தண்ணீர்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

கிரிதரன் ராஜகோபாலன்


——————————————–

வெக்கையான அந்த இரவில், தண்ணீர் வரண்டுபோன தொண்டையில் ஜில்லென பட்டபோதுதான் ஆரோக்கியராஜுக்கு வேலைக்குப் போன முதல் தினம் ஞாபகத்திற்கு வந்தது.

அந்த வெள்ளிக்கிழமை ஆலயத்திற்கு போகும்வரை அவனுக்கு சத்தமே பிடிக்காது.அல்போன்சுடன் ஒட்டிக்கொண்டு நிற்கும்போதுதான் முதல்தடவையாக ஸ்பீக்கரை தொட்டுப்பார்கிறான்-இன்றும் தன் வாழ்கையை அடக்கிவிடுவதுபோல அந்த கம்பிவளைக்குள் சத்தத்தின் பிரவாகம்.ஒரு கையில் ஸ்பீக்கர் மற்றொரு கையில் பையுடன் ஆலயத்தைவிட்டு போகும்போது இடரிய அதன் பெல்ட் இன்றுவரை இடருகிறது.ஒவ்வொரு முறையும் பெல்டின் போக்கில் காலை வளைத்து நடந்து அவன் நடையே பையின் பக்கம் கோணலாகியது.

அதைவிட பெரிய பிரச்சனை தண்ணீர் தாகம். கால் வளைந்து கொடுத்ததுபோல நா ஒத்துழைக்கவில்லை.பல கூஜாக்கள் தண்ணீர் குடித்தாலும் தொடர்ந்து பத்து மணிநேரம் பேசும்போதெல்லாம் நா வரண்டுபோகும்.இந்த இரண்டு பிரச்சனைகளையும் சமாளிக்கவே ஆரோக்கியராஜுக்கு வாழ்நாள் சரியாகயிருந்தது.தாகம் தன் கீழ்நிலமையிலிருந்து விலகி சுய பச்சாதாபத்தின் வழியே போராட்டமாக உருவானது.இரவு நேரங்களில் அது ராட்ஸச உருவமெடுக்கும்.தொண்டையின் வழியே வழியும் ஒவ்வொரு துளியும் உயிர் துடிப்பில் கலந்து ரெளதிர வடிவெடுத்து அடங்கும்.அடுத்தடுத்த துளிகள் சென்றடையுமிடங்கள் தெரிவதற்குள் தொண்டை வரண்டு போகும்.

ஊர் பெரிய கோயில் மணியடிக்கும்போது தன் பையுடன் வீட்டிலிருந்து கிளம்புவான்.கூட்ரோடு அருகில் உள்ள ஸ்டேஷனுக்கு வருவதற்குள் பலமுறை கீழே விழப்பார்த்து சமாளித்துக்கொண்டு நடப்பான்.23 வருடங்களாக நடக்கையில் சோர்வுடன் நிதானமும் சேர்ந்து கொண்டது.அவன் ஸ்பீக்கர் செட்டை பார்த்துக்கொண்டே ராஜா ஸ்கூலுக்கு செல்லும் குழந்தைகளை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை,கோயில் மணிகேட்டு நடந்து வருவதற்குள்,ஸ்கூல் மணி அடித்துவிடும்.

கூஜா கைதவறி விழுந்ததில் சத்தம்;திருவிவிலியம் புதிய ஏற்பாடு 6:19 கூறியபடி,ஸ்கூலுக்கு வெளியே தன்னை அப்புறப்படுத்திய போது ஸ்பீக்கர் பெல்ட் தறையில் சிறிது தூரம் தேய்ந்தது-அதே சத்தம்.பள்ளிக்கு அருகே அவன் நிற்பதில்லை.ராஜாவிற்கு இல்லாத திருவிவிலியம் ஸ்டேஷன் பக்கம் திரும்பியது.

“ழே..என்ன கொடச்சலங்க..?”

-சகோதரர்களே இரண்டு பாதைகள் இருக்கிறது.ஒன்றில் கல்,முள் காலை வைக்குமிடமெல்லாம் நெருப்பு,ஆலகால விஷம் கொண்ட பழங்கள்,பாம்பு நிறைந்த வழிகள்,குடிக்க தண்ணீரில்லாமல் உதடுகள் காயும்.தீயோன் அழைக்கும்போது இல்லாதது சொல்லி உணர்வுகள் மரக்கும்வரை இன்பம் கொடுத்து,தன்னை தொடும்போது நெருப்பு போல சுடுவான்.அப்போது மற்றொரு பாதைக்காக ஏங்குவீர்கள்.

“நாந்தான்பா..கைதவறி தண்ணீகுடிக்க வந்தேன்..ஒண்ணுல்ல..”

-இந்த பாதையில் தேவதூதன் அழைக்கிறான்.நமக்காக துன்பத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்குமவன்,பிள்ளைகள்,நண்பர்கள்,மனைவியர் செய்யாததையும் அன்புடன் செய்வான்.எல்லா வேண்டல்களையும் மன்றாடுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்.அவன் பாவங்களை ஏற்றுக்கொள்வான்.அவரைப்போல வேறுயாருமில்லை.என் மகனே,நீ ஆண்டவனின் அருள்பெற்று வலிமை பெறு.

கூஜா எடுப்பதற்குள் தாகம் கண்ணை இருட்டியது.எச்சையும் தீர்ந்துபோனது.

வழக்கமாக ஸ்டேஷனில் அவனை யாரும் பொருட்படுத்துவதில்லை,அப்புறப்படுத்துவதுமில்லை. தண்ணீர் குடிக்க மட்டும் சற்று தூரம் நடக்கவேண்டும்.ஆலயத்தில் அவனுக்கு நீலநிறத்தில் சட்டையும் பாண்டும் கொடுத்திருந்தார்கள்.ஸ்டூலுக்கு சொல்லியிருந்தான் – மார்கெட் மணிகூண்டு அல்போன்சுக்கு வந்துவிட்டதால் இவனுக்கும் சீக்கிரம் எதிர்பார்கிறான்.வந்தால் கன்னியாகுமரி வண்டிவரை இருக்கலாம்.கூடுதல் இரண்டு மணிநேரம்.

சனியன் பிடித்த கரண்ட் இருந்தால் பிரச்சனையில்லை.கடைசியாக வீட்டில் விளக்கு எரிந்தது எலெக்ஷன் சமயத்தில்தான்.ஒருநாள் ஸ்பீக்கரை கொடுத்ததால் கிடைத்தது;விடிவதற்குள் பிடுங்கப்பட்டது.அன்றிறவு முழுவதும் தூங்காமல் விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தான்.

உருண்டோடிய கூஜா கிடைத்தால், பையனுக்கு தெளிந்த பிறகு, கத்தல் கேட்க வேண்டியிருக்காது.

பத்துநாள் ஸ்டேஷனில் பிரசாரம் செய்தால்,ஆலயத்திலே மணிஅடிக்கவோ,கூட்டத்தை ஒதுக்கும் வேலையோ கிடைக்கக்கூடும் என
வேலையில் சேர்ந்த அன்று கேள்விப்பட்டான்.ஸ்டூல் கேட்பதா , ஆலயத்தில் மணியடிக்கும் வேலை கேட்பதா என ஒவ்வொருமுறையும் ஆலயத்திற்கு போகும்போது அவனுக்கு குழப்பமாகயிருக்கும்.அந்த குழப்பத்திலேயே ஆலய கல் படிக்கெட்டுகளில் உட்கார்ந்தால் ஸ்டேஷன் விளக்கின் ஒளி கண்ணில் ஜொலிக்கும்.உதடுகள் உலர்ந்தாலும் , கண்கள் கசியும்.

-அன்றாடம் வாழ்வில் ஒவ்வொறு கனமும் பாவ மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கிறோம்.இதுதான் வாழ்வு என எண்ணுபவர்களே! தேவதூதன் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறான்.நண்பர்களே!,ஒவ்வொரு நாளும் வீட்டை சுத்தப்படுத்துகிறோம்,நம் எண்ணங்களில் சேர்ந்துள்ள குப்பைகளை,பாவங்களை தாங்கிக்கொள்ள ஒரு ஆத்மா புனித கரங்களை விரித்து அழைக்கின்றது.வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் வருகிறார்.புனித பீட்டரின் திருநன்னாளில் ஆலயத்திற்கு வாருங்கள்.என்றுமிலாத இன்ப வாழ்விற்கான கதவின் சாவி அவரிடம் உள்ளது.வரும் அனைவருக்கும் அந்த வாசல் திறந்தேயிருக்கும்.

கூஜாவை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டான்.

ஒவ்வொரு நொடியும் தாகத்திற்காக காத்திருக்கும் வேளையில் எல்லா இரவுகளைப்போல அன்றும் மேல்கூரை வழியாக அற்புதவெள்ளம் தோன்றியது.அவனுக்கு பழக்கமான அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அது வழிந்தோடி நிரப்ப ஆரம்பித்தது.ஸ்பீக்கர் ,கூஜா எல்லாம் அந்த வெள்ளத்தில் ஜொலித்து மேலெழும்ப ஆரம்பித்தன.வீட்டைத் தாண்டி தளும்ப ஆரம்பித்த அந்த வெள்ளம் ராஜாஸ்கூல் வழியாக எல்லா பொருட்களையும் களீபரம் செய்துகொண்டு ஸ்டேஷன் வரை நிரம்பியது.

எல்லா இரவுகளை போலவே அன்றும் தண்ணீருக்கு அடியில் அந்த ஊரின் எல்லைகள் விரிவடைந்துகொண்டிருந்தது.


giridharan.rajagopalan@wipro.com

Series Navigation

author

கிரிதரன் ராஜகோபாலன்

கிரிதரன் ராஜகோபாலன்

Similar Posts