ! நல்ல நீர் குடிக்க நான் ஒருவரை இழுத்துச் செல்ல இயலாது ! அது அவரவர் விருப்பம், தேர்வு, உரிமை, அக்டேவியஸ் ஓர் எழுத்தாளன், கலைஞன், இலக்கியவாதி. நான் கலைஞன் அல்லன் ! மெய்யான கலைஞன் மனைவியைப் பட்டினி போடுவான் ! பிள்ளைகளை வெறுங்காலில நடக்க வைப்பான் ! அவனுடைய அறுபது வயதுத் தாய் வெளி வேலை செய்து ஊதியம் கொண்டு வருவாள் ! அவன் தாய்ப்பாலைத் திருடி அதைக் கரு மையாக ஆக்கி அவளைக் கேலி செய்து நூலில் அச்சடிப்பான் ! உன்னதப் பெண்கள் என்று ஒய்யாரமாகப் புகழ்ந்து எழுதி வருவான். இல்வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே கலைஞன் தகுதியில்லாத ஒரு கணவன் என்று அறியப் பட்டிருக்கிறான் ! அதை விடக் கேடு கெட்டவன் ! குழந்தைகள் பணத்தைத் திருடுபவன் ! மனைவி குருதியை உறிஞ்சுபவன் ! வஞ்சகன் ! ஏமாற்றுப் பேர்வழி ! [அக்டேவியஸைப் பார்த்து] அக்டேவியஸ் ! கலைஞனின் தொழில் என்ன ? மனிதர் மெய்யாக எவ்விதம் நடந்து வருகிறார் என்பதை நமக்குக் காட்டுவதுதான் ! கலைஞன் படைப்பு முறையில் பெண்ணைப் போல் இரக்கம் இல்லாதவனே ! ஆண் எப்படிப் பெண்ணுக்குக் கேடு செய்கிறானோ, அதேபோல் பெண்ணும் ஆணுக்குக் கெடுதி இழைப்பவளே ! ஆணுக்குப் பெண் எவ்விதக் கவர்ச்சிப் பிறவியோ, அதே போல் பெண்ணுக்கு ஆடவனும் ஓர் கவர்ச்சிப் பிறவியாகவே தென்படுகிறான் ! மானிடப் போராட்டங்களிலே கலைஞனுக்கும், அன்னையாக அதிகாரம் செய்யும் மனைவிக்கும் ஏற்படும் போராட்டத்தைப் போல் கொடுமையானது எதுவுமில்லை ! எது எதனைத் தின்று விழுங்கும் என்பதை அறிய முடியாது ! அது மரணக் கொடூரம் ! ஏனெனில் உள்ளார அவர் இருவரும் காதல் மோகத்தில் கவரப்பட்டு ஒருவருடன் ஒருவர் ஒட்டிக் கொண்டு பிறரை வெட்டி விடுகிறார் !.

***************************

(தொடரும்)

*********
தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan January 30, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts