தைவான் நாடோடிக் கதைகள் 4

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

தமிழில் மதுமிதா



4. பான் பின் ஷான்

ரயிலில் பயணம் செய்து தெற்கு தைவானின் காவ்ச்யிங் – கில் நுழைந்தால் ‘பான் பின் ஷான்’ என்னும் மலையைப் பார்க்க இயலும். இந்த மலை இதன் பெயரைப்போலவே அரை (பாதி) மலையாகத் தென்படும். இதன் வடிவம் பார்ப்பதற்கு சாதாரண மலையின் தோற்றம்போல் தோன்றினாலும், மலையின் இல்லாத பாதி பாகம், வாளால் மலையின் பாதிப் பகுதியை வெட்டி எடுத்ததுபோல் இருக்கும்.

மீதிபாகம் என்ன ஆனதென்று அறிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வம் தோன்றலாம். சற்றே பொறுங்கள். இதை விபரமாகச் சொல்லும் பூர்வகதையொன்று இருக்கிறது.

முன்னொரு காலத்தில் ‘பான் பின் ஷான்’ முழு மலையாக இருந்த சமயத்தில், மலையின் அடிவாரத்தில் சிறிய கிராமம் ஒன்று இருந்தது. ஒருநாள் ஒரு முதியவர் அந்தக் கிராமத்திற்கு டம்ப்ளிங் (டம்ப்ளிங் – மாவில் செய்த உணவுப்பண்டம், உள்ளே பழங்கள் அல்லது மாமிசம் பூரணமாக வைத்து வேகவைக்கப்பட்ட பண்டம்) விற்பதற்கு வந்தார். நரை முடியுடன், வெண்ணிற தாடியுடன் இருந்த அம்முதியவரின் உடையும் பழையதாகிக் கிழிந்து கந்தையாகியிருந்தது. அவர் பெருமளவில் சூடான, வாசனை நிரம்பிய, சுவையான டம்ப்ளிங்கை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தார்.

அந்த கிராமத்து மக்கள் அம்முதியவரை முட்டாள் எனக் கருதினர். ஏனென்றால், அவர் “சூடான, சுவையான டம்ப்ளிங்! ஒன்று வாங்கினால் பத்து செண்ட், இரண்டு வாங்கினால் இருபது செண்ட், மூன்று வாங்கினால் இலவசம்.!” என்று கூவிக்கொண்டிருந்தார்.

“என்ன நடக்கிறது இங்கே?” கிராமவாசிகள் வியந்தனர்.

” சூடான, சுவையான டம்ப்ளிங்! சிவப்பு பட்டாணி, எள்ளுடன். ஒன்று வாங்கினால் பத்து செண்ட், இரண்டு வாங்கினால் இருபது செண்ட், மூன்று வாங்கினால் இலவசம்!” முதியவர் பித்துப் பிடித்தாற்போல் உரக்கக் கூச்சலிட்டார்.

கிராமவாசிகள் மேலும் மேலும் வந்து முதியவரைச் சுற்றிக் குவிந்தனர். மெல்லிய குரலில் “இது உண்மைதானா? மூன்று டம்ப்ளிங்கள் என்றால் இலவசமா? இந்த கிழவன் நம்மை ஏமாற்றுகிறானா?” என்று பேசிக் கொண்டனர்.

“யாருக்கு தேவை? நான் முதலில் மூன்று டம்ப்ளிங்கள் சாப்பிடப் போகிறேன். இலவசமா இல்லையா என்று பார்க்கலாம்.” ‘பெருந்தலை வாங்க்’ முதலில் டம்ப்ளிங் வாங்க முன்வந்து சொன்னான்.

“ம் ம் ம். இந்த டம்ப்ளிங்-குகள் மிகவும் சுவையாக இருக்கின்றன.” உண்ணும்போது ‘பெருந்தலை வாங்க்’ கூறினான்.

முதியவனின் டம்ப்ளிங்குகள் கோழிமுட்டையை விடப் பெரியதாக இருந்தன. ‘பெருந்தலை வாங்க்’ இரண்டாவது டம்ப்ளிங்கினை உண்டு முடித்தபோது, அவனால் மேலும் உண்ண முடியாத அளவில் வயிறு நிரம்பியிருந்தது. ஆனாலும் முதியவரை நெருங்கி ” நான் மூன்றாவது டம்ப்ளிங் சாப்பிட்டால் பணம் தரவேண்டியதில்லையல்லவா. சரிதானே?” என்றான்.

“நான் பொய் சொல்வதில்லை. நான் முதலிலேயே சொன்னேன் மூன்று வாங்கினால் இலவசமென்று” என முதியவர் கூறினார்.

‘பெருந்தலை வாங்க்’ மூன்றாவதையும் வாங்கி அமுக்கினான். அப்படியென்றால்தான் இலவசம். பணம் தர வேண்டியதில்லை.

முதியவர் வாக்கு சுத்தமாய் ‘பெருந்தலை வாங்க்’கிடம் பணம் வாங்கவில்லை.

மற்ற கிராமவாசிகளும் முதியவரிடம் டம்ப்ளிங்குகள் வாங்க ஆரம்பித்தனர். அனைவருமே மூன்று டம்ப்ளிங்கள் இலவசமாய் வாங்கக் கேட்டனர். ஒருவர் கூட விலை கொடுத்து ஒரு டம்ப்ளிங்கோ, இரண்டு டம்ப்ளிங்கோ வாங்க விரும்பவில்லை. மொத்த டம்ப்ளிங்களும் விற்பனையாகி விட்டன.

“உங்கள் அனைவருக்கும் நல்ல செரிமானம் இருக்கிறது.” புன்னகையுடன் சொன்னார் முதியவர். ஒரு டம்ப்ளிங் கூட வாங்காதவர்கள் முதியவர் செல்வதை ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

மூன்று டம்ப்ளிங்கள் உண்ட ஒருவன், “அங்கே பாருங்கள். கிராமத்திற்குப் பின்னால் இருக்கும் மலையின் ஒரு பகுதி இல்லாதது போல் இருக்கிறது” எனக் கூவினான்.

“நிறுத்து. உளறாதே! அதிகமாக டம்ப்ளிங்கள் சாப்பிட்டதால் நீ குழம்பியிருப்பதாக நினைக்கிறேன்.” என யாரோ ஒருவன் சொன்னான்.

கிராமவாசிகள் முதியவரைப் பற்றி பேச ஆரம்பித்தனர். “ஹா! என்னால் நம்பவே முடியவில்லை. இப்படியும் முட்டாள் இருப்பானா, இலவசமாக டம்ப்ளிங்கள் விற்கிறான்.”

“அவனுடைய டம்ப்ளிங்கள் மிகவும் ருசியானவை. எனக்கு எதனால் அந்த டம்ப்ளிங்கள் செய்யப்பட்டிருக்குமென்று வியப்பாயிருக்கிறது. எங்கிருந்து வந்தான் இந்தக் கிழவன். இவன் தினமும் வரவேண்டுமென்று நான் நினைக்கிறேன்.”

இரண்டாம் நாளும் அந்த முதியவர் கிராமத்திற்கு வந்தார். கூவினார் “சூடான, சுவையான டம்ப்ளிங்! சிவப்பு பட்டாணி, எள்ளுடன். ஒன்று வாங்கினால் பத்து செண்ட், இரண்டு வாங்கினால் இருபது செண்ட், மூன்று வாங்கினால் இலவசம்!”

அனைவரும் முதியவரைச் சுற்றி கூட ஆரம்பித்தனர். மிகவும் விரைவாக டம்ப்ளிங்களை உண்டனர், மென்றுகூட உண்ணாமல். அன்றும் விரைவில் டம்ப்ளிங்கள் காலியாகி விட்டன.

மூன்றாம் நாளும் இதுவே நிகழ்ந்தது. கிராமவாசிகள் முயன்று எவ்வளவு உண்ணமுடியுமோ அவ்வளவு உண்டனர்.

திடீரென ஒரு குரல் கேட்டது. “ஐயா! தயவு செய்து எனக்கு ஒரு டம்ப்ளிங் தருவீர்களா?” அனைவரும் ஆச்சரியமடைந்தனர். முதியவனிடம் கேட்ட இளைஞனை நோக்கி அனைவரும் திரும்பினர்.

“இளைஞனே! நான் சொல்வதை நீ சரியாகக் கேட்டாயா? ஒன்று வாங்கினால் பத்து செண்ட், இரண்டு வாங்கினால் இருபது செண்ட், மூன்று வாங்கினால் இலவசம். நீ ஏன் ஒன்றை மட்டும் வாங்குகிறாய், மூன்று இலவசமாகக் கிடைக்கும்பொழுது”

“எனக்குத் தெரியும்.” தொடர்ந்து இளைஞன் கூறினான், “நீங்கள் மிகுந்த சுமையைத் தூக்கி வருகிறீர்கள். தினமும் இத்தனை டம்ப்ளிங்கள் கொண்டு வந்தும் பணம் சம்பாதிக்கவில்லை. உங்களுக்காக வருந்துகிறேன். நான் உண்மையிலேயே உங்களுக்கு உதவ விரும்புகிறேன். ஆனால், என்னிடம் ஒரு டம்ப்ளிங் வாங்கத் தேவையான பணம் மட்டுமே இருக்கிறது.”

பேராசை கொண்ட கிராமவாசிகள் இளைஞனின் பேச்சைக்கேட்டு வெட்கமடைந்தனர்.

“ஹா! ஹா! ஹா! கடைசியில் உன்னைக் கண்டுகொண்டேன். நீதான் கருணையுள்ளம் கொண்டவன். நீதான் என்னுடைய மாணவனாகத் தகுதி படைத்தவன். நான் கிராமத்துக்குப் பின்னால் உள்ள மலையின் கடவுள்….”

அந்த முதியவர் கடவுள் என்பதை அப்போதுதான் அனைத்து கிராமவாசிகளும் உணர்ந்தனர். நம்பிக்கையான, கருணையுள்ளம் கொண்ட மாணவனைத் தேர்ந்தெடுக்க மலைக்கடவுள் முதியவர் வேடம் புனைந்து மனிதர்களின் உள்ளம் அறிய வந்திருந்திருக்கிறார். அவருடைய டம்ப்ளிங்கள் உண்மையான டம்ப்ளிங்கள் அல்ல. டம்ப்ளிங்கள் அனைத்தும் மலையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட மண்ணால் ஆனவை.

மலைக் கடவுள் கூறிய விபரம் கேட்ட கிராம மக்கள் மீதி டம்ப்ளிங்களைப் பார்க்க ஓடினர். ஆனால் பானை நிறைய மண்ணையே பார்த்தனர். திரும்பி மலையைப் பார்த்தனர், அங்கே பாதி மலை காணவில்லை என்பதைக் கண்டனர்.

மலைக் கடவுள் அந்த கருணை நிறைந்த மனிதனை தனது இடத்திற்கு அழைத்துச் சென்று தன்னுடைய மாணவனாக்கி அனைத்து மந்திரத்தையும் கற்றுக் கொடுத்தார்.

தாங்கள் மண்ணை உண்டதை உணர்ந்த கிராமமக்கள் அதிருப்தியுடன், உண்ட மண்ணை வாந்தியெடுத்து வெளியேற்ற விரும்பினர். தங்கள் செய்கையினை வெறுத்து தங்களைத் தாங்களே தங்களின் பேராசைக்காக, நொந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகே கிராமவாசிகள் அம்மலையை ‘பான் பின் ஷான்’ என்னும் பெயரில் அழைக்க ஆரம்பித்தனர்.

>>>
mathuramitha@gmail.com

Series Navigation

author

மதுமிதா

மதுமிதா

Similar Posts