கால நதிக்கரையில் – அத்தியாயம் – 30 (நாவல் – நிறைவுப் பகுதி)

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

வே.சபாநாயகம்இந்த மேலமந்தை கீழமந்தையிலிருந்து மாறுபட்டது. கீழமந்தை ஒதுக்கமானது. மேலமந்தை அந்தவழியே போகும் வெளியூர்ப் பாட்டையில் இருந்தது. கீழமந்தையில் அய்யனார் கோயில் திரௌபதைஅம்மன் கோயில்களின் திருவிழாக்களில் ஆடு கோழி பலியிடுவதும் சாராயம் வைத்துப் படைப்பதும் நடக்கும். ஆனால் மேலமந்தை நிகழ்வுகள் சுத்த சைவமானவை. சிறுத்தொண்டர் அன்னப் படையல், மாரியம்மன் கூழ் ஊற்றுதல், காமதகனம் போல – பலி, சாராயம் இல்லாதவை. எல்லாமே ஊர் மக்களுக்கு எழுச்சியும் ஆர்வமும் ஊட்டுபவை. காமுட்டி என்கிற காமதகனப் பாடல்கள் வெகு சுவாரஸ்யமானவை. சிதம்பரம் படிப்பு முடிந்து தொலை தூரத்தில் வேலைக்குப் போனது வரை ஒரு ஆண்டுகூட இக்கொண்டாட்டங்களைத் தவற விட்டதில்லை. தொடர்ந்து நடக்கிறதா என அறிய மருதுவிடம் கேட்டார்.

“எங்கேங்க? அதெல்லாம் போன தலமொறையோடப் போயிட்டுது. நடத்தி வச்ச பெரிய தலையெல்லாம் ஒருத்தர் கூட இப்ப இல்ல. இப்ப இருக்கிற தலமொறைக்கு அரசியலும், நாட்டாமைக்குப் போட்டியும் தான் இருக்கே தவிர ஊரு வளர்ச்சியிலும், திருவிழா நடத்துறதிலும் எவுனுக்கு அக்கறை? யாராவது ஒருத்தரு தப்பித்தவறி முனைஞ்சாலும் அதத் தடுக்கிறபேருதான் இப்ப அதிகம்” என்று புலம்பாத குறையாய் மருது சொன்னான்.

“அப்பிடியுமா இருக்காங்க? யாரு அப்பிடித் தடுக்கிறது?”

“எல்லாம் பெரிய எடத்துப் பிள்ளைங்கதான். பெருங்காயம் வச்ச டப்பாங்களே அதும் மாதிரி எடுத்து நடத்த முடியலேண்ணாலும் தன்னக் கேக்காம எப்பிடிச் செய்யலாம்னு வறட்டு அதிகாரம் மட்டும்தான் செய்யுதுங்க. நீங்கள்ளாம் வேலைக்குப் போனப்புறம் ரொம்ப நாளைக்கு முன்னே ஒண்ணு நடந்துது. மாரியம்மன் கோயிலுக் குப் பக்கத்துலே இருக்கிற புள்ளையார் கோயிலுக்கு மானியமோ நித்திய பூசைக்கு ஒரு ஏற்பாடோ கெடையாது. வடக்குத்தெரு ராமகோடிதான் யாராவது வேண்டுதலச் செய்யக் கூப்புட்டா வந்து அபிஷேகம் பண்ணி மணியடிச்சு படைச்சுக் குடுப்பான். நம்ம பெரிய புரோகிதரு ஏதோ நெனச்சி, தான் மத்தியானம் சாப்புடுறதுக்கு முன்னால ஒரு உண்டையப் புள்ளையாருக்குக் காட்டிட்டு சாப்புடுவோமேன்னுட்டு உச்சி
வேளையிலே ஒரு சொம்பு தண்ணிய புள்ளையாரு தலையில ஊத்தி அபிஷேகம் பண்ணி நைவேத்தியம் காட்ட ஆரம்பிச்சாரு. அதுக்காக அவுரு ஆருகிட்டியும் எந்த ஒதவியும் கேக்குல. பாவம் புள்ளையாருக்குத்தான் குடுத்து வக்கில! ரெண்டு நாளுதான்
அவரு முன்னால வெளக்கெரிஞ்சுது. அதுக்குள்ள அதத் தடுத்துட்டாங்க!”

“அப்பிடியா? யாரு அது?”

“எல்லாம் உங்கப் பெரியப்பாரு மகந்தான். அய்யரக் கூப்புட்டு ‘ஆரக் கேட்டுக் கிட்டு புள்ளயாருக்கு பூச பண்றீங்கண்ணு?’ கேட்டிருக்காரு. அதுக்கு அய்யரு ‘நா ஆருகிட்டியும் பொருளோ பணமோக் கேக்குலியே! கேப்பாரில்லாம இருண்டு கெடக்குதேண்ணு நா சாப்புடறதுக்கு முந்தி ஒரு உருண்டய நைவேத்தியம் பண்ணிட்டுச் சாப்புடுறேன். இதுலே ஆருக்கு என்ன இடைஞ்சல்?’ னு சொல்லி இருக்காரு. ‘இன்னிக்கு இப்பிடித்தான் சொல்லுவிங்க, அப்பறமா நாந்தான் ரொம்ப நாளா பூசை பண்ணிக்கிட்டு வந்தேன்னு உரிமக் கொண்டாடுவீங்க!’ ன்னு உங்க அண்ணன் சொன்னாரு. ‘இதுல உரிமக் கொண்டாட என்ன இருக்கு? புள்ளயாருக்கு மானியமோ, தெனப்படிக்கு சாசனமோ எதுவும் இல்லியே! ஏதோ புண்ணியத்துக்குச் செய்யறத தடுக்கலாமா?’ ன்னு தயவாத்தான் கேட்டிருக்காரு அய்யரு. ஆனா அவுரு மொறட்டுத் தனமா ‘அதெல்லாம் முடியாது. இனிமே நீங்க பூசையெல்லாம் செய்ய வேணாம்’ னுட்டாரு. அய்யரு பாவம், நமக்கு எதுக்கு இவங்க கிட்டல்லாம் வம்புன்னு விட்டுட்டாரு. இப்பிடித்தான் நல்லது செய்யாமத் தடுக்கறதுக்கு இங்க நெறயப் பேரு இருக்காங்க. அதனால ஊர்ல திருவிழாவாவது கொண்டாட்டமாவது?” என்று மருது அலுத்துக் கொண்டான்.

சிதம்பரம் அந்தப் புரோகிதரை நினத்துக் கொண்டார்.

மற்றப் புரோகிதர்களிடருந்து அவர் மாறுபட்டவர். உச்சிக்குடுமி, பஞ்சகச்சம், நெற்றியில் சந்தனக் கீற்று என்று தோற்றம் பழமையைக் காட்டினாலும் எண்ணத்தில், செயல் பாட்டில் புதுமை விரும்பி அவர். கொஞ்சம் ஆங்கில அறிவும் உண்டு.
அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் அப்பாவுடன் பேசுவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். மற்ற எல்லோரையும் அவரவர் ஜாதியை ஒட்டி ‘பிள்ளை’, ‘முதலியார்’ என்று அழைத்தாலும் அப்பாவை மட்டும் அவர் ‘சார்” என்றே விளித்துப் பேசுவார். அப்பாவும் மற்றவர்கள் மாதிரி அவரை ‘சாமி’ என்று விளிக்காமல் அவரைப் போலவே ‘சார்’ என்றே அழைப்பார்கள். அதில் இருவருக்கும் ஒரு அந்நியோன்யம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியும். அவர் ஜோதிடம் பார்ப்பதில் வல்லவர். அப்பாவுக்கும் ஜோதிடம் தெரியும் என்பதால் அவர்கள் சந்தித்தால் ஜோதிடம் பற்றியோ, அன்றைய செய்தித்தாளில் வந்துள்ள நாட்டு நடப்புகள் பற்றியோ பேசுவார்கள். அப்பாவுக்கு இதையெல்லாம் பகிர்ந்துகொள்ள அவரை விட்டால் ஊரில் வேறு யாரும் இல்லை.

முதன் முதலில் ஊருக்குள் கிராமபோன் பெட்டியை வாங்கி வந்தவர் அவர் தான். அத்தோடு அவர் ஒரு சின்ன ரேக்ளா வண்டியையும் வைத்திருந்தார். பக்கத்துக் கிராமங்களுக்குப் புரோகிதத்துக்குச் செல்கையில் அந்த ரேக்ளா வண்டியில்தான் செல்வார். இந்தக் காலத்தில் நகரங்களில் புரோகிதர்கள் மோட்டார் சைக்கிளில் புரோகிதத்துக்குப் போவதை ஆரம்பத்தில் ஆச்சரியமாகப் பார்த்தது போல் அந்தக் காலத்தில் அவர் ரேக்ளா வண்டியை ஓட்டிச் செல்வதைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறார்கள். குதிரையைப் பராமரிப்பதும் அவரே தான். குதிரையைத் தேய்த்துக் குளிப்பாட்டுவது, வயற்காட்டுக்குப் போய் புல் அறுத்து வந்து போடுவது, கொள்ளை வேகவைத்துக் கொடுப்பது எல்லாம் அவர்தான். ஆள் வைத்துக் கொள்வதில்லை.

அது மட்டுமல்ல, புரோகிதருக்கு ஊராரால் ஒதுக்கப்பட்டிருந்த கால்காணி மானிய நிலத்தையும் அவரே நேரடியாகப் பயிர் செய்தார். அதற்கும் ஆள் கிடையாது. கூலி ஏர் மட்டும்தான் வைத்துக் கொள்வார். மற்றபடி அண்டை வெட்டுவது, நாற்று
நடுவது, அறுப்பது, தாளடிப்பது எல்லாம் அவரும் அவர் பிள்ளைகளும்தான். பூணுலை எடுத்து வலது காதில் சுற்றிக் கொண்டு மண்வெட்டி¨யால் அவர் அண்டை வெட்டும் போது பார்ப்பவர்களுக்கு வலிக்கும். ‘காலம் கலிகாலம் என்பது சரியாகி விட்டதே! தர்ப்பையைப் பிடிக்கும் கையால் மன்வெட்டியைப் பிராமணர் பிடிக்கவும் ஆச்சே!’ என்று பார்க்கிற மூத்தகுடிகள் ஆதங்கப் படுவார்கள். அவரிடமும் சொல்வார்கள். ‘இதில என்ன கௌரவம் வேண்டி இருக்கு? அவங்கவங்க வேலைய அவங்கவங்களே செய்துக்கிறதுலே ‘கலிகாலம்’ எங்க வந்துது?’ என்பார் அய்யர்.

எதிலும் எப்போதும் ஊர்மக்களுக்கு அவர் புருவம் உயர்த்தச் செய்பவராகவே இருந்தார். புரோகிதத்தில் அப்படி ஒன்றும் பெரிதாக வருமானம் வந்துவிடாது. என்றாலும் பெரிய அளவில் தன் மைத்துனியின் கல்யாணத்தை பேண்டு வாத்தியம், சாரட்டில் ஊர்வலம், சங்கீதக் கச்சேரி என்று ஐந்துநாள் கல்யாணமாக அமர்க்களமாக நடத்தி வைத்தார். அந்தத் திருமணம் வெகுநாட்கள் ஊரில் பேசப்பட்டது சிதம்பரத்துக்கு இன்னும் நினைவிருக்கிறது.

அவரது பேச்சு எப்போதும் அறிவார்ந்ததும் சுவாரஸ்யம் மிக்கதாகவும் இருக்கும். சிதம்பரம் அவரது பேச்சை மிகவும் ரசிப்பார். சிதம்பரத்தை அவருக்கு மிகவும் பிடிக்கும். சிதம்பரம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தற்செயலாய்க் கடைவீதியில் அவரைப் பார்க்க நேர்ந்தது. உச்சி வெயிலில் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தார். சிதம்பரத்தை அவர் பார்க்கவில்லை. சிதம்பரம்தான் பார்த்து அருகில் போய்ப் பேசினார்.

சிதம்பரத்தை அங்கே அப்போது சந்தித்ததில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் மிகவும் களைப்போடு இருந்தார். ஓட்டலுக்கு அழைத்துப் போய் காப்பி வாங்கித் தரலாம் என்று நினைத்தார். ஆனால் அவர் படு ஆசாரம். வெளியில் எங்கும் சாப்பிட மாட்டார். என்றாலும் தயக்கத்துடனே, ‘ரொம்பக் களைப்பா இருக்கீங்க போல்ருக்கு. ஒட்டலுக்குப் போயி ஒரு காப்பி சாப்புடலாமா? நீங்க வெளியில எங்கும் சாப்ட மாட்டீங்கண்ணு தெரியும்…….” என்று இழுத்தார்.

அவரது சோர்ந்த முகத்தில் ஒரு பிரகாசம் ஏற்பட்டது. “ஆமப்பா! ஏதாவது சாப்டாத் தேவலை தான். வெளியிலே சாப்டறதில்ல தான். ஆனா காலம் மாறச்சே நாமும் மாத்திக்க வேண்டியதுதான். பிராமணாள் ஓட்டல்லியும் அனாச்சாரம்தான்.
என்ன செய்ய? அதப் பாத்தா முடியாதுதான்” என்று சொல்லிவிட்டு உடன் வந்தார்.

சிதம்பரம் அருகில் இருந்த ஓட்டலில் காப்பி வாங்கித் தந்தார். ஆர அமர அதை ரசித்துப் பருகிய பிறகு அவர் முகத்தில் ஒரு தென்பு ஏற்பட்டது. “ரொம்பத் திருப்தியா இருக்கு சிதம்பரம். அதுல பாரு – நம்மக் காசப் போட்டு வாங்கிச்
சாப்டா பணம் செலவழிக்க வேண்டி இருக்கேன்னு சாப்ட திருப்தியே இருக்காது. ஆனா இப்படி யாராவது வாங்கிக் கொடுத்து சாப்டா ஏற்படுற திருப்தி இருக்கே அது வேறமாதிரி தான்” என்றார். அதைச் சொல்ல அவர் கூச்சமோ கௌரவமோ பார்க்க வில்லை. மிகவும் யதார்த்தமான வெளிப்பாடு அது.

அவரைப் பற்றிய சிந்தனையினூடே மந்தையின் தெற்குமுனையில் இருந்த அவரது வீட்டைப் பார்க்க விரும்பினார். தெற்குத் தெருவின் தொடக்கத்தில் அது இருந்தது.

“அய்யரு வாழ்ந்த இடத்தப் பாக்கலாம்” என்று மருதுவை அழைத்தபடி நடந்தார்.

“அதுல மட்டும் என்னா பாக்கப் போறீங்க? அதுவும் இப்ப பாழ்மனைதான். அவரோட வாரிசெல்லாம் பொழப்புத் தேடி நாலா பக்கமும் போய்ட்டாங்க. ஆனா அவரு வாழ்ந்ததவிட இப்ப ரொம்ப சௌரியமா இருக்காங்க. அவரோட பேரப் புள்ளைங்க இப்ப புரோகிதத்துக்கு மோட்டார் சைகிள்ல தான் போறாங்க. இந்த ஊர விட்டுப் போனவங்க எல்லாம் புண்ணியவான்கள்தான். நாங்கதான் முன் தலமொறயிலெ பாவம் பண்ணுனவங்க சிலபேரு இன்னும் இங்கியே தடுமாறிக்கிட்டிருக்கிறோம்” என்று மருது மிகவும் நொந்து பேசினான். அந்த அளவு அவனுக்கு அடுத்த தலைமுறையின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் கசப்பை உண்டாக்கி இருந்தன.

அய்யர் குடியிருந்தது கூரை வீடுதான். சிமிட்டித்தளம் போட்ட தரை. பத்துப் பேர் படுக்க வசதியாய் மழமழ வென்று நீண்ட தெருத்திண்ணை. தோட்டத்தில் கிணறு. சிதம்பரம் வீட்டைத் தவிர அவர் வீட்டில்தான் கிணறு இருந்தது. கிணற்றின் அவசியத்தை உணர்ந்து அவரே இளமையில் வெட்டிக் கொண்டது அது. வீட்டின் பின்னாலேயே மான்ய நிலம். அவர் இருந்தவரை நிறைவாகவே வாழ்ந்தார். இப்போது அவரது நினைவாக எதுவுமில்லை. அவரைப் பற்றிய நினைவு மட்டுமே எஞ்சி இருந்தது. அந்த ஏமாற்றம் நெஞ்சில் கனக்க அவர் வீட்டுக்கு இடப்புறம் இருந்த பெரிய ஏரியின் தெற்குத் தெரு படித்துறையை நாடி நடந்தார் சிதம்பரம்.

சின்ன வயதில் மூச்சுப் பிடித்து ஏறிய ஏரியின் உயரமான கரை இப்போது கரைந்து தெரு மட்டத்துக்கு சற்றே உயர்ந்து தெரிந்தது. படிகள் கற்களை இழந்து சரிவான மேடாக ஆகி இருந்தது. கரைமீது ஏறிப் பார்த்தார். அடடா! சின்ன சமுத்திரம் போல அலை அடித்துப் பரந்து இருந்த பெரிய ஏரி இப்போது சின்னக் குட்டை போலச் சிறுத்திருந்தது. கண்ணுக்கெட்டியவரை வேலிக்காத்தான் முட்செடிகள். அதைத் தாண்டி ஏரியைப் பலர் ஆக்கிரமித்து பயிர்செய்திருப்பது தெரிந்தது. ஏரியின் மறுகரையில் ஊருக்கு பெருத்த வருவாய் ஈட்டித் தந்த விழல் கூட்டம் அந்தப் பகுதியிலும் மொண்ணையாய் இருந்தது.

என்ன இப்படி எதைப் பார்த்தாலும் தேய்பிறையாய்த் தெரிகிறதே தவிர வளர்பிறையாய் எதுவும் காணப்படவில்லையே என்று சிதம்பரத்துக்கு மனதை வருத்தியது. இனி பார்க்க எதுவும் இல்லாத நிலையில் ஊர் திரும்பிவிட முடிவு செய்தார். மருதுவுக்குத் அவரது பிரிவு வருத்துவதாக இருந்தது.

அப்புவின் வீட்டுக்குப்போய் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பு முன் அவர் படித்த ‘ஐயா’வின் பள்ளி இருந்த இடத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டார். பள்ளி இப்போது பழையபடி பொதுச் சாவடியாகி பஞ்சாயத்துக் கட்டடமாக மாறி இருந்தது. பள்ளியின் மேலாக உயர்ந்து பரந்து கவிழ்ந்திருந்த – ஐயா காலத்து ஆலமரம் இருந்த சுவடே இல்லாதிருந்தது. சிதம்பரத்தின் பால்ய நினைவுகளை
அதிகமும் ஆக்ரமித்து அய்யாவின் ஆளுமையை நினைவூட்டிக் கொண்டிருந்த அந்தத் தொன்மையான ஆலமரம் இன்றி, விதவைக் கோலத்தில் காட்சி அளித்த அந்த இடத்தைப் பார்க்கச் சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கூட ‘ஐயா’ இறந்தபோது, மயானத்தில் ஆற்றங்கரையில் நின்று நினத்துப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது. மூன்று தலை முறைக்கு இவ்வூரில் கல்விக் கண் திறந்து வைத்தவரை நன்றி மறந்து நடுத்தெருவில் நாதியற்று சாகவிட்ட ஊராரின் போக்கை ஆற்றின் போக்கோடு ஒப்பிட்டுப் பார்த்ததை நினைத்துக்கொண்டார். ‘மனிதர்கள் வருவார்கள் மனிதர்கள் போவார்கள், ஆனால் நான் என்றும் இப்படியே போய்க் கொண்டிருப்பேன்’ என்று ஓடை ஒன்று சொல்வதாக உள்ள ஆங்கிலக் கவிதையை ஒட்டி, ‘சமுதாயம் என்கிற நதியும் அதன் கரையில் வரும் எந்த மனிதரையும் பற்றிக் கவலைப்படாமல் போய்க் கொண்டிருக்கிறது’ என்று சிந்தித்ததை இப்போது எண்ணிப் பார்த்தார்.

‘காலநதியும் அப்படித்தான்; அது மாறாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. அதன் கரையில் வரும் மனிதர்களும் இடங்களும் மாற்றத்துக்கு உள்ளானாலும் அக்காலக் கட்டத்தின் நினைவுகள் மாற்றம் பெறாது என்றும் நிலைத்திருக்கும்’ என்று சிதம்பரத்தின் சிந்தனை ஓடியது.

(நிறைவுற்றது)


Series Navigation

author

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

Similar Posts