தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
“நாணத்தை நான் முற்றும் வெல்ல முடிய வில்லை. வெட்கச் சூழ்நிலையில்தான் நாம் யாவரும் வாழ்கிறோம். நம்மைப் பற்றிய ஒவ்வொரு உண்மையைக் கண்டு நாமே நாணுகிறோம். நம்மைப் பற்றி, நம் உறவினரைப் பற்றி, நமது வருவாயைப் பற்றி, நமது மொழி உச்சரிப்பைப் பற்றி, நமது சொந்தக் கருத்துக்களைப் பற்றி, நமது பிறப்பைப் பற்றி, நமது அனுபவத்தைப் பற்றி, நமது அமணத் தோலைப் பற்றி வெளியே சொல்ல நாம் வெட்கப் படுகிறோம். எத்தனை நடைமுறைப் போக்குகளுக்கு ஒருவன் நாணம் அடைகிறானோ, அத்தனை மட்டத்துக்கு அவனது மதிப்பு உயர்கிறது ! என் நூலை வாங்க நீங்கள் வெட்கப் படுகிறீர். அந்நூலைப் படிக்க நீங்கள் வெட்கப் படுகிறீர். நீவீர் வெட்கப் படாதது ஒன்றே ஒன்றுதான் ! என் நூலைப் படிக்காமலே அதற்கு விமர்சனம் அளிப்பது !”
– ஜான் டான்னர்.
பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)
— பிறர் உனக்கு என்ன செய்யக் கூடாதென்று விழைகிறாயோ, அதை நீ மற்றவருக்கு இழைக்காமல் இரு ! ஒருவரது விருப்பு, வெறுப்புச் சுவைகள் மற்றவரைப் போல் ஒரே மாதிரியாக இருக்கா !
— கவர்ச்சித் தாக்குதல்களை ஒருபோதும் தடுக்காதே ! எல்லாவற்றையும் நிரூபித்துக் காட்டு ! உனக்கு நலன் அளிப்பவைகளை இறுக்கிப் பிடித்துக் கொள் !
— நீ உன்னை நேசிப்பது போல் அருகில் இருப்பவனை நேசிக்காதே ! நீ உன்னுடன் சமரசமாக இருந்தால், அது ஒரு முறைகெட்ட தன்மையே ! அப்படி இல்லாமல் உன்னுடன் நீ போரிட்டால் காயப்படுவாய் நீ !
— பொன் விதி (Golden Rule) என்னவென்று கேட்டால், பொன் விதிகளே இல்லை என்பதுதான் பதில் !
பெர்னார்ட் ஷா (புரட்சிவாதிகளின் பொன் விதிகள்)
Fig. 1
John Tanner
உன்னத மனிதன் நாடகத்தைப் பற்றி:
1903 ஆம் ஆண்டில் ஜியார்ஜ் பெர்னார்ட் ஷா காதல் மன்னன் “தாஞ் சுவான்” ஆய்வுக்கருவை (Don Juan Theme) உட்கருவாக வைத்து “மனிதன் & உன்னத மனிதன்” என்னும் நான்கு அங்க நாடகமாக எழுதினார். அந்த நாடகத்தை ஓர் நடிப்பு நாடகம் என்று சொல்வதைவிடப் படிப்பு நாடகம் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. ஏனெனில் பெர்னார்ட் ஷா மரபான நாடக நடப்பை விட்டுவிட்டு தனது புரட்சிக் கருத்துக்களை ஓங்கி முரசடித்திருக்கிறார். அவரது கருத்துக்களை அவ்விதம் நாடக மூலம் பறைசாற்றுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. ஆயினும் அங்கே பெர்னார்ட் ஷாவை நாம் முழுமையாகக் காண முடிகிறது. உன்னத மனிதன் நாடகம் 1905 இல் லண்டன் ராயல் கோர்ட் நாடக அரங்கில் முதன்முதல் மூன்றாவது அங்கமின்றி அரங்கேறியது. காரணம் அந்தப் பகுதியில் பெர்னார்ட் ஷா தனது புரட்சிகரமான பொதுவுடைமைக் கருத்துக்களைக் கொட்டியிருக்கிறார். உன்னத மனிதன் முழுநாடகமும் 1915 இல்தான் அரங்கேறியதாக அறியப்படுகிறது.
உன்னத மனிதன் நாடகம் எளிய முறை நளினத்தில் இன்பியல் நாடகமாக மேடை ஏறினாலும் பெர்னார்ட் ஷா அந்த நாடகத்தின் ஆழக் கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்த ஓர் உரைநடை நாடகமாக ஆக்கியுள்ளார். “உன்னத மனிதன்” என்ற தலைப்பைப் பெர்னார்ட் ஷா ·பிரடெரிக் நியட்ஸேயின் (Friedrich Nietzsche’s
நாடக ஆசிரியர் பெர்னார்ட் ஷாவைப் பற்றி:
ஜியார்ஜ் பெர்னார்ட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத் துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கியப் படைப்புகளைப் படித்து வந்த பெர்னார்ட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராக உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House) போன்றவை.
****************
உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 1 பாகம் : 4
நடிகர்கள்:
1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் ராம்ஸ்டன் (Miss Ramsden) – ரோபக்கின் புதல்வி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker)
6. ஹெக்டர் மலோன் (Hector Malone)
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)
**************
Fig. 2
Annie & Octavius
(அங்கம் : 1 பாகம் : 4)
கதா பாத்திரங்கள்: ரோபக் ராம்ஸ்டன், அக்டேவியஸ் ராபின்ஸன்.
காலம்: காலை வேளை
இடம்: மேயர் ரோபக் ராம்ஸ்டன் மாளிகை.
(காட்சி அமைப்பு : கோட்டு, சூட்டு அணிந்து ரோபக் ராம்ஸ்டன் தனது நூலக அறையில் படித்துக் கொண்டிருக்கிறார். நகரில் பேரும் புகழும் பெற்ற செல்வந்தர் அவர். மாளிகையில் மூன்று வேலைக்காரிகள் உள்ளார். அறையின் சுவர்களில் அழகிய ஓவியங்கள் தொங்குகின்றன. அறை பளிச்செனத் தூய்மையாக உள்ளது. நூல்கள் நேராகச் சீராக அடுக்கப்பட்டு நூலகம் காட்சி தருகிறது. நூலகத்தில் ராம்ஸ்டனும், அக்டேவியசும் உரையாடி வரும்போது, வேலைக்காரி மேரி ஜான் டான்னர், ஆன்னி வொயிட்·பீல்டு ஆகியோர் வந்திருப்பதை அறிவிக்கும் போது ராம்ஸ்டன் கோபப்பட்டு வரவேற்க மறுக்கிறார். இறுதில் ராம்ஸ்டன் டான்னருடன் வேண்டா விருப்புடன் உரையாடுகிறார்.
ரோபக் ராம்ஸ்டன்: (எரிச்சலுடன்) அது ஒரு நூலா ? அதை நானும் படிப்பேனா ? வாங்கி வைத்திருக்கிறேன் ! இதுவரைத் தூசி படிந்து கிடந்தது ! அக்டேவியசுக்குப் படிக்க ஆசை ! கொடுக்கப் போகிறேன் ! . . . . அக்டேவியஸ் ! நூலைப் பிடித்துக் கொள் ! (நூலைத் தூக்கி எறிகிறார். அது தவறிப் போய் குப்பைத் தொட்டியில் விழுகிறது) பார்த்தீரா மிஸ்டர் டான்னர் ! படிக்கக் கொடுத்தாலும் அது தேடுவது குப்பைத் தொட்டியைத்தான் ! இந்த நூல் ஒரு புரட்சி நூலா ? என்ன புரட்சி செய்ய இதை எழுதினீர் ? லெனின் ஒரு புரட்சிவாதி ! ஒப்புக் கொள்கிறேன். நெப்போலியன் ஒரு புரட்சிவாதி ! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் மதாதிபதி மார்டின் லூதர் ஒரு புரட்சிவாதியா ? உமது கருத்தை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை ! எப்படி என்று சற்று விளக்கம் கொடுப்பீரா ?
ஜான் டான்னர்: மதத்தைப் பரப்பும் மதாதிபதி தன் மதக் குழுவினரை மட்டுமே மதிப்பவன். மற்ற மதத்தாரை மிதிப்பவன் ! ஆனால் மெய்யான ஒரு புரட்சிவாதி பொதுமக்கள் அனைவரையும் மாற்றப் புறப்படுகிறான் ! மதவாதி மார்டின் லூதர் ஒரு மதச் சீர்திருத்தவாதி ! ரோமன் காதலிக் அதிகாரக் கோட்டையைத் தகர்த்த எதிர்ப்புவாதி அவர் ! ஆனால் அவர் ஏசு நாதர் போல் மதப்புரட்சி செய்ய வில்லை ! மதத் தூசிகளைத் துடைத்து புது மதமென்று சொல்லிக் கொண்டார் ! குப்பையை எந்தத் தொட்டியில் போட்டால் என்ன ?
ரோபக் ராம்ஸ்டன்: மதக் கொள்கைகள் மனித வளர்ச்சிக்குத் தேவையான உன்னத நெறிகள். புரட்சிவாதி உனக்குக் குப்பையாகத் தெரிகிறது !
அக்டேவியஸ்: (சலிப்புடன்) வேண்டாத உங்கள் தர்க்கத்தை வேறிடத்தில் வைத்துக் கொள்வீர்களா ? நமது கடமைகள் வேறு. இப்போது உயிலை மதித்து ஆன்னிக்கு ஒரு வழி சொல்லுங்கள்.
ரோபக் ராம்ஸ்டன்: கவலைப் படாதே ஆன்னிக்கு நல்ல வழி வகுப்பதே என் கடமை. ஆன்னி ஓரிளம் அழகி. ஆனால் உலக அனுபவம் இல்லாதவள். அதனால்தான் பொறுப்பு என்மீது விழுந்துள்ளது.
ஜான் டான்னர்: உங்கள் மீது நம்பிக்கை இல்லாததால் மிஸ்டர் வொய்ட்·பீல்டு என் பெயரையும் உயிலில் சேர்த்துள்ளதை மறந்து விட்டீரே !
ரோபக் ராம்ஸ்டன்: என் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்று நீ சொல்லக் கூடாது மிஸ்டர் டான்னர்.
ஜான் டான்னர்: ஆன்னி எவரையும் பொருட் படுத்தாமல் தன்னிச்சைப்படியே செய்வாள். நாம் அவளை அழைத்து வந்து நேராகவே கேட்போம். அக்டேவியஸ் ! மாடிக்குப் போய் அழைத்து வருவாயா ஆன்னியை ? அவளைப் பற்றிப் பேசும் போது அவளும் நம்முடன் இருக்க வேண்டும்.
(அக்டேவியஸ் மாடிக்குச் செல்கிறான்)
ரோபக் ராம்ஸ்டன்: மிஸ்டர் டான்னர் ! பிடிவாதக்காரர் நீவீர் ! நாம் பேசி முடிக்காமல் ஆன்னியை அழைத்து வந்து அவளையும் குழப்பிவிடப் போகிறோம். குண்டு சட்டியில் குழப்பம் செய்யும் புரட்சிவாதி அல்லவா நீவீர் ? குழப்பமின்றி புரட்சி செய்ய முடியுமா உம்மால் ?
ஜான் டான்னர்: முடியாது மிஸ்டர் ராம்ஸ்டன் ! தொட்டியில் மண்டி நீரைக் கலக்கி விட்டால்தான் தெளிந்த நீர் மேலே வர முடியும். வெட்கச் சூழ்நிலையில்தான் நாம் வாழ்கிறோம். நம்மைப் பற்றிய ஒவ்வொரு உண்மைகளைக் கண்டு நாம் நாணுகிறோம். நம்மைப் பற்றி, நம் உறவினரைப் பற்றி, நமது வருவாயைப் பற்றி, நமது மொழி உச்சரிப்பைப் பற்றி, நமது சொந்தக் கருத்துக்களைப் பற்றி, நமது பிறப்பைப் பற்றி, நமது அனுபவத்தைப் பற்றி, நமது அமணத் தோலைப் பற்றி வெளியே சொல்ல வெட்கப் படுகிறோம். எத்தனை நடைமுறைப் போக்குகளுக்கு ஒருவன் நாணம் அடைகிறானோ, அத்தனை மட்டத்துக்கு அவனது மதிப்பு உயர்கிறது ! என் நூலை வாங்க நீங்கள் வெட்கப் படுகிறீர். அந்நூலைப் படிக்க நீங்கள் வெட்கப் படுகிறீர். நீவீர் வெட்கப் படாதது ஒன்றே ஒன்றுதான் ! என் நூலைப் படிக்காமலே அதற்கு விமர்சனம் அளிப்பது !
Fig. 3
Mother & Daughter
(அப்போது மாடியிலிருந்து ஆன்னியும், அவளுடைய அன்னை மிஸிஸ் வொயிட்·பீடும் அக்டேவியஸ் கூட வருகிறார்கள். ராம்ஸ்டன் முன்னடி வைத்து இருவரையும் வரவேற்க விரைந்து செல்கிறார். ஆன்னி நளினமும், நடையழகும், நாக்கழுத்தமும் உடையவள். கண்டோரைக் கவர்ந்திடுவாள். காதல் மேலிட்டுக் கனவு காண வைத்திடுவாள். கவர்ச்சியும், கனிவும், கலை அறிவும் மிக்கவள். ஒல்லியாக ஒய்யாரமாக உடை அணிந்து புன்னகையுடன் நூலகத்தில் நுழைகிறாள். அக்டேவியஸ் இழுத்து வைத்த நாற்காலியில் உட்காருகிறாள்.
தாயார் முகத்தில் காலஞ் சென்ற கணவரின் கவலை நிழல் படிந்துள்ளது. மெலிந்த உருவம். சிறுத்த மேனி. வயது 65 இருக்கும். ராம்ஸ்டன் இழுத்த நாற்காலியில் அமர்கிறாள்.)
ரோபக் ராம்ஸ்டன்: (புன்முறுவலுடன்) உங்களை முதலில் வரவேற்காமல் போனதற்கு மன்னிக்க வேண்டும். உங்கள் வருகை சரியாகத் தெரிவிக்கப் படவில்லை எனக்கு. மேரி புதிதாகப் பணிசெய்ய வந்தவள். அவள் கற்றுக் கொள்ள வேண்டியவை பற்பல நடைமுறைகள். உயிலைப் பற்றி முதலில் சொல்லட்டுமா ? ஆன்னி ! நீ அதைப் படித்து விட்டாய் அல்லவா ? உன்னையும், ரோடாவையும் என் பொறுப்பில் விட்டுவிட்டுப் போய்விட்டார் உன் தந்தை !
ஜான் டான்னர்: ஆன்னி ! என் பொறுப்பும் கூட்டாக இருப்பதாக உயிலில் உள்ளது.
ஆன்னி வொயிட்·பீல்டு: ஆமாம் மிஸ்டர் ராம்ஸ்டன். அதைப் படித்த பிறகுதான் உங்களைச் சந்திக்க நாங்கள் வந்திருக்கிறோம். நல்ல வேளை, டான்னரும் இங்கிருக்கிறார்.
ரோபக் ராம்ஸ்டன்: நான் ஒருவனே அந்தப் பொறுப்பு வேலையைச் செய்ய முடியும். வாலிப வயதில் உள்ள டான்னரின் உதவி எனக்குத் தேவையில்லை. வயதில் மூத்த நான் ஒரு வாலிபரின் அறிவை ஏற்றுக் கொள்ள விழைவதில்லை. உன்னுடைய விருப்பத்தை அறியாமல் எனக்கு எதையும் செய்யும் இதயம் இல்லை ! உன் விருப்பம் என்ன ? தனியாக நான் பொறுப்பேற்றுச் செய்யவா ? அல்லது மிஸ்டர் டான்னர் மட்டும் பொறுப்பேற்றுக் கொள்ளவா ? இரட்டையர் பொறுப்பு ஏற்க உடன்பாடில்லை எனக்கு.
ஆன்னி: [அன்னையை நோக்கி] அம்மா ! உங்கள் விருப்பம் என்ன ?
மிஸிஸ் வொயிட்·பீல்டு: [சட்டென வெட்டி] ஆன்னி ! என்னைக் கேட்காதே. எனக்கொன்றும் தெரியது, புரியாது. என் தலைமேல் எந்த பாரமும் வேண்டாம். நீங்கள் மூவரும் ஒரு முடிவுக்கு வாருங்கள். நானதை ஏற்றுக் கொள்வேன்.
ஆன்னி: அம்மாவின் விருப்பமே என் விருப்பம். இரட்டையர் கூட்டு முடிவை ஏற்றுக் கொள்கிறேன். என்னையும் ரோடாவையும் பொறுப்பேற்க உங்கள் உதவியின்றி அன்னையால் முடியாது.
மேலும் மங்கை ரோடாவுக்கு பாதுகாப்பாளி தேவை. நான் மூத்தவள் ஆயினும், பாதுகாப்பில்லாமல் ஓர் இளம்பெண்ணைத் தனியாக விடுவது சரியில்லை என்று சொல்வேன் தாத்தா !
ஜான் டான்னர்: [அதிர்ச்சியில்] என்ன தாத்தாவா ? உன் பாதுகாப்பாளரைத் தாத்தா வென்றா அழைக்கிறாய் ?
ஆன்னி: அறிவில்லாமல் பேசாதே ஜான் ! எப்போதும் மிஸ்டர் ராம்ஸ்டன் எனக்கு ரோபக் தாத்தாதான் ! ஆன்னி, ரோபக் தாத்தாவின் பேத்தி ! ரோபக், ஆன்னியின் தாத்தா ! சின்ன வயதில் நான் பேச ஆரம்பித்ததும் அவரைத் தாத்தா வென்றுதான் அழைத்தேனாம். அதை நான் இப்போது நான் நினைவூட்ட வேண்டும்.
ரோபக் ராம்ஸ்டன்: [மகிழ்ச்சியுடன்] என்ன பரிவு உனக்கு என்மீது ! இப்போது திருப்தியா இருக்கிறதா மிஸ்டர் டான்னர் ? ஆன்னி என்னினிய பேத்தி ! ரோபக் ஆன்னியின் தாத்தா.
ஜான் டான்னர்: [சற்று சலிப்புடன்] ஆன்னி ! அடுத்து என்னை உன் சகோதரன் என்று சொல்லிக் கொண்டு அருகில் வராதே ! நானும் உனக்குச் சகோதரன் இல்லை ! நீயும் எனக்குச் சகோதரி ஆக வேண்டாம். பொறுப்பாளிப் பணியை நிறைவேற்றுவதில் முரண்பாடுகள் தோன்றிவிடும் !
ஆன்னி: எனக்காகத் தந்தை ஏற்பாடு செய்த பொறுப்பாளிகளில் எவரையாவது நான் நீக்க முடியுமா ? அப்பா விதியே ஒப்பிலா விதி ! தப்பிலா விதி !
ரோபக் ராம்ஸ்டன்: (ஆச்சரியமுடன்) அப்படியானால் நீயும் இரட்டையர் கூட்டுப் பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்கிறாய் அல்லவா ?
ஆன்னி: அதை நான் ஏற்கவு மில்லை ! எதிர்க்கவு மில்லை ! என்னை மிகவும் நேசித்தவர் என்னருமைத் தந்தை ! அவர் எனது நன்மைக்காகவே எதுவும் செய்திருப்பார் ! அதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
ஜான் டான்னர்: [இடையில் வெட்டி] என்னைப் பற்றிச் சிறிது விளக்க வேண்டும் உனக்கு. ஆன்னி ! மிஸ்டர் ராஸ்டன், அதாவது உன்னருமைத் தாத்தா என்னைக் கீழாக மதிக்கிறார் ! உனக்குப் பொறுப்பாளியாக இருக்கத் தகுதியில்லாதவன் என்று என்னை நிந்தனை செய்கிறார். ஒப்புக்கொள்கிறேன் அந்த நிந்தனையை ! என் புரட்சிக் களஞ்சியப் பைநூலை உன் தந்தை படித்திருந்தால் என்னை உனக்குப் பொறுப்பாளியாக ஆக்கியிருக்க மாட்டாராம். அந்த நூல் ஓர் அவமானப் படைப்பு என்பது அவரது அழுத்தமான கருத்து ! அவர் நினைப்பது இப்படி ! ரோடாவுக்காக என்னை ஒதுக்கி விட்டுத் தன்னை மட்டும் தனியாகப் பொறுப்பில் விட வேண்டும் என்பது அவர் விருப்பம். இப்போது நீ சொல் ! நீ சொல்லி விட்டால் நான் தள்ளி நிற்கிறேன்.
ஆன்னி: [சற்று சலிப்புடன்] ஆனால் உன் நூலை நான் இன்னும் படிக்க வில்லையே ஜான் !
ஜான் டான்னர்: [குப்பைத் தொட்டியில் நூலை எடுத்து] ஈதோ ! படித்துப் பார் ! முதலில் படித்து முடி ! பிறகு முடிவு செய் ! [நூலை ஆன்னி கையில் தருகிறார்]
ஆன்னி: [ஆச்சரியமுடன்] யாரந்த மூடன் ? இந்தக் காவியத்தைக் குப்பையில் வீசியது ?
ஜான் டான்னர்: [சிரித்துக் கொண்டு] சரியாகக் கேட்டாய் ஆன்னி ! அந்த நூலை வீசி எறிந்தது உன்னருமைத் தாத்தா வென்றால் நீ நம்ப மாட்டாய் !
ஆன்னி: அழகான அட்டை ! கனமான நூல் ! இப்போதே படிக்க இச்சை உண்டாகுது !
ரோபக் ராம்ஸ்டன்: [கோபத்துடன் மேஜையில் அடித்து] அதைப் படிக்காதே ஆன்னி ! நான் தடுக்கிறேன் ! பொறுப்பாளியாக நானிருக்க வேண்டுமானால் நீ புறக்கணிக்க வேண்டும் அந்த நூலை !
ஆன்னி: தாத்தா ! நீங்கள் அப்படிச் சொன்னால் நானதைப் படிக்கப் போவதில்லை ! (நூலை மேஜை மீது வைக்கிறாள்)
ஜான் டான்னர்: ஆன்னி ! இந்தக் கட்டுப்பாடு சரியில்லை ! அந்தக் கட்டுப்பாடுக்கு நீ தலை சாய்ப்பதும் சரியில்லை ! படிக்காதே என்று ஒரு பொறுப்பாளி தடுக்கிறார் ! படிக்க வேண்டு மென்று அடுத்த பொறுப்பாளி ஆணை விடுக்கிறார் ! யார் சொல்வதை நீ எடுத்துக் கொள்வாய் ? உன் கடமை என்ன ? பொறுப்பாளிகளில் ஒருவரை மதித்து அடுத்தவரை மிதிப்பதா ?
ஆன்னி: [சோகமுடன்] இப்படி என்னைத் திக்குமுக்காடச் செய்யாதே ஜான் ! இக்கட்டான வினாக்களை என்மேல் அம்புகளாய் ஏவாதே ஜான் !
ரோபக் ராம்ஸ்டன்: [எரிச்சலுடன்] வாழ்க்கையில் இப்படி யெல்லாம் நிகழும் ஆன்னி ! நீ ஒரு முடிவுக்கு வர வேண்டும் ! நாங்களும் உன்னைப் போல்தான் திக்குமுக்காடுகிறோம்.
ஆன்னி: எனக்கு இளமை வயது ! அனுபவம் இல்லாதவள் ! எதையும் தீர்மானிக்க முடியாது என்னால் ! படியென்றால் படிப்பாள் ஆன்னி ! படிக்காதே என்றால் நிறுத்தி விடுவாள் ஆன்னி ! அப்படி மன ஊஞ்சல் ஆடும் பாவைதான் ஆன்னி !
மிஸிஸ் வொயிட்·பீல்டு: பொறுப்பாளியான நீங்கள் இருவரும் முடிவு செய்ய முடியாத ஒன்றை ஆன்னியின் பொறுப்பாக விடாதீர்கள் ! பொறுப்புக்கும் புத்தகத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது ? எனக்கொன்றும் புரியவில்லை ! நூலைப் படிக்க நேரமில்லை ! இருவரும் நூலைப் பிடித்துக் தொங்க வேண்டாம் ! பொறுப்பு வேலைகளைப் பாருங்கள். ஆன்னிக்கு முதலில் திருமண ஏற்பாடு செய்ய வேண்டும் ! யார் அவளைத் தேர்ந்தெடுப்பார் ? யாரை அவள் தேர்ந்தெடுப்பாள் ? அதற்கு ஆவன செய்வீர் இருவரும் ! ஆன்னிக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது ! காலமும் மாறிக் கொண்டே போகிறது ! பெண்ணுக்குக் கணவன் அமைவது பெரும்பாடு ! வாலிபர் திருமணம் என்றால் இப்போது வேண்டாம் என்று நழுவிச் செல்கிறார் !
***************************
(தொடரும்)
*********
தகவல்
Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)
1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan January 22, 2008)]
- ஜெயமோகனும் இயல் விருதும்
- தாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் !
- கடைசி கிலோ பைட்ஸ் – 6 [ Last Kilo bytes -4 ]
- கருணாகரன் கவிதைகள்
- போய்விடு அம்மா
- சம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )
- ஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் ! அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 13)
- மீராவின் கவிதை
- மழை பிடிக்காது! மழை பிடிக்காது!
- பட்டுப்பூவே !
- ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை
- கவிதைகள்
- இரு நாட்டிய நிகழ்வுகள்
- இரண்டில் ஒன்று
- தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்
- புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
- சிங்கப்பூரில் 59வது இந்திய குடியரசுதினம்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.
- கொட்டாவி
- கடிதம்
- ஊர் சுற்றிய ஓவர் கோட்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 4
- மொழி
- மாத்தா- ஹரி அத்தியாயம் -46
- தம்மக்கள்
- மாலதி மாற மாட்டாள்!
- வானபிரஸ்த்தாசிரமம்
- தைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.
- திண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008
- நீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை!
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்
- எண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன்.
- பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா?
- இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்
- குடியரசுதின சிறப்புக் கட்டுரை
- இரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2
- காற்றினிலே வரும் கீதங்கள் – 3 மூச்சு விடுவதே பெரும்பாடு !
- திருப்பூரில் பரிசு பெறும் உஷா தீபன்