தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
மேடம் ! சுருக்கமாய்ச் சொல்லவா ?
வெளிப்படை யாய்ச் சொல்லவா ?
என்னிதயத்தில் புண்ணுண்டாகும்
உன் நடத்தை வேதனை அளிப்பது !
என் மனச்சாட்சி குத்திக் கிழிக்குது !
இன்றோ நாளையோ நாம் பிரிவது நன்று !
பத்தாயிரம் முறை வாக்குறுதி அளிப்பினும்
உத்திர வாதம் தந்திலேன் உனக்கு !
— (நாடகம் : மனித வெறுப்பாளி)
மாலியர் வாய்மொழிகள்
முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.
மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.
பேராசைக் கஞ்சன்
அங்கம் 5 காட்சி 3
பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:
எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.
கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.
எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.
ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.
மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.
வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.
கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..
சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.
மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.
ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.
வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்
***************
அங்கம் 5 காட்சி 3
இடம்: பாரிஸில் போலீஸ் நிலையம்.
நேரம்: பகல் வேளை
காட்சி அமைப்பு: போலீஸ் அதிகாரிகள், எட்வேர்டு, சமையல்காரன் ஜேகப், வீட்டு வேளையாள் வில்லியம். போலீஸ் உடையில் இல்லாத உளவு அதிகாரி ஒருவர் எட்வேர்டுடன் களவுப் பணம் பற்றி பேசுகிறார். முதலில் குற்றம் சுமத்தப்படும் சமையல்காரன் ஜேகப், தான் திருடவில்லை என்று சாதித்து, வீட்டு வேலையாள் வில்லியத்தைக் காட்டிக் கொடுக்கிறான். வில்லியம் தான் திருடவில்லை; எலிஸபெத்தை நேசிப்பதாகச் சொல்லி எட்வேர்டுக்குக் கோபத்தை மூட்டுகிறான். அப்போது எலிஸபெத், மொரீன், கிளாடியா மூவரும் வாகனத்திலிருந்து இறங்கி உள்ளே நுழைகிறார்கள். திடீரென வில்லியம்-மொரீன் ஆகியோரின் தந்தை ஆப்ரஹாமும் வருகிறார்.
எட்வேர்டு: [எலிஸபெத்தைக் கோபத்துடன் பார்த்து] நீ எனக்குப் பிறந்த பெண்ணே அல்ல ! போயும், போயும் வீட்டு வேலைக்காரனை விரும்பும் உன்னை என் மகளென்று சொல்லக் கூச்சப் படுகிறேன். கண்ணியமான காதலனா இவன் ! கயவன் இவன் ! என் பணத்தைக் களவாடிய எத்தன் ! பெண்ணை மயக்கி தன்வசப்படுத்தும் பித்தன் ! பணத்தைத் திருடவில்லை என்று சத்தியம் செய்யும் சித்தன் ! என் அனுமதி இல்லாமல் நீ எப்படி இந்தக் கள்வனைக் காதலிப்பாய் ?
எலிஸபெத்: அப்பா ! அவர் யாரென்று தெரியாமல் பேசுகிறீர். வீட்டு வேலைக்கு வந்தாலும், அவர் வேலைக்காரர் அல்லர். கூலி வாங்கினாலும் அவர் வேலையாளி அல்லர் ! என்னுடன் பேசிப் பழகவே அவர் நம் வீட்டு வேலைக்கு வந்தார். எப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.
எட்வேர்டு: [வில்லியத்தைப் பார்த்து] எலிஸபெத் ! என் புதையல் பணத்தை எடுத்துக் கொண்டு போனவன் இவனேதான் ! தோண்டி எடுத்ததை ஜேகப் மறைந்து நின்று பார்த்திருக்கிறான் ! வில்லியம் நல்லவன் என்று நீ எனக்கு சொல்லித் தருகிறாயா ? உன்னை மணப்பதற்கு என் பண முடிப்பு உதவப் போவதாய் மனப்பால் குடிக்கிறான் இந்த மடையன் ! சிறைக்குள் அடைக்கப்படும் இந்த எத்தன் உன்னை எப்படித் திருமணம் செய்வான் என்று நான் பார்க்கப் போகிறேன் ? நான் உனக்குத் தேர்ந்தெடுத்த ஆடவரைத்தான் நீ மணக்க வேண்டும் !
எலிஸபெத்: அப்பா ! நான் அந்த கிழவரை மணக்க மாட்டேன் ! அந்தக் கல்யாணம் நடக்கவே நடக்காது. அந்தக் கிழவர் ஒரு காலை இடுகாட்டிலும், மறு காலை நடுவீட்டிலும் வைத்திருக்கிறார். அவருக்கு மகளாக இருப்பதை விட உங்களுக்கு மகளாக இருந்து விடுகிறேன். என்னுயிரைக் காப்பாற்றிய வில்லியம் ஒருவரைத்தான் நான் மணப்பேன் ! இல்லையேல் கன்னியாகவே உயிர் துறப்பேன். வில்லியம்தான் என் வருங்காலக் கணவன் !
எட்வேர்டு: [ஆச்சரியன்முடன்] என்ன ? இந்தக் கள்ளப் பயலா உன்னைக் காப்பாற்றினான் ?
எங்கே, எப்படி, எப்போது இவன் உன்னைக் காப்பாற்றினான் ? அதென்ன புதுக்கதை ? எனக்கு இதுவரை தெரியாதே !
எலிஸபெத்: போன வருடக் கோடையில் கடலில் குளிக்க நான் தோழிகளுடன் போனது ஞாபம் உள்ளதா ? கடலில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென அலையடித்து என்னை இழுத்துச் சென்றது ! தோழிகள் என்னைக் காப்பாற்ற முடியாமல் அலறினார் ! உதவிக்குக் கூக்குரல் இட்டார். அப்போது தேவ குமாரனைப் போல் ஓடிவந்தவர் இந்த வில்லியம் ! மூழ்கி மூச்சு நிற்கும் தருவாயில் என்னைத் தூக்கி வந்தவர் வில்லியம். வாயோடு வாய் வைத்துத் தன் உயிர் மூச்சை என் நெஞ்சில் ஊதியவர் இந்த வில்லியம் ! அந்த உயிர் மூச்சில் பிழைத்தவள் நான் அப்பா ! அன்றே என்னை முத்தமிட்டு அணைத்துக் கொண்டவர் இந்த வில்லியம் ! அவரிடம் உடலையும் உயிரையும் அப்போதே அர்ப்பணம் செய்தவள் இந்த எலிஸபெத் ! எப்போதோ எங்கள் ஆத்மாக்கள் இணைந்து விட்டன அப்பா ! அந்த பிணைப்பை உங்களால் பிரிக்க முடியாது அப்பா !
எட்வேர்டு: வில்லியம் செய்ததை எந்த ஆடவனும் செய்வான் ! இதென்ன தீரச் செயல் ? உன்னைக் காப்பாற்றிய வாலிபனுக்குச் சன்மானத்தைக் கொடு ! உன்னிளமை அழகை ஒரு வேலைக்காரனுக்கா பலியிட வேண்டும் ? என் பூட்ஸ்களைத் துடைத்தவன் எப்படி எனக்கு மருமகன் ஆவான் ? என் வீட்டில் வேலைக்கு வந்தது எலிஸபெத் உனக்காக ! என் வீட்டில் உண்டு, உறங்கி, உலாவியது எலிஸபெத் உனக்காக ! என் உண்டியல் பணத்தைக் கொள்ளை அடித்தது எலிஸபெத் உனக்காக ! பணத்தை ஒளித்து வைத்து இல்லை என்பது எலிஸபெத் உனக்காக ! எல்லாம் உனக்காக எலிஸபெத் ! எப்போது அதை உணரப் போகிறாய் எலிஸபெத் ?
எலிஸபெத்: உங்கள் பணத்தை நிச்சயம் வில்லியம் எடுத்திருக்க மாட்டார் ! அவரது செல்வந்தர் வீட்டுப் பிள்ளை ! உங்களுக்குத் தெரியாது அவர் யாருடைய புதல்வர் என்று ?
எட்வேர்டு: [ஆச்சரியமுடன்] என்ன செல்வந்தர் வீட்டுப் பிள்ளையா ? எனக்குத் தெரியாதே ! யார் வில்லியத்தின் தந்தை ? அவருக்குச் சொத்து எவ்வளவு இருக்கும் சுமாராக ?
எலிஸபெத்: வில்லியம் வீட்டு வேலைக்கு வந்த செல்வந்த வீட்டுப் பிள்ளை ! அவரது அப்பா பெயர் ஆப்ரஹாம் ! அவரும் உங்களைப் போலொரு சீமான் ! கோமான் ! தனவான் !
எட்வேர்டு: [ஆச்சரியமுடன்] என்ன ? ஆப்ரஹமா ? கோடீஸ்வரர் ஆப்ரஹாம் வில்லியத்தின் தந்தையா ? எனக்குத் தெரியாதே ! அப்படியானல் வில்லியம் களவாடிய பணத்தை அவரிடமிருந்து நான் வாங்கி விடலாம் ! [பெருமூச்சு விட்டு] என் பணத்தொகை எனக்குக் கிடைத்து விடும் ! கவலை இல்லை !
எலிஸபெத்: அப்பா ! வில்லியம் ஆப்ரஹாமின் மூத்த தாரத்து மகன் ! தகப்பனோடு சண்டை போட்டுக் கொண்டு தனியாக நம் வீட்டில் வேலை செய்து வாழ்கிறார். நீங்கள் தேடிப் போன மொரீன் ஆப்ரஹாமின் இளைய தாரத்து மகள் !
எட்வேர்டு: அந்த ஆப்ரஹாமைத்தான் நான் உனக்கு மாப்பிள்ளையாக முன்பே தேர்ந்தெடுத்து விட்டேன் ! எலிஸபெத் ! ஆப்ரஹாம் செல்வத்தில் நீந்த வேண்டியவள் நீ ! தேடிவந்த சீதேவியை உதறித் தள்ளாதே !
எலிஸபெத்: மூன்றாம் தாரமாகவா ? மூளை கெட்டுப் போச்சு உங்களுக்கு ! ஆப்ரஹாம் மூத்த மகனை நான் கணவனாக முன்பே தீர்மானித்து விட்டேன் ! வாலிப மைந்தன் வைரம் போல் இருக்க, வயோதிகத் தந்தையை மணக்க நான் என்ன மூடப் பெண்ணா ? முடமான பெண்ணா ?
[அப்போது ஆப்ரஹாம் வருகிறார்]
வில்லியம்: அதோ அப்பாவே இங்குதான் வருகிறார் ! பிரச்சனைகளை அவரிடம் சொல்வோம்.
எட்வேர்டு: [முன்னே சென்று வரவேற்று] வாருங்கள் மிஸ்டர் ஆப்ரஹாம் ! நீங்கள்தான் உங்கள் மகனிடம் பிடுங்கி என் பணத்தை மீட்டுத் தர வேண்டும்.
ஆப்ரஹாம்: [ஒன்றும் புரியாமல்] என்ன ? மிஸ்டர் எட்வேர்டு கதி கலங்கிக் காணப்படுகிறார். எந்தப் பணத்தை நான் மீட்டுத் தர வேண்டும் ? மொரீன் ! யார் உன்னருகில் இருப்பது ? வில்லியம் ! எந்தப் பணத்தைப் பற்றி இங்கே தகராறு மிஸ்டர் எட்வேர்டு ?
மொரீன்: அப்பா ! இவள்தான் எலிஸபெத் ! மிஸ்டர் எட்வேர்டின் மகள் ! அது கிளாடியா !
எட்வேர்டு: என் புதையல் பணத்தைத் தோண்டி எடுத்து எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறான் உங்கள் அருமைப் புதல்வன் ! வாங்கித் தர வேண்டியது உங்கள் பொறுப்பு !
வில்லியம்: அப்பா ! நான் அவரது புதையல் பணத்தைப் பார்த்ததுமில்லை ! தோண்டி எடுத்தது மில்லை ! மிஸ்டர் எட்வேர்டு கற்பனை செய்து கொண்டு என்மீது பழியைப் போடுகிறார் !
எட்வேர்டு: இல்லை ! என் சமையல்காரன் ஜேகப் நேராக அதைப் பார்த்திருக்கிறான் ! வில்லியம் பெட்டியைத் தோண்டி எடுத்ததைக் கண்ணாரக் கண்டிருக்கிறான்.
வில்லியம்: நேராகப் பார்த்ததாகச் சொன்னது பொய் ! முழுப்பொய் ! எங்கே அந்த ஜேகப் ? எனக்கு நேராக அவன் உங்கள் முன் இப்போது சொல்லட்டும் !
எட்வேர்டு: [ஜேகப்பைப் பார்த்து] அடே ஜேகப் ! வாடா வந்து மிஸ்டர் ஆப்ரஹாம் முன்வந்து உண்மையைச் சொல். வில்லியம் பெட்டியைத் தோண்டி எடுத்ததைச் சொல் !
வில்லியம்: சொல்லுடா ! நீ எதைப் பார்த்தாய் ? நீ எப்போது பார்த்தாய் ? நீ எங்கே பார்த்தாய் ?
ஜேகப்: [நடுங்கிக் கொண்டே] எஜமான் ! நான் சொல்றேன். எனக்குத் தெரியாது. எதுவும் தெரியாது ! அதுதான் உண்மை !
எட்வேர்டு: அயோக்கிய ராஸ்கல் ! என்னடா பொய் சொல்கிறாய் இப்போது ? இதுவரை நீ சொன்னது உண்மை ஆயிற்றே ! பெட்டியைத் தோண்டுவதைப் பார்த்தது நீ ! வில்லியம் பணத்தை எண்ணி எடுத்ததைப் பார்த்தது நீ ! எது நீ சொல்லும் உண்மை ? இப்போது நீ சொல்வதா ? அப்போது நீ சொன்னதா ? குழப்பித் தொலைகிறாயே என்னை !
ஜேகப்: எஜமான், நான் சொன்ன எதுவும் உண்மை இல்லை ! எனக்கு உண்மையாகத் தெரியாது. நீங்கள் அதட்டியதால் பயந்துபோய் பொய்யைச் சொன்னேன் உண்மையாக !
எட்வேர்டு: உண்மையாகப் பொய்யைச் சொன்னாயா ? அல்லது பொய்யாக உண்மையைச் சொல்லி விட்டாயா ? வில்லியம் பணத்தைக் களவாடியதைப் பார்த்த நீ ஏன் இப்போது இல்லை என்று சொல்கிறாய் ? எனக்குப் பயப்படாமல் உண்மையைச் சொல் !
ஜேகப்: எனக்கு உண்மை தெரியாது எஜமான் ! வில்லியம் ஒருவேளை எடுத்திருக்கலாம் என்று ஊகித்தேன் ! அது தப்புக் கணக்காய்ப் போனது ! தவறு என் மீதுதான் ! மன்னித்து விடுங்கள் என்னை !
எட்வேர்டு: [ஆங்காரமாய்] என்ன தவறு உன்மீதா ? நீயா பணத்தைத் திருடினாய் ? பணத்தை அபகரித்துக் கொண்டு அப்பாவி வில்லியத்தின் மீதா நீ பழியைப் போட்டாய் ? உன் பல்லை உடைக்கிறேன் பார் [அடிக்கக் கையை ஓங்குகிறார். ஜேகப் ஓடுகிறான்].
ஜேகப்: [ஓடிக் கொண்டே] எஜமான், நான் பணத்தை எடுக்க வில்லை ! வில்லியம் என்று முதலில் வாய் உளறி விட்டது. பிறகு நான் என்று வாய் தவறி விட்டது. வேலைக்காரன் வின்சென்ட் என்று சொல்ல வந்தவன், தப்பாக வில்லியம் என்று சொல்லி விட்டேன்.
எட்வேர்டு: [ஆங்காரமாய்] அயோக்கியப் பயலே ! சொல்லிய பொய்மேல் அடுக்கடுக்காய்ச் சொல்லி வருகிறாய் பொய்களை ! உன் வாயில் வருவதெல்லாம் புளுகு மொழிகள்தனா ? இன்மேல்
நீ வாய் திறக்காதே ! ஓடிப் போ ! வெளியே போ ! உன் முகத்தில் விழிப்பதே ஆகாது !
ஆப்ரஹாம்: (மொரீனைப் பார்த்துப் பரிவுடன்) உன் அன்னை நலமா ? எப்படி இருக்கிறாள் ?
மொரீன்: (கண்ணீருடன்) அப்பா ! அன்னைக்கு உடல் நலமில்லை ! உங்களைப் பற்றிதான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். வீட்டுக்கு வருவீர்களா ? வந்தால் அன்னைக்கு நோயெல்லாம் மாயமாய்ப் போய்விடும். தனிமையில் உங்களை நினைத்து நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறாள் ! வீட்டுக்கு வாருங்கள் அப்பா ! வருவீர்களா ?
எலிஸபெத்: [கோபத்துடன்] அப்பா ! மனைவி உயிரோடிருக்க எப்படி என்னை இவருக்கு மணமுடிக்க ஒப்புக் கொண்டீர்கள் ? இவர் மீது உயிரை வைத்திருக்கும் மனைவி உள்ள போது என்னைப்போல் இன்னுமோர் இளம் பெண் தேவையா ?
எட்வேர்டு: மிஸ்டர் ஆப்ரஹாம் ! உங்கள் இரண்டாம் மனைவியை எப்போதே மணவிலக்கு செய்து விட்டீர்கள் அல்லவா ?
மொரீன்: அப்பா ! உங்களுக்குத் திருமணமா ? எனக்குத் தெரியாதே ! யாரிந்த இளம்பெண் ? அன்னைக்குத் தெரிந்தால் உயிரையே விட்டுவிடுவாள் !
வில்லியம்: அதோ பார் மொரீன் ! உன் பக்கத்தில் நிற்கும் எலிஸபெத்துதான் அந்த இளம்பெண் !
அப்பாவின் வருங்கால மனைவி !
மொரீன்: எலிஸபெத் ! எனக்கு நீ சொல்ல வில்லையே ! என் தந்தைக்கு வரப் போகும் சித்தியா நீ ? ஆப்ரஹாம் உன் மீது உயிரை வைத்துள்ளானே ! இதென்ன எனக்கு குழப்பமாய் உள்ளதே ! யார் யாரை மணமுடிக்கப் போவது ?
எலிஸபெத்: மொரீன் ! நான் எப்படி இதைச் சொல்வேன் ? என் தந்தை உன் தந்தையுடன் செய்த ரகசிய ஒப்பந்தம் அது ! நான் நேசிப்பது வில்லியம் ஒருவரைத்தான் ! நான் மணமுடிக்கப் போவது வில்லியத்தைதான் ! நிச்சயம், உன் அப்பாவை அல்ல !
ஆப்ரஹாம்: [தடுமாறியபடி] மொரீன் ! நான் திருமணம் செய்ய இன்னும் முடிவு செய்ய வில்லை ! உன் அன்னை நோயில் கிடக்கிறாள் ! நான் திருமணம் செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்று யோசித்தேன். நண்பர் எட்வேர்டுடன் தீவிரமாகப் பேச வில்லை. அவர்தான் தன் இல்லத்தில் ஒரு குமரிப் பெண் இருப்பதாகக் கூறினார் ! நான் வாலிபப் பெண் வேண்டாம் என்றுதான் வாதாடினேன் ! எட்வேர்டுதான் என்னை ஒப்புக் கொள்ளக் கட்டாயப் படுத்தினார் ! சும்மா இருந்தவனுக்குப் பெண்ணாசையை மூட்டியவர் மிஸ்டர் எட்வேர்டு !
எலிஸபெத்: [கோபத்துடன்] அப்பா ! நீங்கள்தான் இந்த முடிச்சைப் போட முந்திச் சென்றவரா ? இது அடாத செயல் என்று உங்களுக்குத் தெரியவில்லையே ! மிஸ்டர் ஆப்ரஹாம் ! நான் வில்லியத்தை மணப்பதாக முடிவு செய்து விட்டேன் ! இதோ வில்லியம் போட்ட மோதிரம் பாருங்கள் ! [மோதிரத்தைக் காட்டுகிறாள்] நான் உங்களை மணக்கப் போவதில்லை !
ஆப்ரஹாம்: எலிஸபெத் ! வில்லியத்துக்கு ஏற்ற வீனஸ் மாது நீதான் ! என் மகன் உன்னை நேசிப்பது எனக்குத் தெரியாது ! அதற்கு நான் வருந்துகிறேன். என்னை மன்னித்துவிடு. எனக்கு மனைவியாக வருவதை விட, நீ மருமகளாக வருவதையே நான் வரவேற்கிறேன்.
எட்வேர்டு: நானதை ஒப்புக் கொள்ள முடியாது. ஆப்ரஹாம் ! நீங்கள் வாக்கு மாறக் கூடாது. எலிஸபெத்தை நீங்கள்தான் மணக்க வேண்டும் ! வீட்டு வேலை செய்யும் வேலைக்கார வில்லியம் என் மருமகனாக வருவதை நான் ஏற்கவில்லை ! திருமணம் நான் தீர்மானித்தபடிதான் நடக்கும். உங்களுக்கும் எலிஸபெத்துக்கும் ! அதை நடத்திக் காட்டுவது என் கடமை ! நினைப்பதை முடிப்பவன் நான் !
(தொடரும்)
************************
தகவல் & படங்கள்
Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre
Based on The Play
Moliere’s Miser (1922-1673)
1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”
2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)
3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference
4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.
5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)
6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan December 19, 2007)]
- லா ச ரா நினைவாக
- புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் மகாகவி பாரதி விழா
- இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மயவீதி, காலக்ஸிகள், நிபுளாக்கள் (கட்டுரை: 8)
- விளக்கு பரிசு பெற்ற தேவதேவனுக்கு பாராட்டு விழா
- சாந்தாராம்- ஒரு எழுத்தாளனின் மாஃபியா அனுபவங்கள்
- அக்கினிப் பூக்கள் – 5
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 3
- எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது- முத்துலிங்கத்தின் வெளி
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள் 4 -லா.ச.ராமாமிர்தம்
- முக்கியமான வேலை
- கடிதம்
- பூப்போட்ட ஷர்ட்!
- இறக்கை வெளியீடு - களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா
- பா.த.ச -வின் அதிகாரபூர்வ விளக்கமும் – என் தகவல்கள் விளக்கமும்
- ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு
- மாத்தா ஹரி – அத்தியாயம் 41
- கலாநிதி அம்மன்கிளி முருகதாசின் ‘இலங்கைக் கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்’
- “உனையே மயல் கொண்டு” – உண்மைகளைச் சொல்ல வந்திருக்கும் ஒரு துணிந்த படைப்பு
- மைசூர் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் வெளியிட்டுள்ள பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தலும் பாடுதலும் குறுவட்டு அறிமுகம்
- நக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும்
- தைவான் நாடோடிக் கதைகள் – 5. புராண நாயகன்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 12 கரும்புத் தோட்டத்திலே இந்தியர் அனுபவித்த கொடுமைகள்
- இது போன்ற தருணங்களை மார்க்கம் தவறவிடக் கூடாது
- இளைஞர் ஸ்டாலினின் கையில்?
- குறிப்பேட்டுப் பதிவுகள்- 5!-
- ஐடி’யாளர்களின் பார்வை சரியா,தவறா?
- காலை ஆட்டுடி பெண்ணே!
- தாகூரின் கீதங்கள் – 8 உன்னோடு ஐக்கியம் !
- மாடு சூரியனை மேய்ந்து விட்டுப்போகிறது
- பீடம்
- கல்லூரி : உலக சினிமா நோக்கி தமிழ்த்திரை….
- ஜிகினா