பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 1

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகாதலில் ஆழமாய் மூழ்கிய ஓருவன்
கண்டிக்க வேண்டும் அதிகமாய்
அழகினை அழித்திடும்
ஒவ்வோர் சிறு குறையையும்,
ஒவ்வோர் பெருந் தவறையும் !
நானொரு பெண்ணாக இருந்தால்
ஆணொருவன் செய்வதை எல்லாம்
ஆதரித்து வரவேற்கும்
காதலியர் அனைவரையும்
மோதி விரட்டுவேன் !
மூடத் தனத்தையும் எனது
போலிக் குணத்தையும்
ஏற்றுக் கொள்ளும்
மாதரையும் வெளியேற்றுவேன் ! — (நாடகம் : மனித வெறுப்பாளி)

மாலியர் வாய்மொழிகள்

முன்னுரை: மாலியர் என்று நாடகப் புனைபெயர் கொண்ட பிரெஞ்ச் நாடக மேதை ஜான் பாப்டிஸ்ட் பொகுவலின் [Moliere the Pseudonym of the French Dramatist Jean Baptiste Poquelin (1622-1673)] பாரிஸில் பிறந்தவர். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் (1564-1616) காலமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் அவதரித்தவர். மாலியர் நாடகப் படைப்பாளர் மட்டும் அல்லர். அவர் ஒரு நாடக நடிகர். மேலை நாட்டிலக்கிய இன்பியல் நாடக எழுத்தாள மேதைகளில் ஒருவராக மாலியர் கருத்தப்படுபவர். மாலியர் தனது கல்லூரிப் படிப்பை நடுவே விட்டுவிட்டு, பாரிஸ் நீதி மன்றத் தீர்ப்பின்படி 1643 இல் ஒரு நாடகக் கம்பேனியை நிறுவனம் செய்ய அனுப்பப் பட்டார். பாரிஸில் நாடகக் கம்பேனி முதலிரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக இயங்காது நொடித்துப் போய் விட்டது. அப்போது கொடுத்த பணத்தை அடைக்க முடியாது, அந்த இரண்டு ஆண்டுகள் மாலியர் சிறைக்குள் தள்ளப் பட்டிருந்தார். 1645 ஆண்டில் பிறகு பிரெஞ்ச் மாநிலங்களில் பயணம் செய்து நாடகக் கம்பெனியில் தானும் பங்கெடுத்துத் தனது நாடகத் திறமையைக் காட்டத் துவங்கினார். அடுத்த 12 ஆண்டுகள் (1657) மாலியர் தனது நாடகக் கலை நுணுக்கத்தை உன்னத நிலைக்கு விருத்தி செய்தார். 1658 இல் பேரரசர் பதினான்காம் லூயின் சகோதரர் பிலிப் அந்த நாடகக் கம்பெனியை எடுத்து நடத்தி வெற்றிகரமான ஒரு நாடகக் கலை நிறுவனமாக்கினார்.

மாலியர் 28 ஆண்டுகளில் எழுதிய பல நாடகங்களில் மேலானவை 36. அவற்றில் குறிப்பிடத் தக்கவை: Misanthrope, The School for Wives, The School for Husbands, Tartuffe or Hypocrite, The Miser, The Bourgeois Gentleman, The Doctor in Love, The Affected Ladies, The King’s Troupe, The Imaginary of Invalid & Don Juan. அவர் 1668 இல் எழுதிய கஞ்சன் [Miser] என்னும் இன்பியல் நாடகம் பாரிஸில் ராயல் மாளிகையில் முதன்முதல் அரங்கேறியது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான மாலியரின் பிரெஞ்ச் நாடகத்தைத் தமிழில் வாசகருக்குப் படைக்க நான் இப்போது விழைகிறேன். பிரெஞ்ச் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்குச் சற்று கடினமாக இருப்பதால், நான் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எளிதாக இருக்கும்படி மாற்றி இருக்கிறேன். மேலும் சில சம்பவங்களும் மாற்றலாகி இருக்கின்றன.

பேராசைக் கஞ்சன்

அங்கம் 3 காட்சி 1

பேராசைக் கஞ்சன் நாடக நடிகர்கள்:

எட்வேர்டு: எலிஸபெத், கிரஹாம் இருவரது தந்தை. மொரீன் மீது மோகம் கொண்டவர்.

கிரஹாம்: எட்வெர்டின் மூத்த மகன். மொரீனைக் காதலிப்பவன்.

எலிஸபெத்: எட்வெர்டின் புதல்வி. வில்லியத்தைக் காதலிப்பவள்.

ஆப்ரஹாம்: மொரீன், வில்லியம் இருவரது தந்தை.

மொரீன்: ஆப்ரஹாமின் மூத்த மகள்.

வில்லியம்: ஆப்ரஹாமின் புதல்வன்.

கிளாடியா: திருமண ஒப்பந்த மாது..

சைமன்: வட்டிக்கடைப் புரோக்கர்.

மேரி: எட்வெர்டின் வீட்டு வேலைக்காரி.

ஜேகப்: வீட்டு சமையல்காரன், குதிரை வாகன ஓட்டி.

வின்சென்ட்: கிரஹாமின் தனிப்பட்ட பணியாள்

***************

இடம்: பாரிஸில் செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை

நேரம்: பகல் வேளை

காட்சி அமைப்பு: செல்வந்தர் எட்வேர்டின் மாளிகை இல்லம். எட்வேர்டு, புதல்வன் கிரஹாம், புதல்வி எலிஸபெத், வில்லியம், வீட்டு வேலைக்காரி மேரி, சமையல்காரன்-வாகன ஓட்டி ஜேகப் மற்றும் வீட்டுத் துணை வேலையாளிகள்.

எட்வேர்டு: [பரபரப்புடன் அங்குமிங்கும் பேசிக் கொண்டு] எல்லாரும் அருகில் வாருங்கள். நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். சொன்னபடி செய்ய வேண்டும், தவறு செய்தால் எனக்குக் கெட்ட கோபம் வரும் ! நான் திட்டி விடுவேன் ! இன்றைக்கு நல்ல நாள் ! நான் தேர்ந்தெடுத்த எனது மணப்பெண் என்னைக் காண வருகிறாள் ! நம் மாளிகையில் அவளுக்கு நான் விருந்தளிக்கிறேன். நீங்கள் யாவரும் அவளைக் கோலாகலாக வரவேற்க வேண்டும். உங்களுக்கு வீட்டு எஜமானியாக வரப் போகிறாள் ! அவளுக்கு நீங்கள் உபசாரம் செய்ய வேண்டும் பூரிப்பாக. முதல் வேலை மேரிக்கு ! [மேரியைப் பார்த்து] முழு வீட்டையும் நீ பெருக்கிச் சுத்தம் செய். மேஜை, நாற்காலி, சோ•பா, மெத்தை எல்லாவற்றையும் துப்புரவாகத் துடைக்க வேண்டும். அடுத்து விருந்துண்ணும் போது ஒயின் பாட்டில்களை நீதான் கொண்டு வந்து எல்லோருக்கும் ஊற்ற வேண்டும். ஒயின் பாட்டில் உடைந்தாலோ, அல்லது காணாமல் போனாலோ அதற்கு நீதான் பொறுப்பு. உன் சம்பளப் பணத்திலே வெட்டி விடுவேன். கவனித்துக் கொள்.

மேரி: எஜமான், உங்கள் உத்தரவுப்படியே செய்வேன். யார் பாட்டிலை உடைந்தாலும் நான்தான் பொறுப்பு ! யார் ஒயின் பாட்டிலைத் திருடினாலும் நான்தான் பொறுப்பு ! எஜமான் என் சம்பளப் பணம் போதாது இந்தக் கடனை அடைக்க ! இந்த சமயத்திலே வாரச் சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்தால் நல்லது ! [போகிறாள் விரைவாக]

எட்வேர்டு: [கோபமாக] போ, போ ! நீ செய்கிற அரைகுறை வேலைக்கு உனக்கு அந்த வெகுமதிதான் தர வேண்டும், போ ! போய் வேலையைப் பார் ! . . . நில் மேரி ! பெண் வீட்டுக்காரருக்கு நீர் கலக்காத ஒயினை ஊற்று ! மற்றவருக் கெல்லாம் நீர் கலந்த ஒயின். மறக்காதே போ வேலையைத் தொடங்கு !

மேரி: [மெதுவாக] எஜமான், ஒயினில் எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது ?

எட்வேர்டு: அதை இங்கே கேட்காதே. விருந்து கொடுக்கும் போது சொல்கிறேன். [மகளைப் பார்த்து] எலிஸபெத் ! நீதான் வாசல்முன் நின்று மணப்பெண்ணை வரவேற்று உள்ளே அழைத்து வர வேண்டும். அவளைக் கடைவீதிச் சந்தைக்கு அழைத்துப் போய் பிறகு மாலை விருந்தில் சேர்ந்து கொள்ள வேண்டும்.

எலிஸபெத்: அப்படியே செய்கிறேன் அப்பா ! நான் எந்த உடையை அணிவது ? இருப்ப தெல்லாம் எனக்குப் பழையது ! புதிதாக நான் கவுன் வாங்க வேண்டும் அப்பா ! வரவேற்பைப் பற்றி முன்பே சொல்லியிருக்கக் கூடாதா ?

எட்வேர்டு: கவலைப் படாதே எலிஸபெத். மணப்பெண் மொரீன் எளிய உடைதான் அணிவாளாம். சிக்கனப் பெண்ணாம் ! நிறைய சேர்த்து வைப்பாளாம் ! நீ மட்டும் ஆடம்பரமாக இருந்தால், மணப்பெண் மயக்கம் போட்டு விழுந்து விடுவாள் ! பழைய உடையில் புதுசாக இருப்பதை உடுத்திக் கொள். உன் எளிமையைக் கண்டு மொரீன் பூரித்துப் போவாள். கலியாணத்தின் போது புதுசு வாங்கித் தருகிறேன்.

எலிஸபெத்: [சினத்துடன்] அப்பா ! யார் கலியாணத்துக்கு புதுசு வாங்கித் தரப் போகிறீர் ? உங்கள் திருமணத்துக்கா ? அல்லது என் திருமணத்துக்கா ? என்னிடம் உள்ள தெல்லாம் பழசுதான் ! அதிலே எந்தப் புதுசைத் தேடுவது ? எந்தப் புதிசைப் போடுவது ?

எட்வேர்டு: எதையாவது அணிந்து கொள் சீக்கிரம். மணப்பெண் வரும் தருணம் நெருங்கி விட்டது ! அடுத்தொரு வேலை உனக்கு. விருந்து மேஜையில் எதுவும் வீணாகாமல் பார்த்துக் கொள் நீ ! நீதான் அப்பாவுக்கு வீட்டுக்காரி ! உன் தாயை நினைத்துக் கொள் ! அவள் எப்படி விருந்தை வெகு சிறப்பாகச் செய்வாளோ அப்படி நீ நடத்த வேண்டும் !

எலிஸபெத்: அதை யெல்லாம் நான் கவனித்துக் கொள்வேன் அப்பா. என் பிரச்சனை அதுவல்ல ! வரவேற்புக்கு என்ன உடை அணிவது ? விருந்தின் போது என்ன உடை அணிந்திருப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டும் !

எட்வேர்டு: [மகனைப் பார்த்து] கிரஹாம் ! ஏன் உன்முகம் கோணிப்போய் உள்ளது ? நான்தான் உன்னை மன்னித்து விட்டேனே ! நானுள்ள போது நீ ஏன் கடன் வாங்க வேண்டும் ? சரி அது போகட்டும். இப்போது உன் முகத்தில் சற்று மலர்ச்சி உண்டாகட்டும் ! மொரீன் முன்னால் முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்ளாதே ! அவள் உனக்கு மாற்றாம் தாயாக வரப் போகிறாள் ! அவளை உன் தாயாக நினைத்துக் கொள் !

கிரஹாம்: அது என்னால் முடியாதப்பா ? மொரீன் என்னை விட ஐந்து வயது இளையவள் ! அவள் எப்படி எனக்கு அன்னையாக முடியும் ? அவள் எனக்குச் சிற்றன்னையாக வருவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது ! இளமையாய் கவர்ச்சியாய் இருக்கும் மொரீனை எப்படி நான் தாயாக ஏற்றுக் கொள்வது. என்னால் இயலாது ! ஆனால் மொரீனை வரவேற்க நான் தயாராக இருக்கிறேன். அவளுக்குப் பணிவிடை செய்கிறேன். கண்களால் இடும் பணிகளை என் கைகளால் செய்கிறேன்.

எட்வேர்டு: சரி அது போதும் எனக்கு ! நீயும் எலிஸபெத்தும் வாசலில் நிற்க வேண்டும் ! மணப்பெண் வருகின்ற நேரம்தான் ! சீக்கிரம் போங்கள் !. . . ஆமாம் உனக்கெப்படி மொரீன் வயது தெரியும் ? [ஜேகப்பை பார்த்து] இங்கே வா ஜேகப் ! உன் வேலைகளைச் சொல்கிறேன் !

ஜேகப்: சமையல்காரன் ஜேகப்பா ? அல்லது வண்டி ஓட்டி ஜேகப்பா ? யாரைக் கூப்பிடுகிறீர் எஜமான் ? நாணயத்துக்கு இரண்டு முகம் ! எனக்கும் இரண்டு முகம் ! எந்த முகம் வேண்டும் ?

எட்வேர்டு: இரண்டு பேரும் தேவை. முதலில் சமையல்காரனுக்கு வேலை.

ஜேகப்: [டிரைவர் உடையை மாற்றிக் கொண்டு ] கொஞ்சம் பொறுங்கள் எஜமான் ! என் உடையை மாற்றிக் கொள்கிறேன். [சமையல் உடை அணிந்து கொண்டு] நான் தயார் ! சொல்லுங்கள் எத்தனை பேருக்கு விருந்து ? காத்துக் கொண்டிருக்கிறேன் எஜமான். முதலில் பணத்தைக் கொடுங்கள் ! காய்கறி வாங்கக் கடைக்குப் போக வேண்டும் நான். எங்கே டிரைவர் ? . . . அதுவும் நான்தான் !

எட்வேர்டு: பொறுடா ! விருந்து என்று சொல்வதற்கு முன்பே பணத்தைக் கொடு என்று முந்திக் கொள்கிறாய் ! எப்போதும் பணம், பணம், பணம்தானா ? சமையல் பதார்த்தங்கள் என்ன சமைக்க வேண்டும் என்று முதலில் சொல்கிறேன். கேள்.

வில்லியம்: ஜேகப் ! கொடுக்கும் பணத்துக்குச் சாமான் வாங்குவாயா ? அல்லது மடிக்குள் கொஞ்சம் சொருகிக் கொள்வாயா ? ஒழுங்காய்க் கணக்குச் சொல்ல வேண்டும் ! அப்படி வழக்கம் உண்டா ?

ஜேகப்: வில்லியம் ஸார் ! உங்கள் உடையை மாற்றிக் கொண்டு சமையல் அறைக்கு வாருங்கள். பணச் செலவு செய்யாமல் விருந்து பண்ணிக் காட்டுங்கள் ! நானும் கற்றுக் கொள்கிறேன்.

எட்வேர்டு: நிறுத்துடா ஜேகப் ! வில்லியத்துடன் மல்லுக்கு நிற்காதே ! வில்லியம் என் பணத்துக்குப் பாதுகாவலன். நீ போய்ச் சமையல் வேலையைக் கவனி !

ஜேகப்: எஜமான் ! எத்தனை பேருக்குச் சமைக்க வேண்டும் ? எத்தனை ஆடவர் ? எத்தனை மாதர் ?

எட்வேர்டு: ஏன்டா ? ஆடவர், பெண்டிர் என்று பிரிவினை செய்கிறாய் ? மொத்தம் எத்தனை பேர் என்று கேள் !

ஜேகப்: எஜமான் ! ஆண்கள் தொந்தி பெரிசு ! பெண்கள் வயிறு சின்னது ! ஆண்கள் அதிகமானல் சமையல் அண்டாவைப் பெரிதாக வைக்க வேண்டும் !

எட்வேர்டு: எண்ணிக்கையைக் கேள் ! எட்டு அல்லது பத்து நபர் வரலாம் ! ஐந்து ஆண்கள், மூன்று மாதர் ! இரண்டு பேர் வருவது சந்தேகம். வந்தாலும் வரலாம். எட்டுப் பேருக்குச் சமைத்திடு. பத்துப் பேருக்கு அது வர வேண்டும்.

ஜேகப்: அதெப்படி உங்கள் கணக்கு எஜமான் ? உங்கள் படியளவில் பத்துப் பேருக்குச் சமைத்தால்தான் எட்டுப் பேராவது உண்ணலாம் ! பற்றாமல் போனால் உங்களிடம் நான் திட்டு வாங்க வேண்டும் ! மிஞ்சிப் போனாலும் நீங்கள் கண்டிப்பீர் என்னை ? பற்றாமல் திட்டு வாங்குவதா ? அல்லது உணவு மிஞ்சிப் போய் திட்டு வாங்குவதா ? எந்தத் திட்டல் கொடூரமாக இருக்கும் ?

எட்வேர்டு: பளபளக்கும் தட்டுகளில் ஐந்துவகை உணவுகள், ரோஸ்ட், சுடச் சுட சூப்புகள், மணக்கும் கோழிக்கறி, உருளைக்கிழங்கு பொடிமாஸ், மற்றும் மொரீன் பெயரை எழுதிய கேக் தயாரிக்க வேண்டும் புரிகிறதா ?

ஜேகப்: எளிய விருந்தென்று நினைத்தேன். பெரிய திட்டமாகத் தெரியுது ! எஜமான் ! எனக்கு இரண்டு துணையாட்கள் தேவை. ஆனால் இந்த சுறுசுறுப்பு வில்லியத்தை மட்டும் சமையல் அறைப் பக்கம் தலைகாட்டாது எங்காவது கட்டிப் போடுங்கள் ! சமையல் சீக்கிரம் முடியும்.

வில்லியம்: ஜேகப் ! சாமான்களைப் பாதுகாக்கும் என்னை நீ ஒதுக்குவது எனக்கு நல்லாத் தெரியுது ! உன்னைக் கண்காணிக்க ஆளிருக்கக் கூடாது. வீட்டு எலிக்குக் காட்டுப் பூனை தேவை !

எட்வேர்டு: ஆமாம் ! வில்லியம் அடுப்புக்குப் பக்கத்தில் காவல் இருப்பான் ! இல்லாவிட்டால் கேக்கில் போடும் முந்திரிப் பருப்புகளில் பாதி உன் நாக்கில் போய் விழுந்து விடும் !

ஜேகப்: எஜமான் ! என் நாக்கில் போவது கொஞ்சம்தான் ! வில்லியம் பாக்கெட்டில் போவது அதிகம் ! எலிக்கு இரண்டடி கொடுத்தால் பூனைக்கு நாலடி கொடுக்க வேண்டும் எஜமான் !

எட்வேர்டு: போய் வேலைத் தொடங்கு ! வில்லியம் என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் ! அவன் தான் இந்த வீட்டுக்குப் பூட்டு ! நீ என் பணத்துக்கு வேட்டு ! நோட்டு நோட்டாய் வாங்கிக் கொண்டு போகிறாய் ! ஆனால் உன் சமையலில் உப்பில்லை, சுவையில்லை ஒன்றுமே யில்லை!

வில்லியம்: விருந்து தயாரிப்பில் உன் வித்தையைக் காட்டு, ஜேகப் ! நீ உண்பதற்குப் பிறந்தவன். ஒருவன் உண்பதற்கு வாழக் கூடாது ! வாழ்வதற்குத்தான் உண்ண வேண்டும் !

எட்வேர்டு: ஜேகப் ! சமையல்காரனை அனுப்பிவிட்டு இப்போது வண்டிக்காரனை இழுத்துவா !
மொரீனை முதலில் அழைத்து வரவேண்டும். பிறகு மொரீனையும், எலிஸபெத்தையும் கடைவீதிக்குக் கொண்டு போக வேண்டும் வண்டியில் !

ஜேகப்: சற்று பொறுங்கள் ! டிரைவர் உடையைப் போட்டுக் கொள்கிறேன். எஜமான் ! வண்டி தயாராக உள்ளது. ஆனால் குதிரைகள் தயாராக இல்லை ! அவை நோயில் ஓய்வாக உள்ளன ! எழ முடியாமல் படுத்துக் கிடக்கின்றன ! அவைகளுக்கு ஆகாரம் போதாது ! வேலை அதிகம் ! அரை வயிறு, கால் வயிறு தீவனம் ! எப்படி வண்டி இழுக்கும் ?

எட்வேர்டு: குதிரைகளுக்கு நோயா ? இதை முன்னமே ஏன் என்னிடம் சொல்லவில்லை ! என் வாகனத்தில் மொரீன் வரவேண்டும் என்ற கனவை நாசமாக்கி விட்டாய் நீ ! குதிரைகளுக்கு நோய் என்பது எனக்குத் தெரியாது ! உன் முதுகுத் தோலை உரிக்க வேண்டும் !

ஜேகப்: சரி எஜமான் ! இப்போது தெரிந்து கொண்டீர் அல்லவா ? என்ன செய்ய வேண்டும் நான் ? நம் வாகனத்தில்தான் மணப்பெண் வர வேண்டுமென்றால் வண்டியை நானும், வில்லியமும் இழுத்துச் செல்கிறோம்.

எட்வேர்டு: [கோபத்துடன்] முட்டாள் ! வண்டி இழுக்கத்தான் நீ உகந்தவன் ! நீ ஒரு பக்கம், வில்லியம் ஒரு பக்கம் இழுத்தால் வண்டிதான் உடையும் ! போ பக்கத்துப் பங்களா பண்ணையாரிடம் குதிரைகளை ஒருநாள் வாடகைக்கு எடு ! சீக்கிரம் போ !

ஜேகப்: எஜமான் ! இரு எஜமானருக்கு ஒருத்தன் பணி செய்ய முடியாதாம் ! நான் சொல்றேன் எஜமான் ! இரண்டு வேலைகளுக்கு ஒருத்தன் ஒரே சமயத்தில் பொறுப்பேற்க முடியாது ! ஒரு சம்பளத்தில் நான் இரண்டு பணி செய்கிறேன். சமையல் வேலையை முதலில் தொடங்கவா ? அல்லது வாகனத்தை ஓட்டிச் செல்லவா ? [சமையல் அறைக்கும், வாகன அறைக்கும் அலைகிறான்]

எட்வேர்டு: போடா, போ, போய் சமையல் வேலையைத் தொடங்கு ! நான் வண்டி ஓட்ட வில்லியத்தை அனுப்புகிறேன். பாதி வேலைக்கு உனக்கு முழுச் சம்பளம் கொடுக்கிறேன். மொரீன் வந்து போகட்டும். அதற்குப் பிறகு உன் முதுகு எலும்பை எண்ணுகிறேன். வில்லியம் ! பக்கத்துப் பங்களா குதிரைகளைக் கட்டி வண்டியை ஓட்டிச் செல் ! மொரீன் குடும்பத்தை அழைத்து வா ! போ சீக்கிரம் ! நான் தாடி, மீசையை நறுக்க வேண்டும் ! குளிக்க வேண்டும் ! ஒப்பனை செய்து கொள்ள வேண்டும் ! நேரம் போதாது ! என் தாடி, மீசையைப் பார்த்தால் மொரீன் ஓடி விடுவாள் !

[எட்வேர்டு உள்ளே விரைந்து செல்கிறார். ஜேகப் சமையல் அறைக்கும், வில்லியம் வாசலுக்கும் செல்கிறார்கள் ]

(தொடரும்)

************************

தகவல் & படங்கள்

Picture Credits Wikipedia & A.R.T American Reperory Theatre

Based on The Play
Moliere’s Miser (1922-1673)

1. Moliere’s Miser Translated By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1958) A Mentor Book “Eight Great Comedies”

2. A Mentor Book “Eight Great Tragedies” By: Sysvan Barnet, Morton Berman & William Burto (1957)

3. Dover Thrift Editions: Moliere “Tartuffe” (2000) for Biographical Reference

4. Moliere Miser – Wikipedia Encyclopedia for Biographical Reference.

5. Moliere’s The Misanthrope & Other Plays By Signet Classic (1981)

6. Moliere’s The Misanthrope & Other Plays By Benguin Classics (2000)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 31, 2007)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts