கடன்

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

எம். ரிஷான் ஷெரீப்


சுவர்க்கடிகாரம் ஆறடித்து ஓய்வதற்குள் சட்டென்று விழிப்பு வந்துவிட்டது முருகேசனுக்கு. நள்ளிரவு தாண்டியும் தான் கட்டிலிலேயே தூக்கம் வராமல் விழித்திருந்தது நினைவுக்கு வந்தது.
எல்லாம் கடன் ஞாபகம்தான். அவசரத்துக்கு எடுத்த பணம் ஐயாயிரம் கொஞ்ச நாளாக நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருந்தது.
‘ ஒரு மாதத்தில் அறுவடை. இரண்டு மாதத்துக்குள் எப்படியும் தந்து விடுகிறேன் ‘ என்ற கெஞ்சலையடுத்து பெறப்பட்ட கடன். இன்றோடு ஆறு மாதங்கள் முடியப் போகின்றன.
என்ன செய்ய ? அறுவடைக்கு ஊரே காத்திருந்த சமயத்தில் பெருமழை பெய்ததில் பயிர்களெல்லாம் நாசமாகிப்போயின. நல்ல அறுவடையை எதிர்பார்த்திருந்த நிறைய பேருக்கு நஷ்டம்தான்.
ஒரு வகையில் சிவராசன் இவருக்குத் தம்பி முறை வேண்டும் . மூன்றாம் மாதம் இவரை சந்திக்க நேர்ந்த சமயம் கடன் பற்றி அவரே ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. இருந்த பிரச்சினைகளெல்லாம் சொல்லப் பட்டு இன்னும் மூன்று மாதங்கள் தவணை கேட்கப்பட்டது. சரியாக இன்னும் மூன்று மாதத்தில் கையில் பணம் இருக்கவேண்டும் என்று உறுதியான பின்னர்தான் இவர் வீட்டுக்கே வந்தார்.
கமலமும் கடன் பணத்தைப் பற்றி அடிக்கடி அலுத்துக் கொள்வது வழமையானது.இவரும் எப்படியாவது முடித்து விடலாம் என்றுதான் பார்க்கிறார். மளிகைக் கடை , பால், பேப்பர் பாக்கி எல்லாம் சேர்ந்து வரும்போது கமலத்தின் புலம்பலிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. நகரத்தில் பணி புரியும் இவரது மகனும் ஒரு மாதமாக பணம் எதுவும் அனுப்பியிருக்கவில்லை. கஷ்டத்தை சொல்லி விடலாம் என்றால் சுய கௌரவம் தடுத்தது. எல்லாம் சேர்ந்து சில நாட்களாக கவலையை உண்டு பண்ணியிருந்தது .
இது விடயமாக சிவராசனிடம் எப்படிப்பேசுவது ? தப்பாக எடுத்துக் கொள்வானோ? குடும்ப விஷயம். கஷ்ட நஷ்டங்களை பொறுத்துத்தான் போக வேண்டும். நான்கு பேருக்குத் தெரிந்தால் அவமானம்.
யோசித்து , ஒரு முடிவுக்கு வந்தவராக கை, கால் ,முகம் கழுவி தலைசீவும் சமயத்தில் சிவராசனின் குரல் வாசலில் கேட்டது . கூடவே கமலத்தின் “என்னங்க…” வும்.
வாசலுக்கு வந்தார். உள்ளே வரும்படி அழைத்தார்.
“இல்லைண்ணா. நிறைய நாளா ரொம்ப செலவுகள் . உங்களுக்கே தெரியும் . பேத்தி காதுகுத்து , அத்தை திதின்னு செலவு ரொம்ப அதிகமாய்டுசசு . உர விலைகளும் கூடிடுச்சு. ”
கமலத்தையும் இலேசாக பார்த்துவிட்டு அவர் தொடர்ந்தார் .
” இருந்தாலும் தக்க சமயத்துல கடவுளாக் கொடுத்த மாதிரி அவ போட்டிருந்த சீட்டு விழுந்துடிச்சு. அதான் முதல் வேலையா உங்க கடனைத் திருப்பி குடுத்துட்டு ப் போகலாம்னு காலையிலே ஓடி வந்தேன். ”
என்று சொல்லியவாறே சிவராசன் எடுத்து நீட்டிய பணத்தை முருகேசன் புன்னகையோடு வாங்கிக் கொண்டார்.

-எம். ரிஷான் ஷெரீப் ,
இலங்கை.


msmrishan@yahoo.com

Series Navigation

author

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts